The Gold Rush
பெயர் : த கோல்ட் ரஷ்
ஆண்டு: 1925
நேரம்: 96 நிமிடம்.
இயக்கம்: சார்லி சாப்ளின்
நடிகர்கள்: சாப்ளின், ஜியார்ஜியா ஹாலெ, மேக் ஸ்வைன்
 |
கதை சுருக்கம்:
தங்க சுரங்கத்தை தேடி மக்கள் கூட்டம் கூட்டமாகவும், தனி நபர்களாகவும், சிறு குழுக்களாகவும் அலாஸ்காவில் உள்ள பனி மலையில் தேடி அலைகிறார்கள். தன் பங்கிற்க்கு தனியாக நம் வழிப்போக்கியும் கிளம்பிவிடுகிறார். கொடும் பனியில் தங்கம் கிடைக்காமல், வேறு ஒருவரின் வீட்டில் தங்குவார். அவரும் தங்க வேட்டைக்கு புறப்பட, சாப்ளின் அருகில் உள்ள ஊரில் சென்று வலைகள் செய்து வாழ்க்கையை தொடருவார். அப்படி ஒரு நாள் ஒரு மது விடுதிக்கு செல்ல, அங்கு வரும் ஹாலே தன்னனை காதலிப்பதாக தவறாக நினைத்துக்கொண்டு இவரும் காதலிக்க தொடங்குவார். ஆனால் காதல் தோல்வி ஏற்பட மீண்டும் தன் நண்பருடன் தங்க வேட்டைக்கு சென்று, இறுதியில் தங்கத்தையும் கண்டுபிடித்து காதலிலும் வெற்றி பெறுவார். |
தங்க வேட்டை
இன்று உலகளவில் இந்த படத்தை போற்றாத எவரும் இல்லை அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் மேக்கிங். அடுத்து என்ன படம் செய்ய போகிறோம் என்று ஒரு குழப்பமான நிலையில் ஒரு நாள் தன் நண்பர் பேர்பேங்ஸ் வீட்டில், அட்லாண்டாவில் தங்க வேட்டைக்கு செல்லும் கூட்டத்தை பற்றிய படத்தை பார்த்து தன் அடுத்த படத்திற்கான ஒன் லைனை பிடித்தார்.
இந்த படத்தை சாப்ளின் சுமார் இரண்டு ஆண்டுகள் வரை நிஜ பனிமலையிலும், உப்பை நிறப்பிய பனிமலை செட்களிலுமாக மாறி மாறி எடுத்தார். தனக்கு திருப்த்தி ஏற்படும் வரை எடுத்துக்கொண்டிருந்தார். இந்த படத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு, சாப்ளின் முதல் முறையாக இந்த படதிற்க்கு தான் முழுமையான திரைகதையை தீர்மானித்துவிட்டு படத்தை எடுக்க முனைந்தார். பொதுவாக செட்களில் தான் அவர் படத்தின் கதை தீர்மானிக்கபடும்.
முதலில் இந்த படத்தின் கதாநாயகியாக லீட்டா க்ரேவை தான் முடிவு செய்தார், அதற்குள் அவர்கள் காதல் முற்றி லீட்டா கர்பமாகிவிட, அவரை திருமணம் செய்துக்கொண்டு ஹாலேவை கதாநாயகியாக்கினார். இந்த படம் வழக்கம் போல் பேசா படம், இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைகளை பெற்ற படம். முக்கியமாக சிறப்பான ஒளி அமைப்பிர்க்காக.
 |
இந்த படத்தின் முதல் காட்சியில் பனி மலையில் தங்க வேட்டைக்கு திரளாக செல்லும் மக்களை காட்டுவார். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பனி மலையில் எறும்பை போல் ஊர்ந்து செல்லும் ‘லாங் ஷாட்’ காட்சி. 2500 அதிகமான துணை நடிகர்களை கொண்டு அந்தக் காட்சியை படம்பிடித்தார். அந்த காலத்தில் இப்படி ஒரு காட்சி அதுவும், ஒரு நகைச்சுவை திரைப்படத்திற்காக |
என்றால், சாப்ளினின் பட வசூலையும், அவரின் சக்தியையும் புரிந்துக்கொள்ளலாம். பணத்தை பற்றிக் கவலைப்படாமல் முதலீடு செய்தார். பரிசோத்னை முயற்சிகளை தன் தயாரிப்பில் மேற்கொண்டார் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்த படத்தில் நிறைய சிறப்பான மற்றும் வித்தியாசமான காட்சிகள் இருக்கும். அவை அனைத்தும் சாப்ளினின் கற்பனைத்திறனை பரைசாற்றும். உதாரணமாக, தங்க வேட்டைக்கு செல்லும் சாப்ளினும், அவரது நண்பரும், பனி மலை நடுவில் உணவில்லாமல், தங்கமும் கிடைக்காமல் சோர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். அப்பொழுது பசி மயக்கத்தில், நண்பருக்கு சாப்ளின் ஒரு பெரிய கோழி போல் தெரிவார். அதனால் நண்பர் சாப்ளினை துரத்த, சாப்ளின் ஒரு பெரிய சேவல் போல் அங்குமிங்கும் ஒடுவார்.
 |
அதே மாதிரி சாப்ளினும் அவரின் நண்பரும், வேறு வழியே இல்லாமல் சூவை வேக வைத்து இரு தட்டில் வைத்து சாப்பிடும் காட்சி. சமைத்த ஷூவை, நேர்த்தியாக பரிமாறுவார். ஷூவை சரியாக இரண்டு பாகமாக பிரித்து, அதனுடன் ஊற்றப்பட்ட தண்ணீரை அளவாக இரண்டு தட்டிலும் ஊற்றி, சாப்ளின் ஏதோ நளபாகத்தை உண்பது போல் சாப்பிடத் தொடங்கிவிடுவார். |
அதே மாதிரியாக பனிப் புயலில் சிக்கி இவர்கள் தங்கியிருக்கும் வீடு நகர்ந்து (அடிதளம் இல்லாத கட்டை வீடு) மலையின் விளிம்பில் தொங்கிய படி நிற்க்கும். சாப்ளினுக்கு கிடைத்து சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பு அந்த தொங்கும் வீட்டினுள் சாப்ளினும் அவருடைய நண்பரும் தப்பிக்க அடிக்கும் கூத்துக்கள் நகைச்சுவையின் விளிம்பிற்கே நம்மை அழைத்து செல்லும்.
அதேபோல் மது விடுதியில் ஹாலே நடனமாட அழைக்க, அவருடன் நடனமாடும் பொழுது சாப்ளினின் லூசான கால் சட்டை வழுக்கி விழ, அவசரமாக ஒரு கயிரை எடுத்து இடுப்பை சுற்றி கட்டிக்கொள்வார். கயிரின் மறு முனையில் கட்டப்பட்டிருக்கும் நாயை கவனிக மாட்டார். நடனம் ஆடும்பொழுது இவர் நாயை இழுக்க நாய் ஓடும் பொழுது இவரை இழுக்க, அந்த காட்சியில் சாப்ளினின் நகைச்சுவை என்னவென்று சொல்வது.
ஹாலே தன் வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறார் என்ற கற்பனைக் காட்சியில், உணவு மேஜை மீது, சாப்ளின் இரண்டு நீண்ட ரொட்டிகளில் ஸ்பூனை குத்தி, ஒரு பாலே நடனம் அமைத்திருப்பார். அந்தக் காட்சியில் அவரின் கற்பனையை என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.கற்பனையின் உச்சம்.
இந்தத் திரைப்படத்தில் தான் இறுதி காட்சியில் வழிப்போக்கன் பணக்காரராக காட்டபட்டிருப்பார். அமைதியான மகிழ்ச்சியான இறுதி காட்சி அமைந்த சாப்ளின் திரைப்படமும் இதுவாகத் தான் இருக்கும். இந்தப் படம் அதுவரை எந்த திரைப்படமும் காணாத ஒரு வசூலை கண்டது.
சாப்ளின் திரை வாழ்க்கை மகிழ்ச்சி என்றால் சாப்ளினின் மண வாழ்க்கை பிரச்சனையாக அமைந்தது விட்டது. லீட்டாவுடனான அவரின் வாழ்க்கை நரகமாக இருந்த்து. எப்பொழுதும் சினிமாவை பற்றி மட்டும் சிந்திக்கும் சாப்ளின், படமெடுக்க தான் சம்பாதித முழு பணத்தையும் முதலீடு செய்துக்கொண்டிருந்தார். சாப்ளினின் இந்த கலையார்வத்தை புரிந்துக்கொள்ளாமல் லீட்டா ஒரு உல்லாசியாகவே இருந்தார்.
இன்னொரு பக்கம் சாப்ளினை அமெரிக்க கம்யூனிச ஒழிப்பு பிரிவினர் கண்கானித்து வந்த்னர். சாப்ளின் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உத்வுகிறார். ரஷ்யாவின் உளவாளி என்ர வதந்திகளை பரப்பிவிட்டது மட்டுமல்லாமல், அதற்கு ஆதாரமும் சேகரிக்க தொடங்கினர்.
இன்னொரு பக்கம் சாப்ளினின் பெண் மோகம். அவருக்கு பெண்கள் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்துக்கொண்டே இருந்தது. குழுந்தைகள் இருந்தாலும், அவருக்கு ஆரம்பத்திலிருந்தே காதலும், மண வாழ்க்கையும் கூடி வரவேயில்லை. அரசாங்கம் போட்டி, சினிமா பற்றிய தேடல், மோசமான மனவாழ்க்கை, சாப்ளின் மீது மற்றவர்களுக்கிருந்த பொறாமை எல்லம் ஒன்றாக சேர்ந்து அவரை துரத்திக்கொண்டிருந்த்து. சாப்ளின் போராடிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் மக்களை ஏமாற்றவில்லை. மக்களை எப்போதும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
சாப்ளினின் அடுத்த படம் ‘த சர்கஸ்’ . இந்த திரைப்படத்தை எடுக்க ஆரம்பித்ததும் மண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. லீட்டா விவாகரத்து பெற்றார். ஒரு விதத்தில் இதுவும் சாப்ளினுக்கு நல்லது தான் என்றாலும், சாப்ளினை பிரச்சனைகள் விரட்டிக்கொண்டே இருந்தன.
‘த சர்கஸ்’ உலக சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் என்றாலும், சாப்ளினையே பைத்தியக்காரனாக மாற்றியப் படம். ஆம்! மன உளைச்சல் அதிகரித்து மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்த திரைப்படம். என்ன நடந்தது என்று அடுத்த வாரம் பார்ப்போம்.
சாப்ளின் வருவார்....