வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


’ராஜ களவு’

கலாப்ரியா  

அந்த மலையடிவாரத்தில் அமைந்திருந்த பல்கலைக் கழகத்தின் பதிவாளர் எங்கள் குடும்ப நண்பர். பட்ட மேற்படிப்பில் பெயிலாகி, மனசொடிந்து போயிருந்தேன். அவர்தான் ஆறுதலாக, ஒரு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி வரச் சொல்லியிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக விசிட்டர்ஸ் ஸ்லிப் எழுதிக் கொடுத்து விட்டு அவரது அறைக்கு வெளியே காத்திருந்தேன். அவரது அலுவலக டவாலி அதை உள்ளே கொடுத்தாரா தெரியவில்லை. இவ்வளவுக்கும் அவரிடம் பதிவாளருக்கு ரொம்ப வேண்டியவன் என்று சொல்லியிருந்தேன். டவாலி கண்டு கொள்வதாகவே இல்லை. மலையையே எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்பது. சற்றே எழுந்து வெராந்தாவில் நின்று கொண்டிருந்தால், டவாலி உட்காருப்பா, டி ஆர், ஏ.ஆர், யாராவது வரப்போறாங்க என்று சத்தமிட்டார். மதியம் ஆயிற்று, பசி. சாப்பிடப் போகலாமா, கூடாதா தெரியவில்லை. தத்தளித்துக் கொண்டிருந்தேன்.

நல்லவேளையாக பதிவாளரே வெளியில் வந்தார். டவாலியிடம், ”எப்பா வி.சி, இருக்காங்களா பாத்துட்டு வாப்பா”என்றார். அவர் நகர்ந்தார். நான் பதிவாளர் முன்னால் போனேன்.”ஏய் நீ எப்படா வந்தே’’ என்றார். ”காலையில் பத்து மணிக்கே வந்து விட்டேன்” என்றேன். அதற்குள் டவாலி வந்து, ”வி.சி ஐயா இருக்காங்க” என்றார். ”இந்தப்பையன் வந்திருக்கறதா சொல்லலையே, சீட்டு எழுதிக் கொடுத்தாரா”,, என்று டவாலியிடம் கேட்டார்.ஆமா என்று தன் பையிலிருந்து சீட்டை எடுத்தார். பதிவாளர் அவரது நேர்முக உதவியாளரை அழைத்து, ”வில்லியம்ஸ், தம்பி வந்தா உள்ளே விட்டுடுங்க,”என்றார். என்னிடம் வா என்று உள்ளே அழைத்துப்போனார். ஒரு விண்ணப்பம் எழுதி வாங்கிக் கொண்டு, சாப்பிட்டியா என்றார். இல்லை என்றேன் டவாலியை அழைத்து,தம்பியை கேண்டீனுக்கு அழைத்துப் போய் சாப்பாடு வாங்கிக் கொடு.”என்றார்.

டவாலி வாங்க சார், . இப்படி வாங்க சார், என்று ஏக மரியாதை கொடுத்தார். ”அடப்பாவி மனுஷா நாலு மணி நேரமா புழு மாதிரி நடத்துனியேப்பா”, என்று கேட்க நினைத்தேன். மாலை வரை மறுபடி காத்திருந்தேன். மலையையும் மலை சார்ந்த இடத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். இன்னும் கட்டிடங்கள் கட்டிக் கொண்டிருந்தார்கள். மலையும் செழிப்பானதாக இல்லை. ஏதோ பெரிய மண் மேடு மாதிரி இருந்தது. எங்களூரில் குன்னத்தூர் பொத்தை என்று ஊருக்குத் தென்மேற்கே இருக்கும். வெறும் மண்மேடு., அதில் கொஞ்சம் காட்டுச் செடிகள். அதன் மேல் ஏறிப் பார்ப்போம். அங்கே ஒரே ஒரு மஞ்சணத்தி மரமும், ஒரு பாறையில் வடித்த கால்த் தடமும் உண்டு. வழக்கம் போல் அதை ராமர் கால்த்தடம் என்பார்கள். இந்த மாதிரி, பல ஊர்களில் ஆள் புழக்கமில்லாத இடங்களில் ஏதாவது ஒரு பாறையில் ஒரு கால்த் தடம் இருக்கும். பெரும்பாலும் அதை ராமர் கால்த்தடம் என்பார்கள். கன்னியாகுமரியில் அதை பகவதியின் கால்த் தடம் என்கிறார்கள்.

சாயந்தரம் பதிவாளர் கூப்பிட்டு விட்டார். அவருக்குக் கீழ் உள்ள ஒரு அதிகாரியைப் போய்ப் பார்த்து நியமன ஆணையை வாங்கிக் கொள்ளச் சொன்னார். நான் அங்கே போனேன். அவர் போய்விட்டார். காலையில் வரச் சொன்னார்கள். மறுநாள்விடுமுறை அடுத்த நாள் காலையில் அவர் அறைமுன் காத்துக் கிடந்தேன். அங்கேயும் டவாலி தொல்லை. பன்னிரெண்டு மணி வாக்கில் டவாலி இல்லாத நேரமாய் உள்ளே புகுந்து விட்டேன். எவ்வளவு நேரம்தான் ’வெராண்டாத் தவமியற்றுவது’.அவரிடம் விபரத்தைச் சொன்னேன். அவர் ஒரு உதவியாளரைக் கூப்பிட்டு எனக்கு உதவுமாறு சொன்னார். அவர் என்னை நிதி இலாகா என்று பெயர்ப்பலகை பொறித்திருந்த ஒரு ஹாலுக்குள் அழைத்துப் போனார். அவரை எங்கோ பார்த்த ஞாபகம் இருந்தது. சொன்னேன். எந்த ஊர் என்று கேட்டார். சொன்னேன். அப்படியா, எந்தத் தெரு என்றார். சொன்னேன். ”இருக்கலாம், உங்களுக்கு அங்கே ‘மீனாட்சி’ என்று ஒருபையன், மதுரைக்காரர் குடியிருந்தார்”, தெரியுமா என்றார். ”பிரபல மூட்டைப் பூச்சிப் பவுடர் கம்பெனி உரிமையாளரின் உறவினரா” என்றேன். ”அதேதான், அவங்கதான் அது எனக்கு மருமகன் முறை” உங்கள் வீடு அந்த வீட்டுக்கு எங்கே இருந்தது” என்றார். அடுத்த வீடு என்றேன். அப்படீன்னா நீங்க பதிவாளருக்கு சொந்தமில்லையா என்று கேட்டார். குடும்ப நண்பர் என்றேன். இப்போ மீனாட்சி எங்கே இருக்கான் என்றேன். இங்க தான் மதுரையில் இருக்கான், என்றார். அதற்குள், டவாலி வந்து உங்களை யார் உள்ளே விட்டது என்றார்.அதற்கு சடகோபன், அதுதான் அவர் பெயர். ”யோவ் போம்யா, அவர் வெளியே போனா, நீரு வேலையை விட்டுப் போயிருவீரு, பேசாம பொத்திக்கிட்டு போங்க” என்றார். அப்பாடா, ஒரு மனுஷனையாவது பார்க்க முடிஞ்சதே என்று நினைத்துக் கொண்டேன்.

அதற்குள் சடகோபனைச் சுற்றி அந்த இலாக்கா நண்பர்கள் குழுமி விட்டனர். “என்ன கௌபாயா”, என்று கேட்டார்கள். எனக்குப் புரிந்தது. மூன்று நாட்களுக்குப் பின், முதன் முறையாக சிரிப்பு வந்தது. ”இல்லை வேட்டைக்காரன் என்றேன்”. சடகோபன் ”என் மருமகனோட ஃப்ரெண்டுப்பா, எங்க சொந்தம் மாதிரி” என்றார். எல்லோரும் கலைந்து போனார்கள். பல்கலைக் கழகத்தில் நிறைய பேர் வேலை பார்த்தார்கள். ஏகப்பட்ட துறைகள், ஏகப்பட்ட அரசியல். அது ஒரு குட்டி மந்திரி சபை மாதிரி இருந்தது. ஆணையை வாங்கிக் கொண்டு இன்னும் நாலைந்து கட்டிடம் தள்ளி இருந்த அந்தத் துறையை நோக்கி நடந்தேன். அங்கேயும் பல கஷ்டங்கள். எல்லோரும் என்னை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். நான் பணி ஒப்புக்கொள்ளும் முன் ஒருவர், இரண்டு செக்‌ஷன் வேலை பார்த்து வந்திருக்கிறார். அவரிடமிருந்து பிரித்து என்னிடம் கொடுத்தார்கள். அதில் அவரது ’வருமானம்’ பாதிக்கும் என்னும் நிலை. எனக்கு டைப்ரைட்டிங் தெரியாததின் துன்பத்தை வெகுவாக உணர்ந்தேன். எல்லாவற்றையும் கையாலேயே எழுதி மாளவில்லை. ”என்ன சார் இது, உங்க கையெழுத்து அழகா இருக்கு ஆனால் பெரிய கம்பெனிக்கு ஆர்டர் போடறதெல்லாம் கையால் எழுதினா எப்படி சார்” என்று எனக்கு அதிகாரியான ஒரு பேராசிரியர் சொன்னார். நான் அதே வேலையைப் பார்த்த ஞானத்திடம் டைப் அடிக்கக் கேட்டேன். ஒப்புக் கொண்டார். ஆனால் தயக்கமும் பயமுமாக ஒத்துக் கொண்டார். இழுத்தடித்துச் செய்து தருவார்.

அந்த மாத சம்பள பில் பாஸாகி, காசோலை பதிவாளரின் கையொப்பத்துக்குக் காத்திருந்தது. அந்த துறையின் எல்லோருக்கும், என் முதல் சம்பளமும் அதில் இருந்தது. பில்லை தயார் பண்ணுவதில் ஒருவர் தாமதமாக்கி விட்டார், சாம்பு என்று பெயர். அவர் ஒரு சவடால் பேர்வழி. அவரை விட்டால் யாரும் செய்ய முடியாது என்ற நினைப்பு. அவருக்கு எல்லோரும் சம்பளம் வாங்கியதும் பத்து ரூபாய் டிப்ஸ் வேறு தருவார்களாம். மற்ற துறையில் எல்லாம் வாங்கி விட்டார்கள். கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் என்ன விஷயம் என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன். ரொம்ப அசிரத்தையாகச் சொன்னார்கள். பதிவாளர் கையெழுத்துத் தானே நான் முயற்சி பண்ணூகிறேன் என்றேன். நான் நேராக பதிவாளரிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன். என் முதல் சம்பளம் உங்கள் மேஜையில் இருக்கிறது என்றேன். விவரம் கேட்டார். அவர் கையெழுத்துக்கு நிறைய கோப்புகள், அதில் கடைசியாக இது இருந்தது. மகாதேவி படத்தில் இளவரசனைக் கடித்த பாம்பு கடைசிக் கூடையில், இருப்பது மாதிரி. ”எங்கே இருக்கிறது, முதல் மாதச் சம்பளமா, வில்லியம்ஸைக் கூப்பிடு” என்றார். கூப்பிட்டு வந்தேன். அவரிடம் அந்தக் காசோலையை எடுக்கச் சொல்லி கையெழுத்து இட்டுக் கொடுத்தார். வெற்றிகரமாக அதை துறைக்கு எடுத்துக் கொண்டு போன போது, எல்லோருக்கும் வாயெல்லாம் பல்லாயிருந்தது, சாம்புவைத் தவிர. அவர், காசோலைக்கு பின்னால் இடவேண்டிய” ஃபார் சீல்’’ ரப்பர் ஸ்டாமபைக் காணும் என்றார். அதில்லாமல் வங்கியில் மாற்ற முடியாது, என்றார். நான் வங்கியிலும் கேஷியர் வேலை பார்த்தவன். அதன் முறைமைகள் எனக்குத் தெரியும்.

அதனால் காசோலையின் பின்னால் பேராசிரியரின் பதவியை ”ஃபார் சீல்” போலவே டைப் அடிக்கச் சொல்லி கையெழுத்து வாங்கி, வங்கிக்கும் சென்று காசாக்கி கொண்டு வந்தேன். ”நீங்களே கொடுங்க, அப்பத்தான், கைப்பிடித்தம் வந்தா தெரியும்” என்றார், சாம்பு. நான் எல்லோருக்கும் கொடுத்து முடித்து சாம்புவுக்கு, ஒரு கவரில் போட்டு, கொடுத்தேன். எல்லோருக்கும் இரட்டை சந்தோஷம். பத்து ரூபாய் மிச்சம் வேறு. அடுத்த மாதத்திலிருந்து சம்பள பில்லை நானே தயாரித்தேன். ஒரு மாதிரியாக எல்லோருடனும் சினேகமாகினேன். தினமும் ஞானம் பஸ்ஸில் எனக்கு இடம் போட்டு விடுவான். அவன் ’வருமானத்தை’ எனக்கு வேண்டாம் ’நீயே வாங்கிக் கொள்’ என்று சொல்லிவிட்டேன்.

ஊருக்குள்ளிருந்து தினமும் பஸ்ஸில் வருவது கஷ்டமாயிருந்தது. அதனால் மாணவர் ஹாஸ்டலில் சில நண்பர்களின் விருந்தினராகத் தங்கிக் கொண்டேன். அதில் ஞானம் போன்றவர்களுக்கு வருத்தம். படிப்பெல்லாம் முடிந்த பிறகு ஹாஸ்டல் வாசம் வித்தியாசமாய் இருந்தது. நானும் பாக்கி விழுந்த பாடங்களைப் படித்தேன்.

ஹாஸ்டலில் நான் மறுபடி மாணவனாகி விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். திடீரென்று சைக்கிளை எடுத்துக் கொண்டு பக்கத்து கிராமத்திலிருந்த தியேட்டரில் ’உ.சு.வா’ போல பழைய படம், பார்க்கப் போய் விடுவோம். எப்போதாவது, புதிதாகத் திறந்திருந்த சாராயக்கடை. சாயங்காலமானால், எதிரே இருந்த ரயில்வே லைன் வரை நடை பழகுவோம். ஆச்சரியமாய் ரயில்வே ட்ராக்கை ஒட்டி ஒரு, சிறிய மேட்டில், ஒரு பெரிய மரம் இருக்கும்.பொதுவாக பஸ் போகும் சாலையோரம் போல் ரயில்ப் பாதையில் மரங்கள் இருக்காது. ரயில் தண்டவாளங்கள் ஒரு வகை வெறுமையிலும் வெயிலிலும் காயும். அந்த மரத்தடியில் அமர்ந்து பார்த்தால், ரயில்ப் பாதையும் ஃபிஷ் ப்ளேட்டும் பிரம்மாண்டமான ஒரு கிதார் போல இருக்கும். அந்த மேட்டு நிலத்தைச் சற்றே சுற்றி ரயில்ப் பாதை சென்று மறையும். அந்த மறைவிற்கு அப்பால் அவை ஒன்று சேருமோ என்று வேடிக்கையாய்த் தோன்றும். பெரும்பாலும் ரயிலே வராத அந்த இடமும், தண்டவாளங்களும், மனதில் அழிக்க முடியாத சித்திரமாய் மாறி விட்டது.

கோவாவுக்கு ’ஸ்டடி டூர்’ சென்று வந்த சில ’துறை நண்பர்கள்’ இரண்டு கேஷ்யுநட் ஃபென்னியைத் தள்ளிக் கொண்டு வந்து விட்டார்கள். நான் தான் சொல்லி அனுப்பி இருந்தேன். ”அங்கே முந்திரிப் பருப்பு சாராயம் பிரபலம். சாப்பிடாமல் வந்து விடாதீர்கள்” என்று. ஒரு பத்துப் பேர் போல சகல தயாரிப்புகளுடனும், ரகசியமாக, ரயில் மரத்தடிக்குப் போய், மூடியைத் திறந்துதான் தாமதம், மொத்த ஹாஸ்டலும் வந்து விட்டது. அப்புறம் என்ன, எல்லோருக்கும் ஒரு மூடி தீர்த்தம் கொடுத்துவிட்டு, பாட்டிலை மரத்தடியில் வைத்து, அருகே உதிர்ந்து கிடந்த அந்திமாலைப் பூவைப் போட்டு கும்பிட்டு வந்தோம்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி அறையென்றாலும், இரவு பதினோரு மணிக்கு மேல் விசிட்டர்ஸ் ஹாலில்தான்படுப்போம். அங்கேதான் ஃபேன் உண்டு. ராகாவின் விலையுயர்ந்த வாட்சைக் காணும். யார் எடுத்தது தெரியவில்லை. ஆளாளுக்குயோசனை சொன்னார்கள். பக்கத்தில் ஒரு கிராமத்தில் ஒருவர், ஒரு அம்மன் கோயிலில், வெள்ளிக்கிழமை தோறும் அருள் வாக்குச் சொல்லுவார். அங்கே போகலாம் என்று போனோம். ஒரு கோயில், அதற்கு முன் பெரிய பந்தல், அதில் ஏகப்பட்ட கூட்டம். மைக், ஸ்பீக்கர் வைத்து இருந்தார்கள். வாக்குச் சொல்லுகிறவர் கோயிலுக்குள் இருந்தார். வெளியே இருப்பது யாரென்றே தெரியாது. ஸ்பீக்கரில், இந்த ஊரிலிருந்து இன்ன காரியத்துக்காக வந்தவங்க உள்ளேவாங்க என்று அறிவிப்புச் செய்தார்கள். ”மாடு களவு கொடுத்த விராட்டிப்பத்து ஆள் யாரு இருக்கா, அவுக வாங்க...’’என்று ஒரு அறிவிப்பு. ஒரு ஆள் வெற்றிலை பாக்கு பழம் வைத்த கூடையொன்ற எடுத்துக் கொண்டு உள்ளே போனார். ஸ்பீக்கரில் கூப்பிட்டால் மட்டுமே போகவேண்டும்.

பெரும்பாலும் களவு கேஸ்கள்தான் நிறைய. ஒருவர் வைக்கோல் படப்பு எரிந்து போயிற்று என்று வந்திருந்தார். அதற்கு ஸ்பீக்கரிலேயே ’வாக்கு’ வந்தது. ”வைக்கப்போர் எரிஞ்சு போச்சுன்னு வந்த ஆள், போகலாம். அது யாருன்னு தெரிஞ்சா, வீண் சண்டை வரும். உயிருக்கே ஆபத்து, பீடை விட்டுதுன்னு போயிருங்க..” நடு இரவை நெருங்கிக் கொண்டிருந்தது, நேரம். பனி வேறு. நாங்கள் நாலு பேர். இரண்டிரண்டு பேராய், பந்தலுக்கு வெளியே போய், சிகரெட் குடித்து விட்டு வந்தோம். அது காலியானதும் பீடி. இரண்டையும் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்தார்கள். திடீரென்று ஒரு அறிவிப்பு, ”நாலு பேர் வந்திருக்காங்க.... .” கொஞ்சம் சுதாரித்து எழும்பத் தயாரானோம்... ”அதுல பொண்டாட்டி ஓடிப்போனவன் மட்டும் வா....” நாங்கள் சிரித்துக் கொண்டோம். எங்களுக்கு கல்யாணமே ஆகலியே. பாம்பேயிலிருந்தெல்லாம் ஆள் வந்திருப்பதாக அறிவிப்பு வந்து யார் யாரோ எழுந்து போனார்கள். கடைசி வரை எங்களைக் கூப்பிடவே இல்லை. அறைக்கு அசதியாய் வந்தோம்.

மை போட்டுப் பார்க்கலாம் என்று ஒரு யோசனை.

இன்னொரு, பக்கத்துக் கிராமத்திற்குப் போனோம். அங்கே ஒரு ஜோசியர். போலீஸ்காரர்களே அவரிடம் வந்து பல கேஸ்களுக்கு துப்பு விசாரித்துப் போவார்களாம். போய் உட்கார்ந்தவுடன், ’ஒரு களவு சம்பந்தமாக துப்புக் கேட்கவந்திருக்கீங்க’ என்றார். ராகாவுக்கு இதிலெல்லாம் இஷ்டமில்லை. வாட்ச் போனால்ப் போகுது என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவனை கட்டாயப் படுத்திக் கூட்டிப் போனோம். ஜோசியர் அவனைப் பார்த்து, தம்பி கைய்ய நீட்டுங்க, என்றார். எதுக்கு என்றான் ராகா.களவு கொடுத்தது நீங்க தானே என்றார். ராகாவுக்கு முகத்தில் ஆச்சரியம் படர்ந்தது. அவன் தீவிரமான இடதுசாரி சார்புள்ளவன். சமீபமாய் அதிலிருந்து சற்றே விலகி இருந்தான். கையை நீட்டினான். கையைப் பார்த்துக் கொண்டே களவு போனது ஒரு எந்திர சம்பந்தமானது. அது எட்டுக்குப் பத்து அறையில களவு போயிருக்கு. திருடனும்ன்னு திருடலை, இதுக்குப் பேரு ”ராஜ களவு”, ஏதோ ஆசையில எடுத்துட்டான், எப்படி திரும்ப எடுத்த இடத்திலேயே வைக்கிறதுன்னு முழிக்கான், அவனுக்கு இடது விலாவில் ஒரு பெரிய மச்சம் இருக்கு. அவனா குடுத்தா உண்டு. போய்ட்டு வாங்க என்று பெரிய கும்பிடாய்ப் போட்டு, ஒரு சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டே வீட்டின் முன்புறமிருந்த மரத்தடிக்கு வந்து அமர்ந்தார். நாங்கள் பத்து ரூபாயைக் கொடுத்தோம், வேண்டாம், பொருள் வராது, அதனால ’படி’ வாங்க மாட்டேன். பொருள் வந்ததுன்னா, நீங்க வந்து, நினைக்கிற ‘படி’யைக் குடுத்துட்டுப் போங்க. என்று சொல்லிவிட்டு சுருட்டில் ஆழ்ந்து விட்டார்.

மறுநாளிலிருந்து குளிக்கப் போகிறவர்களை எல்லாம் கவனிக்க ஆரம்பித்தோம். அவர் சொன்னது போலவே,ஒருவருக்கு இடது விலாவில் மச்சம் இருந்தது. ஆகா இவரா இருக்குமோ, ரொம்ப நல்ல பையனாச்சே என்று யோசித்தோம். அவரைக் கிளப்பி நைசாக அவர் அறையைச் சோதனை போட நினைத்தோம். அதற்கேற்றாற் போல அந்த ஞாயிற்றுக் கிழமை அந்த மலையில் ஏறுவோமா என்று அவரே கேட்டார். எனக்கும் ரொம்ப நாளாக ஆசை மலையில் ஏற. அதிலும் குறிப்பாக, அங்கே ஒரு செடி நிறைய வளர்ந்திருக்கும். அதன் இலையிலிருந்து ஒருவகை அபின் போன்ற வஸ்து கிடைக்கும் என்று வேன் டிரைவர் சொல்லிக் கொண்டிருப்பார். அவர் இருபத்தி நாலு மணி நேரமும் போதையில்தான் இருப்பார். ரொம்ப நல்ல ஆள். அவர்தான் சிகரெட்டில் (கஞ்சாத்தூளை) சினையேற்றச் சொல்லித் தந்தவர். மத்தியானம் சாப்பிட்டபின், மலையேறத் துவங்கினோம். விடுமுறையன்று பகலில் யாரும் அறையைப் பூட்டுவதில்லை.

மழைநீர் ஓடிவருகிற ஒரு காட்டாற்றுப் பாதை வழியாக ஏறினோம். ஒரே குத்துச் செடியும், முள்ளுமாக இருந்தது. எது ’அந்தச்செடி’ என்று தெரியவில்லை. பாதி வழியில் ஒரு ஆடு மேய்க்கிற ஆளிடம் கேட்டோம், அவர் கட்டாயம் தெரியணுமா என்றார். ஒரு நண்பர் தான் அது சம்பந்தமாக ஆராய்ச்சி பண்ணுவதாகச் சொன்னார். அவர் எங்களுடன் நடந்தார். கொஞ்ச தூரம் போனதும், கொஞ்சம் தடிமனான இலையுள்ள ஒரு செடியைக் காண்பித்தார். அதன் இலையில் அங்கங்கே, மேலும் கீழும், கொசு முட்டையிட்ட மாதிரி, கருப்புப் புள்ளிகளாய் இருந்தது. அவர் கையை அந்த இலைகளின்மீதும், அதன் மேலுள்ள கருப்பு புள்ளிகளின் மீதும் தடவினார், அவரது காய்த்துப் போன உளங்கையின் மீது அழுக்குப் போல் படர்ந்தது. இலையில் கருப்பைக் காணும். அந்த அழுக்கை நகத்தால் சுரண்டித் திரட்டினார். மிளகு போல உருண்டையாக வந்தது. “இதான் நீங்க கேட்டது. இதை நாங்க இப்படியே சாப்பிட்டிருவோம், நீங்க சாப்பிடணும்ன்னா, கீழே போயி வாழைப்பழத்தோட சாப்பிடுங்க” என்றார். உச்சி மலையில் நிறையக் கிடைக்கும் என்றார். உச்சிக்குப் போனதும் மலையின் மறு பக்கம் ரொம்ப பசுமையாய் இருந்தது. தூரத்தில் ஒரு பசுமையான கிராமம். ’சோழன் உவந்தான்’ என்கிற இடம். மேலே நிறையச் செடிகள் இருந்தன. அவர் செய்தது போலவே கையால் இலைகளின் மீது தடவினோம். கையில் படிந்த கறுப்பு மெழுகை சுரண்டுவது அவர் செய்தது போல் எளிதாய் இல்லை, ஒரு ஓடு போன்ற கல்லால் வழித்தோம். யாரோ இப்படித்தான் கற்கால மனிதன் ஆயுதம் கண்டு பிடித்திருப்பான் போல என்று சொன்னார்கள். காபிக்கொட்டைச் செடியை கண்டுபிடித்ததும், ஆடும் ஆட்டுக்காரர்களும்தான்.

யாருக்கும் கீழே போய் பழத்தில் பொதிந்து சாப்பிடப் பொறுமையில்லை, அப்படியே, முழுங்கியும் நாக்கில் தடவியும் கொண்டோம். நாக்கு மரத்துப் போன மாதிரி ஆயிற்று. வேறொன்றும் தெரியவில்லை. ‘ஒரு மயிரையும் காணும், நாக்குத்தான் என்னவோ போலிருக்கு” என்று சொல்லிக் கொண்டே இறங்கினோம். தூரத்தில், அடிவாரத்தில், ஆட்டு மந்தை கூட்டமாக இறங்குவது, ஏதோ மேகப் பொதி மாதிரி இருந்தது. சூரியன் சிறு சிறு மேகத்தில் மறையும் போது, மலைச் சரிவில் அங்கங்கே மேக நிழல் படிந்தது. அப்படியொரு நாவல், மகரிஷி எழுதியது, படித்தது நினைவுக்கு வந்த போது, குபீரென்று தலை சுற்றியது. ஆஹா சரக்கு வேலை செய்யிது என்றேன், இன்னும் ஒருவர் ஆமா சார் என்றார்.

அறைக்கு எப்படி வந்தோம் என்றே தெரியவில்லை. மலையடிவாரத்தில் ‘மச்சக்காரர்’ ஆடு மேய்ப்பவரைக் கட்டி முத்தமிட்டுக் கொண்டது லேசாக நினைவில் இருந்தது..அறையில் ஒன்றும் இல்லை என்றார்கள்.

எனக்கு அதெல்லாம் மண்டையில் பதியவே இல்லை. நான் என் அறையில் தனியாக அடைந்து கொண்டேன். ரயில்த் தண்டவாளமும், மரத்தடியும் நினைவில் பெரிய்ய்ய்ய படமாக விரிந்தது. நோட்டில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் நாக்கில் சுவை அரும்பே இல்லாத மாதிரி இருந்தது. இரண்டாவது தடவையாகப் பல் விளக்கிக் கொண்டிருந்தேன். ஆட்டுக்காரர் அறைவரை வந்து விட்டுப் போவதாகச் சொன்னார்கள், கொஞ்சம் கொய்யா இலைகளைச் சாப்பிடும்படிச் சொன்னாராம். இல்லையென்றால் மாதுளை ஓட்டை வாயில் ஒதுக்கிக் கொள்ளச் சொன்னாராம். நான் வருவதற்குள் போய் விட்டார். அசுவராசியமாய் இருந்தது. என் நோட்டைத் திறந்து பார்த்தேன். ஒரு கவிதை கிறுக்கலாய் இருந்தது. அதில் உருப்படியாக ’தண்டவாளச் சோகங்கள்’ என்றொரு வார்த்தை மட்டுமே புரிந்தது. அதைச் சீர் படுத்தினேன்.

“மருத மர நிழல் மீட்டாத
தண்டவாளச் சோகங்களை
எனக்கேன் நிரந்தரித்தாய்
சசி...”

மனம் சுவாரஸ்யம் பெற்றது போலிருந்தது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</