தமிழ் ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) குறும்பட ஆவணப்படங்களுக்கான தளம்.
 |
சென்னை எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் ஞாயறு அன்று (23 - 11 - 2008) மாலை ஐந்து மணியளவில் தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்பட ஆவணப்படங்களுக்கான இணையதளம் தொடக்க விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் திரு. ஞான ராஜசேகரன் அவர்கள் இணையதளத்தை தொடங்கி வைத்தார். எடிட்டர் திரு. பி. லெனின் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கணினி எழுத்தாளர் திரு. ஆண்டோ |
பீட்டர் அவர்கள் சிறப்புரை வழங்க கவிஞர். திருமதி வைகை செல்வி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
 |
நிகழ்ச்சியில், இணையதளத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய இயக்குனர் திரு. ஞான ராஜசேகரன் அவர்கள் குறும்படங்கள், திரைப்படங்களுக்கு மாற்று ஊடகமாக அமைய வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தினார். மக்கள் குறும்பட இயக்குனர்கள் இந்த சமூதயாத்தின் சீர்திருத்த வாதிகளாக தங்களை உணர வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய பொறுப்பை அவர்கள் உணர வேண்டும் என்றும் வற்புறுத்தினார். |
மசாலாப் படங்களை அதிகமாக சாடிய இயக்குனர் தான் இயக்கிய 'மோகமுள்' திரைப்படம் வெளியானபோது ஏற்பட்ட சில அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டார். ஒருத் திரைப்படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து அதுபோன்ற பத்துத் திரைப்படங்கள் தயாரிப்பில் இருக்கும் என்றும், இடையில் வேறு ஒரு ட்ரெண்டில் படங்கள் வெற்றி பெற்றால் தயாரிப்பில் இருக்கும் அந்தப் பத்துத் திரைப்படங்களும் தோல்வியை தழுவும் என்பதை நகைச்சுவை தெறிக்க விளக்கினார்.
மேலும், மிகப் பெரிய கதாநாயகர்கள் நடித்த படமாக இருந்தாலும் படம் பிடிக்க வில்லை என்றால் அதனைத் தோல்விப் படமாக்கும் துணிச்சல் தமிழர்களுக்கு மட்டுமே உரியது என்றார். இது போன்ற ரசனைகள் உள்ள தமிழர்களை நம்பியே தான் மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களை எடுப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசுகையில் தான் எடுத்தக் குறும்படமான "ஒரு கண் ஒரு பார்வை" திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்துக் கொண்டார். மேலும், ஒரு அமைச்சருக்கும் அவரது மனைவிக்கும் ஒரு ஆவணப்படத்தை திரையிட்டுக் காட்டிய பொது "இது என்ன நீயூஸ் ரீலா" என்று அவர்கள் கேட்டதிலிருந்து தமிழ்நாட்டில் ஆவணப்படங்கள் மீது இருக்கும் பார்வை புலப்படுவதாகவும் விளக்கினார். இறுதியில் தமிழ் ஸ்டுடியோ இணையதளம் தமிழ்நாட்டில் குறும்பட ஆவணப்படங்களுக்கு ஒரு நல்ல தளம் அமைத்துக் கொடுக்கும் என நம்புதாகவும் அதற்கான உழைப்பு அதில் தெரிவதாகவும் கூறி பலத்த கரகோசங்களுக்கு இடையில் விடைபெற்றார்.
சிறப்புரையாற்றிய கணினி எழுத்தாளர் திரு. மா. ஆண்டோ பீட்டர் அவர்கள் தமிழ் மொழி எப்படி கணினியில் உருவேற்றப்பட்டது என்றும் அதற்கான உழைத்தவர்கள் பற்றியும் பேசினார். தமிழ் எழுத்துருக்கள் பற்றி விளக்கிய ஆண்டோ பீட்டர் அவர்கள் யூனிகோடின் பயன்பாடு பற்றியும் விளக்கினார்கள். மேலும் கணினி தமிழ்சங்கம் பற்றியும், தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகை கொடுப்பதையும் விளக்கினார்கள்.
பின்னர் தமிழ் ஸ்டுடியோ பற்றிப் பேசுகையில் தமிழ் ஸ்டுடியோ இணையதளம் திரையும் சமூகமும் என்று அடைமொழி இட்டுக்கொள்ளலாம் என்றும், அந்த அளவிற்கு திரைப்படங்கள் மூலம் சமூதாய மாற்றத்திகு வழிவகை செய்யும் நோக்கத்துடன் தமிழ் ஸ்டுடியோ செயல்படுவதையும் விளக்கினார்கள். தமிழ் ஸ்டுடியோ சிறக்க மேலும் ஆறு ஆலோசனைகளையும் வழங்கினார்கள். முதலாவதாக குறும்பட ஆவணப்படங்களின் பட்டியல் தயார் செய்யுங்கள் என்றும், நல்ல முறையில் மார்கெடிங் செய்ய வேண்டும் என்றும், திரைப்படங்களுக்கும் ஒரு இணைப்பை உருவாக வேண்டும் என்றும் தனது ஆலோசனைகளை வழங்கினார்கள்.
 |
முன்னதாக வாழ்த்துரை வழங்கிய கவிஞர். திருமதி வைகை செல்வி அவர்கள் "ஒவ்வொரு சொட்டும்" என்கிற தனது ஆவணப்படம் எடுக்கையில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். தொழில்நுட்பம் பற்றி அவ்வளவாக தெரியாமல் எடுத்த அந்த ஆவணப்படம் சரியாக வராமல் போனதாகவும் தற்போது எடிட்டிங்கில் சரி செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். எனவே தன் போன்றோர்க்கு தமிழ் ஸ்டுடியோ மிக அறிய வரப்பிரசாதமாக வந்துள்ளது என்றும் புகழாரம் சூட்டினார். |
இறுதியாக தலைமை உரை ஆற்றிய எடிட்டர் திரு. பி. லெனின் அவர்கள் தான் முதன் முதலாக எடுத்த "நாக் அவுட்" திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு பற்றி கூறினார். நாக் அவுட் எடுத்த லெனின் இனி நாக்ட் அவுட் தான் என்று பலர் தன் காதுபட பேசியதை கூறிய லெனின் இன்று தமிழகம் முழுவதும் குறும்பட ஆவணப்படகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கண்டு பெரிதும் பெருமைப் படுவதாகவும் கூறினார். மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் எடுக்கப்படுவதாக புள்ளி விவரத்தை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மேலும், தமிழ் ஸ்டுடியோவின் ஊர் சுற்றலாம் வாங்க பகுதியை புகழ்ந்த லெனின் அவர்கள் இளைஞர்கள் தங்கள் கனவு நாயகனின் கட் அவுட்டிற்கு பாலாபிசேகம் செய்யும் இந்த காலத்தில் இது ஒரு நல்ல முயற்சி என்றும் பாராட்டினார். மேலும் இது பாலபிசேகம் பீர் அபிசேகம் செய்யும் சீர்கெட்ட கலாச்ச்சராதையும் படம் பிடித்து தமிழ் ஸ்டுடியோ இணையதளத்தில் பதியுமாறு கேட்டுக்கொண்டார்.
 |
மேலும இக்கால இயக்குனர்கள், ஒரு படம் எடுத்து வெற்றி அடைந்ததும் தன்னை மிகப் பெரிய ஞானிகளாக நினைத்துக் கொள்வதாக கூறினார். மேலும் நல்ல படைப்பு வெளிவர தொழில்நுட்ப அறிவு அவசியம் இல்லை என்றும், திரைப்படங்களில் பல கோடிகள் செலவு செய்து பல நாட்கள் செலவிட்டு எடுக்கும் காட்சிகளை குறும்பட இயக்குனர்கள் ஓரிரு மணி நேரத்தில் செலவே இல்லாமல் எடுத்து விடுவதாகவும், |
அந்தக் காட்சிகள் திரைப்படக் காட்சிகளை விட சிறப்பாக வெளிவருவதையும் சுட்டிக்காட்டினார். மேலும் தமிழ் இணையதளத்தில் அனைத்து வகையான செய்திகளையும் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டில் திரைப்பட துறையில் முதலீடு செய்த 630 கோடிகள் நட்டமாய்ப் போனதுப் பற்றியும், அதில் ஒரு சிறு பகுதியை குறும்படத் துறையில் முதலீடு செய்திருந்தால் தமிழ் சமூதாயத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர்கள் முதலீடும் திரும்பி இருக்கும் என்றும் சுவைபடக் கூறினார்.
முன்னதாக தமிழ் ஸ்டுடியோ நிர்வாகி திரு. செ குணசேகரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திரு. அருண் அவர்கள் தமிழ் ஸ்டுடியோவின் செயல்பாடு பற்றியும், எதிர்கால குறிக்கோள்கள் பற்றியும் விளக்கினார். நிகழ்ச்சியை திரு. ராஜசேகரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இவர் குறும்படத்துறையில் முனைவர் படிப்பை படித்து வருகிறார். |