வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கலாப்ரியா, எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கூடு வாசகர்களுக்காக கலாப்ரியா அவர்கள் எழுதும் தொடர் பற்றி அவரது வார்த்தைகள் மூலமே அறிவோம்.

ஜெயகாந்தன் அவருடைய ``சத் சங்கத்தில்’’ சொன்னதாக, பாடியதாக நண்பர்கள் சொல்லுவார்கள்.

"வாழ்தலுக்கும் சாதலுக்கும் என்ன வித்தியாசம்
வாழ்ந்துவிட்டுச் சொல்லுகிறேன் அந்த வித்தியாசம்".

வாழ்க்கை ஒருவருக்கொருவர் வித்தியாசப் படுகிறது. பொதுப் புத்தி சார்ந்து அந்த வித்தியாசம் அவ்வளவாய் உணரப் படாமல் போகலாம். ஏனெனில் நம் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒவ்வொரு படகாய் மிதக்காமல், ஒரு பெரிய பூமித் தெப்பமாய் சமூகம் கட்டிப் போட்டிருக்கிறது.. இதனால்த்தான் என் அனுபவங்களுக்குள் நீங்களும் உங்கள் அனுபவத்திற்குள் நானும் நிழல் தேடிக் கொள்ள முடிகிறது.

தனியாய், ஒரு குழந்தை ஆடிக் கொண்டிருக்கும் ஊஞ்சலுக்கு அருகே இன்னொன்று வந்து நானும் ஏறிக் கொள்கிறேன் என்கிறது. அப்புறம் இன்னொன்று, மீண்டும் ஒன்று என்று ஊஞ்சலில் ஆசையாய்க் குழந்தைகள், ஊஞ்சல்ப் பலகை கொள்ளும் மட்டும் ஏறிக் கொள்கின்றன. சில இறங்கியதும் புதிதாய்ச் சில ஏறுகின்றன.....என் வாழ்க்கைப் பாடுகள் உந்திய உந்துதலில் ஒரு ஊஞ்சலை ஆட்ட ஆரம்பிக்கிறேன்.....உயரத்திலே தங்கி விடாமல் உங்கள் அருகேயே அமர்ந்து கொஞ்சம் நினைவு, கொஞ்சம் புனைவு என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்னை.....

அன்புடன்
கலாப்ரியா

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


வேனல்...

கலாப்ரியா  

சந்திப் பிள்ளையார் முக்கில் போத்தி ஓட்டல், லாலா சத்திர முக்கில் குமாரவிலாஸ், குத்துப்புற முக்கு என்கிற ராயல் டாக்கீஸ் முக்கில் சரஸ்வதி கஃபே, வாகையடி முக்கு என்றால் சப்பாத்தி ஓட்டல் என்கிற காந்திமதி லஞ்ச் ஹோம்.

இவை தவிர அங்கங்கே சில சைவாள் ஓட்டல்கள். ரொம்ப அபூர்வமாய், வண்டிப் பேட்டை பாய் கடை, அங்கே பிரியாணி, ரொட்டி சால்னா, கறிவடை கிடைக்கும். இதைத் தவிர சாமி சன்னதியில் காசி நாடார் மிலிடடரி ஓட்டல். இவ்வளவுதான். இப்பொழுதென்றால் நாலடிக்கு நாலடி இடம் கிடைத்தால் போதும் ஒரு ரொட்டி சால்னாக் கடை ஆரம்பித்து விடுகிறர்கள்.

காணாதததற்கு டாஸ்மாக் பாரில் சைடு டிஷ் ஆக பலதும் கிடைக்கிறது. அப்பொழுதெல்லாம் சல்லிப் பக்கடா வாங்க வேண்டுமென்றால் மூக்க பிள்ள கடையைத் தேடிப் போக வேண்டும். அதுவும் ராத்திரி எட்டு மணிக்கு மேல் போனால் கிடைக்காது. காலியாகிவிடும். ஒனபது மணிக்கெல்லாம் இட்லிக்கடை முடிந்து எடுத்துவைக்க ஆரம்பித்து விடுவார். வஞ்சனையில்லாமல் மீந்து போன சாம்பார் சட்னியயை கேட்கிற யாருக்கும் தருவார். இதற்கென்றே சில வசதியற்றவர்கள் அந்நேரம்போய்ப் பார்ப்பதுண்டு. இல்லையென்றால், முகம் கோணாமல் நாளைக்கி வாங்க என்று சொல்லி விடுவர்ர்.தெற்கு ரத வீதியிலிருந்தது அவரது சிறிய கடை.

மகாலட்சுமி, அவளது அம்மா மூக்கம்மாவை உரித்து வைத்தது போலிருக்கும். லேசான மாறுகண் உட்பட. மூக்குத்தி போட்டால் அம்மாவேதான். வீட்டிற்குஅடுத்த முடுக்கு வழியாகப் போனால் உள்ள ஒரு குச்சு வீட்டில் இருந்தார்கள். மகால் என்றுதான் அவர் அவளை கூப்பிடுவார். அப்பா செல்லம் மகால். அவர் லாலாசத்திர முக்கு ஓட்டலில் சரக்கு மாஸ்டர். அப்படியொரு ஒல்லியான உடல். லேசான இளந்தொந்தி மாதிரி இருக்கும்.மத்தியானம் மூன்று மணி சுமாருக்கு வருவார். சுவரோரமாகப் படுத்திருப்பார், பொய்த்தூக்கம். மகால் இருந்தால் அது கூடக் கிடையாது. மேலே விழுந்து புரண்டுவிளையாடுவாள். மூக்கம்மா மதினி சத்தம் போடுவாள். ஏண்டி மூதேவி கொஞ்ச நேரம் அவுகளைத் தூங்க விடுதியா,”வெக்கையிலெயே நின்னுட்டு வாராக ” என்று சத்தம் போடுவாள். அவர் இல்லையென்றால் மகாலுக்கு ஏச்சும் பேச்சுமாக இருக்கும். மதினியின் தீராத ஆவலாதிகளில் ஒன்று அவளுக்கும் மாறுகண் போல இருப்பதுதான். ஆனால் இரண்டு பேருக்குமே அவ்வளவு ஒன்றும் அது குறை மாதிரி தெரியாது. மதினியின் கட்டான உடல் வாகும் நிறமும் அழகாகவே இருப்பாள். முகத்தில் ஏதோ குறைவது போல எப்போதும் தோன்றும். எதற்கும் அவர் சிரித்துக் கொண்டேதான் இருப்பார்.

மூன்று மணியானால் எழுந்து விடுவார். குச்சு வீட்டின் முன்னாலோ, கொஞ்சம் தள்ளிப் போனால் இருக்கிற வேப்ப மர நிழலிலோ குவிந்து காய்ந்து கொண்டிருக்கிற தீப்பெட்டியின் மேல்க் கூடுகளை பதனமாக அள்ளி, பெரிய சாக்குப் பையில் கட்டி தீப்பெட்டி ஆபீஸுக்கு கொண்டு போய்க் கொடுத்து விட்டு ஓட்டல் வேலைக்குப் போய் விடுவார். மதினி அவ்வளவு வேகமாக தீப்பெட்டி ஒட்டுவாள். நீளமான மரத்தகட்டில் மடிக்கத் தோதுவாய் பதிவுகள் இருக்கும். அதன் மேல் மடித்தால், மேல்க் கூடு வந்து விடும். மடித்து, அதற்கென்றே ஏற்பட்ட நீலக்கலர் தாளை பசை தடவி ஒட்ட வேண்டும். தீப்பெட்டிக் கலர் என்றே பெயர்.

நல்ல தீப்பெட்டிக் கலர்ல சேலையும் ஜம்பரும் என்று பெண்கள் பாஷையில் அடி படும். மதினி ஒரு மெஷின் போல ஒட்டுவாள். பெண் பார்க்க வருகிற போது அல்லது மணவறையில் உட்கார்கிற மாதிரி உட்கார்ந்திருப்பாள். வலது கை ஆட்காட்டி விரலில் மட்டுமே பசை எடுப்பாள். ஒரு தீப்பெட்டிக்கு தேவையான அளவுக்கே மிகச்சரியாக எடுப்பாள். கொஞ்சம் கூடினால் கூட அந்த மெல்லிய தாள் சொத சொதத்துவிடும். தாளில் பசை தடவி மெல்லிய அட்டை போன்ற மரத்தை அதன் மேல் வைத்து ஒட்டுவாள், ஆட்காட்டி விரலில் பெரிய மோதிரம் போல் தீப்பெட்டிக் கூடு உண்டாகி விடும். அப்படியே லாவகமாகச் சுண்டுவாள். சத்தம் போடாமல் கூடு குவியலில் போய்ச் சேர்ந்து கொள்ளும். எல்லாம் ஒரு நொடி வேலை.

நமசு, பாப்பாத்தி ஆச்சிக்கு சொந்தக் காரன். அதனால் அவன் மதினி தீப்பெட்டி ஒட்டும் போது அருகே இருப்பான். ஆளும் சற்று பெண்பிள்ளை மாதிரி அழகாக இருப்பான். மதினி தீப்பெட்டி ஒட்டும் போது இடது புறம் உட்கார்ந்து கொள்ளுவான். மதினி முந்தானையை தோள் மேல் சுருக்கிப் போட்டு அமர்ந்திருப்பாள். அவளின் வெள்ளையான வயிறும் அவ்வப்போது ஜம்பருக்குள் தெரிகிற மார்பும் பார்க்க அதுதான் தோது, என்று நமசு சொல்வான்.. அதை அவன் ரொம்ப நாள் கழித்தே சொன்னான். மதினிக்கு தீப்பெட்டி ஒட்டும் போது, மகால் அருகே வந்து தொந்தரவு செய்தால் தீப்பெட்டி அட்டை நொறுங்கி விடுமோ என்று பயம். அதனால் அருகேயே ஒரு வேப்பம் கம்பு தயாராய் வைத்திருப்பாள். அவள் விளையாட்டுப் போக்கில் அருகில் வந்தால் கம்பை எடுத்து ஏய் என்பாள். மகால் ஓடி விடுவாள்.

நான் நமசு இல்லாத ஒருநாள், மதினியின் இடப் புறமாக அமர்ந்திருந்தேன். அதற்காகத்தான். ”‘கற்பகம்’ பாத்திட்டியா நல்லாருக்காமே” என்று மதினி கேட்டுக் கொண்டே, ஒட்டிக் குவித்துக் கொண்டிருந்தாள். “கொஞ்சம் கதை சொல்லேன்”, என்றாள். சொல்லிக் கொண்டே தெரியாத மார்பை பார்க்க முயன்று கொண்டிருந்தேன். சற்று நேரம் கழித்து மதினி அதை உணர்ந்து கொண்டாள் போல. முந்தானையை இறக்கி விட்டாள்.ஆனால் வேலை மும்முரத்தில் மறு படி முந்தானை தோளுக்கு ஏறிவிட்டது. நான் ஷீலா-முத்துராமன் முதலிரவுக் காட்சியை விவரித்துச் சொல்லிக் கொண்டே மறுபடி கண்ணை ஓடவிட்டேன். மதினி முதலிரவு என்று சொன்னதற்குச் சிரித்தாளா, அல்லது நான் படுகிற பாட்டைப் பார்த்துச் சிரித்தாளா, தெரியவில்லை. வேப்பங்கம்பால் என் மொழியில் லேசாக அடித்து, நீ இந்தப் பக்கமா வந்து உக்காந்து சொல்லு”என்றாள். அவர் தன் “துக்கத்திலிருந்து எழுந்து கொண்டார். ”தம்பி ஷோக்கா கதை சொல்லுதாரே, நீ படமே பாக்க வேண்டாம் போல இருக்கே” என்றார். மதினியும் எழுந்து, ”முழிச்சிட்டிங்களா இன்னக்கி அட்டையும் தாளும் வாங்கீட்டு வாங்க, நாளைக்கி ஒட்டறதுக்கு இல்லை” என்று சொல்லிக் கொண்டே காபி போடப் போனாள். நான் பாதிக்கதையோடு வந்து விட்டேன்.

வேப்ப மரத்தின் எதிரே ஒரு பூடம். மனை காவல் பெருமாள். எப்போதாவது அதற்குப் படையல் வைப்பாள் பாப்பாத்தி ஆச்சி. இருட்டி விட்டால் மரத்தடிக்கு யாரும் போக மாட்டார்கள். ஆனால் அதைத் தாண்டித் தான் ஒரு மண் மறைப்பில் உலர் கக்கூஸ். ஒரு சாயந்தரம் தற்செயலாக அங்கே போனவனை மூக்கம்மா மதினி கூப்பிட்டாள். ”இங்க வா, வயிறு என்னமோ மதிரி இருக்கு, கொஞ்ச நேரம் இங்கன வந்து துணைக்கி நில்லு, கக்கூஸ் போயிட்டு வந்திருதேன். கோளை நாளும் அதுவுமா (செவ்வாய்க் கிழமை) அந்தப் பூடத்தை தாண்டி போக பயமாருக்கு எனக்கு,” என்றாள். நான் காவலுக்கு நின்று கொண்டிருந்தேன். மகால் வேற, வீட்டுக்குள்ளிருந்து அம்மா, அம்மா என்று கத்திக் கொண்டிருந்தாள். எனக்கும் வேப்பமரம் அந்தி இருளில் ஆடுவதைப் பார்க்க பயமாயிருந்தது. மதினி வேகமாக என்னைக் கடந்து வீட்டுக்குள் போய் விட்டாள். நானும் முடுக்கு வழியாய் தெருவுக்கு ஓடியே வந்தேன்.

நான் குமாரவிலாஸுக்குப் போவதே கிடையாது. எங்கள் வீட்டுக்கு போத்தி ஓட்டலில் தான் கணக்கு. அப்போது லால் பகதூர் சாஸ்திரி/பக்தவத்சலம் காலம் என்று நினைவு. ஓட்டல்களையெல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக விடுமுறை விட வேண்டும், எல்லோரும் ஒரு நாள் இரவு உணவைக் கைவிட்டு உபவாசம் இருக்கலாம் என்று ஒரு எழுதப் படாத சட்டம். ஒரு புதன் கிழமை, போத்தி ஓட்டல் விடுமுறை. நானும் நமசுவின் அண்ணனும்-அவர் என்னை விட நாலைந்து வயது மூத்தவர்- குமாரவிலாஸில் ஒரு காபி குடிக்கப் போனோம். நான் அங்கே போவது அதுவே முதல்த் தடவையாகக் கூட இருக்கலாம். அந்தக் கடை முதலாளி பெரியாரின் பரம சீடர். பெரியார் படம் கல்லாவின் அருகில் மாட்டி இருக்கும். காபி சொல்லி ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை. நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சை ஒட்டிய சுவருக்குப் பின் சமையலறை போலிருக்கிறது.. சுவர் சூடாக இருந்தது.

மூக்கம்மா மதினியின் கணவர் எதிரே சிரித்த படி வந்தார். மேலெல்லாம் வேர்வை இடுப்பில் ஒரு துண்டு தோளில் ஒரு துண்டு. இரண்டிலுமே எண்ணெய் அழுக்கும் கரியும். நமசு அண்ணனிடம் வாங்க தம்பி, அந்த பெஞ்சில உக்காருங்க, இங்க வெக்கை தாங்க முடியாது, என்று சொல்லி, ”எதிர் பெஞ்சில் இரண்டு இலை போடப்பா” என்று ஒரு சர்வரைப் பார்த்துச் சொன்னார். எதுக்கு என்று இரண்டு பேரும் கேட்டோம். சாப்பிடத்தான் என்று சிரித்துக் கொண்டே உள்ளே போனார். இரண்டு முறுகலான தோசையுடன் வந்தார். சாப்பிடுங்க என்றார். சாப்பிட்டோம். இன்னொன்னு என்றார். இரண்டு பேருக்கும் போதுமாய் இருந்தது. போதும் என்றோம். சாப்பிட்டுக் கை கழுவியதும் சர்வரிடம் பட்டறையில் சொல்லிரு என் கணக்குன்னு என்றார். வாங்க தம்பி என்று சமையலறைக்குள் அழைத்தார். போத்தி ஓட்டலிலெல்லாம் அந்தப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க விட மாட்டார்கள். பெரிய நீள் சதுரத் தோசைக்கல்லைப் பார்க்கவே ஆச்சரியமாய் இருந்தது. கல்லுக்கு மேல் ஒரு கயிறு கட்டித் தொங்கிக் கொண்டிருந்தது. எண்ணெய்ப் பிசுக்குடன். கல்லின் கடைசி முனையில் தோசை விடும் போது அதைப் பிடித்துக் கொண்டு ஊற்றினார். அவ்வளவு அகலமான கல்.

நிறைய பேர் மதினியின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். என்ன விஷயமாயிருக்கும் என்று நானும் போனேன். சமீபமாய் நான் அங்கே போவதே இல்லை. வழக்கமான தார்சால்ச் சுவரோரமாக அண்ணாச்சி படுத்துக் கிடந்தார். அண்ணாச்சி எப்பவுமே மதினியை விட சற்று வயதானவர் போல்த் தான் இருப்பார். அன்று நாலு நாள் தாடியுடன் இருந்தார். இடுப்பில் பேருக்கு வேஷ்டி இருந்தது. மார்பெல்லாம் தீக் கொப்புழங்கள். கை, முகம் தோளிலெல்லாம் கூட. ஒரு வாழை இலையை வைத்து மதினி விசிறிக் கொண்டிருந்தாள். ஒரு பாட்டிலில் ஜெனிஷியன் வயலட் களிம்பும் ஈர்க்குச்சியில் சுற்றின பஞ்சும் இருந்தது. ”தம்பி இந்த களிம்பைக் கொஞ்சம் புண்ணு மேல போட்டு விடுதீங்களா” என்றாள் மதினி, ”நோய் நோக்காடு வந்தாக் கூடவா தொடக் கூடாது, ஏதோ ஒரு தரம் உங்க தம்பி மேல ஆசப் பட்டுட்டேன், அவனும் தான் போய்ட்டானே” என்று அழுதாள். மகால் ஏற்கெனவே அழக் காத்திருந்தது போல அழ ஆரம்பித்தது. ”வீட்டுக்குள்ளையும் படுக்க மாட்டாக, என்ன குளிர், என்ன வேனல்ன்னாலும் சரி: வேனல்லையே தான கெடக்காக...” என்றாள் மதினி. ”கிளப்புல தோசை ஊத்தும் போது கயிறு அந்து அப்படியே கல்லுல விழுந்துட்டாகளாம், அது என்னப்பா கயிறு“, என்று கேட்டாள். அவர் சிரித்துக் கொண்டார்.

பாப்பாத்தி ஆச்சி வந்தாள். ”யார்ட்டழ்ழா காமிக்கெ”, என்ற கேள்வியுடன். “யாரோ முத்தையாபிள்ளை ஆஸ்பத்திரியாம்லெ அங்கெதான், முதலாளி ஏற்பாடு, அதெல்லாம் எல்லாரும் வந்து நல்லாப் பாக்காங்க”, என்றாள். ஆச்சி தார்சாலை அடுத்திருந்த ஒரே கட்டுக்குள் சென்று, ”மூக்கம்மா இன்னா இப்படி வா” என்றாள். ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரு போட்டோப் படம், பொட்டு வைத்திருந்தது. நான் பார்த்ததை அவர் பார்த்து விட்டார், ”ஏந்தம்பி, செத்துப் போயிட்டான், என்றார். வலியில் முகச்சதை கோணுவது கூட சிரிக்கிற மாதிரி இருந்தது. ஆச்சி போனதும், மதினி அழுது கொண்டே வந்தாள். ”என்ன, வீட்டைக் காலி பண்ணச் சொல்லுதாங்களா” என்றார். ஆமா, வேறென்ன சொல்லுவாங்க, ஒண்ணும் நெனைக்காம பொண்டாட்டியக் காப்பாத்து தாங்கன்னா மெச்சுவாங்க”, என்று சொல்லி விட்டு அழுது கொண்டிருந்த மகாலை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

அவர் அதைப் பார்த்துச் சிரித்தார். அந்தப் புண் குணமாகும் முன்பே அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டார்கள். நமசுவின் அண்ணன், எனக்கு ஓரளவு புரிந்ததை தெளிவாக்கினார். அவர்கள் காலி செய்து போகும் போது தெருவில் பிள்ளைகள் தங்கள் வேனல் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர் அந்தக் குழந்தைகளையும் எங்களையும் பார்த்துச் சிரித்தார். மதினி, மகால் அவள் தோளில் தூங்குவது போல் சாய்ந்து கொண்டிருந்தாள், தலையை மட்டும் ‘போய்ட்டு வாரோம்’ என்று ஆட்டினாள்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</