கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  காணொளி TS படைப்பாளிகள் TS கட்டுரைகள் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 

தமிழ் ஸ்டுடியோவின் 53 வது குறும்பட வட்டம்

தமிழ்  


பரவலான வாசிப்பு சமூகத்தினிடையில் இலக்கியவட்டம் என்ற பெயரில் நூல்கள் குறித்து கலந்துரையாடலும், விவாதங்களும் மேற்கொள்வர். அதுபோலவே குறும்படம் பற்றிய திறனாய்வு மேற்கொள்ளவும், அப்படத்தை பற்றிய கருத்துக்களை நேரடியாகவே மக்களிடமிருந்து தெரிந்துகொள்ளவும், பார்வையாளர்களின் முன்னிலையில் திரையிட்டு விவாதங்கள் மேற்கொள்ளப்படும். இந்த குறும்பட வட்டத்தில் புதிதாக திரைப்பட ரசனை வகுப்பும் சேர்ந்துள்ளது. இந்நிகழ்வு 52 வாரங்களை நிறைவுசெய்து 53வது குறும்பட வட்ட நிகழ்வினை ஜீவன ஜோதி அரங்கில் 11.05.2013 அன்று தமிழ்ஸ்டூடியோ நிகழ்த்தியது.

இதில் சினிமா ரசனை வகுப்பிற்காக big city blues படத்தினை திரையிட்டுப் பேச ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன் அழைக்கப்பட்டிருந்தார். மேலும் எழுத்தாளரான பாஸ்கர் சக்தியின் “ஒற்றைப் பூ”, குறும்படமும் திரையிட்டு விவாதிக்க சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சசி, ஓவியர் மருது, காட்சிப்பிழை ஆசிரியர் சுப.குணராஜன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பல அலுவல்களின் காரணமாக சசி மற்றும் ஓவியர் மருது இந்நிகழ்வில் பங்கேற்கமுடியவில்லை.

வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரையும் வரவேற்று , நிகழ்வின் தொடக்கத்தில் “big city blues”, குறும்படம் திரையிடப்பட்டது. சினிமா ரசனை வகுப்பு என்பது முதலில் ஒரு குறும்படம் திரையிடப்படும், அதனை முதலில் பார்க்கும் பார்வையாளர்கள் பலவாறாக அந்தப் படத்தினைப் பற்றிய புரிதல்களை அகத்துள்ளே வைத்திருப்பார்கள், இது ஒருபுறமிருக்க அந்தக் குறும்படம் முடிந்தபின்பு அந்தப் படம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படவேண்டும், நாம் அதில் கவனிக்கத்தவறிய செய்திகள் என்னென்ன? என்பதனை ஆளுமைகள் சிலர் எடுத்துக்கூறுவார்கள். பின்னர் மீண்டுமொருமுறை அதே படம் திரையிடப்படும்பொழுது, ஆளுமைகளின் கருத்துக்களோடு பார்ப்பதால் அதில் புரிதலுக்கான விஷயங்கள் மேம்படும். இதனடிப்படியில் “big city blues”, படம் திரையிடப்பட்ட பின்பு அப்படத்தைப் பற்றி பேச ஆர்.ஆர்.சீனிவாசன், அழைக்கப்பட்டார். இந்தப் படம் எவ்வாறு பார்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனைகளை விரிவாகவே ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்துக் கூறிய உரை பின்வருமாறு:

முதலில் என்னை தமிழ்ஸ்டூடியோ அணுகி குறும்படம் ஒன்றை சினிமா ரசனை வகுப்பிற்காக திரையிட்டு அதனைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றபோது, ஏதேனும் அண்மையில் வெளியாகி சிறப்பாக அமைந்திருக்கும் படம் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என்ற எண்ணமே இருந்தது. எனினும் பல தொடர் பணிகளால் புதியதொன்றை என்னால் தேர்ந்தெடுக்க இயலவில்லை. மேலும் நான் முதன்முதலாக ”சினிமா ரசனை”, வகுப்பிற்கு செல்லும்பொழுது கிளாஸ் படத்தினையும், அதைத் தொடர்ந்து big city blues படத்தினையும் திரையிட்டனர். சென்றவாரம் அம்ஷன் குமாரின் மூலம் “glass” படம் திரையிடப்பட்டதால் இந்த வாரம் “big city blues”, படம் திரையிடுவதென்பது பொருத்தமானதாக இருக்கும். எனினும் இது பரவலாக யூ ட்யூபிலும், இணையத்திலும் காணக்கிடைக்கும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் அவ்வெண்ணத்தில் எவ்வித உண்மையுமில்லை என்னும் விதமாக எந்த இணையத்திலும் இப்படம் பற்றிய காட்சிகள் இல்லை, எனவே glass படத்தினை தொடர்ந்து இதனை திரையிடுவது சாலச்சிறந்தது.

1925ல் ஏற்பட்ட மாற்றங்கள்தான் குறும்படத்துறையில் ஏற்பட்ட புயல் என்றே கூற வேண்டும். இக்கால கட்டத்தில்தான் “ஐஸன்ஸ்டீன்”, சினிமாவை பிளாஸ்டிக் கலைவடிவம் என்ற கூற்றினை தெரிவித்தார். இலக்கியம், கவிதை, நாடகம் போல இல்லாமல் சினிமா விசித்திரமானதொரு வடிவத்தை தன்னுள்ளே கொண்டுள்ளது. பின்னர் 1950-1960 காலகட்டத்தில் இரு நாடுகள் அதிகமான எண்ணிக்கையில் குறும்படங்கள் எடுக்கத்தொடங்கின. அவை நெதர்லாந்து மற்றும் கெனடா. இவ்விரு நாடுகளிலும் எடுக்கப்படும் படங்கள் மிகச்சிறந்த படங்களாக ஏனைய நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இங்கு திரையிடப்பட்ட படமும் 1962ல் வெளியான படம்தான்.

இந்தப்படம் முழுவதுமே ஓவியம் சார்ந்தே காட்சியமைக்கப்பட்டுள்ளன என்பதனை எந்தவொரு இடத்தில் நீங்கள் நிறுத்திப் பார்த்தாலும், அங்கு தேர்ந்த ஒரு பெயிண்டிங்க் இருப்பதனை கண்கூடாக காணலாம். மேலும் எந்தவொரு காட்சியும், ஒவ்வொரு இடமும் கருப்பு, வெள்ளை பாணியில் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு காட்சியில் இரு ஆண்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம், ஆனால் அதில் அழகிற்கே சுவாரசியாத்திற்கே இடமில்லை, அதுவே அதே இடத்தில் ஒரு ஆணும், பெண்ணுமாக காட்சியமைக்கப்பட்டிருந்தால் சிறப்பானதொரு அழகியலை நமக்குத்தரும். இதேபோலத்தான் இருவர் காட்சியில் இடம்பெறுகின்றார்களெனில் அவர்கள் ஒரேஉயரம் கொண்டவர்களாக இருந்தார்களெனில் அவற்றில் அழகு என்பதற்கு இடமில்லை. நெட்டையும், குட்டையும்தான் அழகான காட்சி. இப்படையாக ஒவ்வொரு காட்சியிலும், கருப்பும் வெள்ளையும், நெட்டையும், குட்டையும், தொலைவும், அண்மையுமாக அமைந்து மிகநேர்த்தியான ஓவியமாக முழுப்படமும் காட்சியளிக்கின்றது. வெண்மைநிறத்திலான முயல் காண்பிக்கின்றார்களெனில் அவற்றின் நிழல் கருமை இப்படியாக அனைத்துக் காட்சியுமே அழகியலை தாங்கிவருகின்றது.

நான் பெரும்பான்மையான படங்களை பார்த்துவருகிறேன். ஆனால் அப்படங்கள் அனைத்துமே பேச்சுகளால் மட்டுமே சூழ்ந்த திரைக்கதையே நகர்த்தப்படும் பாணி வளர்ச்சிக்குரியது அல்ல. சிறந்த குறும்படம் என்பது காட்சி ரீதியாக திரைக்கதை நகர்த்துவதால் மட்டுமே உருவாகும். இந்த ”big blue city”, படத்தில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்று யாராவது சொல்ல இயலுமா? எண்ணிப்பாருங்கள் இதில் வசனமே கிடையாது. ஒரேயொரு காட்சியில் அந்தப் பையன் பொண்ணை துரத்திக்கொண்டு ஓடும்பொழுது, பையனின் அம்மா “ஏய் மேல போகாத, கீழ வா”, என்று அழைப்பாள். இது ஒன்று மட்டுமே இதில் இடம்பெறும் வசனம். ஆனால் வசனங்கள் இன்றியே 20 நிமிடத்திற்கு வித்தியாசனாமதொரு அனுபவத்தோடு நம்மை சஞ்சரிக்க விடுகின்றன.

இது பெரும்பாலோனோர் மனதில் வைக்க வேண்டிய முக்கியமான விஷயம். அதிலும் புதிதாக குறும்படம் எடுப்பவர்கள், எடுக்க முயற்சிப்பவர்கள் அனைவருமே குறைந்தது 4 படங்களையாவது வசனங்கள் இன்றி காட்சி ரீதியாக கதை சொல்ல முயற்சிக்க வேண்டும். எந்த சிறுகதையாக இருந்தாலும் அதனை காட்சியின் வழியாக நகர்த்திவிட்டால் 5வது படம் தானாகவே சிறந்த குறும்படமாக அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

ஒரு இயக்குனருக்கு அடிப்படைதேவை ஓவியனின் கண். எந்த ஒரு விஷயத்தையும் அழகியலுடனும் ஒருங்கிணைப்புடனும் பார்க்கவேண்டியது மிக மிக அவசியம்.

இரண்டாவதாக இப்படத்தின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுவது இப்படத்தின் இசையும், மெளனமும். எந்தெந்த காட்சிகளில் மெளனமும், இசையும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதனை கவனியுங்கள்.

ஒரு சமயம் பாண்டிச்சேரி சாகித்ய அகாதமி விழாவில் இரண்டு மணிநேரம் இளையராஜா உரையாற்றினார். அமெத்யூஸ் படத்தினை திரையிட்டு இடையிடையே காட்சிகளை நிறுத்தி நிறுத்தி பேசினார். அமெத்யூஸில் எப்படி இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு பலவாறான உதாரணங்களை எடுத்துரைத்தார். அத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் கணவனும், மனைவியும் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுது கணவன் மனைவியை கோபத்தில் திட்டிவிடுவான். இங்கு கணவன் அவளை திட்ட பயன்படுத்திய கடைசி வார்த்தையைக்கொண்டுதான் பின்னணி இசை அமைக்கப்பட்டிருக்கும்.

அதேதான் இந்த பிக் சிட்டி புளூஸ் படத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் ஒரு சம்பவம் இசையை தூண்டும் விதமாக அமையும் பட்சத்தில் அந்தக் காட்சியிலிருந்துதான் இசை தொடங்கவேண்டும், இதில் அந்த சிறுமி ஓடும்பொழுது அடுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டைகளின் மீதேறி ஒடுகின்றாள். அந்தக் கட்டைகளில் ஓடும்பொழுது ஏற்படும் ஒலி தான் விரிவடைந்து இசையாக மாற்றம் பெறுகிறது. இம்மாதிரியான சின்னச்சின்ன விஷயங்கள் கூட மிக அழகாக கையாளப்பட்டிருந்தால் அதனை திரையில் பார்க்கும் சமயத்தில் நுணுக்கமான கலையம்சங்களால் கட்டமைக்கப்பட்ட படமாக ஒளிரும். ஆனால் இன்றைய நவீன காலத்தில் வெளிவரும் 95% சினிமாவில் ஒரு உணர்ச்சியை காட்சியில் கடத்துவதற்காக பயன்படுத்தப்படும் இசையானது அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்தோ , இளையராஜாவின் இசையை பயன்படுத்தியோ அதனை பூசிமெழுகிவிடுவர். ஆனால் திரையில் காண்பிக்கப்படும் காட்சியானது வேண்டிநிற்கும் இசையே சிறப்பானதொரு அனுபவத்தை நமக்களிக்கும். ஒலி அமைப்பு என்பதும் மிக முக்கியமான ஒன்று. ஒட்டுமொத்த தமிழ்சினிமாவிலேயே இந்த ஒலியின் பங்கானது 10% மட்டுமே உள்ளது. எந்த படத்திலும் சுயமான ஒலியமைப்பு என்பது நிகழ்த்தப்படுவதேயில்லை.

உதாரணத்திற்கு ஒரு பெரிய அருவியின் முன்னால் காதலனும், காதலியும் பேசிக்கொண்டிருக்கின்றரென்று வைத்துக்கொண்டால் அந்த அருவியின் ஒலி என்பது முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கும். நீங்கள் எந்த படத்தினை வேண்டுமானாலும் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம், ஓடும் ஆற்றுக்கு அருகிலிருந்து பேசிக்கொண்டிருப்பார்கள் ஆனால் அந்த ஆற்றின் சலசலப்பு ஒலி படத்தில் இடம்பெறுவதில்லை.

இம்மாதிரியான படங்களை அல்லது குறும்படங்களை போட்டிக்கோ, குறும்பட விழாக்களுக்கோ அனுப்பப்படும்பொழுது இத்தகைய குறைகளால் தானாகவே வெளியேற்றப்பட்டுவிடும்., எனவே யாரொருவர் நேரடி ஒலியமைப்பைப் பயன்படுத்தி படம் எடுக்கின்றனரோ, அத்தகையவரின் படங்களே மிகச்சிறப்பானதொரு படமாக அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதனைவைத்து பார்க்கும்பொழுது இப்படத்தில் எந்தந்த இடத்தில் என்னென்ன இசை அமையவேண்டும், மேலும் எந்த இடங்களில் மெளனம் இடம்பெற வேண்டும், பாட்டிலின் ஒலி, அந்தப்பெண் ஓடும் போது ஏற்படும் ஒலி, இறுதியாக வரும் ஷாக்ஸபோனின் ஒலி என்று பலவும் மிகப்பிரமாதமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிலும் ஷாக்ஸபோனின் ஒலியானது ஒட்டுமொத்த உணர்வினையும் திரட்டி இறுதியாக கொடுப்பதுபோல அமைந்துள்ளது. நம்மூரில் குறிப்பிடுவது போல நாதஸ்வர வித்வான்களை இறுதியாக ”ஆத்தி விடுங்கப்பா”, என்பார்கள். இதனைவிட இக்காட்சியினை விவரிக்க சிறப்பானதொரு வார்த்தையில்லை. அதேபோல ஒட்டுமொத்த கதையினை அந்த ஷாக்ஸபோன் இசை ஆத்தி விடுகிறது.
ஒலியமைப்பு சிறப்பானதாக பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒர் படத்தை குறிப்பிடுவதென்றால், ” A MAN ESCAPED” என்ற படத்தை குறிப்பிடலாம். நீங்கள் அவசியம் இப்படத்தை பார்த்து ஒலியமைப்பின் யுக்தியை தெரிந்துகொள்ளலாம். இதில் சிறையிலிருந்து ஒருவன் தப்பிப்பான், இதுதான் படத்தின் கதை. முழு படமும் இசையே கிடையாது. சிறையிலிருப்பவன் அங்கிருந்து தப்பிக்க ஜன்னல் கம்பியில் பிளேடால் ஒரு கோடு போடுவான். அந்த சம்பவத்தில் ஒலி எப்படி ஞானத்தன்மையோடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதனை நீங்கள் தான் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டும். நம் விருப்பத்திற்கு ஏற்ப இசையை பயன்படுத்த முடியாது. அந்த கதை எந்த மாதிரியான உணர்வை ஏங்கி நிற்கின்றதோ, அதற்கேற்பதான் அதில் இசை உலவவேண்டும்.

