வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்


பாரதிதாசன்

கிருஷ்ணன் வெங்கடாசலம்  

பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். பாரதிதாசன் என்பது இவரது இயற்பெயர் அல்ல. பெற்றோர்கள் வைத்த பெயர் சுப்புரத்தினம்.

இளம் வயதிலேயே தமிழார்வம் கொண்டிருந்தார். தனது பதினேழாவது வயதில் புலவர் தேர்வில் வெற்றியடைந்தார்.

பாரதிதாசன் புதுமைச் சிந்தனாவாதி, இவரது சிந்தனைகளுக்கு உனக்கு சக்தியாக விளங்கியவர் மகாகவி பாரதியார்.

இவர் சிறிது காலம் மாடர்ன் தியேட்டர்சின் கதை இலாகாவில் பணியாற்றினார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழைத் தன் உயிரினும் மேலாக நேசித்தவர். இவரது 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்கிற கவிதை மிகவும் பிரபலமானது.

1937ல் முதன் முதலாக 'பாலாமணி' என்கிற படத்திற்குப் பாடல்கள் இயற்றினார். பிறகு 1940ல் 'காளமேகம்' என்கிற படத்தின் வசனம் - பாடல்கள் இவரால் எழுதப்பட்டது. எல்லிஸ் ஆர் டங்கன் இயக்கிய இப்படத்தில் நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் காளமேகமாக நடித்திருந்தார். எல்லிஸ் ஆர் டங்கன் ஒரு அமெரிக்கன்.

இதற்கிடையில் 1938ல் ஸ்ரீராமானுஜர் என்கிற ஒரு திரைப்படம் வெளிவந்தது. இலக்கியவாதி வ.ரா. என்று அழைக்கப்பட்ட வ. ராமசாமி ஐயங்கார் திரைக்கதை வசனம் எழுதிய இந்தப்படத்தில் சங்கு சுப்பிரமணியம், ந. ராமரத்தினம் ந. பிச்ச மூர்த்தி போன்ற இலக்கிய வாதிகள் நடித்திருந்தனர். இதில் பாடல்கள் எழுதியிருந்தார் பாவேந்தர். தீண்டாமைக்கு எதிராக பல கருத்துக்களை அப்போதே முன் வைத்த அப்படத்தில் கவிஞரின் ஒருபாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.

ராமானுஜர் வைணவைத்தை உபதேசித்தபடி நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்கிறார். அப்போது திருவாலி க்ஷேத்திரத்தில், திருவாலி மங்கை எனும் தீண்டத்தகாத ஒரு பெண்ணை எதிர் கொள்ளும் ராமானுஜர், அப்பெண்ணை விலகி நிற்கச் சொல்கிறார். அதற்கு அப்பெண் பாடுவதாக அமைந்த காட்சி.

'எப்பக்கம் சாமி
விலகச் சொன்னீங்க?
இத்தே கேளுங்கோ,
கோவிச்சுக்காதீங்க - இப்பக்கம்
கண்ணபுரமிருக்குங்க! எதிர்ப்
பக்கத்திலோ திரமணக்கொல்லை!
ஒங்கோ பக்கம் வந்தா
ஒத்திக்கோன்னுவீங்கோ!
ஒதுங்கிப் போயிட்டாலும்
திருமங்கை மன்னன் - அய்யங்
கோவிந்தன் ஆகாசத்தே!
அடிமை கேட்ட கேள்வி -
ஏது பதிலுங்கோ?'

ராமானுஜருக்கு என்ன சொல்ல இயலும், திருவாலி மங்கையின் வாதத்தின் உண்மையை ஒப்புக்கொள்வதைத்தவிர.

1946ல் மாடர்ன் தியேட்டர்சாரின் 'சுபத்திரை' என்கிற படத்திற்கு வசனம் எழுதினார் பாரதிதாசன்.

புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நூல் 'எதிர்பாராத முத்தம்', இந்நூலைத் தழுவி 1949ல் 'பொன்முடி' என்கிற ஒரு திரைப்படம் வெளிவந்தது. நரசிம்மபாரதி, மாதுரிதேவி நடித்த படம். அப்படத்தில் காதல்காட்சிகளில் இருந்த நெருக்கம் அந்தக்காலத்தில் திரையுலகில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பாவேந்தர் ஒரு புரட்சிகரமான கவிஞர். எனவேதான் அறியாமையில் உழன்று கொண்டிருந்த அக்கால சமுதாயத்தை தனது வீரிய கவிதைகள் மூலம் எழச் செய்து, தமிழர்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தினார். பாவேந்திரைப் பின்பற்றி அவரை குருவாக மதித்து ஏராளமான கவிஞர்கள் புதிதாகத் தோன்றினார்கள். கவிஞர் சுரதா, வாணிதாசன், சாலை இளந்திரையன், குருவிக்கரம்பை சண்முகம், பொன்னடியான் போன்ற மிகச்சிறந்த மரபுக்கவிஞர்கள், பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்ற பெருமையை அடைந்தார்கள்.

தமிழை - கவிதையை, பெண்விடுதலை, சமூகநீதி போன்ற உத்தமமான காரியங்களுக்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

பாவேந்தரை தமிழ்க்கவிதை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை பாரதியாரைச் சாரும். பாரதியாரையே தனது குருவாகப் பாவித்துக் கொண்டார் பாரதிதாசன். எனவேதான் சுப்புரத்தினம் என்கிற தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிவைத்துக் கொண்டார்.

'குயில்' என்கிற பத்திரிகை ஒன்றை சில காலம் நடத்தியிருக்கிறார். உதிரி, உதிரியாக இவர் எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டு 1938ல் வெளிவந்திருக்கிறது.

நாடகங்களும் எழுதியுள்ளார். குறிப்பாக, 'பாண்டியன் பரிசு' கதை நாடகமாக எழுதப்பட்டு பெரும் வெற்றியை ஈட்டியது. இவை தவிர ஏராளமான கவிதைகள் எழுதி, ’பாரதிக்குப்பின், பாரதிதாசன்’ என்கிற பெயரை நிலை நிறுத்திக் கொண்டார்.

பாவேந்தரின் திரைப்படப்பணி 1956ல் வெளிவந்த 'நானேராஜா' வரையிலும் நீடித்தது.

கடைசிக் காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆட்பட்டிருந்த பாவேந்தர், உடல் நலம் குன்றி 1964ல் ஏப்ரல் மாதம் சென்னையில் காலமானார்.

வாழ்க வாழ்கவே - வாழ்கவே
வளமார் எமது திராவிட நாடு
வாழ்க, வாழ்கவே - வாழ்கவே

பாரதிதாசன் பங்கேற்ற திரைப்படங்கள்

1937 - பாலாமணி - வசனம்
1938 - ஸ்ரீராமானுஜர் - பாடல்
1940 - காளமேகம் - வசனம்
1949 - பொன்முடி - கதை - வசனம்
1951 - ஓர் இரவு - பாடல் (துன்பம் நேர்கையில்)
1951 - மணமகன் - பாடல்
1952 - வளையாபதி - பாடல்
1953 - திரும்பிப்பார் - பாடல்
1954 - கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - பாடல்
(வெண்ணிலாவும் வானும் போலே)
1956 - நானே ராஜா - பாடல்
1965 - பஞ்சவர்ணக்கிளி - பாடல் (தமிழுக்கு அமுதென்று பேர்)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</