வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கலாப்ரியா, எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கூடு வாசகர்களுக்காக கலாப்ரியா அவர்கள் எழுதும் தொடர் பற்றி அவரது வார்த்தைகள் மூலமே அறிவோம்.

ஜெயகாந்தன் அவருடைய ``சத் சங்கத்தில்’’ சொன்னதாக, பாடியதாக நண்பர்கள் சொல்லுவார்கள்.

"வாழ்தலுக்கும் சாதலுக்கும் என்ன வித்தியாசம்
வாழ்ந்துவிட்டுச் சொல்லுகிறேன் அந்த வித்தியாசம்".

வாழ்க்கை ஒருவருக்கொருவர் வித்தியாசப் படுகிறது. பொதுப் புத்தி சார்ந்து அந்த வித்தியாசம் அவ்வளவாய் உணரப் படாமல் போகலாம். ஏனெனில் நம் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒவ்வொரு படகாய் மிதக்காமல், ஒரு பெரிய பூமித் தெப்பமாய் சமூகம் கட்டிப் போட்டிருக்கிறது.. இதனால்த்தான் என் அனுபவங்களுக்குள் நீங்களும் உங்கள் அனுபவத்திற்குள் நானும் நிழல் தேடிக் கொள்ள முடிகிறது.

தனியாய், ஒரு குழந்தை ஆடிக் கொண்டிருக்கும் ஊஞ்சலுக்கு அருகே இன்னொன்று வந்து நானும் ஏறிக் கொள்கிறேன் என்கிறது. அப்புறம் இன்னொன்று, மீண்டும் ஒன்று என்று ஊஞ்சலில் ஆசையாய்க் குழந்தைகள், ஊஞ்சல்ப் பலகை கொள்ளும் மட்டும் ஏறிக் கொள்கின்றன. சில இறங்கியதும் புதிதாய்ச் சில ஏறுகின்றன.....என் வாழ்க்கைப் பாடுகள் உந்திய உந்துதலில் ஒரு ஊஞ்சலை ஆட்ட ஆரம்பிக்கிறேன்.....உயரத்திலே தங்கி விடாமல் உங்கள் அருகேயே அமர்ந்து கொஞ்சம் நினைவு, கொஞ்சம் புனைவு என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்னை.....

அன்புடன்
கலாப்ரியா

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


பகலில் பேசும் நிலவு

கலாப்ரியா  

ஆனிமாதம் பெரிய கோயிலில் கொடியேறி, பத்து நாள் திருவிழாவும், தேரோட்டமும் நடக்கும்.அதையொட்டி 40 நாட்கள் பொருட்காட்சியும் நடக்கும். நான்கு மணி வாக்கில் பொருட்காட்சி நுழைவுக் கட்டண டிக்கட் கொடுக்க ஆரம்பிப்பார்கள். பொருட்காட்சி மைதானத்தில் அங்கங்கே ஸ்பீக்கர் கட்டி இருப்பார்கள்.ஐந்து மணி வரை தொடர்ந்து புதுப் படப் பாடல்களாகப் போடுவார்கள். தேரோட்ட சமயத்தில் பள்ளிக்கூடம் கடைசிப் பீரியட் இருக்காது. நாலு மணிக்கு விட்டு விடுவார்கள்.மெயின்ஸ்கூல் என்கிற பெரிய பள்ளிக்கூடத்திற்கு அடுத்து முனிசிபல் ஆஃபீஸ், அதற்கு எதிராகத்தான் பொருட்காட்சி மைதானம். ஐந்து மணி வரை நின்று பாட்டுக் கேட்போம்.அதற்குப் பின் விளம்பரங்கள் ஆரம்பித்து விடுவார்கள்.இடையிடையே பாட்டின் சில வரிகளை ஒலி பரப்புவார்கள்.

எங்களுக்கு எரிச்சலாய் வரும். ”ஆமா பெரிய சிலோன் ரேடியோன்னு நினைப்பு, அதிலாவது ஒரு பாட்டு முழுசாப் போடுவான், இடையில தான் கொஞ்சம் விளம்பரம் வரும், இவனுக என்னப்பா நொடிக்கு நூறு விளம்பரம் போடுதானுக”, என்று அலுப்பாய் வரும்.அப்போதெல்லாம் சிலோன் ரேடியோவின் வர்த்தக ஒலிபரப்பு பிரபலம். இப்ப வருத்தற கொலை பரப்பாகிட்டாங்க.

சினிமா தியேட்டரில் இடைவேளையின் போது, ஸ்லைடு விளம்பரம் போடுவார்கள்.அந்த ஸ்லைடுகளில் சில அருமையாய் இருக்கும்.எப்படி இவ்வளவு கலர் கலரா வருது என்று இன்னும் ஆச்சரியமாகவே இருக்கிறது.அப்போது கலர் பிலிம் எல்லாம் கிடையவே கிடையாது. 1964 வரை முழு நீளக் கலர் சினிமாப் படமே மூன்றோ நாலோ தான் வந்திருக்கும். அலிபாபா, கட்டபொம்மன்,ஸ்ரீ வள்ளி. கொஞ்சும் சலங்கை, என்று ரொம்பக் குறைவு. ராயல் டாக்கீஸில், பாதி விளம்பர ஸ்லைடுகள் மௌனமாகப் போடுவார்கள்.பாதிக்கு மேல் ஸ்லைடில் உள்ளதை வாசிப்பார்கள். அந்த தியேட்டர் மேனேஜர் ஒரு ஐயர், அவர்தான் வாசிப்பார், “கோடை காலத்திற்கும் மழைக் காலத்திற்கும் ஏற்ற தீப்பெட்டிகள், ஏர் உழவன் தீப்பெட்டிகள், ஏஜெண்டுகள், ஸ்ரீ பாலகிருஷ்ணா ஸ்டோர்ஸ், மேல மாட வீதி, திருநெல் வேலீ ட்டவுண்” என்று வாசிப்பார் தியேட்டரில் குறைந்த பட்சம் ஒருத்தராவது அதைக் கேலி செய்து அதே போல் இழுத்து, “திருநெல் வேலீ ட்டவுண்:”என்று கேலி செய்யாமல் இருக்க மாட்டார்கள். “இது எதுக்கய்யா வாசிக்கணும், ஸ்லைடை காண்பிச்சா போறாதா” என்றால், அவர் சொல்லுவார், ”போடா உனக்கு என்ன தெரியும், படத்தை பெரிசா வரைஞ்சு வச்சாலும் இன்னும் பொம்பளைக் கக்கூஸ் எது, ஆம்பளைக் கக்கூஸ் எதுன்னு தெரியாம ஜனங்க இருக்கானுக”என்பார்.

பொருட் காட்சி விளம்பரங்களும், சில சமயம் சுவாரஸ்யமாய் இருக்கும்.வழக்கமான ஒரு குரலே விளம்பரங்களை வாசிக்கும்.” இது யாருன்னு பார்க்கணுமே”, ஆள் பயங்கர அலட்டல் பேர்வழியாய் இருப்பானோ ஆளைப் பாத்தா ரெண்டு சாத்து சாத்தணுண்டா,” என்று பேசிக் கொள்வோம். ஒரு வருடம்,(1962-என்று நினைவு) சி.எல்.ஆனந்தன் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வந்தன.அப்பொழுது ஆனந்தனுக்கு (டிஸ்கோ சாந்தியின் அப்பா என்றால் உங்களுக்குத் தெரியும்) நல்ல நேரம், நிறைய படங்கள் வந்தன.வீரத்திருமகன், செங்கமலத்தீவு, அந்த இரண்டு படங்கள். முதலாவது, ஏ.வி.எம் சரவணன் சகோதரர்களின் ’முருகன் பிரதர்ஸ்’ தயாரிப்பு. இரண்டாவது,சேலம் `எம்.ஏ.வி. பிக்சர்ஸ்’ தயாரிப்பு.வீரத்திருமகன் பாட்டுக்கள் எல்லாம், விஸ்வனாதன் ராம மூர்த்தி இசையில் படு பிரலம்.கண்ணாதசன், அப்போது உச்சத்தில் இருந்தார்.

‘செங்கமலத்தீவு’ படத்திற்கு, கேவி.மஹாதேவன் இசை. பாடல்கள், திருச்சி. தியாகராஜன், சென்னை. ஏகலைவன் என்று புதிய பாடலாசிரியர்கள். பாடலும் இசையும் ரொம்ப பிரமாதமாய் இருக்கும்.ஆனால் வீரத்திருமகன் பாடலே ரொம்ப பிரபலம். எனக்கு செங்கமலத்தீவு பாடல்களே பிடிக்கும். அதில்
‘சிந்தித்தால் சிரிப்பு வரும்,
மனம் நொந்தால் அழுகை வரும்....’என்று டி.எம்.எஸ். பாடுகிற பாட்டும்,
`பகலில் பேசும் நிலனைக் கண்டேன்,
பார்த்துச் சிரித்தேன் மயங்கிநின்றேன்
பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
பாவை நிலவாய் நின்றேன்‘- என்று டி. எம்.எஸ்., ஜானகி பாடுகிற பாடலும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
அப்போதெல்லாம் எஸ்.ஜானகி பாடல்கள் அபூர்வமாகவே படங்களில் வரும்.கொஞ்சும் சலங்கை யில் ‘சிங்காரவேலனே தேவா....” –கார்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வர இசையோடு ஜானகி பாடிய பாடல் பிரபலம். இசைத் தட்டு விற்பனையில் சாதனை புரிந்த பாடல். பொதுவாக தெருவில், நான் கேவியெம் மாமா ரசிகன். மற்றவர்களெல்லாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி ரசிகர்கள்.

பொருட் காட்சியில் சுற்றிக் கொண்டிருந்தோம், ஆமாம் அழகான பெண்கள் பின்னால்தான். விளம்பரமும், காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய அறிவிப்பும், அந்தந்த ஸ்டால்களிலிருந்து வரும்,-”பாருங்கள்,பாருங்கள், உங்கள் கண் முன்னாலேயே உருகி எலும்புக் கூடாகும் அழகியை”என்று `உருகும் பெண்” ஸ்டாலில்:”ஜல, ஜல ஜலக் கன்னி, மீன் உடலும், பெண் முகமும் கொண்ட ஜலக் கன்னி காண வாருங்கள், கட்டணம் ஐம்பது பைசா, ஐம்பது பைசாவேதான்”.,என்று `ஜலக்கன்னி’ ஸ்டாலில்- சத்தங்கள் காதை பிளந்து கொண்டிருந்தது. ‘தீயணைப்புத் துறை’,`பனை வெல்லக் கூட்டுறவு நிலையம்’ போன்றவை வழக்கமாக அமைந்திருக்கும், கடைசி ஸ்டால்களின் வரிசை சந்தடி குறைவாக இருக்கும்.அங்கே நின்று கொண்டிருந்தோம்.சிலர் கொஞ்சம் தள்ளி இருந்த காலி வயல்களில் ‘கால் முளைத்த கிணறாய்’ ஒன்றுக்கு இருந்து கொண்டிருந்தார்கள்.திடீரென்று செங்கமலத்தீவு பாட்டை ஒலி பரப்பினார்கள். ”பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்...” பாடலை முழுதாக போட்டார்கள்.

நண்பர்கள் அன்றுதான் அதை விரும்பிக் கேட்டார்கள், “ஏல நீ சொல்றது சரிதாம்லே, இந்தப் பாட்டு நல்லாருக்குடா., கடைசியாப் பார்த்தோமே, தெப்பக் குளத்தெரு பாலா, அவளுக்கு பொருத்தமான பாட்டுலே” என்றார்கள்.”ஆமா பாட்டை முழுசாப் போடுதானே என்ன, பாட்டுப் போடறவன் உன்னை மாதிரி, கே.வி.எம் ஆளோ,” என்று யாரோ கேட்டார்கள். அப்போது அருகே கொஞ்சம் அழுக்கான வேஷ்டி, வெள்ளைச் சட்டையுடன் பீடி குடித்துக் கொண்டிருந்தவர் எங்களை நோக்கி திரும்பினார்.வாயின் இரண்டு ஓரமும் வெள்ளைப் புண், சோகை படிந்த முகம், தலையெல்லாம் கலைந்து தூங்காமல் விழித்திருந்து, விழித்திருந்து கண்கள் சிவந்து போயிருந்த மாதிரி இருந்தார்.”ஆமா தம்பிகளா, எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்,சம்பூர்ண ராமாயணம் மாதிரி, ஒரு படத்துக்கு உங்க விஸ்வநாதனால் ஒரு பாட்டுக் கூட போட முடியாது தெரிஞ்சுக்குங்க,” என்றார். கர்ணன் படம் வரும் வரை அது ஒரு உண்மைதான்.

”ஒரு டீ குடிச்சுட்டு , தம் அடிச்சுட்டுப் போலாம்ன்னு முழுப்பாட்டையும் ஓட விட்டுட்டு வந்தேன்”. ”நீங்க தான் விளம்பரமெல்லாம் வாசிக்கிறதா” என்றோம். ”ஆமா ஒரு டேப் ரிக்கார்டர் இருக்கு, அதுல டேப் பிஞ்சு போகுது”, என்றார். நாங்கள் டேப் ரெகார்டரைப் பார்த்ததில்லை, ”டேப்பா, அது என்னது” என்றோம். ”வாங்க பாக்கலாம்” என்று அழைத்துப் போனார்.போலீஸ் அவுட் போஸ்ட் அதே வரிசையில் இருந்தது. அதையொட்டி அன்பர் ஒலிபெருக்கி விளம்பர ஸ்டால். அன்பர் ஒலிபெருக்கி தான் அப்போது எங்கள் ஊரில் பெரிய மைக் செட் கம்பெனி. பொருட்காட்சி, கலை அரங்க மேடை விளக்குகள், ஸ்பாட் லைட், எல்லாம் அவர்கள்தான் காண்ட்ராக்ரட்.இரவில் பத்து மணிக்கு தினமும் நாடகம், நாட்டியம், மெல்லிசைக் கச்சேரி எல்லாம் நடைபெறும்.கடைசி நாள் சிவாஜியோ எம்ஜியாரோ நாடகம் போடுவார்கள். சிவாஜி, ‘கட்டபொம்மன்’, ‘தேன்கூடு’,‘நீதியின் நிழல்’-நாடகம் போடுவார். கட்டபொம்மன் நாடகத்தை வளையாபதி முத்துகிருஷ்ணன் ட்ரூப் தான் நடத்திக் கொண்டிருந்ததாகச் சொல்வார்கள். கட்டபொம்மன் சினிமாவாக வந்த பிறகு நாடகத்தை நிறுத்தி விட்டார்கள். சிவாஜியின் கட்டபொம்மன் நாடகத்தில் வளையாபதி முத்துக் கிருஷ்ணன் ஊமைத்துரையாக நடிப்பார். அருமையாக வசனம் பேசுவார். படத்தில் அவரைப் போடக் கூடாது என்று சிவாஜி சொல்லி விட்டதாகச் சொல்லுவார்கள். 62 வாக்கில் எம்.ஜிஆர், சிவாஜி இரண்டு பேரும் நாடகக் கம்பெனியைக் கலைத்து விட்டார்கள்.

பின்னர் ஆர்.எஸ்.மனோகரின் நேஷனல் தியேட்டர் பிரபலம். அன்று கூட அவரது புதிய நாடகமான,சாணக்கிய சபதம் நடை பெற இருந்தது.விளம்பர ஸ்டாலின் வாசலில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். சற்று கட்டையாய் ஆனால் எடுப்பான உடல்வாகாய் இருந்தாள். நிறைய பூக்களாகப் போட்ட சேலையும் அதே துணியில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். ஸ்டால் மற்றவைகளைப் போல் இல்லாமல் ஒரு ஆள், போகக் கூடிய அளவு வாசல் விட்டு, மற்ற இடமெல்லாம் மூங்கில்ப் பாய் வைத்து மறைத்திருந்தது.அந்தப் பெண்ணின் அருகாகத் தான் உள்ளே போக முடியும்.அவள் மீதிருந்து, பான்ட்ஸ் பவுடர் வாசனையும், சேலையிலிருந்து பாச்சா உருண்டை வாசனையும் தூக்கலாக வந்தது.உள்ளே ஸ்பூல் டைப், பேப் ரெக்கார்டர் ஓடிக் கொண்டிருந்தது. ஹாலந்த் பிலிப்ஸ் என்றார் அந்த ஆள்.கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்தோம்.அந்தப் பெண்ணை எங்கோ பார்த்த நினைவு.எங்கே என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அவர், ”என்ன சீக்கிரமே வந்துட்ட, ட்ராமா ஆரம்பிக்க இன்னும் ரெண்டு மணி நேரமிருக்கே, இன்னக்கி இன்னும் பாஸே கிடைக்கலீயே, ‘கவுன்சிலர்ப்பிள்ளை’ய பார்க்கவே இல்லையே, நாளைக்கும் இதே நாடகந்தானாம் நாளைக்கி பாக்கியா” என்றார் அவளிடம், அப்படியே திரும்பி எங்களிடம், ”என் சம்சாரம்” என்றார்.அவள் முகம் சிறுத்துப் போனது. நாங்கள் கிளம்பினோம்.

என்னிடம் ஏற்கெனவே சீசன் டிக்கெட் இருந்தது, ஒரு டிக்கெட்டை வைத்து எப்படியாவது இரண்டு பேர் போய் விட வேண்டும் என்று பலர் என்னுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். கடைசியில் நான் மட்டுமே போக முடிந்தது. கடுமையான கூட்டம். எல்லாமே ஓசி டிக்கெட். முனிசிபல் அலுவலர்களின் உறவினர்கள்தான் பெரும்பாலும்.சீக்கிரமே போய் விட்டதால், மேடையிலிருந்து இரண்டாவது வரிசையில் சீட் கிடைத்தது.எனக்கு அடுத்து, வலது புறத்தில் ஒரு சிறிய நடை பாதை, சோடா, கலர், முறுக்கு விற்பவர்கள் போய் வரத் தோதுவாய்.எனக்கு இடதுபுற இருக்கை இரண்டிலும் கயிறு கட்டி இருந்தது, யாருக்கோ ரிசர்வ் செய்தது போல்.முதல் மணி அடித்து நாடகம் தொடங்கியது.அரங்கம் இருளில் மூழ்கியது.

மனோகர் இருளில் மேடையில் சாணக்கியனாகத் தோன்றினார்,ஒரு புல் இடறி விடுவதாக காட்சி என்று நினைவு.புல்லைப் பார்த்து என்னை தடுக்கி விட்டாயா என்று பேசி, இரண்டு கல்லை எடுத்து தட்டி, (சிக்கி முக்கி கல்)தீ உண்டாக்கி புல்லை எரிப்பதாக நினைவு.கல்லைத் தடி நெருப்பு வந்ததுமே அரங்கத்தில் அபார கை தட்டல்.திடீரென்று பாண்ட்ஸ் பவுடர் மற்றும் பாச்சா உருண்டை வாசனை என்னருகில் வந்து அமர்ந்தது. அதற்கடுத்தாற்போல் இன்னொரு ஆள். அது விளம்பரக்காரர் மாதிரி இல்லை.காட்சி முடிந்து மேடை பிரகாசமாகி ஒரு நகைச்சுவைக் காட்சி. அருகில் பார்த்தேன் அடுத்த வார்டு கவுன்சிலர். வழியில் எங்கேனும் சந்தித்தால் அப்பாவுடன் பேசுவார். இவரைத் தான் கவுன்சிலர்ப்பிள்ளை என்றானா. அப்படியானால்...இவள்.... என், “பிஞ்சிலே பழுத்த வெம்பல் புத்திக்கு” என்னவெல்லாமோ தோன்றியது.

நாடகம் மும்முரமாய் நகர்ந்து கொண்டிருந்தது.அந்தப் பெண் என் பக்கமாக சாய்ந்து நெருக்கியபடி நெளிந்து கொண்டிருந்தாள். அடடா இந்த மேட்டரைப் பார்க்க, ஒரு பயலும் நம்ம கூட வரலையே என்று தோன்றியது.கவுன்சிலர் கை அவள் தோளைத் தாண்டி என் மேல் பட்டது.அவள் அவர் கையை தள்ளி விட்டு விட்டு, ”ச்சேய்” என்று மெதுவாகச் சொன்னாள்.கையை எடுத்துக் கொண்டார். மீண்டும் லேசான வெளிச்சம் அரங்கில் வந்தது. அவள், தலையிலிருந்து ஒரு ஹேர்ப் பின்னை எடுத்து கைக்குள் வைத்துக் கொண்டது, அரை இருளில் தெளிவாகத் தெரிந்தது.

கொஞ்ச நேரம் இடை வேளை போல் விட்டார்கள். வெளிச்சத்தில், நெருக்கத்தில் பார்க்கும் போது, அப்போது பார்த்ததை விட சுமாராகவே தெரிந்தாள்.வறுமையின் பூச்சு- தாலிச் சரடு, ரப்பர் வளையல்,வீட்டிலேயே தயாரித்த கருப்புச் சாந்துப் போட்டு ஆகியவற்றில் தெரிந்தது. அவர் படக்கென்று எழுந்து போனார். அவள், ”தம்பி, நீங்க இந்த சீட்ல உக்காருங்க, நமக்கெல்லாம் என்ன ஆசை வேண்டியிருக்கு” என்று மெதுவாகச் சொல்லி விட்டு சீட் மாறி உட்கார்ந்து கொண்டாள்.இப்போது எனக்கு அடுத்து அவர் அமர்ந்தார்.தம்பி யாரு, என்றார்.நான் இன்னார் என்று சொன்னேன். ”எப்பா, உங்க அப்பா நம்ம சேக்காளில்லா, வந்திருக்காகளா” என்று கேட்டார்.இல்லை என்றேன். ”அது யாரு” என்று அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டார். தெரியாது என்றேன். குழப்பமாய் இருந்தது. உண்மையிலேயே தெரியாதா இல்லை இவரும் ட்ராமா போடுதாரா என்று தோன்றியது.

நாடகம் ஆரம்பித்தது. அவர், ”தம்பி உனக்கு முன்னால இருக்கற ஆள் தலை மறைக்கிறதா, அப்படீன்னா நீ அந்த ஓரமாவே உக்காரு ”என்று சொன்னார். “ஒன்னும் மறைக்கலை, நீ அங்கேயெ இரு தம்பி” என்று அந்தப் பெண் சொன்னாள்.அவர் என் தோளைத் தாண்டி அவள் மேல் கையை வைத்தார். ஹேர்ப்பின்னால் ஒரு குத்து குத்தினாள்.கையை படக்கென்று எடுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் பாதியிலேயே எழுந்து போய் விட்டார். அவள், ”எப்பா, தம்பிக்குத்தான் சிரமம்,நீ வேணும்ன்னா மறுபடி இங்க உக்காரு” என்றாள். வேண்டாம் ”இங்கயே நல்லாத் தெரியுது”என்றேன்.அவள் தெருவைக் கடந்துதான் நான் போக வேண்டிய தெரு. அது வரை என்ன படிக்கிறாய், யாரைப் பிடிக்கும்,ஏன் ஜெமினி, சிவாஜில்லாம் பிடிக்காதா என்றெல்லாம் பேசிக் கொண்டே வந்தாள்.

அப்புறம் இரண்டு வருடம் கழித்து மறுபடி நகராட்சித் தேர்தல் வந்தது. தி.மு.க நகராட்சியைக் கைப்பற்றியது. நாங்கள் வீடு வீடாக ஓட்டுச் சேகரித்தோம்.’உங்கள் வீட்டுப்பிள்ளை’ மு.கணபதிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று பிட் நோட்டீஸ் கொடுத்தோம்.அந்த வாசகம் அப்போதுதான் பிரபலமாயிற்று. அதுவரை விஜயா புரொடக்‌ஷனின் பெயரிடப் படாத படம் என்றே பத்திரிக்கையில் செய்தி வந்து கொண்டிருந்தது. இதற்குப் பின்னரே “எங்க வீட்டுப் பிள்ளை” என்று பெயர் வைத்தார்கள்.

தேர்தலுக்கு ஒரு குட்டிக் காரில் ஸ்பீக்கர் கட்டி ஒவ்வொரு வார்டிலும் ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்தார்கள். கார், தெரு முனையில் நின்றது. ஒரு மூத்த கழகத் தோழர், என்னை அழைத்து, ”தம்பி, தேங்காய்க் கடைப் பிள்ளை வளவில், பின்னால, ஒரு குச்சில் சோமுன்னு இருப்பான் பாரு, அவனைக் கையோடு கூட்டி வா பிரச்சாரத்துக்குப் போகணும்” என்றார்.நான் போனேன். நேற்றெல்லாம் கூட ஸ்கூலில் இருக்கும் போது காரில் யாரோ, ரொம்ப அழகாய்ப் பேசி ஓட்டுக் கேட்டார்களே அவராய் இருக்குமோ என்று யோசித்த படி.

ஒரு பெண், வாசற்படியில் அமர்ந்து, சொளவில் அரிசியைக் கொட்டி கல் ”நாவி”க் கொண்டிருந்தாள். (நாவுதல்= பொறுக்குதல்). நான், சோமுங்கிறது என்று இழுத்தேன். தலையை நிமிர்ந்தவள், ”தம்பீ, நீயா, உனக்கு இங்கதான் வீடா”,என்று சொல்லிக் கொண்டே உள்ளே பார்த்து, ”இங்க வாங்க ஆள் தேடி வந்திருக்கு” என்றாள். சோமு, இரண்டு கடை வாய்களிலும், வெள்ளைப் புண்ணோடு. கலைந்த தலை, சிவப்பேறிய கண்களுடன் வந்தார். ராமையா அண்ணாச்சி நேரமாச்சுன்னு கூப்பிடுதாங்க என்றேன். “ஏட்டி இந்தா, இவளே,கொஞ்சம் மொளகு இருந்தா, ஒரு தாளில் சுத்திக் கொடு” என்றார்.”அதெல்லாம் ஒன்னுமில்லை,போற வழில வாங்கிக்கிடுங்க” என்றாள். அவர் கிளம்பினார். நானும் திரும்பினேன், அவள், ”தம்பி” என்று கூப்பிட்டுச் சொன்னாள், என்னமாவது ரூவா இருக்குமான்னு அந்த அண்ணாச்சியிடம் கேட்டு வங்கித்தாயேன், இப்படி தேர்தல், திருவிழா, பொருட்காட்சி என்றால் தான், ஏதாவது அடுப்பு புகையுது” என்று.சரி சொல்லுதேன் என்று கிளம்பினேன். தெருவில் சத்தம் கேட்டது, அசல் நாவலர் பாணி மேடைச் சத்தம், ”உங்கள் பொன்னான வாக்குகளை, உங்கள் வீட்டுப் பிள்ளை கணபதிக்கே அளிக்கும்படி உங்களை, வேண்டி விரும்பி, விழைந்து கேட்டுக் கொள்கிறோம்”.சோமு மிளகு வாங்கி வாயில் ஒதுக்கி இருப்பாரா என்று தோன்றியது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.