வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


உருள் பெருந்தேர்…

கலாப்ரியா  

அதே ரத வீதிதான், அதே தேர்தான். அதே தேரோட்டம்தான். ஆனாலும் வருடாவருடம், ஒவ்வொரு வயசுக்காரருக்கும் ஒவ்வொரு புது சந்தோஷத்தை அது தராமல் இருப்பதில்லை.அந்த வருடத் தேரோட்டத்துக்கு நான் தூத்துக்குடியிலிருந்து மாறுதல் ஆகி எங்கள் தலைமை அலுவலகத்தில் பணி புரிந்து வந்தேன்.கீழரதவீதியில் அதுதான் உயர்ந்த கட்டிடம். 1800களின் இறுதியில் அதில்தான் திருநெல்வேலி முனிசிபாலிட்டியின் வரி வசூலிக்கும் ஒரு அலுவலகம் இயங்கி வந்ததாம். வ. உ. சி யும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டதையொட்டி நிகழ்ந்த மாபெரும் போராட்டத்தில் அந்த அலுவலகம் தீக்கிரையானது. அப்புறம் அதை ஏலத்தில் விட்ட போது எங்கள் நிறுவனம் வாங்கி தன் அலுவலகம் ஆக்கிக் கொண்டது.

தேரை அந்த வருடம் எங்கள் சொந்த வீட்டில் நின்று பார்ப்பது போல் பார்த்தோம். ஏற்கெனவே தேரோட்டத்தை முன்னிட்டு. ரதவீதியின் குறுக்காகச் செல்லும் மின் வயர்களையெல்லாம் நீக்கி விடுவார்கள். அதனால் அலுவலகத்தில் சற்று இருட்டாக இருந்தது. நாங்கள் நாலைந்து பேர் மிக உயராமான மொட்டை மாடிக்கே சென்று திருட்டுத் தம் அடித்துக் கொண்டே தூரத்தில் பூதத்தான் முக்கில் சற்றே சாய்ந்து திரும்பும் தேரை ரசித்துக் கொண்டிருந்தோம்.” ஒஹ்ஹொ இதுக்குத்தான் கெளைக்காரியதரிசி (நான் தான்) தலைமையில் மொட்டை மாடிக்கே வந்தாச்சா, சாமி பாக்க இல்லையா...” என்று கேட்டுச் சிரித்தபடியே சுலோச்சனாரெட்டி வர அவளுடன் இரண்டு மூன்று பெண் அலுவலர்கள் வந்தார்கள். சுலோச்சனா, ஆந்திரா பக்கத்து தெலுங்குப் பெண். தமிழ்ப் பேச்சு சற்று முன்னப்பின்னத்தான் இருக்கும். அவள் சொன்னது ’கிழக்காரியதிரிசி’ மாதிரி இருந்தது. என்னுடன் இருந்தவர்கள் சத்தமாகச் சிரித்தார்கள்...ஆனால் தமிழ் டைப் செய்வதில் அவள் வேகமும், சுத்தமும் யாருக்கும் வராது. பாவாடை தாவணிப் பருவத்தில்,-அதாவது நாங்கள் டிராயர் சட்டை அணியும் பருவம்- நான் மதியம் சாப்பிட்டுவிட்டு ஹைஸ்கூலுக்குப் போகும் போது அவள் எதிரே அவளது ஸ்கூலுக்குப் போவாள். பளீரென்ற வெள்ளை, நீளமான சரோஜாதேவி இரட்டைச் சடை, ரிப்பன், சிரித்த முகம். அவளுடன் அவள் அக்காவும் வருவாள். அவள் மூக்குத்தி போட்டு, கொஞ்சம் நீள மூக்குடன் வேறொரு ஜாடையில் இருப்பாள். போலிஸ் ஸ்டேஷன் என்கிற கச்சேரி வாசல் அருகில் அவர்களைத் தவறாமல் பார்ப்போம். இவள் பெயரைத் தெரிந்து கொள்ள அதே ஸ்கூலில் படிக்கிற என் அக்காவிடம் பல வழிகளில் முயற்சி செய்திருக்கிறேன். ”ஏலெ உனக்கு எதுக்கு அந்த வேலை...” என்று கண்டிப்பாகவோ நைசாகவோ தவிர்த்து விடுவாள்.ஒருநாள் அவளே சொல்ல வேண்டியதாகி விட்டது.

அப்போதெல்லாம் ஒவ்வொரு ஸ்கூலிலும் அவர்களுக்குத் ’தோது’வான பாடப்புத்தககங்களை வைத்திருப்பார்கள். (சமச்சீரெல்லாம் கிடையாது!) எங்கள் பள்ளியில், பத்தாம் வகுப்புக்கு, அதுவரை இருந்த ஓரியண்ட் லாங்மன் கம்பெனி ‘விஞ்ஞானப் புத்தகத்’தை மாற்றி விட்டு வேறொரு கம்பெனி புத்தகத்தை வைத்துவிட்டார்கள். அதனால் பதினோராம் வகுப்புக்குப் போன மாணவர்கள் தங்கள் பத்தாம் வகுப்பு பழைய சயின்ஸ் புத்தகத்தை பாதி விலைக்கு விற்க முடியவில்லை. வருடந்தோறும் பழைய புத்தகங்களை விற்கிற கதை ஸ்கூல் திறந்ததும் ஆரம்பித்து விடும். பாஸாகி விடுகிற தைரியமுள்ளவர்கள் பரீட்சை முடிந்ததுமே விற்றுத் தின்று விடுவார்கள். சிலர் தங்கள் புத்தகங்களை முனை மடியாமல் அப்படிப் பத்திரமாக வைத்திருப்பார்கள். அதற்கு முக்கால் விலை கேட்பார்கள். அவர்களுடைய நோட்டுகள், முக்கியமாக பயிற்சிகளில் உள்ள கணக்குகளைப் போட்ட, கணக்கு நோட்டுகள் போனஸாக கிடைக்கும். அந்த ஓரியண்ட் லாங்மன் புத்தகம் அக்கா ஸ்கூலில் பாடமாக இருந்தது. பெரிய கோபாலின் புத்தகத்தை, அக்காவுக்கு நாலணாவுக்கு வாங்கிக் கொடுத்தேன். அதற்குப் பாதி விலை என்பது எட்டணா (ஐம்பது காசு). அவளது கிளாஸ்மேட் நிறையப் பேர் கேட்கவே நான் நாலணாவுக்கு வாங்கி எட்டணாவுக்கு விற்கிற ‘வியாபாரம்’ பார்த்தேன்.

என் ’வியாபாரத் தந்திரம்’நிறையப் பேருக்கு தெரிந்து விட அவரவர்கள் பக்கத்து வீட்டுப் பெண்களுக்கு இலவசமாகவோ, சலுகை விலையிலோ தர ஆரம்பித்து விட்டார்கள். கல்லூர்ப்பிள்ளை கடையில் இட்லி, எம்ப்டி பூரி, காராவடை தின்று விட்டு ஆயிரத்தில் ஒருவன், ஹல்லோ மிஸ்டர் ஜமீந்தார்...என்று பார்க்கிற யோகம் இரண்டு மூன்று முறையோடு கட் ஆகி விட்டது.. அப்போதுதான் அக்கா, ஒரு பெண்ணுக்கு சயன்ஸ் புத்தகம் தேவை என்றாள். அதுவும் ஸ்கூல் திறந்து கொஞ்ச நாட்கள் கழித்து. புத்தகம் கிடைக்கவேயில்லை. நானும் அசட்டையாயிருந்தேன். ஆனாலவள், ”ஏல சுலோச்சனாவுக்குடா...அவ அக்காவும் அவளும் டென்த் தான் படிக்காங்க.. நம்ம மதிரி, முதல்ல ரெண்டு பேருக்கும் ஒரு புக் போதும்ன்னு நெனைச்சு வாங்கலைடா...”என்றாள் அது யாரு சுலோச்சனான்னதும்தான் அவங்க குரூப் போட்டோவில் சுட்டிக் காண்பித்தாள். சரோஜாதேவி ரெட்டைச் சடை, சிரித்த முகம். காமிராவையே கூச வைக்கிற பளீர்...நிறம்.... அக்கா கேட்டது, ஒரு அந்தி கவியும் நேரம். என் சைக்கிளில் லைட் கூடக் கிடையாது. எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

பதினோராம் வகுப்பு அண்ணன்மார் வீட்டுக்கெல்லாம் அந்த முன்னிருட்டில் படையெடுத்தேன். ஒரு வழியாக பழனிச்சாமியிடம் கிடைத்தது. பழனிச்சாமி கிட்டத்தட்ட ஒரு ரவுடிபோலப் பழகுவான். காது மடல்களில் பெரிய சதுர ஓட்டை இருக்கும். அவன் டிரில் க்ளாசில் வரிசையில் நிற்கையில் அந்த ஓட்டை வழியே, வெயில் அவன் முகத்தில் ஒரு சின்ன ஒளி வட்டமாய் விழுமாம். டிரில் சார் அடிக்கடி, அவனை, ஒரு ஸ்டெப் முன்னால் வரச்சொல்லி, ‘ஒளிவட்ட’த்தைப் பார்த்துக் கிண்டலடிப்பாராம். ஒரு நாள், எல்லோரும் ’பழியாய்ப் பயப்படுகிற’ அவரிடமே “யோவ் ஒரே கடி, உம்ம காதே இருக்காது” என்று சண்டைக்குப் போய் விட்டானாம். ரொம்பப் பிரமாதமாகப் படிப்பான். அவன் புத்தகத்தில் அடிக்கோடு இடாத பக்கங்களே இருக்காது. அதனால்தான் அவன் புத்தகம் விலை போகவில்லையோ என்னவோ ஆனால் முக்கியமான வரிகளையே அடிக்கோடிட்டிருப்பான்..அதை வாசித்தால் அப்படியே ஒரு நோட்ஸ் போல இருக்கும். பி.யு.சி முடித்ததுமே கால் நடைத்துறையில் வேலை கிடைத்தது. அபிஷேகப்பட்டியில் வேலை பார்த்தான். சம்பளம் வாங்கிய கையோடு எங்கள் தெருவுக்கு வந்து ஒரு நண்பனைக் கூட்டிக் கொண்டு போய் ரொட்டி சால்னா வாங்கிக் கொடுப்பான். ரெண்டு பேரும் அப்படிச் சேக்காளிகள். ஆனல் பாவிமட்டை யாரோ அதிகாரியிடம் சணடை போட்டுக் கொண்டு பாலிடாலைக் குடித்து பொசுக்கென்று போய்விட்டான். மூதேவிக்கு இருபது வயசு கூட ஆகியிருக்காது. அதுவும் ஒரு தேரோட்டத்தன்றுதான். அன்றுகூட அவன் பாடையை தெற்கு ரதவீதி வழியாக எடுத்துப் போக பெரிய சிரமமாயிருந்தது. தேர் தெற்குரத வீதியில்தான் நின்றது. உடலை தேருக்கு முன்பாக எடுத்துப்போகக் கூடாது என்று வாதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பாடை சுமப்பவர்கள் தூக்கிக் கொண்டே நிற்க முடியாமல் கீழே வைத்து விட்டார்கள். அப்போதுதான் நானே பார்த்தேன் அட இது நம்ம பழனிச்சாமீல்லா என்று.’ உடலை உட்காரவைத்து நாகம் குடை பிடிக்கிறமாதிரியுள்ள் ’கோவிந்தா பாடை’யில் நாடியைக்கட்டியிருந்த துணியின் ஊடாக அவனது காது தெரியவில்லை. மற்றப்படி அவனது சதுரமான முக அமைப்பும் அகன்ற பல் வரிசையும்.... அவனை நன்றாக அடையாளம் காட்டிற்று.நெல்லையப்பர் அவனுக்குக் காட்சி கொடுப்பதாகத் தோன்றியது. ஒரு வழியாக பாப்புலர் டாக்கிஸ் வழியே செல்வது என்று பாடையைத் திருப்பி எடுத்துப் போனார்கள்.

சயன்ஸ் புத்தகம் வாங்கித் தந்து, பார்வையிலேயே தினமும் ஜொள்ளு விட்ட சுலோச்சனா இப்படி, ’என்னங்க காரியதரிசி...’ என்று சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள் என்று நினைத்ததே கிடையாது. ஆனால் திருமணம் அவள் அழகை சற்றுப் பலி வாங்கியிருந்தது. அதுவும் சமீபத்தில்தான் நடந்தது என்றார்கள். சற்றே ‘விட்டுப்பான வயிறு.’முன்கை மென்மயிர் தவிர எதுவும் தெரியாமல் இறுகச் சுற்றிய சேலை.... என்றாலும் எதற்கும் சிரிக்கிற சிரிப்பு மாறவேயில்லை. பெண் அலுவலர்களுக்கு என்று ஒரு தனி அறை. அங்கே எப்போதும் டைப் சத்தமும் லேசான சிரிப்பும் கேட்டுக் கொண்டே இருக்கும். ’பாய் மெஸஞ்ச’ரான பூமிநாதன் மட்டும் உள்ளே போக வர இருப்பான். புதிதாக வந்த ஒரு பெரிய அதிகாரியின் கையெழுத்தை வாசிப்பது சற்றுக் கஷ்டம். சுலோச்சனா ஒரு கடிதத்தை தப்பாக அடித்துவிட்டாள். அவர் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார். அவள் அழுகையைக் கண்டு அலுவலகமே பொங்கி விட்டது. அதிகாரியிடம் போய் ‘நியாயம்’ கேட்கவேண்டிய சங்கடம் யூனியன் செயலாளரான எனக்கு. கூட்டமாகப் போய் அவர் அறை முன் நின்றதும் அவர் கொஞ்சம் ஆடிப் போய் விட்டார். அவரை கொஞ்சம் நன்றாகவே ‘கடித்து வை’ என்று யூனியன் தலைவர் என்னிடம் ரகசியமாகச் சொல்லியிருந்தார். வழக்கமான அசட்டுத் துணிச்சலுடன் நான் பேச்சை சற்றுக் காட்டமாக ஆரம்பித்தேன். அறைக்கு வெளியே நூறு பேர் நிற்கிற தைரியம். அவர் பெரிய வங்கியில் ஓய்வு பெற்று இங்கே வந்தவர்.

அவர் சாதுர்யமாய் ஒரே வார்த்தையில் மன்னிப்புக் கேட்டுவிட்டு.”இந்த மாதிரி ’மாஸ் டெபுடேஷன்’ வருவது கூட தப்பு, தெரியுமா. இது க்ராஸ் மிஸ்காண்டக்ட்....மற்றும் நோட்டீஸ் தராத ஸ்ட்ரைக் தெரியுமா,”என்றார். “இல்லை நான் மட்டும்தான் வந்திருக்கிறேன். அவர்கள் மதிய உணவுக்குப் போகிறவர்கள், ஒரு ஆவலில் வெளியே நிற்கிறார்கள். ஆனால் அப்படியே தர்ணா செய்யச் சொன்னால்.. உட்கார்ந்தும் விடுவார்கள்”, என்றேன். திரும்பவும் மன்னிப்புக் கேட்டவர் மாலையில் தனியே வந்து என்னைப் பார் என்றார். நான் வெளியே வந்து விட்டேன்.

அவர் மனிப்புக் கேட்டதாகச் சொன்னதும் ஒரு வெற்றிக் கூச்சல் போட்டுவிட்டு எல்லோரும் கலைந்தோம். அதிலிருந்து சுலோச்சனாவுக்கு என் மீது ஒரு மரியாதை. அதிகாரியும் கடிதங்களை என் மூலமாக்வே கொடுத்து அனுப்பினார். தெரியாத வார்த்தை இருந்தால் நீயே சொல்லிக் கொடு என்ற உத்தரவுடன்.

தேர் கட்டிடம் அருகே வந்த போது சுலோச்சனா என் முன்னால் மிக அருகே நின்று கொண்டிருந்தாள். நான் அவள் முதுகையும், சூரியன் பட்டு மின்னும் தேரின் கலசத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். கீழே கூட்டத்தில் யாரோ சுருண்ட கூந்தலுடன் ‘என் ராட்சசி’ போலத் தெரிந்தாள். அவளெல்லாம் இந்த மாதிரிக் கூட்ட இடிபாடுகளென்றால் வரவே மாட்டாள். அவள் நினைப்பு வந்ததும் சுலோச்சனாவின் ’பளீர்‘ மறைந்து போனது. சுலோச்சனாவிடம் கேட்டேன், ”உனக்கு சசியைத் தெரியுமில்லையா... உன்னுடன் படித்தாளே...” என்று

”உங்க ஸ்டோரியெல்லாம் தெரியும்.” என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டு “அந்தா நிற்கிறது அவளான்னு கேட்குது இல்லையா...” என்றாள். அசடு வழிவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். ” இப்பத்தான் வேலை கிடைச்சுட்டே....போய்ப் பார்த்து என்னான்னு கேட்டிர வேண்டியதுதானே என்று கேட்டுக் கொண்டே....” இறங்கி வந்தாள். தேர் எங்களைக் கடந்து போய் விட்டது. யார் கேட்க, யார் சொல்ல என்று மனசுள் குட்டியாய் ஒரு பெருமூச்சுப் புயல் ஓசையிட்டு மறைந்தது. ”அடைய முடியாப் பொருளின் மீது ஆசை தீராது அபிமானம் மாறாது.... ”என்று பாட்டு வேறு கேட்டது. இனிமேல் இந்த நாளை எங்கே, எப்படித் தூக்கி நிறுத்த முடியும்.

ஏற்கெனவே மத்தியானம் வீட்டுக்கு சாப்பிடப் போவதில்லையென்று காலையிலேயே முடிவெடுத்திருந்தேன். அம்மாவுடன் சண்டை. அவள் எங்கே சண்டை போடுவாள்.. நான்தான், சம்பாதித்துப் போடுகிற திமிரில் ஏதோ சண்டை போட்டிருந்தேன். அப்படியொன்றும் பெரிதாய் சாம்பாதித்துக் கொட்டவில்லை. அரை மூடை அரிசி வாங்கிப் போடுகிறேன். நூறு நூற்றைம்பது ரூபாய்க்குள் வரும். சம்பளமும் 200 ரூபாய் கைக்கு வந்தால் அதிகம். ஆனால் பாவம் ஏதோ ஒர் கையாலாகாத்தனம் சமயத்தில் தாறுமாறாக ஏசி விடுகிறேன். பக்கத்து வீட்டு கைலாச அண்ணன் கூடச் சொன்னான், “ஏய் சாமி, மாலை போட்டுருக்கும் போதாவது ஏசாம இருக்கக் கூடாதா...” என்று. நான் கேட்கவில்லை. ஆனால் ”குருவியின் சத்தங்களற்ற நகர்ப்புறத்தில் அம்மாவை ஏசவென்றே பொழுது புலரும்....”என்று கவிதை வரிகள் மட்டும் டைரியில் எழுதி வைத்தேன். இன்றும் கூட, அதையெல்லாம் நினைத்தால், என் மனம் என்னையே அப்படிப் படுத்துகிறது.. அதென்ன தேரோட்டமா, மீண்டும் வர, நான் திருந்தி திரும்பவும் நல்லபடியாய் அவளை வைத்துக் கொள்ள. ”செகம் பூராவும் ஆண்டு, திரும்பி நல்லாச் சாக...” அவளெங்கே திரும்பி வர,. வாழ்க்கையும் காலமும் ஒரு முறை மட்டுமே ஓடுகிற மேகம். அதன் சித்திரங்கள் கூட ரேகை போலத்தான் ஒன்றைப் போல் ஒன்றிருப்பதில்லை.

சண்டை போட்ட கோபத்துடன் ஆஃபீஸ் வந்து கொண்டிருந்தேன். தேரோட்டத்துக்கான வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.கோயிலுக்கு விரைந்து கொண்டிருந்த கூட்டத்தில், ஆனந்தனின் அம்மாவும் போய்க் கொண்டிருந்தாள். நான் அவர்களிடம் போய் “அம்மா இன்னக்கி மத்தியானம் வீட்டுக்குச் சாப்பிட வாரேன். ஏதாவது வச்சுருங்க என்றேன்.

”ஏம்ல மூதி...என்ன எழவு இழுத்துட்ட வீட்ல...”என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்...சரி ரெண்டு ரூபா இருந்தாக் குடு... ரெண்டு வாழைக்காயாவது வாங்கிட்டுப் போறேன். நான் இன்னக்கி வெறும் பச்சரிசி வடிச்சு, தேங்காய் வருத்து துவையல் அரைக்கலாம்ன்னு நெனச்சுகிட்டு இருந்தென், தேரோட்டம் பாக்கத்தான போறோம்"ன்னு நாலணாவை முடிஞ்சுட்டு வந்தேன்... ” என்று என் சட்டைப் பையைப் பார்த்தாள்.அங்கே ஒரு சிகரெட் மட்டுமிருந்தது...”போ, மூதேவி என்னமோ துட்டு இல்லாமத்தான் சாப்பிட வாரேங்கியோ இல்லை கடைக சரியாத் திறந்திருக்காதுன்னு வாரியோ..என்னவோ...ஆனா உங்களுக்கு இதை ஊதுறதுக்கு மட்டும் துட்டு வந்துரும்..”என்று சொல்லிக் கொண்டே அடுத்த வெடிச்சத்தம் கேட்டதும் “இன்னா வேட்டு போட்டுட்டான் தேர் இழுத்துருவாங்க நான் போறேன் என்று விரைந்து விட்டாள்.

ஆஃபீஸ் எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டது. ஆனால் சுலோச்சனா எதையோ நினைவு படுத்தி விட்டாள். அவளுடைய உறவுக்கார அம்மாள் எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கிறாள் அவள் என் “ஸ்டோரியை” சொல்லியிருப்பாளோ என்று நினைத்தபடியே ஆனந்தன் வீட்டுக்குப் போனேன்.அங்கே கீழ்த்தார்சாலில் அரையடி அகலத்தில் ஒரு பெஞ்சு கிடக்கும்.அதில் சபேசன் சுருண்டு படுத்துக்கிடந்தான்.அவனை அப்போதே பார்த்தேன். தேரோட்டக் கூட்டத்தில் நடக்க முடியாமல் நடந்து கொண்டு இருந்தான். சவம் என்ன சரக்கை குடிச்சிருக்கானோ தெரியலையே என்று நினைத்தேன்.’தோசை’யிடம்தான் வாங்கிச் சாப்பிட்டிருப்பான். சபேசனும் ஆனந்தனும் ஃப்ரெண்டு. சபேசன் என்னுடனும் படித்தவன்தான். பயங்கரமான எம்.ஜி.ஆர்.கோட்டி. அவர்கள் இருவரும் ஒரு ரசிகர் மன்றம் வைத்திருந்தார்கள். அதைப் பதிவும் செய்து வைத்திருந்த நினைவு. ஆனால் புதுப்படத்திற்கு மலர் தயாரிப்பதில், வசூல் நோட்டீஸ் அடிப்பதில், அவனுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனந்தனிடம் நான் நன்றாகச் சேர்ந்து கொள்வேன். சபேசன் திடீரெனப் பேசுவான். திடீரெனப் பாராமுகம் காண்பிப்பான். இப்போது தலைவர் கட்சி ஆரம்பித்து சினிமாவெல்லாம் குறைந்து விட்டது. நானும் வேலை என்று கிடைத்துப் போய் விட்டேன்.

எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது சபேசன் சென்னைக்குப் போனான். சத்யா ஸ்டுடியோவில், தமிழகம் எங்கிருந்தும் வந்தவர்களுக்கெல்லாம் தேவர் சாப்பாடு பொங்க்ப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சாண்டோ சின்னப்பாத் தேவர் செலவு செய்து கொண்டிருந்தார். நல்ல நேரம் படத்திற்கு அடுத்து அவருக்கு ஒரு படம் செய்து தர எம்.ஜி.ஆர் ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் செய்து தரவில்லை. சபேசன் இரண்டு நாட்கள் அங்கேயே பழிக்கிடை கிடந்தான். அவன் போன ரெண்டாம் நாள்தான் எம்.ஜி.ஆர் “அண்ணா தி.மு.க’’ என்று புதிய கட்சியை ஆரம்பித்து இப்போதிருக்கும் கொடியை அறிமுகப் படுத்தினார். இங்கே ஜங்ஷனில் க்ளிமாக்ஸ் டெயிலர் கடை முன் கருப்புப் பின்னணியில் சிகப்புத்தாமரை பொறித்து ஒரு தனிக் கொடி ஏற்றியிருந்தார்கள் சில நண்பர்கள். அதே போல் மதுரையிலும் தனிக்கொடி ஏற்றியிருந்தர்கள். போலீஸ் வலை வீசி மன்றத் தோழர்களைப் பிடித்து வழக்குகள் போட்டுக் கொண்டிருந்தது. இளமதி மீதெல்லாம் வழக்குகள் போட்டு அலைய விட்டார்கள்.

சபேசன் ஏனோ அரசியலில் இறங்கவில்லை. ஆனால் இவன் எப்படி குடியில் விழுந்தான் என்றும் தெரியவில்லை. குடித்தால் பேசாமல் இந்த கையகலப் பெஞ்சில்வந்து படுத்து விடுவான். சாப்பிடவும் மாட்டான். அவன் வீடு கீழப் புதுத்தெரு. இது கனகராயன் தெரு. அதற்கு எதிர்த்தாற் போலத்தான் இன்று தேரும் பதிந்து நிற்கிறது. நான் அவனை எழுப்பி சாப்பிட வாடா என்றேன். என்னிடம் ஏதோ ஏசுகிற மாதிரிப் பேசிவிட்டு மறுபடி சுருண்டு விட்டான். அம்மா, “நீ வாடா, உனக்கு நேரமாகுது ரெண்டரைக்கு ஆஃபீஸ் போணும்ல்லா...”என்றாள். தேர் பார்த்து வரும் போது மார்க்கெட்டில் காய்கறி வாங்கி வந்திருப்பாள் போலிருக்கிறது அங்கே எங்கள் சிநேகிதர்கள் அதிகம். யாரும் ஆனந்தன் அம்மா என்றால் மார்க்கெட்டையே வேண்டுமானாலும் தருவார்கள். ஆனால் அவள் அதற்கு இடம் வைக்க மாட்டாள்.சாம்பாரும் அவியலும் வைத்திருந்தாள். சாப்பிடும்போது அழுகையாய் வந்தது. “ ஏம் மூதேவிகளா இப்படி வாரீங்க... உங்களுக்கெல்லாம் ஐயாமாருக்குத்தான் வாய்க்கலை, ஆத்தாமாருதான் இருக்கோமே..” “சரி அழாதே..சைக்கிளில்த்தானே .வந்திருக்கே சாப்பிட்டுட்டு வீட்டுக்கு ஒரு மிதியில போயி, சாபிட்டுட்டேன்னு உங்க அம்மாட்டச் சொல்லீட்டு மாத்திரம் வந்துரு..”என்றாள். நான் சத்தமாகவே அழுதேன். என்ன நினைத்தானோ சபேசனும் எழுந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்தான்.

நான் சுதாரித்துக் கொண்டு கை கழுவி விட்டு வீட்டுக்கு அவசரமாக மிதித்தேன். நடையோடத்தில் (நடைக் கூடம்) உட்கார்ந்திருந்த அம்மாவைச் சாப்பிடச் சொல்லி வளவில் வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். என் தலையைப் பார்த்ததும் நகர்ந்து விட்டார்கள். ”நான் சாப்பிட்டாச்சு...” என்று மட்டும் சொல்லி விட்டு வீட்டிற்குள் போய், டிக்‌ஷனரியைத் துழாவினேன் ஒரு ஒரு ரூபாய் நோட்டு கிடைத்தது.

சைக்கிளில் ஒரே அழுத்து. பெட்டிக்கடையில் போய் நின்று சிகரெட் வாங்கி பற்ற வைத்தபடியே சற்றுத் தள்ளி நின்ற தேரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜாக்கி வைத்து தூக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு மூன்றடி உயர ஜாக்கி எப்படி இவ்வளவு பெரிய தேரை தூக்கி விடுகிறது என்று வியந்து கொண்டிருந்தேன். சபேசன் கொஞ்சம் தள்ளாடியபடி அருகே வந்து, “மாப்பிளை ஒரு சிகரெட் வாங்குலெ..”என்றான். நான் பைக்குள்ளிருந்த ஒன்றை எடுத்து நீட்டினேன்.

--------------------------------------------------------------------------------------

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </