கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

விருதுகள் பகுதியில் தமிழ் குறும்படங்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் விருதுகள் குறித்த தகவல்கள் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
விருதுகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS விருதுகள் விருதுகள் வாயில்
 
தமிழ் ஸ்டுடியோ வழங்கும் 'லெனின் விருது'
 
ஸ்ரீகணேஷ் - படிமை மாணவர்


தமிழ் ஸ்டுடியோவின் 'லெனின் விருது வழங்கும் விழா' - ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building, மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

பெருமைக்குரிய இவ்விருதினை இவ்வாண்டு ஆவணப்படத் துறையில் மிக வீரியமாக இயங்கி வரும், திரு R.R.ஸ்ரீனிவாசன் பெற்றார். இவரது 'நதியின் மரணம்' ஆவணப் படங்களின் தளத்தை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றது. கலையை ஒரு போராட்டக் கருவியாய், மக்களுடன் பேசும் ஒரு எளிய மொழியை பயன்படுத்தி ஓய்வின்றி இயங்கி வரும் ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசனுக்கு லெனின் விருதை வழங்குவதில் தமிழ் ஸ்டுடியோ மிக்க மகிழ்ச்சியடைகிறது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பாலு மகேந்திரா, திரைப்படத் தயாரிப்பாளர் கோ. தனஞ்செயன், கவிஞர் தேவ தேவன், மருத்துவர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக திரு.யாழ்நிலவன் வரவேற்புரை வழங்கினார். பின்பு முதல் நிகழ்ச்சியாக செல்வி ஹம்சவேனியின் வீணைக் கச்சேரி நடைபெற்றது. பத்தாம் வகுப்பு படிக்கும் இச்சிறுமியின் வாசிப்பு அனைவரையும் மிகவும் கவர்ந்தது. 'சாரேசஹாசே அச்சா', பாரதியாரின் 'செந்தமிழ் நாடென்னும் போதினிலே', இன்னும் பல சிறந்த பாடல்களை இச்சிறுமி அனாயசமாக வாசித்துக் காட்டினாள். ஹம்சவேனியிடம் மற்றொரு அபூர்வமான திறமை உள்ளது. இவர் வீணை வாசிக்கும்போது இடையில் ராகங்கள் பற்றியும், திருக்குறளின் அதிகாரங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டால் மிக துல்லியமாக பதிலளிப்பார். ஒரே நேரத்தில் சிந்தனையை 3 தளங்களில் செலுத்தும் இவரின் திறன் பார்வையாளர்கள் அனைவரையும் வியக்க வைத்தது.

பின்பு விருது பெறும் R.R.ஸ்ரீனிவாசன் அவர்களைப் பற்றி மற்றவர்கள் கூறியுள்ள ஒரு தொகுப்பு திரையிடப்பட்டது. இதில் எழுத்தாளர்கள் பவா செல்லதுரை, கே.வி.ஷைலஜா, பேராசிரியர் ரவீந்திரன், ஆவணப்பட இயக்குனர்கள் அமுதன், மாமல்லன் ஆகியோர் ஸ்ரீனிவாசனுடனான தங்களின் அனுபவங்களை, கருத்துக்களை கூறியிருந்தார்கள்.

பின்பு விழாமலர் வெளியிடப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் திரு.பாலு மகேந்திரா வெளியிட குறும்பட இயக்குனர் Dr. சிவபாத சுந்தரம் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் அடுத்து 'லெனின் விருது வழங்கும் நிகழ்வு' நடைபெற்றது. விருதினை இயக்குனர் பாலு மகேந்திரா வழங்க திரு R.R.ஸ்ரீனிவாசன் பெற்றுக் கொண்டார்.

அதனையடுத்து, 'தமிழ் ஸ்டுடியோ' அருண் திரு R.R.ஸ்ரீனிவாசனைப் பற்றியும், குறும்படங்களின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். பிறகு சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை நடைபெற்றது. அவற்றிலிருந்து சில துளிகள்:

கோ.தனஞ்செயன்- ஸ்ரீநிவாசனுக்கு விருது வழங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால், அவரின் படங்களை இந்த மேடையிலே திரையிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவரைப் பற்றி நாங்கள் பேசுவதை விட அவரின் படங்கள் பேசியிருக்கும், நாங்களும் அமர்ந்து பார்த்திருப்போம். இருப்பினும் இம்மாதிரியான உண்மையான கலைஞனுக்கு விருது வழங்குவது நிறைவாக உள்ளது. நானும் நிறைய குறும்படங்களை இணையத்தில் பார்க்கிறேன். அவற்றை எடுப்பவர்களுக்கு நிச்சயம் பெரிய படம் எடுப்பதற்கான கனவுகள் இருக்கும். ஆனால் குறும்படங்கள் எடுப்பதை விடவும் ஒரு திரைப்படம் எடுக்க நிறைய உழைப்பும் நுட்பமும் தேவைப்படுகிறது. குறும்பட இயக்குனர்கள் திரைப்படம் எடுக்க வேண்டுமெனில், அதற்கேற்றவாறு தங்களின் அறிவை, சிந்தனையை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

மருத்துவர், போராளி புகழேந்தி - ஸ்ரீனிவாசனுக்கும் எனக்குமான நட்பு சமூகப் போராட்டங்கள் வழியே தான் ஆரம்பமானது. 'செயலின் எச்ச சொச்சமே கலை' என்பது என் நம்பிக்கை. அவ்வகையில் ஸ்ரீநிவாசன் தொடர்ந்து போராடி வருகிறார். ஜப்பானில் அணு உலைகள் வெடித்ததில் சுற்றியுள்ள 240 கி.மீ நிலப்பரப்பும் பாதிக்கப்பட்டுள்ளன. அதே போல், கல்பாக்கத்தில் ஒரு கசிவு ஏற்படுமெனில் அருகேயுள்ள சென்னை நகருக்கோ, பாண்டிசேரிக்கோ எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. இதை பற்றி நன்கு அறிந்திருந்தும் அரசிடம் எவ்விதமான பதிலும் இல்லை. மக்களிடம் இமாதிரியான மிக முக்கியமான பிரச்சினைகளைப் பேச குறும்படங்களும், திரைப்படங்களும் மிக முக்கியமானவை.

கவிஞர் தேவதேவன்- மேடைகளுக்குச் செல்வதில், பேசுவதில் எனக்கு எப்போதுமே மிகுந்த தயக்கம் உண்டு. ஸ்ரீநிவாசனுக்கு விருது வழங்கும் இவ்விழாவிற்கு என்னை ஏன் கூப்பிடுகிறார்கள் என்று யோசித்தேன். எனக்கும் அவருக்குமான நெருக்கம் மட்டுமே காரணம் என்று புரிந்தது.... வந்து விட்டேன். வாழ்வில் மௌனம் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒரு படைப்புக்குள் கூட கண்ணுக்குத் தெரியாத மௌனம் அமர்ந்திருக்கும்.... அது பார்வையாளனுடன் சில உண்மைகளைப் பேசும். ஒரு படைப்பு எந்தளவுக்கு தன்னுள் மௌனத்தைக் கொண்டிருக்கிறதோ, அந்த அளவுக்கே அதனை சிறந்த படைப்பாகக் கருதுகிறேன்.

இதனையடுத்து, விருதினைப் பெற்ற ஸ்ரீனிவாசன் ஏற்புரை வழங்கினார்:

" இவ்விருதை முதலில் நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு எதற்கு விருதெல்லாம்...? என கூச்சத்தோடு மறுத்தேன். பின்பு திரு.லெனின் பெயரால் வழங்கப்படும் விருது என அறிந்ததும் மிகுந்த பயத்தோடு ஏற்றுக் கொள்கிறேன். இம்மேடையில் நான் மிகவும் மதிக்கும் மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கவிஞர் தேவதேவனைப் பற்றி இன்றும் தமிழ்நாட்டில் பெரிதாக தெரியவில்லை. அவர் பாரதிக்குப் பிறகு தமிழின் மிகச் சிறந்த கவிஞர் என நான் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். என்னை ஒரு ஆளாக மாற்றியதில் அவருக்கு பெரும்பங்கு உண்டு. என்னுடைய 21 வயதில் நிறைய தடுமாற்றங்களோடு, குழப்பங்களோடு நின்றிருந்த காலகட்டத்தில் அவர் தான் என்னை வழிநடத்தினார். இவ்விருது நிகழ்வில் பேசுவதற்காக ஒரு சிறப்புரை தயார் செய்து கொண்டிருந்தேன். தமிழ் சினிமாவின் பல்வேறு பிரச்சினைகளையும், அதன் கூறுகளையும் அலசும் உரையது. ஆனால், அதை முடிக்கும் முன் வேறொரு சமூகப் பிரச்சனை தலை தூக்கியுள்ளது. கடந்த 2 தினங்களாக அதற்காய் உழைத்து வருகிறேன். இவ்வாறு ஒரு கலைப் படைப்பை விட சமகால சமூக பிரச்சனைகளுக்காய் இயங்குவதும், போராடுவதுமே எனக்கு முதன்மையாய்ப் படுகிறது. இம்மேடையில் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்கள் இருக்கிறார்கள். நான் இவர்களை அழையுங்கள் என யார் பெயரையும் தமிழ் ஸ்டுடியோவிடம் சொல்லவில்லை. அவர்களாக எனக்கு பிடித்தவர்களை தேடி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாய் இருக்கிறது. நன்றி."

பின்பு, திரு பாலு மகேந்திரா பேசினார்- சில துளிகள்:

" ஸ்ரீனிவாசனை இதற்கு முன் சில திரையிடல்களில். கலந்துரையாடல்களில் சந்தித்திருக்கிறேன். பலமுறை என்னுடன் கோபமாய் விவாதித்திருக்கிறார். அவரின் அசலான கோபம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த கோபக்கார இளைஞனுக்கு ஒரு விருது வழங்கப்படுகிறது என்றவுடன் போக வேண்டும் எனத் தோன்றியது. வந்துவிட்டேன். தமிழ் ஸ்டுடியோவிற்கு என் நன்றிகள். தேவதேவனின் கவிதைகள் நிறைய படித்திருக்கிறேன். இன்று தான் அவரை நேரில் பார்க்கிறேன். மௌனம் பற்றிய அவரின் பேச்சுக்கள் அப்படியே என் சிந்தனையை ஒத்திருந்தன. என் மாணவர்களிடமும் மௌனம் பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன். இளையராஜாவிடம் என் படங்களின் இசை வேலைகளின் பொது நான் கேட்டுக் கொண்டதும் இது தான்... 'please understand my silence. Dont fill in such silences in the film with any music.'

தமிழ்நாட்டில் திரைப்படம் தான் எல்லாமுமாக இருக்கிறது. உங்கள் வீட்டு தொலைக்காட்சிக்கு தினமும் குறைந்தது 100 படங்கள் வருகின்றன. நாம் எதை ரசிப்பது? என்று கூட சரியாகத் தெரியாமல் இருக்கிறோம். பள்ளிகளில் திரைப்பட ரசனை ஒரு பாடமாக்கப்பட வேண்டுமென பல ஆண்டுகளாய் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். எந்தப் பயனும் இல்லை. மக்களிடம் நல்ல ரசனை வந்து விடுமெனில், மலிவான சிந்தனைகளுடன் எடுக்கப்படும் படங்கள் ஓடாது.

அண்ணாவில் இருந்து கணக்கெடுத்துக் கொண்டால் தமிழகத்தை ஆண்ட அனைவருமே சினிமாக்காரர்களே.. அப்படிப்பட்ட தமிழ் நாட்டில் நல்ல சினிமாவை பாதுகாத்து வைக்கும் ஒரு archive இல்லை. இது எவ்வளவு மோசமான ஒரு நிலைமை... நான் மிகுந்த வருத்தத்துடன், என் உணர்வுகளை கட்டுபடுத்திக் கொண்டு ஒரு விஷயம் சொல்கிறேன்... என்னுடைய வீடு, சந்தியா ராகம் படங்களின் நெகடிவ் வீணாகிவிட்டன. இனிமேல் அவற்றை ஒரு copy கூட எடுக்க முடியாத நிலை.

நானும் இன்னும் சிலரும் இணைந்து தமிழில் parallel cinema -வுக்கான ஒரு தளம் அமைக்க முயற்சித்து வருகிறோம். 90 நிமிடங்களில் புதிதான கதை சொல்லும் ஒரு முயற்சி.. விரைவில் அறிவிப்பு வரும். அப்போது தமிழ் ஸ்டுடியோ மாதிரியான இளைஞர் கூட்டத்தை தேடி வருவேன். நன்றி. "

விழாவின் இறுதி ஆச்சர்யமாக, திரு.லெனின் பேசினார். அவர் வந்திருந்ததே பலருக்கும் தெரியாத வகையில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தவர், அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கி பேச மேடையேறினார்:

திரு. லெனின் அவர்கள் பேசியதிலிருந்து:

"திரைப்படங்களும் குறும்படங்களும் வேறு வேறு. நிச்சயம் வேறு வேறானவை. யாரும் அதில் குழம்ப வேண்டாம். இதன் நோக்கம் வியாபாரமல்ல. 16 MM -இல் படம் எடுத்து ஊர் ஊராய் சென்று திரையிடுவோம். எங்களுக்கு எந்த வியாபாரமும் வேண்டாம். ஏன், திரையரங்கு கூட வேண்டாம். வெட்ட வெளியில் படம் பார்த்து ரசிப்பார்கள் என் ஜனங்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்லும் விஷயம் தான் முக்கியம்.

எல்லாவற்றிலுமே ஒரு தொடர்ச்சி இருக்கும்.. கண்ணுக்குத் தெரியாத ஒரு தொடர்ச்சியில் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். அப்படி என்னுடைய தொடர்ச்சியாக நான் ஸ்ரீனிவாசனைப் பார்க்கிறேன். காஞ்சனை ஆரம்பிக்கப் பட்ட போது கூட யாரும் கவனிக்கவில்லை. 10 பேர், வெறும் 10 பேர் நாங்கள் சேர்ந்து துவங்கிய இயக்கம்.. சோர்ந்து போகாமல் உழைத்தோம்.

வணிக சினிமாவைச் சுற்றி நிறைய மாயைகள் கட்டியிருக்கிறார்கள். digital colour correction , DI அது இதுவென. தயவு செய்து அதை எல்லாம் நம்பி விடாதீர்கள்.. என் இளைஞர்களே. எங்கள் குறும்படங்களில் எதுவும் கிடையாது. கதை மட்டும் தான். எல்லாம் எடுத்து எடுத்து கற்றுக் கொள்ள வேண்டியது தான். எடிட்டிங், மியூசிக் எதுவும் கம்ப சூத்திரம் அல்ல. எல்லாம் நீங்களே கற்றுக் கொள்ள வேண்டியது தான். உங்கள் சினிமாவை நீங்களே எடுக்க வேண்டியது தான்.

வணிகம் என்று வரும் போதே அங்கு அறம் அடிபட்டுப் போகிறது. லாபமே எல்லமாகிறது. எங்களுக்கு எந்த லாபமும், அங்கீகாரமும் வேண்டாம். என் நோக்கம் ஒன்றே ஒன்று தான்... என் மக்களை ஏமாற்றாதே.. அதுவும் இளைஞர் கூட்டத்தை ஏமாற்றாதே. அவ்ளோ தான். வெல்க short film.. வெல்க documentry film.. ஏதோ பக்கத்தில் வாழ்க commercial film.."

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று இனிது முடிவடைந்தது. தமிழ் ஆவணப் பட வரலாற்றில் இவ்விழா நிச்சயம் முக்கியமானது. நிகழ்ச்சியை ராஜசேகர் தொகுத்து வழங்கினார். இறுதியாய், அருண் நன்றி கூறினார்.

தொகுப்பு: ஸ்ரீகணேஷ் (படிமை மாணவர்)

ஒளிப்படங்கள்: சோமசுந்தரம் (படிமை மாணவர்)

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/UIBny

--------------------------------------------------------------

வணக்கம் நண்பர்களே...


ஆர்.ஆர். சீனிவாசன்

தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரில் "லெனின் விருதை" வழங்கி வருகிறது. இவ்விருது தமிழ் குறும்பட / ஆவணப்பட துறையில் இவ்வூடகங்கள் மூலம் மக்கள் எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிக்கான படைப்பை படைக்கும் கலைஞருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2010 ஆண்டிற்கான லெனின் விருது ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் அவர்களுக்கு வழங்கப்பட விருக்கிறது. காஞ்சனை சீனிவாசன் என்று பரவலாக இத்துறை சார்ந்த மத்தியில் அறியப்படும் திரு. சீனிவாசன் ‘நதியின் மரணம்’ என்ற தன் முதல் ஆவணப்படத்தின் மூலமாக திரை ஊடகத்தை வெறும் பார்வையாளர் தளத்திலிருந்து, சிந்தனை மற்றும் போராட்டம் என்ற தளத்திற்குக் கொண்டு சென்றவர். காட்சி ஊடகத்தை, தன் தொடர்ச் செயல்பாடுகளின் வழியாக, ‘சமூக ஊடகம்‘ என்ற களப்பணிக்கான ஊடகமாக மாற்றியதில் முதன்மையானவர். அரசியலைப் பிண்ணனியாகக் கொண்டு சமூகக் குரலை முன்வைத்து இயங்குகின்றன அவரது ஆவணப்படங்கள். தொடர்ந்து சாதி ஒழிப்பு என்பது அவரது எல்லா ஆவணப்பட ஆக்கங்களிலும் மையமான சிந்தனையாக இருக்கிறது. சமூக, அதிகாரச் சமரசங்களுக்கு ஆளாகாமல் அடுத்தடுத்த சிந்தனைக் கட்டத்தை நோக்கித் தன்னையும் தன் ஆவணப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களையும் அழைத்துச் செல்லும் ஆற்றல் உடைய காட்சிகளை உடையவை அவரது கேமரா கண்கள். காட்சிகளின் வழியாகப் புதிய சிந்தனையை அளிப்பதில் வல்லவர். எதையும் வலிந்து சொல்லாமல் இயல்பான, உயிரோட்டமான மொழியிலும் நீதியின் குரலிலும் வழங்கக்கூடிய அவரின் ஆவணப்படங்கள் தற்காலச் சமூகத்தின் முத்திரைகளாகின்றன. அதன் பொருட்டு, சமூகத்தின் எல்லா அன்றாடச் சிரமங்களை எதிர்கொண்டுவரும் சீனிவாசன் தற்கால இளைஞர்களுக்கு பெரிய உந்து சக்தியுடையவர்!

மேலும், கடந்த 15 வருடங்களாக தமிழகத்தின் ஆவணப்படச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ஆர். ஆர். சீனிவாசன். பிறந்து வளர்ந்த ஊரான திருநெல்வேலியில், காஞ்சனை என்ற திரைப்பட இயக்கத்தை நடத்தி வந்தவர், அதன் தொடர்ச் செயல்பாடாகத்தான் ஆவணப்படங்கள் எடுப்பதில் ஈடுபட்டார். காடு, மலை, நதிகளுடன் இவற்றுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தவர், மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது அதை அதன் இரத்தம் உலரும் முன்பு பதிவு செய்து, ஓர் எதிர்ப்பாக மாற்ற, சென்னை நகர்ந்தார். ‘நதியின் மரணம்’ என்ற ஆவணப்பட மாக்கினார்!
அடிப்படையில், திருநெல்வேலியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பும், நாட்டார் வழக்காற்றில் பட்ட மேற்படிப்பும் பெற்றவர். இவ்விரண்டு அடிப்படையான கல்வியறிவின் வெளிப்பாடுகளையும் இவரது எல்லா ஆவணப்படங்களிலும் காணமுடியும். ’காணாமல் போவது’, ‘முகமூடிய முகம்’ என்ற இரண்டு ஆவணப்படங்களிலுமே இத்தகைய இலக்கிய நுகர்ச்சியையும் நாட்டார் வழக்காற்று அணுகுமுறையையும் காணமுடியும். ‘சிதிலங்கள்’, ‘சுழற்புதிர்’, ’தெருவின் பாடல்’ போன்ற படங்களும் அம்மாதிரியானவையே.

பிற படங்களான, ’தீண்டாத்தகாத தேசம்’, ’என் பெயர் பாலாறு’, ‘கடலும் மனிதனும்’ மற்றும் பேரறிஞர் அண்ணாதுரை பற்றிய அண்ணா 100 ஆகிய படங்கள் மனிதனின் வேறுபட்ட நிலைகளில் கூடத் தொடர்ந்து இயங்கும் சாதிய ஒடுக்குமுறையை வெறும் தர அளவில் இல்லாமல் நிகழ்வுகள், தாக்கஙக்ள் அடிப்படையில் அணுகுபவை. இப்படங்கள், அரசியல் பார்வையுடயவை என்றாலும், அவை அரசியல் வாதியினுடையவை அன்று. மக்களுடையவை, அந்த முறையில் தான், ’நதியின் மரணம்’ என்ற ஆவணப்படம் முதற்கொண்டு இன்றைய அவரது அத்தனை ஆவணப்படங்களும் அமைந்திருக்கின்றன.

கலை, இலக்கிய நுகர்ச்சியில் தொடர்ந்து நவீனத்தைக் கண்டடையும் முயற்சிகளை இவரது செயல்பாடுகளும் தொடர்ந்து வெளிப்படுவதை இவரது மற்ற படங்களிலிருந்தும், தனது அடுத்தடுத்த செயல்பாடுகளை வடிவமைத்துக்கொள்வதிலிருந்தும் நாம் உணரக்கூடும். தமிழகத்தின் தன்காலத்தில், இயங்கும் இரண்டு மனிதர்களை இவர் முக்கியமான கலை அரசியல் ஆளுமைகள் என்கிறார். ஒன்று கவிஞர் தேவதேவன். இரண்டு, ஓவியர் சந்ரூ. இவர்கள் நேரடியாக அரசியல் வெளிப்பாடுகளை முன்வைப்பவர்கள் இல்லை. ஆனால், தன் மீது சமகாலம் சுமத்தும் அரசியலை தூக்கியெறியும் கலைக் கூறுகளை தம் படைப்புகளில் அயராது வைத்துக்கொண்டே இருப்பவர்கள். இது தான் இன்றைய எல்லா படைப்பாளிகளும் செய்யவேண்டியது என்பதை அவர் தன் சாதி ஒழிப்பு அரசியலை செயல்படுத்துவதற்கான வழித்தடமாகவும் வைத்திருக்கிறார்.

அவரின் மனோபாவம் ஒரு பத்திரிகையாளர் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான ஒட்டுமொத்த கட்புலன் மற்றும் நுண்ணாய்வு பார்வையைக் கொண்டது. இவர், இதழியல், திரைப்படங்கள் பற்றிய வகுப்புகளை எடுக்கும் போது உணரமுடியும். புகைப்பட வரலாறு, சினிமா வரலாறு இரண்டிலும் நாம் இன்று எங்கு நிற்கிறோம் என்ற பார்வையை தயக்கமில்லாத விமர்சனங்களால் எப்பொழுதும் முன் வைத்துக்கொண்டே இருக்கிறார். தன்னுடைய புகைப்படக்கண்காட்சியையும், நூல்களையும், பயிற்சிப்பட்டறையையும் இப்பார்வையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் எதிர்ப்பாகவும் கொண்டிருப்பவர்.

தன்னைக்கவர்ந்த ஆளுமையான திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரஹாம் பற்றிய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் நிறைந்த ஒரு நூலை தொகுத்து அளித்திருக்கிறார். அந்நூல், சமூகப்பார்வையுடன் திரைப்படங்களை அணுகும் எவருக்கும் ஒரு கையேடாக இருக்கக்கூடியது.

இன்று, ’பூவுலகின் நண்பர்கள்’ என்ற சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராகவும் சுற்றுப்புற ஆர்வலராகவும் இயங்கி வரும் இவர், ஏற்கெனவே குறிப்பிட்ட படி காடு, மலை, நதியுடன் தன் வாழ்க்கையை இணைத்துக்கொண்டவர். கூந்தன் குளம் பால் பாண்டியனுடன் கொண்ட தன் பழைய நட்பால் பறவைகளையும் உயிரினங்களையும் தன் கலைச்செயல்பாட்டின் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பவர். இவ்வாறு ஒரு மனிதன் தன் பல்வகை பரிமாணங்களையும் இணைத்துச் செயல்படும்போது தான் முழு மனிதனாக இயங்க இயலும் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்.

இந்நிலையில், இந்த, ‘லெனின் விருது’ நிச்சயமாய், ஆர். ஆர். சீனிவாசனை ஊக்கப்படுத்துவதற்கான விருதே! அவர் இன்னும் இன்னும் கலை வெளிப்பாட்டை விசாலமான உலகமாகக் கண்டறியும் பயணத்திற்கான துணையாகவும் இருக்கும்!
அதுமட்டுமின்றி தற்காலச் சூழலில், ‘லெனின் விருதுக்கான’ முழுமையான தகுதியையும் பெருமையையும் உடையவராக ஆர். ஆர். சீனிவாசனை அடையாளம் காண்பதிலும் இவ்விருதினை அவருக்கு வழங்குவதிலும் தமிழ் ஸ்டுடியோ பெருமைப்படுகிறது. தொடர்ந்து அவர் இப்பாதையில் பயணிப்பதற்கான ஊக்கத்தையும் தளத்தையும் அமைத்துக்கொடுப்பதுடன் தமிழ் ஸ்டுடியோ. காம் என்றென்றும் அவருடன் பயணிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்!

---------------------------------------------------------------------------------

லெனின் விருது வழங்கும் விழா

இந்த லெனின் விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building, மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவிருப்பர்வர்கள்:

இயக்குனர் பாலு மகேந்திரா,

தயாரிப்பாளர் தனஞ்செயன்

எழுத்தாளர் பவா செல்லத்துரை

கவிஞர் தேவன் தேவன்

மருத்துவர் புகழேந்தி.

நிகழ்வில் செல்வி ஹம்சவேனியின் வீணைக் கச்சேரி நடைபெறும். இவர் வீணை வாசிக்கும்போது இடையில் ராகங்கள் பற்றியும், திருக்குறளின் அதிகாரங்கள் பற்றியும் கேள்விகள் கேட்டால் மிக துல்லியமாக பதிலளிப்பார்.

  

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</