வாயில்     சிறுகதைகள்        கவிதைகள்     அழகிய தமிழே      நாட்டுப்புறக் கலை     நூல்வெளி
 
 
  தமிழ் ஸ்டுடியோ
 
  கட்டுரைகள்
  போட்டிகள்
  தொடர்கள்
  கவிஞர்கள்
  திரைகடலோடி
  குழந்தைகள் பக்கம்
  வட்டார வழக்கு
  பதிவர் உலகம்
  கலைகள்
  கல்லறை மொழிகள்
  சுற்றுலா
  எழுதுங்கள்
  இலக்கிய வலைபூக்கள்
  படித்ததில் பிடித்தது
  செய்திகள்
  மற்றவை
  தொடர்புக்கு
 
   
   
   
   
   
   
   
   
   
 

 

     
11
1
நாட்டுப்புறக் கலை
1
 
1
விளையாட்டுகள்
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
1
1  
 
  நாட்டுப்புறக் கலை
   
 

      சடுகுடு :

இவ்விளையாட்டு பலிஞ்சடுகுடு எனவும், பலீன் சடுகுடு எனவும் வழக்கில் வழங்கப் பெறும். பலிஞ்சப்பளம் என ஆந்திராவிலும், வங்காளத்திலும், குடுடுடூ என மகாராட்டிரத்திலும் அழைக்கப்பட்டு வருகிறது.

பழந்தமிழ்நாட்டில் அரசர்களிடையே நிரைகளைக் கவருபவர் (வெட்சித்திணை) கவரப்பட்ட நிரைகளை மீட்பவர் (கரந்தைத் திணை) என இரு கட்சியினர் இருந்தனர்.
இது தரப்பினருக்குமிடையே அவரவர் நாட்டின் எல்லைக் கோடு அமைந்திருக்கும். நிரை கவர வருபவர்களை வரவிடாமல் வீரர்கள் காவல் காத்து நிற்பர்.

காவலைக் கடந்து நிரையினைக் கவர்ந்து வருதல் வேண்டும். நிரைகளை (மாட்டு மந்தையை) கவர வருபவர் தம்மை வளைத்துப் பிடிக்கும் எதிர்கட்சி வீரரிடம் போரிட்டுத் திரும்ப மீள்வர். மீறிவந்து தம் நாட்டு எல்லையினை அடைந்து விட்டால் எதிர்படையினர் ஒன்றும் செய்ய இயலாது. மாறாக, எல்லைக் கோட்டை அடையும் முன் பிடிபட்டு விட்டால் சிறையிலிடப்படுவார். போர் முடிந்தவுடன் சிறைபட்ட வீரர் மறுபடியும் தம் நாட்டை அடைவர். நிரைகவர அல்லது நிரை மீட்கச் சென்றதால் ஏற்பட்ட போரின் முடிவு வெற்றி அல்லது தோல்வியில் முடிவுறும். போருக்கு செல்வதற்கு முன் தங்கள் பக்கமே வெற்றி கிட்ட வேண்டுமென்று இருதரப்பினருமே காளியை வணங்கினர். இச்சமயம் சடுகுடுப்பை அல்லது குடுகுடுப்பை என்ற பறையால் ஒலியெழுப்பி, பலி கொடுத்து வழிபட்டனர். இப்போர்ச் செயல் பாட்டின் தொடர்ச்சியால் பலிஞ்சடுகுடு என்ற பெயர் கொண்ட விளையாட்டு பழந்தமிழரிடையே உருவானது. இன்றும் தமிழ்நாட்டு கிராமங்களில் விளையாடப்படுகிறது. வரையறுக்கப்பட்ட ஆடுகளத்தில் இருகட்சியினரையும் பிரிக்கும் விதமாய் நடுக்கோடு வரையப்பட்டிருக்கும். விளையாடுகையில் சடு...குடு...குடு என்றோ கிராமத்துப் பாடல்களையோ, வேறு நையாண்டிப் பாடல்களையோ மூச்சை அடக்குவதற்காகப் பாடுவது மரபாக உள்ளது. நடுக் கோட்டிலிருந்து பாடிப் போகிறவரை எதிர்கட்சிக்காரர்கள் பிடித்து விட்டால் அவர் களத்திலிருந்து வெளியேறி விடவேண்டும். பாடிப்போனவர் எதிர்க்கட்சிக்காரரைத் தொட்டு விட்டு பிடிபடாமல் மூச்சடக்கி வந்து நடுக்கோட்டினைத் தொட்டு விட்டால், தொடப்பட்டவர் களத்திலிருந்து வெளியேறிக் கொள்ள வேண்டும். பாடிப்போகிறவர் பாடும் பாடல்களுக்கு எடுத்துக்காட்டுகள் கீழ்வருமாறு:

(1) சடுகுடு மலையிலே ரெண்டாளு
அதிலே ஓராளு குண்டாளு
அக்கா புருஷன் கோமாளி
தங்கச்சி புருஷன் தக்காளி..... தக்காளி

(2) நான்தான் ஒப்பன்டா
நல்லமுத்து பேரண்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரெண்டா
தங்கச் சிலம்பெடுத்து
தாலிக்கட்ட வாரென்டா...வாரென்டா

ஆடவர் விளையாட்டான சடுகுடு சிறுவர்களிடையேயும் இடம் பெறுகிறது. பழந்தமிழர் காலத்திலிருந்து விளையாடப் பெறும் சடுகுடுவின் தொடர்ச்சியாய் தற்போதைய விளையாட்டான கபடி விளங்குகிறது. கபடி விளையாட்டு இப்போது உலகம் முழுவதும் விளையாடப்படுகிறது. விளையாடுகையில் மூச்சினை அடக்குவதற்கு கபடி....கபடி என்ற பொருளற்ற சொல் பாடப்படுவதால் இவ் விளையாட்டு கபடி என்று பெயர் பெற்றது. உலகப் பொதுவான விதிமுறைகள் கொண்டு கபடி விளையாட்டு திகழ்கிறது. இந்திய கபடி அணியில் இடம் பெற்றிருக்கும் தலைச்சிறந்த வீரர்கள் தமிழ்நாட்டைச் சாந்தவர்களாகவே உள்ளனர். இந்திய அணி தற்போது உலகிலேயே முதலிடம் வகிக்கும் சிறந்த அணியாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. தமிழ் நாட்டு கபடி வீரர்களின் பங்கேற்பால் இந்தியணி உலக அளவில் விளையாடி பலமுறை தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

     இளவட்டக்கல் :
இது ஒரு திறன் சோதிக்கும் விளையாட்டாகும். மறவர் இனத்தவர் மணவினை கொள்வதற்கு இவ்விளையாட்டைப் பயன்படுத்துவர். முறைப் பெண்ணினைத் திருமணம் செய்வதற்கும் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்வதற்கும் இத்திறன் சோதிக்கும் விளையாட்டு தேர்வு நிலையாக உள்ளது. ஒரு பெண்ணினைப் பலரும் விரும்புவர். அப்போது பெண்ணின் தந்தை'யார் இளவட்டக் கல்லினைத் துக்கி உயர நிறுத்துகிறாரோ? அவருக்கு என் பெண்ணைத் தருவேன்' என்று அறிவித்து விடுவார்.



விழாக்காலத்தில் ஊருக்குப் பொதுவான இடத்தில் இதற்கான போட்டி நடைபெறும். போட்டியில் கலந்து கொள்பவர் இளவட்டக் கல்லைத் துக்கித் தலைக்கு மேலே பிடித்துக் கீழே போட வேண்டும். இவ்வாறு செய்தவர் வென்றவராகக் கருதப்படுவார். கிராமத்துப் பெரியவர் இதற்குப் பஞ்சாயத்துக்காரராக முன்னிற்பார். இவர் கூறும் நடுநிலைத் தீர்ப்பே இறுதியானதாக இருக்கும். பண்டைக் காலத்திய மக்களுக்குக் கையினால் பெரிய கல்லினைத் துக்குவதும் நகர்த்துவதும் வாழ்க்கையோடு சேர்ந்த தேவையாய் இருந்தது. நாகரிக வளர்ச்சியில் அத்தேவை இல்லாமல் போகவே, அதுவே உடல்திறன் காட்டும் விளையாட்டாக வளர்ந்தது.

மறவர் இனத்தவர் பணம், நகை போன்றவைகளை முதன்மையாக கருதுவது இல்லை. பெண்ணை மணந்து கொள்கின்றவன் உடல்திறன் உடையவராக இருக்க வேண்டுமென்பதையே விரும்புவர். அவ்வடிப்படையில் இன்றளவும் அவர்களிடையே நிலை பெற்றிருக்கிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்திலும் அதன் சுற்றுபுறங்களிலும் இவ்விளையாட்டு நிலவி வருகிறது.

ஓட்டம் :

சிறுவரால் பொழுது போக்க ஆடும் தொடுதல் விளையாட்டின் செய்கையே ஓட்டம் விளையாட்டிலும் இடம் பெற்றாலும், உடல் திறனை தேர்வு செய்வதே ஓட்டம் விளையாட்டின் நோக்கமாக இருக்கிறது. திருமணம் நடந்த ஆண்டில் புதுமணப்பெண் ஆடி மாதத்தில் அவள்தாய் வீட்டிற்கு வருதல் கள்ளர், மறவரிடையே இன்றளவும் வழக்கத்திலுள்ளது. மாதத்தின் இறுதி நாளன்று இப்போட்டி விளையாட்டு நடத்தப்படும்.

அவ்வூரிலேயே திறமையாக ஓடுபவர்களுக்கும் புதுமணமகனுக்கும் இடையில்தான் போட்டி அமைந்திருக்கும்.

புதுமணமகன் முன்னால் நின்று கொள்ள, உள்ளூர்காரர் பின்புறம் நின்று கொள்வார். கூட்டத்தில் பொதுவாக இருப்பவர் ஓடுவதற்குச் சைகை காட்டியவுடன் இருவரும் குறிப்பிட்டத் துரத்தினை ஓடிக் கடந்து வர வேண்டும். பின்னால் வருபவரைத் தொட விடாமல் ஓடிக் கடந்து வந்தால் மணமகன் திறன் உடையவர் என்று கருதப்படுவார். பழங்காலத்திலிருந்தே நிலவி வரும் இவ்விளையாட்டைத் தற்கால ஓட்டப் பந்தத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.

இரட்டை மாட்டுப் பந்தயம்:

இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட சிறு தட்டுவண்டியினை இப்பந்தய விளையாட்டில் பயன்படுத்துவர். குறிப்பிட்ட துரத்தினை இத்தட்டு வண்டியின் மூலம் முதலில் கடந்து திரும்பி வருவது பந்தயத்தின் நோக்கமாக உள்ளது. கிராமிய தேவதைகளின் வழிப்பாட்டு விழாவினை ஒட்டி இவ்விளையாட்டும் நடைபெறும்.

பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு வண்டிக்கும் இரண்டு பேர் இருக்கலாம். ஒருவர் வண்டியினை ஓட்டுபவர். இன்னொருவர் உதவியாளர். ஓட்டுபவருக்கு உதவியாளர் திறமையுள்ளவராக அமைய வேண்டும். ஏனெனில் ஓட்டுபவர் வண்டியில் உட்கார்ந்து கொண்டு காளைகளை விரட்டி ஓட்டிக் கொண்டிருப்பார். உதவியாளர் வண்டியில் ஏறாமல் பின் தொடர்ந்து ஓடி வர வேண்டும். மாட்டின் வேகத்தினை அதிகப்படுத்த ஓட்டுபவர் பல உத்திகளைக் கையாள்வார். கூர் ஆணி வைத்த தார்க்குச்சியினைக் கொண்டு மாட்டின் குதப்பகுதியில் குத்துவார். வலி தாங்காத காளைகளும் வேகமாக ஓடும்.

பந்தயத்தில் கலந்து கொள்ள நினைப்பவர் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், கலந்து கொள்ளும் வண்டிகளின் எண்ணிக்கையில் வரையரையேதுமில்லை. பந்தயத்தில் வெற்றி பெற்றவருக்குக் கிராமத்தலைவர் பரிசுகளை வழங்குவார். குதிரைப் பந்தயத்திற்கு நகரத்தார் எவ்வளவு முதன்மை கொடுக்கின்றனரோ அது போல கிராமத்தார் மாட்டுப் பந்தயத்திற்கு முதன்மை கொடுக்கின்றனர்.

மோடி விளையாட்டு:

உடல்திறனைச் சார்ந்த விழாக்கால விளையாட்டுகளில் மோடி விளையாட்டும் ஒன்று. மதுரை வட்டாரப் பகுதியில் தேவாங்குச் செட்டியார் என்ற வகுப்பினரிடையே இவ்விளையாட்டு வழக்கத் திலுள்ளது. சவுண்டம்மன் வழிப்பாட்டின் போது, பொங்கல் முடிந்த மறுநாள் இவ்விளையாட்டு நடத்தப்படும். பொங்கல் முடிந்த மறுநாள் காலையில் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவர். மாலையில் மோடி விளையாட்டு இடம் பெறும்.

கோவில் பூசாரிகள் மட்டுமே இவ்விளையாட்டில் கலந்து கொள்ள இயலும். இரண்டு பூசாரிகள் எதிரெதிரே நின்று கொள்வர். இவர்களுக்கிடையே தேங்காய், உலக்கை, முட்டை, வாழைப்பழம், ஆட்டுக்கால், வாழைத்தண்டு, கரகம் ஆகிய ஏழு பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு பூசாரி இப்பொருட்களையெல்லாம் எதிர்ப்பூசாரி எடுக்கவியலாதவாறு பாதுகாப்பார். இன்னொரு பூசாரி இப்பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்துவர முயலுவார். பொருள்களை எடுக்கும் பொழுது குட்டிக்கர்ணம் போட்டுக் கொண்டே போக வேண்டும். எடுத்து வரும் போதும் குட்டிக்கர்ணம் போட்டுக் கொண்டே வர வேண்டும்.

பொருட்களைப் பாதுகாக்கும் பூசாரி, பொருளினை எடுக்கும் போது விபூதியினைப் போட்டு விடுவார். எடுக்கும் பூசாரி மேல் விபூதி பட்டுவிட்டால் அவர் இறந்தவர் போல கீழே விழுந்து விட வேண்டும். யாராவது ஒருவர் அவரைத் துக்கி வந்து அவர் இடத்திற்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் அவர் முன்போலத் தொடருவார். இவ்வாறு ஏழு பொருட்களையும் தன்னுடைய பக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால், விளையாட்டு முடிவுற்றதாகக் கருதப்படும். விபூதி பயன்படுத்தப்படுவதால் மோடி விளையாட்டு என்றால் மந்திர விளையாட்டு என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.

                                                                                  
                                     தொடர்ந்து விளையாடுவோம்...

  << முன் பக்கம்  | 1 2 3 4                                                                                                               அடுத்தப் பக்கம் >>

கருத்து பதிவு

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம் |  கருத்துப் பதிவு  

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம்
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers.