Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
 
 
படிமை வகுப்பு- தமிழ் மகன்
 
- சுரேஷ் சுந்தர் (Batch II)
 

தமிழ் மொழி வரலாறும் ஆய்வும்

3,000 ஆண்டுகளுக்கு முன்னதாக சிந்து நதிக்கரையில் நாகரிகம் தோன்றிய அதே காலகட்டத்தில் தமிழகத்திலும் மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். திருநெல்வேலி அருகில் உள்ள "ஆதிச்சநல்லுர்" என்னும் இடத்திலும் இதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் காணப்பட்ட தெருக்கள், வீடுகள், மற்றும் வீட்டின்அறைகளும், குழந்தைகளுக்காக மண்ணால் செய்த பொம்மைகள் போன்றவை இங்கேயும் அதே ஒழுங்கீனத்தில் இருந்துள்ளது. மேலும் சிந்து சமவெளியில் பேசப்பட் மொழியும் இங்கு பேசப்பட்ட மொழியும் ஒன்றாகவே இருந்துள்ளது. அது தமிழ் மொழி என்று பெரும்பாண்மையினரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது இன்று உள்ள தமிழ்மொழியின் வடிவத்தில் இல்லாமல் 'சித்திரை பாவை' வடிவத்தில் இருந்துள்ளதாக அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

நமது மொழி பற்றிய முழுமையான வரலாறு நம்மிடம் இல்லை. அதைப்பற்றி பெரியளவில் யாரும் ஆய்வும் செய்யவில்லை.1710 -ல் கிறிஸ்துவத்தை பரப்பும் நோக்கில் இத்தாலியிலிருந்து தமிழகம் வந்த வந்த வீரமாமுனிவர்(Constantine Joesph Beschi) தமிழை ஆய்வு செய்தார். அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு ஆகிய மொழிகளிலிருக்கும் ஒற்றுமை கண்டறிந்தார். இவை அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மொழிகள் என்றும் நிறுவினார். இவைகளுக்கு திராவிட மொழிகள் என்று பெயர் வைத்தார். இவர் திருக்குறளை இத்தாலியில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் பல தமிழ் நூல்களையும் எழுதியுள்ளார். அரபிக்கடலை ஒட்டிய பகுதிகள் திராவிட பகுதிகள் என்று சொல்லப்படுகிறது. குஜராத்தில் உள்ள மதுரா. மதுராவை ஆண்டது கண்ணன். கண்ணன் என்றால் கருப்பன். இன்றும் பாகிஸ்தானில் உள்ள பலூஸிஸ்தானில் பேசப்படும் "பிராகுயி" என்ற மொழிக்கும் தமிழுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது.

தமிழகத்தின் பூம்புகார் மற்றும் லேமுரியா கண்டம் போன்ற பகுதிகள் ஆழிப்பேரலையில் மூழ்கிவிட்டது. தொல்காப்பியர் தொல்காப்பியத்தை 3000 ஆண்டுகளுக்கு முன்பு லேமுரியா கண்டத்தில் தான் இயற்றியுள்ளார்.-ஜெயமோகன் தனது "கொற்றவை" என்னும் நாவலில் லேமுரியாவில் வசிக்கும் மக்கள் ஆழிப்பேரலையால் துறத்தப்பட்டு தமிழகத்தின் வெறு பகுதிகளில் குடியேறுவதைப்பற்றி எழுதியிருப்பார்.

தமிழுக்கென்று வரலாற்று குறிப்புகள் கல்வெட்டுகள் மூலமாகவே கிடைக்கிறது. இதுவரையில் 30000 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் 15000 கல்வெட்டுகளே படிக்கப்பட்டுள்ளது. மீதி 15000 கல்வெட்டுகள் படிக்கப்படாமலே உள்ளது.

சோழர்களைப் பற்றிய வரலாறு கூட கரிகாலச் சோழனிலிருந்துதான் கிடைக்கிறது. அதுவும் அவன் கல்லனை கட்டியதிலிருந்து. சிறு வயதில் அவனை கொல்வதற்க்காக சிறையில் அடைத்திருக்கும் போது நெருப்பு வைத்துவிட்டார்கள் அது அவனது காலை மட்டும் எரித்து விட்டதால் அவனுக்கு கரிகாலச்சோழன்(கரிகால பெருவளத்தான்) என்று பெயர் என சொல்லப்படுகிறது.

மகாபலிபுரத்தின் ஏழு கோவில்களில் ஒரு கோவில்தான் உள்ளது. மீதம் ஆறு கோவில்கள் கடலுக்குள் உள்ளது. அதை அகழ்வாராய்ந்தால் அதிலிருந்து நமக்கு தகவல்கள் கிடைக்ககூடும். ஆனால் அதுப்பற்றிய விழிப்புணர்வு நம்மிடமில்லை.

நமது இலக்கியங்களின் வாயிலாக நமக்கு நிறைய தகவல்கள் கிடைக்கிறது என்றாலும் அவை பெரும்பாலும் அதிகம் மிகைப்படுத்தப்பட்டவையாகவே உள்ளது. இப்போது நமக்கு கிடைத்திருக்கும் தமிழ் இலக்கியங்கள் கூட வ.வே.சு. அய்யரின் அரிய முயற்சியின் விளைவுதான். நம்மிடம் எதையும் ஆவணப்படுத்தும் பழக்கமில்லை.

சிறுகதை வரலாறு

தமிழில் அதுவரையிலிருந்த செய்யுள் நடை இலக்கியம் மறைந்து உரைநடை இலக்கியம் அறிமுகமானது ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகுதான். லண்டனில் முதன்முதலில் சிறுகதைக்கு இலக்கணம் வரையறுக்கப்பட்டது. இலக்கணம் என்பது ஒரு கலையின் பிறப்பிற்க்கு பிறகுதான் வகுக்கப்படுகிறது.

19-ம் நூற்றாண்டுகளிலேயே உரைநடைகள் எழுதப்பட்டாலும் 1921-ம் ஆண்டு வ.வே.சு அய்யரால் எழுதப்பட்ட "குலத்தங்கரை அரசமரம்" என்ற கதைதான் தமிழின் முதல் சிறுகதையாகும். வ.வே.சு, அ.மாதவையா,பாரதியார் போன்றோர் இதற்க்கு முன்னதாகவே நிறைய கதைகள் எழுதியுள்ளனர் என்றாலும் குலத்தங்கரை அரசமரம் அதன் கதை உருவாக்கம், நிகழ்வு உருவாக்கம் என சிறுகதைக்குரிய அனைத்து அம்சங்களிலும் பொருந்தியுள்ளது. அந்த காலகட்டத்தில் வ.வே.சு-வும் அ.மாதவையா-வும் குறிப்பிடத்தகுந்தவர்கள். பாரதியார் தாஹுரின் கதைகளை மொழிபெயர்த்ததோடு அவரும் கதைகள் எழுதிவந்தார். இவரது "ஆறில் ஒரு பங்கு" என்ற கதைதான் தமிழின் முதல் சிறுகதை என்ற வாதம் இருந்தது என்றாலும் "குலத்தங்கரை அரசமரம்" தான் முதல் சிறுகதை என்று நிறுவப்பட்டுள்ளது.

1930-களில் "மணிக்கொடி" என்ற சிற்றிதழ் தொடங்கப்பட்டது. தமிழ் சிறுகதை வரலாற்றில் அது பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, கு.ப.ரா, மௌனி போன்றோர் இதில் எழுத வந்தனர்.

அதே காலகட்டத்தில் ஆனந்த விகடனிலும் சிறுகதைகள் வரத்தொடங்கின. இதில் கல்கி, அகிலன், றாலி போன்றோர் எழுதிவந்தனர். 1931-ம் ஆண்டில் ஆனந்த விகடன் தமிழின் முதல் சிறுகதை போட்டியை நடத்தியது. அதில் றாலியின் "ஊமச்சியின் காதல்" என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. ந.பிச்சமூர்த்தியின் "மலரும் மணமும்" என்ற சிறுகதை இரண்டாவது பரிசு பெற்றது.

ந.பிச்சமூர்த்தியின் சிறுகதையில் "ஒரு பெண் தனது முறைமாமனை திருமணம் செய்துக்கொள்ளவிரும்புகிறாள். ஆனால் வேறு ஒருவனுக்கு திருமணம் செய்துவைக்கப்படுகிறாள். அவன் சில நாட்களிலேயே இறந்து விடுகிறான். இவள் விதவையாகிவிடுகிறாள். விதவைப்பெண்ணை அவனது முறைமாமன் எதிர்ப்புகளை தாண்டி மறுமணம் செய்துக்கொள்கிறான்."

றாலியின் கதையும் இதைப்போன்றுதான் "ஒருஊமைப் பெண் தன் முறைமாமனை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறாள், அவனுக்கு இவளை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் இல்லை. சீட்டு குலுக்கிப்போட்டுப்பார்க்கிறான். சம்மதம் என்று வருகிறது. அவளையே திருமணம் செய்துக்கொள்கிறான். இறுதியில் இரண்டு சீட்டிலும் சம்மதம் என்று தன்னை அறியாமலேயே எழுதியிருப்பான்."

ந.பிச்சமுர்த்தியின் கதை விதவை மறுமணம் குறித்து ஒரு முற்போக்கான கருவைக்கொண்டு எழுதப்பட்டிருக்கும். றாலியின் கதை ஒரு "Commercial" தன்மையில் எழுதப்பட்டிருக்கும்.

மணிக்கொடியிலும் ஆனந்தவிகடனிலும் வந்த சிறுகதைகளுக்கிடையே பெரிய வேறுபாடுகள் இருந்தது. ஆ.விகடன் ஒரு வித Commercial தன்மையோடு வெகுஜன கதைகளை வெளியிட்டுவந்தது. மணிக்கொடியின் சிறுகதைகள் Serious தன்மையோடு இருந்தது.

புதுமைப்பித்தன் தனது சிறுகதைகளின் நடை, கரு, உத்தி என்று பல பரிசோதனைகளை செய்து வந்தார். அவரது கதைகள் பெரும்பாலும் முற்ப்போக்கு தன்மையில் இருந்தது. கு,ப.ரா தனது கதைகளில் ஆண்-பெண் உறவை நுட்பமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். ந.பிச்சமூர்த்தி தத்துவார்த்தங்களை தனது கதைகளில் வைத்து எழுதியுள்ளார். இந்த காலகட்டத்தின் முக்கிய எழுத்தாளுமை "மௌனி". இவர் கவிதைப்பாங்கான நடையில் எழுதுபவர். இவர் தன் கதைகளில் குறீயீடுகளை அதிகம் பயன்படுத்தியுள்ளார். இவரது கதைகள் அக உலகை சார்ந்து எழுதப்பட்டிருக்கும் அதனால் இவரை சாதரண வாசகரால் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது.

1940-களில் வந்த தி.ஜானகிராமன், ல.ச.ராமாமிர்தம், ந.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி போன்றோர் தமிழ் சிறுகதைக்கு வளம் சேர்த்த்னர். ல.ச.ரா-வின் எழுத்து நடை இசைப்பாங்கான நடையில் இருக்கும். தி,ஜா தனது உரைநடைமூலம் பல பரிசொதனைகளை செய்திருந்தார். கு.அழகிரிசாமி உணர்ச்சி பூர்வமான கதைகளையும், நிறைய குழந்தைகள் கதைகளையும் எழுதியுள்ளார்.

1950-களில் சுந்தர ராமசாமி, நகுலன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், அசோகமித்ரன், கி.இராஜநாரயணன் போன்றொரின் படையெடுப்பு. சுந்தர ராமசாமியின் எழுத்து மேலைநாட்டு பாணியில் புதியதோர் உரைநடையில் எழுதி வந்தார். நகுலன் உரைநடை முற்றிலும் புதிதாக கற்பனைகதைகள் அதிகமில்லாமல் எழுதியிருப்பார். ஜி.நாகராஜன் தனது கதைகளில் பாலியல் சார்ந்து எழுதியிருப்பார். இவரது கதைகள் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றியதாக இருக்கும். ஜெயகாந்தன் முற்போக்கான கருத்துகளைக்கொண்டு எழுதிவந்தார். இவரது கதைகள் அதிகம் ஆனந்த விகடனில் எழுதப்பட்டதாகும். இவர்களது எழுத்துகளில் அலங்கார வார்த்தைகள் குறைக்கப்பட்டு நேரடியாக கதை சொல்லும் வகையில் எழுதப்பட்டிருக்கும்.

அதன் பிறகு ஒரு தேக்கநிலை. 1970-களில் வந்தார் சுஜாதா. இறுதிவரை எழுதிக் குவித்துக்கொண்டிருந்தார். இவர் அதுவரையிலிருந்த கதைக்களிலிருந்து மாறுப்பட்ட கதைகளை தனது கதைகளில் எடுத்துகையாண்டார். தமிழில் முதன்முதலாக அறிவியல் கதைகள் எழுதியவர் இவரே. பல பரிசோதனைகதைகளை தமிழில் படைத்துள்ளர். அதன் பிறகு வண்ணதாசன், வண்ணநிலவன், பிரபஞ்சன் என்று நிறைய எழுத்தாளர்கள் வந்துக்கொண்டிருந்தனர். அவரவர்களும் அவரவர்களை பொறுத்து தனித்துவத்தோடு எழுது வந்துள்ளனர்.

சமகாலத்தில் சாரு நிவேதிதா, ஜெயமோகன், கோணங்கி, மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தீவிரமாக எழுதி வருகின்றனர். சாரு நிவேதிதாவின் கதைகள் பாலியல் சம்பந்தமாகவும் அதுவரை யாரும் எழுதியிராத பக்கங்களை தொட்டும் எழுதப்பட்டிருக்கும். இவர் கதைகள் பின்-நவீனத்துவ கதைகள் என்று சொல்லப்படுகிறது.ஜெயமோகனின் கதைகள் வரலாற்று அடிப்படையிலும் நாட்டார் மரபிலும் எழுதப்பட்டிருக்கும். கோணங்கியின் கதைகள் தனித்துவமானது. கடினமான உரைநடையுடனும் கவிதைநடையில் எழுதப்பட்டிருக்கும் இவரது கதைகள் வாசிக்க அலாதியானது. இவரது எழுத்தும் பின்-நவீனத்துவ எழுத்து என சொல்லப்படுகிறது. எஸ்.ரா-வின் கதைகள் விரிவான தளத்தில் மிக நுட்பமாக, உவமைகளோடு எழுதப்பட்டிருக்கும்.

இவர்களை தவிர்த்து அழகிய பெரியவன் போன்று தலித் கதைகளையும் பிரச்னைகளையும் எழுதும் எழுத்தாளர்களும் உள்ளனர்....

சுரேஷ் சுந்தர்
படிமை மாணவர்.

 

  

 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio