கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

விருதுகள் பகுதியில் தமிழ் குறும்படங்களுக்கு உலக அளவில் வழங்கப்படும் விருதுகள் குறித்த தகவல்கள் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
விருதுகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS விருதுகள் விருதுகள் வாயில்
 
லெனின் விருது துவக்க விழா - 2010
 
சா.ரு. மணிவில்லன்


படத்தொகுப்பாளர்-இயக்குனர் பீ.லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அவர்களின் பெயரில் குறும்பட துறையில் செயல்படுபவர்களுக்கு "லெனின்" விருது துவக்க விழாவும் 15.08.2010 அன்று நடைபெற்றது. இந்த விருதை தமிழ் ஸ்டியோ.காம் வழங்குகிறது. லெனின் விருது துவக்க விழா 15.08.2010 (லெனின் பிறந்த நாள்) அன்று சென்னை இக்சா மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் ஜனநாதன், நடிகர் பாரதிமணி, கவிஞர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல் நிகழ்வாக படத்தொகுப்பாளர் பீ.லெனின் இயக்கிய நாக் அவுட், குற்றவாளி (Culprit) ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டன.

நாக் அவுட் குறும்படத்திற்கான சிறந்த இயக்குனர், குற்றவாளி குறும்படத்திற்கான சிறந்த படத்தொகுப்பாளர் என்ற பிரிவுகளில் பீ.லெனின் தேசிய விருது பெற்றுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களையும் குறும்பட ஆர்வலர்களையும் தமிழ் ஸ்டியோ குணா வரவேற்று பேசினார்.

குறும்பட இயக்குனர் பத்மநாபன் படத்தொகுப்பாளர் பீ லெனின் அவர்களில் வாழ்க்கை குறிப்பை வாசித்தார்.

குறும்பட இயக்குனர் யாழ்நிலவன்

லெனின் விருது தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக குறும்பட திருவிழா சென்னை கோடம்பாக்கம் தமிழ் ஸ்டுடியோ அலுவலக மாடியில் மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, 7.8.10 சனி முதல் 13.8.10 வெள்ளி வரை ஏழு நாட்கள் நடைபெற்றன.

சிறுகதைகளை அடிப்படையாக கொண்ட குறும்படங்கள் என்ற பிரிவில் செவ்ளி, கர்ணமோட்சம், நடந்த கதை, திற, கழுவேற்றம் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.

ஆவணப் படங்கள் பிரிவில் கல் மனிதர்கள், சிட்டு ஆகிய இரு ஆவணப்படங்களும், பொது பிரிவில் செத்தாழை, கம்மாயில் கல்லு, இப்ப வருந்தி என்ன பயன், எச்சில் மனிதர்கள், நானும் என் விக்கியும் ஆகிய குறும்படங்களும்,

பிறமொழி குறம்பட பிரிவில் ரெட் பலூன் குறும்படமும்,

ஈழப்படங்கள் என்ற பிரிவில் என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் என்ற குறும்படமும், முல்லை தீவு (படுகொலையின் கதை) என்ற ஆவணப் படமும் திரையிடப்பட்டன.

கடைசி நாள் விழா நாயகர் லெனின் அவர்கள் இயக்கிய தேசிய விருது பற்றிய படங்களான நாக் அவுட்டும், ஊருக்கு நூறு பேர் -ம் திரையிடப்பட்டன.

நகைச்சுவை குறும்படங்கள் என்ற பிரிவில் திரையிட திட்டமிட்டிருந்த படங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் திரையிட முடியாமல் போய் விட்டது.

பெரும்பாலும் திரையிடப்பட்ட குறும்படங்களின் இயக்குனர்கள் விழாவில் கலந்து கொண்டு தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

இக்குறும்பட திரையிடல் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஒளிப்பதிவாளர் செழியன், ஆவணப்பட இயக்குனர் ஆர் ஆர் சீனிவாசன், திரைப்பட கல்லூரி பேராசிரியர் ரவிராஜ், இயக்குனர் தேவராஜ், எழுத்தாளர் அஜயன் பாலா, நடிகர் பாரதிமணி, இயக்குனர் ராசி, அழகப்பன், கவிஞர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மறுபடியும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடிகர் தயாளன் லெனின் விருது துவக்க விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.


கவிஞர் மதுமிதா

தான் பார்த்த லெனின் குறும்படங்கள் குறித்த தன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக கவிதை துறையில் சொல்லுவார்கள் நாங்கள் பாரதியின் தோள் மீது அமர்ந்து கவிதை எழுதுகிறோம் என்று, அதுபோல குறும்பட துறையினர் படத்தொகுப்பாளர் லெனின் தோள் மீது அமர்ந்து தங்கள் படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்று சொல்லும் அளவுக்கு படத்தொகுப்பாளர் லெனின் சினிமாவுக்கு சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார் எனக் கூறினார். மேலும் இதனை இந்த நிகழ்வை ஒரு வரலாற்று சிறப்பு மிக்க விழா என்று புகழாரம் சூட்டினார்.

நடிகர் பாரதிமணி

எனக்கு எடிட்டர்/இயக்குநர் பீம்சிங் லெனின் அவர்களை பத்துவருடங்களாகத்தான் தெரியும். 2000-ம் ஆண்டில், பாரதி படத்தில் சாயாஜி ஷிண்டேக்கு தமிழ் வசனங்கள் சொல்லிக்கொடுக்கும் உதவி இயக்குநராகவும், பாரதியின் தந்தையாகவும் பணியாற்றிவிட்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் தில்லி திரும்பிவிட்டேன். டப்பிங்கின் போது, படத்தில் பாரதியின் தந்தை பாத்திரத்தின் வசனங்களைப்பேசுவதற்கு, என்னை தில்லியிலிருந்து வரவழைத்தால், செலவு அதிகமாகுமென்று கருதி, சென்னை டப்பிங் கலைஞரைக்கொண்டே பேசச்செய்துவிடலாம் என்று இயக்குநர் விரும்பினார். பத்துக்கும் மேலான கலைஞர்களை பேசச்சொல்லியும் திருப்தியடையாத எடிட்டர் லெனின், ‘இவருக்கு மற்றவர்கள் டப்பிங் பேசுவது சிரமம். சங்கீத பாஷையில் சொன்னால், இவர் ஆரம்பிக்கும்போது, ஒரு இடம் தள்ளி எடுத்துவிட்டு, முடிக்கும்போது, சரியாக சமத்தில் முடிக்கிறார். தேர்ந்த கலைஞர்களுக்குத்தான் இது சாத்தியம். அதனால் அவரையே தில்லியிலிருந்து வரச்சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டார். இதைக்கேள்விப்பட்ட எனக்கு ஆச்சரியம். தில்லியில் தேசிய நாடகப்பள்ளி இயக்குநரான திரு. இப்ராஹிம் அல்காஸியும், எங்கள் தில்லி DBNS குழு டைரக்டர் ராமநாதனும் தான் இதை கவனித்திருக்கிறார்கள். படத்தில் சின்னசாமி அய்யராக எட்டயபுரம் அரண்மனையில் ராஜாவைப்பார்த்தவுடன் ஒரு சின்ன வணக்கம் சொல்வேன். அதைப்பார்த்துவிட்டு, ‘எந்த தமிழ் நடிகனுக்கும் இது வராது. திலகன் போன்ற மலையாள நடிகர்களுக்கே உரிய நடிப்பு இது. அவர்களுக்கான Body Language’ என்று பாராட்டியிருக்கிறார். சினிமா பற்றிய இவரது கூரிய, சூட்சுமப்பார்வை என்னை ஆச்சரியப்படுத்தும்.

பாரதி படத்தில் முக்கியமில்லாத செல்லம்மா பாத்திரத்தை எடிட்டிங் மேசையில் பூரணமாக செதுக்கியவர் லெனின். படத்தின் பிரிவ்யூவுக்கு வந்திருந்த நடிகை தேவயானி பிறகு என்னிடம், ‘அங்க்கிள், என் பாத்திரம் நடிக்கும்போது இருந்ததை விட இப்போ நல்லாவே வந்திருக்கு’ என்றார். நான் சொன்னேன்: ‘அம்மா, அதற்கு நீங்கள் இரண்டு நபர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். முதலில் எடிட்டர் லெனினுக்கு. உங்கள் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தவர் அவர். இரண்டாவது நன்றி நடிகை சுவலட்சுமிக்கு. ஆரம்பத்தில் செல்லம்மாவாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் நடிக்கமுடியாததால் தான் உங்களுக்கு இந்த சான்ஸ்!’

என்னைப்பொறுத்தவரையில் பாரதி படத்தின் மூலம் எனக்குக்கிடைத்த பொக்கிஷங்கள் இரண்டு. முதலில் நண்பர் லெனினின் நட்பு. இரண்டாவது என் நண்பன் நாமக்கல் கண்ணன். ’இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்?’ ஆம், இவ்விருவராலும், என் சென்னை வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. நான் சென்னை வந்ததும், நல்ல நண்பர்களுக்கான தேடலைத்தொடங்கினேன். அதில் சிக்கியவர் தான் திரு. லெனின். எனக்கு அவரை மிகவும் பிடித்துப்போனது. அவருக்கு என்னையும்! ஓரிரு வருடங்களில் நான் லெனின் குடும்பத்தில் ஓர் அங்கமாகிவிட்டேன். அவர் தாய் சோனா பாய் இருந்ததுவரை என் தயிர் சாதத்துக்கு நார்த்தங்காய் கொடுத்தனுப்பியது அவர் தான். ‘உப்பிட்ட’ நார்த்தங்காய் அளித்தவரை நான் உள்ளளவும் மறக்கமாட்டேன். இவரது மனைவி தன் பெயருக்கேற்ற மாதிரி அன்னபூரணி மட்டுமல்ல…. பூமாதேவியும் தான்.

நான் ஓர் ஊறுகாய்ப்பிரியன் என்பது என் நண்பர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம். ஒரு தடவை லெனின் திருப்புணித்துறையிலிருந்து இரண்டு பெரிய பாட்டில்கள் நிறைய வடுமாங்காய் – இவர் மாமியார் போட்டது – இரு கைகளில் சுமந்துகொண்டு, இரவில் ரிஸர்வேஷனில்லாமல் ரயிலேறியிருக்கிறார். இவரை அடையாளம் கண்டுகொண்ட T,T.E. , ‘ஸாறே! நிங்ஙளாராணெந்நு எனிக்கறியாம். ஸாறுடெ கொறே சித்ரங்ஙள் ஞான் கண்டிற்றொண்டு. பக்ஷெ இந்நு ஒரு ரக்ஷயுமில்லா. வண்டி ஃபுள் டைற்றாணு’ என்று சொல்லி இவரை பாத்ரூம் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துவிட்டார். இரவு முழுவதும் தூங்காமல், விடியற்காலம் சென்னை வந்திறங்கிய திரு. லெனின் வீட்டுக்குக்கூட போகாமல், நேராக என் வீட்டுக்கு வந்திருக்கிறார். அதிகாலையில் கதவைத்திறந்த சமையல்கார அம்மாவிடம் இரு ஊறுகாய் பாட்டில்களையும் கொடுத்துவிட்டு போய்விட்டார். தூங்கியெழுந்த நான் டைனிங் டேபிள் மேல் இருந்த பாட்டில்களைப்பார்த்ததும், ’யாரும்மா கொண்டுவந்தாங்க?’ என்று கேட்டேன். அதற்கு ’விடியக்காலம் ஒரு ஊறுகாய்க்காரர் குடுத்துட்டுப்போனார்’ என்றாள். சந்தேகப்பட்ட நான் ‘எப்படி இருந்தார்?’ என்று கேட்டதற்கு, ‘தாடியோடெ மடிச்சுக்கட்டின வேட்டி’ என்று பதில் வந்தது. விஷயமறிந்ததும், ‘ஐயோ! அவரா? மலையாள படங்கள்ளே Editing: B. லெனின் V.T. விஜயன்னு வருமே….அவரா?.......ஓ…பீம்சிங் பையன்!……உள்ளே கூப்பிட்டு ஒரு வாய் காப்பி குடுக்காமெப்போனேனே!’ என்று பதறினார். ஐந்தாறு முறை தில்லியில் இந்தியக் குடியரசுத்தலைவர்களிடம் எடிட்டிங், டைரக்‌ஷனுக்கு விருதுகள் வாங்கிய இவரது கைகள் என் ஊறுகாய் ஜாடிகளையும் சுமந்திருக்கின்றன! இந்த மாமனிதனால் மட்டுமே தன்னை வருத்திக்கொண்டு, எதிர்பார்ப்பில்லாமல் பிறருக்கு உதவி செய்யமுடியும்! பல சமயங்களில் He goes out of the way to help others! போனமாதம் நடந்த திரு. கக்கன் நூற்றாண்டுவிழாவையொட்டி, அவரது வாழ்க்கையில் சில சம்பவங்களைக்கொண்ட ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டது. அதில் நான் கக்கனாக நடித்தேன். ஏனென்றால் திரு. கக்கனைப்போல் வாழமுடியாது…….நடிக்கத்தான் முடியும்! இதைக்கேள்விப்பட்ட திரு.லெனின், ‘மணிசார்! அதை நான் எடிட் பண்ணித்தரேன்!’ என்று அவராகவே சொன்னார். பணம் வாங்கமாட்டார் என்பதனால், நான் மறுத்துவிட்டேன். சில சமயங்களில் நான் நினைத்ததுண்டு: ‘அவருக்கிருக்கும் பரந்த ஆளுமைக்கு, இந்தக்காலத்தில் இப்படி வாழத்தெரியாத மனிதராக இருக்கிறாரே! ஒரு மனிதனுக்கு இத்தனை நேர்மை தேவை தானா?’ என்று. இந்த வியாபார உலகில், எப்படி தன்னை விற்பனை செய்துகொள்வதென்பது அவருக்குத்தெரியாத கலை. But he leads his contented life very happily on his own terms! அவருக்கு இது தான் பிடித்திருக்கிறது!

இன்னொரு உதாரணம்: இந்தியாவிலேயே இரண்டாவது முறையாக ஒரு தமிழனுக்கு சிறந்த இயக்குநருக்கான தங்கத்தாமரை விருது 2003-ல் என் நண்பர் லெனினுக்கு கிடைத்தது, ஊருக்கு நூறுபேர் படத்துக்காக. அந்தச்செய்தி அன்று நம் தமிழ்ச்சானல்களுக்கு முக்கியமாகப்படவேயில்லை. ’மானாட மயிலாடுவதில்’ தான் அவர்களுக்கு அக்கறை. மலையாள ஏஷியாநெட் மூலம் தான் நான் செய்தியறிந்தேன். (படத்தில் நானும் தலையைக்காட்டியிருக்கிறேன்!) அதற்கான ரொக்கப்பரிசு ரூ. 25,000-த்தை, படவிழாவுக்காக நாங்கள் கோவை போயிருந்தபோது, தொண்டாமுத்தூர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுக்கு தானமாகக்கொடுத்துவிட்டார். சரி, போனால் போகட்டும் என்று பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இன்னும் அதிர்ச்சியளித்த விஷயம் அவர் தனக்கு ஜனாதிபதி கழுத்தில் போட்ட தங்கப்பதக்கத்தையும் கழட்டி அந்த மாணவன் கழுத்தில் போட்டது தான்! அந்தப்பதக்கம் இப்போது சேட் கடைக்குப்போகாமல், அந்தப்பையன் வீட்டில் தான் இருக்குமென்று நம்புவோம். விழாமுடிந்து சென்னை வந்ததும், கைச்செலவுக்காக, தன் நெருங்கிய நண்பரிடம் கைமாற்றாக ரூ. 10,000 வாங்கியதும் எனக்குத்தெரியும். இவருக்கென்ன தமிழ்த்திரையுலகம் கோடிக்கோடியாக கொட்டிக் கொடுத்திருக்கிறதா? இல்லை…. அப்படி கிடைத்தவர் தான் கொடுக்கிறாரா? இதற்கும் ஒரு கனிந்த நிறைவான மனது வேண்டும்! அது இவரிடமிருக்கிறது!

பார்வைக்கு பசுவாக இருக்கும் இவர் சினிமாத்துறைக்கு ஏதேனும் பிரச்னைகள் வந்தால் புலியாக போர்க்கொடி உயர்த்துவார். He is always anti-Establishment and politically incorrect. அரசுக்கெதிராக இவர் விமர்சனங்கள் நியாயமானவை…….கூரானவை. மற்றவர்களைப்போல தன் சொந்த நலனுக்காக யாரிடமும் எந்த சமரசமும் செய்துகொள்ளத் தெரியாதவர். அதனால் தான் அவரால் இத்தனை எளிமையாக வாழமுடிகிறது! தன்னை ‘சினிமாவால் கவரப்பட்டு, உருப்பட்டு, அதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஒரு தொழிலாளி’ என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த மாமனிதர் கனவுத்தொழிற்சாலையின் பல்வேறு பரிணாமங்களை உள்ளடக்கி, சினிமா….நிஜமா? என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். ’நக்கீரனில்’ வெளியான 32 கட்டுரைகளின் தொகுப்பு. சினிமாத்துறையிலிருக்கும், அதில் ஆர்வமிருக்கும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய புத்தகமது. டெலிபோனில் பேசும்போது இவருக்கு ‘ஹலோ’ என்ற வார்த்தை வராது. பதிலாக ‘வாழ்க வளமுடன்” என்ற கம்பீரமான குரலில் தான் பேச்சை தொடங்குவார். அதனால் தான் இவரும் வளமுடனே வாழ்கிறார்!

இவர் தன்னைப்பற்றி என்ன சொல்லிக்கொள்கிறார்? “என் மொழி சினிமா. இது மொழியை மீறிய கலை. என் தாத்தா அகர்சிங் ராஜஸ்தானைச்சேர்ந்த ரஜபுத்திரர். அவர் மனைவி ஆந்திராவைச்சேர்ந்த ஆதியம்மா. அவர் மகன் பீம்சிங். தாத்தாவின் வழியிலே, மகனுக்கும் ‘சிங்’ ஒட்டிக்கொண்டது. என் தாய், அதாவது பீம்சிங்கின் மனைவி சோனாபாய் காவிரி வளம் கொழித்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சோனாபாயின் தந்தையோ ராகவாச்சாரி என்கிற தமிழ் ஐயங்கார். தாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். எனது மனைவி கேரளத்தைச்சார்ந்தவர். மொழிகளும், இனங்களும், எல்லைகளும், நிறங்களும், கலாச்சாரங்களும் சங்கமித்ததின் ‘கரு’ நான். இப்போதைக்கு நான் தமிழன்……ஒரு இந்தியன்…….எல்லாவற்றுக்கும் மேலாக நான் மானுடன்” இந்திய ஒருமைப்பாட்டுக்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்கமுடியுமா? இத்தனை விசாலமான விசிட்டிங் கார்டு கொண்டவர் கையில், விசிட்டிங் கார்டே வைத்துக்கொள்ளாதவர்! எங்கள் தொந்தரவு பொறுக்கமுடியாமல் தான் அவரிடம் இப்போது செல்போன் இருக்கிறது!

சமீபகாலம் வரை, தேசிய விருதுகள் பெற்ற எல்லா மலையாளபடங்களுக்கும், தமிழ்ப்படங்களுக்கும் எடிட்டிங் திரு லெனினாகத்தானிருக்கும். படத்தில் வரும் கிரெடிட் கார்டுகளைப்பார்க்கவேண்டிய அவசியமேயிருந்ததில்லை. எத்தனை படங்களில் எடிட்டிங்: B . லெனின் - V.T. விஜயன் என்று இந்த கத்தரிக்கோல் இரட்டையர்கள் பெயரைப்பார்த்திருப்போம்! தன் கத்தரிக்கோலால் பல சிறந்த படங்களை மெருகிட்டு நமக்களித்தவர். அகில இந்திய அளவில், ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற ஜாம்பவான்கள் இருந்த காலத்தில், ஐந்துமுறை இந்திய ஜனாதிபதிகளிடம் எடிட்டிங் கலைக்காக விருது வாங்கியவர். இருந்தும் எப்படி இத்தனை எளிமையாக இருக்கிறாரென்ற ரகசியத்தை இவர் யாருக்கும் கற்றுக்கொடுக்கவில்லை……. ஏனென்றால் எளிமை கற்றுக்கொடுத்து வருவதில்லை!

தன் தந்தையார் பீம்சிங் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், மரியாதையுடன், ‘டைரக்டர்’ என்றே குறிப்பிடுவார். அந்த ‘டைரக்டர்’ தனக்குத்தெரிந்ததையெல்லாம் தனயனுக்கு சொல்லிக்கொடுத்துவிட்டு, இந்த இளைஞரை சில வருடங்கள் பம்பாய்க்கு அனுப்பினார். அங்கே ரிஷிகேஷ் முகர்ஜி போன்ற மேதைகளுடன் பணிபுரியும் வாய்ப்புக்கிட்டியது. இவரது பம்பாய் அனுபவங்கள் மிக சுவாரசியமானவை. சாம்பிளுக்கு ஒன்று: பழம்பெரும் ஹிந்தி நடிகர் ப்ரேம்நாத் டப்பிங் பேசவந்தால், படத்தில் என்ன உடையுடன் பேசியிருந்தாரோ அதே உடையை டப்பிங் போதும் போட்டுக்கொண்டு தான் பேசுவேன் என்று அடம் பிடிப்பாராம்! படத்தில் ஹீரோவால் தரையில் தள்ளப்பட்டு பேசும் வசனங்களை, டப்பிங் ஸ்டுடியோவில் தரையில் படுத்துக்கொண்டேதான் பேசுவாராம்.

பாரதி படத்துக்குப்பிறகு வந்த எல்லா ’புத்தா பிக்சர்ஸ்’ தயாரிப்புகளிலும் நான் ஆஸ்தான நடிகனாகிவிட்டேன். லெனின் இயக்கிய மொட்டுக்கா, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறுபேர், றெக்கை போன்ற படங்களிலும் இனி இவர் இயக்கப்போகும் எல்லாப்படங்களிலும் தவறாமல் நான் வருவேன்,…….. நான் இருக்கும் வரை! படத்தில் எனக்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்குவார். படப்பிடிப்பின்போது, நடிகர்களிடமிருந்து தனக்குத்தேவையானதை பிடுங்கி எடுத்துக்கொள்ளும் பக்குவம் இவருக்குண்டு. இரண்டே மானிட்டர்……ஒரே டேக். அதனால் தான் ஒரு இயக்குநராக, 2002-ல் வெறும் பதிமூன்று லட்சம் ரூபாயில், ஊருக்கு நூறுபேர் என்ற தரம் வாய்ந்த படத்தை எடுக்கத் தெரிந்திருந்தது. இவரால் தான் நான் ‘One Take Actor’ என்ற பட்டத்தை உதவி இயக்குநர்களிடமிருந்து பெற்றேன். இந்த நல்ல மனிதர் சொன்னார்: ‘மணிசார் ஒரு ஃப்ரேமில் வந்தாலும், அந்தப்படத்துக்கு அவார்டு நிச்சயம்!’ என்று. நினைத்துப்பார்த்தால், அதில் கொஞ்சம் உண்மையிருப்பதுபோல் தோன்றுகிறது. என் முதல் படம் ஆங்கிலத்தில் BBC Channel-4, London தயாரித்து அருந்ததி ராய் கதைவசனமெழுதிய ‘The Electric Moon’. இதற்கு 1992-ல் இந்தியாவில் தயாரித்த சிறந்த ஆங்கிலப்படத்துக்கான விருது கிடைத்தது. என் முதல் தமிழ்ப்படமான பாரதி, லெனின் இயக்கிய ஊருக்கு நூறுபேர், மொட்டுக்கா, ஜெயபாரதியின் நண்பா….நண்பா, அம்ஷன்குமாரின் ஒருத்தி, ஷங்கரின் அன்னியன் சேரனின் ஆட்டோகிராப் – இந்தப்படத்தில்இதில் ஒரே ஒரு ப்ரேமில் தான் தலைகாட்டியிருக்கிறேன் – இப்படி நான் தலையைக்காட்டிய பல படங்கள் தேசிய விருது பெற்றிருக்கின்றன. ஆனாலும் மற்ற நல்ல டைரக்டர்கள் என்னை கண்டுகொள்வதேயில்லை!

நமது பிறந்தநாளை நாம் வீட்டில் கொண்டாடுவோம். இவர் பிறந்தநாளை நாடே கொண்டாடுகிறது! ஆம், எல்லோரும் கொடியேற்றிக் கொண்டாடுகிறோம். ஆகஸ்ட் 15-ம் தேதி பிறந்தவர். நண்பர்களுக்கு அவர் பிறந்தநாளை ஞாபகம் வைத்துக்கொள்ளும் சிரமத்தைக்கூட அவர் கொடுக்கவில்லை.

நடைக்கு அஞ்சாத மனிதர். அதில் எனக்கு நேர் எதிர். ஆழ்வார்பேட்டையிலிருந்து விருகம்பாக்கம் வரை நடந்தே வந்து, ‘மணிசார், காலையிலே உங்களோடு சேர்ந்து ஒரு பில்டர் காபி சாப்பிட வந்துட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே நுழைவார். அவர் வீட்டிலிருந்து குன்றத்தூருக்கு நடந்தே போய்விடுவார். இவருடன் சுற்றுப்பயணம் போவது ஒரு சுகமான அனுபவம். ஆனால் ஒன்று…….. என்னையும் நடக்கச்சொல்லி பிராணனை வாங்குவார்! றெக்கை படப்பிடிப்பின்போது, முப்பது நாட்கள் மதியம் ஒரே நேரம் அரைமூடித்தேங்காயும் ஐந்து வாழைப்பழங்களும் மட்டும் சாப்பிட்டுவிட்டு, நாளெல்லாம் புத்துணர்ச்சியோடிருப்பார். ஒருவேளைப்பசி கூடப்பொறுக்கமுடியாத இடும்பைகூர் வயிற்றைக்கொண்டிருக்கும் நான், புரொடக்‌ஷன் முத்தையாவிடம், இவர் வேறு ஏதாவது சாப்பிடுகிறாரா என்று ரகசியமாக விசாரிப்பேன்.

சூட்டிகையான இரு பெண்கள். திருப்புணித்துறையில் நடந்த இருவர் திருமணங்களுக்கும், மணப்பத்திரிகைகளில் அச்சிடுவது போல், ‘நான்கு நாட்கள் முன்னதாகவே போயிருந்து, தம்பதிகளை ஆசீர்வதித்து, அவரையும் கெளரவித்துவிட்டு’ வந்திருக்கிறேன்! இப்போது இவருக்கு மிக நெருக்கமான தோழி இவர் பேத்தி தான்!

உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட என் புத்தகத்தில், என்னைப்பற்றி இப்படி எழுதியிருந்தார்: ‘ஒருவகையில் பாரதி மணி எனக்கு ’பைய்யா’ (Bhaiyaa) . ஹிந்தியில் பைய்யா என்றால் சகோதரர் என்று பொருள். ஆனால் பையன்களைப்போல் தான் சிரிப்பார், அழுவார், சந்தோஷப்படுவார். அவர் கண்களில் எப்போதும் மகிழ்ச்சியிருக்கும். முறையாக சங்கீதம் பயிலாத இந்த மனிதருக்கு இத்தனை சங்கீத ஞானம் எங்கிருந்து வந்ததோ? தில்லியில் எவ்வளவு பெரிய உத்யோகங்களில் எல்லாம் இருந்தவர், இங்கே இந்த தமிழ் சினிமாவிலா வந்து மாட்டிக்கொள்வார்? யார் கூப்பிட்டாலும் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும் குழந்தைகளைப்போல, ஆர்ட் பிலிம், கமர்ஷியல் பிலிம், ஷார்ட் பிலிம், டாகுமெண்டரி, டி.வி. சீரியல்கள், விளம்பரப்படம், F.M. ரேடியோ என்று தன் தலையைத் தானே நுழைத்துக்கொள்வார். கூப்பிடுபவர்களும், குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல இவருக்கு கடுக்காய் கொடுத்து விடுவார்கள். கடுக்காயைச் சாப்பிட்டாலும், கசப்பு என்பது இவரது முகத்தில் தெரியாத அளவுக்கு குழந்தையைப்போல் ஒரு கள்ளம் கபடமற்ற சிரிப்பையே உதிர்ப்பார்.’………… இவர் வீட்டுக்குப்போனால், அப்போது காபிக்கொட்டை அரைத்துபோட்ட வாய் மணக்கும் டிகிரி பில்டர் காப்பி கிடைக்கும்! ……… ‘ரெளத்ரம் பழகு’ என்று சொன்ன பாரதியின் கோபத்தை நான் பார்த்ததில்லை. ஆனால் பாரதி மணி கோபத்திலும் ஒரு குழந்தையைப்போல் தான் இருப்பார்……..Bharati Mani is a Warrior, who will fight till the end …. For me he is …..A Friend, Philosopher and Guide. Sir, I salute you!......இப்படி தன் கட்டுரையை முடித்திருந்தார் என் நண்பர்!

இவையெல்லாம் பொய் கலந்த புகழாரங்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவருக்கும் தெரியும். யோசித்துப்பார்க்கும்போது, இந்தப்புகழெல்லாம் ஓரளவுக்கு அவருக்குத்தான் பொருந்தும். நிரந்தர வருவாய் வரும் எடிட்டிங் வேலையை உதறித்தள்ளிவிட்டு, தமிழகத்தில் கைப்பணத்தைச்செலவழித்து ஊரூராகச்சென்று, குறும்படங்களைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். இளைஞர்கள் தயாரித்துக்கொண்டுவரும் குறும்படங்களுக்கு இலவசமாக எடிட்டிங் செய்து கொடுக்கிறார். யாராவது தனக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்தால், அதை வேண்டுமென்றே தவிர்க்கிறார். பாராட்டுகளுக்கு விழைந்து நிற்கும் எனக்கு, ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று ஆச்சரியம் தான் மேலிடுகிறது!

இந்த நல்ல மானுடனை நண்பனாகப்பெற்ற நான் சொல்கிறேன்: …..Mr. Lenin is my Best Friend, Philosopher and Guide. ………..Sir, I salute you!

பொள்ளாச்சி சசி -

படத்தொகுப்பாளர் லெனின் அவர்கள் மகத்தான மனித நேயம் மிக்கவர். தனக்கு சரியென பட்டதை அதிகாரத்துக்கு முன்னின்று துணிவாக சொல்ல கூடியவர். நிறைய பேர் படம் எடுக்க ஊக்குவித்து கொண்டுள்ளார். இன்னும் நிறைய பேர் படம் எடுக்கும் அளவுக்கு பலபேரை உருவாக்க வேண்டும் என்பதில் விருப்பமாக உள்ளார். எளிமையை விரும்புகின்ற மனிதர். அவரது பெயரில் விருது கொடுப்பது சிறப்பான ஒன்றுதான். இதை ஏற்பாடு செய்துள்ள தமிழ் ஸ்டியோ.காம் அமைப்புக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

தமிழ் ஸ்டியோ அருண்

தமிழில் திரைப்பட கல்லூரிக்கு வெளியே எடுக்கப்பட்ட முதல் குறும்படம் நாக்அவுட். இந்த படம் இயக்குனருக்கான தேசிய விருது பெற்றது. இப்படத்தை இயக்கியவர் படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவர்கள்.

மாற்று சினிமாப் பற்றிய எண்ணங்களை அதிகமாக மக்களிடம் கொண்டு சென்றவர் பீ.லெனின்.
பல குறும்பட ஆர்வலர்களுக்கும் தொடர்ந்து வழிக்காட்டுதல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்து வருபவர். சினிமாவிற்கான அவரது பங்களிப்பை போற்றும் விதமாக அவரது பெயரால் தமிழ் ஸ்டியோ.காம் லெனின் விருது என்ற விருதை இன்று துவங்குகிறது.

அடுத்த ஆண்டு முதல் இந்த விருது குறும்பட துறையில் சிறந்த பங்களிப்பு செய்பவர்களுக்கு லெனின் விருது என்கிற பெயரில் வழங்கப்படும்.

விருதுக்கான தொகையை ரூ10,000 தமிழ் ஸ்டியோ அங்கத்தினர் 10 பேர் சேர்ந்து வழங்குகின்றனர். வருங்காலத்தில் அங்கத்தினர் எண்ணிக்கை கூடினால் விருது தொகை கூடலாம்.

இந்த விழா வித்தியாசமானது விழா நாயகர் கலந்து கொள்ளாமலே விழா நடைபெறுகிறது.

இயக்குனர் ஜனநாதன்

இயக்குனர் லெனின் முற்றிலும் வித்தியாசமான மனிதர். அவர் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று சொன்னால் அவர் மற்றவர்களை கைக்காட்டுவதாக சொன்னார்கள். அவர் அப்படித்தான். ஆனால் நம்முன் உள்ள கேள்வி அவர் பெயரில் விருது வழங்கலாமா? வேண்டாமா என்பதுதான். அவர் பெயரில் விருது கொடுப்பது என்பது முற்றிலும் சரியான செயலாகும். எப்படி சரி என்பதற்கு நான் சில சம்பவங்களை உங்களுக்கு சொல்லுகிறேன்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படம் அது. அப்பட தயாரிப்பாளருக்கும், புரடக்ஷன் பாய்-க்கும் சின்ன பிரச்சினை. புரொக்டஷன் பாய் சங்கத்தில் முறையீடு செய்து விடுகிறார். சங்கம் ரூ.5000 -க்கு தயாரிப்பாளர் கட்ட வேண்டும் என்று சொல்லுகிறது. தயாரிப்பாளர் மறுக்கிறார். சங்கம் படத்தை தடை செய்கிறது. அப்போது லெனின் தலையிட்டு தன் சொந்த பணத்தை செலவு செய்து அப்படம் வெளிவர காரணமாக இருந்தார். அந்த படத்தில அவர் சம்பளமாக வந்ததில் பாதியை அந்த படம் வெளிவர செலவு செய்தார். அந்த படம் தமிழ் சினிமாவில் சிறப்பான முயற்சி. அது தோற்றுவிடக் கூடாது என்ற நோக்கமே இதற்கு காரணமாகும்.

டெல்லியில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு சென்றிருந்தோம். நல்ல குளிர்காலம் அது. அப்போது நாக்அவுட் குறும்படத்திற்கு விருது வாங்குவதற்காக சென்ற நாங்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தோம்.

அப்பட விழாவிற்கு தமிழ்நாடு திரைப்பட கல்லூரி மாணவர்களும் வந்திருந்தனர். அவர்கள் குளிருக்கு ஏற்ற உடை இல்லாமல் ஒரு சத்திரத்தில் தங்கி இருந்தனர். இதை அறிந்த லெனின், அரசாங்கம் விருது வாங்க வருபவர்களுக்கு விமான பயணச்சீட்டு வழங்கி இருந்தது. அவர் அந்த பயண சீட்டை கேன்சல் செய்து (தனக்கு ட்ரெயின் டிக்கெட் எடுத்துக் கொடுக்கக் கேட்டுக்கொண்டார்) திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு உடை வாங்கிக் கொடுத்தார். ஒரு நாள் உணவுக்கும் ஏற்பாடு செய்தார். அந்த மாணவர்களில் பலர் இன்று வெற்றியாளர்களாக இருக்கின்றனர்.

எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு முறை நட்சத்திர ஓட்டலில் பாத் டேப்பில் குளிப்பது எப்படி என சொல்லிக் கொடுத்து என்னை குளிப்பாட்டி விட்டார். இதெல்லாம் கற்றுக்கொள்ள பின்னாளில் வெளிநாட்டுக்கு சென்றால் உதவியாக இருக்குமென்றார். உண்மையில் அப்படித்தான் நடந்தது. எனக்கு சினிமா எடுப்பது பற்றியும் சொல்லிக் கொடுத்தார். பாத் டேப்பில் குளிப்பது எப்படி என்றும் சொல்லிக் கொடுத்தார். அவருக்கு நான் உதவியாளர். ஆனால், அவர் என்னை அப்படி நடத்தியதே இல்லை.
மிகவும் எளிமையான மனிதர். வேட்டி, சட்டை காலில் ஹவ்வாய் செப்பல். இந்த கோலத்தில் நாக் அவுட் படத்திற்கு தேசிய விருது வாங்க சென்றபோது நட்சத்திர ஒட்டலில் உள்ளே விடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், அவர் அந்த உடையுடன் தான் குடியரசுத் தலைவரிடமிருந்து விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாக் அவுட் குறும்பட காட்சி பதிவின்போது குத்துச்சண்டை வீரர்கள் ஒரு கட்டத்தில் உண்மையிலேயே குத்துச்சண்டை போட ஆரம்பித்து விட்டனர். அப்போது மிகவும் சமயோசிதமாக செயல்பட்டு அவர்களை விலக்கி விட்டார். பிறகுதான் தெரிந்து இவர் ஒரு முன்னாள் குத்துச் சண்டை மாணவர் என்பது.
இதுபோல் இன்னும் பல சம்பவங்களை என்னால் சொல்ல முடியும். நல்ல சினிமாவை உருவாக்க அவர் எந்த அளவுக்கு போராடுகிறார் என்பதும் எனக்கு தெரியும். அவர் பெயரில் விருது கொடுப்பது முற்றிலும் சரியானதே. இதுபோன்ற காரியங்கள் நான்தான் முன்னிருந்து செய்திருக்க வேண்டும். இக்காரியத்தை சிறப்பாக செய்யும் தமிழ் ஸ்டியோ.காம் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியில் குறும்பட ஆர்வலர்கள் பலர் படத்தொகுப்பாளர் லெனின் உடனான தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இவ்விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் தமிழ் ஸ்டியோ அருண் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியை பண்பலை வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் குறும்பட ஆய்வாளர் ராஜசேகர் மிகவும் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்.


நிகழ்வு சார்ந்து மேலும் ஒளிப்படங்களைக் காண :

http://picasaweb.google.co.in/thamizhstudio/WTKyn#

------------------------------------------------------------------------------------------------------
லெனின் விருது

லெனின் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.30
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர் (கன்னிமாரா நூலகம் எதிரில்)


பங்கேற்பு:

கலைப்புலி எஸ். தாணு அவர்கள். (திரைப்பட தயாரிப்பாளர்)
பாரதி மணி அவர்கள் (திரைப்பட நடிகர் & எழுத்தாளர்)
ஜனநாதன் அவர்கள் (திரைப்பட இயக்குனர்)
ரவி சுப்பிரமணியம் அவர்கள் (ஆவணப்பட இயக்குனர்)
மதுமிதா அவர்கள் (கவிஞர்)

பி. லெனின் அவர்கள் (படத்தொகுப்பாளர்)

இயக்குனர் பீம்சிங் அவர்களின் மகனான படத்தொகுப்பாளர் திரு. பி. லெனின் அவர்கள் தமிழின் மிக முக்கியமான படத்தொகுப்பாளர்.

மிக உச்சத்தில் இருக்கும்போதே படத்தொகுப்பு வேலைகளை குறைத்துக் கொண்டு குறும்படத் துறையில் தனது கவனத்தை திசை திருப்பினார். மேலும், தமிழில் குறும்படங்களுக்கான ஒரு அலையை தோற்றுவித்தார். இவர் இயக்கிய "நாக் அவுட்" என்கிற குறும்படம்தான் தமிழில் முதலில் திரைப்படக் கல்லூரி மாணவர் அல்லாத ஒருவர் எடுத்த குறும்படமாகும். இக்குறும்படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து குறும்படங்களுக்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் செலவழித்து வருகிறார். குறும்படங்கள் சார்ந்து கிராமப் புற மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தல், அவர்களை குறும்படம் எடுக்க ஊக்குவித்தல் என பல பணிகளை செய்து வருகிறார். மேலும் யாருமே செய்யத் துணியாத பணியாக தனது ஸ்டுடியோவில் குறும்படங்களுக்கு இலவசமாக படத்தொகுப்பை செய்து வருகிறார்.

குறும்படங்கள் சார்ந்து பலருக்கும் உதவி செய்து வருகிறார். தனது பணியைக் கூட அவ்வளவாக கவனிக்காமல் குறும்படங்களுக்காக தொடர்ந்து போராடும் இவர், குறும்படங்களுக்கு தமிழக அரசு விருதுகளும், உதவிகளும் செய்து ஊக்குவிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இன்னும் சொல்லப்படாத இவரது சாதனைகள் ஏராளம். இவரது எளிமை ஊரறிந்த ஒன்று.

இத்தகைய சிறப்பு வாய்ந்த படத்தொகுப்பாளர் திரு. லெனின் அவர்களின் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்துவதில் தமிழ் ஸ்டுடியோ.காம் பெருமிதம் கொள்கிறது. மேலும் இந்த ஆண்டு குறும்படத் துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை திரு. லெனின் அவர்களுக்கு கொடுப்பதில் தமிழ் ஸ்டுடியோ.காம் மேலும் பெருமிதம் கொள்கிறது. இந்த விருது அவரை கௌரவிப்பதற்காக அல்ல. இந்த விருதை பெறுவதன் மூலம் அவர்தான் தமிழ் ஸ்டுடியோவை கவுரவிக்கிறார். இதுமட்டுமின்றி இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை உலகத் தமிழ் குறும்பட தினமாக கொண்டாட தமிழ் ஸ்டுடியோ.காம் முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று (லெனின் அவர்களின் பிறந்த தினத்தில்) அந்த ஆண்டு குறும்படத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு லெனின் விருது வழங்கப்படும். இந்த விருது, பட்டயத்துடன் 10,000 ரூபாய் ரொக்கப் பரிசை உள்ளடக்கியது. மேலும் விருது பெரும் ஆளுமை குறித்த ஆவணப்படமும், அவர் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்படும். இது அவர் பற்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள உதவும்.

மேலும் இந்த விருதைப் பெற யாரும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதியுடையவர்கள் எங்கிருந்தாலும் விருது அவர்களை வந்தடையும். இதற்காக தமிழ் ஸ்டுடியோ.காம் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களை இறுதியாக மூன்று பேர்கள் அடங்கிய நடுவர்கள் குழு தீர்மானிக்கும். இந்த நடுவர்கள் குழுவில், குறும்படம், இலக்கியம் சார்ந்த இருவரும், அனுபவம் வாய்ந்த ஒருவரும் இடம்பெற்றிருப்பர்.
------------------------------------------------------------------------------------------------------
திரையிடல் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 07 முதல் 13 வரை
நேரம்: இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரை.
இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024

------------------------------------------------------------------------------------------------------

லெனின் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.30
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர் (கன்னிமாரா நூலகம் எதிரில்)


------------------------------------------------------------------------------------------------------

படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா
மற்றும்"லெனின் விருது" துவக்க விழாவை முன்னிட்டு நடைபெறும் குறும்படத் திருவிழா!!

படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் லெனின் அவர்கள் பெயரில் அடுத்த வருடம் முதல் குறும்படத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் "லெனின்" விருது துவக்க விழாவை முன்னிட்டும், லெனின் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 ஐ உலகத் தமிழ் குறும்பட தினமாக தமிழ் ஸ்டுடியோ.காம் அறிவிக்கவிருப்பதை முன்னிட்டும், எதிர் வரும் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை தொடர்ந்து ஏழு நாட்கள் குறும்படங்கள் திரையிடல் திருவிழா நடைபெறும். இதில் ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். அனுமதி இலவசம்.

நிகழ்வின் மேலும் சிறப்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்படுகிறது.

அதன் விபரம்:

ஆகஸ்ட் 07, 2010, சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. செழியன். (கல்லூரி, ரெட்டை சுழி)

ஆகஸ்ட் 08, 2010, ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: ஆவணப்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் (என் பெயர் பாலாறு)

ஆகஸ்ட் 09, 2010, திங்கள்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: நகைச்சுவைக் குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: தொலைகாட்சி நகைச்சுவை எழுத்தாளர் திரு. பழனி (சின்ன பாப்பா, பெரிய பாப்பா)

ஆகஸ்ட் 10, 2010, செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: பொதுவான குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: அரசு திரைப்படக் கல்லூரி பேராசிரியர் திரு. ரவிராஜ்

ஆகஸ்ட் 11, 2010, புதன்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: மற்ற மொழிக் குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: பிரசாத் திரைப்படக் கல்லூரி முதல்வர் திரு. ஹரிஹரன்

ஆகஸ்ட் 12, 2010, வியாழக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: ஈழம் சார்ந்து எடுக்கப்பட்ட குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர், நடிகர் அஜயன் பாலா

ஆகஸ்ட் 13, 2010, வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்கு:

வகைப்பாடு: எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: எடிட்டர். திரு. பி. லெனின்

திரையிடப்படும் குறும்படங்கள் பற்றிய விபரங்கள் விரைவில்...

திரையிடல் நடைபெறும் இடம்:
எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</