ஒரு கருப்பர் எப்படி தண்டிக்கப்படுகின்றார் என்ற விஷயத்திலும், ஒட்டுமொத்த நகரத்தின் பதிவையும் இப்படம் பதிவுசெய்கிறது. இந்த குறும்படத்தில் வண்ணங்கள் அவ்வளவு நுணுக்கமாக வகைப்படுத்தப்பட்டிருப்பதை வைத்து பார்க்கும்பொழுது ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களையும் மெனக்கெட்டுதான் உருவாக்கியிருக்கின்றனர் என்பது ஊர்ஜுதமாகிறது.

என்னுடைய காலத்தில் பார்த்த இப்படத்தை மீண்டும் இப்பொழுதுதான் பார்க்கின்றேன். அதனால்தான் எந்த குறிப்புகளையும் எடுத்துவராமல் இங்கு வந்து பார்த்துவிட்டு பேசலாம் என்றெண்ணினேன். உண்மையாக சொல்லப்போனால் இந்த படத்தை 5 முறை திரையிடலாம், ஒவ்வொரு முறையும் திரையிட்டு அரைமணிநேரம் விவாதிக்க அத்தனை விஷயங்கள் அதனில் பொதிந்துள்ளன. மிகவும் கற்கவேண்டிய ஒரு படமாக இருப்பதால் பரவலான அமைப்புகளில் விருதுகளை வாங்கியிருக்கின்றன.
அடுத்த நிகழ்வு இருப்பதால் நான் சொன்ன விஷயங்களோடு மீண்டும் இந்த படத்தை பாருங்கள் அதற்குமுன் ஏதாவதுகேள்விகள் இருப்பின் என்னிடம் கேளுங்கள், என்று தன் பேச்சை முடித்துக்கொண்டார். ஆர்.ஆர்.சீனிவாசன்.

கேள்வி: இந்தக்கதையின்படி அந்தப்பெண் செத்துவிட்டாள், பின்னர் எப்படி அந்த கருப்பு இனத்தைச்சேர்ந்த மனிதனால் ஷாக்ஸபோன் இசைக்கமுடிகின்றது.?

பதில்: நீங்கள் இந்த முறையில் பார்ப்பதைவிட, மாற்று முறையில் சிந்தித்து பார்க்கலாம். இசையை வாசிப்பதன் மூலமாக எப்படி அந்த துயரத்தை கடந்துசெல்ல இயலும் என்ற காரணத்தினால் அந்த மனிதன் அப்படிச் செய்கின்றான். அது அந்த கருப்பு இன மனிதனின் மனோபாவம். அந்தக்கொலையை அவன் செய்யவில்லை. மேலும் இது சினிமாவிற்காக செய்யப்பட்டது என்பது ஒருபுறமிருந்தாலும், அவர்களிருவரும் விசித்திரமானதொரு மனநிலையில் உள்ளவர்கள்தான் . எல்லாவிதமான பார்வையிலும் இருக்கக்கூடியதுதான் சினிமா. ஆகையால் அந்த மனநிலையிலிருப்பவரின் செய்கையாக நான் பார்க்கிறேன்.

இப்படியாக ஆர்.ஆர்.சீனிவாசனது திரைப்பட ரசனை வகுப்பு செம்மையாக நடந்தேறியது.

மீண்டும் “BIG CITY BLUEs”, குறும்படம் திரையிட்டு பார்வையாளர்கள் மீளாய்வுக்குள்ளாயினர்.

பின்னர் பாஸ்கர் சக்தியினது ஒற்றைப்பூ படம் திரையிட்டு முடிந்தவுடன், வந்திருந்த விருந்தினர்களை தமிழ்ஸ்டூடியோ அருண் கரவொலிகளுக்கு நடுவில் வரவேற்றார். இந்த நிகழ்வினை பெரிய அளவில் நடத்தவே திட்டமிட்டோம். அதற்காக ஓவியர் மருது, இயக்குனர் சசி முதலானோரை அழைத்திருந்த வேளையில் சசிக்கு சென்ஸாரில் வேலை பாக்கியிருப்பதால் அங்கு சென்றுவிட்டார். மருதுவிற்கு முக்கியமான பணியின் காரணமாக இயலவில்லை. அவர்கள் தனித்தனியான காரணத்தை கூறிவிட்டனர். ஆனால் சென்ற வார குறும்பட வட்ட நிகழ்வினை ஒப்பிடும்பொழுது இந்த வாரத்தில் கூட்டம் குறைவாக உள்ளது. ஏன் வரவில்லை? என்று அவர்களும் காரணம் சொல்லவில்லை. ஏனென்று நாமும் காரணம் கேட்க முடியாது. ஆனால் வந்திருக்கும் கூட்டம் ரசனைக்குரியவர்கள் நிரம்பிருக்கும் அரங்கமாக காட்சியளிக்கின்றது.

சக மனிதர்களோடு பழக எந்தவிதமான அடையாளமும் தேவையில்லை, என்று நான் பார்த்துத் தெரிந்துகொண்ட உண்மையான மனிதர் பாஸ்கர் சக்தி. நீங்கள் படத்தினைபற்றிய எத்தகைய கடுமையான விமர்சனங்களை வைத்தாலும் அதற்கு பதில் சொல்லத்தயார் என்று பாஸ்கர் சக்தி முன்னமே எனக்கு வாக்குறுதி வழங்கியிருப்பதால் நீங்கள் எப்படிப்பட்ட கேள்விகள் கேட்கவும் தயங்கவேண்டாம். பாஸ்கர் சக்தியின் ”கனகதுர்கா” சிறுகதையினில் வருவது போல ஒரு எளிமையான மனிதர்தான் அவரும்.
இந்தக் குறும்படம் பற்றிய ஆய்வுக்கு காட்சிப்பிழை ஆசிரியர் சுப.குணராஜன் அவர்களை அருண் வரவேற்றார். சுப.குணராஜன் அரசாங்க ஊழியரும்கூட. தமிழ் சிற்றிலக்கியங்களில் மிக முக்கியமானதொரு அங்கம் வகிக்கும் ”காட்சிப்பிழை”, இதழின் ஆசிரியர். இதில் வணிகசினிமாக்குண்டான அபத்தங்களையும் இந்த இதழில் தொடர்ந்து விவாத்து வருகின்றார். இந்த வித காரணிகளால் விகடனைக்காட்டிலும் மிகச்சிறப்பானதொரு இடத்தை இன்னும் சில காலங்களில் ”காட்சிப்பிழை” தக்கவைத்துக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. எந்த உயர்ந்த இடத்திற்கு சென்றாலும் எங்கள் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து வரவேண்டுமென்ற கோரிக்கையுடன் சுப.குணராஜனை பேச அன்போடு அழக்கின்றோம், என்ற முன்னுரைக்கு தகுந்தாற்போல் சுப.குணராஜன் பேச முன்வந்தார்.

வந்திருந்த அனைவருக்கும் வணக்கத்தை உரித்தாக்கிக்கொண்டு தனது பேச்சை துவக்கினார்.
எனக்கு பாஸ்கர் சக்தியினை கதைக்காரராக தெரியும். அவருடைய திறமையை குறும்படத்தின் வாயிலாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலையில்லாமல் தனது கதையின் வாயிலாகவே திறமையானரவென்று நிரூபித்துக்காட்டியவர் என்பதால் முன்னமே குறிப்பிட்டுருப்பது போல பாஸ்கர் சக்தி எதற்காக ஒரு குறும்படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணம்தான் முதலில் உள்ளது.
இங்கு குறிப்பிடுவது போல மாற்றுசினிமா, வணிக சினிமா என்ற பேதத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்பதை முதலாவதாக குறிப்பிட்டு விடுகின்றேன். எனக்கு தெரிந்த ஒரே சினிமா நல்ல சினிமா. எது நல்ல சினிமா என்பதனை அந்தக்கதை சொல்கிற விதம், கதையின் மையம். , போன்றவையே தீர்மானிக்கின்றன. மற்ற இலக்கணங்களில் பெரிய மதிப்பில்லை, எந்த இலக்கணங்களும் ஒரு இடத்தில் அடிபட்டுவிடும். ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் இல்லாதபோது இம்மாதிரியான கருத்துக்களை சொல்வதற்கு எனக்கு தயக்கம்தான். இதற்கு முன் திரையிட்ட படம் எப்படி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை அவர் மிகவும் சிலாகித்து பிளாஸ்டிக்சினிமாவிற்கான உதாரணமாக சொல்லிவிட்டுச்சென்றார். சினிமா கண்டிப்பாக பிளாஸ்டிக்தான் அதில் மறுப்பில்லை.

ஆனால் எல்லாவிதமான சினிமாவிற்கும் பின்னால் ஒரு கலாச்சாரம் என்ற ஒன்று உள்ளது. தமிழ் வாழ்வியலை இம்மாதிரியானபடங்கள் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஒத்த வீடு, ஒத்தப்பூ, ஒத்த பாட்டி என்று பாஸ்கர் சக்தியின் படம் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றது. பாட்டிக்கும் சிறுமிக்கும் இடையிலான உரையாடல், கிராமத்து பேருந்து நிலையத்தில் இருக்கும் இருவர், சிறுமியின் உறவுக்கார மாமா, இடையில் வரும் மந்திரஜாலம் செய்யும் மனிதன், வகுப்பறை என்று தமிழ்வாழ்வு இங்கு பதிவுசெய்யப்படுகின்றது. சினிமா ரசனை வகுப்பில் திரையிடப்பட்ட ”பிக் சிட்டி புளூ” படத்தினை பாஸ்கர் சக்தியின் படத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் முதல் படத்தில் அழுத்திச்சொல்லப்பட்ட ஒலியமைப்பு கருத்தினை, ஒற்றைப்பூ படம் சிறப்பானதாக செய்திருக்கின்றது. அது என்ன விஷயம் என்றால், ஆர்.ஆர்.சீனிவாசன் குறிப்பிடும்பொழுது ஒரு நீர்விழ்ச்சிக்கு அருகிலேயோ, அல்லது குளத்திற்கு அருகிலேயோ காதலனும்,காதலியும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது நீர்வீழ்ச்சியின் ஒலியானது பதிவுசெய்யப்படுவதில்லை என்றார். ஆனால் அதேபடத்தில் ஒரு பெண்ணை வாலிபன் துரத்துகின்றான்., பெண் தன்னை காத்துக்கொள்ள ஓடுகின்றாள். , ஆனால் மூச்சொலி என்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கின்றது. நாமெல்லாம் ஒரு பத்தடி தூரம் நடந்தாலே மூச்சு வாங்கும் நிலைமைதான். ஆனால் படத்தின் பெரும்பான்மையான நேரங்களில் அந்தப்பெண் ஓடிக்கொண்டிருக்கின்றாள் கிட்டத்தட்ட 5, அல்லது 6 நிமிடங்கள் அந்தக்காட்சி காட்டப்படுகின்றது என்ற சூழலில் மூச்சொலி ஏன் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் பாஸ்கர் சக்தியின் படமானது மொத்தமே மூச்சு சம்பந்தமான காட்சிகளையே மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கின்றன என்றபோதிலும் மூச்சொலி சார்ந்த காட்சிகளை ”ஒற்றைப்பூ”, படம் அழகாக பதிவுசெய்திருக்கின்றது.

முதலில் திரையிடப்பட்ட படம் ஆகச்சிறந்த சினிமாதான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இது மாதிரியான குறைகளோடு இருப்பதால் ஏற்றுக்கொள்ள சிரமமான காரியம். மேலும் சினிமாவிற்கான அனைத்து விஷயங்களையும் உள்ளூர் படங்களின் வாயிலாகவும் பெற முடியும். நம்மூர் படங்களை திரையிட்டு அதனைப்பற்றி விவாதிப்பது சரியானதாக இருக்கும்பொழுது எதற்காக அயல்சினிமாவை விவாதிக்கும் சூழல். மேலும் ”பிக் புளூ சிட்டி”, பற்றி பல கேள்விகள் உள்ளன. அதன்படி தொடக்கத்திலேயே அந்தப்பையனை மையமாக வைத்துதான் படம் ஆரம்பித்து அதே கோணத்தில்தான் படம் முடியும் ஆனால் அதன்பின்னர் ஒரு கண்டினூட்டி வருகின்றது. மீண்டும் அந்தப்பையன் இன்னொரு சிறுமியை விரட்டிக்கொண்டு ஓடுகின்றானெனில் அது இரண்டாவது கதை என்பதால் அது எப்படியாக சர்க்குலர் பாணியிலான கதையமைப்பு என்று சொல்ல இயலும்.

இங்கு இந்த ”ஒற்றைப்பூ” படத்தில் சிதிலமைடைந்த வீடு, அதில் பாட்டியும், பேத்தியும், அதற்கு பக்கத்தில் முற்றிலும் உருக்குலைந்த போன வீடு இதுதான் அவர்களது வாழ்க்கை. இந்தக்கதையில் வரும் வயதான தோற்றம் கொண்டவர் பள்ளிகளில் மேஜிக் செய்து பிழைப்பவராக வருகின்றார். படத்தில் பள்ளி வகுப்பறையில் இடம்பெறும் காட்சிகள் மிகவும் குறைவானதாகவே உள்ளன. ஆனால் மந்திரஜாலம் செய்பவன் கதையில் பயணிப்பதே பாட்டிக்கு ஆஸ்த்துமா மருந்தினை கொடுப்பதற்கும், சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும்தான். மலைப்பிரதேசத்தில் இருப்பதால் பாட்டிக்கு ஆஸ்த்துமா பிரச்சினை இருப்பதுவும், அது தீர்ந்தவுடன் அவள் படுகின்ற துன்பியலும் மிக இயல்பாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. இப்படத்தில் இடம்பெறும் சிறுமி எல்லா தடைகளையும் தாண்டி வாழ்ந்துவருகின்றாள். இம்மாதிரியான தமிழ் வாழ்வுதரும் குறும்படங்கள்தான் தமிழுக்கு வேண்டுமென்பதே எனது திண்ணமான கருத்து.

இக்கதையில் ஒற்றைவீடு காட்டப்படுகின்றது. ஏன் அவ்வாறு காட்டப்படுகின்றது? மேலும் சிறுமியின் மாமா என்கிற கதாபாத்திரம் பற்றிய பேச்சுகள் வந்தாலும் ஏன் அவன் ஊருக்குள் வரவேயில்லை என்ற கேள்விகளும் ஒருபக்கமிருந்தாலும் தனிமையை உணர்த்தவே இவ்வாறாக ஒற்றைவீடு என்ற அமைப்பினை உருவாக்கியிருக்கின்றார் பாஸ்கர் சக்தி.

முழுமையான யதார்த்த வாழ்வினை பிரதிபலிக்கும் படம்தான் ”ஒற்றைப்பூ”, என்று முற்றிலுமாக சான்றளிக்க முடியாது. இதுவும் முற்றிலுமாக கட்டமைக்கப்பட்ட களந்தான். சினிமாவிற்கான இலக்கணத்தோடு ஒரு தமிழ்சினிமா வரப்போவதில்லை என்பது என் எண்ணம்.

மாற்று சினிமா என்ற வரையறைக்குள் தவிர்க்காமல் இடம்பெறும் அம்ஷம் பத்து நிமிட மெளனம். ஆனால் நம் வாழ்வுசூழலில் பேரமைதி என்ற பேச்சிற்கே இடமில்லை, ஏனெனில் எப்பொழுதும் நகர்ந்து கொண்டேயிருக்கும் விஷயங்களோடு நாம் தொடர்ந்து பேசக்கூடிய ஆட்களாக நாம் இருக்கின்றோம். இதனையே ஒர் ஐரோப்பிய கண்டத்தின் காட்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் வாழக்கூடிய சூழலில் இடம்பெறும் கதையினை தேர்ந்தெடுத்து அமைக்கையில் மெளனம் என்பது சாத்தியம். ஆனால் நம்மைபோன்று கூட்டம்கூட்டமாக வாழக்கூடிய சமூகத்தில் மெளனம் என்பது நிகழாதஒன்று. மயான அமைதி என்பது நம்வாழ்வில் சாத்தியமேயில்லை. நம் காதுகளுக்கு இல்லாத அமைதியை சினிமா கொண்டுவரமுடியாது. சென்னையின் முக்கிய வீதியில் ஒருவன் நடக்கும்பொழுது எப்படி மெளனம் என்பது சாத்தியமாகும். இப்படியான அயல்சிந்தனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு நமது கலாச்சாரத்திற்கு தோதான வாழ்வியலை படம் பிடித்தால் மிதமான எண்ணிக்கையில் மெச்சப்படும் சினிமாவை கொண்டுவர இயலும்.

தமிழ்சினிமா, உலகசினிமாவிற்கு கொடுத்த பெரும் கொடை என்னவெனில் அவை பாடல்கள்தான். ஏனெனில் இங்கு காட்சி படுத்தப்படும் மாண்டேஜ் அம்ஷங்கள் கொண்ட பாடல்கள் வலுப்பெற்றிருக்கின்றன. நியூயார்க் எனும் நகரத்தை குறிப்பிடும்பொழுது அந்நகரில் வசிப்பவனைக் காட்டிலும் , நமக்கு எப்படியும் அது ஒரு படம்போல மனதில் பதிந்துவிட்டுருக்கும். இப்படியாக டெல்லி, மும்பை, கல்கத்தா என அனைத்து நகரங்களையுமே மாண்டேஜாக பாடல் வாயிலாக நினைவில் வைத்துக்கொள்கின்றனர். உதாரணத்திற்கு, கல்கத்தாவிற்கு பாடல் ஒளிப்பதிவிற்கு செல்கிறாரென்றால் அது வெறும் கெளரா பாலத்தை மட்டும் காட்டிவிட்டு வந்துவிடுவதாக கொள்ளலாகாது, தொடர்ந்து கல்கத்தா நகரவீதிகளையும், அந்நகருக்கேயுரிய பொக்கிஷங்களையும் திறம்பட படம்பிடித்து கல்கத்தா பற்றியதான மாண்டேஜாக பதிவுசெய்துவிடுகின்றன.

”மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்”, என்ற பாடலில் ஆரம்பித்து சென்னையை பற்றிய பதிவுகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. சென்னையின் வாழ்வியலை நூறுவிதமாக பின்னிப்பின்னி கோர்த்துள்ளனர். இம்மாதிரியான பாடல்கள் உலகசினிமாவிற்கான கொடை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. என்னைபொறுத்தவரை தமிழ் சினிமா தமிழின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக தமிழ்சினிமாவுக்கு வகுக்கப்படும் இலக்கணங்கள் தமிழ்சினிமாச்சூழலின் வாயிலாக தேடப்படவேண்டும். அதனை தேடும் முயற்சியில் தொடர்ந்து நாம் ஈடுபாட்டோடு வேலை செய்யவேண்டும், என்று தனது பேச்சினை நிறைவுசெய்துகொண்டார் சுப.குணராஜன்.

அடுத்துவந்து பேசிய தமிழ்ஸ்டூடியோ அருண், தமிழ் ஸ்டூடியோ மாதிரியான அரங்கில் மாற்று சினிமா, வணிக சினிமா என்ற பாகுபாடு எல்லாம் இல்லை என்றும், மேலும் ஆர்.ஆர்.சீனிவாசனின் கருத்தோடு பலவாக முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து சுபகுணராஜன் பேசியிருக்கின்றார். அதற்கு நம்மாலும் பதில் சொல்ல இயலும். ஆனால் இங்கு பாஸ்கர் சக்தியின் படம் திரையிட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றது. எனினும் உதாரணத்திற்கு அவர் கூறிய பலகருத்துக்களிலிருந்து ஒன்றிற்கு மட்டும் பதில் சொல்ல இயலும். அதாவது மேலை நாட்டு விஷயங்களை தவிர்க்கலாம் என்று கூறியிருக்கின்றார். அப்படியெனில் நாம் யாரும் இம்மாதிரியான மேலைநாட்டு பகட்டு உடைகளை அணிந்திருக்க கூடாது, நம் பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிந்திருக்க வேண்டும். நமது வசதிக்காக மேலைநாட்டு பொருட்களை பயன்படுத்திக்கொண்டு நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கும் சினிமாவில் மட்டும் அது வேண்டாம் என்பதில் உடன்பாடில்லை. இது பற்றியெல்லாம் பேச விரிவான விவாதம் ஒன்று தேவைப்படுகின்றது. அது பின்னாளில் பார்த்துக்கொள்ளலாம்.

இப்பொழுது ”ஒற்றைப் பூ”, குறும்படம் பற்றி பாஸ்கர் சக்தி தனது கருத்துக்களை பதிவுசெய்வார். அவரது பேச்சுக்கு பின் படம் பற்றியதான கேள்விகள் என்னவாக இருந்தாலும் அதனை அவரிடம் நீங்கள் தாராளமாக கேளுங்கள். இங்கு பாஸ்கர் சக்தி என்னும் பிம்பத்தை மறந்துவிட்டு அவரை ஒரு குறும்பட இயக்குனராக மட்டும் கருதி அவரிடம் விவாதிக்கலாம்.

பாஸ்கர் சக்தியின் :

இப்படம் நான் காட்சியாக எழுதிப்பார்த்த சிறுகதை தான். இந்த சிறுகதையை தேனி ஈஸ்வர் மாதிரியான சிறந்த ஒளிப்பதிவாளரோடு திரையில் எழுதினால் எப்படியிருக்கும் என்ற சிந்தனையில் குறும்படமெடுத்து எனக்கு நானே திரையிட்டு பார்த்துக்கொண்டது. நண்பர்கள் சிலரைத் தவிர வேறு எவருக்கும் காண்பிக்கவில்லை. நமக்கு திரையில் கதை சொல்ல வருகின்றதா, எனற பயிற்சியில் எடுத்த குறும்படம் தான் இது. ஆனால் இன்று தமிழ்ஸ்டூடியோ உதவியால் பல நண்பர்கள் பார்ப்பது அதிர்ஷ்டமா, துரதிருஷ்டமா என்பதை நீங்கள் கூறிய கருத்துக்களில் இருந்து மட்டுமே எனக்கு தெரிய வரும்.

பொதுவாக ஒரு வார்த்தையில் இருந்து கதை வரும், ஒரு பாட்டைக்கேட்கும் பொழுது, வேறுஏதேனும் வித்தியாசமான சூழலை கவனிக்கும் பொழுது சிறுகதைகள் உருவாகும். அதே போல இந்தக் கதை எப்படி உருவானது எனில், தேனி ஈஸ்வர் ஒரு புகைப்படம் காண்பித்தார். அந்த புகைப்படத்தில் மலைப்பிரதேசத்தின் சரிவில் ஒரு தனியான வீடு மட்டும் காட்சியளித்தது. அந்தப் புகைப்படம்தான் இந்த குறும்படத்தின் முதலில் நீங்கள் பார்த்த காட்சி.


அதனடிப்படையில் புகைப்படம் எடுக்கப்பட்ட களத்திற்கு சென்றால் அதே போல ஒத்தைவீடும் அதற்கு பக்கத்தில் இன்னொரு சிதிலமைடைந்த வீடும் காணக்கிடைத்தது. அதனைப் பார்த்த பிறகு எழுதிய கதைதான் நீங்கள் பார்த்திருப்பது. எனவே ஒரு கதைக்கான தூண்டல் எங்கிருந்து வேண்டுமானாலும் ஜனிக்கலாம். இம்மாதிரியான இழைகளை வைத்துக்கொண்டு நெய்யப்பட்ட குறும்படம்தான் ”ஒற்றைப்பூ”.
இதில் ஒரு முக்கிய பிரச்சினை என்னவெனில் சின்னத்திரைக்கு வசனம் எழுதுகின்ற காரணத்தினால் குறும்படம் என்றவுடன் அதிகப்படியான வசனங்கள் இடம்பெறும் என்று கணித்துவிட்டனர். முதலில் நான் அதை உடைக்கவே விரும்பினேன்.

இங்கு இசையே கதை நகரத்துவங்கிய பின்புதான் உருவாகும். அந்தக் குழந்தையின் காலைதொடங்கி அந்தி முடியும் வரை அவள் சந்திக்கும் சம்பவங்கள்தான் கதை.. இந்த வாழ்வியலை அதற்குரிய களனிலேயே படம் எடுப்பதே சிறப்பானது என்பதனால் அச்சூழலை தேர்வு செய்தோம். மேலும் பின்னணியில் கூட பறவைகளின் ஒலிதான் அதிகமாக ஒலிக்கும். கதையில் துருத்துக்கொண்டு நிற்காதபடி நடிப்பவர்கள்கூட அந்த மலைப்பிரதேசத்திலிருந்தே தேர்ந்தெடுத்துக் கொண்டோம். உதாரணத்திற்கு அந்த பாட்டி, சிறுமி மற்றும் பலர். ஆனால் மந்திரஜாலம் செய்பவரை மட்டும் சென்னையிலிருந்து அழைத்துச்சென்றதற்கான காரணம் கதையில் அவர் வேலூர்க்காரராக வருகின்றார்.

சுபகுணராஜன் சொன்னதுபோல எல்லா நாடுகளும் அந்தந்த நாடுகளின் தன்மைக்கேற்ப அங்கு நடந்த சம்பவங்களையும், வாழ்வியலையுமே பதிவுசெய்கின்றன, அவைகள்தான் பிற்காலத்தில் உலகப்படங்கள். அதேபோல நாமும் படம் எடுக்கையில் நமது வாழ்வியலை மையப்படுத்துவதே பொருத்தமாக அமையும். மேலை நாட்டு சிந்தனைகளும், போக்குகளும், அறிவியலும், தொழில்நுட்பமும் வேண்டுமானால் சினிமாவில் பயன்படுத்தப்படலாம். ஆனால் கதைகள் நம் மண்ணிலிருந்து உற்றெடுப்பவைகளாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் சிற்சில மாறுபாடுகள் இருக்கலாம்.

நம்முடைய மொழி எப்படி நம்முடையதாக தனித்தன்மையோடு இருக்கின்றதோ, இலக்கியமும் எவ்வாறு நமக்கானதாக உள்ளதோ அதேபோல கலையும் நம் வாழ்வைக்குறித்த பதிவாக இருக்கவேண்டும். அதனடிப்படையில் தான் இந்த ”ஒற்றைப்பூ”, குறும்படத்தினை எடுத்தேன். இதுதான் ஆகச்சிறந்த படம் என்று கூறமாட்டேன். இதிலும் தவறுகள் இருக்கின்றன. நாங்கள் கொண்டுவந்த குறுந்தகட்டில் இங்கு ஒளிபரப்ப இயலவில்லை. அது இருந்திருந்தால் இன்னமும் கொஞ்சம் ஒலி துல்லியமாக கேட்டிருக்கும், அதேபோல திரையில் காட்சிகளும் சரியான அமைப்பில் காணக்கிடைப்பதால் நீங்கள் அதிகமாக ரசிக்க வாய்ப்பு அமைந்திருக்குமெனில் இன்னமும் தொழில்நுட்ப ரீதியாக நன்றாக கண்டு களித்திருக்கலாம்.

இப்பொழுது படம் குறித்தான ஏதேனும் கேள்விகள் இருந்தால் நீங்கள் கேட்கலாம்.

கேள்வி: இந்தக் குறும்படம் சிறப்பானதாகவே இருந்தது. முக்கியமாக தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவைப்பற்றி மிக முக்கியமாக சொல்லவேண்டும். ஏதேனும் பிரத்யேக செயற்கை வெளிச்சங்களை பயன்படுத்தியுள்ளீர்களா?

பதில்: இந்த படத்தைப் பொறுத்தவரையில் ஒளிப்பதிவாளரும், கேமிராவும் மட்டுமே. எந்த மாதிரியான செயற்கை ஒளியும் பயன்படுத்தவில்லை. இதில் காட்சிதரும் இரவுக் காட்சியில் மட்டும் ஜெனரேட்டரின் உதவியுடன் ஒரேயொரு ட்யூப்லைட் பயன்படுத்தி எடுத்திருப்போம்.

கேள்வி: படத்தின் கான்செப்ட் புரியவில்லை. அதை கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?

பதில்: கான்செப்ட் ரெம்ப சின்ன விஷயம் தான். அந்த சிறுமியின் ஒரு நாள் வாழ்வைப்பற்றியதான கதை. அந்த தனிமை. மேலும் இறுதிக்காட்சியில் அந்த சிறுமியின் தாயும், தந்தையும் இறந்துவிட்டார்களென வரும்போது நாடகத்தனமாக தெரியலாம். ஆனால் அதுதான் இயல்பு. அந்த பாட்டிக்கு ஏதும் நடந்துவிடக்கூடாது என்று குழந்தை எடுக்கும் முயற்சிகள். அங்கு நடக்கும் வலிநிறைந்த வாழ்க்கைதான் கான்செப்ட்.

அந்தக்குழந்தையும் எதனைக்கண்டாலும் தன் பெட்டியில் சேகரித்து வைத்துக்கொள்ளும் வழக்கமுடையது. அதற்கு எதனைப்பார்த்தாலும் விளையாட்டு பொருள்தான்,. இதிலிருந்து அதனின் தனிமையான வாழ்க்கை எளிதாக விளங்குகிறது. இந்தக் குழந்தைக்கும் பாட்டிக்கும் இடையேயான வாழ்க்கைதான் கான்செப்ட். சின்ன கான்செப்ட்தான் மற்றபடி பெரிய விஷயம் ஒன்றுமில்லை.

கேள்வி: முதலில் வாழ்த்துக்கள். மந்திரவாதி கண்டிப்பாக அந்தப்பாட்டிக்கு மருந்துப்புட்டியை தந்துவிடுவான் என்று தெரிந்த போதிலும், அதனை எவ்வாறு பாட்டி கண்டறிகின்றாள் என்று நீங்கள் கடைசியாக சொன்ன விஷயம் அருமையானது. என்னைப் பொறுத்தவரை கதை மிகவும் வேகமாக நகர்வதாக தோன்றுகிறது. இந்தக் குறும்பட இயக்குனராக உங்கள் கருத்து என்ன?

பதில்: பாட்டிக்கு மருந்து வாங்க சிறுமி தன் மாமாவிடம் காசுகொடுக்க, அவன் வாங்கிவராமல் குடித்துவிட்டு மயக்கநிலையில் இருக்கின்றான். அதிலொரு திருப்பம்.

பின்னர் ஒரு இக்கட்டான சமயத்தில் அந்த மேஜிக் நிபுணரை பாட்டியின் முன்னால் நிறுத்துவாள் சிறுமி. இதற்கு முன்னோட்டமாக ஒரு காட்சி வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சிறுமி அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பாள். ”செத்தவங்கள பொழைக்க வைக்கின்ற மந்திரம் தெரியுமா?”, என்று கேட்க, ”அது அந்த படைச்ச ஆண்டவனுக்கே தெரியாதும்மா”, என்பார். ஆனால் மற்ற விஷயங்களெல்லாம் தெரியும் என்று அந்தக் குழந்தையும் இவரை நம்பும்.

அதனால் தான் பாட்டியின் மருந்துக்கு மேஜிக்மேனை நாடும். நல்லவேளையாக அவருக்கும் ஆஸ்த்துமா பிரச்சினை இருப்பதனால் அம்மருந்தை பாட்டியிடம் கொடுத்துவிட்டார். இல்லையெனில் கதையில் பெரிய சிக்கலாகியிருக்கும். இம்மாதிரியான தொடர் காட்சிகளால் கதை வேகமாக நகர்வதாக தோன்றலாம். மற்றபடி இது மெதுவாக நகரும் பாணியிலான படம்தான் என்பது எனது கருத்து.

கேள்வி: மேஜிக் மேன் கதாபாத்திரத்தைப் பற்றி?

பதில்: பொதுவாக பள்ளிக்கூடங்களில் மேஜிக் செய்யவருபவர்களிடம் எனக்கொரு பெரிய மரியாதை உண்டு, அந்தச் சமயத்தில் அவரை நாமொரு பெரிய ஹீரோவாக பார்ப்போம். ஆனால் அவரையும் நானொரு இயல்பான ஆளாக சொல்லவேண்டும் என்று முடிவெடுத்தேன். அவர் வேலூரிலிருந்து 50 ரூபாய்க்காக வந்திருக்கின்றார். அதனையே பாட்டியும் வேடிக்கையாக சொல்லியிருப்பாள்.
அந்த மாதிரியான பாத்திரங்கள் மேல் எனக்கு எப்பொழுதுமே பெரிய ஈடுபாடு உள்ளது. நானும் அருகிலிருந்தே பார்த்திருக்கின்றேன்., ரெம்ப பரிதாபமாக இருப்பார்கள் ஆனால் அவர்களிடம் பெரிய திறமையிருக்கும். அதனைப் பயன்படுத்தி காசு சம்பாதிக்கும் முயற்சியில் இருப்பார்கள்.
அதேபோலத்தான் இந்தக் கதையில் வருபவரும் நிஜமான மேஜிக்மேன்தான். அவரது நிஜவாழ்விலும் சோகங்கள் பொதிந்து காணப்படுகின்றன. அவர் சென்னைக்காரர். சினிமாவில் சேர்வதற்காக வந்தவர். உதவி இயக்குனராகவும் வேலைபார்த்திருக்கின்றார். 25 வருஷமாக கல்யாணம் பண்ணிக்காமல் இப்பொழுது அவருக்கு வயது 70. அவருடைய கதையே இப்படியாகத்தான் உள்ளது.
”ஒற்றைப்பூ”, குறும்படத்தினை ஒரு கதையாக எழுதும்பொழுது எனக்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. இன்னமும் அவருடைய வாழ்வியலை நெருக்கமாக பதிவிட்டிருக்கமுடியும். ஆனால் காட்சிகளாக வந்த பின்னர் அதனை எழுத மனமில்லை.

கேள்வி: இப்படத்தில் வரும் உரையாடல் சிறப்பானதாக அமைந்துள்ளது. மேஜிக்மேன் பேசும்பொழுது “அது என்னான்னாக்க, அது என்னான்னாக்க”, என்ற மாதிரியான நகைக்கும் பாணியிலான வசனங்கள் . ஏன்?

பதில்: அது அந்த மக்களுக்கேயுரிய வழக்கம். மேலும் மேஜிக் நிபுணர் சொல்லும் அந்த “என்னான்னாக்க”, வார்த்தை அவராகவே இயல்பாகவே பேசும் வார்த்தை. அது நன்றாக இருந்த காரணத்தினால் அதனை படப்பிடிப்புத் தளத்தில் தக்க சமயத்தில் பயன்படுத்திக்கொண்டேன். இதுமாதிரியான இயல்பான விஷயங்கள்தான் மிகச்சிறப்பானதாக அமையுமென்பது எனது எண்ணம்.
பாட்டியும் அத்தகைய இயல்பான பேச்சு வழக்கம் உடையவர்தான்., நாம் அவர்களுக்கு நடிக்கச்சொல்லிக்கொடுக்காமல் அவர்களின் இயல்பை அப்படியே பிரதிபலிக்கும் முயற்சி நன்றாகவே வந்திருக்கின்றது.

கேள்வி: குழந்தை சிதிலமடைந்த வீட்டில் இரு உருவங்கள் வரைந்து வைத்திருக்கின்றதே அது ஏன்?

குழந்தை: இடிவிழுந்த வீட்டில் எதுவுமே மிஞ்சாது. அதனால் தனது பெற்றோரை ஓவியமாக வரைந்து பூ வைத்து கும்பிடுகின்றது. அந்தக் குழந்தைக்கும் தனியான உலகம் உள்ளது. ஆனால் பாட்டி அந்த வீட்டிற்கு போகவே போகாது. இந்தக் குழந்தைக்கான முழுமையான உலகம் தான் அது.

கேள்வி: பார்வையாளர்கள் கதையினை ஊகித்துவிடுவார்களென நீங்கள் நினைத்தீர்களா?

பதில்: திரையரங்கத்தில் படம் ஓடிக்கொண்டிருக்கும்பொழுதே திரைக்கதையை சொல்லும் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ஒருபடத்தினை பலகோணங்களில் அணுகிப்பார்த்தலும் வேண்டும். கண்டிப்பக ரசிகர்கள் புத்திசாலிகளாக இருப்பதனால் அதனை முன்கூட்டியே தீர்மானிக்க சந்தர்ப்பம் இருக்கின்றது.

கேள்வி: நீங்கள் இப்பொழுது இந்தப் படத்தினை மீண்டும் எடுத்தால் என்னென்ன மாற்றங்கள் செய்திருப்பீர்கள்?

பதில்: கண்டிப்பாக கதையினை மாற்றியிருக்க மாட்டேன். ஆனால் தொழில்நுட்ப விஷயங்களில் இன்னும் மெனக்கெட்டு பல மாறுதல்கள் செய்திருப்பேன். ஆனால் கதை அதேதான்.

இரவுக்காட்சிகளை கொஞ்சம் மெருகேற்றியிருப்போம். பெரியவரை கொஞ்சம் நல்லா நடிக்க வைத்திருக்கலாம். ஏனெனில் படத்தின் இறுதிக்காட்சியில் நடிக்கையில் உணர்ச்சிமிகுதியால் அழுதுவிட்டார். ஆனால் அங்கு அழுதிருக்க வேண்டியதில்லையென்ற காரணத்தினால் கொஞ்சம் அடக்கி வாசிக்கச்சொன்னோம்.

இரண்டாவதாக இந்தக்காட்சியில் குழந்தை பள்ளிக்குச் செல்வதும், அங்கிருந்து திரும்பி வருவதும் ஒரே வெளிச்ச அமைப்பில் அமைந்திருக்கும். ஒளிப்பதிவாளரின் திறமையால் அது தவிர்க்கப்பட்டிருக்கின்றது. இதற்குக் காரணம் அங்கு அடிக்கடி மழைபெய்யும் சூழல் உள்ளது. கதை தயாரானவுடன் கிளம்பிவிட்டதால் எதையும் முன்கூட்டியே திட்டமிடவில்லை. மேலும் படம்பிடிக்கும்பொழுது யதேச்சையாக ஒரு வானவில் தெரிந்ததால் உடனேயே அக்காட்சி கேமிராவில் சிறைபிடிக்கப்பட்டது. இதில் எந்தவிதமான மாயாஜாலமும் இல்லாத இயற்கையான சம்பவம். இந்தக் கதையை இப்பொழுது எடுத்தால் தொழில்நுட்பத்தில் மட்டுமே மாற்றமிருக்கும்.

இந்தக்குறும்படத்திற்கு நான் முதலில் வைத்த தலைப்பு ஒத்தவீடு என்பதாகும். கிராமத்தில் ஒத்தவீடு என்றால் அதற்கு பின்னர் பெரிய கதையே இருக்கும். இந்த ”ஒற்றைப் பூ” என்னும் தலைப்பில் கூட அவ்வளவாக திருப்தியில்லை, இங்கு காட்டப்பட்டிருக்கும் வீடு இயல்பானதாக தோற்றமளிக்க முக்கிய காரணம் அது செயற்கையாக உருவானதில்லை, இயற்கையாகவே இருப்பதனால்தான் அதற்கான அழகு.

பெரும்பான்மையான கருத்துகள் எங்களை வலுமைப்படுத்துவதாக அமைந்துள்ளது என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கும் இப்படத்தில் சில குறைகள் இருப்பதாகவே தோன்றுகின்றது. இன்னும் ஒரு நாள் கூடுதலாக இருந்திருந்தால் மேலும் சிறப்பாக எடுத்திருக்கலாம். இந்தக் குறைகளை நான் ஒப்புக்கொள்கின்றேன்.

என்று தன் பதிவினை திரு. பாஸ்கர் சக்தி நிறைவுசெய்யும்முன் படப்பிடிப்பில் உதவிசெய்த குழுவினரையும் பாஸ்கர் சக்தி அறிமுகப்படுத்திவைத்தார்.

தமிழ்ஸ்டூடியோ அருண் :

நாம் அனைவருமே புனிதப் பிம்பம் ஒன்றை வைத்திருக்கின்றோம். யாராவது ஒருவர் அதனை உடைத்தால் யாரும் எதுவும் சிந்திக்காமல் அம்மனிதரை எதிர்க்க தொடங்கிவிடுகின்றனர். சமீபத்தில் கூட ”பாரதி மகாகவி அல்ல”, என்று ஜெயமோகன் இணையத்தில் வாதத்தைக் கிளப்பினார். ஆனால் அவர் மொழிந்த கருத்துக்களைப் பற்றி யாரும் ஆரோக்கியமாக சிந்திக்கவில்லை. உடனேயே அனைவரும் எப்படி இப்படிசொல்லலாம் என்று ஆவேசத்தோடு கிளம்பிவிட்டனர். அவர் ஏன் அப்படி சொல்கின்றார்?., என்ன ஆதாரம் வைத்திருக்கின்றார்? என்ற மாதிரியான மேம்போக்கு சிந்தனை நம்மிடமில்லை.

கிட்டத்தட்ட பல வருஷங்களாக நம்மிடம் தமிழ்சினிமா சூழல் ஊறிப்போயுள்ளது. இம்மாதிரியான சிந்தனைவாதிகளை உடனடியாக திருத்திவிடமுடியும் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் வருங்கால சமூகத்திடம் நல்ல மாற்றமிருக்கும் என்ற உறுதியுள்ளது. அதற்கான முயற்சிகள்தான் இம்மாதிரியான நிகழ்ச்சிகள்.

மீண்டும் மீண்டும் எங்கள் வாழ்வியலை பதிவுபண்ணுகின்றோம் என்றால், அதையாவது ஒழுங்காக பதிவுசெய்துள்ளீர்களா? என்பதே எனது கேள்வி. அப்படி பதிவுசெய்திருக்கின்றோம் என்றால் அது உங்கள் நம்பிக்கை. அது இல்லையென்று தொடர்ந்து எங்கள் பயணம் தொடரும். நிகழ்விற்கு வந்தவர்களுக்கு நன்றி. மீண்டும் அடுத்த கூட்டத்தில் சந்திப்போம்.

தமிழ்ஸ்டூடியோவின் நன்றிசொல்லலுக்குப் பின் கூட்டம் கலைந்து சென்றது. மாற்றத்திற்கான பயணத்தில் சிறிதேனும் முன்னகர்ந்தோம் என்ற மகிழ்ச்சியில் தமிழ்ஸ்டூடியோ அடுத்த நிகழ்வை நோக்கி.

தொடர்புக்கு: 9840698236

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்
     
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio