வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

" ஷோலேயிடம் நைனா அல்வாவைக் கொடுத்தான். அவன் அதைச் சாப்பிடாமல் டிராயர் பையில் போட்டான். “டேய் சாப்பிடுரா, ட்ரவுசர் பையில் போட்டால் எலி கடிச்சிறப் போது என்றான் நைனா. அதை எடுத்து வாயில் போட்டு, அப்படியே வைத்திருந்தான். இரண்டாம் தடவை சாப்பிடுரா என்று சொன்னதும் தலையை ஆட்டி விட்டு கொஞ்சம் தள்ளிப் போனான். சற்று மறைவாகப் போய் அதைத் துப்பிக் கொண்டிருந்தான்."






”சார்வாமார் சாப்பிட்ட பின் வாங்க, மாவு இருந்தா தாரேண்ணேன்” என்று சொல்லி அனுப்பி விட்டான். அவர்களும் அதுக்கென்ன விருந்தாளிக சாப்பிடட்டும் என்று சொல்லி விட்டார்கள். தோசையும் சட்னியும் அமிர்தமாய் இருந்தது."

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


கையெழுத்து......

கலாப்ரியா  

அந்த ஊரில் வங்கியின் கிளையொன்றை ஆரம்பிக்கப் போவதாக தலைமை அலுவலகத்தில் முடிவு செய்ததும், அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குத் தோன்றியது, ’இன்னொரு அந்தமான் சிறை தயாராகி விட்டது’ என்பதுதான். ஊழியர்களைப் பழி வாங்கவே சில கிளைகள் உண்டு. தண்ணியில்லாத காடு என்கிற மாதிரியில் நீர், நிலம், காற்று என்று ஆகாயத்தைத் தவிர எதுவுமே இல்லாத ஊர் அது என்று பேசிக் கொண்டிருந்தோம். நிர்வாகத்துடன் சரியான உறவில் இல்லாத பலரும் ஒருவரையொருவர் கேலி செய்து கொண்டோம், ”ஏல உனக்குத்தான் அந்த இடம்’ என்று. ஒரு வழியாய் அந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்தவர்களையே சோதனை முயற்சியாக நியமனம் செய்தார்கள். நாங்கள் எல்லாம் அப்பாடா என்று மூச்சு விட்டோம்.

நான் ரிசர்வ வங்கிக்கு வாராவாரமும், இருவாரங்களுக்கு ஒரு முறையும், முக்கியமான தகவல்கள் சமர்ப்பிக்கும் ஒரு செக்‌ஷனில் கிளார்க்காக இருந்தேன். அதில், எனக்கு மேல் ஒரு இளநிலை அதிகாரி, அவரை விட்டால் நேரே பொது மேலாளரும், சேர்மனும்தான். அதிகாரியை விட, என்னையே பொது மேலாளர் கூப்பிட்டு என்ன ஆயிற்று அந்த வார ஸ்டேட்மெண்ட் என்று கேட்பார். செவ்வாய்க்கிழமை மதியத்திற்குள் அதை தபாலில் சேர்க்கவேண்டும். தவறினால், அன்று மாலையில், ஆர்.எம்.எஸ், போய் தபாலில் சேர்க்க நானே போக வேண்டும். புதன் கிழமை சென்னை ரிசர்வ் வங்கியில் கிடைக்க வேண்டும். அப்புறம் 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ஸ்டேட்மெண்ட். இரண்டையும் அனுப்பி முடித்த கையோடு பொது மேலாளர் கூப்பிட்டார். ”இன்னும் ஒரு வாரம் இங்கே அவசர வேலை இல்லை அல்லவா” என்று கேட்டார். ஆமாம் சார் என்றேன். ”‘படவூர்’ கிளையில் ஐநூறு சேமிப்புக் கணக்குகள் ஆரம்பிக்க வேண்டும். அங்கே ஒரு ஜெர்மன் மிஷனரி இருக்கிறது, அவர்கள் அங்குள்ள கிராம மக்களை தத்தெடுத்துக் கொண்டு அவர்களின் வேலைக்கான பாதிச் சமபளத்தை பணமாகவும் மீதிச் சம்பளத்தை இந்த சேமிப்புக் கணக்கிலும் போடுவார்களாம், அதற்கு நீங்கள் போய் இரண்டு மூன்று நாட்கள் உதவ வேண்டும்,”. என்றார்.

உங்களுக்குத் துணையாக யாரையாவது இன்னொரு கிளார்க்கை அழைத்துச் செல்லுங்கள்” என்றார். நான் யாரைக் கேட்பது என்று யோசித்தபடி வந்து கொண்டிருந்தேன். எதிரே கோபால் நைனா வந்தான். இவன்தான் சரியான கம்பெனி, என்று நினைத்தேன். ”வா கிளம்பு ரெண்டு பேரும் படவூர் போக வேண்டுமாம்” என்றேன். அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். ”நேற்று ஜி எம், நான் தம் அடித்து விட்டு வரும்போது என்னைப் பார்த்தார், அப்போதே ஏதோ வில்லங்கம் வரப்போகுதுன்னு நெனச்சேன்,” என்றான். ”பயப்படாத நைனா, மூனு நாளைக்கு டெபுடேஷன் தான், நல்ல பயணப் படி கிடைக்கும், நீ வாரதுன்னா வா, “என்றேன். “எப்பா பொழைச்சேன், அப்படியே அங்க உக்கார வச்சுர மாட்டாங்கள்ளா” என்றான்.

ஜி.எம்மிடம் அவனையும் அழைத்துக் கொண்டு போய், ”சார் கோபால்சாமி இஸ் வில்லிங்” என்றேன். ”சரி போய்ட்டு வாங்க, அவருக்கும் இங்க வேலையே இல்லை இப்ப” என்றார் கிண்டலாக. உடனேயே முன் பணம் எடுத்துக் கொள்ளுங்கள், அந்த ஊருக்குப் போற ரூட், சேர்மனுக்குத்தான் நன்றாகத் தெரியும், அவரைப் பார்த்து கேட்டுக் கொள்ளுங்கள், என்றார். சேர்மனும் உற்சாகமாக அதற்கு எப்படிப் போக வேண்டும் திண்டுக்கல்லிலிருந்து காலையில் ஒரு பஸ்ஸிருக்கிறது. அது நேரே படவூருக்கே போய் விடும்.அதை விட்டால், திருச்சி பஸ்ஸில் ஏறி, மூன்று இடத்தில் இறங்கி மூன்று பஸ் பிடித்துப் போக வேண்டும்“ என்று ஏதோ ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டிப் போக வேண்டும் என்கிற மாதிரியில் சொன்னார். ”எவ்வளவு முன் பணம் எடுத்திருக்கிறீர்கள்” என்றார். நான் நூறு ரூபாய் என்றேன். இரண்டு பேரும் ஐநூறு எடுத்துக் கொள்ளுங்கள், நான், ஜி.எம் மிடம் சொல்லி விடுகிறேன், வேலை ரொம்ப முக்கியமானது, மிஷனரிக்கு நிறைய வெளி நாட்டுப் பணம் வரப் போகிறது, நல்லபடியாக அந்த நிர்வாகியிடம் பேசி வாருங்கள்” என்றார்.

ஐநூறு ரூபாய் என்றதும் நைனாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. நான் சொன்னேன், ”போடா, இது அட்வான்ஸ் தாண்டா, போய் விட்டு வந்து நமக்கு உண்டான ரூல்ப்படி இரு நூறு ரூபாய் கிடைத்தால் அதிகம்” என்றேன். அப்போது அதுவும் கூடப் பெரிய தொகைதான். மாதச்சம்பளமே முன்னூறைத் தாண்டாது..கொஞ்ச நேரத்தில். இரண்டு பேருக்கும் ‘டிரான்ஸ்ஃபர்’ போட்டிருப்பதாக, விஷயம் பரவி விட்டது. இல்லை வெறும் டெபுடேஷன்தான் என்று விளக்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

திண்டுக்கல்லில் சேர்மன் குறிப்பிட்ட பஸ்ஸை ஐந்து நிமிட இடைவெளியில் விட்டு விட்டோம். அப்புறம், திருச்சி பஸ் ஏறி, ஏதோ பாலர் விடுதியோ என்னவோ அங்கே இறங்கி, அடுத்த பஸ்ஸை விசாரித்தோம். அந்தா போகுது பாருங்க, ஓடிப் போய் பிடியுங்க, என்று ஒரு பஸ்ஸைக் காண்பித்தார்கள். ஓடினோம். நல்ல வேளை பஸ்ஸை நிப்பாட்டி விட்டார்கள். ஏறி உட்கார்ந்ததும், பஸ்ஸைப் பிடித்து விட்ட நிம்மதியில் நல்ல பசி. ஆனால் இன்னும் ஒரு பஸ் மாற வேண்டி இருக்கிறது. அந்த பஸ் நின்ற இடத்தில் ஒரு கூரைக் கடை இருந்தது. காராச்சேவு மாதிரி ஒரு பலகாரமும், டீயும். குடிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து டீ மட்டும் சொன்னோம். டீ போட்டு முடிப்பதற்குள், படவூர் போகிற பஸ் வந்து விட்டது. கடைக்காரரே ”சார், இத விட்டா இன்னம பஸ் கிடையாது. பத்து மைல் நடந்து போகணும், நீங்க போங்க, டீயைப் பத்திக் கவலைப் படாதீங்க, அங்க எங்க மச்சான் கடை இருக்கு, அரை மணிக்கூர்ல போயிரும், என்றார். பஸ்ஸில் திணிந்து கொண்டோம்.

போய் இறங்கினால் அழகான ஊராய் இருந்தது. மூன்று புறமும் மலை. ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு தினுசாய் இருந்தது. ஒன்று வெறும் பொத்தை மாதிரி மண் மேடாய் இருந்தது. இன்னொன்று நல்ல செடி கொடியுடன் உயரமான மலையாய் இருந்தது. அது பழனி மலையின் தொடர்ச்சி என்றார்கள். இன்னொன்றும் நல்ல பசுமையுடனே இருந்தது. ஆனால் அதன் அடிவாரம் கரிசல்க் காடு மாதிரி இருந்தது. ஒவ்வொரு அடிவாரமும் ஒவ்வொரு நிலவகை போலிருந்தது. ஊர் ரொம்பச் சின்ன ஊர். ஏதோ ஒரு ஜமீன்தாரின் கட்டுப் பாட்டில் இருந்ததாம்..அவரையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டு வர வேண்டும் என்று சேர்மன் உத்தரவு.

வங்கி, பஸ் இறக்கி விட்ட இடத்தின் எதிரிலேயே இருந்தது. இரண்டு மூன்று கடை தள்ளி ஒரு டீக்கடை. அதுதான் ‘மச்சான் கடையாய்” இருக்க வேண்டும். ஆனால் அது அடைத்துக் கிடந்தது. வங்கியில் மேலாளர், எனக்கு ரொம்ப அறிமுகமானவர் ‘வாங்க வாங்க’ என்று வரவேற்றார். வெட்கத்தை விட்டு சாப்பிடணுமே என்றோம். ”இருங்க, பஸ்ஸில் ப்ரெட் சொல்லிவிட்டேன், கொண்டாந்திருக்காங்களா பார்ப்போம்” என்றார். அதற்குள் கண்டக்டர் வந்து விட்டார், கை விரித்தபடி. விஷயத்தைக் கேள்விப்பட்டதும், அடடா சொல்லியிருக்கப்படாதா, வையம்பட்டில நிப்பாட்டி வ்ந்திருபேனே என்றார். ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி வாரோம், இதுல எது வையம் பட்டீன்னு யாருக்கு தெரியும். கண்ணெதிரே மண்பானைத் தண்ணீர் தட்டுப் பட்டது இரண்டு பேரும் அருகே போய் மடக் மடக்கென்று இரண்டு தம்ளர் குடித்தோம்.

திருநெல்வேலியிலிருந்து, மேலாளர் மற்றும் நண்பர்களுக்காக அல்வா வாங்கி வந்திருந்தோம். அதைக் கொஞ்சம் சாப்பிட்டோம். அது பசியைக் கூட்டி விட்டது. பக்கத்து வீட்டில் பால் காய்ச்சிக் கொண்டு வந்தார்கள், ”இனிப்பு இருக்காது, கருப்பட்டி போடலாமா தெரியலையே” என்று சொல்லிய படியே. அதைக் குடித்து வைத்தோம். பால் நல்ல பசும் பால், மணமாயிருந்தது. இனிப்பில்லாமல் குடிப்பதுதான் கஷ்டமாயிருந்தது. (இப்ப இனிப்பே போடாமல்த்தான் குடிக்கிறேன். ஷுகர்.) இரவு உணவும் அம்பேல் ஆகி விடும் போலிருந்தது.’மச்சான்கடை’ அடைத்துக் கிடந்தது. ஏதோ ‘பெரிய விசேஷம்’, அதற்குப் போயிருக்கிறார்கள். குடும்பத்தோடு. ஊரிலேயே அது ஒன்றுதான் கடை. மேலாளருக்கு அங்கிருந்துதான் சாப்பாடு வரும். அவரும் என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டிருந்தார். ப்ரெட்டும் இல்லை. நல்லவேளையாக ‘ஷோலே’ வந்து சேர்ந்தான். சோலை என்பதுதான் அந்தச் சிறுவனின் பெயர். ’ஷோலே’ ஹிந்திப் படம் வந்த புதிது, அவன் அதனால் ‘ஷோலே’ ஆகி விட்டான். அவனுக்கு தோசை சுடவும் சட்னி அரைக்கவும் தெரியுமாம். அதனால் அவனை மட்டும் கடைக்காரர் அனுப்பியிருக்கிறார். மேலாளரின் பட்டினி அறிந்து. பாவம் பத்து பதினைந்து மைல் நடந்தும் ஓடியும் வந்திருக்கிறான். மேல் காலெல்லாம் புழுதி.

ஏழரை மணி வாக்கில் வந்தவன், வந்ததும் அம்மி கொள்ளாமல் தேங்காய் துருவி வைத்து, சட்னி அரைத்து விட்டான். ஸ்டவ் ஒன்றைப் பற்றவைத்து தோசை சுட ஆரம்பித்து விட்டான். ஊர்க்காரர்கள் ஒன்றிரண்டாய்க் கூட ஆரம்பித்தார்கள். எல்லோரையும் ”சார்வாமார் சாப்பிட்ட பின் வாங்க, மாவு இருந்தா தாரேண்ணேன்” என்று சொல்லி அனுப்பி விட்டான். அவர்களும் அதுக்கென்ன விருந்தாளிக சாப்பிடட்டும் என்று சொல்லி விட்டார்கள். தோசையும் சட்னியும் அமிர்தமாய் இருந்தது. கடைசியில் வெங்காய ஊத்தப்பம் தாரேன் என்று முழு முழு சிறு வெங்காயமும், பாதியாய் அரிந்த மிளகாயுமாக ஒரு தோசை தந்தான். அதைத் தான் திங்க முடியவில்லை. ஷோலேயிடம் நைனா அல்வாவைக் கொடுத்தான். அவன் அதைச் சாப்பிடாமல் டிராயர் பையில் போட்டான். “டேய் சாப்பிடுரா, ட்ரவுசர் பையில் போட்டால் எலி கடிச்சிறப் போது என்றான் நைனா. அதை எடுத்து வாயில் போட்டு, அப்படியே வைத்திருந்தான். இரண்டாம் தடவை சாப்பிடுரா என்று சொன்னதும் தலையை ஆட்டி விட்டு கொஞ்சம் தள்ளிப் போனான். சற்று மறைவாகப் போய் அதைத் துப்பிக் கொண்டிருந்தான். திருநெல்வேலி அல்வாவுக்கு இப்படியொரு வரவேற்பா என்று எங்களுக்கு ஆச்சரியம்.

அவன் என்று இல்லை, வேறு சில பெரியவர்களும் வேண்டா வெறுப்பாகவே சாப்பிட்டார்கள். அந்த ஊரில், அதிகம் போனால் ஆயிரத்திச் சொச்சம் பேர் இருப்பார்கள். அதில் ஊர் என்று சொல்லக் கூடிய ஜமீன் மாளிகையைச் சுற்றிய தெருக்களில் உருப்படியாய் பத்து வீடுகள் கூடத் தேறாது. ஜமீன், மலையையும் அதன அடிவாரத்தில் விளைகிறவற்றையும் நம்பியே இருந்திருக்கிறது. செழிப்பான மண் தான். கொடிகட்டி ஆண்ட ஜமீனின் கோபம் பொல்லாதது. இப்போது இருளடைந்து கிடக்கிற மாளிகையில் ஜமீன் வாரிசில் ஒருவர் இருக்கிறார். அவரும் வெளியே வருவது கிடையாது. அவர் மனைவி, ஒன்றிரண்டு வேலைக்காரர்கள்., தவிர யாரும் கிடையாது. இரவு பூராவும் வங்கியின் தினக்கூலிப் பியூன் கருப்பையா, ஜமீன் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தான். ஊரின் அழகைப் பற்றியும். அங்கே கிடைக்கிற தேன், மலைப் பழம் ஆகியவை ரொம்ப பிரசித்தமாம்.

காலையில் மிஷனரி அலுவலகம் இருந்த ஒரு சிறிய மலைப் பகுதிக்கு மிஷனரியின் வேன் ஒன்று வந்து அழைத்துப் போக வந்தது. காலையில் சாப்பாடு தயார் செய்ய ‘மச்சான்’ வந்து விட்டார். தலை மொட்டை அடித்திருந்தார். அப்போதுதான் புரிந்தது,’பெரிய விசேஷம்’ என்றால் எழவு வீடு என்று. நல்ல சாப்பாடாகப் போட்டார். மூன்று நாளும் மச்சானும் அக்காவும் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். காணாததற்கு ஷோலே வேறு, சார் வெங்காய ஊத்தப்பம் போடவா, என்று பயமுறுத்துவான். மிஷனரியை ஒரு சிஸ்டர் நடத்திக் கொண்டிருந்தார். வயதானவர். துணைக்கு சுந்தர்சிங் என்று ஒரு இளஞ்சாமியார், அவர் தன் மனைவி குழந்தையுடன் இருந்தார். உள்ளூர் வேலைகளையெல்லாம் அவர் பார்த்துக் கொள்வாராம். போகிற வழியில் எல்லாம் சிறு சிறு குடிசைகள். எல்லாரும் ஜமீனில் கொத்தடிமைகளாக இருந்தவர்களாம். அவர்களை சிஸ்டர் மீட்டு, நிலங்கள் வாங்கி அவர்களை வைத்து ஒரு குட்டி எஸ்டேட் போல நடத்திக் கொண்டிருந்தார். ஜமீனுடன் பல போராட்டங்களுக்குப் பிறகே இத்தனையும் சாத்தியமாகி இருக்கிறது. பாதி தூரத்துக்குப் பின் நாங்கள் வேனை விட்டு இறங்கி நடந்தோம்.

ஒவ்வொரு குடிசையின் முன்னும், குழந்தைகள், தங்கள் வீட்டுப் பெரியவர்களை சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா, அம்மா, தாத்த பாட்டி எல்லோரையும். விளையாட்டாக கையில் சிறு கம்புகள் வேறு. எதற்கு என்று கருப்பைய்யா விளக்கினான். எல்லோரும் தங்கள் பெயரை எழுதிப் பழகவேண்டும் என்று சிஸ்டர் சொல்லியிருக்கிறார்கள். பக்கத்து கல்லூரி மாணவர்கள் என்.எஸ்.எஸ் கேம்ப் வந்த போது கையெழுத்துப் போடச் சொல்லித் தந்து விட்டுப் போயிருக்கிறார்கள். அதன் மேற்பார்வையாளர்கள் குழந்தைகள். கையெழுத்துப் போடுகிறவர்களுக்கு, சிஸ்டர் பத்து ரூபாய் போட்டு வங்கிக் கணக்கு ஆரம்பித்துக் கொடுப்பார்கள். அதை ஆரம்பிக்கத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். கைநாட்டு என்றால் பணம் கிடையாது. மாணவர்கள், ஒவ்வொருவருக்கும் கனமான அட்டையில் அவரவர்கள் பெயரை பெரிய எழுத்தாக ஸ்கெட்ச் பேனாவால் எழுதித் தந்திருக்கிறார்கள். பெயரே இல்லாதவர்களுக்கு அவர்களே பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

அதைப் பார்த்து இப்போது மண்ணைக் கூட்டி வைத்து விரலால் எழுதிப் பழகுகிறார்கள். இன்றைக்கு பத்து மணிக்குள் பழகவேண்டும் என்று ஒரு நிபந்தனை. பாவம் ஒவ்வொரு கிழமும் கஷ்டப்பட்டு முயற்சிப்பதைப் பார்த்ததும் முதலில் சிரிப்பாகவும் அப்புறம் கஷ்டமாகவும் இருந்தது. இத்தனைக்கும் பெயரைச் சுருக்கி, வள்ளி, மல்லி, பழனி., சோலை என்றெல்லாம் பழக்கியிருக்கிறார்கள் மாணவர்கள். ஒரு கிழவர், தண்டாயுத பாணி என்று பிடிவாதமாக எழுதிப் பழகிக் கொண்டிருந்தார்.குடிசைச் சுவரில் அவரே, இங்கிருந்து அங்கு வரை நீளமாக எழுதியும் வைத்திருந்தார்.’பாணி’என்று எழுதினால்ப் போதும் என்றால் ”ஐயய்யோ அம்மா கோவிச்சுக்கும், அப்புறம் பத்து ரூவா தராது” என்று அழாத குறையாய்ச் சொன்னார்.பல கிழவிகளும் தங்கள் பேரக்குழந்தைகளிடம் செல்ல அடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

மிஷனரி ஆபிஸை நெருங்கினால் அங்கே இன்னும் ஒரு நூறு பேருக்கு மேல் அழகான வெராந்தாவெங்கும் உட்கார்ந்து தாளில் எழுதிப் பழகிக் கொண்டிருந்தார்கள். சிஸ்டர் கனிவும் சிரிப்புமாக உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார்கள்’ அவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு கணக்கு துவங்கும் ஃபாரங்களில் கையெழுத்து வாங்க ஆரம்பித்தோம்.ஒவ்வொரு ஃபாரத்திலும் மூன்று கையெழுத்து வாங்குவதற்குள் தாவு தீர்ந்து போயிற்று. கையெழுத்துக்கான கட்டங்களுக்குள் போட, ரொம்பச் சிரமப்பட்டார்கள். நான் சிஸ்டரிடம் முழுதும் வெள்ளையாக இருக்கும் ஃபாரத்தின் பின் புறம் வாங்கிக் கொள்கிறோம் என்று யோசனை சொன்னேன்.முதலில் மறுத்தவ்ர்கள், அப்புறம் சம்மதித்தார்கள்.ஒரு வழியாய் நூறு கையெழுத்து வாங்குவதற்குள் மாலை ஆகி விட்டது. நாளை தொடரலாம் என்று புறப்பாட்டோம் ஐயா ஐயா, இந்தா போட்ருதேன் என்று சூழ்ந்து கொண்டு விட்டார்கள். சிஸ்டர் நாளைக்குப் போட்டாலும் பத்து ரூபாய் உண்டு என்று சொன்னதும்தான் போக விட்டார்கள்.

மாலை மயங்குகிற நேரம் ஜமீந்தாரைப் பார்க்க கருப்பையா, அல்வா சகிதம் போனோம். நாங்கள் போகிற போது உயரமான தாழ்வாரத்தில் இருந்து ஒரு பெண்ணை உள்ளே போ என்று ஒருவர் விரட்டிக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்துக் கொண்டே, அடிக்குப் பயந்து ஓடுகிற மாதிரி ஓடினார் அந்தப் பெண். எங்களிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்பது போலிருந்தது முக பாவம். ரொம்ப அழகாய் இருந்தாள்.ஆடை பரிதாபமாக இருந்தது.ஜமீந்தார் சாதாரணமாக, ஒரு வட்ட மேஜை முன் உட்கார்ந்திருந்தார்.ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பேடும், ஒரு பாட்டிலும் இருந்தது. மண்ணெணை பாட்டில் மாதிரி இருந்தது.

கருப்பையா அறிமுகப் படுத்தினான். ‘வாங்க’ என்றார். வாயிலிருந்து வெங்காய நாற்றம் அடித்தது. வெள்ளைக்காரி என்ன சொல்லுதா என்று சிரித்தார். சிரிக்கிற மாதிரியும் இல்லை. நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. மங்கலான ஒற்றை பல்ப் அந்த ஹாலின் இருளுடன் போராடிக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணை உள்ளே போகச் சொல்லி விரட்டியவன் மோர் கொண்டு வந்தான்.மேஜை மீது வைத்துவிட்டு ஸ்டாம்ப் பேடையும் மண்ணெண்ணை பாட்டிலையும் எடுத்துக் கொண்டு போனான்.சிறிது நேரத்தில் அந்தப் பெண் ஓடி வந்தது, மாட்டேன் மாட்டேன் என்று அலறிய படி. ஜமீந்தார் அவளை இழுத்துக் கொண்டு உள்ளே போனார். வரவே இல்லை. நாங்கள் கிளம்பினோம். கருப்பையா சொன்னான். அது அவரோட இரண்டாவது சம்சாரம். ஆனா உண்மையிலெயே இவரோட அப்பாவுக்கு கூத்தியா வழியா பொறந்த பொண்ணுதான். முறைக்கு தங்கச்சீ...அவ பேருக்கும் சொத்து இருக்கறதால, அப்பா செத்ததும், சின்னப் புள்ளையிலெயே கல்யாணம்ன்னு தாலியக் கட்டிக் கூட்டிட்டு வந்துட்டாரு. அநியாயம் சார், அப்பல்லாம் இவங்களைக் கேக்கவே முடியாது, இப்பவும் கைநாட்டு வாங்கத்தான் மண்ணென்னை விட்டுக் கொளுத்திருவேன்னு பயமுறுத்தராறாம், கொடுமை சார் என்றான். கொடுமையாய்த்தான் இருந்தது, மனசு பூராவும், மூன்று நாளும் அங்கிருந்து வந்து பலநாட்களுக்கும் எனக்கும் நைனாவுக்கும்..



 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</