வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


பட்டப்பெயர் (அ) பட்டப்பேர்

கலாப்ரியா  

காலை எட்டேமுக்கால் வெயில் அந்த பஸ்ஸ்டாப்பின் மீது பாதி விழுந்து கொண்டிருந்தது.அன்று யார் முகத்தில் விழித்தேனோ, கல்லூரிக்குப் புறப்படும் போதே வீட்டில் தகராறு. சைக்கிளை அண்ணன் எடுத்துச் சென்றிருந்தான். கல்லூரிக்கு நேரமானதற்காக அம்மாவிடம் கத்திக் கொண்டிருந்தேன். அப்பா, ”நான் தான் அவனை ஒரு இடத்திற்கு அனுப்பி இருக்கிறேன் இன்றைக்கு பஸ்ஸில் போ,” என்று ஐம்பது பைசா காசை வீசியெறிந்தார்.வாய் பேசாமல் பொறுக்கிக் கொண்டு புறப்பட்டேன். இந்த நேரத்தில் தெரிந்தே அவனை அனுப்பி வைத்திருந்தார் என்றால் ஏதாவது கடன் வாங்கி வரவோ, அல்லது பழைய பாத்திர பண்டங்களை விற்கவோதான் அனுப்பி இருப்பார். நான் வேலைக்குப் போக மாட்டேன் என்று சொல்லிவிட்டு ஆசை ஆசையாய் எம்.எஸ்.சி படிக்க ஆரம்பித்திருந்தேன்.மரியாதையாய் ஏதாவது ஒரு வேலைக்குப் போயிருந்தால், குடும்ப நிலைமை கொஞ்சம் சீர் பட்டிருக்கும்.வாழ்க்கை பற்றி தெரியாத வளர் பருவம், அதில் அபிலாஷைகள் கண்ணை மறைப்பது அதிசயம் ஒன்றுமில்லை.

பஸ் ஸ்டாண்டில் பாதி வெயிலுக்குப் பயந்து கூட்டம் அதை ஒட்டியிருந்த ஒரு ப்ரிண்டிங் ப்ரஸ்ஸின் உயரமான படிக்கட்டில் கொஞ்சம் உட்கார்ந்திருந்தது.அது ஒரு பழைய காலத்து அச்சகம்.பலர் கை மாறி இப்போது ஒரு இஸ்லாமியர் கைவசம் இருக்கிறது.அவர் ’லோகாம்பிகை அச்சகம்’ என்ற பெயரை மாற்றவில்லை. அவர்களிடம் பழைய காலத்து பித்தளை எழுத்துக்களும், ப்ளாக்குகளும்,உண்டு. ஈய எழுத்துக்கள் வந்த பின் பெரும்பாலான அச்சகங்கள் பித்தளையை நல்ல விலைக்கு விற்று விட்டன. இங்கே பித்தளையில் நல்ல பார்டர் டிசைன் வைத்திருப்பார்கள். நாங்கள், 1966-ல், 11-வது வட்ட தி.மு.க உட்கிளையாக ‘மக்கள்திகம் எம்.ஜி.ஆர் மன்றம்’ஆரம்பித்த போது நிதி வசூலிக்க ரசீது புத்தகம், நோட்டீஸ் எல்லாம் அங்கேதான் அடித்தோம்.ரொம்ப தெளிவாக, பிரமாதமான பார்டருடன் அச்சடித்திருந்தார்கள்.அவர்களிடம் ’நம்பரிங் மெஷின்’ இல்லை பொதுவாக அதை சில அச்சகங்களே வைத்திருப்பார்கள்.ஒருவருகொருவர் இரவல் வாங்கிக் கொள்ளுவார்கள். ’கையூமி அச்சக’த்தில் போய் கேட்டு வந்தார்கள். அங்கே அவர்கள் வேலைக்குத் தேவையென்பதால் தர மறுத்து விட்டார்கள்.

நானும் கூடவே போனேன். பொதுவாய் அது என் பழக்கம். பிரஸ், போட்டோ ஸ்டுடியோ எதுவென்றாலும், ஏதாவது ஆர்டர் கொடுத்தால் பழிக்கிடையாய் அங்கேயே காத்துக் கிடப்பேன். ‘’.நம்பர் மெஷின் இல்லையென்றால் என்ன ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’’என்று ‘பெரிய பாய்’-வாப்பா முதலாளி –சொல்லிவிட்டு கல்லாவிலிருந்து எழுந்து, சட்டையைக் கழற்றி ஸ்டாண்டில் மாட்டி விட்டு, தரையில் கை மேஜை போட்டு உட்கார்ந்து கொண்டார். ”கொண்டாடா அந்த ஃபோர்ட்டீன் பாய்ண்ட் நம்பர் டைப்ஸை, கொண்டா அந்த் இங்க் ரோலரை” என்று சத்தமாய்ச் சொன்னார். வரிசையாக ’0’ வில் தொடங்கி ‘9’ வரை டைப்ஸை அடுக்கிக் கொண்டார்,இடதுகை ஆட்காட்டி விரலில் இங்க ரோலரிலிருந்து மையைத் தடவிக் கொண்டார்.ஒன்றிலிருந்து ஒவ்வொரு டைப்பாக எடுத்து, மையில் தோய்த்து, அச்சுப் பிசகாமல். ரசீது புத்தகத்தில் ஒற்றி எடுத்தார்.’’ட்ரெடிலில் அடிச்ச மாதிரி இருக்கா, தம்பி, சொல்லும்” என்று என்னிடம் கேட்டார்.உக்காரும் தம்பி, ஏன் நிக்கேரு” என்றார். நான் படக்கென்று உட்கார்ந்தேன்.பக்கம் புரளப் புரள எண்களை வேகமாக மாற்றிக் கொண்டார்.அடித்த பின், வரிசை குலையாமல் திரும்பவும் அதே இடத்தில் வைத்தார். இதெல்லாம் நொடிப் பொழுதில் நடந்தது.” அந்தக் காலத்துல ஏது தம்பி ‘நம்பர் மிஷினெல்லாம்....” என்கிற போது,8-ஐ இரண்டு முறை உபயோகித்து, 88 அடிப்பதற்குப் பதிலாக 89-ஐ அடித்து விட்டார்.”பாத்தேரா,இதுதான் கோவப்படக்கூடாதுங்கிறது, அது வேலைக்கு இடைஞ்சல்....என்று சொல்லிக் கொண்டே, ”ஏய் ஒரு பார்டர் டைப் எடுத்தா”என்று அதை மையில் தோய்த்து அழகாக 89 மேல் அடித்து, தவறை திருத்தினார்......

ஆறு வருடமாகிறது. இன்றும் பிரஸ்ஸின் கல்லாவில் அவர்தான் உட்கார்ந்திருந்தார்.யாராவது அந்தப் பிரஸ்ஸுக்கு இப்போது வருகிறார்களா, தெரியவில்லை. எவ்வளவோ முன்னேறி விட்டது, காலால் மிதிக்கும் ட்ரெடில் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி,. இப்போது மோட்டாரில் ஓடுகிறது.நம்பரை, ட்ரெடில் தானாகவே அடிக்கிற வசதியெல்லாம் வந்து விட்டது......நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவள் தூரத்தில் வந்தாள்.இன்று காரில் போகவில்லை போலிருக்கிறதே....அடடா இன்று யார் முகத்தில் விழித்தேன்....எல்லாம் நன்மைக்கே என்கிற மாதிரி ஆகி விட்டதே என்று உள்ளுக்குள்.. நினைப்பு ஓட, புறப்படும் போது ரேடியோவில் கேட்ட ஏ எம். ராஜா பாட்டு ஒலித்தது...... ”வெண்ணிலா நிலா, என் கண்ணல்ல, வா கலா...”அவள் போவது வேறு பஸ், என் கல்லூரியின் திசை வேறு. அவளை அபூர்வமாக பஸ் ஸ்டாப்பில் பார்த்த கல்லூரித் தோழிகள், என்ன, காருக்கு என்ன ஆச்சு.” என்று ஒரே மாதிரி குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள் இன்று பார்த்து என் கையில் இருப்பதெல்லாம் நோட்டுக்களாக இருக்கிறது..தடியாய் ஏதாவது புத்தகம் இருக்கக் கூடாதா,நான் எம்.எஸ் சி படிப்பது தெரியுமா, தெரியாதா..தெரிந்தாலும் ராட்’சசி’ தெரியாத மாதிரி நிற்பாளே என்று தோன்றியது.

அப்போது பார்த்து, பெரியநாயகம் என்னை நோக்கி, எதிர்த் திசையிலிருந்து கையை அசைத்தான். ஆஹா மாட்டிக் கொண்டோமே... ”சரி, நரி இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன, மேல விழுந்து பிடுங்காமல் இருந்தால்ப் போதும்..” என்று அவனைப் பார்த்தமாதிரியும் இல்லாமால் பார்க்காத மாதிரியும் இல்லாமல் மையமாகச் சிரித்து வைத்தேன்.அவன் என்னை நோக்கித்தான் வந்தான்.வந்து என்ன கூப்பிடப் போறானோ என்று பயமாயிருந்தது.ஸ்கூல் பட்டப்பேரைச் சொல்லி ஏலே’மைனாக் குஞ்சு’ என்று கூப்பிட்டால் கேவலமாகப் போய்விடுமே....பதிலுக்கு நாம் “என்னலே ”செனை இட்லி” என்று கூப்பிட்டால்ப் போகிறது என்று தோன்றினாலும். அவன் சரியான வாயாடி... இன்னும் கேவலப் படுத்தி விடுவானே என்று பயம் அதிகரித்தது.

பெரிய நாயகம் என்னுடன் ஆறாவது வகுப்பில் படித்தான்.அதுவும் பெயிலாகி. அவந்தான் கிளாஸ் மானிட்டர்.அந்தப் பள்ளிக் கூடத்தில் பெயிலானவந்தான் கிளாஸ் லீடர். அப்போதுதான் யூனிஃபாரம் அறிமுகம் ஆகி இருந்தது. கால்ப் பரீட்சை வரை விதி விலக்கு அளித்திருந்தார்கள்... அதனால் பெரிய நாயகம் தன்னுடைய கனத்த காக்கிச் சட்டையிலேயே வந்து கொண்டிருந்தான்.ஒரே ஒரு சட்டைதான்.பின் மண்டையில் லேசான புடைப்பு போலிருக்கும்.அதனால் ஜோயல் சார் ஒரு நாள் அவனை ஏல ‘செனை இட்லி’ என்று கூப்பிட்டார். அதிலிருந்து அவன் பட்டப் பேர் எல்லோருக்கும் தெரிந்தது.ஜோயல் சார் எப்போதும் சோம்பியமாதிரித்தான் இருப்பார்.பிளம் கேக் என்றால் உயிர். ஒரு பிளம் கேக் பத்துப் பைசாதான்.”ஏல செனை இட்லி, நம்ம சரக்கு எங்கலெ” என்றதும் பெரிய நாயகம் புத்தகப் பையிலிருந்து கேக்கை எடுத்துக் கொடுப்பான்.கிளாஸ் முடியப் போகும்போது காசு தந்து விடுவார். ஆனால் அதுவரை பெரிய நாயகம் முனங்கிக் கொண்டே இருப்பான்.” முசிறு புடிச்சவன் தருவானோ தர மாட்டானோ” என்று.நான், ”ஏன் பத்துப் பைசாவுக்கு இப்படிப் பயப்படுதே”என்று சொன்னேன்.

மறுநாள் ஸ்கூலுக்கு வரும் வழியில் பாத்திமா பேக்கரிக்கு அருகில் நின்று கொண்டிருந்தான், பெரியநாயகம்.பேக்கரியின் புகை போக்கியிலிருந்து’வனிலா’ வாசனை வந்து கொண்டிருந்தது. அதுவே சொல்லிவிடும் மணி எட்டேமுக்கால் என்று.நானும் ஜாஃபரும் வாசனையை ரசித்தபடி, பொங்கலுக்குத் திறக்கப் போகிற,லெட்சுமி தியேட்டர், புது சினிமாக் கொட்டகையைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தோம். முந்தின நாள் சாயங்காலம் நானும் அவனும் அதைப் போய்ப் பார்த்து வந்திருந்தோம்.”ஏல இங்க வாலெ” என்றான் பெரியநாயகம். “இன்னிக்கி நீ ப்ள்ம் கேக் வாங்கித்தா, நான் சார்வா கிட்ட துட்டு வாங்கித் தாரேன்”, என்றான்.என்னிடம் காசு இல்லை என்றேன்.”போடா, நீதான் பெரிய பண்ணையாராச்சே”என்றான். நான் பத்துப் பைசாவை எடுத்துக் கொடுத்தேன்.கேக் வாங்கி அவன் பையில் வைத்துக் கொண்டான்.

கிளாசில் ஜோயல் சார் பீரியட், மூன்றாவது பிரீயட், அது முடிந்ததும் லஞ்ச் ரீசஸ்.அவர் வாங்கித் தின்றாரே ஒழிய காசு தரவில்லை. மணியடித்ததும், நான் பெரிய நாயகத்திடம் கேட்டேன்.அவன் சாரிடம் சொன்னான், ”சார் இவனுக்கு பத்துப் பைசா வேணுமாம்.”என்று. ஏல அவன் யாருல என்றார் சார். நான் எழுந்து நின்றேன். “ஏல மைனாக் குஞ்சு மாதிரி இருக்கெ, உனக்கு எதுக்குல காசு” என்றார். கிளாஸ் பூராவும் சிரித்தது. அவர் தரவேயில்லை.அதிலிருந்து எப்பவாவது, பெரிய நாயகம், காசு கேட்பான். கொடுக்கவில்லையென்றால், ”பட்டப்பேரைச் சொல்லவா” என்று பயமுறுத்துவான். ஏழாம் வகுப்பில் மறுபடி பெயிலாகிவிட்டான்.

அப்புறம் நான் எட்டாம் வகுப்பு முடிந்து பெரிய பள்ளிக்கூடம் போனபின் அவனைப் பார்க்கவேயில்லை. பட்டப்பேரும் மறைந்து விட்டது. வீடு தன் வசதியை இழந்து கொண்டே வந்தது. ஊரிலேயெ பெரிய டாகடரான கோவிந்தய்யரும் அவர் மகன் சுப்ரமணிய டாக்டரும்தான் குடும்ப டாக்டராய் இருந்தார்கள்.ஆறு மாசத்துக் கொரு தரம் அறுவடையாகி நெல் வந்ததும் எல்லாக் கடனையும் அப்பா அடைப்பது வழக்கம். விஸ்வநாதபிள்ளை ஜவுளிக்கடை, சங்கரன் செட்டியார் பலசரக்குக் கடை, போத்தி ஓட்டல், மீ.அ.க.தாவூது சாயுபு இரும்புக்கடை என்று எல்லாம் கடன்.ஒவ்வொருவராய் வந்து வாங்கிச் செல்வார்கள். ஓட்டல் கணக்கு உடனே மறுபடி ஏறும்.மற்றவை கொஞ்சம் கொஞ்சமாய்.அப்படி பழனிக் கம்பவுண்டர் கணக்கும் எறி விட்டது. டாக்டரெல்லாம் போய், இப்போது எந்த சீக்கு வந்தாலும், கம்பவுண்டர்தான். அவரும் அவர் மாட்டு ஊசியும் பயமாய் இருக்கும். அதுவும் ஏதாவது காயம் என்று போய் விட்டால் அவ்வளவுதான், அழுத்தித் துடைத்து அழ அழ வைத்து விடுவார்.
ஒரு நாள் பெரியநாயகம் வீட்டு வாசலில் வந்து நின்றான். “ஏல இதுதான் உங்க வீடா, நானும் நாலு நாளாய் அலையுதேன்,உங்க ஐயா, கம்பவுண்டருக்குத் தர வேண்டிய ரூவா தர மாட்டேங்காரே நீ என்னமோ பெரிய பண்ணையார் மாதிரி ஸ்கூலில் பீற்றிக் கொள்ளுவியே” என்றான்.நான் அப்படியெல்லம் செய்தது கிடையாது.சரி கேட்க வேண்டிய நேரம் என்று சும்மா இருந்தேன். இவன் என்ன அங்கே வேலை பார்க்கிறானா என்று யோசிக்கும் போதே திடீரென்று என் அண்ணன் வீட்டுக்குளிருந்து வந்தான். “ஏல நீ யாருல,சுப்பாம் பிள்ளை மகன்தானே, தர முடியாதுன்னு சொன்னதா கம்பவுண்டர்கிட்ட சொல்லு, இப்ப நான் அங்கெ வந்தேன்னா, மேஜை,பீரோ, நாற்காலி யெல்லாம் அள்ளிகிட்டு வந்துருவேன் , எல்லாம் நாங்க கொடுத்தது, நீ ஓடீரு, உங்க அண்ணன்கிட்ட சொல்லுறேன் பாரு...என்று பயங்கரமாகச் சத்தம் போட்டான். இவனா இப்படிப் பேசறது என்று ஆச்சரியமாய் இருந்தது.பெரிய நாயகம் சத்தம் காட்டாமல் நழுவினான்.

சொன்னது போலவே சாயங்காலம் டாக்ஸி ஸ்டாண்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.ஒன்றிரண்டு டாக்ஸிதான் அப்போதெல்லாம் உண்டு.அதில் ஒன்று கணபதி வண்டி.அவனிடம்தான் சிரித்தபடி சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.அதுதான் அவன் வழக்கம். ரெண்டு வார்த்தை கோபமாய்ப் பேசி விட்டு சிரித்து விடுவான். ”ஏய் கணவதி,ஓந்தம்பி பூடம் தெரியாம சாமி ஆடுதான், சொல்லி வை” என்றான். அவனும், ”சரி, பாண்டியண்ணாச்சி, அவனுக்கு வெவரம் தெரியாது நான் சொல்லீருதேன்.”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெரியநாயகம் வந்தான்.. அவன் பொடதியில் ஒரு அடிவைத்தான், ”ஏல சென இட்லிக் கோட்டி நாயே , ஒனக்கென்னலே ஆச்சு, போய் ரூவா கேட்டாங்கன்னு கேளு, தந்தா கொண்டுபோய்க் கொடு., இல்லேன்னா பேசாம இரு, நான் தொழில் படிச்சதே அவங்க வீட்டு வண்டியிலதான் தெரியுமாலே..அப்புறம் உங்க ஐயா, அந்த குட்டம் பத்துன நாயா சாப்பாடு போட்டான், நாள் தவறாம போத்தி ஓட்டலில் வாங்கி குடுத்தது அண்ணாச்சிதாம்ல ” என்று கூப்பாடு போட்டான்.எனக்கு ஒரு விவரமும் தெரியவில்லை.லேசாக்த் தெரியும் பெரியநாயகம் அப்பா பால் வியாபாரம் பண்ணுகிறார், மூக்கெல்லாம் சப்பையாகிப் போய் தொழுநோய் வந்தவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.ஒரு முறை அவசரத்திற்கு அவர் தொழுவில் பால் வாங்கப் போயிருக்கிறேன்.எப்போது போனாலும் பால் கிடைக்கும். ரொம்ப தண்ணீராய் இருக்கும்.

கணபதி ஒரு நாள், ஒரு பெண்ணை டாக்ஸி ஸ்டாண்டில் வைத்து இதே போல் பொடதி அடி அடித்துக் கொண்டிருக்கும் போது பார்த்திருக்கிறேன். அது அவன் ”வைத்திருப்பவள்” என்று யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.அந்த அடி வாங்கியும் அவள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அன்று இரவே அவளும் அவனும் டாக்ஸிக்குள் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். இரண்டு பேருமே நல்ல போதையில் இருந்தார்கள்.

இப்பொழுதுதான் கணபதியின் ஜாடை பிடிபட்டது. பெரிய நாயகம் அவனை விட சற்றுச் சிகப்பாயிருக்கிறான், அவ்வளவுதான். அடி வாங்கிய அதிர்ச்சி அவனை விட எனக்கே அதிகமாய் இருந்தது.பெரிய நாயகம் போகும்போது”ஏலே மைனாக் குஞ்சு” என்று சொல்வது போலிருந்தது. அதற்கப்புறம், அபூர்வமாய் எப்போதாவது அவனைப் பார்ப்பேன். பல இடங்களில் வேலை பார்த்தான். இப்போது அவன் அண்ணனது டாக்ஸிக்கு அருகிலிருந்துதான்., என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். நான் பட்டப் பேர் சொல்லி கூப்பிட்டு விடுவானோ என்று பயந்து கொண்டிருந்தேன்.
இல்லை. அவன் அன்பாய், ”ஏய் ஒரு உதவி பண்ணுடே, இந்த கடன் வாங்கற ஃபாரத்தை கொஞ்சம் நிரப்பித் தா.. இப்ப வேண்டாம் சாயந்தரமா காலேஜ் விட்டு வந்ததும் நிரப்பித் தா...”.என்றான். ”இப்ப, எம் எஸ் சியோ என்னவோ படிக்கியாமலெ.. உங்க அண்ணாச்சிதான், ரொம்ப சந்தோஷமாச் சொன்னாரு...” என்றான். உண்மையில் எனக்குத்தான் கன சந்தோஷமாயிருந்தது. ராட்சசி கேட்டுக் கொண்டு இருக்கிறாளா என்று ஓரக் கண்ணால் பார்த்தேன், ஒரு உள்ளார்ந்த சிரிப்புடன். அவளும் சிரிக்கிற மாதிரி இருந்தது. சரியாய்ப் பார்க்கும் முன் பஸ் வந்து விட்டது. அவளுக்கான பஸ்.
சாயந்தரம் நானே பெரிய நாயகத்தைத் தேடிப் போனேன்.அவன் ஒரு பெண்ணுடன் ஏதோ மல்லுக் கட்டிக் கொண்டிருந்தான்.அவள் டாக்ஸிக்குள்ளிருந்து இறங்க மறுத்துக் கொண்டிருந்தாள். ”இந்தா பாரு, வண்டி கேட்டு ஆள் வந்திருக்கு, இறங்கு” என்றான். அவள் இறங்கினாள்.”எனக்குத் தெரியும் இது யாருன்னு,இது ஓஞ்சேக்காளியில்லா, நீயும் உங்க அண்ணன மாதிரி என்னை ’தாப்பா’ போட்ரலாம்ன்னு நினைக்காத.”. என்றபடியே, ”சரி, இந்தா இந்தக் கிளப்புல காபி சொல்லு”என்று அருகிலிருந்த காபிக்கடையருகே போனாள்.அங்கிருந்து கேட்டார்கள்,”என்ன, ’சேனா ஈனா’, காபி குடுக்கவா”. ‘குடுங்க குடுங்க” என்று சொல்லிகொண்டே என்னிடம், ”எப்பா, கிறுக்குத் தேவடியா, நம்மளை புடிச்சுகிட்டாடே,” என்றான்.இது யாரு என்றேன். “எங்க அண்ணன் வச்சுருந்தானே அவதான், எங்கேயெல்லாமோ சுத்தீட்டு நம்மளைப் புடிச்சுகிட்டா,மறை வேற கழண்டுட்டு...எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டா...என்னத்தியும் சமைச்சுப் போடுதாளேன்னு பார்த்தா பெரிய சீண்ட்ரமாப் போச்சு...., ” என்றான். ”நீ என்ன சாப்பாடு மட்டுமா சாப்பிடுதே அவட்ட” என்று பக்கத்து வண்டி டிரைவர் கேட்டான். ”ஆமா, அதான் ...அண்டிக்கொழுப்பு” என்றான். ஸ்டாண்டில் இப்பொழுது பத்துக்கு மேல் வண்டிகள் இருந்தன...’டி’ போர்ட் வண்டிகள் எல்லாம் வந்திருந்தன.உங்க அண்ணன் எங்கே என்று கேட்டேன்.”அவனா, மதுரைப் பக்கம் போயிட்டான்...ஊரைச் சுத்தி ஒரே கடன்...” என்றான். “சரி என்னமோ நிரப்பணும்ன்னியே என்றேன்...”அதா.. நிரப்பிக் குடுத்துட்டேன்... இந்த வண்டியைக் கொடுத்துட்டு ‘டி’போர்டு வாங்கணும்....அந்த ‘டி’ போர்டத்தான் என்ன பண்ணனும்ன்னு தெரியல...’’என்று அவளைக் காண்பித்தான்...தலை ஜாடையால்..”ஆமா நாளைக்கு லெச்சுமியில் உங்க ஆளு படம் போடுதானே, முத ஆளா போயிருவியே” என்றான், பத்து வருடப் பழக்கம் லேசாக நெளியும் ஒரு சிரிப்புடன்....... நாளை முதல், லெட்சுமி தியேட்டரில் ’’ஒரு தாய் மக்கள்”.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</