கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 18 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

தமிழ் ஸ்டுடியோ.காம் -ன் 18வது குறும்பட வட்டம் 13.03.10 அன்று சென்னை இக்சா அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக படத்தொகுப்பாளர் / இயக்குனர் பி.லெனின், கலை இயக்குனர் முத்துராஜ், இயக்குனர் மீரா கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வழக்கமாக நடைபெற்று வந்த இலக்கிய பகுதிக்கு பதிலாக படம் எடுக்கலாம் வாங்க என்ற புதிய பகுதியை தொடங்கி வைத்து படத்தொகுப்பாளர் / இயக்குனர் பி.லெனின் குறும்படங்கள் குறித்து பேசினார்.

பூனா திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுக்கும் பயிற்சி படங்களை குறும்பட விழாக்களுக்கு அனுப்பி விருதுகள் பெற்றனர். தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி அந்த புரிதல் இல்லாமல் பல காலம் இயங்கியது. 90களில் நான் குறும்படம் எடுத்தபோது பலரும் என்னை ஏளனமாக பார்த்தனர். ஆனால் இன்று நிலை மாறியுள்ளது. குறும்படம் எடுப்பதற்கு நல்ல உள்ளடக்கம் (கான்ஸ்செப்ட்) மிகவும் முக்கியமானது. எழுத்தாளர்களின் சிறுகதைகளை எடுத்துக் கொண்டால் நல்ல உள்ளடக்கம் (கான்ஸ்செப்ட்) கிடைக்கும். நீங்கள் எடுத்த குறும்படத்தை எங்களிடம் கொண்டு வந்தால் இலவசமாகவே படத்தொகுப்பு செய்து தருகிறோம் எனக் கூறினார்.

மேலும் நாக்வுட் குறும்பட அனுபவத்தை குறிப்பாக அந்த படத்திற்கான இசையை சுடுகாட்டில் பறை அடிப்பவர்களை வந்து பயன்படுத்திக் கொண்டமையை நினைவு கூர்ந்தார். அண்மையில் இந்திய அரசுக்கான குறும்பட விழா நடுவராக பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். அங்கு இறுதி சுற்றில் பார்த்த 30 மணி நேர குறும்படங்களை சேகரித்து வருவதாகவும் விரைவில் சென்னை, கோவை, நெல்லை, கன்னியாக்குமரி பகுதிகளில் குறும்பட விழா நடத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

குறும்பட இயக்குனர் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே குறும்படமாக எடுக்க வேண்டும். உத்திகள், அழகியல், காமிரா கோணங்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் ஒரு ஸ்பெயின் நாட்டு குறும்படம் பற்றி சிலாகித்து பேசினார். 116வயது மனிதர் இயேசு வாழ்கின்ற காலத்தில் வாழ்கின்ற நினைவோடு நடை, உடை, சிகை அலங்காரம் ஆகியவற்றுடன் வாழ்கிறார். நம் தமிழ் திரைப்படங்கள் சுமார் இரண்டரை மணி நேரத்தில் தராத பல அனுபவங்களை 10 நிமிடத்தில் அந்த குறும்படம் தருவதாக கூறி உரையை நிறைவு செய்தார்.

இரண்டாவது நிகழ்வாக கலை இயக்குனர் முத்துராஜ் கலை இயக்கம் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். குறும்படங்களில் எந்த அளவுக்கு கலை இயக்கம் பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. கலை இயக்கத்தை நான்கு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்: 1. யதார்த்தவாத படங்களுக்கான கலை இயக்கம். 2. பொழுதுபோக்கு அம்சம் (பேன்சி) நிறை படங்களுக்கான கலை இயக்கம் 3. வரலாற்று பூர்வமான கலை இயக்கம் 4. எதிர்காலம் பற்றிய கற்பனைகளை களமாக கொண்ட படங்களுக்கான கலை இயக்கம். ஒவ்வொரு வகையான படங்களுக்கும் வெவ்வேறு வகையான உழைப்பு தேவைப்படுகிறது. கலை இயக்கத்தில் செய்ய முடியாத காட்சி வடிவம் ஏதுமில்லை. முயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியமே எனக் குறிப்பிட்டார்.

மேலும் மினியேச்சர் பற்றி விரிவான விளக்கங்களை தந்தார். தரையில் பார்க்கும் காட்சிகளான வெட்டப்பட்ட கை எப்படி துடிக்கிறது. கண்ணாடி எப்படி உடைக்கப்படுகிறது, கதாநாயகனால் சுவரை எப்படி இடிக்க முடிகிறது. இறந்தவர்களை காட்டும்போது கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன? ஒரு புதிய புத்தகம் எப்படி பழைய புத்தகமாக மாற்றப்படுகிறது. செல்லரித்த காகிதங்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என பல விசயங்களை குறும்பட ஆர்வலர்களுடன் மிகவும் திறந்த மனதோடு பகிர்ந்துக்கொண்டார்.

கலை இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இருக்க வேண்டிய ஒத்திசைவுகள் பற்றி பேசினார். திரைப்படம் என்பது குழு செயல்பாடு என்பதினால் தன்னுள் இருக்கும் ஈகோவை விலக்கி வைத்துவிட்டு வேலை பார்த்தால் சிறப்பாக இருக்கும் என கூறினார். கலை இயக்கம் என்பது பொதுவாக சிந்திக்கக் கூடிய அனைவராலும் செய்யக்கூடிய ஒன்றுதான். எல்லாவற்றிக்கும் முயற்சி, திட்டமிடல் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

வெளிநாட்டினருடன் பணிபுரிந்த அனுபவங்கள் பற்றியும், அவர்களின் திட்டமிடல்கள் குறித்தும் பேசினார். குறிப்பாக டைட்டானிக் படம் 53 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே 90 சதவீத வேலையை அவர்கள் முடித்து விடுகிறார்கள். அவர்களுடைய பண வசதிக்கு அது முடிகிறது. நம்முடைய பண வசதிக்கு இப்போது நடைபெறும் விசயங்களே பாராட்டுதலுக்குரியதுதான் எனக் கூறினார்.

மலையாள படம் குரு, சொல்ல மறந்த கதை, அற்புத தீவுகள், பழசிராஜா, இரும்புகோட்டை முரட்டு சிங்கம் போன்ற தான் பணியாற்றிய படங்கள் குறித்த பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

மூன்றாவது நிகழ்வாக குறும்படம் திரையிடல் பகுதியில் த அறிவழகனின் செவ்ளி, ச.பிரின்சு என்னாரெசு பெரியாரின் திற, ச. முரளி மனோகரின் கர்ண மோட்சம் ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன.

அவள் பெயர் தமிழரசி பட இயக்குனர் மீரா கதிரவன் மேற்குறிப்பிட்ட மூன்று குறும்படங்கள் பற்றிய தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அறிவுரை சொல்வதும், விமர்சனம் செய்வதும் எனக்கு உடன்பாடான விசயம் அல்ல. இந்த மூன்று குறும்படங்கள் பற்றிய என்னுடைய எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதல்படமான செவ்ளி நல்ல முயற்சி, ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவாளர் பாராட்டுதலுக்கு உரியவர். படம் ஒரே விசயத்தை மட்டும் மறுபடியும் மறுபடியும் பேசுவதாக உணர்கிறேன்.

இரண்டாவது படமான திற மாண்டோவின் சிறுகதையை சிறப்பாக பதிவு செய்துள்ளார். சம காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி பேசினாலே என்கவுன்டர் செய்து விடுவார்கள். இம்மாதிரியான காலச்சூழலில் திற படம் வெளிவந்திருப்பது அதற்கு ஒரு சிறப்பான இடத்தை பெறுகிறது.

மூன்றாவது படமான கர்ண மோட்சம் பார்க்கும்போது டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து இருப்பதை கிண்டல் செய்யும்போதும், குழந்தையை அடிக்கும்போதும் பெரும்பாலானோர் சிரித்து வரவேற்றதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. ஒருவரின் துயரத்தை பார்த்து மற்றொருவர் சிரிக்கும்படியான சூழல் பற்றி வருத்தப்பட்டார். ஒரு சிறுகதை எழுதும்போது எழுத்தாளனுக்கு இருக்கும் சுதந்திரம் ஒரு திரைப்படத்தை இயக்கும்போது இயக்குனருக்கு கிடைப்பதில்லை. கிடைக்கும் மிகக் குறைவான சந்தர்ப்பத்தையே பயன்படுத்தி நல்ல விசயங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது எனக் கூறினார்.

அவள் பெயர் தமிழரசி வயது 18 மாநிறம் என்ற படம் என்னுடைய 8,9 வருட கனவு பல வருடங்களாக பல தயாரிப்பாளர்களிடம் சொன்னேன். பலரும் நிறைய மாற்றங்கள் சொன்னதினால் படம் தள்ளி போய்கொண்டே இருந்தது. குறைவான மாற்றங்கள் சொன்னவர் என்ற முறையில் தற்போதைய தயாரிப்பாளரால் படைப்பாக வெளிவந்துள்ளது. படத்திற்கு தமிழில் தான் பேர் வைக்க வேண்டும் என விரும்பியதால் தமிழரசி என்று வைத்தேன். கவித்துவமான கதைக்கு தலைப்பும் கவித்துவமாக இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்பியதினால் அவள் பெயர் தமிழரசி, கதையில் தமிழரசியை தேடி செல்வதினால், அவளை அடையாளப்படுத்தும் விதமாக வயது 18 மாநிறம் என சேர்த்தேன். தமிழில் பெயர் வைத்தால் அரசு சலுகை கிடைக்கும் என்பதற்காக அல்லாமல் என் மொழி, என் இனம் என்ற பற்றுதல் காரணமாகவே அவள் பெயர் தமிழரசி வயது 18 மாநிறம் என்ற நீண்ட பெயரை வைத்தேன் எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.

இறுதி நிகழ்வாக குறும்பட இயக்குனர்களின் ஏற்புரை நிகழ்ந்தது.

செவ்ளி பட இயக்குனர் த. அறிவழகன் பேசும்போது சுமார் 10 வருடங்களுக்கு முன்பு எழுதிய சிறுகதையை அப்படியே இப்போது குறும்படமாக எடுத்துள்ளேன். இப்படத்திற்கு சிறப்பான ஒளிப்பதிவை செய்து கொடுத்த தினேஷ் ஸ்ரீனிவாஸ் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர். குழந்தைகள் எதைப்பற்றிய பயமும் இல்லாமல்தான் இருக்கிறார்கள். பெரியவர்கள் தங்களுக்கு தெரிந்ததை அவர்களுக்கு கூறிவிட வேண்டும் என்று சொல்லும் பல விசயங்கள்தான் குழந்தைகளை பாதிக்கிறது என்பதை பதிவு செய்ய வேண்டும் என விரும்பினேன். அதை முதலில் சிறுகதையாகவும் பிறகு குறும்படமாகவும் எடுத்துள்ளேன் எனக் கூறினார்.

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பேசும்போது 1947 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட துயரங்களின் கதையை மாண்டோ தன்னுடைய சிறுகதைகளில் பதிவு செய்துள்ளார்.

மாண்டோவின் திற என்ற சிறுகதையினைத் தழுவி நம் கண் முன்னால் நிகழ்ந்த குஜராத் படுகொலைகளை களனாக வைத்து இக்குறும்படத்தை இயக்கியுள்ளேன். இப்படத்தில் எனக்கு தெரிந்த அரசியலை, எனக்கு சரியெனப்பட்ட அரசியலை பதிவு செய்து இருக்கிறேன். குஜராத் படுகொலைகள் ஒரு சார்பாகவே நடந்தன. அவற்றை பதிவு செய்யும்போது எந்த சப்பைக்கட்டும் கட்ட விரும்பவில்லை. முதலில் இயற்கைச் சீற்றங்களின்போது பொதுநல சேவகர்களாக வருபவர்கள் பின்னாளில் மதத்தை முன் வைத்து மக்களை பிளவு படுத்துவதை இந்து தீவிரவாதிகளை அடையாளம் காட்டவே விரும்பினேன். ஒரு வேளை கதைக் களம் பங்களாதேசமாகவோ, ஜம்முவாகவோ இருந்தால் அது வேறுமாதிரி அமைந்து இருக்கலாம் எனக் கூறினார்.

ச. முரளி மனோகர் பேசும்போது கர்ண மோட்சம் குறும்படம் 2007 ஆண்டு வெளிவந்தது. டெல்லி, கேரளா, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் நடந்த உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. பல விருதுகளை பெற்றுள்ளது. ஆனால் உருவான தமிழ் நாட்டில் நடைபெறும் உலக திரைப்பட விழாவில் திரையிடப்படவில்லை. அவர்களை தொடர்பு கொண்டபோது அவர்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தவர்களின் படத்தை மட்டும்தான் திரையிடுவதாக கூறினார்கள். நான் உறுப்பினராக சேர்ந்தால்தான் என் படம் திரையிடப்படும் என்றால் அங்கு என்படம் திரையிட வேண்டாம் என்றே கருதுகிறேன்.

நான் பிறந்தது கும்பகோணம் என்றாலும் வளர்ந்தது திண்டிவனத்தில்தான். நான் சிறுவயது முதலே கூத்துகலை பார்த்து ரசித்தவன். ஆனால் கால மாற்றத்தில் அது கொஞச கொஞ்சமாக அழிந்து வருகிறது. அன்று கோவில் திருவிழாவில் கூத்து நடக்கும். இன்று அவற்றின் இடத்தை ஆடல், பாடல், மெல்லிசை பாடல் குழுக்கள் பறித்துக் கொண்டன. அந்த அழிவை பதிவு செய்ய வேண்டும் என விரும்பி கர்ண மோட்சம் என்ற கதை எழுதினேன். அவற்றில் மிகவும் வெளிப்படையாக என்னை பார், நான் எவ்வளவு வேகமாக அழிந்து வருகிறேன் என கூறும் விதமாக எழுதியிருந்தேன்.

எஸ்.ரா. எனக்கு ஏற்கனவே அறிமுகம். அவரிடம் என் கதையை காண்பித்து அபிப்பிராயம் கேட்டேன். நல்ல விசயம் இதை இன்னும் எளிமையாக ஆனால் ஆழமான வலியுடன் பதிவு செய்ய முடியும் எனக்கூறி எனக்காக கர்ணமோட்சம் கதை - திரைக்கதை எழுதி கொடுத்தார். இந்த கதை அவருடைய கதைத் தொகுதிகளில் இருக்காது. இந்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.

இறுதி நிகழ்வாக குணா அவர்கள் வந்த ஆர்வலர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/18

-------------------------------------------------------------------------------------
நாள்: சனிக்கிழமை (13-03-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - குறும்பட கலந்தாய்வு

இந்த மாதம் முதல் புதிய பகுதியாக குறும்பட கலந்தாய்வு பகுதி நடைபெறும். தொடர்ந்து பதினேழு மாதங்களாக குறும்பட வட்டத்தில் அனைத்து விதமான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களும் நடந்து முடிந்துவிட்டன. எனவே தாங்கள் கற்றுக் கொண்டதை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் அனைத்து குறும்பட வட்ட உறுப்பினர்களுக்கும் உண்டு. இந்த மாதம் முதல் கட்டாயமாக அனைத்து உறுப்பினர்களும் குறும்படம் எடுத்து அவற்றை குறும்பட வட்டத்தில் திரையிட வேண்டும். ஒவ்வொரு மாதமும் அதற்கான உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார். தமிழ் இலக்கியத்தில் உள்ள ஏதேனும் ஒரு சிறுகதையை குறும்படமாக எடுத்து அதனை தமிழ் ஸ்டுடியோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். உறுப்பினர் எடுத்த குறும்படத்தை "குறும்பட வட்டத்தின்" முதல் பகுதியில் திரையிட்டு அதில் அவர் திருத்திக்கொள்ள வேண்டிய குறைகள் ஆராயப்படும். இந்த முயற்சி பரிச்சார்த்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது. தரமான குறும்படங்கள் தமிழ்நாட்டில் பரவலாக வெளிவர வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

குறும்படம் எடுக்க தேவைப்படும் அனைத்து உதவிகளும் தமிழ் ஸ்டுடியோ மூலம் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். கேமெரா, படத்தொகுப்பு உட்பட.

இந்த உதவிகளைப் பெற நினைப்பவர் நிச்சயம் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினராக சேர்ந்து மூன்று மாதங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இது தமிழ் ஸ்டுடியோவின் "படமெடுக்கலாம் வாங்க" என்கிற திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த மாதம் இலக்கியப் பகுதி குறும்பட வட்டத்தில் இடம்பெறாது. விரைவில் "இலக்கிய சோலை" என்கிற பெயரில் தனியொரு மாதந்திர நிகழ்வாக நடைபெறும்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்டக் கலை இயக்குனர், திரு. முத்துராஜ் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் தேவைப்படும் அழகியல் தொடர்பாகவும், குறைந்த செலவில் குறும்படங்களுக்கான அரங்குகள் அமைப்பது தொடர்பாகவும் வழிகாட்ட உள்ளார்.

முத்துராஜ் அவர்கள் விரைவில் வெளிவர இருக்கும் "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்" திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
செவ்லி அறிவழகன் 20 நிமிடங்கள்
திற பிரின்ஸ் பெரியார் 12 நிமிடங்கள்
கர்ணமோட்சம் முரளி மனோகர் 15 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரு. மீரா கதிரவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

மீரா கதிரவன் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த "அவள் பெயர் தமிழரசி" என்கிற திரைப்படத்தின் இயக்குனர் ஆவார். இவர் புகழ்பெற்ற மலையாள இயக்குனர் லோகிதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர்.

இந்த மாதம் உலகக் குறும்பட வரிசையில் திரையிடப்படும் குறும்படம்

உலக அளவில் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட குறும்படம்: லிட்டில் டெர்ரரிஸ்ட்

லிட்டில் டெர்ரரிஸ்ட் குறும்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0425200/plotsummary

(இத்திரைப்படம் பௌர்ணமி இரவில் நேரமின்மையால் திரையிடப்படவில்லை. எனவே இந்த மாதக் குறும்பட வட்டத்தில் திரையிடப்படுகிறது)

மேலும் இந்த மாதம் முதல் அரங்கில் குறும்பட விற்பனையும் நடைபெறும். அனைவரும் குறும்பட இயக்குனர்களை / தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்த குறும்படங்களை விலைக்கு வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</