Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
 
 
திரைப்பட சிந்தனை மரபு...
 
- தமிழ் ஸ்டுடியோ அருண்
 

 

படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்திற்காக இதுவரை சில நூறு மாணவர்களையாவது நேர்காணல் செய்திருப்பேன். சினிமாவை இவர்கள் புரிந்து வைத்திருக்கும் விதம் சில நேரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ஒரு தொடர்ச்சியான சிந்தனை மரபு இல்லாமல் போனதே இதற்கான காரணமாகவும் இருக்க கூடும் என்றே எனக்கு தோன்றுகிறது. பெரியார்தான் கடைசியாக ஒரு திண்ணமான சிந்தனை மரபை தமிழர்களிடத்தில் விதைத்தவர். பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்ததுமே, சிந்தனை மரபு அப்படியே பேச்சாற்றலை வளர்க்கும் திசை நோக்கி போய்விட்டது. பெரியாருக்கு பிறகு வேறு ஒருவரிடம், ஒரு தீர்க்கமான, சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்ட, சிந்தனை மரபு தோன்றவே இல்லை.

தமிழ்நாடு முழுக்கவே சிந்தனை வறட்சிதான் காணப்படுகிறது. ஒருபக்கம் பொருளாதாரத்தை தேடி, வாழ்க்கை பயணத்தை அடகுவைக்கும் நடுத்தர வர்க்கம், இன்னொருபக்கம் வாழ்க்கை பற்றிய எவ்வித புரிதலும் இல்லாத, மேற்கத்திய வாழ்கை முறையை தவறாக அணுகி வீணாய்ப்போன பணக்கார வர்க்கம், எப்போதும் அடிப்படை தேவைகளுக்கே அல்லாடும் ஏழை மக்கள், தன்னுடைய குடிமக்களை பற்றி ஒருபோதும் கவலைக்கொள்ளாமல் அமெரிக்கா போன்ற கார்ப்பரேட் நாடுகளுக்கு கைக்கூலியாக செயல்படும் அதிகார வர்க்கம், இன்னொரு பக்கம் போலியான அறத்தை போதிக்கும் ஊடகங்கள், கலை அமைப்புகள், இதர உதிரிக் கட்சிகள், அமைப்புகள் மட்டுமே இந்த நாட்டில் நிலைக்கொண்டுள்ளது. அதையும் தாண்டி, பொருளாதாரத்தின் பின்னே அலையும் நடுத்தர வர்க்கத்தின் பொதுபுத்தி, யாரையும் எதற்காகவும் பகைத்துக் கொள்ளக்கூடாது, எல்லாவற்றையும் நேர்மறை எண்ணத்துடன்தான் பார்க்கவேண்டும் என்கிற முட்டாள்தனம், நாம் சந்தோசமாக இருந்தால் போதும் என்கிற அறியாமை, மேட்டுக்குடிகளின் ஆதிக்கப் பண்பு இதெல்லாம் உறுதியான சிந்தனை மரபு தோன்றாமல் மிக எச்சரிக்கையாக பார்த்துக்கொள்கிறது.

எதிர்மறை சிந்தனை என்பதற்கும், விமர்சன நோக்கு என்பதற்குமே இங்கே வேறுபாடு தெரியாமல், எதையாவது, யாரையாவது விமர்சித்தால், உடனே எல்லாவற்றையும் ஏன் எதிர்மறை சிந்தனையோடு பார்க்கிறீர்கள் என்று கேட்கும் நடுத்தர வர்க்க பொதுபுத்தி சிந்தனைதான் மிக ஆபத்தானது. விமர்சனப் பார்வை என்பது வேறு. எதிர்மறை சிந்தனை என்பது வேறு. எல்லாவற்றிலும் விமர்சனப் பார்வை இருந்தால் மட்டுமே, ஒரு சமூகம் அடுத்தக் கட்டம் மாற்றத்தை நோக்கி நகரும். எல்லாவற்றையும் புனிதமாக மட்டுமே பார்த்தால், அந்த சமூகம் எவ்வித பரிணாம வளர்ச்சியும் இல்லாமல், நோஞ்சானாக இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

திராவிட இயக்கம் நியாயமாக ஒரு உறுதியான சிந்தனை மரபை இங்கே தோற்றுவித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில், ஆட்சி அதிகாரத்தை நோக்கி பயணிக்கும் யாராலும், அப்படியான உறுதியான சித்தாந்தங்களுடன் கூடிய ஒரு சிந்தனை மரபை ஒருபோதும் தோற்றுவிக்க முடியாது. காந்தியில் தொடங்கி, பெரியார் வரை ஆட்சி அதிகாரத்திற்கு செல்லாமல், சமூக மாற்றத்தை நோக்கி செயல்பட்ட செயல்பாட்டாளர்கள்தான் அப்படியான உறுதியான சிந்தனை மரபை இங்கே தோற்றுவித்திருக்கிறார்கள். திராவிட இயக்கம், நடிகர்களின் பிரபல்யத்தை வைத்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எத்தனித்த காரணத்தால், மிக உறுதியான, சித்தாந்தங்களுடன் கூடிய சிந்தனை மரபாக உருவாக்கி இருக்க வேண்டிய சினிமாவையும், மிக மோசமாக சீரழித்தார்கள். சினிமா ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிப்பவர்களின் கைப்பொருளாக மாறியது சிந்தனை வறட்சியின் இன்னொரு முக்கிய காரணம்.

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் கம்யூனிச கட்சிகளால் உருவாக்கப்பட்ட சிந்தனை மரபு, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சிகளுக்குள் ஏற்பட்ட மோதல், நடிகர்களின் நாட்டையாள வேண்டும் என்கிற கனவு இதெல்லாம் திராவிட இயக்கத்திடமிருந்து உருவாகியிருக்க வேண்டிய நியாயமான சிந்தனை மரபை மழுங்கடித்துவிட்டது. இப்போதும் திராவிடக் கட்சி ஆளுமைகளின் (அதிமுக நீங்கலாக) பேச்சை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். அண்ணாவின் மூலம் வளர்க்கப்பட்ட இந்த பேச்சுக்கலை உறுதியான சிந்தனை மரபைக்கொண்டே உருவாகியிருக்க வேண்டும். ஆனால் சுவாரசியம் என்கிற ஒற்றை நோக்கில் அதற்கடுத்து வந்தவர்கள் பேசத் தொடங்கியதும், எதிரில் இருக்கும் சினிமா பிரபலங்களை தோற்கடிக்க வேறுவழியில்லாமல் தொடர்ச்சியாக மக்களை தங்கள் பக்கம் இருத்தி வைக்கவும், இவர்களின் இந்த பேச்சாற்றல் பயன்பட்டிருக்கிறது. இங்கே இருக்கும் கொஞ்சம் நெஞ்சம் சிந்தனை கூட, திமுகவின் ஊருக்கு ஊர் நூலகம் என்கிற அடிப்படையில் வளர்ந்திருக்கிறது. வாசிப்பு பழக்கமும் அறவே இல்லாமல் போயிருந்தால், முழுக்க முழுக்க முட்டாள்கள் மட்டுமே இந்த பிரதேசத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள்.

தமிழ்நாட்டில் கலை என்கிற அம்சமே மிக மோசமான புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறது. சினிமா எடுக்க எவ்வித தகுதியும் தேவையில்லை என்பதும், ஒரு திரைப்படம் எடுக்க என்ன மாதிரியான கூறுகள் தேவை என்பதும் இங்கே வரையறை செய்யப்பட்டிருக்கும் விதம் சினிமா என்கிற மொழிக்கே விடப்பட்ட சவாலாகவே இருக்கிறது. கேளிக்கை, சுவாரசியம், நகைச்சுவை, காதல், காமம், குத்துப்பாட்டு, சண்டை போன்ற எந்த கூறுகளும் இல்லாமல் இங்கே ஒரு சினிமா உருவாகும் என்பதெல்லாம் கனவாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்றும் ஒரு திரைப்படம் எடுக்கப்படும் இடத்தில் இருக்கும் உதவி இயக்குனர்கள் எத்தனை பேருக்கு சினிமா எடுப்பதற்கு தொழில்நுட்பத்தை தாண்டி, சினிமா உருவாகும் இடத்தில் நடக்கும் சம்பவங்களை தாண்டி, உள்ளடக்கம், உருவாக்கம் போன்ற வஸ்துகள் தெரிந்திருக்கும். எவ்வித தேடலும் இல்லாமல், சினிமா என்கிற வியாபாரம் கொடுக்கும் புகழ், பணம், சமூக அந்தஸ்து போன்றவற்றை நம்பி இங்கே படையெடுத்து வந்து, யாராவது ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து, சினிமா எடுக்கப்படும் களத்தில் நடக்கும் நிகழ்வுகளை கவனித்தால் போதும், நாமும் சினிமா எடுத்து விடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உறுதியான சிந்தனை மரபு இல்லாத ஒரு சந்ததியிடமிருந்து எப்படி உருப்படியான கலை தோன்றும்.

இப்படியான இளைஞர்கள் யாரிடமும், தெளிவான ஒரு சித்தாந்தத்துடன் கூடிய சிந்தனை மரபு கொஞ்சம் கூட இல்லவே இல்லை. இவர்கள் ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் வணிக கட்டமைப்பை நம்பி இங்கே வந்து, ஏமாந்துப் போகிறார்கள். பேரரசு என்று ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார். இவரிடம் என்னவிதமான சினிமா மொழி இருந்தது. என்ன விதமான ஆளுமை இருந்தது. ஏதோ ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்து, சினிமா எடுக்கப்படுவதை மட்டுமே கவனித்து, தமிழ் சினிமா கோரும் அதே பாணியிலான, வன்முறை, ஆபாசம் போன்ற வஸ்துகளை நம்பித்தானே இங்கே இன்னமும் பலரும் படமெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் இருந்து கொஞ்சம் அரசியலும், கொஞ்சம் தொழில்நுட்பமும், தெரிந்துவிட்டால் போதுமே, அவர்களுக்கும் சினிமாவின் வடிவம் பற்றி பெரிய அக்கறையெல்லாம் தேவைப்படாது. இப்படி, கொஞ்சம் அரசியலும், கொஞ்சம் தொழில்நுட்பமும் தெரிந்து வைத்திருப்பவர்கள் தமிழ் சினிமாவை பொறுத்தவரை புண்ணிய ஆத்மாக்கள். கமலும், மணிரத்னமும் இந்த வகையறாக்கள்தான். இவர்கள் யாருமே தெளிவான, செறிவான ஒரு சிந்தனை மரபின் அடிப்படையில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பதை அவர்களின் தொடர்ச்சியை வைத்தே நாம் மதிப்பிட்டுக் கொள்ளலாம். கமல் தனக்கடுத்து, மணிரத்தனம் தனக்கடுத்து யாரை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு உண்மையாகவே ஒரு செறிவான சிந்தனை மரபு இருந்திருந்தால், இவர்களுக்கு அடுத்து, இவர்களை பின்தொடர்ந்து இன்னொரு சந்ததி வளர்ந்திருக்கும்.

தமிழ்நாட்டைப் போல கிட்டத்தட்ட எல்லாக் கலைகளும் சீரழிக்கப்பட்ட ஒரு தேசம் வேறெங்கும் இல்லை. அதில் உச்சத்தில் இருப்பது சினிமா. சினிமா கீழானவர்களின் கலை என்று மேட்டுக்குடிகள் ஒதுக்கி வைத்தது உண்மைதான் என்று நிரூபிப்பது போலவே, இவர்களும் அதனை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமா இப்படி தரம் கெட்டு திரிவதற்கு மேட்டுக்குடிகள்தான் காரணம், தங்களை போல் கலையை வேறு யாரும் உள்வாங்கிக் கொள்ளக் கூடாது என்று திட்டமிட்டு அவர்கள் உருவாக்கிய சதி வலைக்குள் தமிழ் சினிமா சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. இது வெகுஜன ஊடகம், வெகுஜன மக்களுக்குத்தான், இங்கே ரசனைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று சொல்வதை, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இந்த சமூகம் காதுக் கொடுத்துக் கேட்டுக்கொண்டே அதை செயல்படுத்தியும் கொண்டிருக்கிறது. இன்னாருக்குத்தான் ரசனை வேண்டும் என்பதை யார் தீர்மானிப்பது, யார் இன்னாருக்குத்தான் ரசனை இருக்க வேண்டும் என்று வரையறுப்பது, மேட்டுக்குடிகள் ஆரம்பத்தில் செய்த வேலையைத்தானே இன்று வழி, வழியாக செய்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே மேட்டுக்குடிகளைத்தான் இன்னமும் இவர்கள் சினிமாவின் ஆதர்ஷமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெகுஜன மக்களுக்காகவும் படமெடுப்பார்கள், கலைக்காகவும் படமெடுப்பார்கள் என்று, இங்கே சித்தரிக்கபட்டிருப்பவர்கள் யார், பாலச்சந்தர், கமல், மணிரத்தனம். பிறகு எப்படி வர்ணாஸ்ரமம் பற்றி பேசாமல் இருக்க முடியும்.

கலை சார்ந்த ரசனை வளர்ந்துவிட்டால், அந்த சமூகம் மேம்பட்டம் சமூகமே மாறிவிட்டது என்றுதான் அர்த்தம். இந்த ரசனை கீழ்மட்டத்தில் வளர்ந்துவிடக் கூடாது என்று களப்பணி செய்த மேட்டுக்குடிகளுக்கு எவ்விதத்திலும் சளைக்காமல், தமிழ் சினிமா ரசிகர்களும், இன்னபிறக் கலைஞர்களும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ரசனை எல்லாம் தேவை இல்லை, இது வெறும் பொழுதுபோக்கு ஊடகம், இது மக்களை சந்தோசப்படுத்தி, அவர்களின் துயரத்தை களையும் இடம் என்று பேசிக்கொண்டிருப்பது கலைக்கு செய்யும் துரோகம். எந்த கலையாவது மக்களை அச்சபடுத்தவோ, துயர் கொள்ளவோ செய்ததாக வரலாறு உண்டா? கலை என்கிற வடிவமே, மக்களை செழுமைப்படுத்தவும், அவர்களின் வாழ்வியலை மேம்படுத்தவும்தான். ஆனால் அதை தடுத்து, கீழ்மட்டத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் கலை மூலம் மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கும் மேட்டுக்குடி மக்களுக்கும், அரசு எதிரத்திற்கும் தமிழ் சினிமா சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது.

எதுவும் இங்கே நிலையானது அல்ல, தமிழ் சினிமா உருவாக்கி வைத்திருக்கும் இந்த வணிக கட்டமைப்பும், கலை சீரழிவும் சீக்கிரம் மறைந்தே போகும். தான் உருவாக்கி வைத்திருக்கும் அதே கட்டமைப்பிற்குள் சிக்கி, சின்னாபின்னமாகி தமிழ் சினிமா விரைவில் உண்மையான கலைஞர்களிடத்தில் வந்து சேரும். அந்த புள்ளியில் இருந்தே இங்கே சமூக மாற்றம் சாத்தியமாகும். ஆனால் அதற்கு நிச்சயமாக, உறுதியான, சித்தாந்தங்களுடன் கூடிய ஒரு சிந்தனை மரபு தேவை. அந்த சிந்தனை மரபை நிச்சயம் சொற்ப அமைப்புகள்தான் செய்ய முடியும். குறைந்தபட்சம், படிமையில் இருக்கும் மானவர்களிடமாவது அத்தகைய சிந்தனை மரபை உருவாக்க வேண்டும் என்பதே என் கனவு. சாத்திய்ப்படுதலும், சாத்தியமற்றுப்போவதும் இனிதான் தெரியும். 

 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio