கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  அறிமுகம் TS கட்டுரைகள் TS சிறுகதைகள் TS நூல்கள் TS நேர்காணல்
 
 
 

 

 

 

 
     
     
     
     
வாயில்

With you Without You (பிறகு) - பிரசன்னா விதானகே

 

ஒரு புத்தகம் அதனை வாசிக்கும் அத்தனை வாசகர்களுக்கும் ஒரேவிதமான உணர்வை கொடுப்பதில்லை. ஒரே ஒரு புத்தகம்தான். ஆனால் ஒவ்வொரு வாசகனுக்கும் தனி தனி படிமங்களாக தன்னை உருமாற்றிக்கொள்கிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் "A Gentle Creature" நாவல் மூன்று திரைக்கலைஞர்களால் திரைப்படமாக்கப்பட்டிருக்கிறது. ராபர்ட் ப்ரெசன் இயக்கத்தில் வெளியான "A Gentle Women" திரைப்படத்தை பார்த்தபிறகுதான் இந்த நாவலை படித்தேன். எனக்கு நாவலை விட திரைப்படம் மிக பிடித்திருந்தது. முதல் காட்சியிலேயே கதாபாத்திரங்களின் முகத்தை காட்டாமல், ஒரு வெள்ளை துணி பறந்து வந்து கீழே விழுகிறது. அடுத்த காட்சியில், ஒரு பெண் சடலமாகிக்கிடக்கிறாள். ஏன் அவள் தற்கொலை செய்துக்கொண்டாள் என்பதை அடுத்தடுத்த காட்சிகள் விவரிக்கின்றன. இதில் வெள்ளை துணி பறந்து வந்து கீழே விழுவதெல்லாம், ராபர்ட் ப்ரெசனின் படிமங்கள் மூலம் கதைசொல்லும் யுக்தி. இதே நாவல் மீண்டுமொருமுறை, NFDC தயாரித்து, மணி கவுல் இயக்கத்தில் நசர் திரைப்படமாக வெளியானது. ராபர்ட் ப்ரேசனின் கதாநாயகிக்கும், மணி கவுலின் கதாநாயகிக்கும் இடையேயான வேறுபாட்டை நுட்பமாக அவதானிக்கும்போதுதான், இருவேறுபட்ட கலாச்சார மையத்தை நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

இப்போது மூன்றாவது முறையாக, பிரசன்னா விதானகேவின் இயக்கத்தில் "பிறகு" (With you without you) என்று மீண்டுமொருமுறை தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் உயிர்பெற்றிருக்கிறது. ராபர்ட் ப்ரெசன், மணி கவுல் இருவரின் திரைப்படத்திலும் இல்லாத ஒரு நெருக்கத்தை இந்த திரைப்படத்தில் உணர முடிந்தது. காரணம், இந்த திரைப்படம், என்னுடைய மொழி பேசும், இனக்குழுவை பற்றிய அரசியலை பிரதானப்படுத்தியிருக்கிறது. மாபெரு காதல் காவியமாக விரிந்த நாவலுக்குள், அரசியலை நுட்பமாக உட்புகுத்தி, அதனை தன்னுடைய மண்சார்ந்து அடையாளப்படுத்தியிருக்கும் விதானகே எனக்கு இன்னமும் நெருக்கமான படைப்பாளியாக இருக்கிறார்.

நகை அடகு வைக்கும் கடை (பவுண் ஷாப்) வைத்திருக்கும், சிங்கள இனத்தை சேர்ந்த சரத்சிறிக்கும், செல்வி என்கிற தமிழ் பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் திருமணம், பிறகு தன்னுடய கணவன் முன்னாள் ராணுவ வீரன் என்கிற உண்மை தெரிந்ததும், இருவருக்கும் இடையே ஏற்படும் உறவுசிக்கல்தான் கதை. பிரசன்னா விதானகே அதனை காட்சிப்படுத்தியிருக்கும் விதம்தான், இன்னமும் மனதை பதைப்புடன் வைத்திருக்கிறது.

தொடர்ச்சியாக பலரும், தங்களை நகைகளை அடகு வைக்க வரும்போது, அதனை தன்னுடைய கணவனுக்கு அருகில் இருந்து பார்க்கும்போது இருக்கும் செல்விக்கும், அவளே அந்த வேலையை செய்யும்பொது இருக்கும் செல்விக்குமான மனநிலையை இயக்குனர் இரண்டு காட்சிகளில் பதிவு செய்திருப்பார். முதல் முறை, தன்னுடைய கம்மலை வைத்துக்கொண்டு, முன்பு அடகு வைத்த தாலியை கொடுத்துவிடுங்கள் என்று கேட்கும் பெண்ணிற்கு சரத்சிறி கொடுக்கும் பதிலும், சரத்சிறி இல்லாதபோது, அந்த கம்மலை பெற்றுக்கொண்டு, தாலியை கொடுத்துவிட்டு, அதற்கு செல்வி கணவனிடம் தெரிவிக்கும் பதிலும், அவளின் மனநிலையை பதிவு செய்யும் மிக முக்கியமான இடம். இந்த காட்சியை பதிவு செய்வதற்கு விதானகே பயன்படுத்தியிருக்கும் கேமராக்கோணம் அசாத்தியமானது.

தன்னுடைய கணவன் முன்னாள் ராணுவ வீரன் என்பதை செல்வி தெரிந்துக்கொள்ளும் இடத்தை விட, அவன் ஏன் ராணுவத்தை விட்டு விலகினான் என்கிற உண்மையை தெரிந்துக்கொள்ளும் இடத்தில் செல்விக்கு ஏற்படும் கொந்தளிப்பும், ஆற்றாமையும் ஒரு போரின் வலியை மிக துல்லியமாக பதிவு செய்கிறது. அரசு எந்திரத்தின் அசுரத்தனமான செயல்பாடு, ராணுவத்தின் நடவடிக்கை இதெல்லாம் தனிமனித உறவுகளை எவ்விதம் சீரழிக்கிறது என்பதற்கு இந்த காட்சிதான் சான்று.

ஒரு காட்சியில், தன்னை மறந்து செல்வி பாடிக்கொண்டிருக்கும்போது, தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் லக்ஷ்மியின் வீடு தேடி சரத்சிறி செல்வதற்கும், பின்னர் வீடு திரும்புவதற்குமான கால இடைவெளியை மிக நீண்ட ஷாட்டில் பதிவு செய்திருக்கிறார்கள். அவன் வீடு திரும்பியதும், அவனோடு வாழ, தன்னுடைய மனநிலையோடு செல்வி போராடுகிறாள். ஆனால், இறுதி காட்சியில், சரத்சிறி இருவருக்குமான பயண ஏற்பாட்டிற்காக, தூதரக அலுவலகம் சென்று திருப்பும் காட்சியும், இதே அளவிற்கு நீளமானது. இங்கே தன்னுடைய மனநிலையை வெல்ல முடியாமல் செல்வி எடுக்கும் முடிவில் ஒவ்வொரு மனமும் வெதும்பி, அவரவர் ஆற்றாமைக்கு தன்னைத்தானே வருத்திக்கொள்ள நினைக்கிறது.

படத்தின் உடலுறவுக் காட்சி, ஆண்மகனின் ஒருவித வெறுப்பு நிலையை அல்லது அவசர மனநிலையை பதிவு செய்யும் விதமாகவே படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை இன அழிப்பை மேற்கொண்ட அடுத்தடுத்த சந்ததிகள் பார்க்குமோது, அவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான குற்ற உணர்ச்சியே, இந்த படைப்பின் ஆக பெரும் வெற்றி. போர் காட்சிகள் இல்லை, போர் அரசியல் பற்றிய வசனங்கள் எதுவும் இல்லை. ஆனால் இந்த படம், போர் பற்றி, அதன் அரசியல் தன்மை பற்றி, காதலின் வழியே மிக சிறப்பாக, படிமங்களாக பதிவு செய்திருக்கிறது. ஒரு இன அழிப்பு நடந்துக்கொண்டிருக்கும்போது கூட, நகைச்சுவை, கேளிக்கை என சினிமாவை பயன்படுத்திக்கொண்டிருந்த தமிழ்நாட்டு திரைப்பட கலைஞர்கள் அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டும். எனக்கு தெரிந்து, இந்தியாவில் வாழும் தமிழர்களின் ரசனையை மட்டுமல்ல, உலகம் முழுக்க வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் ரசனையையும் தமிழ் சினிமா பாழ்படுத்தியிருகிறது. அதற்கு இந்த படத்தில் பின்னணியில் வரும் தமிழ் பாடல்களும், செல்விக்கு மிக பிடித்த தமிழ் கதாநாயகர் பற்றிய காட்சிகளுமே சான்று. தமிழர்களின் வலியை கூட, இன்னொரு மொழி பேசும் கலைஞன்தான் பதிவு செய்ய முடிகிறது.

- தமிழ் ஸ்டுடியோ அருண்

 

thamizhstudio@gmail.com

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: அருண் @ தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio