வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
யாவும் உள
1
 
 
     
     
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  யாவும் உள யாவும் உள வாயில்

யாவும் உள - உலக இலக்கிய அறிமுக நிகழ்வு

தொகுப்பு: ஸ்ரீகணேஷ், ஒளிப்படங்கள்: சிலம்பரசன், ஒளிப்பதிவு: சோமசுந்தர்


தமிழ் ஸ்டுடியோவின் புதிய நிகழ்ச்சியான 'யாவும் உள' ஞாயிறன்று (6-11-11) சிறப்பாக நடைபெற்றது. இனி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை 'யாவும் உள' நடைபெறும். தமிழ் மற்றும் பிற மொழிகளில் உலகம் முழுதும் கொண்டாடப்படும் இலக்கிய நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்நூலைப் பற்றிய விவாதங்களும் இடம்பெறும்.

இம்மாதம் தமிழ் நவீன இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்து கொண்டு, எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய 'வெட்டுப்புலி' நாவல் குறித்த தனது கருத்துக்களை, திறனாய்வை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் நாவலாசிரியர் தமிழ்மகன், திரு.பாரதி மணி, நாடகவியலாளர் வெளி ரங்கராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ் ஸ்டுடியோ அருண் வரவேற்புரை வழங்கிப் பேசுகையில், ' உலக இலக்கியம் என்றாலே நம் ஆட்கள் அதில் நமக்கு இடமில்லை. எதாவது பிரெஞ்சு, ரஷ்ய நூல்களா இருக்கும் என்று நினைக்கிறார்கள். தமிழ்மகனின் 'வெட்டுப்புலி' உலக அளவில் மிக முக்கியமான இலக்கியப் படைப்பு. அதைச் சிறப்பிக்கும் விதமாய் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்ததாக, எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களைப் பற்றி கவிஞர் குட்டி ரேவதி பேசிய ஒலிநாடா ஒளிபரப்பப்பட்டது.

அடுத்து பேசிய பிரபஞ்சன் அவர்களின் சிறப்புரையிலிருந்து சில பகுதிகள்:

" சிறுவயதுகளில் நாவல் எது, சிறுகதை எது என்பதிலெல்லாம் எனக்கு குழப்பங்கள் இருந்தன. 200 பக்கம் இருந்தால் நாவல், 100 பக்கங்கள் என்பது குறுநாவல், 10 பக்கங்கள் என்றால் சிறுகதை என்று எளிமையாய்ப் புரிந்து வைத்திருந்தேன். பின்பு ஒரு கட்டத்தில் தான், ஒரு தத்துவத்தை அடிப்படையாய் வைத்து அதற்கான வாதங்களைக் கட்டமைப்பதே ஒரு நாவலின் வடிவம் என்றுணர்ந்தேன். அவ்வகையில் இது வரைக்குமான தமிழர் வாழ்க்கையின் தத்துவத்தைப் பேசும் அபாரமான நூல், தமிழ்மகனின் 'வெட்டுப்புலி'.

இந்நாவலில் கதை 3 இழைகளில் சொல்லப்பட்டுள்ளது. வெட்டுப்புலி தீப்பெட்டியை வைத்து ஒரு கதை, தமிழ் சினிமாவின் வரலாற்றை வைத்து ஒரு இழை, தமிழ்நாட்டு அரசியலை வைத்து மற்றொரு இழை பின்னப்பட்டுள்ளது. நான்காம் இழை ஒன்று மறைந்து நிற்கிறது. அது தான் என்னை மிகவும் கவர்ந்தது... அது காலம். காலத்தை அடிப்படையாய் வைத்து 80 ஆண்டு கால தமிழர் வாழ்க்கையை இந்நாவல் பேசியிருக்கிறது.

திராவிட அரசியலை ஆரம்ப காலங்களில் இருந்து கவனித்து வருபவர்கள் நாம். திராவிட அமைப்புகள் தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை யாராலும் மறுக்க முடியாது. உயர்ந்த இலட்சியங்களோடு துவங்கப்பட்டு பின் கொள்கைகள் வீழ்ச்சியடைந்து, இன்றைக்கு எந்நிலையில் திராவிடக் கட்சிகள் இருக்கின்றன என்பதை நாம் கவலையோடு பார்க்கிறோம். ஆனால் இதில் தலைவர்கள் எவ்விதத்திலும் நஷ்டப்படவில்லை, தோற்கவில்லை. எல்லா அவமானங்களையும் சந்தித்தவர்களாய், தோல்வியடைந்து அலைபவர்கள் முகம் தெரியாத உண்மையான கொள்கைகளுடைய ஆயிரக்கணக்கான தொண்டர்களாகவே இருக்கிறார்கள். அவ்வகையில் தோற்றுப் போன நல்லவர்களைப் பற்றிப் பேசும், மிக உன்னதமான நாவல் வெட்டுப்புலி.

அதே சமயம், இந்நாவல் அவர்களின் தோல்வியைச் சிறுமைப்படுத்தும் நோக்கோடு எழுதப்படவில்லை. ஒரு நாவலின் வாசிப்பிலேயே வாசகன் எழுத்தாளனின் ஒழுக்கத்தை உணர முடியும். எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எல்லோரின் பக்கங்களையும் ஒரு மௌன சாட்சியாய் நின்று எழுதியிருக்கிறார் தமிழ்மகன். தோற்றவர்களை, சமூகம் மறந்து போன மனிதர்களை பெருமைப்படுத்தும் நாவலாய் வெட்டுப்புலி அமைந்துள்ளதில் பெருமகிழ்ச்சி.

அற்புதமான தருணங்களைத் தொடக்கூடிய சக்தி இலக்கியத்துக்கு இருக்கிறது. தாஸ்தோவ்ஸ்கி படைப்புகள், நிகலாய் கோகுலோவின் 'தாராஸ் பும்பா' வரிசையில் சேர்க்க வேண்டிய ஒரு உலகத்தரமான படைப்பு 'வெட்டுப்புலி'.

சா.கந்தசாமி 'சாயவனம்' எழுதிய போதே சாகித்திய அகாடமி வாங்க வேண்டியவர். 30 ஆண்டுகளுக்குப் பின்னர் 'விசாரணைக் கமிஷன்' எழுதியதற்க்காய் வாங்கினார். இது எவ்வளவு பெரிய கொடுமை. எழுத்தாளனை சரியான நேரத்தில் அங்கீகரிப்பதே நாம் அவனுக்கு செய்யும் மரியாதை.

இன்று நடந்த நிகழ்ச்சி தமிழ்மகனுக்கு செய்யும் மிக நல்ல மரியாதை. இது கூட போதாது. ஒரு நாள் முழுதும் அமர்ந்து கூட 'வெட்டுப்புலி' நாவலை திறனாய்வு செய்யலாம். அப்படி ஒரு நிகழ்ச்சியை தமிழ் ஸ்டுடியோ செய்யுமெனில், அதில் கட்டாயம் நான் இருப்பேன்.''

எழுத்தாளர் தமிழ்மகன் ஏற்புரை வழங்கினார்.

"நாவலைப் படித்து, அதைப் பற்றி பேச வந்த பிரபஞ்சன் அவர்களுக்கு மிக்க நன்றி. நிகலாய் கோகுலோவுடன் என்னை ஒப்பிட்டது அவரின் பெருந்தன்மை.. இந்நாவல் எழுதுமுன், அதற்கான தகவல்களை சேகரிக்க 3 ஆண்டு கால உழைப்பு தேவைப்பட்டது. எவ்வித வரலாற்று பிழையுமின்றி, சார்புமின்றி எழுத மிகவும் கவனமெடுத்துக் கொண்டேன். தகவல்கள் நிறைய இருப்பதால் கட்டுரைத்தன்மை வந்துவிடுமோ என்றும் அச்சமாய் இருந்தது. கதைத்தன்மை இருக்கிறதா என்பதிலும் அக்கறை செலுத்த வேண்டியிருந்தது.

இந்நாவலைப் பற்றி நடக்கும் முதல் கூட்டம் இது என்றே நினைக்கிறன். இதற்கு முன் நடந்த 2, 3 கூட்டங்களிலும் என்னால் பங்கேற்க இயலவில்லை. நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது தான். அதில் பிரபஞ்சன் இருப்பது பெருமகிழ்ச்சி. இந்நாவல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான ஓராண்டிற்குள்ளேயே இரண்டாம் பதிப்பு வெளிவர இருக்கிறது. இந்நாவலைப் பற்றிய முதல் செய்தி வந்ததும் தமிழ் ஸ்டுடியோவில் தான். நாவல் வெளியான உடனேயே அதை பற்றியே ஒரு திறனாய்வை தமிழ் ஸ்டுடியோ எழுதியிருந்தது. நிறைய மக்களை 'வெட்டுப்புலி' சென்று அடைந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் என் நன்றிகள்."

நிகழ்வில் ஒலிபரப்பப்பட்ட பிரபஞ்சன் பற்றிய அறிமுகம்

நிகழ்வில் ஒலிபரப்பப்பட்ட பிரபஞ்சன் பற்றி குட்டி ரேவதியின் பேச்சு

நிகழ்வில் ஒலிபரப்பப்பட்ட தமிழ்மகன் பற்றிய அறிமுகம்



நிகழ்வின் காணொளியைக் காண:

http://koodu.thamizhstudio.com/oliyum_oliyum_yavum_ula_1.php
-----------------------------------------------------------------------------------------

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/102#


-----------------------------------------------------------------------------------------
தொகுப்பு: ஸ்ரீகணேஷ்

ஒளிப்படங்கள்: சிலம்பரசன்

ஒளிப்பதிவு: சோமசுந்தர்


--------------------------------------------------------------------------
பங்கேற்பு: எழுத்தாளர் பிரபஞ்சன்

அறிமுகப்படுத்தப்படும் நூல்: வெட்டுப்புலி

நாள்: நவம்பர், 6, ஞாயிற்றுக் கிழமை

நேரம்: மாலை 4 மணிக்கு.

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

தொடர்புக்கு: 9840698236

வணக்கம் நண்பர்களே,

இதுவரை குறும்பட நிகழ்வுகளை மட்டுமே தமிழகம் முழுவதும் நடத்தி வந்த தமிழ் ஸ்டுடியோ முதல் முறையாக ஒரு தொடர் இலக்கிய நிகழ்வை நடத்தவிருக்கிறது. உலக இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். தமிழ் / இந்திய இலக்கியமும் இதில் அடங்கும். அந்த வகையில் இனி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கு "யாவும் உள" என்கிற தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய நிகழ்வு தொடங்கும்.

முதல் யாவும் உள இலக்கிய நிகழ்வில் தமிழ்மகன் அவர்கள் எழுதிய வெட்டுப்புலி நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் அறிமுகப் படுத்தி பேசுகிறார்.

வெறும் நூல் அறிமுகக் கூட்டமாக இல்லாமல், இலக்கியத்தின் முழு சுவையையும் நீங்கள் ரசித்து, அனுபவிக்கும் விதமாக இந்த நிகழ்வு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இலக்கிய வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் தவறாமல் கலந்துக் கொள்ளவும்.

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</