கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

தமிழ் ஸ்டியோ.காம்-ன் 17வது குறும்பட வட்டம் வழக்கம் போல் சென்னை இக்சா மைய அரங்கில் 13.02.2010 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக நாடகாசிரியர் வெளி ரங்கராஜன், இயக்குனர் பண்டி சரோஜ்குமார், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் ஸ்டியோ அருண் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இலக்கிய வட்டம் பகுதியில் நாடகாசிரியர் வெளி ரங்கராஜன் தன் இலக்கிய, நாடக உலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

”எனக்கு சிறு வயது முதலே இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு. எனக்கு சொந்த ஊர் ஸ்ரீரங்கம். அங்கு காலை, மாலை கோயிலிருந்து திருப்பாவை ஒலிக்கும். அதை கேட்டு கேட்டு எனக்கு இலக்கியத்தோடு சங்கீத ஈடுபாடும் வளர்ந்தது. தமிழில் 8வது படிக்கும்போதே இந்தியில் எம்.ஏ. முடிந்திருந்தேன். அதனால் சிறுவயதினிலேயே தமிழ் இலக்கியங்களை இந்தி மொழி இலக்கியங்களை ஒப்பீடு செய்து பார்ப்பேன்.

”கல்லூரியில் கணிதத்தை முதல் பாடமாக எடுத்துப் படித்தேன். கணிதமும் எனக்கு விருப்பமான பாடம்தான். கணக்கு, கலை, அறிவியல் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அப்போதுதான் தமிழில் யாப்புடைத்த புதுக்கவிதை பரவத் தொடங்கியது. புதுக்கவிதை எழுத கவிமனமே வேண்டும். கவிதை என்பது மனம் சார்ந்த விசயமாகும். மணிக்கொடி எழுத்தாளர்களான புதுமைபித்தன், மௌனி, கு.ப.ரா. ஆகியோரது இலக்கியங்கள் எனக்கு பிடித்தமானவைகள்.

”1970களில் திருச்சியில் சினி ஃபோரம் என்ற திரைப்பட சங்கத்தை தோற்றுவித்தோம். அதன் மூலமாக சத்தியஜித் ரே, மிருணாள் சென், ரித்விக் கட்டக் ஆகியோரது படங்களை பார்த்து வியந்தோம். எங்களுக்குள் தீவிரமாக விவாதித்தோம். உலக திரைப்படங்களிலேயே ’பதேர் பாஞ்சாலி’க்கு நிகரான வேறொரு படம் இல்லையென்றே சொல்வேன்.

மனித உணர்வுகளை காட்சி மொழியில் மிகச் சிறப்பாக பதிவு செய்த படம் அது. பிற்காலங்களில் அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் ஆகியோரது திரைப்படஙகள் எனக்கு விருப்பமானவையாக இருந்தன.

'இன்று' என்ற இலக்கியப் பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்தினேன். பிறகு 1973ல் சென்னைக்கு வந்தேன். இங்கு இலக்கியம் பற்றி விவாதிக்க பல நண்பர்கள் கிடைத்தனர்.

'எழுத்து' சிறு பத்திரிகையை சி.சு. செல்லப்பா வாசகர் எண்ணிக்கையை முதன்மையாக கருதாமல் தொடர்ந்து நடத்தினார். சிறு பத்திரிகை உலகம் ஆன்ம பலம் சார்ந்த ஓன்றாகும். அதுபோல கசடதபற, பிரக்ஞை போன்றவற்றில் தீவிரமான சமூக அக்கரை கொண்ட விசயங்கள், தீவிர அரசியல், விமர்சனங்கள் வெளிவந்தன. அந்த தீவிர எண்ணங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை தந்தது.

ஷேக்ஸ்பியருக்கு நிகரான நாடகாசிரியர் தமிழில் இல்லை என கருதினோம். வங்காளத்தில் பாதல் சர்க்கார் புதியவகை நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார். 1990 ஆம் ஆண்டு ''வெளி'' என்ற நாடக பத்திரிகையை தொடங்கி சுமார் 10 வருடங்கள் நடத்தினேன். அவற்றில் 60 புதிய தமிழ் நாடகங்களும் 20 மொழி பெயர்ப்பு நாடகங்களும், நாடக கோட்பாடுகள் பற்றிய அறிமுகங்களும், தீவிரமாக இயங்கியவர்களின் நேர்காணல்களும் இடம் பெற்றன. வெளி இதழ்கள் அண்மையில் தொகுக்கப்பட்டுள்ளன.

சங்கீதத்தில், நாட்டியத்தில் உன்னதமான நிலையை தொட்டுள்ளோம். நம்மிடம் ஆழமான சங்கீத மரபு, ஆழமான நடன மரபு, ஆழமான கூத்து மரபு இருக்கிறது. ஆனால் ஆவணங்கள் நம்மிடையே இல்லை. அவைகளை ஆவணப்படுத்த நாம் தவறிவிட்டோம்.

இருபதாம் நூற்றாண்டு நாடக மரபில் ந. முத்துசாமி, பேரா. ராமானுஜம், இந்திரா பார்த்தசாரதி முதன்மையானவர்கள். அவர்களின் நாற்காலிக்காரர், காலம் காலமாய், அப்பாவும் பிள்ளையும், மழை, நந்தன் கதை ஆகியவை சிறப்பான படைப்புகள். இவர்கள் மூவருடனும் நானும் தொடர்பு கொண்டிருந்தேன்.

வெளி பத்திரிகை வெளிவந்துக் கொண்டிருந்த காலங்களில் திருச்சி, மதுரை, தஞ்சாவூர் பகுதிகளுக்கு சென்று பல நாடகக் குழுக்களை சந்தித்து எளிமையாக, நாடகம் போடுவது பற்றி விளக்கியிருக்கிறோம்.

1970களில் வீதி நாடகங்கள் போட்டோம். சென்னை கடற்கரையில் ஞாயிறுதோறும் நாடகங்கள் போட்டோம். காலை சந்தித்து பேசி, மதியம் நாடகம் எழுதி, மாலையில் நாடகங்களில் நடித்தோம். சென்னையில் மேடை நாடகங்கள் வெறும் கேலிக் கூத்தாகவே உள்ளன.

சுமார் இருபது வருடங்களாக மாற்று நாடகங்கள் நடத்த இன்று கூத்துபட்டறை நிறுவனமாக வளர்ந்துள்ளது. தமிழ் நாடக உலகில் கூத்துப்பட்டறையின் பங்களிப்பு மிகவும் சிறப்பானதாகும்.

உலக மயமாக்கல் மனிதனை அன்னியப்படுத்திவிட்டது. அவனோடு அந்திரங்கமாக பேச யாருமில்லை. நாடகங்கள் எளிமையாகவும், உணர்வு பூர்வமாகவும் மனிதர்களோடு உறவாடக்கூடியது. இன்று நினைத்தவுடன் ஒரு திரைப்படம் எடுக்க முடியாது. ஆனால் நினைத்தவுடன் ஒரு நாடகத்தை நிகழ்த்த முடியும். திரைப்படம் பார்க்க பார்வையாளன் திரையரங்குக்கு வரவேண்டும். ஆனால் நாடகம் பார்வையாளனை நோக்கி கொண்டு செல்லக்கூடிய வடிவம்.

அண்மையில் பிரேசிலில் ஒரு நியாயவிலைக் கடையில் பொருள் வாங்க வரிசையாக நின்றுக்கொண்டிருந்த மக்கள் மத்தியில் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை நாடகத்தில் பங்கு பெற வைத்து அரசாங்க செயல்பாடுகள் பற்றின ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை சிந்திக்க வைத்துள்ளார் ஒரு நாடகக்காரர். காய்கறிச் சந்தை, பேருந்தினுள் அல்லது மக்கள் கூடுமிடங்களில் ஒரு நாடகத்தை நிகழ்த்த முடியும்.

வரலாற்றில் சொல்லப்படாத மனிதர்கள், சொல்லப்படாத பக்கங்கள் நிறைய உள்ளன. அவைகளை கவனப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். காப்பியங்களில் அதிகம் கவனிக்கப்படாது போன கதாபாத்திரங்களை மையமாக வைத்து மாதவி, மாதுரி போன்ற நாடகங்களை அண்மையில் நிகழ்த்தியிருக்கிறேன்.

தமிழ் சமூகத்தில் நிலவிய வேறுபாடுகளை திரைப்படமும், திரையரங்கங்களும் உடைத்து எறிந்தன. அறுபதுகள் வரையிலான திரைப்படங்களில் ஒரு லட்சிய நோக்கம், குடும்ப உறவுகள் பற்றிய புரிதல்கள் இருந்தன. குறிப்பாக சமூக சீர்கேடுகளுக்காக விசயங்கள் குறைவாக இருந்தன. ஆனால் தற்கால தமிழ் திரைப்படங்கள் பொறுப்புள்ள மனிதன் பார்க்கக் கூடியதாக இல்லை. இங்கு திரைப்படங்கள் மலிவான வணிகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. மற்ற மொழிகளில் திரையில் பங்கு பெறும் கலைஞர்கள் நாடகத்துடன் தொடர்பில் இருக்கின்றனர். இங்கு அப்படி இல்லை. இங்கு வணிகமே முதன்மையாக உள்ளது” எனக்கூறி வெளி ரங்கராஜன் தனது உரையை நிறைவு செய்தார்.

குறும்பட வழிக்காட்டி

நிகழ்ச்சியில் போர்க்களம் பட இயக்குனர் பண்டி சரோஜ்குமார் கலந்து கொண்டார். தமிழில் திரைப்படம் இயக்க வேண்டும் என்பது தனது சிறுவயது கனவு எனக்கூறினார். இயக்குனராக திரைப்படக் கல்லூரியில் படிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இலக்கிய அனுபவம், காட்சி மொழி அறிவு, தொழிற்நுட்பம் சார்ந்த புரிதல் (இதை புத்தகம் வாசித்தே தெரிந்துக் கொள்ள முடியும்) அடுத்து என்ன மாதிரி இருக்க வேண்டும் என்ற தெளிவு இருந்தால் போதும் என்றார். ஒரு இயக்குனருக்கு திரைக்கு தேவையான 24 துறைகள் பற்றிய புரிதலும் அவசியம் எனக்கூறினார்.

சமூக படமா? வணிக படமா? என்பதை இயக்குனர்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றார். ரிமிக்ஸ் சாங் கட்டாயம் இல்லை. ஆனால் தவிர்க்க முடியாது என்றார். திரைப்பட தயாரிப்புக்கான முன் தயாரிப்புகள் மிகவும் அவசியம் எனக் கூறினார். பல குறும்பட ஆர்வலர்களின் கேள்விகளுக்கு தெளிவாக பதில் கூறினார்.

குறும்படம் திரையிடல்

பகுதியில் 1. சுவடுகள் - ரமேஷ், 2. எச்சில் மனிதர்கள் - பத்மநாபன், 3. நடந்த கதை - பொன் சுதா ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.

குறும்படங்களை ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் திறனாய்வு செய்தார். 1995ல் பிள்ளை தமிழ் என்ற குறும்படம் இயக்கியதாகவும் அப்போது தமிழ் ஸ்டியோ.காம் போன்று யாரும் வந்திருக்கவில்லை. இப்போது உங்கள் குறும்படங்களை திரையிட நல்ல களத்தை உருவாக்கி கொடுத்துள்ள வாய்ப்பை திரைப்பட, குறும்பட ஆர்வலர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

குறும்படம் என்பது பார்வையாளனை மேலும் சிந்திக்க வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எப்படி ஒரு கவிதை பாதி விசயங்களை சொல்லி மற்றொரு பாதியை வாசகனை சிந்திக்கத் தூண்டுகிறதோ அதுபோல குறும்படங்களும் பார்வையாளனை பங்கேற்க வைக்க வேண்டும் என்றார்.

சுயமாக திரைப்படங்கள் எடுத்தவர்களே உலகத் திரைப்படப் போக்கை மாற்றியவர்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு குறும்படங்களையும் மறுபடியும் திரையிடச் செய்து எங்கு சிறப்பாக இருந்தது, எங்கு சிறப்பாக இல்லை, அதை எப்படி சரி செய்திருக்கலாம் என விமர்சன பூர்வமாக திறனாய்வு செய்தார். குறும்பட வட்டத்தில் இதுவரை இதுபோல் துல்லியமாக திறனாய்வு செய்தது இல்லை என்றே கூறலாம். ஒரு ஆசிரியர் தன் மாணவர்களின் வளர்ச்சியை விரும்பி எப்படி விமர்சனம் செய்வாரோ அதுபோல் மிகவும் சிறப்பாக திறனாய்வு செய்தார்.

இறுதியாக குறும்பட இயக்குனர்கள் மூவரும் ஏற்புரை நிகழ்த்தினர். எல்லோரும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் தொழிற்நுட்பம் சார்ந்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்டனர்.

இறுதியாக தமிழ் ஸ்டியோ குணா அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/17thKurumbadaVattam#

------------------------------------------------------------------------------------------------------ தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 17 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)

நாள்: சனிக்கிழமை (13-02-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியம்

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் நாடகவியலாளர் திரு. வெளி ரெங்கராஜன் அவர்கள் கலந்துக் கொள்கிறார். தமிழ் நாடகத் துறை வளர்ச்சி மற்றும், அதன் வரலாறு குறித்து பேசவிருக்கிறார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், திரு. பண்டி சரோஜ்குமார் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். இயக்கம் குறித்தான நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் இயக்கம் மற்றும் இதத் தொழில்நுட்பத் துறை சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.

பண்டி சரோஜ்குமார் அவர்கள் சமீபத்தில், கிஷோர் நடித்து வெளியான போர்க்களம் திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
சுவடுகள் ரமேஷ் 08 நிமிடங்கள்
நடந்த கதை பொன்.சுதா 17 நிமிடங்கள்
எச்சில் மனிதர்கள் பத்மநாபன் 15 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. விஜய் மில்டன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

விஜய் மில்டன் அவர்கள் "காதல்", "காதலில் விழுந்தேன்" ஆகியத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆவார். மேலும், "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" திரைப்படத்தின் இயக்குனர் ஆவார்.

இந்த மாதம் முதல் மூன்று தமிழ்க் குறும்படங்களுடன் ஒரு சர்வதேச குறும்படமும் திரையிடப்படும். எப்படி சர்வதேச அளவில் குறும்படங்கள் வடிவமைக்கப்படுகின்றன என்பதை, அனைவரும் குறிப்பாக கிராமப்புறத்தில் இருந்து வரும் ஆர்வலர்கள் தெரிந்துக்கொள்ள இந்தக் குறும்படங்கள் உதவி புரியும். அந்த வகையில் இந்த மாதம் திரையிடப்படும் சர்வதேச குறும்படம், Adam Davidson இயக்கிய "The Lunch Date". இந்தக் குறும்படம் 1991 ஆம் வருடத்தின் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதினை வென்ற குறும்படமாகும்.

மேலும் இந்த மாதம் முதல் அரங்கில் குறும்பட விற்பனையும் நடைபெறும். அனைவரும் குறும்பட இயக்குனர்களை / தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்த குறும்படங்களை விலைக்கு வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</