இதழ்: 31    பங்குனி (April), 2015
   
 
  உள்ளடக்கம்
 
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - தினேஷ்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்
--------------------------------
வெட்கத்தினால் உடைந்தழிந்து போனார் புத்தர் - - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - சுகுமாரன்
--------------------------------
டாக்குமெண்டரி படங்களின் தந்தை ராபர்ட் ஃப்ளஹர்ட்டி - ரவி இளங்கோவன்
--------------------------------
குறும்படங்களின் பத்தாண்டுகள் – 1900 – 1909 - லதா ராமகிருஷ்ணன்
--------------------------------
”கண்ணீர் வேண்டாம் சகோதரி” – தான்யா
--------------------------------
 
   


   

 

 

பேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா

-தினேஷ்


ஒரு வினாடிக்கு இருபத்து நான்கு ப்ரேம்கள் நகருகிற இந்த காட்சி ஊடகத்தினது வெற்றிக்குப் பின்னணியில் பலரது உழைப்பும், அர்ப்பணிப்பும் உள்ளூர இருக்கிறது. திரைப்படம் முற்றுப்பெற்று திரைக்கு வரும்வரையிலும், ஒரு காட்சியை படம்பிடிக்கத் தேவையான உபகரணிகளை அமைத்துத்தருகிற தொழிலாளர்களிலிருந்து, திரையரங்கில் படத்தை திரையிடுபவர் வரை., ஒரு சங்கிலித்தொடர் போல இப்பயணம் நீள்கிறது. இருப்பினும், தன் புத்திக்கூர்மையையும், சமயோசித அறிவையும் பிரயோகிக்கிறவர்களையே படைப்பாளிகளாக இச்சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகின்றனர். இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், இன்னும் சிலரெல்லாம் இந்தப் பிரிவின் கீழ் வகைமைப்படுத்தப்படுகிறார்கள். மற்றவர்கள் அன்றைய மாலைநேர ஊதியத்துடன் களைந்துசெல்பவர்களது கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.

பல்கலைகளும் மிளிரும் இந்த கனவுத்தொழிற்சாலையின் பால் ஈர்க்கப்படுகிற இளைய சமூகத்தினர் கூட, படைப்பாளிகளாக வரவே ஆர்வமாகயிருப்பார்கள். அதுவே இயல்பு. மேலும், இயக்குனருக்கு அடுத்ததாக பெரும்பாலானோரது விருப்பமான பிரிவு என்றால் அது ஒளிப்பதிவுதான். ஆனால், தான் ஒளிப்பதிவை எவ்வளவுதான் நேசித்தாலும் தன் அறிவை விசாலப்படுத்திக்கொள்ள அவர்கள் முதலில் ஒளிப்பதிவில் மேம்பட்ட திரைப்படங்களை தேடிச் சென்று பார்ப்பார்கள். அல்லது இணையத்தில் தேடிப்பார்ப்பார்கள். கல்லூரிகளுக்குச் சென்று தனக்கான தொழிற்நுட்ப அறிவை வளர்த்திக்கொள்ளலாம் என்பது இன்னொரு வகை. இப்படி தன் தகுதிக்கும், தேடலுக்கும், புரிதலுக்கும் இணங்கி தனக்கான பாதையை இவர்கள் வகுத்துக்கொள்கிறார்கள். ஆனால், ஒளிப்பதிவு சார்ந்த புத்தகங்களை நாடிச்செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் இருக்கும்.

ஆனால், பெரும்பான்மையான ஒளிப்பதிவு சார்ந்த புத்தகங்கள் ஆங்கிலத்தில் இருப்பினும், புதிதாக இத்துறையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவனுக்கு ‘தான் எளிதாக எப்படிக் கற்க முடியும்’ என்றே மனம் விரும்பும். இங்கு கற்றலுக்கும், கலைக்கும் மொழி ஒரு தடையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் சில ஒளிப்பதிவு சார்ந்த புத்தகங்களும் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. மறுப்பதற்கில்லை. அதன் வரிசையில் இணைந்துகொண்ட மற்றொரு புத்தகமே “ஒளி எனும் மொழி”.

2013ஆம் ஆண்டு யமுனா ராஜேந்திரனின் “இலங்கையின் கொலைக்களம்” என்ற புத்தகத்தை வெளியிட்ட பேசாமொழி பதிப்பகம், இந்த வருடம் (2014) “ஒளி எனும் மொழி” புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது.

”புகைப்படம்”, “மாத்தியோசி”, அண்மையில் வெளியான “தொட்டால் தொடரும்”., இனி வெளியாகவிருக்கின்ற “அழகுக் குட்டிச் செல்லம்” முதலான படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்நூலின் ஆசிரியர்.

தனக்குத்தெரிந்த ஒளிப்பதிவுத் தகவல்களை வெறும் தரவுகளாக மட்டுமே புத்தகத்தின் பக்கங்களெல்லாம் நிரவி நூலின் கனத்தை அதிகப்படுத்தி, அதன் செறிவைக் கெடுக்காமல் ஒளிப்பதிவுக் கலை சினிமாவில் எவ்விதம் பரிணாமிக்கிறது?, அதன் செயல்பாடு என்ன?, கேமராவின் தொழிற்நுட்பக் கூறுகள் யாவை? என்ற கேள்விகளுக்கெல்லாம் தன் எழுத்தின் வழியே எளிமையாக விளக்கிச்செல்கிறார் திரு. விஜய் ஆம்ஸ்ட்ராங்க். கேமராவின் அடிப்படை விதிகளை இவர் விளக்கிக்கூறுகிற பொழுது ஒவ்வொன்றிற்கும் தகுந்த உதாரணங்களையும், படங்களையும் இடைச்செறுகலாகக்கொடுத்து வாசகர்களின் புரிதலை இன்னும் எளிமையாக்கியிருப்பது சிறப்பு.

உதாரணமாக 180 டிகிரி ரூல் , அது எவ்விதமாக சினிமாவில் பயன்படுத்தப்படுகிறது? என்று ஆரம்பத்திலேயே சொல்லாமல், 180 டிகிரி விதியை ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தும் முன், காட்சியமைப்பின் விதம், இரு கதாபாத்திரங்களுக்கிடையேயான கற்பனைக்கோடு (imaginary line) , மாஸ்டர் ஷாட் என்றெல்லாம் ஒளிப்பதிவின் முதல் அடியைத் தொட்டிருக்கிறவர்களுக்கும் புரியும் வண்ணம் அழகாக எடுத்துரைத்து., இந்தக் காட்சிக்கு எடுத்துக்காட்டாக ”ரோஜா” படத்தில் அரவிந்த் சாமியும், மதுபாலாவும், கடற்கரையில் பேசுகிற காட்சியையும் உடன் வைத்தே 180 டிகிரி ரூலையும் பொருத்திப்பார்த்து விளக்கமளிக்கிறார் நூலாசிரியர்.

“ஒரு மேன்மையான திரைப்படத்தை உருவாக்க விரும்பும் இளைஞனுக்கு , ஒவ்வொரு துறையின் வேர்கள், அதாவது அடிப்படை விதிகள் பற்றிய அறிவு மிக அவசியம்” என இந்நூலின் முன்னுரையில் இயக்குனர் மிஷ்கின் குறிப்பிட்டிருப்பது போலவே, இந்தப்புத்தகமும் அதன் வேர்கள் வழியேதான் பயணிக்கிறது.

ஒரு புத்தகம் ஒளிப்பதிவு சார்ந்து மட்டுமே பேசுகிறது என்றால் நேரடியாக இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிற டிஜிட்டல் யுகத்திலிருந்தே தன் எழுத்தினை ஆரம்பித்திருக்கலாம். ஆனால், ஆம்ஸ்ட்ராங்க் அப்படியாகச் செய்யவில்லை, இந்நூலின் முதல் கட்டுரையே ”சினிமா உருவான விதம்” என்ற தலைப்பிலிருந்து ஆரம்பிக்கிறது. முதலில் சொன்னதுபோல , சினிமாவில் ஒவ்வொரு துறையும் தனக்கான பணியைச் செவ்வனே முடித்தால்தான் இயக்குனர் நினைத்த காட்சியானது திரையில் பிரதிபலிக்கும். அப்படி சினிமாவின் பல்வேறு துறைகளில் எம்மாதிரியான உபகரணங்கள் நடைமுறையில் வழக்கில் இருந்து வருகிறது, அதன் சாதக பாதகங்கள், அதனை உபயோகிக்கும் முறைகளும் இப்புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறது. அதன்படி குரல் பதிவு (Dubbing)., பின்னணி இசை (Rerecording)., வண்ணச்சீரமைப்பு (Color correction), முதற்கொண்டு திரையிடல் (Screening) வரையிலும் எவ்விதமாக வேலைகள் பிரித்து கையாளப்படுகின்றன? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் இப்புத்தகத்தில் உள்ளது.,

இன்றைக்கு ஃபிலிமில் எடுக்கிற திரைப்படங்களின் வரவு முடிவுக்கு வந்துவிட்ட காலம். ஆனால், இந்நூலின் முதல் அத்தியாயத்தில் ஃபிலிம் சுருள்களைக் கொண்டு எப்படி படம்பிடித்தார்கள்?, அவைகளை பிற்தயாரிப்புக் கூடத்திற்குள் (Lab) கொண்டுசென்றால்., அங்கு நடப்பது என்ன? அதில் எப்படி ஒலிப்பதிவு சேர்க்கப்படுகிறது?, ஃபிலிம்கள் எப்படி படத்தொகுப்பு செய்யப்பட்டன?, டெலிசினி என்றால் என்ன? என்பதையெல்லாம் இந்தப்புத்தகத்தினைப் படிப்பதன் வழியே தெரிந்துகொள்ள முடிகிறது.

மேலும் தனது அடுத்தடுத்த கட்டுரைகளில் டிஜிட்டலுக்கு முந்தைய தலைமுறையை பற்றியும், அதன் செயல்பாடுகளைப் பற்றியும், எடுத்துரைப்பதில் கவனம் செலுத்தியிருக்கிற விஜய் ஆம்ஸ்ட்ராங் அடுத்து கேமராவிற்கு அடிப்படையான ஒளியமைப்பு(Lightings) பற்றி இந்நூலில் விளக்குகிறபொழுது., ஒளியமைப்பின் ஆதார சித்தாங்கங்களாக இரண்டு கூறுகள் இந்நூலின் வாயிலாக விளக்கப்படுகிறது. ஒன்று, இயல்புத்தன்மை ( Naturalism), அடுத்தது அழகியல் (Pictorialism). இதில் ஒரு ஒளிப்பதிவாளர் எந்த முறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் கவனிக்க வேண்டிய ஆதாரவிஷயங்கள் சில உள்ளன. அவைகளும் இப்புத்தகத்திலேயே விளக்கப்படுவது சிறப்பு. அதன் படி ஒளியின் காரணிகள் (The properties of light)., மும்முனை ஒளியமைப்பு குறித்தும் இந்நூலில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சிலர் ஆங்கில வார்த்தைகளை தமிழ் படுத்துகிறேன் பேர்வழியாக, நடைமுறையில் பழக்கமில்லாத வார்த்தைகளை எழுதிக் குவித்திருப்பார்கள். அதற்கே தனி அகராதி ஒன்று தேவைப்படும். அப்படியில்லாமல், ”டிஃபுஷன் ஃபில்டர் (Diffusion Filter)”க்கெல்லாம் தமிழ்வார்த்தையை தேடி நேரத்தை விரயமாக்காமலும், மேற்சொன்னபடி கலைக்கு மொழி ஒரு தடையல்ல, புரிதலே முக்கியம் என்றுணர்ந்து முறையான வரலாற்று ஆரம்பத்தோடு தொடங்குகிற இப்புத்தகம் நடப்பு உலகத்தில் என்னமாதிரியான டிஜிட்டல் புரட்சிகள் நடந்தேறுகின்றன என்பதையும் சொல்லிச்செல்ல தவறவில்லை.

பிரபல ”நிறுவனங்களின் தயாரிப்புகள்” என்ற பிரிவின் கீழ், இன்றைய திரையுலகில் கோலோச்சிக்கொண்டிருக்கிற கேமரா உபகரணங்களான அலெக்ஸா, ரெட் ஒன், கேனான், பேண்டம் முதலானவைகளை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகிறபொழுதும், இயக்குனர் பீட்டர் ஜாக்ஸனின் “ தி ஹாபிட்” படம் மட்டும் ஏன் இதுவரை காணாத அளவு துல்லியத்தன்மை வாய்ந்த காட்சியமைப்புகளைக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் பற்றிச் சொல்வது சுவாரசியமான பயணம். ஆசிரியரே இந்நூலின் முன்னுரையில் இத்தகைய பயணத்தை நோக்கித்தான் தன் வாசகர்களை அழைக்கிறார்.

எந்தவொரு முயற்சியையும் முறையான அடித்தளத்துடன் அமைத்துக்கொண்டால், அதுவே உங்களுக்கான அடுத்தகட்ட தேடலையும் துவங்கிவைக்கும் என்பதில் ஐயமில்லை. முறையான அடித்தளத்தை அமைப்பதற்கு ”ஒளி எனும் மொழி” சிறந்த வழி.

இந்நூல் வெளியீடானது விடுமுறை நாளான ஞாயிறு (25.01.2015) மாலைப்பொழுது ஆறு மணியளவில், ஒளிப்பதிவாளர் பீ.கண்ணன், இயக்குனர் பாலாஜி சக்திவேல், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் மற்றும் இயக்குனர்கள் சீனு ராமசாமி, ராம், பா.ரஞ்சித், சார்லஸ், ‘நீயா நானா’ இயக்குனர் ஆண்டனி, தயாரிப்பாளர் துவார். சந்திரசேகர், எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் முதலானவர்களோடு திரளான பார்வையாளர்கள் முன்னிலையில் புக் பாய்ண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. இனி., இவ்விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்களது பேச்சுக்களின் எழுத்து வடிவம் பின்வருமாறு;

தமிழ்ஸ்டுடியோ அருண்:

இந்த மேடை அழகாக அமைந்திருக்கிறது. இங்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருப்பவர்களின் படங்கள் மீது நான் விமர்சன ரீதியாக சில கருத்துக்களைச் சொல்லியிருப்பினும், அவர்களும் அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல், இந்நிகழ்விற்கு வருகை தந்துள்ளார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக தமிழ்சினிமாவை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சித்து விட்டு அந்தச் சினிமாக்காரர்களோடு நட்போடு பழகுகிற சூழல் இருக்கிறது. ஆனால் இதே சூழல் இலக்கிய உலகில் இல்லை என்று நினைக்கிறேன்.

தமிழில், சினிமா சம்பந்தமாக வெளிவருகின்ற புத்தகங்கள் மிகவும் குறைவு. குறிப்பாக , சினிமாவை தொழில்நுட்பங்களோடு அணுக உதவுகிற புத்தகங்களும் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றன. ஒரு படத்தைப் பார்த்து அதைப் பற்றி கதை சொல்லும் புத்தகங்கள் தான் இங்கு அதிகமாக வெளிவந்திருக்கின்றது. ஆனால் மற்ற நாடுகளில் இது போல இல்லை. ரஷ்யாவில் எழுதப்பட்ட ஐஸன்ஸ்டினின் புத்தகம் மிக முக்கியமானது. அதேபோல பேசாமொழி இணைய இதழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறJohn Berger-ன், Ways of seeing மிக முக்கியமான புத்தகம். கேமரா சம்பந்தமான shot by shot, 5 c’s of cinematography போல தமிழில் மிக குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்தச் சமயத்தில் தமிழிலும் சினிமா சம்பந்தமான புத்தகங்கள் அதிகமாக வெளிவரவேண்டும் என்பதற்காகவும், அதன் மூலம் சினிமாவைப் பார்க்கிற பார்வை மாற வேண்டும் என்பதற்காக பேசாமொழி பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் புத்தகங்கள் மூலமாக சினிமா பார்வையை மாற்ற முடியுமா? என்று கேட்டால் அதற்கு என் பதில் மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் என்பதே. தமிழ்ஸ்டுடியோ ஒரு இயக்கமாக பல வேலைகளை சிறு சிறு முயற்சிகளாகச் செய்து வருகிறோம், இதெல்லாம் சேர்த்து மிகப்பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும் என்றே நம்புகிறேன்.

ஒளிப்பதிவாளர் பீ.கண்ணன்:

ஆம்ஸ்ட்ராங்க் என்னிடம் உதவியாளராகச் சேரவேண்டும் என்று கேட்கிற பொழுது, வேறு யாரும் அச்சமயத்தில் எனக்கு உதவியாளர்களாக இல்லை. அதனால் அவரை என் உதவியாளராக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. அவர் என்னிடம் சேர்ந்த பின்பு எப்படி வேலைசெய்வார் என்பதும் தெரியாது. இதற்கு முன்பு வரை பத்திரிக்கையில் வேலை செய்திருக்கிறேன், புகைப்படங்கள் எடுப்பேன் என்று கூறினார்.

முதல் நாள் படப்பிடிப்பில் மூன்று கேமராக்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் வரவே., என்னிடம் வேறு உதவியாளர்கள் யாரும் இல்லை என்ற காரணத்தினால், ஆம்ஸ்ட்ராங்கையே கேமராக்களை இயக்க அனுமதித்தேன். அப்பொழுது அவருக்கு போதிய அனுபவங்கள் இல்லையானாலும் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துமுடித்தார். அடுத்த நாளும் இதேபோல மீதி வேலைகளையும் அவரை நம்பி ஒப்படைத்தேன். அப்பொழுதே அவர் இந்த அளவிற்கு வாழ்க்கையில் உயர்வார் என்பது தெரியும். ஆம்ஸ்ட்ராங்கிற்கு வாழ்த்துக்கள்.

இயக்குனர் பா.ரஞ்சித்:

விஜய் ஆம்ஸ்ட்ராங்க் சமூக வலைத்தளங்களில் எழுதுவதை நிறைய படித்திருக்கிறேன். அதே போல தன் Blogல் எழுதியவைகளைத் தொகுத்து இங்கு ஒரு புத்தகமாக கொண்டுவந்திருக்கிறார். இங்கு ஆவணங்களை நிறைய உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதன்படி வந்திருக்கிற இந்தப்புத்தகமும் வரவேற்கத்தக்கது. சினிமா சம்பந்தமான புத்தகங்கள் தமிழிலும் நிறைய வரவேண்டும். இதற்கு முன்னும் நிறைய அமைப்புகள் இதனைச் செய்து வந்தன. இதில் பேசாமொழியும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்சினிமாவிற்கு வருகிற இளைஞர்களுக்கும், எங்களைப் போன்றோருக்கும் இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

வரவேற்புரை அளித்த தமிழ்ஸ்டுடியோ அருண் விமர்சனங்களைக் குறிப்பிட்டு சில விஷயங்களைப் பேசினார். தமிழ்சினிமாவிற்கு தார்மீக ரீதியான, கருத்து ரீதியான விமர்சனங்கள் தேவைப்படுகின்றன. அந்த விமர்சனப் பார்வையும், விமர்சனங்களும்தான் ஒரு படைப்பாளியின் திரைமொழியை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். நானுமே கூட நல்ல விமர்சனங்களின் மூலமாகத்தான் இந்த நிலமையை அடைந்துள்ளேன். நான் படித்த யமுனா ராஜேந்திரனின் அரசியல் ரீதியான கட்டுரைகளும், சாரு நிவேதிதாவின் சினிமா கட்டுரைகளும், ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய தலித் பார்வைகள் கொண்ட கட்டுரைகளும் தான் ஒரு சினிமாவை எப்படி பார்க்க வேண்டும், அந்த திரைமொழியை எப்படி அணுகுவது என்ற விஷயத்தைச் சொல்லிக்கொடுத்தது., புத்தகங்களில் சொல்கிற சிந்தனாபூர்வமான விஷயங்களை எப்படி சினிமாவில் பயன்படுத்துவது என்பதையெல்லாம் நல்ல விமர்சனங்கள் மட்டுமே உங்களுக்கு கற்றுக்கொடுக்கும்.

ஆனால், சில வேளைகளில் இந்த விமர்சனங்களே தனிநபர் தாக்குதல்களாகவும் மாறுகின்றது. சமீப காலங்களில் ஒரு திரைப்படம் சொல்கிற கருத்தை ஓரங்கட்டிவிட்டு , படைப்பை கணக்கிலெடுக்காமல், வேறு சில எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு விமர்சனம் என்ற பெயரில் எழுதுவதையும் நம்மால் பார்க்கமுடிகிறது. இதுதான் வெகுஜன ஊடகத்திலும் , சமூக வலைத்தளங்களிலும் பேசப்படும் பொருளாகவும் மாறி வருகிறது. அதை நாம் மாற்றவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நல்ல விமர்சனங்களின் மூலமாகத்தான் நம் படைப்பை செழுமைப்படுத்த முடியும் என்கிற பொழுது , விமர்சனங்கள் தீர்க்கமாக படைப்பு சம்பந்தமாக, படைப்பின் கருத்தியல் அடிப்படையில் இருக்க வேண்டும். இயக்குனருக்குண்டான அரசியல் பார்வையுடன் முரண்படாத எதிர் குழுமனப்பான்மையுடன் தான் இங்கு விமர்சனம் எழுதப்படுகிறது. என்னுடைய திரைப்படத்திற்கு எழுதப்பட்ட விமர்சனங்களைப் படிக்கிறபொழுது இதேதான் எனக்கும் தோன்றியது. ஒரு குழு எனக்கு ஆதரவாக எழுதுவார்கள், அல்லது என்னை எதிர்த்து எழுதுவார்கள். இதுதான் நடந்தது…

இயக்குனர் ரஞ்சித் பேசியவைகளின் தொடர்ச்சி அடுத்த இதழிலும் வெளியாகும்…

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: https://www.facebook.com/ArunThamizhstudio

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </