Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
 
 
தமிழ் ஸ்டுடியோவின்

படிமை திரைப்பட பயிற்சி இயக்கம் - தொடக்க விழா
 
- சா.ரு. மணிவில்லன்
 

தமிழ் ஸ்டியோவின் படிமை திரைப்பட இயக்க நிகழ்ச்சியின் துவக்க விழா சென்னை கோடம்பாக்கம் அலுவலகத்தில் 28.11.10 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். படிமை பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மாணவர்கள் மட்டுமல்லாமல் நிறைய குறும்பட இயக்குனர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் ஸ்டுடியோ அருண்

படிமை என்னுடைய கனவு திட்டம். இதில் பலவிதமான பயிற்சிகள் கொடுக்கப்படும். முதலில் இலக்கிய வாசிப்பை அதிகப்படுத்தும் விதமாக பயிற்சி இருக்கும். பிறகு களப்பணி செயல்பாடுகள் இருக்கும். இந்த பயிற்சியை முடித்து வெளிவரும்போது நல்ல குறும்படத்தை எடுக்கும் திறமையை பயிற்சி பெற்றவர் பெற்றிருப்பார்.

இந்நிகழ்ச்சியை துவஙகி வைக்க வந்திருக்கும் எழுத்தாளர் தமிழின் மிக முக்கியமான ஆளுமை. நான் அவரிடம் வேண்டிக் கொள்வது. படிமை நிகழ்ச்சியை சிறப்பாக முன்னெடுத்து செல்ல ஆலோசனைகள் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

எஸ். ராமகிருஷ்ணன்

அருணை எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரியும். இணைய தளம் தொடங்கும் சமயத்திலேயே அதுபற்றி என்னிடம் கலந்து பேசினார். பல முறை என்னை நிகழ்ச்சிக்கு அழைத்தார். நான் கலந்து கொள்ளவில்லை. அவரின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவருக்கு இத்துறையின் மீதுள்ள ஈடுபாடு மிகவும் தீவிரமானது. தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே உள்ளார்.

திரைப்படங்கள் குறித்தும், இலக்கியம் பற்றியும், குறும்படம், ஆவணப் படங்கள் பற்றியும் பள்ளிகள், கல்லூரிகளில் தொடர்ந்து பேசி வருகிறேன். பல மாணவர்களை சந்தித்து வருகிறேன். அந்த வகையில் இன்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஒவ்வொருவரிடமிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்வேன். இன்று உங்களிடமிருந்தும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்வேன்.

எதுக்கு இலக்கியம் படிக்க வேண்டும், யாரும் சும்மா ஒரு காரியத்தை செய்ய விரும்பவில்லை. இலக்கியம் படிப்பதன் பயன்தான் என்ன. கண்ணாடியில் பார்த்து புறத்தை சரி செய்துக் கொள்கிறோம். புத்தகம் கண்ணாடி போன்றதுதான். புத்தகம் வாசிப்பதன் மூலம் நம் உள்ளத்தை சரி செய்து கொள்ள முடியும். ஒரு கதையை படிக்கும்போது அந்த கதாபாத்திரத்தோடு நம்மை பொருத்தி பார்த்து கொள்கிறோம். மற்றொரு வாழ்வைப் பற்றி தெரிந்து கொள்கிறோம்.

எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஐந்து பேர். ஐந்து விதமான சிந்தனை. ஐந்து விதமான சிந்தனை. ஐந்து விதமான ரசனை. ஒருவரின் ரசனை மற்றவருக்கு தெரியாது. குடும்பம் நம் கனவுகளுக்கு உதவாது. மிக அபூர்வமாக சில குடும்பங்கள் உதவும். என் எழுத்து பத்திரிகையில் வரும்வரை என் தம்பிக்கு நான் எழுத்தாளனாக விரும்பினேன் என்பது தெரியாது. என் தம்பி விளையாட்டில் பதக்கம் வாங்கும் வரை அவனுக்கு விளையாட்டில் சாதிக்கும் எண்ணமிருந்தது எனக்கு தெரியாது.

நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்காமலேயே பல விசயங்களை கற்றுக்கொள்கிறோம். இயற்கை கம்மைவிட மேம்பட்டது. அறிவை மேம்படுத்திக் கொள்ள புத்தகம் அவசியம். புத்தகம் நம் கைகளில் பாரமாக கணப்பதில்லை. புத்தகம்தான் நம் மனதை திறக்கிறது.

உலகத்தின் இயக்கங்களை பார்க்க பார்க்க நம்மை நாம் மறக்கிறோம். பிறரின் துயரங்களை பார்த்து பார்த்து நம் துயரம் நமக்கு பெரியதாக தெரிவதில்லை. உலகத்தில் ஒரு விசயத்தை முதன் முதலாக பார்ப்பது குழந்தைக்குத்தான் சாத்தியம். நாம் பல விசயங்களை குழந்தையை போல்தான் உள்ளோம்.

எனக்கென்று ஒரு எண்ணம், எனக்கென்று ஒரு ரசனை, அபிப்ராயம் உள்ளது. ஒத்த கருத்துள்ளவர்களை நண்பர்களாகவும், எதிர் கருத்துள்ளவர்களை எதிரியாகவும் புரிந்து கொள்கிறேன். நமக்கு தெரியாத விசயங்களை எனக்கு பிடிக்காது என சொல்லிவிடுகிறோம். ஒருவனுக்கு இசைப் பற்றிய அறிவே இல்லாத நிலையில் எனக்கு இசை பிடிக்காது என சொல்வது முரணானது. நமக்கு தெரியாத விசயங்கள் புவியில் கோடான கோடி உள்ளது.

என்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள விரும்புகிறேன். எதையும் தொடர்ந்து பயிற்சியுடன் முயற்சி செய்தால் சாதிக்க முடியும். எல்லா விசயங்களுக்கும் அடிப்படை விருப்பம்தான்.

வாசிக்க தொடங்கும்போது சின்ன படைப்புகளை முதலில் வாசிக்க வேண்டும். ஆனால் மனம் குழந்தை போல் பெரிய விசயங்களுக்குத்தான் ஆசைப்படும்.

இமயமலை சிகரத்தின் உச்சியில் நின்று உலகை பார்க்கும் போது எனக்கு பெருமையாகத்தான் இருந்தது. என் ஊரில் எவ்வளவோ பேர் பிறந்து இறந்து இருக்கிறார்கள். ஆனால் நான் மட்டும்தான் இங்கு வந்து இருக்கிறேன் என்று நினைத்தேன். ஊரைவிட்டு விலக ஊரின் மீதான பிடிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒரு காலத்தில் நிறைய பயணங்கள் செய்து கொண்டே இருந்தேன். ஒரு முறை வடமாநிலத்தில் இரயில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அதிக நேரம் உட்கார்ந்து இருந்ததினால் கால் வலித்தது. கால் வலியை போக்கிக்கொள்ள எழுந்போது என் இடத்தில் ஒரு பஞ்சாபி பெரியவரை அழைத்து உட்கார வைத்தேன். அவர் மகன் ஏன் என்று கேட்டார். விவரத்தை சொன்னேன். அவர் என்னைப் பற்றி விசாரித்தார். எங்களுக்குள் ஒரு நல்ல நட்பு உருவானது. அவர் வீட்டு முகவரியை என்னிடம் கொடுத்து வாய்ப்பு கிடைக்கும்போது வாங்க என சொன்னார். அவர் வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு சீக்கிரமே அமைந்தது. அதாவது அவர் பயணம் முடிந்து வீடு வந்து சேரும் முன்பே நான் அவர் வீட்டுக்கு சென்றுவிட்டேன்.

அவர் வீட்டிலிருந்த யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. எனக்கும் இந்தி தெரியாது. இருந்து என் தேவைகளை அவர்கள் சரியாக கவனித்தார்கள். இந்தியாவில் எங்கு சென்றாலும் மக்களிடம் பழக மொழி ஒரு பிரச்சினையாக இல்லை. ஒருவரின் தேவையை மற்றொருவரால் புரிந்து கொள்ள முடிகிறது. 3 நாட்களுக்கு பிறகு நண்பர் வந்தார். அவர் குடும்பம் எந்த வித்தியாசமும் இன்றி என்னை அன்போடு கவனித்தது. அவர்களிடமிருந்து விடைபெறும்போது அவர் தந்தை தன் பிள்ளைகள் வெளியூர் செல்லும்போது அவர்களின் நலனுக்காக செய்யும் மதசடங்கை எனக்காகவும் செய்தார். சில நாட்களே பழகிய ஒரு மனிதனை அவரால் தன் மகனாகவே பாவிக்க முடிந்திருக்கிறது.

திரைப்படங்கள் குறித்தும், இலக்கியம் பற்றியும், குறும்படம், ஆவணப் படங்கள் பற்றியும் பள்ளிக

ஒரு முறை காசியில் டீ குடித்தோம். எங்களுக்கு கொடுத்த டீயில் சக்கரை போட மறந்துவிட்டார். ஆனால் நாங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பணம் கொடுக்கும்போது ஒரு ரூபாயை திருப்பி கொடுத்தார். சக்கரை போடவில்லை என்பதற்காக காசு வேண்டாம் என்பது சாதாரண விசயமல்ல. அவரிடம் ஓர் வியாபார அறம் இருந்தது. இன்று பல கோடிகளில் வியாபாரம் செய்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று. மனிதர்களின் மேல் மனம் எவ்வளவு சீரழிந்து போயிருந்தாலும் அவர்களின் அடிப்படையான மனம் இன்னும் கறைபடவில்லை. எல்லாவற்றிலும் ஓர் அடிப்படை அறம் தேவையாகும்.

ஒரு முறை நம்மூரில் ஒரு ஆட்டோகாரரிடம் சவாரி முடிந்த பிறகு 100 ரூபாயை கொடுத்து உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள், 100 ரூபாய்-யை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறினேன். அவர் தயக்கம் காட்டினார். நீங்களாக பார்த்துக் கொடுங்கள் என்றார். நான் என் நிலைப்பாட்டில் மாறவில்லை. அவர் நீண்ட மனப் போராட்டத்திற்கு பின் இருபது ரூபாயை எடுத்துக் கொண்டு மீதியை திருப்பி கொடுத்தார். சாதாரணமாக இவ்வளவு தூரத்தை பயணிக்க ஐம்பது ரூபாய்க்கு வர முடியாது எனச் சொல்ல கூடியவர்தான். அவருக்குள் ஒரு குற்ற உணர்ச்சி உள்ளது. அவரைப் போல் நம் எல்லோருக்குள்ளும் ஒரு குற்ற உணர்ச்சி உள்ளது.

புத்தகம் பல விசயங்களை கற்றுக் கொடுக்கிறது. பல விசயங்களை நாம் மறந்து விடுவோம். காலம் மறைத்து விடும் காலம் மறைந்ததை கலை உயிர்ப்பிக்கும்.

எழுத்தாளனின் கற்பனை வாசகனின் கற்பனையில்தான் நிறைவு பெறுகிறது. வாசகனிடமும் எழுத்து திறமை உண்டு. நீங்கள் படித்த விசயங்களை நண்பர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள். எதுவுமே உடனே புரிந்து விடாது. இயற்கையில் ஒன்றுபோல் மற்றொன்று இல்லை.

வாசிப்பதே ஒரு வகை கலை. ஒரு படைப்பை ஐம்புலன்களாலும் வாசிக்க வேண்டும். கதையில் சொற்கள் வழி காட்சி உருவாக்கப் படுகிறது. திரைப்படத்தில் காட்சியை காண்பித்த பிறகு சொற்கள் மனதுக்குள் ஏற்படுகின்றன.

நீங்கள் எதை வாசித்தாலும் அதை பற்றிய உங்கள் எண்ணங்களை குறிப்புகளாக எழுதி வைக்க வேண்டும். அந்த குறிப்புகள் உங்களுக்கு பிற்காலத்தில் உதவும்.

வரலாற்றை காட்சிப்படுத்த கற்பனை வேண்டும். கற்பனை வளர வாசிப்பு வேண்டும்.

கற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால் உங்கள் வீட்டு சமையல் அறையிலிருந்தே கற்றுக் கொள்ள முடியும். மிளகு அதன் சிறப்பம்சம் என்ன? அதனால் நடைபெற்ற போர்கள் எத்தனை, மஞ்சள், சீரகம் இப்படி சமையலுக்கு தேவைப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் தன்னுள் ஒரு பெரிய வரலாற்றை மறைத்து கொண்டுள்ளது. புனைவுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஒரு சின்ன கோடுதான் உள்ளது.

ஒரு பிச்சைக்காரன் அவனை யாரும் மதிப்பதில்லை. பிச்சை போடுவதில்லை. அவன் ஒரு சாமியாரை போய் பார்த்தான். அந்த சாமியார் பிச்சைகாரனுக்கு ‘நல்லாருங்க’ என்ற வார்த்தை கற்றுக் கொடுத்தார். பிச்சைக்காரன் பழைய இடத்துக்கே வந்து உட்கார்ந்துக் கொண்டு நாள் முழுவதும் ‘நல்லாருங்க’ ‘நல்லாருங்க’ என சொல்லிக் கொண்டிருந்தான். முதலில் அவனை யாரும் கவனிக்கவில்லை. பிறகு ஒருத்தன் பிச்சைக்காரன் இருக்கும் வழியாக போனால் அவன் நல்லாருங்க என சொல்லுவான் போன காரியம் நன்றாக இருக்கும் என சொன்னான். அவனை தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் அந்த வழியாக போக ஆரம்பித்தனர். அவன் தேவைகளை பார்த்துக் கொண்டார். பிச்சைக்காரனின் செய்தியை அறிந்த மன்னனும் அந்த வழியாக வந்தார். மன்னனை பார்த்ததும் பிச்சைக்காரன நல்லாருங்க என சொன்னான். மன்னன் வியந்து போனான்.

பல நாட்களுக்கு பிறகு பிச்சைக்காரன் மறுபடியும் அந்த சாமியாரை போய் பார்த்தான். நடந்தவைகளை கூறினான். அந்த சாமியார் ‘நான் ஒன்னுமில்லை உலகத்த பாரேன்’’ என்ற வார்த்தைகளை சொல்லிக் கொடுத்தார். பிச்சைக்காரன் தன் இடத்தில் இருந்துக் கொண்டு இந்த வார்த்தைகளை நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தான். எல்லோருக்கும் ஆச்சரியம். மன்னனும் மறுபடியும் வந்தான். இவன் சொல்லும் வார்த்தைகளை கேட்டு இவன் ஞானியாகவே மாறிவிட்டானே எப்படி என விசாரித்தான். பிச்சைக்காரன் சொன்னான் ‘நான் நம்பினேன்’’

நம்பிக்கைதான் முக்கியம் சில வார்த்தை ஒரு பிச்சைக்காரனை ஞானியாக மாற்றுமெனில் நம்மால் ஏன் முடியாது. என்னால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். அதை பெற நிறைய படியுங்கள். எல்லா தொடர் முயற்சிகளும் ஒரு நாள் வெற்றியடைவது உறுதியாகும்.

சனரஞ்சகமான எழுத்து வேறு அதன் தேவைகள் வேறு, இலக்கிய கண்ணுக்கு தெரியாத விசயங்களையும் பதிவு செய்கிறது. சனரஞ்சகமான எழுத்தின் ஆயுள்குறைவு. இலக்கியம் நீடித்து நிற்கக் கூடியது. இலக்கியம் என்பது ஒருவகை வரலாற்று ஆவணமாகும்.

ஒரு அனுபவத்தை நாம் புரிந்து கொள்ள பல ஆண்டுகளாகும். நான் சிறுவனாக இருந்தபோது என் அப்பா என் கையை பிடித்து என்னை வழி நடத்தி செல்வது எனக்கு பிடிக்கவில்லை. இன்று என் மகனை அவன் பாதுகாப்பு கருதி நான் அவன் கையை பிடித்தால் அவனுக்கு பிடிக்கவில்லை. என் அப்பாவின் உணர்வுகளை அன்று என்னால் உணர முடியவிலலை. இன்று தான் உணர முடிகிறது. எனக்கு இதனை உணர இவ்வளவு காலம் தேவைப்படுகிறது. சாதாரண மனிதன் மீது அக்கறை கொள்வது இலக்கியமாகும்.

ஒரு சிறு கதை அல்லது நாவலை படமாக்கும்போது அதன் எல்லா கதாபாத்திரங்களும் அப்படியே படத்தில் வர வேண்டும் என்பது அவசியமில்லை. இயக்குனரின் விரும்பம் போல் கதை மாந்தர்களை விலக்கி விடலாம் அல்லது புதிய கதாபாத்திரங்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கதையின் மையத்திலிருந்து விலகி சென்று விடக் கூடாது. கதையை படமாக மாற்றும்போது அதன் மைய சிந்தனைதான் முக்கியமானதாகும்.

கோணங்கியின் கதைகளை புரிந்து கொள்வது சிரமம்தான் உலக அளவில் கூட இவரைப் போல் யாரும் எழுதவில்லல. மற்ற எழுத்தாளர்களுடைய கதையை சுருக்கி சொல்வது எளிது. ஆனால் கோணங்கின் கதையை சுருக்கி சொன்னாலும் அது மறுபடியும் அதே அளவுக்கு சொல்ல வேண்டியிருக்கும். அவருடைய ஒரு கதையின் தலைப்பு பாதரச ஓநாயின் தனிமை. இதற்கு நேரடியாக என்ன விளக்கம் சொல்லுவீர்கள். பாதரச ஓநாய் என்று ஒன்று கிடையாது. ஆனால் கொஞசம் யோசித்து பாருங்கள் பாதரசம் எப்படி இருக்கும் கையினால் பிடிக்க முடியாது. கவர்ச்சியாக இருக்கும். ஓநாய் மூர்க்கமாக இருக்கும். தனிமை என்பது கவர்ச்சியாகவும். மூர்க்கமாக இருக்கிறது என்பது தான் பாதரச ஓநாயின் தனிமை விளக்கமாக கொள்ளலாம். சில பயிற்சிகளுக்கு பிறகு கோணங்கியின் கதைகளை படித்தால் நன்றாக புரியும். என் தனிப்பட்ட கருத்து இதுபோன்ற எழுத்து தேவையில்லை என்பதுதான். ஆனால் இலக்கியத்தில் இப்படி ஒரு வகை இருக்கத்தான் செய்யும்.

இலக்கியத்தில் பல கதைகளில் மௌனம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு வங்காள கதை ஒரு இராணுவ வீரன். அவன் அலுவலகத்தில் இருக்கும்போது அவன் மாமா அவனை பார்க்க வருகிறார். அவன் அவரை வரவேற்பரை உட்கார சொல்லி விட்டு வேலையில் கவனமாக இருப்பான். எதிர்பாராத விதமாக வேலை நிமித்தம் வேறு வாசல் வழியே வெளியே சென்று விடுவான்.

பல நாட்களுக்கு பிறகு அவன் அன்று மாமா வந்தாரே, நாம் பேச முடியாமல் போய்விட்டதே, என்ன விசயமாக இருக்குமென வீட்டுக்கு தொடர்புகொண்டு விசாரிப்பான். அவனை பார்க்க வந்த அன்று மாலையே தற்கொலை செய்து கொண்டு மாமா இறந்து விட்டார் என்ற தகவல் கிடைக்கும்.

மாமா எதற்காக வந்தார், என்ன சொல்ல நினைத்திருப்பார், ஒரு வேலை நாம் அவரோடு பேசியிருந்தால் தற்கொலை எண்ணங்கள் மாறியிருக்கலாமோ, நான் தான் அவரை கொன்றுவிட்டேனா என அவன் மனம் அல்லாடும். பிறகு வேலையை விட்டு விலகி விடுவான். மாமா எதற்கு வந்தார். என்ன சொல்ல விரும்பினார் என்பது கதையில் பதிவே கிடையாது. அவருடைய மௌனம் கதையில் ஆழமாக உள்ளது. அவர் ஏதாவது பேசியிருந்தால் கதையில் மௌனம் இருந்து இருக்காது.

அதேபோல் தமிழில் பல கதைகள் உள்ளன. புதுமைப்பித்தனின் பால் வண்ணம் என்றொரு சிறுகதை. பால் வண்ணம் பிள்ளைக்கு ஒரு பால்மாடு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு. அவர் வருமானத்தில அது சாத்தியபடாது. ஆனால் அவர் மனைவி தன் சேமிப்பு மூலம் பால்மாடு ஒன்றை வாங்கிவிடுவாள். இதை பால் வண்ணம் பிள்ளையால் ஏற்றுக் கொள்ள முடியாது. குறைந்த விலைக்கு மாட்டை விற்று விடுவார். மனைவி ஏன் இப்படி செஞ்சிங்க என கேட்டபோது, கோபமாக ‘பேசாமாகிட சவவே’ எனச் சொல்லிவிடுவார். ஆணாதிக்க மனதை புதுமைப்பித்தன் இக்கதையில் சிறப்பாக பதிவு செய்திருப்பார். மற்றொரு வகையில் பெண்களின் மௌனம் இக்கதையில் பதிவாகியுள்ளது.

இதைச் சொல்லிக் கொண்டு உள்ள போதே ஜப்பானிய எழுத்தாளர் கவபட்டாவின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது. கணவன் வேலை விசயமாக வெளிநாடு சென்றுள்ளான். மனைவிக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுவான். ஒரு கடிதத்தில் நான் ஊரில் இல்லாத போது செருப்பு போட்டுக் கொண்டு நடக்கிறீர்களாமே இப்படி இருக்கக் கூடாது என எழுதுகிறான். உடனே மனைவி குழந்தைகள் செருப்பை வீட்டில் விட்டுவிட்டு வெறும் காலுடன் நடக்க தொடங்குவார்கள்.

அடுத்த கடிதத்தில் நான் ஊரில் இல்லாதபோது உணவு உண்ண கரண்டியை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என எழுதுவான். இவர்கள் கரண்டியை பயன்படுத்துவதை தவிர்த்து விடுவார்கள்.

அதற்கு அடுத்த கடிதத்தில் நான் ஊரில் இல்லை நீங்கள் பேசி சிரிக்கும் சத்தம் என் செவியை அடைக்கிறது என எழுதுவான். இவர்கள் மௌனமாக இருக்க கற்றுக்கொள்வார்கள்.

இறுதியாக நான் ஊரில் இல்லாத போது ஏன் மூச்சு விடுகிறீர்கள் என எழுதுவான். இவர்கள் தங்கள் மூச்சையும் நிறுத்திவிடுவார்கள்.

இக்கதை இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டது. இக்கதையில் பெண்களின் மௌனம் பதிவு செய்யப்பட்டது.

பெண்களை அடிமைப்படுத்தும் செயல் உலகம் முழுவதும் விரவியுள்ளது என்பதைத்தான் இக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. தமிழ் நாட்டு ஆணைவிட ஜப்பானிய ஆண் கொடூரம் நிரம்பியவனாக காணப்படுகிறான்.

தமிழ் ஸ்டியோ.காம் ஏற்படுத்தி தரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயனடைய வாழ்த்துகிறேன்.

(படிமை துவக்க விழா சிறு கூட்டமாக திட்டமிடப்பட்டு ஆர்வலர்களின் பங்களிப்பால் பெரும் நிகழ்வாக மாறி இருந்தது.)

எழுத்து : சா.ரு. மணிவில்லன்

நிகழ்வு தொடர்பான மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/CQgAAE#


 

 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio