Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
 
 

தமிழ் ஸ்டுடியோ - படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் - பாடத்திட்டம்
 
 


படிமை என்பது தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் திரைப்படப் பயிற்சி பிரிவு. இதில் திரைப்படங்கள் எடுக்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். தமிழின் நிகழ்கால, அல்லது நூற்றாண்டு வாலாற்றில் கூட, திரைப்பட பயிற்சி என்பது ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. ஒரு இயக்குனரிடம் இரண்டு படங்கள், அல்லது சில வருடங்கள் வேலை செய்துவிட்டால் போதும், உடனே தாங்களும் இயக்குனராகிவிடலாம் என்கிற நோக்கில்தான் கிராமப்புறங்களில் இருந்தும், படித்த இளைஞர்களும் சென்னையை நோக்கி வருகிறார்கள். ஒரு இயக்குனரிடம் வேலை செய்வதன் வாயிலாக ஒரு திரைப்படம் உருவாகும் வழிமுறையை (Process) மட்டும்தான் தெரிந்துக் கொள்கிறோமே தவிர, திரைப்பட உருவாக்கத்தை (Film Making) அங்கே தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லை. நூற்றாண்டுகளாக இந்த வழிமுறைதான் தொடர்கிறது. திரைப்படக் கல்லூரியில் படித்த மாணவர்களும் கூட நேரடியாக படமெடுக்கும் திறமையின்றி, ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தால் மட்டுமே தங்களுக்கும் படமெடுக்கும் திறமை வளரும் என்று நினைக்கிறார்கள். ஒரு இயக்குனரிடம் வேலை செய்து, சில நுட்பங்களை கற்றுக்கொள்வதில் தவறில்லை, ஆனால் அதன் மூலம் மட்டுமே ஒருவர் திரைப்பட உருவாக்கத்தை தெரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை. ஒரு இயக்குனரிடம் வேலை செய்வதன் வாயிலாக, தமிழ் சினிமாவின் வணிகக் கட்டமைப்பை அப்படியே பேணிக்காக்கும் வேலையைத்தான் அனைவரும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.

தொடர்ச்சியாக தமிழ் சினிமா பேசும் சினிமாவாக மட்டுமே இருப்பதற்கு இதுவும் மிக முக்கிய காரணம். தவிர, மக்கள் வாழ்க்கை முறையும், தமிழ் சினிமாவின் கதாப்பாத்திர வாழ்க்கை முறையும் முற்றிலும் வெவ்வேறாக இருப்பதற்கும் மேற்சொன்ன காரணம் மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் உண்மையாகவே திரைப்பட உருவாக்கம் என்றால் என்ன? ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது? திரையரங்கு தாண்டி, ஒரு திரைப்படத்தை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது, திரைப்படம் என்பது ஒரு முதலீட்டுக் கலைதான், எனவே செய்த முதலீட்டை எவ்வித சமூக சீரழிவும் இல்லாமல் திரும்ப எப்படிப் பெறுவது? தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருக்கும் இந்த வணிக கேந்திரத்தை உடைத்து, எப்படி சிறிய முதலீட்டில் வெளிவரும் படங்களை வெற்றி பெற செய்வது? ஒரு திரைப்படத்திற்கான கருவை, மையத்தை, கருத்தாக்கத்தை எப்படி உருவாக்குவது, அல்லது எப்படி உருவாகிறது என்பதுப் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தமிழ் ஸ்டுடியோவின் படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தில் விடை கிடைக்கும்.

திரைப்படம் மட்டுமல்ல, இலக்கியம், ஓவியம், இசை, நடிப்பு என எந்த ஒரு தனிப் படைப்பை எடுத்துக் கொண்டாலும், அதில் இரண்டு கூறுகள் முக்கியமானவை. அதுதான் ஒரு படைப்பு சிறந்ததா இல்லையா என்பதை நிறுவுகிறது. ஒன்று வடிவம், இன்னொன்று உள்ளடக்கம். சினிமா மட்டுமல்ல, எந்த ஒரு படைப்பிற்கும் முதல் தேவை அதன் வடிவம்தான். வடிவ நேர்த்தி இல்லாமல், எந்த ஒரு படைப்பும் அதன் நுகர்வோரை சென்றடையாது. சினிமா காட்சி வடிவத்தை மையமாகக் கொண்ட கலை. ஒரு கதையை, அல்லது அனுபவத்தை அதிகபட்சம் காட்சிகளைக்கொண்டுதான் அதன் பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டுமே தவிர, வசனங்களை வைத்து அல்ல.

உள்ளடக்கம் என்பது ஒரு படைப்பாளியின் ஆளுமையைப் பொருத்தது. மிக விசாலமான அறிவுள்ள ஒருவராக இருந்தால், அவரது படைப்புகள் தொடர்ச்சியாக பல்வேறு கதைக்களங்களை தொட்டு செல்லும். வாசிப்பு, பயணம், எதையும் உற்றுநோக்குதல், பகுத்தறிவு, பொதுப்புத்திக்கு மாற்றாக சிந்தித்தல் போன்ற பல்வேறு வழிமுறைகள் மூலம் மட்டுமே ஒரு படைப்பாளி தன்னுடைய அறிவை விசாலப்படுத்திக் கொள்ள முடியும். யாராக இருந்தாலும், அவரது சொந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று படங்களை சிறப்பாக கொடுக்க முடியும். அதன் பிறகு அவரது படைப்பாளுமை கேள்விக்குறியாகிவிடும். இங்குதான், வாசிப்பு, பயணம், உற்றுநோக்குதல் போன்ற பல்வேறு படிமங்களும் சேர்ந்து ஒரு படைப்பாளியின் அறிவை, படைப்பாற்றலை கூர் தீட்டுகிறது.

படிமை பயிற்சி இயக்கம் என்பது ஒரு கல்லூரியை ஒத்த வடிவத்தையோ, அல்லது பல்கலைக் கழக பாடத்திட்டங்களை அடிப்படையாக கொண்டோ வடிவமைக்கப்படவில்லை. கீழ்படிதல், ஒழுக்கம், நேர்மை, அறம் போன்ற எதுவும் இங்கே கற்றுக்கொடுக்கப்படுவதில்லை. எதுவும் திணிக்கப்படுவதில்லை, போதிக்கப்படுவதில்லை. கருத்துகளும், அது சார்ந்த அரசியல், வரலாறு போன்றவை பரிமாறிக் கொள்ளப்ப்படும்போது, அதில் இருந்து தான் யார் என்பதை ஒவ்வொரு மாணவரும் உணர்ந்துக்கொள்ளும் வகையில்தான் இந்த இயக்கத்தின் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் படிமையின் பயிற்சி திட்டங்கள் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.

1. இலக்கியம் - ஆறு மாதங்கள்

தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம் என எல்லா தேசங்களின் கலாச்சாரத்தையும், மக்களின் பண்பாட்டு பழக்க வழக்கங்களையும் தெரிந்துக் கொள்ள முதல் ஆறு மாதங்கள் படிமை மாணவர்கள் இலக்கியத்தை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். சிறந்த சிறுகதைகள், நாவல், கவிதைகள், சங்க இலக்கிய போன்றவற்றை தெரிவு செய்ய எழுத்தாளர்களும், சங்க இலக்கியத்தில் தேர்ந்த பேராசிரியர்களும் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள்.

தொடர் வாசிப்பின் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு கதைக்களங்கள் கிடைக்கிறது. காதல் தாண்டி, இந்த உலகத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை, மனித உணர்வுகளை, சமூக அக்கறையை தங்களின் கதைக்களமாக தெரிவு செய்ய தொடர் வாசிப்பு உதவும். இலக்கியங்களை ஆழமாக, அனுபவித்து படிக்கும்போது, முதலில் நாம் நம்மை அடையாளம் தெரிந்துக் கொள்கிறோம். உன்னையே அறிவாய் என்று சாக்ரடிஸ் சொன்னதுபோல், முதலில் நாம் நம்மையும், நம்முடைய சுயத்தையும் அறிவது இன்றியமையாதது. சுயத்தை அறிய வாசிப்பு ஆகசிறந்த வழிமுறை. இந்த பகுதியில் ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகள் குறித்தும் வகுப்புகள் நடைபெறும்.

2. பத்திரிகையில் எழுதுவதற்கான பயிற்சி - மூன்று மாதங்கள்

நூறு கதைகளை படித்தால், நமக்கு நிச்சயம் ஒரு கதை எழுதிப் பார்க்க வேண்டும் என்று தோன்றும். படிக்கத் தெரியாதவர்களும், எழுதத் தெரியாதவர்களும் ஒரு வகையில் மாற்றுத் திறன் வாய்ந்தர்வர்கள்தான். அந்த வகையில் நிச்சயம் நாம் என்ன நினைக்கிறோமோ அதனை நல்ல, தெளிவான மொழிநடையில் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில், மக்களை பரவலாக சென்றடையக் கூடிய பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களில் சமூகப் பிரச்சனைகளை, நல்ல சினிமா சார்ந்த கட்டுரைகளை எழுதுவதற்கான பயிற்சி படிமை மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. பத்திரிகை துறையில் சிறந்து விளங்கக் கூடிய, நேர்மையான சில பத்திரகையாளர்கள் படிமை மாணவர்களுக்கு வகுப்பெடுப்பார்கள். தமிழ் ஸ்டுடியோவின் அனைத்து இதழ்களிலும் தொடர்ந்து எழுதவதன் வாயிலாகவும், படிமை மாணவர்கள் தங்களின் எழுத்துத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும்.

3. களப்பணி - மூன்று மாதங்கள்

கலைஞனாக தன்னை தகவமைத்துக் கொள்ள விரும்பும் யாரும் முதலில் மக்களில் ஒருவனாகவே இருக்க வேண்டும். மக்களோடு ஒருவனாக இருந்துக்கொண்டே, அவர்களின் பொதுப் புத்தி சிந்தனையில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு, ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக தன்னுடைய சிந்தனையை செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். தவிர மக்களில் இருந்து மாறுபட்டு தன்னை உயர்ந்தவனாக சித்தரித்துக் கொள்ளக் கூடாது. மேலும் திரைப்படம் எடுப்பது என்பது வெறுமனே கற்பனை திறனால் மட்டும் சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல. அதற்கு நிறைய அனுபவமும், களத்தில் இறங்கி வேலை செய்யும் பக்குவம் தேவைப்படுகிறது. இதன்படி, படிமை மாணவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து, அந்தப் பகுதி மக்களோடு பழகி, அவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதனை ஒரு விவாதக் களத்திற்குள் கொண்டு வர வேண்டும். இந்தப் பயணத்தில் நிறையப் பணம் எடுத்துக்கொண்டு செல்லக்கூடாது. தங்குமிடம், பயணத்திற்காக பேருந்து, அல்லது ரயிலில் முன்பதிவு செய்துக்கொண்டு போகவேண்டும் போன்ற வசதியான பயணத்தை எதிர்பார்க்கக் கூடாது. ஒரு பரதேஷி போல தன்னை பாவித்துக்கொண்டு பகுதி பகுதியாக வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பேருந்துகளில் ஏறி ஒரு குறிப்பிட்ட கிராமம் அல்லது நகரத்தை அடைந்து, அங்கிருந்து அந்த மக்களின் கலாச்சாரம், மற்றும் பண்பாட்டுக்கூறுகளை அறிந்துக்கொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும்.

இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக போராட்டக் களமாக இருக்கும் சில பகுதிகளுக்கும் சென்று அவர்களோடு தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் பகுதி (டெல்ட்டா மாவட்டங்கள்) மக்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றியிருக்கும் தொழில்நகரங்கள் (தூத்துக்குடி, நெய்வேலி) போன்ற இடங்களுக்கும் இந்த பயணம் நீளும்.

வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள், நினைவு சின்னங்கள் நிறைந்த இடங்கள், தொன்மை வாய்ந்த வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கும் மாணவர்கள் நிச்சயம் பயணம் செய்தே ஆகவேண்டும்.

4. சுற்றுச்சூழல் - இரண்டு மாதங்கள்

மனிதனின் வாழ்வில் மிக முக்கிய பங்காற்றுவது தாவரங்களும், இன்ன பிற உயிரினங்களும். ஆனால் மனிதனுக்கு எப்போதுமே இந்த உலகம் தனக்காக மட்டுமே படைக்கப்பட்டது என்கிற எண்ணம் இருந்துக் கொண்டே இருக்கிறது. சுற்றுச்சூழலின் சமத் தன்மைதான் மனிதன் நிம்மதியாக வாழ்வதற்கு இன்றியமையாத காரணி என்பதை மனிதன் மறந்துவிட்டான். தவிர சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் பற்றியும் மனிதன் அதிகம் கவலைப்படுவதில்லை. கலைஞர்கள் சராசரி மனிதனின் சிந்தனையைத் தாண்டி, எதிர்கால சந்ததிக்கும் சேர்த்தே சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே படிமை மாணவர்களுக்கு சுற்றுசூழல் பற்றிய வகுப்பும் நடத்தப்படவிருக்கிறது. சுற்றுச்சூழல் அறிஞர்கள், கள பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்த பிரிவில் படிமை மாணவர்களுக்கு பாடம் எடுப்பார்கள்.

5. திரைப்பட உருவாக்கப் பயிற்சி - ஆறு மாதங்கள்

திரைப்பட உருவாக்கம் என்பது, ஒரு கதையை எப்படி, என்ன மாதிரியான கோணத்தில் சொல்ல வேண்டும் என்பதைக் குறிக்கிறது. திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் இடத்தில் நடந்த, அல்லது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை சொல்வதே இன்று வரை இயக்குனர்களின் திரைப்பட உருவாக்க அனுபவமாக இருக்கிறது. ஆனால் ஒரு திரைப்படத்தில் எந்த கதைசொல்லும் பகுதி, அல்லது உருவாக்கப் பகுதி மிகக் கடினமாக இருந்தது, அல்லது தான் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட காட்சி எப்படி புதுமையாக இருந்தது, வசனங்களை எப்படி குறைத்து, காட்சிகளை அதிகப்படுத்தினோம் என்பதை யாரும் தங்களின் அனுபவமாக பகிர்வதே இல்லை. காரணம், தமிழ் சினிமா அப்படியான எல்லைகளை தொட்டதே இல்லை.

ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒரு மதிப்பு இருக்கிறது. ஷாட் மற்றும் அதன் கோணங்கள்தான், ஒரு கதையை அதன் மையம் சிதையாமல் பார்வையாளனிடம் கொண்டு சேர்க்கிறது. எனவே ஒவ்வொரு ஷாட் மற்றும் கோணத்தையும் முதலில் இயக்குனர் தன்னுடைய கற்பனை வெளியில் பார்த்திருக்க வேண்டும். முன்னமே இப்படியான காட்சிகள் சிலத் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, ஆனாலும் என்னுடையப் படத்திலும் இந்தக் காட்சி வேண்டும் என்று ஒரு இயக்குனர் நினைத்தால், முந்தையத் திரைப்படங்களில் வெளியான அந்தக் காட்சியில் இருந்து, தன்னுடையக் காட்சியை எப்படி வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

நூற்றுக் கணக்கான திரைப்படங்களை பார்த்து அவற்றைப் பற்றிய தங்களின் கருத்துகளை, ஷாட் மற்றும் கோணங்கள், ஒளியமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்க்ம் விதம் பற்றி மாணவர்கள் எழுத வேண்டும் என்பதுதான் இந்த பகுதியின் சிறப்பு.

6. திரைப்பட தொழில்நுட்பப் பயிற்சி - பத்து மாதங்கள்

திரைப்படம் என்பது பல்வேறு கலைகளின் தொகுப்புதான். நடிப்பு, இசை, இயக்கம், ஓவியம், படத்தொகுப்பு, ஒளியமைப்பு, ஒலியமைப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, தயாரிப்பு நிர்வாகம், சகக் கலைஞர்களை கையாளும் மேம்பாட்டு திறமை, என பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்ப வகுப்பு இந்த பகுதியில் தான் நடைபெறும். கேமராவை எப்படி இயக்குவது, படத்தொகுப்பு செய்வதற்கான வழிமுறைகள், அதற்கான tool செயல்பாடுகள் போன்ற பல தொழில்நுட்ப அம்சங்களும் இதில் அடங்கும். சுருக்கமாக சொன்னால் கருவிகளை எப்படி செயல்படுத்துவது என்பதுதான் இறுதிப் பகுதி.

இதன் பின்னர் மாணவர்கள் சில ஆவணப்படங்களும், குறும்படங்களும் எடுத்து ஒரு சுயாதீன திரைக்கலைஞராக தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும். திரைப்படம் எடுப்பதற்கு தேவையான பணம், செலவு செய்தப் பணத்தை மீண்டும் எப்படி பெறுவது, விருதுகளுக்கு எப்படி அனுப்புவது போன்ற பல்வேறு விசயங்களும் இந்தப் பகுதியில் கற்றுத் தரப்படும்.

 

 

 

 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio