கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
ஒரே ஒரு நாள் - குறும்பட விமர்சனம்

 

ஸ்ரீகணேஷ்  


பால்யம் மிக அழகானது... அது தொடுக்கும் நினைவுகளும், உருவாக்கி வைத்திருக்கும் உலகமும் கலப்படமில்லாதவை. சிறுவர்களின் உலகம் சின்னச் சின்ன சந்தோஷங்களால் ஆனது. அந்த வாழ்கையைப் பதிவு செய்திருக்கும் ஒரு அழகான முயற்சி... 'ஒரே ஒரு நாள்'.

தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவன் செல்வா.. அவன் பந்தை ஒரு வீட்டிற்குள் அடிக்க, அவ்வீட்டில் இருக்கும் சிறுமியான ரம்யாவிற்கும் அவனுக்கும் ஒரு நட்பு ஏற்படுகிறது. ரம்யா ஒரு விபத்தில் அம்மாவையும், தன் கால்களையும் இழந்து வாழும் சிறுமி. அவளைப் பார்த்ததும் செல்வாவிற்கு அவள் மேல் பரிவும், அதன் மூலமாய் நட்பும் உருவாகிறது. வேண்டுமென்றே பந்தை அவர்கள் வீட்டுக்குள் பல முறை அடித்து, அந்த பந்த எடுக்கப் போகும் சாக்கில் ரம்யாவிடம் பேசுகிறான். நட்பு தொடர்கையில், ரம்யாவும் அவனைத் தம்பியாக ஏற்றுக் கொள்கிறாள்.

வெளியுலகைப் பார்க்காமல் ஏங்கும் அவளை, செல்வா ஒரு நாள் அழைத்துச் சென்று ஊர் முழுதும் சுற்றிக் காட்டுகிறான். பின்பு தன் வீட்டிற்கும் அழைத்துச் செல்கிறான். செல்வாவின் பெற்றோர் தோல்பாவைக் கலைஞர்கள்.

அவளை மிகவும் பாசத்தோடு உபசரிக்கின்றனர். பின்பு செல்வாவின் பெற்றோர் நிகழ்த்தும் பொம்மலாட்ட நாடகத்தை குழந்தைகள் இருவரும் பார்த்து மகிழ்கின்றனர். ஒரு நாள் முழுதும் மகிழ்ச்சியாய் இருந்த நெகிழ்வுடன் ரம்யா வீடு திரும்புகிறாள்.

ரம்யாவைப் பார்த்துக் கொள்ளும் வீட்டு வேலைக்காரி, 'கண்ட பசங்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறாய், அமெரிக்காவில் இருக்கும் உன் அப்பாவிடம் சொல்கிறேன்' எனத் திட்டுகிறாள். கவலையுடன் தூங்கப் போகும் சிறுமி, மறுநாள் மீண்டும் செல்வாவைத் தேடி செல்கிறாள். அவர்களின் குடும்பம் ஊரை விட்டே சென்றிருக்கிறது. சிறுவர்களின் நினைவுகளுடன், நம்மில் சின்னதொரு சோகத்தை ஏற்படுத்தி படம் முடிகிறது.

மிக இயல்பான தொனியில் நகரும் இக்குறும்படம், ஆங்காங்கே நம்மில் பல ஞாபகங்களையும் கேள்விகளையும் தூண்டி விட்டுச் செல்கிறது. நடக்க இயலாது உலகைப் பார்க்க ஏங்கும் சிறுமி கூட, நம் மனதின் குறியீடாகவே இருக்கிறாள்.புத்தகத்தில் இருக்கும் படங்களைப் பார்த்து, அதற்குள் தான் நடப்பதாய் கற்பனை செய்யும் காட்சி மிக சிறப்பானது. அவர்கள் ஊர் சுற்றிப் பார்க்கும் போது வரும் பாடலும், நன்றாய் உள்ளது. ஒரு திரைப்படத்திற்கான நேர்த்தியுடன் இக்குறும்படம் படமாக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் நடிப்பு- செல்வா பாத்திரத்தில் அல்பினும், சிறுமி ரம்யாவாக ஹேமலதாவும் நடித்துள்ளனர். அல்பினின் தோற்றமும், உச்சரிப்பும், உடல்மொழியும் ஒரு நாடோடிச் சிறுவனின் இயல்பை பிரதிபலிக்கவில்லை. எம்ஜியார் ரிக்ஷாக்காரராய் நடிப்பதைப் போன்றதொரு செயற்கைத்தன்மையே தருகிறது. இதைக் குறிப்பிட்டுச் சொல்லும் காரணம் செயற்கைத் தன்மை தோன்றத் துவங்கும் போதே இம்மாதிரி ஒரு நல்ல குறும்படம், ஒரு வணிகப் படம் பார்க்கும் மனநிலையை ரசிகனிடத்தில் ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. சிறுமியின் நடிப்பு அப்பாத்திரத்தின் இயல்பை சரியாய் பிரதிபலிக்கிறது. நாடோடிக் கலைஞர்களாய் 'Theatre Lab' ஜெயராவ், 'கூத்துப் பட்டறை' சந்திரா நடித்துள்ளனர். இருவருமே தேர்ந்த நாடக நடிகர்கள். ஒரே ஒரு காட்சியிலேயே தங்கள் பாத்திரத்தை பலமாய் பதிவு செய்கிறார்கள்.

ஒளிப்பதிவு- யுகராஜ். ஷாட்ஸ் தெளிவாய், அழகியலுடன் கம்போஸ் செய்யப்பட்டுள்ளன. கதையின் களத்தை விளக்கும் வகையில் landscape ஷாட்கள் சிறப்பாய் பயன்படுத்தப்பட்டுள்ளன. இசை (பிரிட்டோ, சுனில், சுரேஷ்) படத்துடன் இணைந்து பயணிக்கிறது. படத்தின் மற்றொரு சிறப்பு, லைவ் வாய்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உழைப்பு நிச்சயம் கடினமாய் இருந்திருக்கும். வாழ்த்துக்கள் பாலாஜி & கிரண் மூர்த்தி.

கதை, திரைக்கதை, வசனமெழுதி இயக்கியிருப்பவர் அபிலாஷா. குறும்படத்துறையில் அரிதாய் தென்படும் பெண் இயக்குனர்களில் ஒருவர். இவரின் ஆளுமை, ரசனை படம் முழுதும் தெரிகிறது. சிறுவர்களின் பாடலில் வரும் montage காட்சிகளை மட்டும் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கலாம். அவை வழக்கமாய் சினிமாவில் ஹீரோ- ஹீரோயின் காதலைக் காட்டும் பாடல் காட்சிகள் போலவே இருக்கின்றன. மெலிதான ஒரு உணர்வை, பெண்களுக்கு மட்டுமே புலப்படும் நுட்பத்துடன் படமாய் எடுத்திருக்கிறார். கடின உழைப்பும், தொழில்நுட்பத் தேர்வும், நல்ல ரசனையும் நிச்சயம் படத்தில் தெரிகின்றன.

குழந்தைகள் உலகம் எப்போதும் பெரியவர்களால் புரிந்து கொள்ளப்படுவதே இல்லை. 'படிச்சிட்டியா?' என்னும் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே அவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களிடம் இருக்கிறது எளிமையான அன்பும், இப்படத்தில் வருவது போல் சின்ன பொம்மைகளும்..

- ஸ்ரீகணேஷ்

இக்குறும்படத்தைக் காண:

http://thamizhstudio.com/shortfilms_oon.php

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)