வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.கவிதைகள்

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
அய்யப்ப மாதவன்
 
 
 
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கவிதைகள் TS ஈன்றுப் புறந்தருதல் கவிதைகள் வாயில்

வெட்கத்திலான காதல்


அய்யப்ப மாதவன்  

மல்லிகை சரத்தினைச் சூடிக்கொள்ளும் காட்சியிலிருந்து
முறிந்திருந்த அவள் காதலை மீட்கிறேன்
வெட்கத்தில் அலர்ந்தவளிடம் என் முழு உடலை
அன்பளிப்பாக்க முடிவுசெய்கிறேன்
ஈரச்சேலையுடன் மேலாடை அணியாமல்
குளியலறையிலிருந்து என்னைக் கடந்து செல்கிறாள்
நீள்கிற கற்பனையில் அடங்க மறுத்த உடலை
குளிர்விக்கப் பார்க்கிறேன்
மென்மேலும் அரைநிர்வாணத்தினழகில் கடக்கும் அவளின்
நினைவில் அவள் மீதான பற்றில் இறுகுகிறேன்
என் முன் குவியும் உதடுகளால்
சொர்க்கத்தின் அதீத சுகத்தை வழங்குகிறாள்
விதி பூட்டிய இரும்புச் சங்கிலியில்
ஒரு பைத்தியமென அவளற்ற அறையில்
வேறொரு பெண்ணுடன் பிதற்றுகிறேன்
விரும்பிய போதையோ பெண்ணோ கிடைக்காத
அபாக்யத்தில் காலம் நரைத்துக்கொண்டிருக்கிறது
புனைவு செய்கிற ஆற்றலில்லாத மனிதனாயிருந்திருந்தால்
எப்போதோ நான் தற்கொலை செய்திருக்கக்கூடும்
கசப்பேறிய வாழ்வைக் கடக்க என் புனைவுருவாக்கத்தில்
என் காதலியுடனான பழைய ஞாபகங்களை மீட்டு
ஆயுளை நீட்டித்துக்கொள்கிறேன்
இக்கணம் அவளின் கன்னங்களில்
என்னை எழுதுகிறேன்
அவள் உடலை காகிதங்களாக்கி எண்ணற்ற
கற்பனைகளை வரையுறுமாறு பணிக்கிறாள்
அக்கூடாரத்தினிடையே கலவியின் கூக்குரல்
என் பித்தேறிய காதலின் சாட்சியாகிறது
நான் பகலினூடே அகத்தில்
புரண்டோடும் நதிபோல அவளைச் சுமந்து
நகரினூடே அன்றாட வலியுடன் கரைகிறேன்
அவளின் நாணத்துடனான சிரிப்பு
என்னை உயிர்ப்பித்தவாறு தினமுமிருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------

சுடுநீர் பச்சை நீர்

தாமதமாய்ப் பிடிக்கும் நித்திரையில்
அழுத்தி நசுக்கும் வாழ்வின் இடர்கள்
கனவுகளாகும் சமயம் அரண்டு எழுந்திருக்கிறாள்
வழக்கமாய் விரைந்தோடும் குருதியினுள் ஓடி
அலுவலகத்தைச் சபித்துக்கொண்டு
பேருந்தில் ஒடுங்கி மறைகிறாள்
எனக்காய் இரவின் மீந்தவற்றை
காலை மதியம் உணவாக்கிக் கொள்ளுமாறு
கேட்டுச் சென்றிருந்தாள்
நளபாகனாயில்லாத நான் அவளுக்காய் தினமும்
காப்பிமட்டும் போட்டுத்தந்துகொண்டிருக்கிறேன்
அப்புறம் பாத்திரங்களைக் கழுவித் தந்துக்கொண்டிருக்கிறேன்
நீர் அடித்துக்கொடுப்பேன்
குளியலுக்கான சுடுநீர் பாத்திரத்தை
பச்சைநீரோடு கலந்துகொடுக்கிறேன்
நேரம் ஆக ஆக என் ஒப்பேறாத வாழ்வினைக் குடைய
நான் அவளுக்கு அளித்த சுடுநீர் பாத்திரம்போலாவேன்
நாழிகைக்கு பின் அப்பாத்திரம்போல் குளிர்ந்துதான் போவேன்
பலசரக்கு வாங்கி வைக்க பட்டியல் தந்திருப்பாள்
அவளுக்கான விஸ்பரையும்
காகிதம் சுற்றி வாங்கிக்கொள்வேன்
மீதமாகும் காசுகளைக் கொடுத்து
நாணயஸ்தன் என்ற பெயர் எடுத்துவிட்டேன்
மாலைப்பொழுதின் வரவில் இரவின் குளிர்ச்சியுடன்
அலுவலகம் முடித்த திருப்தியுடன் வருவாள்
பால் காய்ச்சி சுடச்சுட காப்பி தருவேன்
காப்பிக்கிடையே அவளின் அலுவலகத்தின் வேதனைகளை
என் கபாலத்தினுள் அள்ளி எறிவாள்
தலையை ஆட்டி ஆட்டி பொறுமையிழக்காமல் இருப்பேன்
அப்புறம் இரவு நித்திரை மறுபடி கனவு காலை காப்பி
நான் இயக்குநராகும் கனவிலிருக்கிறேன்.

----------------------------------------------------------------------------------------------------------------

மடிந்துவிட்ட உரையாடல்

மாலைப்பொழுதின் மீதிருந்து ரோஜாவின் மணம்
மரணத்தின் வாசனையெனக் கண்டேன்
மூங்கில் மரம் பிளந்த குச்சிகள்
அலங்கார வளைவுகளிடையே
நீண்ட வெற்றுப்படுக்கை
ஆட்டம் போடும் இளைஞர் கூட்டம்
சாவினூடே நான் கடக்கிறேன்
மாபெரும் பூமியின் அற்புதங்கள்
இறந்தவனின் விழிகளில் அழிந்திருந்தன
குழுமியிருந்த பெண்களின் விழிகள்
கரைந்து கிடந்தன தெருவில்
வார்த்தைகள் அதற்கேற்ற இசைநயத்துடன்
அவனிடமிருந்தன இறக்கும் தருவாய்வரை
இப்போது உரையாடல்கள் மடிந்து
கலையா மோனத்திலிருப்பவனிடம்
உரையாடுகின்றனர் பழைய ஞாபகங்களை
செவிசாய்க்காதவன் இறுமாப்புடனிருந்தான்
கூக்குரல்களிடையே நகர்ந்தவனை
நெருப்பிடம் ஒப்படைக்க
மறுநாள் சாம்பலென
பெயர்கொண்டான் இவ்வுலகிடையே.

----------------------------------------------------------------------------------------------------------------

அதே வெயில் நிழல்

வெயில் எளிதாய் வரைகிற பகல்பொழுதைப் போக்குவது
பெரும்பாறையைப் பிளப்பதுபோலிருக்கிறது
ஒளிகொண்டு தீட்டப்படும் என் நிழல்
காண்பவனுக்கு வெற்று நிழல்
நிழலுக்குள்ளிருக்கும் நிஜம் சுமக்கும்
உபாதைகள் கணக்கிலடங்கா
திறக்கும் காலை என்னவோ வர்ணிக்கமுடியாப் பேரழகு
இமைகள் நனைக்கும் கண்ணீர்த்துளிகளோ
எண்ண முடியா பரிதாபம்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
மூளை என்னவோ உலகம் படுத்தும் துயரத்தில்
வீங்கி வருகிறது
சிச்சிறு வேளைகளில் என்னவோ சிற்றின்ப போதையில்
அலர்கின்ற பூவைப்போன்று மிருதுவாகிக்கொள்கிறது
அண்டத்தின் பகல்பொழுதினை முழுக்க அவிழ்த்துக்காட்டும்
ஞாயிற்றிற்கு நிலத்தில் வாழ்பவனின்
அகத்தின் அவஸ்தை என்னவென்று புரியும்
சொற்களில் உச்சரிக்கமுடியாத வேதனையை
எவற்றிலும் அள்ளிவைத்து ஆறுதல் அடையமுடியாததை
அறிய விழைபவன் யாருமில்லை
சாகும்வரை உட்கிடையில் வைத்து புதைத்து புதைத்து
பெரிதாகும் காயம்
மரணத்தில்தான் சாம்பலாகும்
காலை மதியம் மாலை என பகலைக் கடக்கின்ற வேளை
நாளின் கடக்கமுடியாத பாதைகளில் விழுந்து உழன்று
இரவு வரைகிற இருட்டுக் கட்டிலில் அமைதி தவழ
நித்திரையினூடே வெயிலின் கனவு துரத்த
பூதவுடலில் நினைவிழந்து கிடக்கவேண்டும்
மறுநாளும் அதே வெயில் நிழல்
நிழலுக்குள் நிஜம்.

---------------------------------------------------------------------------------------------------------------

மேற்குறிப்புகள்:

கவிதைகளோடு அந்தந்த எழுத்தாளர்களின் கவிதைகள் பற்றிய ஒரு திறனாய்வை, அல்லது கவிஞர்கள் பற்றிய ஒரு கவி அறிமுகத்தை இந்தப் பகுதியுடன் கொடுத்தால் புதிதாக படிக்க வரும் வாசகருக்கு அந்தக் கவி ஆளுமை பற்றிய ஒரு புரிதல் ஏற்படும் என்பதற்காகவே இந்தப் பகுதி இங்கே கொடுக்கப்படுகிறது. கட்டுரை எழுதியவர் ஆட்சேபனை தெரிவித்தால் இந்தப் பகுதி நீக்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------------

'ஆறாத புண்ணில்' அழுந்திக் கிடக்கும் கவி மனம் - இசை

http://www.chikkymukky.com/archive/issue01/book%20review-isai.htm

நிசி அகவல் அய்யப்பனின் 6வது கவிதைத் தொகுப்பு. அய்யப்ப மாதவன் என்ற பெயர் நினைவுக்கு வந்தவுடன் அவர் அதிக எண்ணிக்கையில் கவிதை எழுதக் கூடியவர் என்கிற எண்ணமும் கூடவே வருகிறது. அய்யப்பன் ஏன் இப்படி நிறையக் கவிதைகள் எழுதுபவராக இருக்கிறார். கவிதை எழுதுவதற்கு அவசியமாக கருதப்படுகிற அக உந்தத்தை எப்போதும் தன்னுள் கொண்டிருப்பவராக அவர் இருக்கிறாரா? கவிதைகளின் மூலம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டிருப்பது அவருக்கு அவசியாமானதொரு வாழ்க்கை முறையாக இருக்கிறதா? கவிதை எழுதும் தருணங்களில் தான் சந்தோஷமாக இருப்பதாக அவர் உணர்கிறாரா? தொடர்ந்து தன்னை கவிஞராக நிரூபித்துக் கொள்ளவேண்டும் என்கிற அவா அவரை அலைக்கழிக்கிறதா? என்பன போன்ற கேள்விகளும் இதைத் தொடர்ந்து எழுகின்றன.

நான் அறிந்த வரையில், அய்யப்பன் கவிதைகளுக்காக, தேர்ந்த சொற்களுக்காக நீண்ட காத்திருப்பு எதையும் மேற்கொள்வதில்லை. அவரை எழுதச் செய்ய புதிதான ஏதோ ஒன்று அவரை தாக்க வேண்டும் என்பது அவசியமாக இருக்கவில்லை. அவருக்குள் ஏற்கனவே கவிதைகள் இருக்கின்றன. அவை சொற்களின் வடிவெடுத்து ஏதோ ஒரு நிசியில் வெளிப்படுகின்றன. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. பெரும்பான்மையோர் கவிதை தன்னைத் தானே தொடங்கிக் கொளும் வரை காத்திருக்கிறார்கள். அது நிகழ தாமதிக்கும் போது வருத்தம் கொள்கிறார்கள். கைவிடப்பட்டவனாக உணர்கிறார்கள். ஆனால் அய்யப்பனும், கவிதையும் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களால் திட்டமிட்டு சந்தித்துக் கொள்ள முடிகிறது. கவிதை தன் எண்ணற்ற புதிர்களின் முக்கியமான ஒன்றை அய்யப்பனின் வழியே நிகழ்த்திக் காட்டிக்கொண்டுடிருக்கிறது.

கவிதைகளிடம் பயமோ, பக்தியோ அற்று அதனுடன் சகஜமாக விளையாடும் குணாம்சம் அய்யப்பனின் கவிதைகளில் தொடர்ந்து காணக்கிடைக்கிறது. இவ்வம்சமே அவரை தன் முந்தைய கவிதைத் தொகுப்புக்கு “எஸ்.புல்லட்” என்று பெயரிட வைத்திருக்கிறது. இத்தொகுப்பு வளமையான மொழியால் பெயரிடப் பட்டிருந்தாலும் தொகுப்பின் முதல் கவிதையே ‘புல்லா சும்மா’ என்றிருப்பதைக் கவனிக்க முடிகிறது. இப்படி கவிதைகளிடம் பயபக்தியற்றிருத்தல் என்பது சாதக, பாதக விளைவுகளை ஒருங்கே அளிக்கக் கூடியது. “புல்லா சும்மா” , “8 Million Ways to die” ஆகிய கவிதைகளில் இவ்வம்சம் பாதகமாகவே செயல்பட்டிருக்கிறது.

அய்யப்பனின் குடி என்பது வெற்றுக் குடியல்ல. அது ‘நண்பர்களுடன் களித்திருத்தல்’ என்கிற வகையில் வருகிறது. நண்பர்களுடனான குடி என்றவுடன் அது அன்பென்றாகி விடுகிறது. அன்பின் போதை தலைக்கேறிச் சுற்றுகிறது. அது முத்தமிடுகிறது. முத்தமிடக் கோருகிறது. பேசிப் பேசி விடிய வைக்கிறது. மடியில் தலை வைத்து படுத்துக் கொள்கிறது. சண்டையிட்டுக் கொள்கிறது. பின் மன்னிக்க வேண்டி மண்டியிடுகிறது. கசிந்துருகி அழுகிறது. சுயத்தின் அழுகையை பரிவின் கரங்களால் துடைத்து விடுகிறது. அழுக்குக் கையால் சோற்றைப் பிசைந்து எல்லோருக்கும் ஊட்டி விடுகிறது. இப்படி அன்பின் உச்சபட்ச நாடகீயத் தருணங்கள் நிகழும் நிசியில் எழுதப்பட்ட அல்லது துவக்கப்பட்ட இக்கவிதைகளில், அன்பின் உச்சத்தை நோக்கி நகரும் முனைப்பேதும் இல்லாமல் இருப்பது ஒரு விநோதமே. அவரது முந்தைய தொகுப்பில் இடம் பெற்ற...

“ஒரு மழை நாளில்
சிறுமியின் இதயத்தில் ஓட்டை
உதவுங்கள் எனச் செய்தி வருகிறது
அவன் என்ன செய்வான்
அவனிடன் ஒரு செல்போன்
ஒரு வாகனம்
ஒரு மனைவி

ஒரு வாடகை வீடு
சொற்ப பணம்
இருக்கிறது
துயருற்றவன்
எவ்வித யோசனைகளுமற்று
அமர்ந்திருக்கிறான்.
கடவுளைப் பிரார்த்திக்க
கடவுளை நம்பவில்லை
அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளட்டும்
என்று மட்டுமே நினைத்துக் கொள்கிறான்


-எஸ்.புல்லட் தொகுப்பிலிருந்து

வெளியே, ஒரு விதத்தில் அன்பற்றதாகவும், இயலாமையை பேசுவதாகவும் போக்கு காட்டும் இவ்வரிகள் உள்ளே, அன்பின் உச்சத்தை நோக்கிய நகர்வில் இருக்கின்றன. இது போல் தூய அன்பின் தெளிந்த சொல் எதையும் இத்தொகுப்பில் காணமுடிவதில்லை. மாறாக போதையின் கிறக்கமும், கலவியின் ஏக்கமும் அநேக கவிதைகளை அடைத்துக் கொண்டிருக்கின்றன. சிற்றின்பங்கள் என்று புறமொதுக்கப்பட்ட இவை மையத்தை நோக்கி நகரத் துவங்கி வெகு காலம் ஆக, அய்யப்பனின் கவிதைகள் இவற்றை நடுமைய்யத்தில் வைத்துப் பேசுகின்றன.

வாழ்வின் மீது கொட்டிக் கவிழ்க்கப்பட்ட எண்ணற்ற தத்துவங்களிலும், அது சொல்லும் விடுதலையிலும் நம்பிக்கையற்ற, நிம்மதியிழந்த ஒரு மனம் தன் வாழ்வின் கடைசி போக்கிடமாக மதுவையும் பெண்ணையும் தெரிவு செய்து கொள்கிறது. ‘கண்களால் வெருட்டி முலையால் மயக்கும்’ பெண்ணைத் தேடி ஓடுகிறது. ‘ஆறாத புண்ணில் அழுந்திக் கிடக்கத் துடிக்கிறது’ ‘புத்தி போனபடி பயணம்/அதுவே அதிகப்படியான நல் விஷயம்’ என்கிறது.

முகமறியா ஒருவரின் தொகுப்பைப் படிப்பதற்கும் ஒரு நண்பரின் தொகுப்பை படிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை இதை வாசித்த போது உணர்ந்தேன். நாம் அறிந்திருக்கும் நம் நண்பனின் வாழ்வியல் அவன் கவிதைகளை திறந்து கொள்ள ஒரு சாவியாக உதவுகிறது. ( இது அவன் வாழ்வியலாக மட்டுமே ஒரு கவிதையை குறுக்கி விடும் அபாயத்தையும் சேர்த்தே அளிக்கிறது) அய்யப்பனின் மன அமைப்பை நன்கு அறிந்தவன் என்கிற வகையில் ‘ஒரு மகிமை’ என்கிற கவிதை என்னுள் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அதி சுதந்திரி ஒருவன் இல்லறத்தின் இடுக்குகளில் ஒடுங்க நேரும் துயரத்தை இக்கவிதை எளிதான சொற்களில் நுட்பமாக பதிவு படுத்தி இருக்கிறது. இல்லறம் சிறப்பதே பொய்களால்தான். ஒருவன் நல்ல கணவனாக இருப்பதென்பது, அவன் பொய்களில் எவ்வளவு ஞானமுடையவன் எனபதை பொறுத்தே அமைகிறது. பொய்கள் திடீரென கைவிட்டு விடும் போது முகம் வியர்த்து, மனம் பதறி, குரல் நடுங்குகிறது கவிக்கு.

ஞானம் ஒரிரு சமயங்களில்
அஞ்ஞானமாகும் போது
விழி பிதுங்க்கி
முகத்தை நெளிந்த தகர டப்பாவாக்கி
விரல்களை சூப்புகிறான்.

-தகர டப்பா முகம் (பக்கம் 36)

......என்கிற வரியை படித்து முடித்ததும் நகைப்பும் பரிதாபமும் ஒரு சேர விளைகிறது.

ஒரு சொல்லே அழகிய காட்சியாக கண் முன் விரிந்து விடும் அனுபவத்தை நாம் பல கவிதைகளில் கண்டிருக்கிறோம். இவ்வனுபவத்தை இத் தொகுப்பில் உள்ள ”அப்சலூட் வோட்கா நீர்ச் சுழிகள்” என்கிற தலைப்பு என்னுள் நிகழ்த்தியது. இச் சொற்சேர்க்கை மிக சுத்தமான மது விடுதியின், மிக சுத்தமான விரிப்பின் மேல் வைக்கப்பட்டிருக்கும் நவீன கண்ணாடிக் கிண்ணத்தில் பொல பொல வெனும் மெல்லிய சத்தத்தோடு ஊற்றப்படும் தூய வெண் ஓட்காவை எனக்குக் காட்டியது.

அய்யப்பனின் கவிதைகளில் ‘நிசி அகவலே’ சிறந்தது என்று நண்பர்கள் பலரும் சொல்லக் கேட்டேன். அவரின் எல்லாத் தொகுப்புகளையும் படித்தவன் இல்லை என்பதால் அது பற்றி எதுவும் கூற இயலாது. ஆனால் நண்பர்களின் கூற்று உண்மையெனில், அய்யப்பன் கருதிக்கொண்டிருப்பது போல் அது எடிட்டிங்கால் அல்லது எடிட்டிங்கால் மட்டும் நிகழ்ந்திருக்க முடியாது என்பதே என் எண்ணம். தொகுப்பின் பல கவிதைகளில் காணக் கிடைக்கிற ஒரு வித “லயக் குறைவுக்கு” , அய்யப்பன் பின் அட்டையில் தன்க்கு கைவந்து விட்டதாக சந்தோஷப்பட்டுக் கொள்ளும் எடிட்டிங்கும் ஒரு காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. அய்யப்பன் கட்டற்ற உணர்ச்சிக்கு தன்னை ஒப்புக் கொடுத்துக் கொள்ளும் ஒரு கலைஞன். அவர் தன் புத்தி ஜீவித் தனத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. மேலும் அய்யப்பனிடம், தான் கவிஞனன்றி வேறில்லை என்கிற கழிவிரக்கமும், கர்வமும் கூடிக் கிடக்கிறது. அவரிடம் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ‘நண்பா! கவிதைகளை அவ்வளவு நம்பாதே’.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </