கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  அறிமுகம் TS கட்டுரைகள் TS சிறுகதைகள் TS நூல்கள் TS நேர்காணல்
 
 
 

 

 

 

 
     
     
     
     
வாயில்

Lootera – சினிமாவின் மொழி…

 

இந்த படம் பற்றி எழுதுவதற்கு முன்னமே மனதில் பட்டாம்பூச்சி பறக்கிறது என்று கவிதை பூர்வமாக எதையாவது சொல்ல வேண்டும்போல் இருக்கிறது. அத்தனை பெரிய ஆச்சர்யத்தை, சிலாகிப்பை நேற்று பார்த்த ஹிந்திப் படமான Lootera கொடுத்திருக்கிறது. அத்தனை பெரிய கதைக்களம் இல்லை. கருத்தியல் பூர்வமான அணுகுமுறை இல்லை (கருத்தியல் பற்றி பேசுவதற்கான கதைக்களம் இல்லை) ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு சினிமாவாக, மிக நுட்பமான பல விசயங்களால் அப்படியே பார்வையாளனை கட்டிப்போடுகிறது இந்த படம்.

முதல் காட்சியே நமக்கு, இது சாதாரண படமில்லை என்று உணர்த்திவிடுகிறது. அந்த மாளிகையில் (அரண்மனை மாதிரியான மாளிகை) அந்த கதாபாத்திரங்கள் கடந்து போகும் போது வைக்கப்பட்டிருக்கும் ஷாட்கள் மிக முக்கியமனா ஒரு காட்சி பரிமாற்றம். நிஜத்தில் நடப்பதை அதே நேர அளவோடு நம்மால் சினிமாவில் பதிவு செய்ய முடியாது. ஆனால் நிஜத்தில் நடப்பது போல சினிமாவிலும் உணரவைக்க நமக்கு கைக்கொடுப்பது Time Ratio. இதை மிக சரியாக கையாள நமக்கு இருக்கும் சாத்தியக் கூறு ஷாட்ஸ். இந்த படத்தின் முதல் காட்சியில் அந்த பெரிய மாளிகையில் நாமே பயணிக்கும் அனுபவத்தை ஷாட்ஸ் & time ratio கொடுத்து விடுகிறது.

நான் அடிக்கடி சொல்லும் சினிமா மொழி என்பதை நேரடியாக, அனுபவப்பூர்வமாக உணர்ந்துக்கொள்ள அவசியம் இந்த படத்தின் இடைவேளைக்கு முன்பான அந்த ஐந்து நிமிடக் காட்சியைப் பாருங்கள். காட்சிபிம்பங்கள் அப்படியே மனதில் ஆழ ஊடுருவி, மனதுக்குள் ஏற்படுத்தும் ரசவாதம் இந்த காட்சியில் இருக்கிறது.

உலகின் ஆக சிறந்த படைப்புகள் அனைத்தும், மிக பெரிய கதையை களமாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு சின்ன விசயத்தை, சம்பவத்தை எடுத்து கொண்டு அதை சுற்றி, மிக நுட்பமான விசயங்களை பின்னி படரவிட்டு, வாழ்வியலின் மிக அருகில் சென்று அதை தரிசிக்கவே நமக்கு கற்றுக் கொடுக்கிறது. இந்த படத்தின் அப்படியான நுட்பமான விசயங்களாக நான் பார்ப்பது, Color theory, set properties, shot composition, location, editing, cinematography, pre-planned script, costumes, casting. இந்த படத்தில் இந்த அத்தனை விசயங்களையும் நீங்கள் உங்களுக்கு தெரியாமல் ரசிக்கலாம்.

இடைவேளைக்கு முன்னரான அந்த காட்சியில், இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Color theory மிக முக்கியமானது. அந்த மனநிலைக்கேற்ற பக்குவத்தை, பதைபதைப்பை, ஆக்ரோஷத்தை, இயலாமையை, நம்மை அறியாமல் நம்மிடையே ஏற்படும் வெற்றிடத்தை இந்த வண்ணங்கள் சொல்லி செல்கிறது. அதை அப்படியே மனதுக்குள் பசைபோட்டு பதிய வைக்கிறது, அந்த காட்சியில் வரும் பின்னணி இசை. இசை என்றால் வெறும் சப்தங்கள் இல்லை என்பதை இந்த படத்தின் ஊடாக நிச்சயம் நம்மால் நேரிடையாக உணரவைக்க முடியும்.

முதல் பாதியில் இருந்து இரண்டாவது பாதிக்கு கதை பயணிக்கும் விதத்தை இத்தனை நேர்த்தியாக, சமீபத்தில் நான் பார்த்ததில்லை.

இரண்டாவது பாதி முழுக்க Set properties, costumes & location மூன்றும் அத்தனை பெரிய பங்கை வகிக்கிறது. குறிப்பாக பனி மலையில் இருக்கும் அந்த மரம் (இது செட்) அதில் ரன்வீர் உருவாக்கும் அந்த இல்லை, இறுதியில் அந்த இலையால் சொனாக்ஷியின் முகத்தில் மலரும் மலர்ச்சி என படம் கவிதை பாடுகிறது. இந்த இலையை முதல் பாதியில் இருந்தே கதையில் கொண்டு வந்து விடுகிறார்கள். Costumes பயன்பாடு பற்றி இந்த படத்தை வைத்து ஒரு சின்ன வகுப்பே எடுக்கலாம். குறிப்பாக ஒரே காட்சியை சொல்கிறேன். பனி படர்ந்திருக்கும் வெட்டின் தூண்களுக்கிடையே இருந்து மரத்துக்கருகில் ரன்வீரை சொனாக்ஷி பார்க்கும் அந்த காட்சியில்.இருவருக்குமான அந்த costume, shot composition இரண்டும் சேர்ந்து அந்த காட்சியை அப்படியே ஒரு ஓவியம் போல் மாற்றிவிடுகிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் தனியாக image ஆக எடுத்து இருவரது Costume ஐயும் இடம் மாற்றி, அல்லது வேறு costume கொடுத்து, shot composition ஐ மாற்றிப் பாருங்கள். அந்த காட்சி அத்தனை நேர்த்தியாக இருக்காது. இந்த படத்தில் பல காட்சிகள் இப்படி ஓவியம் போலவே இருக்கிறது. எல்லாவற்றையும் சொன்னால் கட்டுரையின் அளவு எங்கோ போய்விடும்.

இந்த படத்தின் ஆக பெரிய இன்னொரு பலம், Sustain shots. சொனாக்ஷியின் அந்த மூச்சிரைப்பை நானும் உணர்ந்தேன். அடிவயிற்றில் குண்டடி பட்டு, அந்த குண்டை எடுக்க ரன்வீர் பாடுபடும்போது அந்த வழியை, பரிதவிப்பை இன்னமும் பல ஆண்டுகளுக்கு என்னால் மறக்க முடியாது. ரன்வீரும், சொனாக்ஷியும் நதிக்கரையில் உட்கார்ந்து பேசும் அந்த ஒரே ஒரு காட்சியை பாருங்கள். 30 வினாடிகளுக்கு மேல், படத்தில் ஒரு சப்தம் கூட இல்லாமல், அப்படியே ஒரு மௌனம் அந்த அறையை ஆக்கிரமித்திருக்கும். சொனாக்ஷியின் கண்களில் வழியில் அந்த காதல் இன்னமும் என் மனதை விட்டு அகலவில்லை. இருமலை அடுத்து, அவளுக்குள் ஏற்படும் மூச்சிறைப்பு இன்னமும் என்னை பாதிக்கிறது. இது எல்லாமும் வைக்க ஒரே காரணம், sustain shots. இந்த sustain shots பற்றி மிக விரிவாக எழுத வேண்டும். இந்த கட்டுரையில் அது வேண்டாம்.

அமித் திரிவேதி, அடுத்த சில ஆண்டுகளுக்குள் இவரது உயரம் நிச்சயம் ரகுமானை தாண்டிவிடும் என்றுதான் நினைக்கிறேன். இயக்குனரின் விருப்பமா அல்லது இசையமைப்பாளரின் உத்தியா எது என்று தெரியவில்லை. இறுதியில் ரன்வீரை சுடும்போது அவர் சாய்ந்து விழும்போது இருக்கும் அந்த அமைதி அல்லது இசை மிக முக்கியமானது. தமிழில் (இளையராஜாவை தவிர) இசையைக் கூட வன்முறையாகவே பிரயோகிப்பார்கள். ஒரு காட்சியின் வன்முறை தன்மையை, சுய கழிவிரக்கம் கோரும் ஆபத்தை, மனதை கிழித்து உயிரை வாங்கும் உத்தியை இசையால் சாத்தியப்படுத்தலாம். ஆனால் இந்த படத்தில் ரன்வீர் இறந்த பிறகு இறுதியில் அந்த ஒற்றை இலையை வைத்து சொனாக்ஷியின் பரவசத்தை காட்டி முடித்திருக்கும் விதம், அந்த காட்சியின் பின்னனியி ஒலிக்கும் இசை, இந்த இயக்குனரை, இசையமைப்பாளரை ஆர தழுவி கட்டிக் கொள்ளலாம் என்று நினைக்க வைக்கிறது.

- தமிழ் ஸ்டுடியோ அருண்

 

go to top  
 

thamizhstudio@gmail.com

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: அருண் @ தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio