கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  காணொளி TS படைப்பாளிகள் TS கட்டுரைகள் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் -  கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

- ஆதவன்  

'மௌனமொழி' என்கிற தன்னுடைய குறும்படத்திற்காக பரவலான கவனத்தைப் பெற்றவர் ஜெயச்சந்திர ஹாஸ்மி. இயக்குனர் சீனு ராமசாமியிடம், இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்கள் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வரும், குறும்பட இயக்குனர் கு. ஜெயச்சந்திர ஹாஸ்மி தன்னுடைய குறும்பட அனுபவத்தையும், தமிழின் குறும்படங்கள் பற்றிய தன்னுடைய அக்கறையையும் இந்த நேர்காணலில் பதிவு செய்துள்ளார்.

திரைப்படத் துறையில் ஆர்வம் ஏற்பட என்ன காரணம்?

இதுதான் குறிப்பிட்ட காரணம் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால், சிறுவயதில் வீட்டு மொட்டை மாடியில், உடைந்த நாற்காலியை கேமிரா போல் வைத்துக் கொண்டு அதன் இடுக்கில் இன்னொருவரை நடிக்கச் சொல்லி, ‘ஆக்சன்...கட்’ என்று விளையாடியது நினைவுக்கு வருகிறது. பள்ளிக்கால நாடகங்கள், கவிதைகள், பார்த்த படங்கள் போன்றவை இதற்கு காரணிகளாக இருக்கலாம். அதைவிட முக்கியமாக, கலை இலக்கியம் நாடகம் சினிமா எப்போதும் நிறைந்திருக்கும் சூழலில் வளர்ந்தது ஒரு முக்கியமான காரணம்.

குறும்படங்கள் மீது உங்கள் கவனம் திரும்பியது எதனால்?

இதற்கும் ஒற்றைக் காரணம் இல்லை. பள்ளி முடிக்கும்போது திரைப்படங்கள் மீது காதலானது. அதுகுறித்த கனவுகளோடே கல்லூரிக்குள் நுழைந்தேன். இதுதான் நமது கலை என்று முடிவு செய்தபின், அதை முயன்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும் இல்லையா? அப்படி உருவானதுதான் குறும்படங்கள் எடுக்கும் ஆர்வம். பள்ளி நாட்களில் தோன்றுபவற்றை கவிதையாக எழுதி இருக்கிறேன். பின் பள்ளி இறுதிக் கட்டத்தில் நாடகங்கள் எழுதியிருக்கிறேன். அதுபோல கல்லூரிக்கு வந்தவுடன், மனதில் தோன்றுபவை காட்சிகளாக தோன்றின. காட்சி ரீதியாகவே என் கருத்துக்களை சொல்லும் ஆர்வம் அதிகரித்தது. அதன் வெளிப்பாடே குறும்படங்கள். 2006 ஆம் குறும்படங்கள் எடுக்கத் துவங்கியபோது, பெரிதாக எந்த குறும்படங்களையும் நான் பார்த்ததும் இல்லை, அதுகுறித்த தெளிவான சிந்தனையும் இல்லை. விழுந்து விழுந்து சைக்கிள் ஓட்டுவதைப் போலத்தான் அதை கற்கவேண்டியிருந்தது. கற்றுக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை எத்தனை குறும்படங்கள் எடுத்துள்ளீர்கள்? அவற்றில் பரவலாக பேசப்பட்ட குறும்படங்கள் எத்தனை? ஏன்?

ஒரு நிமிட குறும்படங்கள் உட்பட இதுவரை ஒன்பது குறும்படங்கள் எடுத்திருக்கிறேன். ஒரு ஆவணப்படமும் எடுத்திருக்கிறேன். இப்போது எனது பத்தாவது குறும்படத்தை எடுத்து வருகிறேன். இதில் மிகவும் பரவலாக பேசப்பட்டது கடைசியாக நான் எடுத்த ‘மௌன மொழி’ குறும்படம் தான். சொல்லப்போனால், இந்த குறும்படவட்டத்திலும், கலை இலக்கிய சமூகத்திலும் எனக்கு ஒரு அடையாளம் பெற்றுத் தந்ததே மௌன மொழிதான். உலகளாவிய விருதுகளையும் சேர்த்து பத்திற்கும் மேற்பட்ட விருதுகளையும் அதற்கும் மேலான அங்கீகாரத்தையும் அப்படம் பெற்றுத் தந்தது. இதுவரை எனக்கான அடையாளம் இங்கு ‘மௌன மொழி’ தான். பல நண்பர்களையும், துறைசார்ந்த வல்லுனர்களையும், பல நட்பு வட்டங்களையும் எனக்கு பெற்றுத் தந்ததும் மௌன மொழிதான்.

செய்நேர்த்தியிலும், திரைக்கதையிலும், திரைமொழியிலும், உட்கருத்திலும் இதுவரை நான் செய்த நேர்த்தியான படம் ‘மௌன மொழி’ தான். அதுவே கிடைத்த அங்கீகாரங்களுக்கான காரணம் என்று நினைக்கிறேன்.

மௌனமொழி குறும்படத்திற்கான வித்து எது?

நிஜத்தில் நடந்த ஒரு சம்பவம்தான். என் நண்பனை பார்க்க சென்றிருந்தபோது, என் செல்ஃபோனில் பேலன்ஸ் இல்லை. ஒரு ரூபாய் போனில் பேசலாம் என்று அங்கிருந்த ஒரு கடைக்கு சென்றேன். அப்போது எனக்கு முன் ஒருவர் அந்த போனில் பேசிக் கொண்டிருந்தார். இயல்பாக அவர் பேசியது காதில் விழுந்தது. மிகவும் வெள்ளந்தித் தனமாக, கள்ளம் கபடம் இல்லாத மனிதராக தோன்றினார். தன்மையாக பேசிவிட்டு சென்றார். பிறகு நான் நண்பனுடன் பேசினேன். இந்த சம்பவம் மனத்தில் தங்கியிருந்தது. போன் பேசுபவன், பின்னால் போனுக்கு காத்திருப்பவன் இருவருக்கும் தனித்தனியே ஒரு கதை இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்து, அந்த சம்பவத்தை மையப் புள்ளியாக வைத்து முன்னும் பின்னும் எழுதப்பட்டதே மௌன மொழி.

மௌனமொழி குறும்படத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சனையை பிரச்சார நெடி இல்லாமல் மிக நேர்த்தியாக கையாண்டிருந்தீர்கள். இது எப்படி சாத்தியப்பட்டது?

ஒரு பிரச்சினையின் தீவிரத்தையும் அதன் விளைவுகளையும் எடுத்துரைக்க, அந்த பிரச்சினையை பற்றியே அதிகம் விவரித்து அதை பிரச்சார ரீதியில் காட்டுவதை விட, அந்த பிரச்சினையினால் நிகழ்ந்த பாதிப்புகளை காட்டுவதன் மூலமே அந்த வலியை மிகவும் வீரியமாக பார்ப்பவர்களுக்கு கடத்த முடியும் என்று நம்புகிறேன். உதாரணமாக, போரைப் பற்றி காட்டுவதை விட, போரினால் வீடிழந்த, உறவிழந்தவர்களின் போருக்குப் பிந்தைய வாழ்வின் மூலமே போரின் விளைவுகள் மிகவும் வீரியமாக பதிவு செய்யப்படும். அத்தகைய ஒரு முறையைத்தான் மௌன மொழியிலும் கையாண்டிருந்தேன். அடுத்தது, ஒரு திரைப்படம் பிரச்சார நொடியில் இருப்பதை நான் விரும்பவில்லை. சொல்ல வரும் எந்த கருத்தையும் போதிக்காமல், தோள் மேல் கைபோட்டு புரியவைப்பதைப் போல் நேர்த்தியாக சொல்வதே ஆழமானது என்று நான் நம்புகிறேன்.

குறும்படமோ, திரைப்படமோ, அதன் மைய சரடை தகர்க்காமல் இருக்க நடிகர்கள் தேர்வு மிக முக்கியமானது. நடிகர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? தேர்வு செய்த நடிகர்களுக்கு பயிற்சி ஏதும் கொடுக்கிறீர்களா?

நிச்சயமாக. தாளில் இருக்கும் கதையை, காட்சியை, வசனத்தை திரையில் நிகழ்த்துபவர்கள் நடிகர்கள் தானே. அவர்களது தேர்வும் பங்கும் மிகமிக முக்கியமானது. இதில் நடித்த இரண்டு கதாப்பாத்திரங்களையும் மிகுந்த தேடலுக்குப் பிறகே தேர்வு செய்தோம். நடிகர்கள் தேர்வு போன்று எதையும் வைக்காவிட்டாலும், நாங்கள் இயங்கும் வட்டத்தில் இதுகுறித்த செய்திகளைச் சொல்லி, இதற்கேற்ற ஆட்களை நீண்ட நாட்களாக தேடி வந்தோம். நினைத்தபடி இருவரும் கிடைத்தவுடன், அவர்களுக்கு படத்தின் மொத்த திரைக்கதையையும் தெளிவாக விளக்கி, திரைக்கதையை அவர்களிடமும் ஒரு நகல் கொடுத்து, அதை அவர்களுக்குள் ஏற்றினோம். பின், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அவர்களோடே இதுசார்ந்து பயணித்து, ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் இயல்பாக அவர்கள் பேசிட, மனப்பாடம் செய்யாமல் இயல்பான நினைவில் அது வருமளவிற்கு அவர்ளை பழக்கினோம். பின், படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் முன்பு முழுமையான நடிப்பு பயிற்சி கொடுத்தோம். நடிப்பு பயிற்சி வல்லுனர்களை கொண்டும் இரண்டு நாட்கள் பயிற்சி கொடுக்கப்பட்டது. இலங்கைத் தமிழராக நடித்த கிறிஸ்டல் பெஜினுக்கு, படத்தின் வசனங்களை இலங்கைத் தமிழர் ஒருவரை பேச வைத்து, அதை பதிவு செய்து, அந்த பதிவு கொடுக்கப்பட்டது. இப்படி நடிகர்கள் தேர்வும் பயிற்சியில் மிகுந்த கவனத்துடனே செய்யப்பட்டது.

மௌனமொழி குறும்படத்தில் விற்பனை பிரதிநிதியாக நடித்த நண்பர், இலங்கை தமிழராக நடித்த நண்பரை விட சிறப்பாகவே செய்திருப்பதாக பேசப்படுகிறது. அழுத்தமான கதாப்பாத்திரங்களை வடிவமைக்க ஒரு இயக்குனராக உங்களுக்கு போதிய அனுபவம் இல்லையா? காரணம், விற்பனை பிரதிநிதி கதாபாத்திரம் அதிகம் அழுத்தம் இல்லாதது. ஆனால், இலங்கை தமிழர் கதாப்பாத்திரம் மிக ஆழமான உணர்வை கடத்தி வேண்டிய ஒன்று. ஒரு இயக்குனராக இந்த இடத்தில் இலங்கை தமிழராக நடித்த நடிகரின் நடிப்பை சரி செய்ய நினத்திருக்கிரீர்களா? இல்லையா?

இந்த விமர்சனத்தில் இருந்து நான் சற்றே வேறுபடுகிறேன். இது முதன்மையாக சேல்ஸ் ரெப்ரசண்டேட்டிவ்வாக நடித்த வசந்த் கதாப்பாத்திரத்தின் கதைதான். அந்த கதாப்பாத்திரத்தின் வேலை, காதல், வாழ்க்கை தான் படத்தின் மையச் சரடு. அதனூடாகவேதான் இன்னொரு பாத்திரம் நமக்குத் தெரியவருகிறது. அந்த பாத்திரமும் கூட, வசந்த்தின் பார்வையின் மூலம்தான் தெரியவருகிறது. அந்த கதாப்பாத்திரத்தின் செயல்பாடுகளுக்கு வசந்த்தின் எதிர்வினை என்ன என்பதுதானே படத்தின் முக்கிய கட்டம். அப்படி இருக்கையில், வசந்த்தின் கதாப்பாத்திரமும் கதையும் தான் அழுத்தமாக பதிவு செய்யப்படவேண்டும். அதில்தான் பார்வையாளர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் எதிர்பாரா விதமாக ஒரு புதிய கதாப்பாத்திரம், ஒரு வலியோடு இருக்கும் பாத்திரம் கதைக்குள் நுழையும் போது, அது ஒருவிதமான வேறுபாட்டையும் ஆச்சர்யத்தையும் கொடுக்கும். இது இலங்கைத் தமிழன் பாத்திரத்தின் கதை அல்ல. வசந்த்தின் கதையே. கிட்டத்தட்ட சாலையில் நம்மை கடந்து போகும் ஒருவர் பேசும் வலிமிகுந்த பேச்சை யதேச்சையாக நாம் கேட்க நேர்ந்தால், ரோட்டில் வறுமையில் படுத்திருக்கும் பிச்சைக்காரர்களை பார்க்க நேர்ந்தால், சில நிமிடங்கள் நம்மை அது பாதிக்கும் அல்லவா? அதுபோன்ற உணர்வைத் தான் இலங்கைத் தமிழர் பாத்திரம் கடத்த வேண்டும். அந்த பாத்திரத்தின் மீது அழுத்தத்தை கூட்டாமல், அதை மையப்பாத்திரத்தின் செயல்பாடுகளுக்கேற்ற, தேவைக்கேற்ற விதத்தில் கையாளுவதுதான், திரைக்கதைக்கும் உதவும் . அந்த வலியும் சிலநிமிட மௌனமும் அப்போதுதான் மனதில் நிற்கும். அந்த கதையை மேலும் அழுந்தச் சொல்லுவது அதை சிதைத்துவிடும் என்பது எனது கருத்து. எனவே, வசந்த் பாத்திரம் அழுத்தமாகவும், இலங்கைத் தமிழர் பாத்திரம் அழுத்தம் குறைவாகவும் படைக்கப்பட்டிருப்பதாகவுமான உங்களது விமர்சனம் நான் விரும்பி அமைத்ததுதான். அது எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது.

ஆழ்ந்து பார்த்தால், இரண்டு பாத்திரங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கும். இருவரும் காதலிப்பவர்கள். இருவரும் நேரில் அல்லாமல் போனிலேயே பேசி தங்கள் காதலை வெளிப்படுத்துபவர்கள். இருவரும் ஏதோ ஒரு நல்ல செய்தியை எதிர்பார்த்திருப்பவர்கள். இருவரும் இருப்பு சார்ந்த ஒரு நெருக்கடியில், காதலியை பார்க்க முடியாமல் இருப்பவர்கள். இருவர் வாழ்க்கையின் முக்கியத் தருணமும் ஒரு போன் காலில் தான் இருக்கிறது. இருவர் காதலிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இப்படி, அதன் அளவுகோல்களும் வலியும் சூழ்நிலையும் அதன் ஆழமும் தான் வெவ்வேறே தவிர, இரண்டு பாத்திரங்களின் வாழ்க்கையும் பல ஒற்றுமைகளைக் கொண்டது. இந்த ஒற்றுமை வசந்த் பாத்திரத்திற்கு எந்தளவிற்கு புரியவேண்டுமோ, எந்தளவிற்கு விளைவை, வலியை ஏற்படுத்த வேண்டுமோ, அதே அளவிற்குதான் பார்வையாளர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதன் வெளிப்பாடுதான் இந்த அமைப்பு. இலங்கைத் தமிழர் பாத்திரம் வசந்த் அளவிற்கு திரையை ஆக்கிரமிக்காததினால் இது தோன்றுகிறதா என்று தெரியவில்லை. அப்பாத்திரத்தின் இருப்பும் வடிவமைப்பும் வசந்த்தை விட அழுத்தம் குறைந்தது தான். ஆனால், அதன் வலியும் சூழலும் அழுத்தம் நிறைந்ததே.

அதைத்தாண்டி, இலங்கைத் தமிழராக நடித்த கிறிஸ்டலின் நடிப்பில் உங்களுக்கு ஏதேனும் குறைகள் தெரிந்தால், அது நிச்சயம் ஒரு இயக்குனராக என்னுடைய குறையே அன்றி, அவருடையது அல்ல. இப்போது பார்க்கையில், இன்னும் ஆழமான சில உணர்வுகளை வாங்கியிருக்கலாம் என்று தோன்றுவது உண்மைதான், இயல்புதான். ஆனால், அப்போதைய நிலையில் அந்த நடிப்பு என்னை மிகவும் திருப்திப்படுத்தியது என்பதும் உண்மைதான்.

உங்களது மௌன மொழி குறும்படத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது. ஒரு இயக்குனராக இந்தக் குறும்படம் உங்களுக்கு திருப்தி தந்ததா?

ஏற்கனவே சொன்னதுபோல், எனக்கான அடையாளத்தை பெற்றுத் தந்தது ‘மௌன மொழி’ தான். மிகுந்த பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுதான் இந்த படத்தை எடுத்து முடித்தோம். ஆனால், இந்த படம் விருதுகள் மூலம் மட்டுமே, செலவு செய்த தொகையை விட சரிபாதி அதிகமாகவே சம்பாதித்தது. அந்த வகையில், இது வணிக ரீதியாக வெற்றிபெற்ற குறும்படம்தான்  பணம், விருது போன்றவற்றைத் தாண்டி ஒரு இயக்குனராக எனக்கு பெரும் மேடை அமைத்துக் கொடுத்ததும், இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்ததுமே மௌன மொழிதான். எங்கள் மொத்தக் குழுவின் உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம்தான் மௌன மொழிக்கு கிடைத்த வரவேற்பு. திரைக்கதை ரீதியாகவும், திரைமொழி ரீதியாகவும் இப்படம் குறித்த ஆழ்ந்த விமர்சனங்களும் பாராட்டுக்களும் கிடைத்தன. மௌன மொழிதான் என்னை அனைவருக்கும் காட்டியது. எல்லா இடத்திற்கும் கூட்டிச் சென்றது. எல்லா வகையிலும், ஒரு இயக்குனராக எனக்கு முழு திருப்தி தந்த படம் மௌன மொழி.

குறிப்பாக, ஒரு குறும்படப் போட்டியில் திரையிடப்பட்ட எங்கள் குறும்படத்தை பார்த்துவிட்டு, ஒரு இலங்கைத் தமிழ் இளைஞன் கட்டிப்பிடித்து ‘நன்றி அண்ணா’ என்று கூறியதும், இன்னொரு திரையிடலில் படத்தை பார்த்த ஒரு பெண்மணி, ‘என் பிரசவ காலத்தின் போது என் கணவர் என்னுடன் இல்லை. வேலை விஷயமாக வேறு ஊரில் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை. அதைவைத்து இப்போது வரை நான் அவருடன் சண்டை போடுவேன். ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது, பிரசவத்தின் போது நான் அனுபவித்த வலியைப் போன்றே, என்னுடன் இல்லாத அவரும் வலியை அனுபவித்திருப்பார் என்று புரிகிறது. நிச்சயம் இனிமேல் அவருடன் சண்டை போடமாட்டேன்’ என்றதும், எப்போதும் மறக்க முடியாத நெகிழ்ச்சியான தருணங்கள்.

தமிழ்நாட்டில் குறும்படங்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

சமீப காலங்களில் மிகவும் ஆரோக்கியமாகவே இருப்பதாக உணர்கிறேன். திரைத்துறையிலும் சரி, பொது வெளியிலும் சரி, குறும்படம் என்றால் ஒரு சிறிய எதிர்பார்ப்பும் மரியாதையும் வளர்ந்துள்ளது. அதற்கு ஒரு தனி இடம் கிடைத்துள்ளது உண்மைதான். ஆனால், குறும்படங்களை தனி ஊடகமாக பார்க்காமல், சினிமாவின் கிளையாக மட்டுமே பார்ப்பது மாறவேண்டும். குறும்படம் என்பது ஒரு பெரும் மாற்று ஊடகம். திரைப்படங்களில் சொல்ல முடியாத பலவற்றை குறும்படங்களின் மூலம் சொல்ல முடியும். வீரியம் குறையாமல் எடுத்துச் செல்ல முடியும். அந்தளவிற்கு குறும்படங்களுக்கு இங்கு முக்கியத்துவமும் விழிப்புணர்வும் இருக்கிறதா என்றால் இல்லைதான். அது ஒரு தனித்துவமான சுதந்திரமான ஊடகம் என்ற புரிதல் வளரவேண்டும்.

முக்கியமாக, சினிமாவிற்கான நுழைவுச்சீட்டாக குறும்படங்களைப் பார்க்கும் நிலை வந்தபின், மசாலாக்களும், சினிமா க்ளிஷேக்களும் குறும்படங்களிலும் அதிகரித்து விட்டன. அறிமுக பாடல், சண்டைக்காட்சிகள் என்று தனது பாதையை விட்டு குறும்படங்கள் விலகிப் போகிறதோ என்ற எண்ணம் கூட சமயங்களில் ஏற்படுகின்றது.

குறும்படங்கள் நல்ல மாற்று ஊடகங்களாக அமைய இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? குறும்படங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான ஆலோசனை எதுவும் இருக்கிறதா? அரசுத் தரப்பில் இதற்கு ஏதேனும் ஆதரவு தேவை என்று நினைக்கிறீர்கள், ஆம் என்றால் என்ன மாதிரியான உதவி தேவைப்படுகிறது?

திரைப்படங்களின் இலக்கியம் குறும்படங்கள் தான். இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் மட்டுமே போதும். குறும்படங்களின் வீரியங்கள் முழுமையாக உணரப்படும்போது இன்னும் பல பரிமாணங்களில் பல தளங்களில் குறும்படங்கள் வளரும். தொழில்நுட்ப ரீதியாக கேமிரா, கோணங்கள், இசை என்று மட்டும் கவனம் செலுத்தாமல், கருத்தியல் ரீதியாகவும் அடுத்தடுத்த கட்டத்திற்கு குறும்படங்களை எடுத்துச் செல்ல முயல வேண்டும். காதல், காமெடி என்ற சில வட்டங்களுக்குள்ளே மட்டுமே சுழலாமல், வெவ்வெறு களங்களில் பயணிக்க வேண்டும்.

வியாபார ரீதியாக பார்த்தால், எந்தவொரு ஊடகமும், பொருளும் அதற்கென ஒரு சந்தை இருந்தால் மட்டும்தான் நிலைத்து நிற்கும். குறும்படங்களுக்கென ஒரு சந்தையை உருவாக்க, முதலில் குறும்படங்களை இணையத்தில் போடுவதற்கு பதில், டிவிடிக்களாக போட்டு சந்தைப்படுத்த வேண்டும். குறும்படங்கள் என்பது யூட்யூபில் இலவசமாக பார்க்கும் ஊடகம் அல்ல என்பதை நிறுவிவிட்டால், டிவிடிக்கள் மூலமாக குறும்படங்களை கொண்டு சேர்த்துவிட்டால், அதன்பின் அதற்கான சந்தை உருவாகிவிடும். டிவிடிக்களுக்கு நிச்சயம் சந்தை மதிப்பு உள்ளது. எங்கள் குறும்படமே கூட, புத்தகக்கண்காட்சியில், நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே விற்றது. சந்தை தயாராக உள்ளது. அதை வலுப்படுத்த கலைஞர்கள் முன்னுக்கு வந்தாலே போதும்.

அரசு தரப்பில் உதவி என்றால், அரசு கட்டப்போகும் திரையரங்குகளில், நல்ல குறும்படங்களுக்கென்று சில காட்சிகளை ஒதுக்கலாம். அரசாங்க சார்பில் உருவாக்கப்படும் புகைப்பழக்கத்திற்கு எதிரான, ஹெல்மெட் போடுவது குறித்த விழிப்புணர்வு படங்களை குறும்பட இயக்குனர்களிடம் கொடுத்து உருவாக்கச் சொல்லலாம். அனைத்தையும் விட, குறும்பட படப்பிடிப்புகளுக்கு காவல்துறை உட்பட அரசாங்க தரப்பில் இருந்து எவ்வித இடையூறும் இல்லாமல், அதற்கு அனுமதி அளித்து ஒத்துழைப்பு தந்தாலே போதும். முக்கியமாக, குறும்படங்கள் ஆவணப்படங்களுக்கு ஒரு சேமிப்பகம் உருவாக்குதல் வேண்டும்.

உலக அளவில் உங்களுக்குப் பிடித்த குறும்படங்கள், திரைப்படங்கள், புத்தகங்களை தமிழ் ஸ்டுடியோ வாசகர்களுக்காக பகிர்ந்துக் கொள்ளலாமே?

குறும்படங்கள் : BUS 44, BLACK RIDER, INJA DOG, WHAT IS THAT?, THIRA, BLACK HOLE, THE LUNCH DATE, RELATIONSHIP, THE FROZEN ROSE, SIGNS.
திரைப்படங்கள் : LIFE IS BEAUTIFUL, GLADIATOR, CHILDREN OF HEAVEN, THE BOY IN THE STRIPED PYJAMAS, VEEDU, SANDHYA RAAGAM, SHIP OF THESEUS, THE DICTATOR, CITY LIGHTS, MODERN TIMES, ARGO, CRASH, 12 YEARS A SLAVE, CITIZEN KANE, 12 ANGRY MEN, ROSHOMON, NO MAN’S LAND, 1000 RUPEES NOTE, SONG OF THE SPARROWS, THE WHITE BALOON, BARAN, WITH YOU WITHOUT YOU, THE COLOR OF PARADISE, THE DAY I BECAME A WOMAN.
புத்தகங்கள் : கி.ரா வின் கரிசல்காட்டு கடிதங்கள், ஜெயகாந்தன் கதைகள், மதிலுகள், சுஜாதா குறுநாவல்கள், அறம் கதைத் தொகுப்பு, எஸ்தர், நகரம், ANGELS AND DEMONS,, THE DAVINCI CODE, INFERNO, IF TOMORROW COMES, FOUNDATIONS OF SCREENPLAY.

 

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்
     
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio