வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.கவிதைகள்

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
சமயவேல்
 
 
 
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கவிதைகள் TS ஈன்றுப் புறந்தருதல் கவிதைகள் வாயில்

நெற்றிக்கண் தொலைத்த கவிதை


சமயவேல்  

சிறு தூறலாகப் பெய்யும் மழையால்
கரும் கழிவுகளில் எழும் குமட்டும் நாற்றம்
அசுர ஆட்டோக்கள் கக்கிய
கேஸோலின் வாசம்
நான் ஒரு காலைப் பொழுதில்
வைகைக் கரையில் நிற்கிறேன்.

கரை இருமருங்கிலும் தொடர்ச்சியாய்
ஒலிக்கும் பட்டறைச் சம்மட்டிகளின்
சப்தத்தில் என் செவிப்பறை அதிர்கிறது
ஆயில் சிந்திய கால் சராய்களுக்குள்
மஹால் தூண்களைவிட உறுதியாய் நிற்கும்
பதின்பருவ பையன்களின் கால்கள்;
உயரும் கைகளில் பிதுங்கும் புஜங்களில்
பாண்டிய நாட்டின் வியர்வை வழிகிறது

பன்றிகள் அலையும் கரும்புனல் மேல்
முச்சக்கர சைக்கிளிலிருந்து மருத்துவமனைக்
கழிவுகளைக் கொட்டுகிறான்
குழந்தைத் தொழிலாளி நெடுஞ்செழியன்

கள்ளத்தனமாய் கேஸ் ஏற்றும் வரிசையில்
ஒரு பள்ளிச் சிறுமியர் வண்டியும் நிற்கிறது
கழுத்தில் டைகள் ஆடும்
கருஞ்சிவப்புச் சீருடை மீனாட்சிகள்
ஸ்கேல் யுத்தம் நடத்துகிறார்கள்

மாநகராட்சியின் ஒற்றை மாட்டு வண்டியில்
மூக்கணாங் கயிற்றை சுழற்றியபடி வருகிறார்
குட்கா மெல்லும் கள்ளழகர்

புட்டு வாங்கக் காசில்லாத கந்தலாடைச் சிவனார்
கோப்பெருந்தேவியின் இட்லிக் கடையில் விழும்
எச்சில் இலைகளைக் கவனித்தபடி
தியானத்தில் இருக்கிறார்

நமக்கென்ன என்னும் பாவனையோடு
காறித் துப்புகிறான்
நெற்றிக்கண் தொலைத்த நவீனக் கவிஞன்.
----------------------------------------------------------------------------------------------

மணிவண்ணன் இருமிக் கொண்டே இருக்கிறார்

மணிவண்ணன் இருமிக் கொண்டே இருக்கிறார்
ஆயினும் நன்றி நன்றி என்கிறார்
யன்னலோர இருக்கையை விட்டுக் கொடுத்தமைக்காக
மற்றும் மற்றும் என்று இருமினார்
ஒலித்த அலைபேசியைத் திறக்கிறார்
லட்சுமி லட்சுமி
லட்சுமி பஸ் ஏறிட்டேன்டா காலை பத்து பத்தரைக்கு
வந்திருவேன்டா... இருமுகிறார்
அலைபேசியை அணைத்து பைக்குள் போடுகிறார்
முழுப் பேருந்தும் கவனிக்கிற மாதிரி தொடர் இருமல்
ஏதேனும் சிரப், மருந்து எடுத்துக்கக் கூடாதா என்றேன்
மருந்தென்ன, பெரிய மருந்தே சாப்பிட்டுட்டேன்
மூணு நாளா சாப்டுட்டே இருக்கேன்
சரி டிபன் எதுவும் சாப்பிட்டாச்சா
கையிலிருந்த மில்க்பிகீஸ் பாக்கெட்டைக் காண்பித்தார்
இது தான் சோறு இட்லி தோசை பூரி பொங்கல் எல்லாம்
பிஸ்கட் தவிர வேற எதுவும் ஆகாது
எல்லாமே டாக்டர்கள் உலகம்
இவ்வளவு கனிவு காட்டும் நீங்கள் ஒரு பிஸ்கட்
எடுத்துக் கொள்ளுங்களேன் என்று பாக்கெட்டை எறிந்தார்
மீண்டும் அலைபேசி அழைப்பு
ஆமாமா டாக்டர் இனிமே வரவேண்டாம்னுட்டார்
சவத்த விடு
அழைப்பைத் துண்டித்து பேசியை பைக்குள் எறிந்தார்
சார் என்ன பிஸ்கட் பிடிக்காதா என்றவர்
இருமத் தொடங்கினார்
தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறார் மணிவண்ணன்.

----------------------------------------------------------------------------------------------

பொட்டலம் பற்றிய யோசனைகள்

இரவின் அந்திமத்தில்
அதிகக் குளிரெடுத்து
போர்வையை மேலும்
இறுக்கிக் கொள்கிறபோது
உணர்கிறேன்
நான் ஒரு
துணிப்பொட்டலம் என்று.

மருத்துவச்சி ஏந்திக் காட்டிய
நிர்வாணப் பொட்டலம் கண்டு
வலியுடனும் குதூகலித்த
அம்மா
இன்றில்லை.

இது பற்றி மேலும்
யோசிக்க முடியாமல்
உருண்டு புரண்டு
தூங்கிப் போனேன்.

காலையில் எழுந்து குளித்து
ஷேவ் செய்து தலைவாரி
பவ்டர் பூசி
ஒரு சிறந்த உடைப் பொட்டலமாய்
தெருவில் நடந்தேன்.

----------------------------------------------------------------------------------------------

மலையை விழுங்கும் மலைகள்

நண்பன் வீட்டு மாடியிலிருந்தபடி
இரவுப் பயணத்திற்குப் பிறகான அதிகாலையில்
வெண் பனிக்குள் மூழ்கிய மலையைப்
பார்த்துக் கொண்டே இருந்தேன்
நிம்மதியின் நிலம் அது என்று உணர்ந்த என்னை
மலை பருகிக் கொண்டே இருந்தது

ஆனால் இரவில் கனவுக்குள் நுழைந்த
ஒரு பெரும் மலைப் பிரதேசம்
பயங்கரம் பூசிய வெயிலில் தகதகத்தது
செம்பழுப்புப் பாறைகள் செதிள் செதிளாக வெடித்து
உயர உயரப் போய்க்கொண்டே இருந்தது
தலை சுழற்றும் பள்ளத்தாக்குகளில்
வீழ்த்திவிடும் அபாயச் சரிவுகளில்
நடக்க முடியாமல் நடந்து கொண்டிருந்தேன்

ஒரு மலை முடிந்ததும் பல மலைகள்
அடுக்கடுக்காய் முளைத்துக்கொண்டே வந்தன
எனக்குக் கீழே பாளம் பாளமாய் மின்னிய
ஈட்டிப் பாறைகளைக் கண்டு நடுக்கமுற்றேன்

பெரும் மலைகளுக்கு நடுவில் இருந்த
பள்ளத்தாக்கில் நீரும் இல்லை நிலமும் இல்லை
மேலும் கீழும் ஆகயமொவென அச்சமுற்றேன்
எதன் மேல் எது நிற்கிறது என வியந்தபோது
எல்லா மலைகளும் மறைந்து போயின

இப்பொழுது நான்
அந்த அதிகாலைப் பனிமலையின்
கதகதப்பினுள் நுழைந்து கொண்டிருக்கிறேன்.

நண்பன் ஸ்ரீ நேசனுக்கு

----------------------------------------------------------------------------------------------------------------

மேற்குறிப்புகள்:

கவிதைகளோடு அந்தந்த எழுத்தாளர்களின் கவிதைகள் பற்றிய ஒரு திறனாய்வை, அல்லது கவிஞர்கள் பற்றிய ஒரு கவி அறிமுகத்தை இந்தப் பகுதியுடன் கொடுத்தால் புதிதாக படிக்க வரும் வாசகருக்கு அந்தக் கவி ஆளுமை பற்றிய ஒரு புரிதல் ஏற்படும் என்பதற்காகவே இந்தப் பகுதி இங்கே கொடுக்கப்படுகிறது. கட்டுரை எழுதியவர் ஆட்சேபனை தெரிவித்தால் இந்தப் பகுதி நீக்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------------

மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் - ஆத்மார்த்தி

http://www.keetru.com/index.php?option=com_content&view
=article&id=13320: 2011-03-02-12-34-21&catid=4:reviews&Itemid=267


சமயவேல் அவர்களின் மின்னிப்புற்களும் மிதுக்கம் பழங்களும் என்னும் கவிதை தொகுப்பை மற்றெல்லாவற்றையும் போன்றே வாங்கினேன். இதற்கு முந்தைய அவரது இரண்டு தொகுப்புக்களான அகாலம் மற்றும் காற்றின் பாடல் இரண்டையும் நான் வெகு நாட்களாகக் கேள்விப்பட்டவன் தானே தவிர அவற்றை வாசித்தவனில்லை.

அந்த இயலாமை கூட இந்த தொகுப்பை வெகு விரைவாக எனக்குள் பொதிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை கிளப்பியிருக்கலாம், ஆனால் இந்த கவிதைகள் எனக்குள் என்னவிதமான அலைச்சலை ஏற்படுத்தக்கூடும் என்று கொஞ்சமும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை.

சமயவேலின் கவிதைகள் நிதானமானவை. அவர் எதையும் உரத்து சொல்வதே இல்லை. ஏற்படுத்தப்பட்ட அதிர்ச்சிகளை அவை உண்டு பண்ணுவதே இல்லை. மாறாக அவர் மௌனத்தின் மொழிதலைக் கையிலெடுக்கிறார். நாலாபுறங்களிலும் வீசி எறியப்பட்ட கற்கள் ஒழுங்காக எதனையாவது கொய்து திரும்புவதற்கான சாத்தியம் உண்டு என்று நம்புவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் சமயவேலின் கவிதைகள் அது மாதிரியானவை.

அவரது அக உலகம் ஆச்சர்யங்களற்றவையாக, செயற்கைத்தன்மை எதுவும் இல்லாததாக இருப்பது அவரது இயல்பின் நீட்சி. அவர் மரணத்தை எள்ளுகிறார், தனது தனித்த சொல்லாடல்களால். தனிமையை, மரணம் குறித்த முன் தீர்மானத்தை, தொலைந்து விட்ட சொந்த ஊருக்கு செல்வதை, இருட்டை, தொலைத்த காலத்தை இவற்றையெல்லாம் நமக்கு சொல்வதன் மூலமாக நமக்குள் திறந்து கொண்டே செல்கிறார். அவற்றின் பிரதிகள் நமக்குள் அப்பிக்கொள்கின்றன. இவரது கவிதைகளை எடுத்து படித்து பின் தொலைப்பதோ, அல்லது அதிலிருந்து அகல்வதோ சாத்தியமில்லை என்பது தான் சமயவேலின் தனிப்பட்ட கவிதாவெளி. சமயவேல் தன் கவிதைகளில் அலட்சியமாகவும், அதீதமாகவும் மாறி மாறி நாம் கண்டுணரக் கூடிய நிகழ்வுகளைக் கையிலெடுக்கிறார். எந்த வித ஒப்பனைகளும் இன்றி அந்த நிகழ்வுகளைத் திறந்து தன் மென்மையான மொழியால் அதைப் பதிவு செய்கிறார்.

ஒரு கவிதையைப் படிப்படியாகக் கட்டுவதை விடவும், மொழியைக் கலைத்துப் போட்டுக் கவிதை செய்வதைக் காட்டிலும் மொழியைத் திறந்து தனதான தரிசனங்களை அதற்குள் பொருந்தச் செய்வதை மட்டும் செய்து பார்க்கிறார். வசப்படுகிறது கவிதை. வாழ்தலை பதிவு செய்வதில் சமயவேல் கையிலெடுக்கும் வார்த்தைகள் அற்புதமானவை. அவர் மெனக்கெடுவதில்லை. மாறாக சில சொற்களை கையில் வைத்துக் கொண்டு தான் இருந்த காலத்தின் வாயிலில் நிற்கிறார், எதேச்சையாகவோ திட்டமிட்டோ அந்த வார்த்தைகளை வாசிக்கிறவர்களை, அதுவே பார்த்துக்கொள்ளும் என்று நம்புகிறார். அவர் நம்புவது தான் நிகழ்கிறது.

நேரடியான கவிதைகள் சமயவேலின் கவிதைகள்.

"புரியாமையின் சாலையில் விழுந்து கிடக்கும் கவிதை"யில் வலிப்பு நோய்த் தாக்கும் ஒருவனின் உடலையும் மனசையும் அந்த ஒற்றை நொடியில் ஒருங்கே விவரித்து நம்மை அதிரவைக்கிறார். வலிப்பு தாக்குறும் ஒருவன் மெல்ல நிலத்தில் வீழ்வதை விவரிக்கும் சமயவேல், அந்த இடத்தை ஒரு கோழிக்கறிக்கடையின் முன் அருகாமையாகக் காணவைக்கிறார். அவனைக் காப்பாற்ற நீளும் கைகள் எல்லாமுமே கோழிக்கறிக்கடையுடன் வெட்டுபவர்/கறி வாங்க வந்து காத்திருப்பவர், சிகரட் பிடிப்பவர் என தொடர்பிலிருப்பவர்கள் தாம். கரத்தில் திணிக்கப்பட்ட இரும்புப் படிக்கல்லை பற்றிய வலிப்பு வந்தவருக்கு அது அடங்கிய பிறகு சமயவேலின் மொழி தன்னை கட்டவிழ்த்துப் பாய்கிறது...

"விழித்துப் பார்க்கிறேன்/சாலையிலா கிடக்கிறேன்/என்னைச் சுற்றி நிற்கிற முகங்களில் உறைந்திருக்கும்/புரியாமையின் புதிரில்/அவர்களின் கடைசி நிமிட நிழல்/ அப்பிக்கிடந்தது. மீண்டும் எனது நாள்;/இதோ தெரிகிற அல்லா கோயிலின்/ஒரு கோபுரமல்ல/இந்த பூமியின் ஆயிரமாயிரம் கோபுரங்களும்/ ஏந்திப் பிடித்திருக்கிற/நூலூஞ்சலில் ஆடுகிறேன்/ கோழிகளே கோழிகளே /என்னை மன்னித்துவிடுங்கள்/உங்களைப் பற்றிக் கூற /என்னிடம் ஏதுமில்லை.

வலிப்பு வந்து மீண்டு எழும் அந்த முன்/பின் கணங்களுக்குள் வலித்து துடித்து அடங்கிவிடக் கூடிய கோழிகள் நம் கண் முன் நிழலாய்.

"நாட்களற்ற மீவுலகம்" என்னும் கவிதையில் யாருக்கும் தெரியாமல்/பள்ளியில் பிள்ளைகளைப் பார்த்து/வந்த/புதன் கிழமை தான்/அவனது கடைசி நாள் என்றார்கள்/மறுநாள்/வாழ்வின் கொடூர ரயில் அடித்து /கூழாகிப் போனான்/தானாகவே/தைரியமாக/தலை தாழ்த்தி/ஏதுமிலாப் பெருவெளிக்குள் நுழைந்த அவன் முதல் நாளும் அதுதான்.நாட்களின் வேட்டையில்/சிக்கிவிடாமல் காட்டில்/திசையற்று ஓடும்/சிறுமான் நான்.

ஒரு தற்கொலையை, செய்து கொண்டவனிலிருந்து தொடங்கி, அவன் மரணத்தை சொல்லி, தான் வாழ்ந்து கொண்டிருப்பதையும் சமயவேல் கனமாகப் பதிகின்றார். மரணத்தை சந்தித்தல் தற்கொலை என்றால், அதை சமயவேல் விவரிப்பதில் உள்ள சிக்கன வார்த்தைகள் பேருருவம் கொள்கின்றன. நம்மை காலம் வேட்டையாடியே தீரும். அதற்குச் சிக்கிவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் நடுங்க வைக்கும் உண்மையின் அமைதி.

அற்புதமான மென் இழைகள் கொண்டு தன் உணர்வுகளைக் கட்டிப் பின்னுகிறார் சமயவேல். அவரது மனம் கவிதை இரண்டுக்கும் பெருவித்யாசங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கையை அணுகுகிறார். சமயவேல் எப்படியோ அப்படித்தான் அவரது கவிதைகளும் எனச் சொல்லுமளவுக்கு அவரது கவிதைகளால் அவரும், அவரால் கவிதைகளும் நிரம்பித்ததும்புகின்றன.

சமயவேலின் கவிதை வெளி தனிப்பட்டவர்களுக்காக. அவர்கள் உரத்த குரலில் பேசாதவர்களாக, எப்பொழுதும் ஏதோ ஒரு செயலை செய்து கொண்டும் தொடர்ந்து கொண்டும் இருப்பவர்களாக, அழைப்புகளைக் கூச்சத்துடனே எதிர்கொள்பவர்களாக அல்லது கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை நோக்காமல் முன் நகர்பவர்களாக, ஆனால் வெளிப்படுகையில் அசாதாரணர்களாக இருக்கிறார்கள்.

எல்லோருக்குமான ஒன்றை படைக்கையில் கவிதாசுதந்திரம் குறைந்து போகக்கூடும்.என்றாலும் கூட அந்த காரணத்தை தவிர்த்தும் சமயவேல் நிதானமான கவிதைகளுக்காகக் காத்திருக்கிறார். அவை எழுகின்றன. அவர் அவற்றை காட்சிப் படுத்துவதோடு நின்று கொள்கிறார்.

சமயவேலின் கவிதைகளில் மரணத்தை அவர் எள்ளுகிறார். அது சர்ப்பமாக அவர் கழுத்தில் அணியப்படுகிறது. ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் கவிதையில் என் புல்வெளியில் மரணம்/ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில்/நான் ஒரு நாகலிங்க மரமாவேன். என் கழுத்தை தழுவிய படி ஆயிரம் நாகங்கள்/ பூக்களாய் ஊஞ்சலாடும். இதே கவிதையினுள் கவிதையாக கீழ்காணும் வரிகள் நிற்கின்றன.

"எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற/ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது."

"இப்பொழுதெல்லாம்" என்ற கவிதை நமக்கு தருகிற அனுபவம் அலாதியானது. சமீபம் ஒன்றின் மாற்றங்களைச் சொல்வதன் மூலம் இந்தக் கவிதை அதன் இறந்த காலத்தை இழுத்தோட்டுகிறது நம்முன். அடுத்த கவிதையான "விடுமுறை வேண்டும் உடல்" என்பதில், உடலானது அடம்பிடிக்கிறது. முசுமுசுக்கை செடி மாதிரி அல்லது அனிச்சகதியில் புரளும் எருமை மாதிரி தன்னால் இயங்க முடியாது என எதிர்த்துப் பேசுகிறது. விடுமுறை கேட்கிறது.

"எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம்/கேட்கும் என சம்மதித்த படியே இருக்கிறேன்" கனவுகளில் நடுக்கமுறுவதை இயல்பாக பதிவு செய்கிறார் சமயவேல். கனவை திட்டமிடாமல் அது நிகழ்வதை உணர்த்துவதில் எந்தச் சாமர்த்தியமும் இல்லாமல், சாயங்களற்ற நிறங்களை கொட்டிவைக்கிறார். "அழகென்னும் அபாயம்"என்னும் கவிதையில் "நுணா மரப் புதரொன்றில்
ஒரு சிறு பறவை இறகுகள் அடர் சிவப்பு கழுத்து மயில் நீலம்
உருண்டை வயிறு சாம்பல் நிறம் கொண்டை மஞ்சள் நிறம்
கண்கள் என்ன நிறம்..?கால்கள் பசுமஞ்சள் நிறம் விரல்கள் அரக்கு நிறம்'
நிற்கிற மரமோ மர நிறம்"
இந்த மரமோ மர நிறம் என்பதில் உள்ளடங்கி நிற்கும் தரிசனம், அபூர்வமானது. கண்கள் என்ன நிறம் என்பதனை படிக்கும் ஒருவனைக் கவிதைக்குள் இழுத்து வரும் வாயிலாகவே கருதலாம்.

"அடர் காட்டு இருளின் ஆந்தைகளைப் பிழிந்து அடுக்குமாடிகளுக்கு வர்ணம் பூசுகிறார்கள்" என்ற வரிகளில் "மழைமறைவுப்பாறைகள்" என்னும் கவிதையில் பெருநகரமயமாக்கலின் அநீதியைப் பதிகிறார்.

கவிதைக்குள் கவிதையாக அதே மழை மறைவுப் பாறைகளில் "வெட்ட வெளி வீடுகளில் வசித்த மரநாய்கள் செல் டவர்களில் தூக்கிலிட்டுத் தொங்கின" என்கிறார். சமீப காலம் அதற்கு முந்தைய விரும்பிக்கொண்டிருந்த காலவெளியொன்றை பிடுங்கிக்கொண்டு நமக்கு வளர்ச்சி என்ற பெயரில் தந்திருப்பவற்றை ஏளனம் செய்கிறார்.

இந்த தொகுப்பின் மிக முக்கியமானது லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கென சமயவேல் ப்ரத்யேகமாக சம்ர்பிக்கும் "நீ அணிந்து கொண்டிருக்கும் உடல்" என்னும் கவிதை. சொற்கள் உட்பட பலமுனைகளிலும் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகும் மூன்றாம் பாலினம் அல்லது தன்விருப்ப பாலினங்களை தட்டி கொடுத்து தைரியப்படுத்துகிறார் சமயவேல். அங்கீகாரம் என்பது அபத்தம்.சுதந்திரம் என்பதே சரி என்பதை துணிவுடன் உறுதியுடன் முன்வைக்கிறார்.

"நீ அணிந்து கொண்டிருக்கும் உடலை நீ மட்டுமே அறிவாய்." என்கிறார். "விந்தைகளின் மந்திரச் சக்கரத்தில் ஏறி அண்டம் சுற்றி முடித்த ஆனந்தம் நீ"என்று கட்டியம் கூறுகிறார். இன்னும் காயங்களை நினைக்கிற ஆயிரம் ஆயிரம் வித்யாக்களுக்கு இந்த ஒரு கவிதை தரும் தெளிவும் நம்பிக்கையும் அலாதி.

சமயவேலின் கவிமாந்தர்கள் தன்னைப் போலிருப்பது தேவையற்றது என்கிறார். அவர்களை படைத்து விடாமல் ப்ரதி எடுக்காமல் பிறக்கச்செய்வதில் சமயவேலின் ஆளுமை மிளிர்கிறது. "தோட்டப்பெண்" என்னும் அவரது
கவிதையில் ஒரு தோட்டப்பெண் உதிரும் பன்னீர்ப் பூ மரங்களை "எனக்கு வேலை கொடுத்த அழகுச் செல்வங்கள்" எனக் கொஞ்சுகிறாள். சிலிர்ப்பேற்படுகிறது.

"குற்ற நிலவறை" என்னும் கவிதை மிக அபூர்வமானது. அந்த ஒற்றை வரிக்கவிதைக்கு முன் குறிப்பாகத் தரப்பட்டிருக்கும் குறிப்பு நாம் அடிக்கடி கேள்விப்பட்ட/பார்த்ததாய் நம்பக்கூடிய நீதிமன்றத்தின் ஒரு பகுதியை அணுகுகிறது.இந்தக் கவிதை தரும் அதிர்வு ஒப்புமை அற்றது.

"காலம் ஒரு பட்டுப் போர்வையை எடுத்து எல்லாவற்றையும் அழகாக மூடி விடுகிறது" என்கிறார் "தினசரி மனிதன்" எனும் ஒன்றில். இன்னொரு கவிதையான "இரவின் தீராப்பகை"..சமயவேலின் நீண்ட கவிதை. கிராமத்துக்கு செல்லும் வண்டிப்பாதையை எந்தப் பேயோ அழித்து விட்டது/ எனத் துவங்கும் இந்த கவிதை சொந்த ஊர் என்னும் ஒரு மாய உலகம், நம்மில் பலருக்கும் சொந்தமாயிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பதை அறுத்தெறிகிறது. வருடத்துக்கு ஒரு முறை வந்து செல்லும் சுற்றுலாத் தளமாக சொந்த ஊரை எண்ணும் எல்லோரையும் நுழைவுக்கு முந்தைய இடமொன்றில் நிறுத்தி சொந்த ஊரின் வண்டிப்பாதை மூடிக் கொள்கிறது. மந்தைக் கருப்பன் எதற்கடா வந்தாய் எனக்கத்துகிறான். பல மரணங்களுக்கு வந்து தலை காட்டாதவர்களை முப்பிடாரி அம்மன் எதற்கு வந்தாய்? எனக் கேட்கிறாள். துவக்கப்புள்ளியை, ஆதார விதையை, அடியில் தாங்கி
நிற்கக்கூடிய ஆதி நிலத்தை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் சமயவேல். அவைகள் பேசுகின்றன. ஊர்மாறி சென்று பெருவாழ்வு வாழ்வதாய் பாவனை காட்டிசொந்த ஊரை தம் தமது சந்ததியினருக்கே ஒரு காட்சிப்பொருளாய் மாற்றிவிட்டிருக்கும் பலரையும் சொந்த ஊரின் மூலங்களின் கையில் சவுக்கொன்றை கொடுத்து சுழற்ற வைத்திருக்கிறார். இந்த கவிதை நமக்கு தரக்கூடிய அனுபவம் மிகக் காத்திரமானது.

"ஆயிரம் வருடம் ஆனாலும் உன் மூளையிலிருந்து நீக்க முடியுமா.?
லிங்கம் வாத்தியாரா எழுதுகிறார்.
நம் விதியை நாம் தான் எழுதுகிறோம்."
...........................
...........................................
கல்லையும் கற்கண்டையும்
ஒரு சேரத் தொலைத்து
விட்டு
தம்பி எங்கே வருகிறாய்
போ போய்விடு."
.....................
"ஒழுங்கு" என்னும் தனது கவிதையில் எப்பொழுதோ தான் உற்று நோக்கிய சைலபானுவின் பாங்கு ஓதிய சிறு உதடுகள் முப்பது ஆண்டு காலமாய் தனக்குள் பல்லாயிரம் முறைகள் பாங்கு ஓதி நெளிவதாக வியக்கிறார் சமயவேல். எந்த ஒரு நிகழ்வையும் கவிதைப்படுத்துவதில் சமயவேல் சிரமம் கொள்வதே இல்லை. அந்த நிகழ்வின் கூறுகளுக்குள் அழகாகக் கவிதையைச் செருகி வைக்கிறார். அவர் பயணங்களும் அவர் மனிதர்களும் அவர் அனுபவங்களும் அவர் உலகமும் நமக்கு முன்னால் விரித்து வைக்கப்படுகின்றன. சமயவேலால். "தானப்பர் தெரு" என்னும் கவிதை அதற்கொரு உதாரணம். அந்தக் கவிதையை இப்படி முடிக்கிறார் சமயவேல்

"கைகளாலும் குரல்களாலும் இணைந்த
அந்தச் சிறு குடும்பம்
ஒரு பேரதிசயமாய் மிதந்து கொண்டிருந்தது
தானப்பர் தெருவில்."

எப்பொழுதும் என்னும் கவிதையில் ஒருவன் மிருதங்கம் வாசிப்பதை சமயவேல் அவனது வாசிப்பினூடே சொல்கிறார். முடியுமா..? முடிகிறது. படிக்கையில் நமக்கும் தெரிகிறது..

"நானும் என் நிழலும் கவிதையில், "என் நிழல் மூலமே என்னைப் பகடி செய்யும் ஒளிக்கற்றைகளை என்ன செய்ய முடியும்..? பௌதிக உலகில் ஒரு பௌதிகப் பண்டம் நீ நிழல் சொல்கிறது."

சாம்பல் என்னும் கவிதையில் "கருப்பந்துறை எங்கிருக்கிறது" என்னும் விசாரிப்பில் ஒரு நிலத்தில் புதியவனொருவனின் ஒவ்வாமையை சொல்ல "நீர் நடு மேடொன்றில் ரம்மியம் அடர்ந்த மஞ்சள் வெயிலில் பொருத்தமற்று நின்றிருந்தது சாம்பல் கொக்கு" என்கிறார்.

infinity எனப்படும் முடிவிலியை சவம் போல் வாய்திறந்து கிடக்கும் 8 என்கிற சமயவேல் அறிவியலின் அதிசயங்களில் ஒன்றான infinityயை தனது கவிதைக்குள் பொருந்தசெய்கிறார். முடிவற்றது என்னும் பதத்தின் அபத்தத்தை ஈழமக்கள் கொத்துக்கொத்தாய் செத்து விழுவதுடன் பொருத்தி பார்க்கும் பொழுது நமக்கு வலிக்கிறது. பாடம் 8.பல்கோணமிதி.

செல்பேசியில் வரும் ராங்க்-கால்கள் விரிவடைகின்றன, சமயவேலின் "வெளியே" எனும் கவிதையில் "அலைபேசியில் வந்த தப்பு அழைப்பில் பேசிய மஞ்சுளா ஒரு தப்பு முத்தம் கொடுத்தாள் " "ஜன்னலுக்கு வெளியே மிகுந்த வசீகரத்துடன் ஊர்ந்து கொண்டிருக்கிறது என் நகரம்" என்கிறார்.

சமயவேல் கவிதை நூல்களில் ஒன்றான மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் என்னும் ஒன்றை மடித்து ஒளித்து வைத்து விடலாம். ஆனால் அவரது கவிதைகள் தரக்கூடிய அனுபவமும், அழுகைக்கு முந்தைய கணத்தின் விசும்பலை நமக்குள் ஏற்படுத்திவிடும் சமயவேலின் கவிதைகளை என்ன செய்து வெளித்தள்ள..? வெகு காலமாகும். இந்த அனுபவத்திலிருந்து விலகி வெளிப்பட்டு காலம் மாறிக்கொள்ள.அப்பொழுதும் அது வாய்க்குமா எனத்திட்டமாக சொல்வதற்கில்லை.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </