கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  அறிமுகம் TS கட்டுரைகள் TS சிறுகதைகள் TS நூல்கள் TS நேர்காணல்
 
 
 

 

 

 

 
     
     
     
     
வாயில்

போர்களத்தில் ஒரு பூ - தடையை தகர்ப்போம்..

 


இலங்கை ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்வை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட "போர்க்களத்தில் ஒரு பூ" என்கிற படத்திற்கு தணிக்கை வாரியத்தின் மண்டல தலைவர் & நடிகர் எஸ்.வி. சேகர் தணிக்கை சான்றிதழ் தர மறுத்திருக்கிறார். இலங்கை இந்தியாவின் நட்பு நாடு, இந்த படத்திற்கு அனுமதி கொடுத்தால் இலங்கை நாட்டுடனான நட்பு பாதிக்கப்படும் என்கிற வாதத்தையும் முன்வைத்திருக்கிறார். லீலா சாம்சன் தன்னுடைய குழுவோடு ஒட்டுமொத்தமாக பதவியை ராஜினாமா செய்தபோதே அடுத்த வருகின்ற வாரிய தலைவர்களால் நிச்சயம் இந்திய சினிமா மோசமான எதிர்விளைவுகளை சந்திக்கப்போகிறது என்று நினைத்தேன். எஸ்.வி. சேகர் போன்றவர்கள் எல்லாம் தணிக்கை வாரியத்தில் அமரவைத்தால் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றவர்களின் சிரிப்பு மிகு படங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். அதிலும் பிள்ளையாரை, சிவனை கிண்டலடித்து வசனம் வைத்தால் அதனை நீக்கிய பிறகே அனுமதி கிடைக்கும். அப்படி இருக்கையில் இசைப்பிரியாவின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அனுமதி கிடைக்குமா என்ன? முல்லை பெரியார் அணை பற்றிய படத்திற்கு இதே தணிக்கை வாரியம் அனுமதி அளித்தது. அப்போது இந்தியாவின் அண்டை மாநிலங்களான தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையேயான நட்பு பாதிக்கும் என்று அவர்களுக்கு தெரியாதா? மெட்ராஸ் கபே என்கிற படத்திற்கு அனுமதி அளித்தபோது, அதுவும் இருமாநில உறவுகளை பாதிக்கும் என்று தெரியாதா?

ஆனால், அந்த படங்களுக்கு அனுமதி மறுத்தாலும், நிச்சயம் எதிர்த்தே நான் கருத்து தெரிவிப்பேன். தணிக்கை என்கிற பெயரில் கருத்து சுதந்திரத்தை, படைப்பு சுதந்திரத்தை அரசு எந்திரங்கள் கட்டுப்படுத்த நினைத்தால் அதன் எதிர்விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும். மோடி அரசு பதிவி ஏற்றபின் தொடர்ச்சியாக படைப்பு துறை சார்ந்து மிகுந்த கட்டுப்பாடுகளும், தணிக்கைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போர்க்களத்தில் ஒரு பூ திரைப்படத்திற்கு நிச்சயம் தணிக்கை வாரியம் அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால் தடையை எதிர்த்து தமிழகத்தில் அந்த படத்தை திரையிட வேண்டும். தணிக்கை வாரியத்திற்கு எதிரான முதல் கலகக் குரல் தமிழகத்தில் இருந்தே பிறக்க வேண்டும். இந்த நேரத்தில் எஸ்.வி. சேகருக்கு கடிதம் எழுதுவதும், கையெழுத்து போராட்டம் நடத்துவதும் எவ்விதமான நல்ல முடிவையும் கொடுக்காது. மாறாக தணிக்கை வாரியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். தணிக்கை வாரியம் சான்றிதழ் மட்டுமே கொடுக்கும் உரிமையுள்ள அமைப்பு. தடைவிதிக்கவோ, அல்லது படங்களில் இருந்து காட்சியை நீக்கவோ அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்கிற அரசாணையை அரசிதழில் வெளியிட செய்ய வேண்டும். அப்போதுதான், இந்தியாவில் படைப்பு சுதந்திரம் பாதுகாக்கப்படும்.

எஸ்.வி. சேகருக்கும், தணிக்கை வாரியத்திற்கும் எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். போர்க்களத்தில் ஒரு பூ படம் வெளியாக அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

- தமிழ் ஸ்டுடியோ அருண்

 

go to top  
 

thamizhstudio@gmail.com

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: அருண் @ தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio