கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  அறிமுகம் TS கட்டுரைகள் TS சிறுகதைகள் TS நூல்கள் TS நேர்காணல்
 
 
 

 

 

 

 
     
     
     
     
வாயில்

Ship of Theseus – தத்துவார்த்தங்களின் ஆத்மா….

 

உடைந்து போன ஒரு கப்பலின், உடைந்து போன அதே பாகங்களை வைத்து மறு உருவாக்கம் செய்யும்போது, மறுபடியும் உருவாகும் அந்த கப்பல், அதே கப்பலாக இருக்குமா? அல்லது வேறொன்றாக மாறுகிறதா?

இந்த தத்துவ விசாரணையை நோக்கி நாம் நகர்ந்தால் முதலாவது நூற்றாண்டுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஃப்ளுடார்ச் வரை இதற்காக நாம் மீள்பார்வை செய்ய வேண்டியிருக்கிறது.

I

கரோனியா பிரச்சனையால் தனது பார்வையை இழந்த ஒரு பெண், புகைப்படங்களின் வழியே தனது உலகை கட்டமைத்துக் கொள்ள விரும்புகிறாள். அவள் தினசரி சந்திக்கும் நபர்கள், எதிர்கொள்ளும் காட்சிகளை தனது புகைப்படக் கருவி வழியே உட்செலுத்தி தனது வாழ்வை தினசரி புதுப்பித்துக் கொள்கிறாள்.

பார்வை இழந்த நிலையில் அவள் சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும் நமக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை அப்படியே நங்கூரம் நிலைத்திருக்க செய்கிறது. ஒரு குடிசையில் வாழும் பல்வேறு பறவைகளை, சிறு விலங்குகளை அவள் நேசித்து, அந்த வீட்டின் பெண்மணியை தண்ணீரை இறைக்க செய்து அவள் எடுக்கும் புகைப்படமாகட்டும், அதற்கு முன்னதான பல்வேறு கலவையான புகைப்படங்களாகட்டும் அவளுக்கு வாழ்க்கையை வெவ்வேறு விதங்களில் வாழ்ந்து பழகக் கற்றுக்கொடுக்கிறது. கண் பார்வை வந்ததும், அவள் புகைப்படமெடுக்க கிளம்பிய அந்த நொடி முதல், அவள் சந்திக்கும் இந்த இரைச்சல் மிகுந்த உலகம் அவளை தொடர்ந்து தொந்தரவு செய்துக் கொண்டே இருக்கிறது. இறுதியில் இயற்கையிடம் சரணடைகிறாள். பனி மலைகளுக்கிடையில் ஓடும் ஆற்றின் இடையில் இருக்கும் ஒரு பாலத்தில் உட்கார்ந்துக் கொண்டு புகைப்படக் கருவியை எடுத்து, எந்தப் புகைப்படத்தையும் எடுக்க மனமில்லாமல் அதை அப்படியே மூடி வைக்க முயலும்போது, கேமராவின் மூடி, கீழே விழுந்து தண்ணீரில் கலந்து செல்கிறது.

புகைப்படக் கலைஞர்களின் உலகம் வார்த்தைகளற்ற உலகம். அங்கே எந்த ஒரு பொருளுக்கும், சம்பவத்திற்கும், உயிர்களுக்கும் இடையில் பரிபாலனை நடத்திக் கொண்டிருக்க வார்த்தைகள் தேவையே இல்லை. மௌனத்தின் மூலமும், கண்களில் விழும் காட்சிப் பிம்பங்களின் வழியே மட்டுமே அங்கே உயிர்களும், பொருள்களும் அவைகளை இணைக்கும் சம்பவங்களும் உரையாடிக் கொள்கின்றன. மௌனத்தின் வழியே ஒரு உரையாடல் நடக்க முடியுமென்றால் அது புகைப்படக் கலைஞனின் வாழ்வில் மட்டுமே பெரும்பாலும் சாத்தியப்படக் கூடியது.

புகைப்படம் எடுப்பது என்பது எப்போதும் கர்வப்பட்டுக் கொள்ளக் கூடிய ஒரு கலை. இந்த உலகின் ஒரு கனத்தை, அப்படியே நிறுத்தி வைக்கும் வல்லமை வாய்ந்த பிரம்மாக்கள் புகைப்படக் கலைஞர்கள். நாம் தவறவிட்ட பல அற்புத கணங்களை தனது உயிரற்ற ஒரு கருவியின் வழியாக, உயிரோட்டமாக நமக்கு மருவாப்பு செய்யக்கூடியவர்கள். நாம் காணாத உலகை நமக்காக சஞ்சரிக்க கூடியவர்கள். ஆனால் இயற்கையின் முன்னெல்லாம் நாமெல்லாம் ஒன்றுமே இல்லை என்று அவள் கேமராவை மூடி வைக்கும் அந்த காட்சியில் அவள் ஆன்மா என்னவாகிறது.

II

மருத்துவ ஆராய்ச்சி என்கிற பெயரில் விலங்குகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்கும் சாது ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலில் அதை கடுமையாக மறுத்து, உயிர் வேதனையை அனுபவித்து, மரணத்தில் வாசலில் சஞ்சாரம் செய்து, தான் வாழ்தலில் இருக்கும் சுவாரசியத்தை உணர்ந்துக்கொள்ளும் அடுத்த கணத்தில் அவன் அந்த மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்கிறான்.

அதற்கு முன்னர் அவனுக்கும், அந்த இளைஞனுக்கும் இடையே நடக்கும் உரையாடலின் வழியே இவர்கள் நிறுவ நினைக்கும் அந்த தத்துவார்த்துவ விசாரணைகள் எந்தவித பிரசாரமும் இன்றி நம்மையும் அந்த சுய விசாரணையில் இணைத்துக் கொள்வதாகவே இருக்கிறது.

III

தன்னுடைய பாட்டிக்காக மருத்துவமனையில் இருக்கும் இளைஞனிடம் பாட்டி கோரிநிற்கும் வாழ்விற்கான அர்த்தத்தின் பயணத்தில், அவன் சந்திக்கும் கிட்னி திருடல் தொடர்பான ஒரு சம்பவங்களும் அதற்காக அவன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் நமக்கு கதையாக சொல்லப்பட்டாலும், அதுதான் அவனது பாட்டி கோரி நின்ற ஒரு மனிதப் பிறப்புக்கான அர்த்தமாக உணர்த்தப்படுகிறது.

மூன்று கிளைக்கதைகளை பிரிந்து பயணிக்கும் இந்த படம், ஒரு புள்ளியில் இணைகிறது. அது இன்னொருவனின் ஆத்மா.

முதல் பாதியில் அந்த இளம்பெண் காட்சிகளின் வழியே உணரும் தத்துவார்த்துவ விசாரணைகளும், இரண்டாம் பாதியில் உரையாடல் வழியே பார்வையாளன் உணரும் தத்துவார்த்துவ விசாரணைகளும், மூன்றாம் பாதியில் ஒருவன் வாழ்வின் வழியே உணர்த்தப்படும் தத்துவார்த்துவ விசாரணைகளும் நமக்கு புதியதொரு கதைக்களத்தை கொண்டு வந்து கொடுத்திருகிறது.

கதையின் இரண்டாம் பயணத்தின், சாது காலையில் எழுந்து, அந்த மழைச் சாலைகளை கடந்து இறுதியாக இலக்கை அடையும் வரையிலான அந்த காட்சியை என்னவென்று சொல்வது. கண்களை நாம் பெற்றதின் அர்த்தத்தையும், தொழில்நுட்பத்தின் வழியே நாம் உணரவேண்டிய புத்துணர்ச்சி, உயிர் எழுச்சியையும் மிக அனாயசமாக ஒரு சில நிமிடங்களில் இந்த காட்சிகள் நமக்கு உணர்த்திவிட்டு செல்கிறது.

படத்தின் பெரும்பாலான பகுதிகளில் நீண்ட காட்சிகளும், Lengthy Shot களுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கதையின் மூன்றாம் பயணத்தில் அந்த இளைஞன் பாட்டிக்காக அவளது கழிவுகளை கழிக்க உதவும்போது அமைக்கப்பட்டிருக்கும் அந்த காட்சியும் நிச்சயம் இந்திய சினிமாவுக்கு புதிதான ஒன்று. ஒரு அலுவலக அறையைக் காட்டி, மருத்துவமனையாக நமக்கு சித்தரிக்கும் எல்லா சினிமாக்களுக்கும் இந்த மருத்துவமனை காட்சியை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.. சாது மேற்கொள்ளும் நீண்ட பயணத்திலும், இளைஞர் பாட்டிக்காக இத உதவியையும் இருவேறு கதைக்களத்தின் ஒரே மாதிரியான காட்சிப் பரிமானங்களாகவே இயக்குனர் உணர்த்துகிறார். காற்றாலைகளின் வழியே சாதுக்கள் மேற்கொள்ளும் பயணத்தை இத்தனை நீண்ட நெடிய காட்சியாக வடிவமைக்கும் அந்த தைரியம் எந்த இந்திய இயக்குனருக்கும் இதுவரை வராத ஒன்று.

படத்தின் பெரும்பாலான காட்சிகளை பார்க்கும்போது எனக்கே தெரியாமல் பல இடங்களில் மூச்சை அடைத்துக் கொண்டு காட்சிகளை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். ஒரு காட்சியில் வலிமையைக் கூட்ட அங்கே என்னவெல்லாம் இருக்க வேண்டும், எப்படியான காட்சியமைப்புகள் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். இறுதியில் இவர்கள் மூவரையும் இணைக்கும் அந்த புள்ளியாக வரும் நபரின் முகத்தைக் காட்டாமல் அவர் மேற்கொண்ட அந்த குகைப் பயணத்தின் வழியே அவரது ஆன்மாவை நமக்கு உணர்த்தும் அந்த பின்னணியில் எழும் இசை உயிரை உருக்கி, நெஞ்சை பிசைந்து எடுக்கிறது. படத்தின் பல இடங்களில் வசனங்கள் இல்லை, இசை இல்லை, ஆனால் காட்சிகள் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த இடத்திற்கு கடத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு மூன்று விதமான நபர்களின் வாழ்வியலை நேரடியாக படம்பிடித்தது போல் இருக்கிறது. யாருடைய நடிப்பிலும் கொஞ்சம் கூட மிகையோ, குறையோ இல்லை.

பங்கஜ் குமாரின் ஒளிப்பதிவை எப்படி பாராட்டுவது? ஒவ்வொரு காட்சியையும் நான் விளக்கி கொண்டிருந்தால் நிச்சயம் நீங்கள் ரசிக்க அங்கே ஒன்றுமே இருக்காது. இந்த படம் குறித்து ஒன்றுமே எழுதக் கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். காரணம் இது காட்சிகளின் வழியே உணரப்படவேண்டிய அனுபவம். மாறாக நான் வார்த்தைகளின் வழியே குறுக்கே நிற்க விரும்பவில்லை. நண்பர்கள் அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டும். கூட்டம் கூட்டமாக இந்த மாதிரியான படங்களை பார்ப்பதன் வழியே நாம் நமக்குள் நடத்தும் சுய விசாரணைதான் நமது இருத்தலை, வாழ்வின் மீதான பற்றுதலை, இன்னொரு உயிர் மீது செலுத்த வேண்டிய அன்பை நமக்கு போதித்துக் கொண்டே இருக்கும்.

- தமிழ் ஸ்டுடியோ அருண்

 

thamizhstudio@gmail.com

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: அருண் @ தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio