கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  மறக்கப்பட்ட ஆளுமைகள் TS தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் TS திரைப்பட இதழ்கள் TS திரையிடல் திரைப்படச் சங்கங்கள்
 
 
 

 

 

 

 

 
     
     
     
   
 
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில்   
 

தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட சங்கங்கள்

நிழல் 

 

ஆதவன் 30-05-2010

"இந்த வேலையை யாரும் செய்யாததினால் எல்லா வேலைகளையும் என் தலையிலேயே போட்டுக் கொண்டேன்" என்பார் பெரியார். அதுபோலத்தான் சினிமா தத்துவம் போன்றவற்றை யாரும் பூரணமாக கற்றுக் கொடுக்கவில்லை என்பதினால் நாங்கள் இந்த வேலையை செய்கிறோம். நிழல் தொடர்ந்து இந்த வேலையை செய்துக் கொண்டிருக்கும். - "நிழல்" திருநாவுக்கரசு

மாதம் 14000 ருபாய் ஊதியமாகப் பெற்றுக்கொண்டிருந்த ஒரு மனிதன், தனக்கிடப்பட்ட பணி இதுவல்ல என்று நினைத்து அதனை துட்ச்சமாக உதறித்தள்ளிவிட்டு யாருமே கவனிக்காத, எவ்வித இலாபமும் இல்லாத குறும்படத் துறை நோக்கி வந்துள்ளார் திரு. திருநாவுக்கரசு அவர்கள். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இத்துறையில் அதன் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டு வரும் இவர், நிழல் எனும் திரைப்படத்திற்கான ஒரு சிற்றிதழை நடத்திக் கொண்டு வருகிறார்.

குறும்பட அமைப்புகள் பகுதியில் இனி நிழல் அமைப்பின் தொடக்கம், செயல்பாடு, அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

தொடக்கம்:

நிழல் திருநாவுக்கரசு

எண்பதுகளில் மிகச்சிறந்த முறையில் சென்னை திரைப்பட சங்கம் (CFS) இயங்கி வந்தது. அதில் சென்னையில் வாழ்ந்த எழுத்தாளர்கள், நாடகக்காரர்கள், ஓவியர்கள், திரைப்படக்காரர்கள், மற்ற ஊடகத்துறை சார்ந்த பலரும் உறுப்பினர்களாக இருந்தனர். ஒருநாளில் ஒன்றரை மணிநேரம் திரையிடப்படும் படத்திற்கு இரண்டு மணி நேரம் விவாதம் நடைபெறும். சிவக்குமார், நாயுடு, நாகாசுர்ணன், பன்னீர்செல்வம், சக்கரவர்த்தி, பாலுமகேந்திரா, அம்சன்குமார் என பலரும் திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்து கூர்மையாக விவாதிப்பார்கள். சாதாரணமானவர்கள் கூட அங்கு நடந்த விவாதத்தினால் திரைப்பட தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள முடிந்தது. அதெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடந்தது என்பதை இப்போது நினைத்தால் வியப்பாகத் தான் உள்ளது.

நண்பர்களிடையேயான மோதல்களினால் சென்னை திரைப்பட சங்கம் தொண்ணூறுகளில் முடங்கிப் போனது. இது உலக திரைப்பட நூற்றாண்டு சமயத்தில் நிகழ்ந்து, எப்போது தீவிரமாக இயங்க வேண்டுமோ அப்போது சங்கம் முடங்கிப் போனது. அந்த பழைய விவாத மரபை மீட்டெடுக்க வேண்டும். எண்பதுகளில் தொடங்கி நிறைய உலகப் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். என் அளவில் பார்த்த படங்களை ஒப்பீடு செய்து பார்த்தேன்.

வெளிநாட்டில் வாழும் நண்பர்கள் மூலம் மேலும் பல உலகப் படங்களை சேகரித்தேன். அந்த வகையில் லண்டனில் யமுனா ராஜேந்திரன், ஈரான் ராமனுஜம் என பலரும் எனக்கு உதவினார்கள். இங்கு சென்னை கனரா வங்கியில் பணியாற்றிய பாலு என்பவரும் எனக்கு உதவினார். இவ்வாறு என்னிடம் நிறைய உலகப்படங்கள் சேகரமாயின.

1994 ஆண்டு உலக திரைப்பட நூற்றாண்டை முன்னிட்டு அன்று வெளிவந்துக் கொண்டிருந்த சிறுபத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுத்தேன். உலக திரைப்பட நூற்றாண்டை நாமும் கொண்டாட வேண்டும், உலகத் திரைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதை கிராமப்புற மக்களுக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். நீங்கள் எங்களுக்கு ஒரு டிவி- யும், Deck-ம் ஏற்பாடு செய்து கொடுத்தால் உங்கள் ஊருக்கு வந்து திரையிட்டு விளக்கம் சொல்கிறேன் என்பதாக....

தமிழகம் முழுவதிலிருந்தும் பல இலக்கிய அமைப்புகள் என்னை தொடர்பு கொண்டன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை, தேனி, ராஜபாளையம், திருவண்ணாமலை, சேலம், தாராபுரம், பல்லடம், அவினாசி, கம்பம் என சுமார் 400 கிராமங்களில் உலகத் திரைப்படங்களை திரையிட்டு இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் வேறு எந்த அமைப்பும் செய்யாத சாதனையாகும். காஞசிபுரம் இலக்கிய வட்ட நாராயணன் போன்றோர் நிறைய வாய்ப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்தனர். கிராமங்களில் உலகப்படங்களை திரையிடும்போது மக்கள் ஆர்வமாக பார்த்தனர். அவர்களுக்கு திரைத்தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறது. அதை மேலும் வளரவிடாமல் தடுத்தவர்கள் நம் தமிழ் திரைப்பட ஆட்கள்தான். வெறும் வசனங்களை நிரப்பி திரைமொழியை கெடுத்தார்கள்.

உலகப் படங்களை கிராமங்களில் திரையிடுவதற்கு முன்பு அப்படம் பற்றி கதைசுருக்கம் சொல்லுவோம். ஆங்கில துணை தலைப்புகளை அவர்களால் படித்து புரிந்து கொள்ள முடியாது என்பதினால்தான். ஒருமுறை மன்னார்குடிக்கு அருகில் உள்ள சவளக்காரன் கிராமத்தில் களத்துமேட்டில் வைத்து "தி பைசைக்கிள் தீவ்ஸ்" படத்தை திரையிட்டோம். விவசாய வேலைகள் முடிந்து மக்கள் களத்து மேட்டிற்கு படம் பார்க்க வந்திருந்தனர். படம் முடிந்தவுடன் 'என்ன புரிந்துகொண்டீர்கள் என கேட்டேன்'. 'இந்தப் படம் ஸ்டியோவில் எடுக்கப்படவில்லை' என ஒரு இளைஞர் சொன்னார். அவர் சொன்னது உண்மைதான், அந்தப் படம் முழுக்க ரோம் நகரில் தெருக்களிலேயேதான் எடுத்தார்கள். ஒரு கிராமத்து இளைஞன் அவ்வளவு கூர்மையாக கவனித்தது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

கிராம மக்களுக்கு ஐரோப்பிய படங்களைவிட ஜப்பானிய படங்கள்தான் பிடித்திருந்தது. குறிப்பாக அகிரா குரோசோவா-ன் படங்களை ரசித்து பார்த்தனர். ஒருமுறை வேலூருக்கு அருகே ஒரு கிராமத்தில் செவன் சாமுராய் திரையிட்டோம். அப்படத்தை பார்த்த விவசாயி அழுதுவிட்டார். சில காட்சிகளுக்கு விளக்கம் கேட்டார், சொன்னோம். ஆங்கிலேயர் தங்கள் காலத்தில் விவசாயிகளை எவ்வாறு கொடுமைப்படுத்தினார்கள் என தன் அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.

ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் ஒவ்வொரு வகையான அனுபவம். ஒருமுறை திருக்கழுக்குன்றத்திற்கு அருகில் மானாம்பதி கிராமத்தில் படம் திரையிடும்போது ஒரு குடிகாரர் வந்து பிரச்சினை செய்தார். அப்போது அங்கிருந்த பெண்களே அவரை அடித்து விரட்டி விட்டார்கள். பல கிராமங்களில் மறுபடியும் திரையிடல் செய்ய எங்களை அழைத்தார்கள். கிராமமக்கள் தொடர்ந்து உலகப்படங்களை பார்க்க என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் கிராமம்தோறும் திரைப்பட சங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது. கிராம திரைப்பட சங்கங்களை தோற்றுவித்தோம்.

பயிற்சிப் பட்டறை - ஒளிப் பயிற்சி

தமிழ்நாடு முழுக்க சுமார் 6 ஆண்டுகள் திரையிடல் நடைபெற்று வந்த நிலையல், மக்களை ஒன்றிணைக்கவும், சினிமா தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் "நிழல்" பத்திரிகையை தொடங்கினோம். சுமார் 15 ஆண்டுகளாக தொடர்ந்து இன்றும் கிராமங்களில் உலகப்படங்களை திரையிட்டு வருகிறோம்.

செயல்பாடு:

தமிழ்நாட்டில் திரைப்படத்திற்கென தனி இதழ்கள் தொடர்ந்து வெளிவருவதில்லை. ஒன்று, இரண்டு வெளிவந்திருந்தாலும் இதில் அதிக வருமானம் கிடைக்காது என்பதினால் பின்வாங்கிவிட்டன. அந்த களம் வெறுமையாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். அதை நிறைவு செய்யும் விதமாகவும் நிழலை கொண்டு வந்தோம். அதில் தொழிற்நுட்பம் பற்றி எழுதினோம். திரைத்துறையில் பணியாற்றிவர்கள் தமிழில் திரைதொழிற்நுட்பம் சார்ந்தும் ஏதும் எழுதவில்லை. மற்றவர்கள் தெரிந்துக் கொள்ளக் கூடாது என ரகசியமாகவே வைத்திருந்தனர்.

தமிழில் திரைத்தொழிற்நுட்பம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்த சூழலில்தான் கலைசெழியன் எங்களுக்கு அறிமுகமானார். அவர் பம்மல் சம்பந்த முதலியாரின் மகள் வயிற்றுப்பேரன், அவருக்கு அப்போது வயது 78. அவர்தான் நிழல் பத்திரிகையில் காமிரா தொழிற்நுட்பம் சார்ந்து எழுதினார். அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒரு விபத்தில் இறந்துபோனார். திரைத்தொழிற்நுட்பம் சார்ந்து தான் சேகரித்த அறிவை எங்களோடு பகிர்ந்துகொள்ள தயாராக இருந்த சூழலில் அவர் இறந்தபோனது எங்களுக்கு வருத்தமாக இருந்தது.

நிழல் பத்திரிகையில் தொழிற்நுட்பம்பற்றி எழுத வேறு பல தொழிற்நுட்ப கலைஞர்களை தொடர்பு கொண்டபோது யாரும் எழுத முன்வரவில்லை. பிறகுதான் ஸ்டீபன் கார்ஸ்-ன் Shot by Shot என்ற நூலை முறையான அனுமதிபெற்று தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டோம். விரைவில் அம்மொழிபெயர்ப்பு நூலாகவும் வெளிவரும். ஏன் அதிகமும் மொழிபெயர்புகளையே வெளியிடுகிறார்கள், சுயமாக எழுதி வெளியிடக்கூடாதா என பலர் கேட்கின்றனர்.

தமிழில் தொழிற்நுட்பம் சார்ந்து எழுதுவதற்கு ஆள் இல்லை. சுயமாக எழுதுபவர்களிடம் பூரணத்துவம் இல்லை. உலக அளவில் வெளிவரும் திரைத்துறைப் பற்றிய நூல்களில் ஆப்பிரிக்க சினிமா, லத்தீன், அமெரிக்க சினிமா பற்றிய செய்தியே இருக்காது. உலக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. தமிழ் மக்கள் அனைத்து வகையான சினிமாக்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் "மக்களுக்கான சினிமா" என்ற நூலைக் கொண்டுவந்தோம்.

மக்களுக்காக எடுக்கப்பட்ட சினிமாக்கள் பற்றியும், ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்க நாடுகளை சேர்ந்த இயக்குனர்கள் உருவாக்கிய சினிமா கோட்பாடுகள் பற்றியும் இந்நூலில் எழுதியுள்ளோம். இந்த புத்தகம் வெளிவந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இருக்கும் நண்பரை தொடர்பு கொண்டு மக்களுக்கான சினிமாபற்றி ஏதாவது நூல் வந்திருக்கிறதா என விசாரித்தேன். அவர் அட்டனோ மிடியா நூலைப்பற்றி குறிப்பிட்டார். நான் பெருமைக்காக கூறவில்லை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கான சினிமா நூலில் எழுதியவற்றின் சாராம்சமே அட்டனோ மிடியா நூலிலும் இருந்தது. நாம் அறிவில் அவர்களுக்கு குறைந்தவர்களில்லை என்பதை சுட்டிக் காட்டவே இதை குறிப்பிடுகிறேன்.

மக்களுக்கான சினிமா நூலை தொடக்கமாக கொண்டு ஆப்பிரிக்க சினிமா, அரசியல் சினிமா, புலம் பெயர்ந்தோர் சினிமா, ஜான் ஆப்ரகான் - கலகக்காரன், பைசைக்கிள தீவ்ஸ், தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் என சுமார் 13 நூல்கள் வெளிவந்துள்ளது. தமிழில் வெளிவந்திருக்கும் இதுபோன்ற நூல்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் வெளிவரவில்லை.

அறிவாளிகள் நிறைந்ததாக கருதப்படும் கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் கூட இதுபோன்ற நூல்கள் வெளிவரவில்லை. இப்புத்தகங்களுக்கு லத்தீன் அமெரிக்கா புக் ரிவியூ, ஆப்பிரிக்கா புக் ரிவியூ போன்றவைகளில் சிறப்பான விமர்சனம் எழுதியுள்ளார்கள். இதுவரை தமிழில் வேவெந்த நூலுக்கும் இதுபோன்ற விமர்சனம் வந்ததில்லை.

எண்பதுகளில் இருந்து பம்பாய், டில்லி, கோவா, கல்கத்தா, ஹைதராபத், திருவனந்தபுரம், பெங்களூர் என பல இடங்களில் நடக்கும் உலக திரைப்பட விழாக்களுக்கு சென்று வருகிறேன். அங்கு திரையிடப்படும் குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கு இந்திய அரசு பல விருதுகளை வழங்குகிற. இதை பெரும்பாலும் வட இந்தியர்களே பெறுகிறார்கள். குறிப்பாக பூனே திரைப்பட கல்லூரியை சார்ந்தவர்களே நிறைய பேர் கலந்துக் கொள்கின்றனர்.

2001 ஆம் ஆண்டில் இதுவரை தமிழில் வெளிவந்திருந்த குறும்படங்களில் இருந்து 41 குறும்படங்களை தேர்வு செய்து லண்டனுக்கு அனுப்பி வைத்தேன். லண்டனில் இருக்கும் என்னுடைய நணப்ர் யமுனா ராஜேந்திரன் அந்தப் படங்களை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரையிட்டார். பலத்த வரவேற்பை பெற்றது.

அதே குறும்படங்களை பாரீஸ¨க்கும் அனுப்பி வைத்தேன். (பாரீஸில் வசிக்கும் நண்பர் அசோக்) பாரீஸ் நண்பர்கள் வட்டம் மூலமாக அங்கு திரையிடப்பட்டது. நுழைவு கட்டணமாக சேகரித்த ரூ. 60,000 பணத்தை எனக்கு அனுப்பி வைத்தார்கள். சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் ஒரு விழா எடுத்து ஆறு குறும்பட இயக்குனர்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதுபோல் சுமார் ரூ. 3,00,000 பணம் குறும்பட இயககுனர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக குறும்படங்கள் சார்ந்து இயங்க தொடங்கினேன். இதனால் மாதம் ரூ. 14,000 வருமானம் வரும் வேலையை விட்டுவிட்டேன். இன்றைய மாத வருமானம் 0 தான். குறும்படங்கள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறேன்.

குறும்படங்கள், ஆவணப்படங்கள் வரலாற்றை எழுத எண்ணி கல்கத்தாவில் வசகிக்கும் என் நண்பரிடம் இதுபற்றி நூல் ஏதாவது வெளிவந்திருக்கின்றனவா என விசாரித்தேன். அவர் சுமார் ஆறுமாத காலம் தேடியலைந்து பார்த்துவிட்டு, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நூல் வெளிவந்திருக்கவில்லை எனக் கூறினார். எவ்வளவு பெரிய துறை அதுப்பற்றி ஒரு நூல் இல்லை என்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

பயிற்சிப் பட்டறை - கேமராப் பயிற்சி

அத்துறைகள் பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் நூல்களை வாசித்தேன். திரைப்பட சங்கம், உலக திரைப்பட விழாக்களில் நான் பார்த்த குறும்படங்கள், ஆவணப்படங்கள் குறித்து அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை சேகரித்து "சொல்லப்படாத சினிமா" நூலை கொண்டு வந்தேன். அந்நூல் சுமார் 400 பக்க அளவில் இதுவரை மக்களுக்கு சொல்லப்படாத, மக்கள் அறியாத சினிமாப்பற்றி பேசியது.

கோவையில் இருக்கும் புசாக்க கல்லூரியில் வைத்து சொல்லப்படாத சினிமா நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை கொண்டு வந்து பிறகு பல நண்பர்கள் என்னிடம் நீங்கள் ஏன் குறும்பட பயிற்சி பட்டறை நடத்தக் கூடாது எனக் கேட்டனர். அதற்கான உதவிகளை நீங்கள் செய்து தருவதாக இருந்தால் நடத்தலாம் எனக் கூறினேன்.

பல நண்பர்களின் உதவியால் 2003-ம் ஆண்டு அவிநாசிக்கு அருகில் காசிப்பாளையம் என்ற கிராமத்தில் சுமார் 63 நண்பர்கள் கலந்துகொண்ட முதல் குறும்பட பயிற்சிப் பட்டறை ஒருநாள் நடைபெற்றது. நான் குறும்படங்கள், ஆவணப்படங்களின் வரலாற்றை சொல்லிக் கொடுத்தேன். அருண்மொழி, கேமிரா தொழிற்நுட்பம் பற்றி வகுப்பு எடுத்தார். பிறகு அப்போது வெளிவந்திருந்த ஆவணப்படம், குறும்படங்கள் திரையிடப்பட்டன. ஒருநாளில் அவ்வளவுதான் செய்ய முடிந்தது.

இரண்டாவது குறும்பட பயிற்சி பட்டறை கோவைக்கு அருகில் கணுவாய் கிராமத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 197 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். பயிற்சி மூன்று நாளாக கூடியது. அடுத்து உடுமலையில் நடந்த குறும்பட பயிற்சி பட்டறைகளில் மேலும் நாட்கள் கூடி இப்போது ஏழு நாட்களாக உள்ளது. தமிழகத்தின் 30 மாவட்டங்களில் சுமார் 20 மாவட்டங்களில் இப்பயிற்சி பட்டறைகள் நடந்துள்ளன.

கல்லூரியில் மூன்று வருடங்களில் சொல்லித்தரும் பாடங்களை நாங்கள் 7 நாட்களில் சொல்லித் தருகிறோம். ஒவ்வொரு நாளும் சுமார் 12 மணிநேரம் வகுப்பு எடுக்கிறோம். தொடர்ந்து 12 மணிநேரம் பாடத்தை கவனிப்பதற்கு வசதியாக உளவியல் சார்ந்து பாடங்களை தயாரித்துள்ளோம்.

முதல் நாளில் ஆவணப்படம், குறும்படங்களின் வரலாற்றை சொல்லித் தருகிறோம். அதன் கோட்பாடுகளையும் புரிய வைக்கிறோம். அதுசார்ந்த படங்களை மதிய உணவுக்கு பிறகு திரையிடுகிறோம்.

இரண்டாவது நாளில் அனைவருக்கும் நடிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற தம்பி சோழன் தான் நடிப்புப் பற்றி வகுப்பு எடுக்கிறார்.

மூன்றாவது நாளில் லைட்டிங் பற்றியும், போட்டோகிராபி பற்றியும் லிங்க செழியன் வகுப்பு எடுக்கிறார். இவருடைய வகுப்பு 14, 15 மணிநேரம் கூட தொடந்து நடைபெறும்.

நான்காவது நாளில் ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் காமிரா தொழிற்நுட்பம் பற்றி வகுப்பு எடுக்கிறார்.

ஐந்தாவது நாளில் திரைக்கதை அமைப்பது பற்றி பாலு மணிவண்ணன் வகுப்பு எடுக்கிறார்.

ஆறாவது நாளில் மாணவர்களை பல குழுக்களாக பிரித்து குறும்பட எடுக்கச் சொல்கிறோம். பயிற்சி பட்டறை நடக்கும் பகுதிகளையே படிப்பிடிப்பு தளமாகவும், மாணவர்களே நடிகர்களாகவும் வைத்து குறும்படத்தை இயக்க வேண்டும். காலை 6 மணிக்கு கேமிராவை தருவோம். மதியம் 2 மணியுடன் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். எட்டு மணி நேரத்தில் 70 நிமிடங்கள் படம் எடுக்க வேண்டும். அதை படத்தொகுப்பு செய்து 10 நிமிட குறும்படம் உருவாக்கப்படும்.

மதிய உணவுக்குப் பிறகு மாணவர்கள் எடுத்த படங்களை படத்தொகுப்பு பற்றிய வகுப்பு எடுக்கப்படும். படத்தொகுப்பு ஏன் செய்ய வேண்டும். எத்தனை வகையான படத்தொகுப்பு உள்ளது என்று படத்தொகுப்பு பற்றி பல விசயங்களை சொல்லித் தருகிறோம். இறுதியாக ஒரு குறும்படத்தை எடுத்துக் கொண்டு Final Cut Editing-ல் எப்படி படத்தொகுப்பு செய்வது என்பதனையும் சொல்லித் தருகிறோம்.

FCE-ன் Out லிருந்து இணைப்பு எடுத்து LCD Projection இணைப்பு கொடுத்து LCD திரையில் சுமார் 100 பேர் ஒரே சமயத்தில் பார்க்கும்படியாக படத்தொகுப்பு செய்து காண்பிக்கிறோம். இது என்னுடைய கண்டுபிடிப்பு. இந்தியாவில் இதுபோல் எந்த திரைப்பட பள்ளியிலும் சொல்லிக் கொடுப்பதில்லை.

உலகளவில் திரைப்பட கல்லூரிகளில் என்ன கற்றுக் கொடுக்கிறார்களோ அவை அனைத்தும் எங்கள் பயிற்சி பட்டறையில் கற்றுத் தருகிறோம். திரைப்பட கல்லூரி மாணவர்களோடு சமமாக திரைப்படக்கலை பற்றி விவாதிக்கும் அளவுக்கு எங்கள் பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு உளவியல் சார்ந்து பாடங்களை கற்றுக் கொடுக்கிறோம்.

இந்தியாவில் பல திரைப்பட கல்லூரிகளில் நிறைய பணம் பெற்றுக் கொண்டு மூன்று வருடங்களில் சொல்லிக் கொடுப்பதை நாங்கள் குறைந்த அளவில் ஏழு நாட்களிலேயே சொல்லிக் கொடுக்கிறோம். பயிற்சி பட்டறைக்கு வரும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம். எங்கள் பயிற்சி பட்டறைக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்துகூட மாணவர்கள் வந்துள்ளனர்.

அஞ்சாதே படத்தின் Soft Editor-ஆக பணிபுரிந்த அவன் துரைராஜ் எங்கள் பட்டறையில் பயிற்சி பெற்றவரே. "புகைப்படம்" படத்தில் எட்டு பேர் எங்கள் மாணவர்கள் பணிபுரிந்துள்ளனர். "மாலை நேரத்து மயக்கம்" என்ற படத்திலும் எங்கள் மாணவர்கள் பணிபுரிவதாக கேள்விப்பட்டேன். திண்டுக்கல் சாரதி படத்தில் ஒரு மாணவர் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இதுவரை 20 குறும்பட பயிற்சி பட்டறை நடந்துள்ளது. தோராயமாக, 2,000 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். சுமார் 2,00,000 மக்களிடம் உலகப் படங்களை கொண்டு சேர்த்திருக்கிறோம்.

எதிர்காலத் திட்டங்கள்:

தமிழக பண்பாட்டு விசயங்களையும், சமூகத்தினால் விலக்கப்பட்ட விசயங்களையும், அறிவுசார் செய்திகளையும் ஆவணப்படங்களாக எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களில் எதிர்கால திட்டமாக உள்ளது. எங்கள் பயிற்சி பட்டறை மாணவர்கள் பலர் திரைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர். அவர்களை ஒன்றிணைத்து கூட்டுறவு முறையில் நல்ல திரைப்படங்களை எடுக்கவும் விருப்பம் உள்ளது.

என் உயிர் உள்ள வரையில் குறும்பட பயிற்சி பட்டறை தொடர்ந்து நடைபெறும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆறு முதலமைச்சர்கள், தமிழ் சினிமாவிலிருந்து வந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் சினிமா கவர்ச்சி மக்களை ஆட்டுவிக்கிறதுதான். மக்களுக்கு சினிமா தொழிற்நுட்பம் பறறிய புரிதல் இல்லை. அவர்களுக்கு சினிமா தொழிற்நுட்பங்களை விளக்க வேண்டும். மக்களுக்கு சினிமா தொழில்நுட்பம் தெரிந்துவிட்டால் கதாநாயகன் மீதான மோகம் குறைந்துவிடும். அதற்கு பிறகுதான் தமிழில் நல்ல திரைப்படங்கள் உருவாக முடியும். அவதார் படத்திற்காகவே புதிய வகை காமிரா, புதிய வகை மென்பொருள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்கள்.

"நகரத்தில் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய சகல வசதி வாய்ப்புகள் போல் கிராமத்து மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்" என்று காந்தி சொன்னதுபோல் கிராமப்புற மக்களுக்கும் திரைப்பட தொழில்நுட்பம் பற்றிய புரிதல் கிடைக்க வேண்டும் என்பதனை பெரு நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம்.

"பார்வையாளனையே படைப்பாளியாக மாற்ற வேண்டும்" என இலத்தீன் அமெரிக்க சலனசன் பிட்டினோ இயக்கம் சொன்னது. அப்போதுதான் மிகச்சிறந்த திரைப்படங்கள் தோன்ற முடியும். அதைப்போல், பிரெஞ்ச் புதிய அலை திரைப்பட இயக்குனர் கோடாட் சொன்னார், "எல்லோரும் பையில் பேனா வைத்திருப்பதைப் போல எல்லோர் கையிலும் காமிரா வைத்துக் கொள்ள வேண்டும்". எல்லோருக்கும் திரைப்பட தொழில்நுட்பம் தெரிய வேண்டும். இன்று உலகம் முழுவதும் சினிமா மோகம் உள்ளது. எல்லோரும் திரைப்படம் எடுக்கும்போதுதான் சினிமா மோகம் குறையும். இதனை செயல்படுத்துவது எங்கள் நோக்கமாக உள்ளது.

இன்று திரைப்பட துறைக்கு நிறையபேர் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலனவர்களுக்கு தமிழ் படங்கள் பிடிக்கவில்லை. அதற்கு மாற்றாக ஹாலிவுட் படங்களை பிடித்துக் கொள்கின்றனர். ஹாலிவுட் என்றைக்கும் மனதை தொடும் படங்களை எடுத்தது கிடையாது. பிரம்மாண்டத்தை காட்டி காசு பறிக்கும் கேடுகெட்ட நிறுவனமாகத்தான் ஹாலிவுட் இருந்தது.

பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்துதான் உலக புகழ்பெற்ற படங்கள் வந்திருக்கின்றன. இவைகள்தான் சினிமாவிற்கான இலக்கணமாக உள்ளது. அவர்கள்தான் பல சினிமா கோட்பாடுகளை உருவாக்கினார்கள். குறிப்பாக ஜெர்மன் படங்கள் ஓவியங்களில் இருந்து எக்ஸ்பிரானிஸம், இம்பரஸனிசம் போன்ற கோட்பாடுகளை எடுத்துக் கொண்டது. எல்லா மக்களுக்கான விடுதலையை மையப்படுத்தி ரஷ்ய படங்கள் வெளிவந்தன. யதார்த்தவாத நவீன சினிமாவை இத்தாலியர்கள் உருவாக்கினர். பிரெஞ்சு புதிய அலை திரைப்படங்கள் ஹாலிவுட்டின் மாய 
வேலைகளை இடித்துக் காட்டியது.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவான "பசியின் அழகியல்" கோட்பாட்டை கொடுத்த கிலாபர் ரோஜ்ஜா, "மூன்றாவது சினிமாவை நோக்கி" கோட்பாட்டை கொடுத்த அர்ஜெண்டினா இயக்குனார் கெட்டிரோ ஹென்சுலன்ஸ், பெரி போன்றோர் நிறைய கோட்பாடுகளை சினிமாவுக்கு வழங்கியுள்ளனர். ஆனால் சினிமாவுக்கு எந்த கோட்பாட்டையும் தராத அமெரிக்க சினிமாவைத்தான் நமது இளைஞர்கள் விரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சினிமாவில் என்னவிதமான கோட்பாடு சொல்லப்படுகிறது என்ற தத்துவத்தை புரிந்து கொள்ளவில்லையென்றால் நல்ல சினிமா எது கெட்ட சினிமா எது என்று தரம்பிரித்து பார்க்க தெரியாமல் போய்விடும். ஆகவே நிழலில் நாங்கள் செய்யக்கூடிய முக்கியமான பணி நல்ல சினிமா எது என்பதை கற்றுக் கொடுக்கிறோம்.

நிழல் பத்திரிக்கையில் மட்டுமல்லாமல் நிழல் அலுவலகத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு வகுப்பு எடுக்கப்படுகிறது. கூட்டாகவும், தனியாகவும் இதுபோன்ற வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

சினிமாவின் அடுத்த கட்டமாக இருக்கக் கூடிய குறும்படம், ஆவணப்படம் பற்றியும் சொல்லித் தருகிறோம். இவைகளை கற்றுக்கொண்ட பிறகு ஒருவர் படம் எடுக்கும் பட்சத்தில் மிக சிறப்பாக எடுக்கலாம்.

சினிமாவுக்கு மிக மிக முக்கியமானது அதன் கோட்பாடுகள் தான். கோட்பாடு தெரிந்துவிட்டால் கருவிகள் என்பது சாதாரணம். உதாரணமாக இயக்குனர் ஜான் ஆப்ரஹாம் ஒருமுறை Crane Shot எடுக்க விரும்பினார். ஆனால் பணம் இல்லை. மாட்டு வண்டியின் நுகத்தடியில் காமிராவை பொருத்தி வண்டியை குடைசாய்த்து தனக்கு தேவையான Crane Shot-ஐ எடுத்தார்.

சினிமாவின் தொழிற்நுட்பத்தை, சினிமாவின் கோட்பாட்டை நாம் நன்றாக புரிந்துக் கொண்டோம் என்றால் கருவிகள் என்பது பிரச்சினையே கிடையாது. கருவிகளை கடன் வாங்கி கூட நம்மால் சிறந்த படத்தை எடுத்துவிட முடியும்.

"இந்த வேலையை யாரும் செய்யாததினால் எல்லா வேலைகளையும் என் தலையிலேயே போட்டுக் கொண்டேன்" என்பார் பெரியார். அதுபோலத்தான் சினிமா தத்துவம் போன்றவற்றை யாரும் பூரணமாக கற்றுக் கொடுக்கவில்லை என்பதினால் நாங்கள் இந்த வேலையை செய்கிறோம். நிழல் தொடர்ந்து இந்த வேலையை செய்துக் கொண்டிருக்கும்.

தொடர்புக்கு : 9444484868

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio

  </