Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
 
 
படிமை வகுப்பு - செம்மொழி பூங்கா
 
- சுரேஷ் சுந்தர் (Batch II)
 

ஒவ்வொருவராக மழையில் பாதி நனைந்தும் நனையாமலுமாக செம்மொழி பூங்காவில் கூடினோம். மழையின் காரணமாக அதிகம் மக்கள் வரவு இல்லை. எங்கும் தண்ணீர் கட்டியிருந்தது. அதுப்போக மரங்களிலிருந்தும் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. நல்ல இடம்தேடி அலைந்துக்கொண்டிருந்தோம் அங்கங்கே சில காதலர்கள் வருகை. சிமெண்ட் பெஞ்சுகளில் கூட ஈரம். இருளல்லாத ஒளி எங்கும் நிழல் போர்த்தியதுப்போல. மாபெரும் விருச்சங்கள், பச்சை... எங்கும் பச்சை.... நிற நிறமான பூக்கள்....தேங்கிய மழைநீரில் அலைஅலையான பிம்பங்கள்...பச்சைக்கிளிகள் பாடிக்கொண்டிருந்தது....வெறு பிற பறவைகளும்...

சென்னைக்காதலர்களுக்கும், சென்னையின் காதலர்களுக்கும் மனமகிழ் பிரதேசமிது. எப்போதும் நம் மன உற்சாகத்துக்கு நம்மை சுற்றிய சூழலும் ஒரு காரணம். இந்த சூழல் நிகழ்த்திக்கொண்டிருந்தது ஒரு அதி அற்புதம்! அண்ணா சாலை வாகனங்களின் இரைச்சல் கூட ஒடுங்கியே கேட்டது. இந்த கணம் இங்கு நிகழ்ந்துக்கொண்டிருந்தது கடந்துக்கொண்டல்ல....

நேற்று பெரியார் திடலில் பார்த்த அடூரின் "நாலு பெண்கள்" திரைப்படம் பற்றிய பேச்சு மெல்ல எல்லோர் மத்தியிலும் மேலெழுந்தது. நான்கு விதமான பெண்கள், விபச்சாரி, கன்னிப்பெண், வீட்டோடு மனைவி, முதிர்கன்னி.

விபச்சாரி (Prastitute)
ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்துக்கொண்ட அன்றாடக்கூலியையும் விபச்சாரியையும் நீதிமன்றம் "நீங்க கனவன் மனைவிதான் என்பதற்க்கு என்ன சாட்சி?" என்று கேட்டு சிறைத்தண்டனை விதிக்கிறது. இது என்ன அநியாயம்?

கன்னிப்பெண் (Virgin)
திண்பதையும் சம்பாதிப்பதையும் தவிர வேறு எதுவும் அறியாத ஆணல்லாத ஜந்து-விற்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட இளங்கன்னி. அவளை பிறந்த வீட்டிலே கொண்டு வந்து விட்டுவிடுகிறான். வருடங்கள் கடந்தப்பிறகு விவாகரத்து வாங்க அவளின் அப்பாவும் அண்ணனும் முடிவு செய்கிறார்கள், "எனக்கு எப்போது திருமணம் நிகழ்ந்தது விவாகரத்து வாங்க?" என்று கேட்டுவிட்டு இதுவரை எப்படி வாழ்ந்தாலோ அதுப்போலவே மீண்டும் வாழத்தொடங்கிவிடுகிறால்.

வீட்டோடு மனைவி (House wife)
அந்த வீட்டோட மனைவிக்கு ஆறு பிரசவமும் குறை பிரசவம். கணவனிடம் குறை மருத்துவம் சொல்லிவிட்டது. ராஜப்பாளையம் ஜமினுக்கு குழ்ந்தை வரம் இல்லை அவரது இறப்பிற்க்கு பிறகு சமஸ்தானம் அரசாங்கம் கைக்கு போய்விடும். வீட்டின் குதிரைக்காரனை அழைத்தால் ஜமீன் வீட்டுக்காரி. எண்ணெய் குளித்து வாசனை திரவியங்கள் பூசி வரச்செய்து ஒரு அறையில் தள்ளி தாழிட்டுக்கொண்டால். சரியாக பத்து மாதங்கள் கழித்து ஆண் வாரிசு பிறந்தது. இந்த கதையை அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தான் அவளின் பால்ய சிநேகிதன். அன்றைய இரவு தன் கணவனுடன் தாம்பத்யம் கொண்டால். ஆளில்லாத வீட்டுக்கு அடுத்த நாள் பகலில் சிநேகிதன் வந்தான் மறுத்து அனுப்பிவிட்டால். உன் நன்மைக்குதான் என்றும் சொல்லிப்பார்த்தான். அவளுக்கு கடைசி வரையில் குழந்தைப்பிறக்கவில்லை.

முதிர்கன்னி (spinster)
காமட்சியின் வீட்டு கதவை அர்த்த ராத்திரியில் ஒரு கை தட்டுகிறது. காமாச்சியை பெண் பார்க்க வந்தவன் அவளைவிட செழுமையான அவளது தங்கையை கட்டிக்கொண்டு போய்விடுகிறான். காமட்சிக்கு திருமணம் முடித்துவிட்டுதான் எனக்கு கல்யணம் என்று சொன்ன அண்ணனுக்கும் மிகச்சிறிய தங்கைக்கும் கூட திருமணம் முடிந்துவிடுகிறது. அம்மாவும் இறந்துவிடுகிறால் அவள் மட்டும் உதிரியாக இருக்கிறால், தங்கையின் மூன்றாவது பிரசவத்திற்க்கு உதவியாக அவள் வீட்டுக்கு செல்கிறாள். தங்கையின் கணவன் அவள் மீது பரிதாபப்படுகிறான். தங்கையால் துரத்தப்பட்டு யாருமற்ற அவளது பழைய வீட்டிற்கே வருகிறாள். தங்கையின் கணவன் கதவை தட்டுகிறான். துளியும் மனம் பிறழாமல் அவனை திருப்பி அனுப்பிவிடுகிறாள்.

திரைப்பட ஆய்வாளர் சிவக்குமார் பேசிய போது, அடூரின் படங்களில் "எலிப்பத்தாயம்" தான் சிறந்தப்படம் என்றார். அடூரின் படங்கள் என்றதும் மனதில் ஒரு சோடைதன் துவக்கத்தில் இருந்தது. எப்போது படம் முடியும் என்ற நினைப்பாகவே இருந்தது. படம் துவங்கிய சில நொடிகளிலே இந்த எண்ணங்கள் முற்றிலும் இல்லாமல் போய் படத்தோடு ஒன்றிவிட்டது மனது. படம் நம்மை இழுத்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். நான்கு குறும்பட்ங்களை ஒட்டியதுப்போல் இருந்தது நான்கு கதைகளும். நான்கும் "தகழி"யின் கதைகள். பெரும்பாலும் அடூரின் படங்கள் நாவல்களிலிருந்தும், சிறுகதைகளிலிருந்துமே எடுக்கப்பட்டிருக்கும். இந்தப்படத்தில் சாகசக்காட்சிகளோ அல்லது நெஞ்சை பிழியும் சோக காட்சிகளோ இல்லை. ஆனாலும் மெல்லிய சோகம் எல்லாக்கதைகளிலும் இழையோடுகிறது. மிகைப்படுத்தப்படாத சோகம். பின்னனி இசை என்பது அறிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. காட்சி எங்கு தொடங்குகிறது எதோடு முடிகிறது என்று தெரியாதப்படியான படத்தொகுப்பு. காட்சிகளில் கேமிராவின் கோணங்கள் அதிகம் மாறுவதில்லை நகர்வதுமில்லை. Freeze செய்யப்பட்டதுப்போன்ற Frame-கள். அது அவ்வப்போது நகர்வுக்கு உள்ளாகிறது என்றாலும் அது நமக்கு தெரிவதில்லை. அது தான் அவரது ஆளுமை என்று கூட சொல்லலாம். பெரும்பாலன காட்சிகள் குறியீடுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. கதையில் காலம் மிக வேகமாக இயங்குகிறது. இரண்டாவது கதையில் அந்தப்பெண் கணவன் வீட்டிலிருந்து வந்தப்போது நெற் பயிருக்கு களை எடுப்பாள், கதை முடியும் போது அது அறுவடை செய்யப்படும். நான்காவது கதையில் படகு, ஓடை, வீடு எல்லாம் காட்சி படிமங்கள்.

மதியவேளை சாப்பாடு வரை நேற்றைய படம்பற்றிய விவாதங்கள் இருந்தது. அவரவர் பார்வையில் படத்தை விவாதித்தோம். கோயம்புத்துர் பக்கங்களில் குதிரைக்காரர்களுக்கு பெண்கள் எளிதில் மயங்கி விடுவார்கள் என்று ஒரு பேச்சு வழக்கு இருக்கிறதாம். அதிகமான பெண் நண்பர்கள் வைத்திருக்கும் நபரை "அவன் குதுரைக்காரண்டா.." என்று கேலி பேசுவார்களாம். ராஜப்பாளயம் ஜமின் கதையை அடிப்படையாக கொண்டே ஒரு மலையாளப் படம் உள்ளதாம். சாப்பிடும் போது இரண்டாவது கதையில் வருபவன் சாப்பிடுவதுப்போன்று சாப்பிட்டு பார்த்தோம்...அந்தக்காட்சிக்கூட நேர்த்தியான கோணங்களில் படமாக்கப்பட்டிருக்கும்.

மதியத்திற்க்கு பிறகு கூட்டம் வரத்தொடங்கியிருந்தது என்றாலும் மற்ற நாட்களை விட குறைவான கூட்டம்தான் அது. காமிராவை எடுத்துக்கொண்டு படங்கள்பிடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தோம். அவ்வப்போது பெய்த மழையில் நனைந்துக்கொண்டும் மரக்கிளைகளில் தேங்கியிருந்த மழைநீரை ஒருவர் மீது ஒருவர் இரைத்து விளையாடிக்கொண்டும் திரிந்தோம். பிறகு கேண்டீனில் டீ, காபி, சுண்டல், சமோசா என்றெல்லாம் சப்பிட்டுவிட்டு அடுத்த அமர்வை தொடங்கினோம்.

சென்ற வார வகுப்பில் ஜெயமோகனின் "அறம்" சிறுகதை தொகுப்பு வாசித்து வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி எல்லோரும் தாங்கள் படித்த கதைகளை விவாதிக்கத்தொடங்கினோம். அறம், யானை டாக்டர், சோற்றுக்கணக்கு ஆகிய கதைகள் எல்லோருக்கும் பிடித்ததாக இருந்தது. கதை நிகழ்வின் காலம், கதாபாத்திரங்கள், சம்பவங்கள், இடையிடையான தத்துவார்த்தங்கள், உரைநடை, கதையின் நீளம் பற்றி அவரவர்களுக்கான பார்வையும் வாசிப்புணர்வும் பொதுவான தளத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. படித்தவற்றை எல்லோருடனும் சேர்ந்து விவாதிக்கும் போது நாம் கவனிக்க மறந்த விஷயங்களும் அதிலிருந்து புதிய சிந்தனைகளும் தோன்றிக்கொண்டிருந்தது. இருள் ஒவ்வொரு இடுக்குகளிலும் நிரம்பத்தொடங்கியிருந்தது, காற்று விஷக்காற்றைப்போல் தேகத்தை சில்லிடச்செய்தது. மின் விளக்குகள் சிறிய வெளிச்சத்தை உமிழ்ந்துக்கொண்டிருந்தது. எல்லோரும் கலைந்து வீடுசெல்லத்துவங்கியிருந்தனர் இந்தப்பகல் அதற்குள் ஓய்ந்திருக்ககூடாது என்று தோன்றியது. இந்த மழை நாளில் வீட்டின் அறைக்குள் இருக்கிப்போர்த்திக்கொண்டு T.V.யின் Chennel-ஐ மாற்றி மாற்றி Remote button-ஐ தேய்க்காமல் இத்தனை உற்சாகத்தோடு ஒரு நாளை அர்த்தமிகுந்ததாய் வாழ முடிந்தது. இந்த இலக்கிய வாசிப்பு தானே நம்மையெல்லாம் இங்கு கொண்டுவந்து சேர்த்து என்றார் ஒரு நண்பர் உண்மைதான். கலையை கொண்டாடும் மனதுதான் இந்த உலகில் கொண்டாட்டம் நிரம்பிய வாழ்வையும் பேரானந்தத்தையும் அனுபவிக்கிறது...

  

 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio