கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்

மௌனமொழி - திரைமொழி வழியில்..

அருண் மோ.  

ஒரு கதைக்கு மிக சரியான திரைக்கதை அமைக்கப்படுமேயானால் அந்த கதை அதனுடைய திரைக்கதை வழியாக அடைந்த வெற்றியை நாம் ட்ரீட்மென்ட் என்று சொல்கிறோம். ஒரு படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் கதைக்களம், காட்சியமைப்பு, படத்தின் இறுதியில் முற்றிலும், அல்லது பகுதி வாரியாக நம்மை வேறொரு களத்திற்கு, கதைக்கு இட்டு செல்லுமேயானால் அது முற்றிலும் திரைக்கதையினால் விளைந்தவையாக மட்டுமே இருக்க முடியும்.

ஹங்கேரி இயக்குனர் ஜோல்தான் பாப்ரியின் பெரும்பாலான படங்கள் இந்த வகை திரைக்கதையில்தான் அமைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக அவரது "The fifth Seal, மற்றும் professor hannibal ஆகிய இரண்டு படங்களும் இந்த வகை திரைக்கதை அமைப்பில்தான் வெளிவந்திருக்கும். தமிழில் இது மாதிரியான படங்கள் ஒன்று கூட இல்லைஎன்று சொல்லிவிடமுடியாது. ஆனால் தமிழில் பார்வையாளனை ஏமாற்றும் வித்தை இந்த வகை திரைக்கதை யுக்தியில் கையாளப்பட்டிருக்கும். பெரிய படங்களிலேயே இவ்வைகை திரைக்கதை யுக்தி கையாளப்படாதபோது குறும்படங்களில் சொல்லவே வேண்டாம். யாரும் அப்படி யோசிக்க கூட மாட்டார்கள்.

ஆனால் தெரிந்தோ தெரியாமலோ சமீபத்தில் தமிழில் அப்படி ஒரு குறும்படம் வெளிவந்துள்ளது. தோழர் ஜெயச்சந்திரன் ஹஸ்மி இயக்கத்தில் வெளிவந்துள்ள மௌனமொழி குறும்படம் இந்த வகை திரைக்கதை யுக்தியை கையாண்டுள்ளது.

ஒரு காதலன், காதலி இடையேயான பிணக்கை சித்தரிக்கும் காட்சிகள், இறுதியை நோக்கி செல்ல, செல்ல ஈழத் தமிழர் ஒருவரின் வாழ்வியல் கூறுகளை ஒரு தொலைபேசி உரையாடலின் வாயிலாக சித்தரிக்கிறது. இறுதியில் அடுத்ததுத்த காட்சிகளை எல்லாவிதமான பார்வையாளனும் ஓரளவிற்கு யூகிக்க முடியும். ஆனால் அடுத்த காட்சியை நாம் யூகித்து விடுவதால் மட்டும் ஒரு படத்தின் சுவாரசியமோ, திரைக்கதையோ தோல்வி அடைந்து விடுவதில்லை. யூகிக்கப்பட்டும் அந்தக் காட்சி நம்மால் ரசிக்கப்படுமேயானால் அதுவும் அந்த திரைகதையின் வெற்றிதான். ஒரு நொடியில் நிகழ்ந்துவிடும் அந்த காட்சி நமக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சி, ஆற்றாமை, சோகம், குதூகலம் இவையெல்லாம்தான் யூகிக்கப்பட்ட காட்சியை தாண்டியும் நம்மை படத்தின் அடுத்த காட்சிக்கு நகர்த்தி செல்பவை.

இந்த படத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று அதன் திரைக்கதை வடிவம். எந்த ஒரு காட்சியும் தேவையற்றது என்றோ, அல்லது படத்தை தொய்வடைய செய்கிறது என்றோ நம்மால் சொல்ல முடியாது. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம், அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கால அளவு எல்லாம் கதையின் போக்கை அழகியல் ரீதியாக நகர்த்தி செல்கிறது.
ஆனால் படத்தில் முக்கியமான வசந்த் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்ட விதத்தில் கொஞ்சம் சினிமா தனம் இருக்கிறது. இயல்பான தன்மையில் வசந்த் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தால் படத்திற்கு இப்படியான ஒரு திரைக்கதை கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். ஆனால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இயல்பு தன்மையும் வசப்பட்டிருக்க கூடும்.
இந்த குறும்படத்தில் மூன்று குறைபாடுகளைக் களைந்தால், இந்த ஆண்டின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக இருந்திருக்கும்.

ஒன்று.. குறும்படத்தின் பாடல்.. எந்தவித தேவையும் இல்லாமல் கீச் குரலில் ஒலிக்கும் பாடல்.. திரைப்படத்திற்கான கலர் குறும்படத்திலும் இருக்க வேண்டும் என்கிற உந்துதலே இதற்கு காரணமாக இருக்கலாம். குறும்படங்களில் பாடலுக்கான தேவையே இல்லை என்று சொல்லிவிட முயத்யாது. லெனின் தன்னுடைய நாக் அவுட் படத்தில் பட்டினத்தாரின் பாடல்களை பயன்படுத்தி இருப்பார். அந்த பாடல் அவரது படத்தின் ஒட்டுமொத்த கருவை சில நொடிகளில் சொல்லிவிடும் ஆற்றல் கொண்டிருந்தது. ஆனால் இப்போது வரும் பெரும்பாலான குறும்படங்களில் பாடலும் தவறாமல் இடம் பெறுகிறது. ஆனால் அந்த பாடலுக்கான தேவை படத்தில் எள்ளளவும் இருப்பதில்லை. ஆனால் தமிழ் திரைப்படங்கள் நம் ரத்தத்தில் ஊறியதின் விளைவே இதுப் போன்று பாடல்களை குறும்படங்களில் பயன்படுத்துவது. இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.

இரண்டு.. இலங்கை தமிழராக வரும் நண்பர் தொலைபேசியில் பேசும்போது இடையிடையே வரும் அதிகப்படியான சப்தம்.. கதாப்பாத்திரத்தின் மனநிலையை பார்வையாளனுக்கு கடத்த இதுப் போன்ற இசைச் சரங்களை பயன்படுத்துவதை விட அந்த இடத்தை அமைதியாக விட்டு விடுவது மிக சிறந்த யுக்தி. இதில் கை தேர்ந்தவர் தமிழில் பாலு மகேந்திரா மட்டுமே. கதாப்பாத்திரத்தின் மன நிலை நிச்சயம் காட்சியின் வாயிலாகவே பார்வையாளனுக்கு கடத்தப்பட வேண்டும். இசை அந்த காட்சியின் உன்னதத் தன்மையை கூட்டுவதாக இருந்தால் பயன்படுத்தலாம். ஆனால் வசனங்களை கேட்க விடாமல் தடுக்கும் இசை தேவையற்றது.

மூன்று.. இலங்கை தமிழராக நடித்திருக்கும் நண்பரின் கொஞ்சம் மிக நடிப்பு. எப்போதும் தியேட்டர் ஆர்டிஸ்ட் சிலரிடம் இப்படி சில நேரங்களில் மிகை நடிப்பை வெளிப்படுத்தும் பிரச்சனை இருக்கும். ஆனால் இவர்களுக்கு நேரம் ஒதுக்கி சரியான கலவையில் நடிப்பை வெளிக்கொண்டு வர வேண்டியது இயக்குனரின் கடமை.

படத்தின் இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரம் தொலைபேசியின் எதிர்முனையில் பேசும் அந்த பெண். கடைசி வரை அவள் முகத்தையே காட்டாமல், படத்தின் ஒருவித காதல் உணர்ச்சியைக் கொடுக்க முடிந்திருக்கிறது. அவள் குரலின் Modulation எனப்படும் ஏற்ற இறக்கங்களும், திரைக்கதையின் வடிவமுமே இந்த வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம்.

படத்தின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. முக்கியமாக அந்த பூங்காவில்... பூங்காவில்தான் கதையின் இன்னொரு முகம் வெளிப்பட்டு படம் அங்கேயே முடிந்தும் விடுகிறது. ஆனால் பூங்காவில் இலங்கை தமிழர் பேசும் காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கும் ஷாட்கள் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம். வசந்த் அந்த தொலைபேசியில் ஒரு ரூபாயை போட்டுவிட்டு நகரும் அந்த தருணத்தை இசையாலும், ஒளிப்பதிவாலும் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் கொண்டாடப்படவில்லை. மாறாக இசையும், ஒளிப்பதிவும் அங்கே கொஞ்சம் தயங்கி தயங்கியே நிற்கிறது.

குறும்படங்களில் இசையமைப்பாளர் தேவையா என்றால், தேவையே இல்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது. தொடர்ச்சியாக ஏதாவது ஒலி இருந்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் போல.. இல்லையென்றால் இசையே இல்லையே.. உங்களுக்கு எதுக்கு காசு தரவேண்டும் என்று இயக்குனர் சொல்லிவிடுவார் என்று பயப்படுகிறார்களா? அல்லது படத்திற்கு இசை என்று பேர் போட்டுவிட்டு, படத்தின் நிறைய இடங்களில் இசை இல்லையென்றால் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள் என்று பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த படத்தில் இசையமைப்பாளருக்கு மௌனத்தின் அர்த்தம் கொஞ்சம் புரிந்திருக்கிறது. அந்த பாடலையும், பூங்காவின் சில காட்சிகளையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இசையமைப்பளார் தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

இயக்கி இருக்கும் ஜெயச்சந்திரன் ஹஸ்மி படத்திற்கு திரைக்கதையை எழுதும்போதே அதற்கு புதுவிதமான வடிவம் கொடுத்துவிட்டதால் படத்தின் திரைமொழியில் கவனம் செலுத்த நேரம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். தொடர்ந்து நிறைய குறும்படங்கள் இயக்கும்போதுதான் அதற்கான வடிவம் புலப்படும். சிலர் ஒன்றிரண்டு குறும்படங்கள் எடுத்துவிட்டு திரைப்படங்களை நோக்கி போய்விடுகின்றனர். ஆனால் ஹஸ்மி போன்றவர்கள் தொடர்ந்து நிறைய குறும்படங்கள் இயக்குவதால் இவர்களுக்கு அதற்கான வடிவமும், அதற்கான மொழியும் கைக்கூடி வந்திருக்கிறது. சின்ன சின்ன குறைகளை களைந்துவிட்டுப் பார்த்தால் மௌனமொழி இந்த ஆண்டின் இன்னொரு சிறந்த படமாக தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறது. சிறந்த இன்னொரு குறும்படம் தர்மம்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)