இதழ்: 31    பங்குனி (April), 2015
   
 
  உள்ளடக்கம்
 
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - தினேஷ்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்
--------------------------------
வெட்கத்தினால் உடைந்தழிந்து போனார் புத்தர் - - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - சுகுமாரன்
--------------------------------
டாக்குமெண்டரி படங்களின் தந்தை ராபர்ட் ஃப்ளஹர்ட்டி - ரவி இளங்கோவன்
--------------------------------
குறும்படங்களின் பத்தாண்டுகள் – 1900 – 1909 - லதா ராமகிருஷ்ணன்
--------------------------------
”கண்ணீர் வேண்டாம் சகோதரி” – தான்யா
--------------------------------
 
   

   

 

 

டாக்குமெண்டரி படங்களின் தந்தை ராபர்ட் ஃப்ளஹர்ட்டி

- ரவி இளங்கோவன் :: நன்றி: சிலம்பு 2002

டாக்குமெண்டரி திரைப்படங்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ராபர்ட் ஃப்ளஹர்ட்டி. எவ்வித முன் அனுபவமின்றி திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்து ராபர்ட் ஃப்ளஹர்ட்டி உருவாக்கிய முதல் படம் ”நானூக் ஆப் த நார்த்”. நம்மால் அறியப்படாத, நாகரீகத்தின் சிறு சாயல்கூட எஸ்கிமோ இன மக்களின் அன்றாட வாழ்க்கையை, ஒரு காவிய அழகுடன் நானூக் ஆப் த நார்த்தில் சித்தரித்திருக்கிறார் ராபர்ட் ஃப்ளஹர்ட்டி.

ஃப்ளஹர்ட்டி 1884ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அமெரிக்காவில் மிசிகனிலுள்ள அயன் மெளண்டன் என்ற இடத்தில் பிறந்தார். ராபர்ட் ஹென்றி ஃப்ளஹர்ட்டி – சூசன் என்ற தம்பதியருக்குப் பிறந்த ஏழு குழந்தைகளில் மூத்தவர் ஃப்ளஹர்ட்டி.

ஃப்ளஹர்ட்டிக்கு ஒன்பது வயதாகும்போது சுரங்கப் பொறியாளரான அவரது தந்தை, வேலை தேடி குடும்பத்துடன் கனடாவின் வட பகுதிக்கு இடம் பெயர்ந்தார். இதனால் முறையான கல்வி அவருக்கு கிடைக்கவில்லை. அங்கு சுரங்கங்களுக்கு அருகில் இருந்த குடியிருப்பில் ஃப்ளஹர்ட்டியின் குடும்பம் வசித்தது. இதனால் சுரங்கத் தொழிலாளர்களாக இருந்த பழங்குடி மக்களின் நேசமும், நெருக்கமும் ஃப்ளஹர்ட்டிக்குக் கிடைத்தது. அம்மக்களின் இயல்பான, சுதந்திரமான வாழ்க்கை முறை ஃப்ளஹர்ட்டியைக் கவர்ந்தது.

மெக்கன்சி என்பவர் ஃப்ளஹர்ட்டியை ஹட்சன் விரிகுடாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இரும்புத்தாது கிடைக்கிறதா? என்பதைக் கண்டறியும் ஆராய்வாளராகப் பணியில் அமர்த்தினார். மிகுந்த துணிச்சலுடன் இயற்கையின் சீற்றங்களைப் பொருட்படுத்தாமல் துடுப்பால் இயங்கும் ஒரு படகின் உதவியோடு அப்பகுதிகளில் சுற்றித் திரிந்தார். குறிப்புகள் எடுத்தார். ஸ்டில் கேமராவின்மூலம் புகைப்படங்கள் எடுத்தார்.

ஒருமுறை ஃப்ளஹர்ட்டி பயணம் மேற்கொள்ளச் சென்றபொழுது தற்செயலாக மெக்கன்சி புதிதாக அறிமுகமாகியுள்ள திரைப்படக் கேமராவை இயக்குவதற்காக ஈஸ்ட்மேன் கம்பெனியில் இருவாரப் பயிற்சி பெற்றார் ஃப்ளஹர்ட்டி. அதன் பின் 1912-லிருந்து 1915 வரை அப்பனிப் பிரதேசத்தில் பலமுறை பயணம் செய்தார். 70,000 அடி படப்பிடிப்புடன் அவரது பயணம் முடிந்தது. ஃப்ளஹர்ட்டி தவறுதலாக அணைக்காமல் போட்ட சிகரெட் துண்டினால் அவரது அயரா உழைப்பினால் உருவான படச்சுருள்கள் தீக்கிரையாகின. அதனால் ஃப்ளஹர்ட்டி மனந்தளரவில்லை. மீண்டும் கொப்பளிக்கும் உற்சாகத்துடன் அப்பணியில் ஈடுபட முனைந்தார். பெரிய நிறுவன உரிமையாளர் ஜான் ரெவில்லான் அவருக்கு உதவ முன் வந்தார்.

கனடாவின் வட பகுதியில் பல ஆண்டுகள் ஆய்வாளராக இருந்த ஃப்ளஹர்ட்டிக்கு எஸ்கிமோ மக்களின் வாழ்க்கை தெரியாதது இல்லை. ஆனாலும், ஃப்ளஹர்ட்டி ”நானூக் ஆஃ த நார்த்” ஐப் படமாக்குவதற்கு ஓராண்டு ஆய்வு நடத்தினார். பின்னர் தன் மனைவி பிரான்சஸ் ஹப்பர்ட் ஃப்ளஹர்ட்டியுடன் 1920 – 1922 வரை எஸ்கிமோ மக்களோடு வாழ்ந்தார். அவர்கள் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்து அதிலிருந்தே ”நானூக் ஆப் த நார்த்” திரைக்கதையை வடிவமைத்துப் படமெடுத்தார்.

ஃப்ளஹர்ட்டியின் திரைப்படங்கள் அனைத்திலுமே இயற்கைக்கும் மனிதனுக்குமிடையிலான போராட்ட மையப் பொருளாக இருந்தது. நானூக் ஆப் த நார்த்தில் (1922) நானூக், அவனது மனைவி நைலா, மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்தின் மூலம் எஸ்கிமோ இன வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பனி படர்ந்த பிரதேசத்தில், கடுங்குளிரில் வாழும் ஒரு குடும்பம் உணவுக்காக நிகழ்த்தும் போராட்டத்தையும், இயற்கையை எதிர்கொள்ளும் தன்மையையும் நானூக்கில் ஃப்ளஹர்ட்டி காட்டுகிறார்.

நானூக் இக்லூ எனப்படும் பனியாலான எஸ்கிமோக்களின் வீடு கட்டும் காட்சியும், வால்ரஸ் வேட்டையாடும் காட்சியும் இப்படத்தின் சிகரங்களாக அமைந்துள்ளன. படம் முடியும்பொழுது அம்மக்களின் வாழ்க்கை பார்வையாளர்களின் மனதில் சோகத்தைக் கவியச்செய்யும் விதத்தில் படமாக்கியுள்ளார் ஃப்ளஹர்ட்டி.

ஒரு பொழுதுபோக்குப் படத்திற்குரிய காதல், வீர சாகசங்கள் போன்ற வழக்கமான அம்சங்கள் எதுவும் நானூக்கில் கிடையாது. எனவே அதை வெளியிடுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. இறுதியில் பதே என்ற நிறுவனம் விநியோக உரிமை பெற்று ஹெரால்ட் லாயிட்சின் தி கிராண்ட் மாஸ் பாய் திரைப்படத்தின் ”நானூக் ஆப் த நார்த்” ஐ சேர்த்து நியூயார்க்கிலுள்ள கேப்பிட்டல் தியேட்டரில் திரையிட்டது. நானூக் அனைவரது பாராட்டையும் பெற்றது. லண்டன், பாரீஸ், நகரங்களில் ஆறு மாதங்களும், ஜெர்மனி, இத்தாலி, ஸ்காண்டிநேவியா போன்ற இடங்களில் அதைவிட அதிகமாகவும் ஓடியது. 55,000 டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட நானூக் ஆப் த நார்த் நான்கே ஆண்டுகளில் உலகளவில் 2 இலட்சத்து 51,000 டாலர்களுக்கு மேல் வசூலித்தது. டாக்குமெண்டரி என்று கூறப்பட்டாலும், படத்தின் அபார வெற்றி காரணமாக நானூக் ஆப் த நார்த் வெற்றிகரமான முழு நீள திரைப்பட வரிசையில் இடம் பெற்றது.

உலகமெங்கும் நானூக்கின் வாழ்க்கையை ரசித்து மக்கள் பாராட்டிக்கொண்டிருந்த நேரத்தில் நானூக் ஆக நடித்த எஸ்கிமோ அல்லாகரியல்லாக் பசிக் கொடுமையினால் இறந்து விட்டதாக ஃப்ளஹர்ட்டிக்குத் தகவல் வந்தது. வியாபார நோக்கமற்ற உண்மைக் கலைஞனாக வாழ்ந்த ஃப்ளஹர்ட்டி இச்செய்தியை விளம்பரப்படுத்த விரும்பவில்லை.

நானூக் ஆப் த நார்த் பெற்ற வெற்றியின் காரணமாக ஹாலிவுட்டின் பாரமவுண்ட் நிறுவனம் ஃப்ளஹர்ட்டிக்குப் பட வாய்ப்பு அளித்தது. அதன் மூலம் உருவானதுதான் ”மோனா”.

மோனா தென் கடல் பகுதி வாழ் சமோவா மக்களின் வாழ்க்கை குறித்த படம். அப்பகுதியில் சமோவா வாழ்க்கை பற்றி இரண்டு ஆண்டுகள் ஃப்ளஹர்ட்டி ஆய்வு நடத்தினார். 1923 ஏப்ரல் முதல் 1924 டிசம்பர் வரை குடும்பத்தினருடன் சமோவாவில் வசித்தபடியே மோனா படப்பிடிப்பை நடத்தினார் ஃப்ளஹர்ட்டி. மோனாவின் தெற்குக் கடலின் பரந்த அழகும், ஈட்டியால் மீன் வேட்டையாடல், கடலில் இராட்சத ஆமை பிடித்தல், பாரம்பரிய பச்சை குத்துதல் போன்ற இயல்பான சமோவா இன வழ்க்கையும் ஃப்ளஹர்ட்டியால் அற்புதமான முறையில் படமாக்கப்பட்டிருந்தன. கருப்பு வெள்ளைப் படத்திற்கு பான் குரோமேடிக் படச்சுருளை மோனாவில் ஃப்ளஹர்ட்டி பயன்படுத்தியிருந்தார். அதன் காரணமாகக் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன.

மோனாவைப் பற்றிக் குறிப்பிடும்போது ஜான் கிரியர்சன் என்பவர் முதன்முதலாக டாக்குமெண்டரி என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார். ஃப்ளஹர்ட்டியின் திரைப்படங்களின் தாக்கத்தின் விளைவாக பிரிட்டனில் டாக்குமெண்டரி திரைப்பட இயக்கமே தோன்றியது. இதன் இயக்கத்தில் செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள் பேசில் ரைட், பால்ரோத்தா, ஆர்தர் எல்டன், ஹம்ப்ரி ஜென்னிங்க்ஸ் போன்றவர்கள். இதன் தலைமையில் இருந்தவர் ஜான் கிரியர்சன் மோனாவும் திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.

மோனாவையடுத்து ட்வெண்ட் ஃபோர் டாலர் ஐலண்ட் (1926 – 27) என்ற இரு ரீல்கள் கொண்ட சிறு படத்தை ஃப்ளஹர்ட்டி இயக்கினார். இப்படத்திற்கு நியூயார்க்கின் கேமரா பதிவு எண் துணைத்தலைப்பு இடப்பட்டிருந்தது. அதிக பிரபலமடையாத இத்திரைப் படத்தின் இரு ரீல் ஒரு ரீலாக வெட்டிக் குறைக்கப்பட்டு பின்னர் அது அமெரிக்காவில் உள்ள ராக்சி என்ற திரையரங்கின் மேடையின் பின்புலமாக பயன்படுத்தப்பட்டது.

ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், ஃப்ளஹர்ட்டிக்கும் இடையில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. ஃப்ளஹர்ட்டியுடன் திரைப்பட உருவாக்க முறை ஹாலிவுட் நிறுவனங்களுக்கு உடன்பாடில்லை. பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள் ஃப்ளஹர்ட்டிக்கு முழு சுதந்திரம் தருவதாக உறுதியளித்து விட்டு பின்னர் அவ்வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டன. மோட்ரே கோல்ட்வின் மேயர் நிறுவனத்திற்காக 1929-ல் ”ஒயிட் ஹேடோஸ் இன் த சவுத் சீஸ்” என்றத் திரைப்படத்தை இயக்கினார். அவருடன் டபில்யூ எஸ் வான் டைக் என் இயக்குநரையும் எம்.ஜி.எம் படப்பிடிப்பிற்கு ஃப்ளஹர்ட்டிக்கு இணையாக அனுப்பியது. அதேபோல் ”தபு” என்ற திரைப்படத் தயாரிப்பிற்கு எஃப்.டபிள்யூ முர்னாவை, ஃப்ளஹர்ட்டியுடன் அனுப்பியது. தான் விரும்பிய விதத்தில் இப்படங்களைப் படத்தொகுப்பு செய்து வெளியிட நிறுவனம் வற்புறுத்தியது. ஃப்ளஹர்ட்டி அதற்கு உடன்படாமல் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார். உதவியாளர்களாக வந்த இயக்குநர்களின் மூலம் முடிக்கப்பட்டு இப்படங்கள் வெளியாகின.

எந்த நிலையிலும் தன் கலை வெளிப்பாட்டை ஃப்ளஹர்ட்டி சமரசம் செய்து கொள்ளவில்லை. 1923-ல் ஃப்ளஹர்ட்டியின் அபிமானியான ஜான் கிரியர்சன் இண்டஸ்டிரியல் பிரிட்டன் என்ற டாக்குமெண்டரியைத் தயாரிக்க உதவினார். இயந்திர யுகத்திலும் தனி மனிதனின் கலை நேர்த்தியின் சிறப்பை இப்படம் சித்தரித்த்து. போதிய நிதியின்மை காரணமாக இரு ரீல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஜான் கிரியர்சன்னே பின்னர் படத்தொகுப்பு செய்து இப்படத்தை வெளியிட்டார். 1933-ல் பளஹர்ட்டியின் முதல் பேசும் படமான ”மேன் ஆப் அரன்” வெளியானது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு அப்பால் அமைந்துள்ள ஒரு சிறு தீவு அரன். அத்தீவில் வாழும் கடும் உழைப்பாளியான தந்தை, நலிந்த ஆனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தாய், அவர்களின் இளம் பிராயத்து மகன் ஆகியோரைக் கொண்ட குடும்பம் மூலம் அரன் வாழ்க்கையை படமாக்கியுள்ளார். ஃப்ளஹர்ட்டி கொந்தளிக்கும் கடலின் அருகே பாறைகளடர்ந்த தரிசுப் பூமியின் மத்தியில் அரன் மக்கள் வாழ்கிறார்கள். கடுமையான புயல் காற்றில் கடல் கொந்தளிப்பு, சுறா வேட்டை போன்றவை ஃப்ளஹர்ட்டியால் வெகு நேர்த்தியாகப் படமாக்கப்பட்டுள்ளன. சில ஷாட்கள் ஓவியர் வின்செண்ட் வான்காவின் விவசாயிகள் குறித்த ஆரம்ப கால ஓவியங்களைப் போல் அமைந்துள்ளன.

1937-இல் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங்கின் ”டூமாய் ஆப் த எலிபெண்ட்ஸ்”, என்ற சிறுகதையை இயக்கத் தொடங்கினார் ஃப்ளஹர்ட்டி. எலிபெண்ட் பாய் என்ற இப்படம் அலெக்சாண்டர் கோர்டா என்பவரால் தயாரிக்கப்பட்டது. சாபு என்ற இந்தியச் சிறுவனைக் கதாநாயகனாகக் கொண்டு மைசூர் காடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. ரூபாய் என்ற சிறுவனுக்கும் ஒரு யானைக்கும் இடையிலான ஆழ்ந்த நட்பே இப்படத்தின் கதை. படம் முடிவடைவதற்கு முன்பே தயாரிப்பாளருக்கும், ஃப்ளஹர்ட்டிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஃப்ளஹர்ட்டி படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். பின் லண்டனில் செட்டுகள் அமைக்கப்பட்டு ஜோல்டான் கோர்டாவால் படப்பிடிப்பு நடத்தப்பட்டு படம் வெளியானது.

எலிபெண்ட் பாய் படத்தில் நடித்த சாபுவிற்கு ஹாலிவுட்டில் நடிக்க பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால்,. ஃப்ளஹர்ட்டியோ பட வாய்ப்புகள் இன்றி, பணமின்றி மிகுந்த கஷ்டத்தில் வாழ்ந்தார். அமெரிக்க விவசாயத்துறை ”தி லேண்ட்” என்ற பிரச்சாரப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை அளித்தது. 1938 முதல் 1942 வரை நான்காண்டுகள் இதற்கான படப்பிடிப்பில் ஃப்ளஹர்ட்டி ஈடுபட்டார். அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற படமாக இது அமையவில்லை. எனவே இப்படம் பெரிய அளவில் திரையிடப்படாமலே வைக்கப்பட்டுள்ளது. ஃப்ளஹர்ட்டியின் திறமையை உணர்ந்து ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனி ”லூசியானா ஸ்டோரி” என்ற படத்தைத் தயாரிக்க நிதியுதவி செய்தது. பூமியிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுவதைக் காட்ட விரும்பி படப்பிடிப்பிற்காக பல இடங்கள் சுற்றித் திரிந்தார். அவர் விரும்பிய விதத்தில் இடம் கிடைக்காததால் படத்திட்டத்தைக் கைவிட எண்ணினார். ஆனால் லூசியானாவில் எண்ணெய் ஊற்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து அங்கேயே படப்பிடிப்பைத் துவங்கினார் ஃப்ளஹர்ட்டி. கஹீன் என்றப் பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்த மொழி பேசும் ஒரு பன்னிரெண்டு வயது சிறுவனின் கண்ணோட்டத்தில் லூசியானா ஸ்டோரியின் கதை சொல்லப்படுகிறது. இயற்கைக்கும் அச்சிறுவனுக்குமான உறவு அவனது பார்வையில், அச்சதுப்பு நிலப்பூமியின் இயந்திரத்தின் மீது ஆளுமை செலுத்தி எண்ணெய் எடுக்கும் தொழிலாளர்கள் குறித்து படம் சித்தரிக்கிறது. 2 இலட்சத்து அடி படச்சுருள் பயன்படுத்தப்பட்டு எடிட் செய்த பின் 8,000 அடி கொண்ட படமாக லூசியானா ஸ்டோரி அமைந்தது. ஃப்ளஹர்ட்டியின் சிந்தனையோட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப படத்தொகுப்பைச் செய்திருந்தார் ஹெலன் வான் டேங்கன் என்ற பெண்மணி.

சார்லி சாப்ளின் , பிரெஞ்ச் இயக்குநர் ழீன் ரெனுவா, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ஃபாக்னர் உள்ளிட்ட பல கலைஞர்கள் இப்படத்தைப் பார்த்து பிரமித்தனர். தங்கள் பாராட்டுகளை ஃப்ளஹர்ட்டிக்கு தெரிவித்தனர். தன் திரைப்படங்களில் சித்தரித்த இயற்கையின் சவால்களை எதிர்த்து போராடும் மனிதர்களைப் போலவே, தன் வாழ்நாள் முழுவதும் போராட்டங்களையே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஃப்ளஹர்ட்டி, 1951- ல் காலமானார்.

ஃப்ளஹர்ட்டி மறைந்தாலும் அவரது திரைப்படங்களும் அவரை முன்னோடியாகக் கொண்ட டாக்குமெண்டரி திரைப்பட இயக்கங்களும் என்றும் அழியாது.

நன்றி: சிலம்பு 2002
உலகத் தமிழ் குறும்பட விழா மலர்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </