ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் – ௦01 - அக்னிப்பார்வை
And the Oscar Goes to ..
“ஓவியங்களை படிக்கத் தெரிந்தவர்களுக்கு அதில் என் சுய சரிதையை எழுதியுள்ளேன்”
-ஓவியர் பிகாஸோ
மார்ச் 21, 1994. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. உலக அளவில் மிகவும் பிரபலமான அமெரிக்க அகடெமியால், அமெரிக்க திரைப்படங்களுக்கு வழங்கப்படும் "66வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா" நடைப் பெற்றுக்கொண்டிருந்தது. ஆஸ்கர் விருது அமெரிக்கர்களுக்கென்றில்லை, உலக அளவிலான பல திரைப்படக் கலைஞர்களின் கனவு. ஆஸ்கர் விருதின் ஆரம்பம், மற்றும் பத்திரிக்கைகாரர்களுக்கு முக்கியமான சிவப்பு கம்பள வரவேற்ப்பு தொடங்கியிருந்தது.
 |
பல ஹாலிவுட் கலைஞர்கள் ஒய்யாரமாக புகைப்படத்திற்கு காட்சியளித்தபடி சென்றுக்கொண்டிருந்தனர். வெளியே புன் முறுவலுடன், மனதில் லேசான பதட்டதுடன் சிவப்பு கம்பளத்தை கடந்து ‘கோடக்’ அரங்கிற்குள் நுழைந்தார் ஸ்டிவன் ஸ்பீல்பேர்க். இந்த ஆண்டு அவர் இயக்கியிருந்த ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ என்கிற படம் 12 ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைகளை பெற்றிருந்தது. அந்த படத்தை இயக்கி தயாரித்தவர் என்கிற முறையில் ஸ்பீல்பேர்கிர்ற்கு இரண்டு பரிந்துரைகள் கிடைத்திருந்தன. ஆஸ்கருக்கு ஸ்பில்பேர்கின் பெயர் பரிந்துரைக்கப்டுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே சிறந்த இயக்குனருக்காக அவர் பெயர் பரிந்துரைக்கபட்டிருக்கிறது. ஆனால் வென்றதில்லை. |
இந்த முறை ஸ்பீல்பேர்கிற்கு சற்றே நம்பிக்கை வர காரணம் அவர் இயக்கியிருந்த படத்தின் கரு.
ஹிட்லர் ஜெர்மெனியை ஆளும்போது, யூத இனத்தை பூண்டோடு அழிக்க முனைந்தார். அப்போது யூத இனத்தவர்கள் சிறைபிடித்து ’சித்திரவதை முகாம்களில்’ வைத்து கொல்லப்படுவார்கள். முகாமில் இருக்கும் யூதர்களை ஜெர்மனி வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி அவர்களிடமிருந்து கடினமான உழைப்பை பிழிந்து பணம் ஈட்ட தொடங்கினர். அதற்கு சம்பளம் யூதர்களுக்கு கொடுக்க வேண்டாம். முகாமை பாதுகாக்கும் எஸ். எஸ் அலுவலர்களுக்கு கொடுத்துவிட்டால் போதும்.
இந்த முறையை பயன்படுத்து யூதர்களிடமிருந்து அபகரித்த ஒரு தொழிற்சாலையை குறைந்த விலைக்கு வாங்கி, யூதர்களின் உழைப்பை பிழிந்து, பொருள்கள் பல செய்து வியாபாரத்தில் லாபமீட்டும் ஜெர்மெனியரான ’ஆஸ்கர் ஷிண்டலர்’ என்பவர் பின்பு மனம் வருந்தி தான் சம்பாரித்த பணத்தை கொண்டு ஜெர்மெனி அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களிடமிருக்கும் யூதர்களை விலைக்கு வாங்கி பாதுகாப்பாக அவர்களை ஜெர்மெனியில் இருந்து தப்பிக்க வைப்பது தான் கதை.
இரண்டாம் உலகப்போர், யூத கொடுமைகள், அவர்களை காப்பாற்றூம் ஷிண்ட்லர் என ஒரு படத்தின் சுவாரசியத்திற்கு தேவையான அனைத்து அம்சங்கள் இருந்தும், ஸ்பீல்பேர்க் யூத இனத்தின் கண்ணீரையும், மனநிலையையும் உலக மக்களுக்கு புரிய வைக்க தீர்மானித்து இதை ஒரு கலைப் படமாகவே எடுத்திருந்தார்.
 |
ஸ்பீல்பேர்கிற்கு அத்தனை நாள் வரை, அவரது படங்கள் பணத்தையும், புகழையும் அள்ளித்தந்தாலும் அவரின் கனவான ஆஸ்கர் விருதை எநத படமும் வாங்கி கொடுக்கவில்லை. அதனால் இந்த படம் அந்த கனவை பூர்த்தி செய்யும் என ஸ்பீல்பேர்க் நிச்சயம் நம்பினார். அவருடன் போட்டியில் இருக்கும் இயக்குனர்களும் ஜாம்பவான்கள் தான் அதனால் தான் ஸ்பீல்பெர்க் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்துக்கொண்டிருந்தன.
|
விழா தொடங்கியது. இந்த விழாவில் சிறப்பம்சமாக அதை தொகுத்து வழங்கும் பொறுப்பை பெற்றிருந்தவர் ’வுப்பி வுட்பேர்க்’. இவர் கறுப்பினத்தை சேர்ந்தவர். இத்தனை ஆண்டுகளில் முதன் முதலாக ஒரு கறுப்பினத்தை சேர்ந்தவர் ஆஸ்கர் விழாவை தொகுப்பது இது தான் முதன்முறை.
ஆஸ்கர் விழாவின் தொகுப்பாளராக இருப்பது மிகவும் சவாலான காரியம். உலகின் கவனமே விழா மீதிருக்கும், போட்டியாளர்கள் பரப்பரப்புடன் இருப்பார்கள். இத்தனை நாள் ஆஸ்கர் விருதின் தொகுப்பாளராக இருந்தவர்கள் சிறப்பாக செய்திருப்பார்கள். அதனால், சிறு தவறும் விமர்சனத்திற்குள்ளாகும். வுப்பி வுட்பேர்க் அதை சிறப்பாக கையாள்வார் என்று அகடெமி நம்பியது. அவர் விழாவை ஆரம்பித்தார்.
பல நகைச்சுவை துணுக்குகளுக்கு ஸ்பீல்பெர்க் சிரித்தாலும் வயிற்றில் ஐஸ் கட்டி உருண்டுக் கொண்டிருந்தது. அடி மனதில் ஒரு விதமான வலி. எதிர்பார்ப்பு, ஏக்கம். தன் சிறு வயதில் தன் தந்தை வாங்கி கொடுத்த 8 எம் எம் காமிராவில் படம் பிடிக்க தொடங்கியதிலிருந்து, பின்பு இது தான் நம் வாழ்க்கை என்று தீர்மானித்த பின்னர் அவரின் ஆழ் மனது கனவு ஆஸ்கர்.
அவர் எடுத்திருக்கும் படமும் அவரின் வாழ்க்கையை ஒட்டியது தான். அவரின் தந்தை வழி உறவினர்கள் ரஷியாவிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் – ஆம், ஸ்பீல்பேர்கின் பூர்வக்குடியினர் ரஷியாவையும், போலாந்தையும் சேர்ந்தவர்கள். அவர் தந்தை இரண்டாம் உலக போரில் நேசநாட்டு படைகள் சார்பாக அமெரிக்காவின் ரேடியோ பிரிவில் வேலை பார்த்தவர். ’தனக்கு நெருக்கமான ஒரு கதையை சிறப்பாக எடுத்திருக்கிறோம் விருது கிடைக்குமா?’ என ஸ்பீல்பேர்க் நினைத்துக் கொண்டிருந்தார்.
இதற்கு முன் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்த்து அந்த விருதை கை நழவ விட்டிருந்தவர். அதனால் சூடுபட்ட பூனையின் நிலையில் தான் இருந்தார் ஸ்பீல்பேர்க்.
விருதுகள் வழங்க தொடங்கி விருதுகளை இழப்பதும், பெறுவதுமாக ஷிண்டலர்ஸ் லிஸ்ட் கவனம் பெற தொடங்கியிருந்தது. இந்த படத்திற்காக வயலினை கொண்டு படத்தின் ‘தீம்’ இசையை கொடுத்திருந்தார் இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ். யூத இனத்தின் சோக வரலாற்றை உணரும் விதமாக மனதை பிழிந்த அந்த இசையை சற்றே ’ஹேப்பி நோட்டாக’ மாற்றியிருந்தனர் அகடெமியின் இசை குழுவினர். ஷிண்டலர் லிஸ்ட் திரைப்படத்திற்காக அந்தப் படத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் விருதை வாங்கும் பொழுது அரங்கம் அந்த இசையாளும் கைதட்டல்களாலும் அதிர்ந்துக்கொண்டிருந்தது.
ஸ்பீல்பேர்க் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறந்த இயக்குனருக்கான விருதை அறிவிக்க ஹாலிவுட்டின் மிக சிறந்த நடிகரும், ஆஸ்கர் விருதை வென்ற இயக்குனருமான ‘கவ் பாய்’ க்ளீண்ட் ஈஸ்ட்வுட் மேடையேறினார். ஸ்பீல்பேர்கின் இதயம் படபடபக்க தொடங்கியது.....
மெதுவாக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களையும், எந்த படத்திற்காக என்றும் சொல்ல துவங்கினார்...
ஜிம் ஷேர்டன் – “இன் த நேம் ஆஃப் ஃபாதர்”
ஜேம் கேப்பியன் – ”பியானோ”
ஜேம்ஸ் ஐவரி – “இன் தெ ரிமைன்ஸ் ஆப் தி டே”
ஸ்டிவன் ஸ்பீல்பேர்க் – “ஷிண்டலர்ஸ் லிஸ்ட்”
ராபர்ட் ஆல்ட் மேன் – ”ஷார்ட் கட்ஸ்”
ஆஸ்கர் விருதை வென்றவரை பற்றிய குறிப்பை கொண்ட உறை சீல் செய்யப்பட்டிருக்கும். அதை பிரித்ததும் அதன் மேல் உறையில் “அண்ட் தெ ஆஸ்கர் கோஸ் டு” என எழுதியிருக்கும். விருதை கொடுப்பவர்கள் மரபாக அந்த வாக்கியத்தை சொல்லுவார்கள் (கட்டாயமில்லை சிலர் ‘அண்ட் தெ வின்னர் ஈஸ்” என்றும் சொல்லியிருக்கிறார்கள்).
ஈஸ்ட்வுட் ’சீலை’ பிரித்து வென்றவரின் பெயர் பொறித்திருக்கும் சிறிய அட்டையை எடுத்து வெற்றி பெற்றவரின் பெயரை கூறினார்..
’அண்ட் தெ ஆஸ்கர் கோஸ் டு, இது நிச்சயமாக பெரிய இன்ப அதிர்ச்சி தான்’
‘ஸ்டீவன் ஸ்பீல்பேர்க்’
 |
ஸ்பீல்பெர்க் வாழ்க்கையில் இது ஒரு மைல்கல். தன் காதல் மனைவியிடமிருந்து முத்தத்துடனும், தன் அன்பு தாயாரை கட்டிப்பிடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மிகுந்த சந்தோஷத்துடன் ஸ்பீல்பேர்க் அந்த விருதை பெற்றார். இதற்கு முன்பு வெளியாகியிருந்த ஜுராசிக் பார்க் கொடுத்த பணத்தைவிட இந்த படம் மிக பெரிய கவுரவத்தை கொடுத்தது. கனவை நிறைவேற்றியது. விரைவாகவே, அதே மேடையில் தாகம் தீர அந்த ஆண்டின் சிறந்த படத்தை தயாரித்தவர் என்கிற முறையிலும் ஸ்பீல்பேர்க் இன்னொரு ஆஸ்கர் வாங்கி,
|
தன் ஆஸ்கர் பயனத்தை இரண்டு விருதுகளுடன் தொடங்கினார். சிறந்த படம் ‘ஷிண்டலர்ஸ் லிஸ்ட்’
எத்தனை கால கனவு, தன் கையில் தவழ்ந்து கொண்டிருக்கும் ஆஸ்கரை பார்த்தவாரு பெருமித்தில் ஸ்பீல்பேர்க்.
அடிபடையில் யூதர்கள் அவருக்கு விருது வாங்க உதவினாலும் இந்த படம் அவருக்கு கிடைத்ததே பெரிய விஷயம் தான். குறிப்பாக இதில் ஒரு முரன், இதன் பின்பு தான் அதாவது ஷிண்டலர்ஸ் லிஸ்ட் படத்தை எடுத்த பின்பு தான் அவர் தன்னை யூதர் என சொல்லிக் கொள்ளவே பெருமைப்பட்டார். அவருடைய சிறு வயதுகளில் அவருக்குள் ஒரு வித யூத எதிர்ப்புணர்வு இருந்துக்கொண்டே இருந்தது. தான் ஏன் யூதனாக பிறந்தோம் என அவர் வருத்தபட்ட நாட்கள் அதிகம்.
இந்த ஹாலிவுட்டின் மகாராஜாவை பற்றி தெரிந்துக்கொள்ள அவரின் பூர்வீகத்திலிருந்து ஆரம்பிப்போம். அப்பொழுது தான் அவர் திரையில் எழுதியிருக்கும் சுயசரிதயை புரிந்துக்கொண்டு நம்மால் இவர் படங்களை அலசி ஆராய முடியும்.
பிரம்மாண்டம் வளரும்...
இப்பகுதி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று புதுப்பிக்கப்படும்.