வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


’பிராது’

கலாப்ரியா  

வேலைக்குச் சேர்ந்த புதிது. நானும் அவனும்-அவனது அறையில்தான் தங்கி இருந்தோம்- திடீரென்று கிளம்பினோம். வழக்கமாக இரவு எட்டரை மணிக்கு ஓட்டலில் சென்று சாப்பிடுவோம். அன்று ஏழரை மணிக்கே, நகர் வீதி வலம் வரும் போது, தினமும் பற்று வைத்துச் சாப்பிடும் ஆத்தூர்ப் பிள்ளை கடையில் கூட்டமில்லை. அறைக்குப் போய் விட்டு இன்னொரு தரம் இவ்வளவு தூரம் அலைவானேன் என்று சாப்பிட உட்கார்ந்தோம். அன்று செவ்வாய்க்கிழமை, வழக்கமாக நானும் இன்னொரு அலுவலக நண்பரும் சந்தனமாரியம்மன் கோவிலுக்குப் போய் வருவோம். தூத்துக்குடியில் பிரபலமான கோயில். அம்மன் சிலை சற்று சிறியதாக அழகாக இருக்கும். திருநெல்வேலியில் புட்டாரத்தி அம்மன் சிலை பெரிதாக மகிஷனை வதம் செய்வது போல் இருக்கும். எனக்கு ரொம்பப் பிடித்த சிலை. கிட்டத்தட்ட அதே மாதிரி, பெரிய கோயிலில் மஞ்சன வடிவம்மன் சிலையும் இருக்கும். அழகான அம்மன் சிலையைத் தேடி நிறைய கோயிலுக்குப் போவேன். அலங்காரம் செய்கிறேன் என்கிற பேரில், கண்ணில் வெள்ளி மலரையும், இதழ் ஓரங்களில் வெள்ளியில் செய்த கோரைப்பல்லையும் ஒட்ட வைத்து அம்மனை பயங்கரமாக்கி வைத்திருப்பார்கள். நான் பார்த்ததிலேயே தாராசுரம் தெய்வநாயகியும், கன்னியாகுமரி பகவதியும், மிக அழகான சிலை வடிவங்கள்.

மறுபடி மறுபடி மனசுக்குள்,
”வானுலாவும் காற்றிலே
ஞான இன்ப ஊற்றிலே
தேன் கலந்த பாலுடன்
தான் கலந்த கீதமே...” என்று எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடிக்கொண்டிருந்தார். அப்போது சிலோன் ரேடியோவில் அற்புதமான பாடல்கள் போடுவார்கள். இது ஒரு அழகான பாட்டு, ”மதி குலவும் யாழிசையே,
கண்ணன் குழலிசை போலே
உள்ளம் கொள்ளை கொள்வையோ....”என்று தொடங்கும், சாயந்தரம்தான் ஒலிபரப்பி இருந்தார்கள். அப்போதிருந்து மூளைக்குள் சுற்றிச் சுற்றி வந்து மனதையும் உடலையும் லேசாக்கிக் கொண்டிருந்தது..

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நண்பனிடம் சொன்னேன், இன்னிக்கி செவ்வாய்க்கிழமைங்கிறது மறந்துட்டு, கோயிலுக்குப் போயிருக்கலாமே” என்றேன். ”ஏல வாறியா ஆறுமுகமங்கலம் கோயிலுக்குப் போயிட்டு வருவோம்”, என்றான். அம்மன் அழகாருக்குமா என்றேன். ஒரு மாதிரியாக, சொல்ல வந்த வார்த்தைகளை முழுங்கி விட்டு, ரொம்ப அழகாருக்கும் வா, கடைசி பஸ் எட்டு மனிக்கு, கிளம்புவோம் என்று அவசரமாய் அள்ளிப்போட்டு விட்டு, கடையிலேயே இருபது ரூபாய் கடன் வாங்கிக் கொண்டான் பஸ்ஸுக்கு. ஆத்துர்ர்ப் பிள்ளை, ”இந்நேரம் என்ன இருவது ரூபாய்க்கி முடை வந்துட்டூ....”என்று சலித்தபடி கல்லாவில் தேடினார் “ஆறுமுக மங்கலம் போகணும் இன்னிக்கி கடைசிச் செவ்வாயில்லா” என்றான், அவன். “அப்படியா மகாராஜாவைப் பார்க்கவா, சரி சரி” என்று தந்து விட்டார். ஏல என்ன மகாரஜாங்கிறாரு அண்ணாச்சி” , என்றேன். ”வாலெ, சீக்கிரம், பஸ் கிளம்பிரும்” என்று பரபரத்தான். சொன்னபடியே பஸ் கிளம்பி விட்டது, ஓடிச் சென்று ஏறினோம்.

”எவ்வளவு தூரம் இருக்குடா, போய்ட்டு திரும்பிரலாமா” என்று சந்தேகக் கேள்விகளாகவே கேட்டுக் கொண்டிருந்தேன். பக்கத்தில், இன்னொரு ஓட்டல் முதலாளி இருந்தார். அவர் ஒரு ஐயர். அவர் கடையில் எப்பவாவது சாப்பிடுவதுண்டு. அவர், “என்ன சார்வாள், இன்னிக்கி அற்புதமான ’படுக்கை’ எல்லாம் உண்டு, இருந்து பாத்துட்டு வாங்க”, என்றார். கையில் பெரிய ஜவுளிப் பார்சல் வைத்திருந்தார். “இது எதுக்கு” என்றேன்.

”மஹாராஜாவுக்கு சாத்தறதுக்கு, வேஷ்டி, தேங்காப்பட்டிணத்திலிருந்து ஸ்பெஷலாச் சொல்லி நெய்தது, நம்ம இடத்துக்காகப் போட்டிருந்த கேஸ் ஜெயிச்சுட்டுல்லா, எல்லாம் ஹைகோர்ட் மாஹாராஜா கருணைதான்” என்றார். ”என்னலே, அம்மனுக்கு வேட்டி சாத்தப்போறேங்கிறார் ஐயர், நாம அம்மன் கோயிலுக்குப் போகலையா” என்றேன். பஸ் பாதி தூரம் வந்து விட்டது.”பேசாம வாயேம்லெ”, என்றான்.

அப்போதுதான் நினைவுக்கு வந்தது, இதே மாதிரி ஒரு செவ்வாய்க் கிழமை, அறையில் கூடும் ஏகப்பட்ட நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தான். ”ஏல யாராவது வாங்கடா, கோயிலுக்குப் போகிறதுக்கு என்னடா பயம்” என்று. எல்லோரும் சிரித்தபடியே மறுத்துக் கொண்டிருந்தார்கள். இன்னக்கி நம்ம மாட்டிக் கொண்டோம் போல என்று புரிந்தது. சரி இதுல என்ன பயம், கோயில்தான என்று அமைதியாய் இருந்தேன். பஸ் ஒரு விலக்கில் நின்றது. ”ஹைகோர்ட் மஹாராஜா கோயில் எல்லாம் இறங்குங்க” என்றார் கண்டக்டர். கும்மிருட்டு. ஐயர் கையில் டார்ச்சு தயாராய் வைத்திருந்தார். அவருடன் போனோம். ”வாங்க இப்படி வாங்க, ”என்று வழி காட்டிக் கொண்டே சென்றார். காலில் ஏதோ கனமாகக் குத்தியது. ”என்னவோ குத்துதுடா” என்றேன். ஐயர், ”அது ஏதாவது எலும்பா இருக்கும், சுத்துப் புறம் பூரா சுடுகாடுதானே” என்றார். நண்பன் என் கையை இறுகப் பற்றிக் கொண்டான். எனக்கென்னவோ பயமாயில்லை.. ஆனால் புதிர்தான் விடுபட்ட பாடில்லை, இப்படியொரு காட்டுக்குள் என்ன விதமான அம்மன் கோயில் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வந்தேன்.

பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்துடன் கடைகள் தென்பட ஆரம்பித்தன. தேங்காய், பழம் வெற்றிலைக் கடைகள்,பூக்கடைகள்.

சற்று தூரத்தில் ஓலைக் கூரையடியில் வெளிச்சமும் கூட்டமும் தெரிந்தது. ஐயர், அங்கிருந்த பூக்கடையில் பெரிய தும்பிக்கை மாலையாக ஒன்றை ஆர்டர் கொடுத்திருந்தார் போல, அதை வாங்கிக் கொண்டார். தூக்க முடியவில்லை. நண்பன் உதவினான். அவன் அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்றே சொல்ல வேண்டும். அப்போது அவர் கேட்டார், ”தம்பிக்கு என்ன வேண்டுதலோ” என்று, “இல்லை வேலை கெடைச்சதுமே வாரேன் என்று வேண்டுதல், ஆனா நேரமே கிடைக்கலை” என்றான். ஆமா கோயிலுக்கு வருவதற்கு மகாராஜா கூப்பிட்டாத்தான் வரமுடியும், அது இன்னக்கின்னு இருக்கறப்போ நீங்க நெனச்சாலும் நிறுத்த முடியாது.”ஏதும் ”பிராது” கொடுத்திருக்கீங்களா” என்றார். இல்லையென்று மலங்க மலங்க விழித்தான். இதற்குள் கோயில் வந்திருந்தது.

ஓலைக்கூரைதான் கோயில். இரண்டு பெரிய சுடலை மாட சாமிகள். இரண்டும் மண்ணால் ஆனவை.

எங்கள் தெருவே சுடலை மாடன் கோயில் தெருதான். தெருமுனையில் ஒரு அழகான அடுக்குச் சுடலை மாடன் உண்டு. அது கல்லில் வடித்தது. இது வெறும் மண். ஆனால் ரொம்ப பிரம்மாண்டமாய் இருந்தது. ஏகப்பட்ட வேஷ்டிகள் இரண்டிரண்டாய்ச் சேர்த்து, சாற்றி இருந்தார்கள். எனக்கு ஒன்றும் பயமாயில்லை. ஐயரைப் பார்த்ததும் பூசாரி வாங்க சாமி என்றார். சாமி அங்கேல்லா இருக்கு என்று பவ்யமாகச் சொன்னார் அவர். ஐயருன்னாலே முதலாளின்னுதான் அர்த்தம், ஆனா எல்லாருக்கும் பெரிய முதலாளி, மகாராஜால்லா,” என்றார் ஐயர். துணிப் பார்சலையும் பூவையும் கொடுத்து விட்டு, ”நம்ம கேஸ் ஜெயிச்சுட்டு,”பிராதை” எடுத்துடுங்க” என்றார். கூரையிலிருந்து, பெரிய சரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது, காகிதச் சுருள்கள்.அதுவே பெரிய தும்பிக்கை மாலை மாதிரி இருந்தது. பூசாரி,”எப்ப கொடுத்தது” என்றார். ”போன ஆனி மாசம், மாத சிவராத்திரியையொட்டி கொடுத்தது”. ‘காகித மாலை’யில் கொஞ்சம் கனமாயிருந்த ஒரு பகுதியில் உத்தேசமாகக் கை வைத்து, தாள்கள் எதுவும், மாலையிலிருந்து கழன்று விடாமல் பத்திரமாகப் பிரித்துப் பார்த்தார், பூசாரி.

ஐயர் ”அதுவாகத்தானிருக்கும்” என்று ஒன்றைக் காட்டினார். அதுவேதான். ”ஒரு இடத் தகராறு, நம்ம இடம் ஒரு வம்பன் கையில மாட்டிக்கிட்டு, காலி பண்ணுவனான்னு சாதிச்சான். அப்பதான் சொன்னாங்க, மகாராஜா சன்னதியில ‘பிராது” கொடுத்துட்டு நிம்மதியா இருங்கன்னு”. அப்ப கட்டின பிராது, இந்தா கேசை நமக்கு அனுகூலமாக்கிட்டாரு ஹைகோர்ட் மகாராஜா,” என்று என்னிடம் கூறிக் கொண்டே, ஆத்மார்த்தமாக சுடலையைச் சுற்றி வந்து தாளைக் கிழித்துப் போட்டார். நண்பன் இன்னும் பேய்முழி விழித்துக் கொண்டிருந்தான். ஐயர் கிளம்பினார். நாங்களும் கிளம்பினோம். பூசாரி,” இருங்க, இன்னக்கி ’வலிய படுக்கை’, இருந்து பார்த்துட்டு முதல் பஸ்சுக்கு போங்க, என்றார்.” படுக்கை என்றால் பெரிய பூஜை என்றார் ஐயர். சரி என்று சொல்லி விட்டு சுற்றிப் பார்க்கப் போனோம்.

சன்னதியை விட்டு வெளியே வந்த்தும் நீளமான தகரக் கூரை. அதன் இன்னொரு முடிவில் ஒரு சுடலை மாடன். அதற்குப் பின்னே பெரிய சுடுகாடு. அன்று கூட ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சன்னதி முகப்பில் சப்பரம் இறக்கத் தோதுவாக இருப்பது போல், சதுரத்தின் நான்கு மூலைக்கொன்றாக இடுப்பளவு உயரத்தில் நான்கு கல்தூண்கள். அதில் ஒன்றில் ஒரு கிழவி, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தாள். எத்தனை காலமாகவோ இருப்பது போல், ’ட’ வடிவில் அமர்ந்திருந்தாள். அநேகமாக அவள் இடுப்பே ’ட’வடிவில் இறுகிப் போயிருக்கும் போலிருந்தது. தலை விரி கோலமாகப் புலம்பிக் கொண்டிருந்தாள். தகரக் கொட்டகை முழுக்க கூட்டம். எல்லோரும் ஆடு கோழிகளுடன் தயாராய் இருந்தார்கள்.

கொட்டகைக்கு வெளியேயும் கூட்டம். காடா விளக்கை கொளுத்தி வைத்துக் கொண்டு ஏகப்பட்ட கோடாங்கிகள். ஒவ்வொருத்தர் முன்னும், பாவப் பட்ட பெண்கள்.. எல்லாம் தலைவிரி கோலம். கோடாங்கி, கையில் வைத்திருந்த வெள்ளிப் பூண் போட்ட பிரம்பால் பெண்களின் மண்டையில் பொட் பொட்டென்று போட்டபடி பாடிக் கொண்டிருந்தான்.” ”நீ யாரு, வந்திருக்கே “யாரை விட்டு யாரு போறா”....என்று அடி விழுந்து கொண்டேயிருந்தது. சொந்தக்காரச் சனங்கள், கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். தலையில் அவ்வப்போது விபூதியைக் கொட்டி பேய் விரட்டிக் கொண்டிருந்தான் கோடாங்கி. பரிதாபமாக இருந்தது. நண்பன் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.சரி வாடா வேணும்ன்னா போயிரலாம் என்றேன். படுக்கை பார்க்காமப் போயிராதீங்க என்று பூசாரி சொன்னது வேறு, அவனுக்கு போகவும் மனசில்லை. ராத்திரி பன்னிரெண்டு மணிக்குத்தான் பூஜை. இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கும். ஒரு கடையில் சிகரெட் கேட்டான். சிகரெட் இல்லை. கடைக்காரர், கத்திரி சிகரெட் இருக்கு குடிக்கீங்களா என்று அவர் மடியிலிருந்து, அவருக்குள்ளதை எடுத்து இரண்டைக் கொடுத்தார். அவர் சிறிதாக வெற்றிலை பழம் பத்தி, என்று கடை போட்டிருந்தார். கடையில் கொஞ்சம் இடம் இருந்தது. இங்க படுத்துகிடலாமா என்று கேட்டான். ஈரமாயிருக்கே என்று சொன்னவர், ஒரு பிரப்பம் பாயைக் கூரையிலிருந்து உருகி விரித்துக் கொடுத்தார். ஐந்து ரூபாய் கேட்டார். கொடுத்தோம். வியாபாரமே இல்லை, ”இல்லாட்டா கேட்க மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டார். ஆனால் படுக்கவும் முடியவில்லை. கடைக்குப் பின்னாலிருந்து மூத்திர வாடை. நான், ’வாடா’ என்று எழுந்து மறுபடி பேய் விரட்டும் பரிதாபத்தைப் பார்க்கப் போனேன். கோடாங்கிகள் எல்லாம் கலைந்து விட்டார்கள். ஒன்றிரண்டு பேர் சும்மா பீடி குடித்தபடி காசுகளை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

பூஜை ஆரம்பமாகி விட்டது. சாம்பிராணிப் புகையும், கோடாங்கிகளின் உடுக்கை ஒலியும், சன்னிதானத்தை நிறைத்தது.

வரிசையாக ஆடுகளைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். ஐந்து ஆறு பூசாரிகள். ’சல்லடம்’ (சுடலைமாட சாமிகொண்டாடிகள் அணியும் பிரத்யேக ஆடை, கறுப்புக் கலரில் நூலால் சித்திர வேலைப்பாடுகள் கொண்டது. அரை டிரவுசர் போலிருக்கும்) கட்டிக் கொண்டு நின்றார்கள். ஒருவர் மட்டும் ஒரு அடி நீளக்கத்தியை முதுகோடு மறைத்தபடி நின்றிருந்தார். ஒருவர் ஆட்டின் முகத்தில் சளப்பென்று தண்ணீரைத் தெளித்தார். நான்கு பேர் நான்கு கால்களைப் பிடித்து, ஆட்டைத் தலைக்கு மேல் தூக்கி அதைத் திருப்பி, அதன் வயிறும் நெஞ்சும் மேல்பக்கமாக இருக்கும் படி, தரையோடு அடித்து அமுக்கிப் பிடித்துக் கொண்டார்கள். கத்தி வைத்திருந்தவர், கத்தியை ஒரு வினாடி சுடலைக்கு நேராக உயர்த்திக் காட்டிவிட்டு, ஆட்டின் நெஞ்சுக்குழிக்குள் சொருகி, வட்டமாக, வெட்டினார். ”குபுக்’ ரத்தம் பீச்சியடித்தது. ஒரு நிமிடம்தான், ஆடு துவண்டு விட்டது. அதை நேர்ந்தவர்கள் தரதரவென்று இழுத்துப் போனார்கள். அடுத்த ஆடு தயாராயிருந்தது. அது பெண் ஆடு. அதற்கடுத்து ஒரு ஆண் ஆடு நன்றாகக் கொழுத்திருந்தது. பெட்டையைப் பார்த்ததும், கனைத்துக் கொண்டு, குறியை நீட்டிக் கொண்டு பாய்ந்தது. சுற்றியிருந்த பெண்கள் எல்லாம் சிரித்தார்கள். எல்லாம் இரண்டு நிமிடம்தான். அதுவும் ஈரல்க்குலை அறுபட்டுச் செத்தது.

இந்த முரண்பாட்டை பகிர்ந்து கொள்ள அருகே பார்த்தால் நண்பனைக் காணவே இல்லை. அவன் தலையைப் பிடித்த படி தள்ளிப் போய் உட்கார்ந்திருந்தான். அவனிடம் போய் “என்னாச்சுலெ” என்றேன், ”ஒரு மாதிரியா வாந்தி பண்ண வருது” என்றான். சரி வா போவோம் என்றேன். கொஞ்சம் திரு நீறு வாங்கீட்டு வா என்றான். போய் வாங்கி வந்தேன். நெறு நெறுவென்று மண்ணும் சாம்பலுமாய் இருந்தது. ”சுடுகாட்டுச் சாம்பல் அப்படிதானிருக்கும்” என்று பாவமாகச் சிரித்தான்.

ஒரு வழியாய் மெயின் ரோட்டுக்கு வந்த போது, நாலு மணி, முதல் பஸ் வந்தது. ஏறி வீடு வந்த போது விடியத் தொடங்கி இருந்தது. நாங்கள் இருந்தது, மாடிப் போர்ஷன். கீழ்ப் பகுதியில் பத்மாக்கா இருந்தார்கள். நாங்கள் வளவிற்குள் நுழையும் போது, வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் தூக்கக் கலக்கத்துடன், அவர்கள் குழந்தை. “சாவி இங்கேயிருக்கு, என்ன. தியேட்டரிலேயே தூங்கி விட்டீர்களா” என்று சிரித்தபடியே கேட்டார்கள். கேட்டுக்கொண்டே, கோலப்பொடி முகத்தில் பட்டு விடக்கூடாதென்றோ என்னவோ, புறங்கையால், முகத்தில் விழும் மயிர்க்கற்றையை ஒதுக்கினார்கள். ல.ச.ரா சொல்கிற மாதிரி சௌந்தர்யம் பொங்கி வழிந்தது. கையெடுத்துக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டு உபாசனை செய்யலாம் போலிருந்தது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</