வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


வந்தனோபசாரக் காட்சிகள்….

கலாப்ரியா  

பாப்புலர் டாக்கீஸ்தான் திருநெல்வேலி மாவட்டத்திலேயே முதல் தியேட்டர். அதுவும் ‘நெல்லை கணபதி விலாஸ் தியேட்டர்’ என்ற நாடக அரங்காயிருந்து, பின்னர் திரை அரங்காக மாறியது. தரை டிக்கெட்டிற்கு, பெஞ்சுகள் எதுவும் கிடையாது, தரையிலேயேதான் உட்கார வேண்டும். 600 டிக்கெட்டுகள் கொடுத்து விடுவார்கள். தியேட்டருக்கு நடுவில் தூண்கள் இருக்காது, எங்கே உட்கார்ந்தாலும் மறைக்காது.சீக்கிரமாகப் போனால் அரங்கின் ஓரப் படிகளில் உட்காரலாம். அது வசதியாகவும், நெருக்கடி இல்லாமலும் இருக்கும். நேரமாகிவிட்டால், கஷ்டம். ஒருத்தர் தொடை இன்னொருவரது தொடை மேல் இருக்கும்படி அமர வேண்டியிருக்கும். இதற்காகவே சில ’உரசல்க் கிழங்கள்’ வேறு வரும். படத்தில் கிளுகிளுப்பான காட்சி வந்தால், நைசாக தொடை மீது கைகள் விழும். சிலர் அமைதியாக எழுந்து வேறு இடம் பார்த்து உட்காருவார்கள், சிலர் ‘தர்ம அடி’ கொடுத்து சண்டை இழுத்து ’அப்படி ஆட்களை’ கிளப்பி விடுவார்கள்.

1965 ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து, “செம்மீன்” மலையாளப் படம் போட்ட போது சைக்கிள் கேரியர் அகலத்துக்கு பெஞ்சு போட்டார்கள்.’சினிமாட்டோகிராஃப்’ விதிகளின்படி பெஞ்சு போடவேண்டும் என்றானது. எல்லாத் தியேட்டரிலும் இந்த விதிகளை பெரிய்ய்ய்யதாக ஃப்ரேம் போட்டு எங்காவது ஓரத்தில் மாட்டி வைத்திருப்பார்கள். வேலை மெனக்கெட்டு நான் படிப்பேன், மாடிப்படி எப்படி அமையவேண்டும், எக்ஸ்ஹாஸ்ட் காற்றாடி கண்டிப்பாக வைக்க வேண்டும்... என்று ஏகப்பட்ட விதிகள் இருக்கும். பொழுது போகவில்லையென்றால் படியுங்கள், சுவாரஸ்யமாய் இருக்கும்.

ராயல் டாக்கீஸிலும், பாலஸ்-டி-வேல்ஸிலும் தரைதான். ராயலில், அங்கங்கே தூண்கள் மறைக்கும். ’கணவனே கண்கண்ட தெய்வம்’படத்தை தூணுக்கு இந்தப் புறமும் அந்தப் புறமுமாகப் பார்த்து கழுத்து வலி பின்னி விட்டது. அதுவும், நூறாவது நாள் அன்று. அதற்கு பரிசுக்குலுக்கல் வேறு வைத்திருந்தார்கள். பித்தளைப் பாத்திரங்கள், பரிசு. இடைவேளையின் போது டிக்கெட் நம்பரை குலுக்கிப் போட்டு எடுத்தார்கள். என்னுடைய டிக்கெட், பக்கத்து வீட்டு அக்காவிடம் இருந்தது. அதற்கு நான்கு தம்ளர் காபி பிடிக்கிற அளவிற்கு, ஒரு தூக்குச் சட்டி பரிசு விழுந்தது. அக்கா அது தன் டிக்கெட்டிற்கு விழுந்ததாகச் சொல்லி அவர்களே வைத்துக் கொண்டார்கள். ஆனால் திரைக்கு அருகே போய் பரிசை வாங்கியது நான்தான். என் அழுகை பலிக்கவில்லை. ராயல் தியேட்டரில் படம் பார்ர்க்க அப்பா அனுமதிக்க மாட்டார், அவருக்கு பாப்புலர் தியேட்டரில் பங்குகள் இருந்தது. அதனால் எப்போதாவது, அண்ணன் அல்லது பக்கத்து வீட்டு அக்கா, என் சகோதரிகளுடன் போவேன். நான் அப்போதுதான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்திருந்தேன். வகுப்பில் ஒருவன் ”உன்னைக் கண் தேடுதே.. “பாட்டை விக்கலுடன் அடிக்கடி பாடுவான். சாரும் ஏல பாட்டுப் படில என்று அவனை அடிக்கடிச் சொல்வார்கள். படம் பார்த்த இரண்டு மூன்று நாட்கள் கழித்து நான் பாடினேன். இரண்டாவது வரி பாடுவதற்குள் போதும் நிப்பாட்டுடா...என்று உட்கார வைத்துவிட்டார். வெட்கமாகப் போய்விட்டது.

தியேட்டரில் சோடா கலர் விற்பவர்கள், ‘பாட்டில் மூடி’யை சட்டைப் பையில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். அதை, சின்ன சோடாக் கம்பெனிக்காரர்கள், மறு விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். நல்ல பாட்டு வரும்போது உள்ளங்கையில், சிப்பிகளை வைத்துக் கொண்டு, சோடா திறக்கும் ‘சாவியால்’(ஓப்பனர்) அழகாகத் தாளம் போடுவார்கள்.’தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தில் வரும் “மண்ணுக்கு மரம் பாரமா.....” பாட்டுக்கு அப்படி தாளம்போடுவார் ராயல் டாக்கிஸில் ஒருவர். அவர் பெயர் முத்துசாமி என்று பின்னர் தெரிந்தது. அதோடு அவர் ‘பசங்க‘ என்றால் கொஞ்சம் வீக் என்றும். அந்தப் பாட்டிற்கு கே.வி.மகாதேவன் மாமா அற்புதமான ஒரு தாளத்தை உருவாக்கியிருந்தார். அது அவரது ‘டிரேட் மார்க் ஆகிவிட்டது. (இது அவர் ஒரு பேட்டியில் சொன்னது).

ஆனால் நல்ல மெல்லிசையான பாட்டென்றால். தியேட்டர் அமைதியாயிருக்கும். பாட்டுக்காகவே வருகிற ரிபீட்டட் ஆடியன்ஸ், ”சத்தம் போடாதிங்க” என்று பாட்டு வரப்போகும் முன்பே சத்தம் கொடுப்பார்கள், இதெல்லாம் ’பூமி’டிக்கெட்டில்தான் நடக்கும். ஆகாய டிக்கெட்டான ‘ஹைகிளாஸ்’ டிக்கெட்டில் இருக்காது. ’மகாதேவி’ படத்தில்....மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம்...... ”என்று ஒரு பாட்டு, டி.எஸ்.பகவதி என்று ஒரு அருமையான பாடகி பாடியது.. பிரமாதமாக இருக்கும். அவர் குரலை கண்ணதாசனுக்கு ரொம்பப் பிடிக்கும். சிவகங்கைச் சீமையில், “கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்.....” என்று ஒரு பாடலை பாடியிருப்பார். இரண்டு படமுமே, கண்ணதாசன் வசனம், பாடல்கள் எழுதியது. மகாதேவியில் அந்தப் பாட்டு வரும் போது தியேட்டரில் அப்படி ஒரு அமைதி இருக்கும்.

இடைகால் கணேஷ் டூரிங் டாக்கீஸில் மகாதேவி போட்டிருந்தார்கள். குழந்தையையும் மனைவியையும் அழைத்துப் போனேன். அது சிங்கிள் ப்ரொஜெக்டர் தியேட்டர். அதுவும் வாடகை ப்ரொஜக்டர். வாடகைக்கு தருவதெற்கென்றே திருநெல்வேலியில் இரண்டு மூன்று பேர் உண்டு. ஒருவர் என் அப்பாவின் சினேகிதர். ஒரு ஸ்பூலில் நான்கு ரீலைச் சுற்றி விடுவார்கள். ஒரு ரீல் பத்து நிமிடம் ஓடும். ஒவ்வொரு நான்கு ரீலுக்கும் ஒரு இடைவேளை. ஆக சாதாரணமாக நான்கு இடைவேளை வரும். ”மானம் ஒன்றே..”பாட்டு வருவதற்குள் குழந்தை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். பாட்டைக் கேட்காமல் போக எனக்கு மனமில்லை. அப்போது கேசட்டுகள் எல்லாம் கிடையாது, அபூர்வம். தியேட்டரில் போய்த்தான் கேட்க முடியும். ஒரு வழியாய் பாடல்க் காட்சி வந்தது. தியேட்டரில், தரை டிக்கெட்டிலிருந்து ஒரு நீள விசில், பிசிறில்லாமல் வந்தது. தொடர்ந்து ”யாரும் சத்தம் போடக்கூடாது என்று ஒரு அறிவிப்பு.”ஆகா தமிழ்நாடு பூராவும் ஒரே ரசனையாத்தான் இருக்கும் போலிருக்கு என்று மனசுக்குள் ஒரு ஒட்டுதலான உணர்வு ஏற்பட்டது....குழந்தை கூட பாட்டைக் கேட்டு அமைதியாகி விட்டாள்.

கணேஷ் டூரிங்கில், ப்ரொஜெக்டர் ரூமைச் சுற்றி இரண்டு மூன்றடி அகலத்திற்கு வழுவழுவென்று சிமெண்ட் பெஞ்சு போல் தரைநீட்டிக் கொண்டிருக்கும். தியேட்டரை ஒட்டிய பகுதியை ஒரு ‘பாக்ஸ்’ டிக்கெட் போல ஆக்கி வைத்திருப்பார்கள். அதில் அதிகம் போனால் பத்துப் பேர் உட்காரலாம். நாங்கள் போனால் அதில் உட்கார வைத்து விடுவார்கள். தரை டிக்கெட் என்பது மணல் விரித்தது. மணலைக் கூட்டி சற்றே உயரமாக்கி அதன் மேல் அமர்ந்து பார்ப்பார்கள். படம் ஆரம்பிக்கும் முன் பார்த்தால் அங்கங்கே சிறிய மணல் மேடாய் இருக்கும். முதல் இடை வேளை விட்டதுமே பீடி, சிகரெட் புகையும், வெட்ட வெளியில் “கால் முளைத்த கிணறாய்’’ மனிதர்கள் பெருக்கிய மூத்திர வாசனையும் ஆரம்பித்து விடும். பெண்களுக்கு சற்றே மறைவான பகுதி. ஓலையால் மறைப்பு. அதில் லைட் இருக்காது. போட்டாலும் பெண்களே உடைத்து விடுவார்கள், ஆண்களின், கொத்தும் பாம்புப் பார்வை அப்படி.

இலங்கையிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். அப்போது எம்.ஜி ஆர் ஆட்சிக்காலம், அவர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது. குடும்பத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து வந்து சென்னையில் இருந்தார். யாழ்ப்பாணப் பல்கலையில் ஒரு பேராசிரியர். நிறைய வாசிப்பவர். (நம்மை விட ஈழ வாசகர்கள்தான் இன்றும் நிறைய வாசிக்கிறார்கள்) அவருக்கு தரை டிக்கெட்டில் உட்கார்ந்து தலைவர் படம் பார்க்க வேண்டுமென்ற ஆசை. அவரும் அவரது, மனைவியும் உற்சாகமாய், செகண்ட் ஷோவுக்கு கிளம்பிவிட்டார்கள். மனைவியை ‘பாக்ஸில்’ உட்காரவைத்துவிட்டு, நாங்கள் தரையில், மணலில் அமர்ந்தோம். தியேட்டர் பகுதிக்கு வெளியே காற்றோட்டமாய் அமர்ந்தோம். ‘அன்னமிட்ட கை’ போட்டிருந்தார்கள் நல்ல கூட்டம். போகிற வழியிலேயே ‘பல்லி மார்க் அரசு சாராயம்’ நைசாக வாங்கிக் கொண்டார். மனசாரச் சாப்பிட்டு, ரசித்துப் பார்த்தார். நான் தவிர்த்து விட்டேன். அவர் மனைவி என்னிடம், ”அவரால ஒங்களோட பேர் அகத்துல கெட்டுராண்டாம்” என்று சத்தமிட்டு விட்டார்கள். முதல் இடைவேள விட்டதும், ’பாக்ஸி’ல் வந்து அமர்ந்து கொண்டோம்.

படமும் நன்றாகவே இருக்கும். அது நன்றாக இருக்காது என்று நினைத்த படம், எதிர்பாராத விதமாய் நன்றாய் வந்து விட்டது. தாழையூத்து, ‘சூப்பர் டாக்கீஸ்’தான் முதல் டூரிங் டாக்கீஸ் அனுபவம். பக்கத்து ஊரில் அண்ணன் வேலை பார்த்தான். அதுதான் சொந்தக் கிராமம். அவன் கிராம கர்ணமாக வேலை பார்த்தான். ஸ்டடி லீவில் திடீரென்று, அங்கே போய் இருந்து படிக்கலாமே என்று தோன்றியது. கொஞ்சம் படிப்பதைக் குழப்பிக் கொண்டிருந்தேன். தேவைக்கு அதிகமாகப் படித்து குறிப்புகள் எடுப்பதிலேயே நிறைய நேரம் செலவழித்து விட்டேன். எல்லாவற்றையும் ரிவைஸ் செய்ய நேரமில்லை என்று திடீரென்று உரைத்தது. அதனால் கொஞ்சம் குழம்பியிருந்தேன். அங்கே போயும் மனம் ஒன்றும் நிலைப்படவில்லை. ஊருக்குப் போகிற வழியில்தான். தியேட்டர். பஸ் அதைக் கடக்கும் போதே பார்த்தேன். துலாபாரம் படம் என்று போஸ்டர் ஒடியிருந்தார்கள். பரணியின் போஸ்டர் டிசைன் அற்புதமாக இருக்கும். சாரதா என்றால் எனக்கு கொஞ்சம் அலாதிப் பிரியம். அவள் ’இவளை’ப் போன்ற ஜாடையில் இருப்பதும் ஒரு காரணம். மலையாளப் படம் பார்த்து வண்டி வண்டியாய்க் கண்னீர் விட்டதும், தமிழில் வந்த போது திரும்பவும் கண்ணீர் குறையாமல் சிந்தியதும் நினைவுக்கு வந்தது. மனசு இருக்கிற கஷ்டமான நிலைக்கு அந்தப் போஸ்டரே என்னவோ செய்தது.

சாயந்தரம் வரை ஓரளவு நன்றாகவே படித்துக் கொண்டிருந்தேன். சாயந்தரம் அண்ணனும், அவரது நண்பரும் படத்துக்கு கிளம்பினார்கள். அண்ணனுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. நண்பர் பின்னால் ஏறிக் கொண்டான். நான் ஒரு சைக்கிளில் கிளம்பினேன்.அது என்ன விசேஷமோ அன்றும் அழுது தீர்த்தோம் எல்லோரும். படம் பார்க்கும் போது தேர்வுப் பயம் வேறு அப்பிக் கொண்டது. வீட்டுக்கு வந்து தூக்கமே வரவில்லை, மறு நாள் முதல் பஸ்ஸில் ஊருக்கு கிளம்பிவிட்டேன். எனக்காக அண்ணன் நிறைய திண்பண்டங்கள் எல்லாம், யார் மூலமாகவோ ஜங்ஷனிலிருந்து வாங்கி வந்திருந்தான்.

மதுரையில் கே.புதூரில் கடைசி பஸ் ஸ்டாப். பஸ் சென்று திரும்புகிற இடத்தில்தான் ஆல்ஃபி என்றொரு நண்பர் இருந்தார். அவர் உயிரியலில் டாக்டர் பட்டாம் பெற்றவர். ஆனால் பந்தா இல்லாத நண்பர். அவர் பிரம்மச்சாரி அறையில் ஒரு இரவு தங்க வேண்டிய சூழல். கே.புதூர் 47 வருஷத்துக்கு முன் ஒரு கிராமம்தான். ஆல்ஃபிக்கு தமிழ் படிக்கத் தெரியாது. ஆனால் சினிமாக்கள் பிடிக்கும். அன்றோடு அங்கிருந்த டூரிங் டாக்கீஸை மூடுகிறார்கள். கடைசிநாள் என்பதால் ஒரே டிக்கெட்டில் இரண்டு படங்கள். ”எமது வந்தனோபசார விழாவை முன்னிட்டு இரண்டு படங்கள்” என்று போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். ‘வசந்த மாளிகை’யும் ’நம் நாடு’ம். முதல்க் காட்சி வசந்த மாளிகை. ஆல்ஃபி ஒரு பீர் ரசிகர். அறையில் உட்கார்ந்து பீர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வசந்த மாளிகை போகலாமே இந்த மூடுக்கு ஏத்த படம் என்று கிளம்பினோம். அவர் ஒரு மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதை நடத்தும் பெண், பொம்மி, அவருக்கு ரசிகை. இவர்தான் பயந்து ஒளிவார். அவள் டிக்கெட் கொடுத்தாள். நானும் என் கணவணும் வாத்தியார் படம் பாக்கப் போறோம் நீங்க இதுக்குப் போங்க என்று சொன்னாள். டிக்கெட்டோடு அவுட் பாஸ் தருவார்கள். ஒரு படம் முடிந்ததும் வெளியே வந்து விட்டு மறுபடி போக வசதியாய்.

நாங்கள் போகும் போது படம் போட்டு விட்டார்கள். பொம்மியின் கணவர், ஊருக்குள் போய், இன்னும் இரண்டு பீர் பாட்டில் வாங்கி வந்து தந்தார். இருட்டில் அவரே எங்களைச் சேரில் அமர்த்தி விட்டுச் சென்றார். அங்கே இரண்டு ப்ரொஜக்டர், ஒரு இடைவேளைதான். பாதிப்படம் ஓடி இடைவேளை நெருங்கும் போது, காலுக்கடியில் என்னவோ பெரிதாக ஓடியது. நாங்கள் பாதி பாட்டிலை காலுக்கு இடையில் வைத்திருந்தோம். பயந்து போய் காலை எடுத்தேன். பெருச்சாளி. என் பீரைக் காலி செய்து விட்டது. திடீரென்று விளக்குகள் போட்டபோது பார்த்தால், ஆல்ஃபியின், புது ’குவா வாடிஸ்’ செருப்பைக் காணும். தூரத்தில் பெருச்சாளி கவ்விக் கொண்டு ஓடியது. துரத்திப் பிடிக்க முடியவில்லை.”போதும் போதும் படம் பார்த்தது, வா” என்று என்னுடனும் ஒற்றைச் செருப்புடனும் வெளியேறினார். “அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக்கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்...” என்று முணுமுணுத்தபடி வந்தேன். ”அதான் பெருச்சாளி குடிச்சுட்டுப் போயிட்டே, நீ எங்கேயிருந்துடா குடிப்பே” என்று சிரித்த படியே ஒற்றை செருப்பை இருளில் ஓங்கி வீசினார் ஆல்ஃபி.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</