கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  அறிமுகம் TS கட்டுரைகள் TS சிறுகதைகள் TS நூல்கள் TS நேர்காணல்
 
 
 

 

 

 

 
     
     
     
     
வாயில்

அசுரகணம் – அலைந்து திரியும் மனித மனம்…

 

தமிழின் ஆக சிறந்த நாவல்கள் எல்லாமே 150 பக்கத்திற்குள்ளாக முடிந்துவிடுகிறது. காஷ்யபனின் “அசடு, சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”, அல்பேர்ட் காம்யுவின் outsider மொழிபெயர்ப்பான “அந்நியன்” தவிர, கரிச்சான் குஞ்சுவின் “பசித்த மானுடம்”, எஸ். சம்பத்தின் “இடைவெளி”, போன்ற நாவல்களின் பக்கங்கள் நினைவில் இல்லை என்றாலும், அளவில் இந்த அனைத்து நாவல்களும் மற்ற சமகால நாவல்களோடு ஒப்பிடும்போது சிறியவையாகவே இருக்கிறது. தமிழில் நாவலுக்கு நிறையவே தட்டுப்பாடு இருக்கிறது, நாற்பது வருடங்களுக்கு முன்னர் சி.சு. செல்லப்பா தமிழில் நாவல் குறைபாடு பற்றி கவலையோடு “தமிழில் இலக்கியத்தரமானது என்று குறிப்பிடத்தக்க நாவல்கள் அதிகமாகச் சொன்னாலும் ஐந்தாறுக்கு மேல் இல்லை. தமிழில் சிறுகதை சிறந்த வளம் பெற்றிருக்கிற அளவுக்கு, நாவல் துறையில் இன்றுவரைகூட ஒரு பத்துப் பன்னிரெண்டுக்கு மேல் சுட்டிக்காட்டுவதற்கு நாவல்கள் இல்லை என்பதும்கூட”, என்று சொல்லியிருப்பார். அதே நிலைதான் தமிழில் இன்னமும் தொடர்கிறது.

சம்பத்தின் இடைவெளி நாவலில் வரும் “தினகரன்”, கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம் நாவலில் வரும் “கணேஷன்”, காசியபனின் அசடு நாவலில் வரும் “கணேஷன்”, அல்பேர்ட் காம்யுவின் outsider இல் வரும் மெர்சோ போன்ற எல்லா கதாபாத்திரங்களும் எனக்கு தெரிந்து ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறது. இந்த எல்லா கதாபாத்திரங்களும் வாழ்வின் நிதர்சனத்தை நமக்கு உணர்த்தவும், வாழ்வின் சித்தாந்தங்களை மறு ஆய்வுக்குட்படுத்தும் சிந்தனையையும், வாழ்க்கையை அதன் அருகே சென்று வாழும் பித்த மனநிலையையும் நமக்குள் விதைக்கிறது. குறிப்பாக, அந்நியன் நாவலில் மெர்சோ தனது தாயின் ஈம சடங்கில் கலந்துக் கொள்வதும், பிறகு தன்னுடய அறைக்கு திரும்பும்போது அங்கேதான் நிம்மதி திரும்புகிறது என்று சொல்வதும், நமக்கு புதிது என்றாலும், ஒவ்வொரு மனிதனின் அடிமனதிலும், மரணம் ஏற்படுத்தும் வலி, துயரை தாண்டிலும் அந்த சடங்கில் கலந்துக்கொள்ளும், மரணத்தோடு தொடர்புடையவர்களின் மன ஓட்டத்தை இந்த நாவலில் அத்தனை துல்லியமாக பதிவு செய்திருப்பார். ஆனால் அது மட்டுமே முழு நாவல் அல்ல. பிறகு மெர்சோ சிறையில் இருக்கும்போது அவன் வாழ்க்கையை நோக்கி எழுப்பும் அத்தனை கேள்விகளும், நம்மை நாமே திரும்பி ஒரு சுய விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள கோரும் சிந்தனைத் தெறிப்புகள் நிறைந்த நாவல் அது.

க.நா.சுவின் “அசுரகணம்” இந்த வகை நாவலில் ஒன்று. இதற்கு முன் க.நா.சு. எழுதிய “பொய்த்தேவு” நாவலில் வரும் சோமு முதலியார் கதாபாத்திரம் மூலம் வாழ்வின் பல கோணங்களை அலசியிருப்பார். ஒரு முழுமையான மனிதனாக மாறிவிட மாட்டோமா என்கிற தவிப்பில் வாழ்க்கையை நடத்தும், மனிதரை முழுமையாக மனிதராகவே நாம் உணரும் வகையில் நாவலில் கதை சொல்லப்பட்டிருக்கும். சோமு முதலியார், சோமு பண்டாரமாக மாறும் இடம் ஒன்று போதும். நாம் நமது வாழ்வியல் முறைகளை, அதில் இருக்கும் சித்தாந்தங்களை நோக்கி நம் சிந்தனையை திருப்பிவிட. ஒரு நாவல் என்பதற்கான மிக சரியான வடிவத்தை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும், இந்த மாதிரி இருந்தால் அது நாவலாக இருக்கலாம் என்று பொய்த்தேவு பற்றி கூறலாம்.

அசுரகணம் நாவலின் தொடக்கமே நம்மை கொஞ்சம் புரட்டிப் போடுகிறது. நாதசுர ஓசையைக் கேட்டாலே எனக்கு சாவுதான் நினைவுக்கு வருகிறது என்று ராமன் சொல்ல ஆரம்பிக்கும்போதே, நாம் புனிதம் என்று நினைத்திருக்கும் எல்லாவற்றையும், மறுவிசாரணை செய்ய கோரும் படைப்பு இது என்பது கொஞ்சமேனும் புலப்படுகிறது. ராமனை சக கல்லூரி மாணவர்கள் கிராக்கு என்று அழைக்கும்போது ராமன் இவ்வாறு தனக்குள் பதில் சொல்கிறான். “கல்லூரியில் படிக்கும்போது சில நண்பர்கள் என்னை கிராக்கு என்று அழைப்பார்கள். அது ஒரு வகை மொழியாகக் கூட எனக்கு படவில்லை. என் சுபாவத்தை உள்ளபடியே, குறிப்பிடுகிற ஒரு சாதாரண அடைமொழியாகத்தான் நானே அதை ஏற்றுக்கொள்கிறேன். கிராக்கு என்று அழைக்கப்படுவதையும் பொருட்படுத்தாத கிராக்கு நான் என்பதை பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை போலும், தவிர இதெல்லாம் வெறும் வார்த்தைகள்தான். யாராவது வார்த்தைகளுக்கு பயப்படுவார்களா? வார்த்தைகளுக்கு பயப்படுகிறவர்கள், தன்னுடய நிழலை நோக்கி பயப்படும் கோழைகள்தான். என்று சொல்லிக்கொள்ளும் ராமனே பிறிதொரு சமயத்தில் இப்படியும் சொல்கிறான். “பைத்தியக்காத்தனங்கள் நிறைந்த சமூகத்தில், பைத்தியக்காரத் தனமில்லாமல் சிந்திப்பவனை நோக்கி, பைத்தியக்காரன் என்றுதானே இந்த பைத்தியக்கார சமூகம் சொல்லும்”. கல்லூரி மாணவர்களுக்கே உரிய ஒரு குணமான கல்லூரிக்கு போகாமல், சினிமா திரையரங்கிற்கு சென்று மணிக்கணக்கில் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு படம் பார்க்கப்போவதையும், அதை நானே ஒரு முறை செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஆனால் நான்கு மணி நேரம் வரிசையில் நின்றுவிட்டு பிறகு டிக்கெட் கொடுக்கு நான்கு நிமிடம் இருக்கும்போது டிக்கெட் எடுக்காமல் வெளியில் வந்துவிட்டேன். முன்னாள் இருந்த நான்கு பெரும், பின்னால் இருந்த நானூறு பெரும் என்ன டா சரியான முட்டாளா இருக்கானே என்று நினைப்பது போல் என் மீது அவர்கள் பார்வையை பதித்தார்கள். அதனாலென்ன, இந்த ஆக்கங்கெட்ட படத்தை பார்க்காமல் போனதால் நான் ஒன்றும் பெரிய முட்டாளும் அல்ல, இந்த படத்தை விடுவதால் அவர்கள் ஒன்றும் பெரிய அறிவாளியும் அல்ல, என்று தன்னை வஞ்சிப்பவர்களை நோக்கி ராமன் வைக்கும் உறுதியான மனப்பதிவு இது.

அசுரகணம் நாவலில் புறக்காட்சிகளை காட்டிலும், ராமன் எனும் கதாபாத்திரத்தின் அகத்தில் நிகழும் சுயம் நோக்கியே சம்பாஷனைகளே அதிகம். அவனது திருவல்லிக்கேணி வீடு, ஹேமாவின் தி.நகர் வேங்கட நாராயணா சாலையில் இருக்கும் வீடு, வெகு சில நேரங்களில் அவனது கல்லூரி என புறம் சார்ந்த நிலவரைவியல் கூறுகளும் இந்த நாவலில் மிக குறைவு. ஆனால் அகம் நோக்கி பயணிப்பதும், அதன் மூலம் நாம் புனிதம் என்று நினைக்கும் சிலவற்றை அதன் புனிதம் நோக்கி கேள்வி கேட்பதுமாக நாவல் விரிகிறது. மிக குறிப்பாக இந்த நாவலில் ஹேமாவின் தாய் குறித்த ராமனின் கற்பனை உருவகமும், அதனை அவன் கொன்றொழிக்க படும் பாடும், அந்த சூர்ப்பனகையை அழித்துவிட்டதாக அவனுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஆசுவாசமும், அதையொட்டி நிகழும் அவனின் பதற்றமும், ஒவ்வொரு தனி மனித மனதில் எழும் கசடுகளை, பயமுறுத்தும் அசரிரீகளை அழித்தொழிக்கும் மாயக் குறியீடுகளாகவே இருக்கிறது.

இந்த நாவல் முழுவதும், ராமன் கதாபாத்திரம் தன்னை நோக்கியே எல்லா கேள்விகளையும் எழுப்பிக் கொள்கிறது. ஆனால் அந்த கேள்விகள், இந்த சமூகத்தின் மொன்னைத் தனத்தை நோக்கி எழுப்பப்படும் ஒருவித அபாய ஒலியாகவே இருக்கிறது. அவன் உலகிற்கு ஏதும் செய்திகள் சொல்ல விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால், தான் விரும்பும் ஒரு பெண்ணின் வீட்டில், அந்த வீட்டில் உள்ள சோஃபா சேரில் அமர்ந்துக் கொண்டிருப்பதே தனக்கு தாயின் கருவறையில் இருக்கும் கதகதப்பை கொடுக்கிறது என்று மிக மேம்போக்கான, சிந்தனை வெளியற்ற ஒரு மனிதனாகவே அவன் இருக்க விரும்புகிறான். ஆனால் அவனே சிக்மண்ட் ப்ராயிட் பற்றியும், யுங் பற்றியும், பியாட்ரிஸ், டாண்டே காதல் பற்றியும், சுதந்திரம், சிந்தனை, சித்தாந்தம் என்பது பற்றியும் நிறைய விவாதங்களை முன்வைக்கிறான்.

நாம் உண்மையாகவே சுதந்திரத்தை விரும்புகிறோமா? அல்லது சுதந்திரம் எனும் ஒற்றை சொல் நோக்கிய பயணத்தில் அப்படி இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா? நாம் உண்மையாகவே சுதந்திரத்தை விரும்ப முதலில் சுதந்திரம் என்பதன் அடிப்படை நமக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் நம்மில் யாருக்கும் சுதந்திரம் என்பதன் மீதான பெரிய புரிதல் ஒன்றும் இல்லை. ஒரு ஆன் பெண்ணிடம், ஒரு பெண் ஆணிடம், ஒரு குடும்பம் சமூகத்திடம், ஒரு சமூகம் அந்த நாட்டிடம், ஒரு நாடு, உலகின் அதை விட வலிமை மிக்க இன்னொரு நாட்டிடம் என எல்லா இடங்களிலும் நமது சுதந்திரம் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. படிக்கிற இடத்திலேயே நமது சுதந்திரம் நமக்கானது இல்லை, என்பதை நாம் உணர மறுத்துவிடுகிறோம். சுதந்திரம் என்பதைக் காட்டிலும், ஒரு கூட்டில் இருந்து இன்னொரு கூட்டிற்கு தாவுவதை, இந்த கூட்டை விட அந்த கூடு கதகதப்பாக இருக்கும் என்கிற எண்ணத்தில் நாம் தொடர்ந்து கூடு தாவுகிரோமே தவிர, சுதந்திரம் பற்றி நாம் ஒருபோதும் சிந்திப்பதே இல்லை. கூடு தாவுதலையே நாம் சுதந்திரம் என்று நினைத்துக் கொள்கிறோம். சுதந்திரம் குறித்து ராமன் ஏதோ ஒரு இடத்தில் இப்படி சிந்திக்கிறான். இந்த வரிகளை கொஞ்சம் ஆழமாக படித்தால் நாம் எத்தனை பெரிய ஏமாளிகள் என்பது நமக்கு தெரியும். சுதந்திரம் குறித்த ஒரு புரிதலே இல்லாமல், சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

நவகிரகங்களை கணித்து தனக்கான நன்மையை உருவாக்கிக் கொள்ள மனிதன் முயல்கிறான், ஆனால் நவக்கிரகங்களுக்கு மனிதனுக்கு தொந்தரவு செய்வதை தாண்டி வேறொன்றும் வேலை இல்லையா என்ன? என்று ஜோசியத்தை சாடுவதோடு, கல்வி பற்றியும், கடவுள் பற்றியும் இன்னமும் நாம் நமது சிந்தனை வளத்தின் கூறுகள் பற்றியும் யோசிக்க வைக்க இந்த நாவல் முழுவதும் ராமன் தன்னை நோக்கி கேள்விகள் எழுப்புகிறான். சிந்திக்காமல் இருப்பதே ஆக பெரிய சிந்தனை வளம் என்றும், ஆனால் நாம் அப்படி இருக்க பழகிக் கொள்ளவே இல்லையே என்கிற ஆற்றாமையையும் சொல்லுமிடத்தில், இந்த சமூகத்தின் மீதான நமது புரிதலை கேள்விக்குட்படுதுகிறான்.

எவ்வித இலக்கும் இல்லாமல், திருவல்லிக்கேணியில் இருந்து மவுண்ட் ரோடு வழியாக, சீனா பஜார், தாண்டி மீண்டும் வேங்கட நாராயண சாலை வழியாக ஹேமாவை பார்க்க வரும்போதும், பின்னர் அவர்களிடத்தில் ஏதும் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறுவதும் ஒரு பித்துப் பிடித்தவன் போல ராமன் அலைந்து திரிவதும், இந்த அழகிய ஸ்திரீயே எனக்கு வாழ்க்கை துணையாக வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவதும், பின்னர் அவள் அத்தனை அழகா என்று அவனது தங்கை ருக்கு கேள்விக்கேட்கும்போது அவள் ஒன்றும் அத்தனை அழகு இல்லையே, என்று தனக்குள் பிசகிக் கொள்வதுமாக ராமன் எது ஒன்றிலும் தன்னை நிலைப்படுத்துக் கொள்ளாதவனாகவே கடைசி வரை இருக்கிறான். இறுதியாக அவனுக்கு ஹேமாவோடு திருமணம் செய்வதைப் பற்றி பேசி முடித்து, திருமண செய்தி வரும்போது, திருமணம் செய்து கொள்வதில் எனக்கு ஒன்றும் அத்தனை பெரிய பிரச்சனை இல்லை, ஆனால் திருமணத்தில் நாதசுர ஓசைக் கேட்குமோ என்று முடிக்கிறான்.

இப்படி ஒரு பித்துப் பிடித்தவனின் வார்த்தைகளின் வழியே, சிந்தனையின் வழியே வாழ்க்கையை ரசிப்பது, அல்லது தரிசிப்பது என்பது நமக்குள்ளும் இருக்கும் பித்தனை வெளிக்கொணரும் செயல். வாழ்க்கை முழுவதும், நாம் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்துவிட முடியாது. இந்த சமூகம் நம்மை பித்துப் பிடித்தவனாக மாற்றிவிடுவதற்கு முன்பாக நாமாகவே நம்மை பித்தனாக மாற்றிக்கொள்வதும், அதன் மூலம் வாழ்க்கையை தரிசிப்பதும், அந்த பித்தநிலையில் நம்மோடு இணையும் மனிதர்களை நாம் நேசித்தும் வந்தால், வாழ்க்கையே அதன் உச்சத்தில் இருந்துக் கொண்டு வரவேற்கும். ஆனால் இந்த நாவலை வாசிக்கும் அத்தனை போரையும் இந்த நாவல் ஈர்க்குமா என்றால் தெரியாது என்றே சொல்வேன். நாம் நமது அகத்தின் வழியே என்றாவது நம்மை நோக்கி கேள்விகள் எழுப்பியிருந்தால், இலக்குகள் இல்லாமல் பயணித்திருந்தால், இன்னொருவனுக்கு துரோகம் இழைக்காத அப்பாவி நான் என்று சொல்லாமல், இழைத்த துரகத்தை நினைத்து அது ஒன்றும் அத்தனை பெரிய துரோகமில்லையே என்று உங்களைத் தேற்றிக் கொண்டிருந்தால், ஒவ்வொரு நொடியும் புனிதமான சிந்தனையை நோக்கியே காலத்தை தள்ளாத மனிதனாக இருந்தால், குடும்பம், சமூகம் என்று எவ்வித அமைப்போடும், பெரிய ஒட்டுதால் இல்லாத மனிதனாக இருந்தால், யாருக்கும் சுதந்திரம் பற்றி போதிக்காமல், அவர்களின் சுதந்திரத்தை அவர்களையே அனுபவிக்க செய்திருந்தால் நிச்சயம் இந்த நாவல் உங்களுக்கு ஒரு புது ஒளியேற்றும். உங்களை அப்படியே புத்தகத்தில் வாசிப்பது போல் உங்களுக்கு தோன்றும்.

சிறு வயதில் படித்த, அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதை தொகுப்பும் இந்த வகையான பித்த மனநிலையில் வாழ்க்கையை அதன் அருகில் சென்று தரிசிக்கவே நமக்கு கற்றுத் தருகிறது.

- தமிழ் ஸ்டுடியோ அருண்

 

thamizhstudio@gmail.com

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: அருண் @ தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio