வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கலாப்ரியா, எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கூடு வாசகர்களுக்காக கலாப்ரியா அவர்கள் எழுதும் தொடர் பற்றி அவரது வார்த்தைகள் மூலமே அறிவோம்.

ஜெயகாந்தன் அவருடைய ``சத் சங்கத்தில்’’ சொன்னதாக, பாடியதாக நண்பர்கள் சொல்லுவார்கள்.

"வாழ்தலுக்கும் சாதலுக்கும் என்ன வித்தியாசம்
வாழ்ந்துவிட்டுச் சொல்லுகிறேன் அந்த வித்தியாசம்".

வாழ்க்கை ஒருவருக்கொருவர் வித்தியாசப் படுகிறது. பொதுப் புத்தி சார்ந்து அந்த வித்தியாசம் அவ்வளவாய் உணரப் படாமல் போகலாம். ஏனெனில் நம் ஒவ்வொரு வாழ்க்கையும் ஒவ்வொரு படகாய் மிதக்காமல், ஒரு பெரிய பூமித் தெப்பமாய் சமூகம் கட்டிப் போட்டிருக்கிறது.. இதனால்த்தான் என் அனுபவங்களுக்குள் நீங்களும் உங்கள் அனுபவத்திற்குள் நானும் நிழல் தேடிக் கொள்ள முடிகிறது.

தனியாய், ஒரு குழந்தை ஆடிக் கொண்டிருக்கும் ஊஞ்சலுக்கு அருகே இன்னொன்று வந்து நானும் ஏறிக் கொள்கிறேன் என்கிறது. அப்புறம் இன்னொன்று, மீண்டும் ஒன்று என்று ஊஞ்சலில் ஆசையாய்க் குழந்தைகள், ஊஞ்சல்ப் பலகை கொள்ளும் மட்டும் ஏறிக் கொள்கின்றன. சில இறங்கியதும் புதிதாய்ச் சில ஏறுகின்றன.....என் வாழ்க்கைப் பாடுகள் உந்திய உந்துதலில் ஒரு ஊஞ்சலை ஆட்ட ஆரம்பிக்கிறேன்.....உயரத்திலே தங்கி விடாமல் உங்கள் அருகேயே அமர்ந்து கொஞ்சம் நினைவு, கொஞ்சம் புனைவு என்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்னை.....

அன்புடன்
கலாப்ரியா

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


ஏற்கெனவே

கலாப்ரியா  

பள்ளிக்கூடம் ஒன்பது மணிக்கு ஸ்டடியுடன் ஆரம்பிக்கும். விஜயரெங்கன் சீக்கிரமே வந்து விடுவான்..ரங்கனுக்கு கபடி என்றால் கொள்ளைப் பிரியம். அடுத்து கமல ஹாசனை ரொம்பப் பிடிக்கும். இந்தக்காலத்து கமல் ஹாசன் இல்லை. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே, கமலஹாசன். அந்தப் பாட்டை வெள்ளிக் கிழமை தோறும் நடைபெறும் கடைசிப் பிரீயடான எல்.டி.எஸ் (லிட்டெரரி டிபேட்டிங் சொசைட்டி) பிரீயடில் எப்போதாவது பாடுவான். அவன் தாத்தா நல்ல, வாய்ப் பாட்டுக் காரர். அவர் வீட்டில் தான் இருந்தான்.

அம்மாவும் நீயே தவிர, வாதாபி கணபதிம் பஜே....பாடல், கட்ட பொம்மன் வசனம், ‘’நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ’’......என்று, பேசி நடித்துக் காண்பிப்பான்.``ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே....’’என்று ஆரம்பித்து தெய்வப் பிறவி படத்தில் வருகிற குசேலன் கதா காலக்ஷேபம் செய்வான். அந்தக்கால கிருஷ்ணன் பஞ்சு படங்களில் இது ஒரு செண்டிமெண்ட், கதாகாலக்ஷேபம் அல்லது ஒரு நாடகம் தவறாமல் இருக்கும். அதை எழுத சுந்தரம் என்றொருவர் உண்டு. எங்கள் தங்கம் படத்தில் எம்.ஜி.ஆர் கூட குடுமி மேக்கப்போடு சந்திர மண்டலத்துக்கு ராக்கெட் விடுவது பற்றி ஒரு காலக்ஷேபம் செய்வார். பீம்சிங் படங்களில் ஒரு குரூப் டான்ஸ் கட்டாயம் இருக்கும், அது மாதிரி கிருஷ்ணன் பஞ்சு படங்களில் இவை.

அந்தப் பள்ளிக் கூடத்தில் இரண்டு பேருக்கு ஒரு பெஞ்ச். பெஞ்ச் ரொம்ப கனமானது, உறுதியானது, எல்லாம் பல தலைமுறை கண்டவை. இரண்டு மூன்று பேர் சேர்ந்தால்தான் நகர்த்தவே முடியும். பை, பாடப் புத்தகம் வைப்பதற்கு கீழே தனியாக ஒரு அடுக்கு இருக்கும். காலையிலேயே வருகிற ரெங்கன், பைக்கட்டையும், சட்டையையும் டெஸ்க்குக் கீழ் அடுக்கில் வைத்து விட்டு, பூனூலை ஞாபகமாய் பனியனுக்குள் கழற்றி விட்டுக் கொண்டு கிரவுண்டுக்கு ஓடி விடுவான்.

ஆள் என்னவோ பொடியன் தான். கபடி நன்றாக விளையாடுவான். பாடி வருகிறவன் காலை திடீரென்று இறுக்கி மிதித்து கையையும் எட்டிப் பிடித்து விடுவான். அப்போது அவனுக்கு ஒரு அசுர பலம் வந்து விடும். பெரிய பெரிய பையன்கள் கூட இதில் அவனிடம் மாட்டிக் கொண்டு விடுவார்கள். அதே போல் இந்தப் பக்கம் வந்து விட்டு, தனது பக்கம் போகிறவனின் பின்னால் மின்னல் வேகத்தில் சென்று தொட்டுவிட்டுத் திரும்புவதிலும் கில்லாடி. விஜி விஜி என்று அவனை எல்லோரும் கிண்டலாகக் கூப்பிடுவோம்.

எட்டாம் வகுப்பு வரை என்னுடன் படித்தான். அதற்கு மேல் உள்ள வகுப்புக்களுக்கு, பெரிய பள்ளிக்கூடம் என்கிற மெயின் ஸ்கூலுக்குப் போக வேண்டும். அங்கே ஒன்பதாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை உண்டு. அங்கே போனதும் அவன் என் வகுப்புகளில் படிக்கவில்லை. கபடி விளையாடும் மைதானத்தில் எப்பொழுதாவது தென்படுவான். அதை விட ஸ்போர்ட்ஸ் ரூமிலேயே அதிகம் காணப்படுவான். டிரில் சார் சிகரெட்டை பாதியாக வெட்டி, பெரிய சைஸ் வெட்டும் புலி தீப்பெட்டி அல்லது சன் ஃப்ளவெர் தீப்பெட்டியில், தீக்குச்சியுடன் வைத்திருப்பார். சார்வாங்களுக்கென்று உள்ள கக்கூஸில் வைத்து இடைவேளைகளில் அவசர அவசர மாக நாலு இழுப்பு இழுத்து விட்டு தூர எறிந்து விட்டு வருவார். அவர் என்றில்லை நிறைய பேர். ஆனால் இவர்தான் இப்படிப் பாதி பாதியாகப் புகைப்பவர். சிகரெட்டை முடித்ததும், மேஜை டிராயரிலிருந்து ஒரு குத்து கடலையை எடுத்து வாயில் போட்டு மெல்லுவார். அந்த நேரம் யாராவது பையன்கள் வந்து விட்டால், அடி பின்னி விடுவார். இந்தக் கதையை எல்லாம் திருஞானசம்பந்தன் சொன்னான். அவனை டிரில் சார் கூப்பிடுவதாக விஜயரெங்கன், சோஷியல் வகுப்பின் இடையே வந்து கூட்டிப் போனான். அதற்கு முந்திய வகுப்பு டிரில் கிளாஸ். அவன் திரும்ப வந்ததும் சோஷியல் சார் கேட்டார், ஏலெ கட்டையன் என்னலெ செஞ்சாரு, என்று. பின் வரிசை மாப்பிள்ளை பெஞ்சில் இருந்து பலத்த சிரிப்பு வந்தது.

அவருக்கு சிகரெட், ப்ளேடு வாங்கி வருவது, ஸ்கூலுக்கு முன்னால் விற்கும் நிலக் கடலைக் காரர்களிடம் கடலை வாங்கி வந்து உடைத்து வைத்திருப்பது, எல்லாம் விஜியின் வேலை. வகுப்புக்கள் நடக்கும் சமயம் ஸ்கூலை விட்டு வெளியே போக முடியாது. ஆனால் விஜி சாதாரணமாகப் போய் வருவான். பத்தாம் வகுப்பு படிக்கும் போது டிரில் சார் சிபாரிசில் அந்த வருட கலை இலைக்கியப் போட்டிகளில், விஜி பாட்டுப்போட்டியில் கலந்து கொள்ள, தமிழ் சார் அனுமதித்திருந்தார்.`’தாமரை பூத்த தடாகமடி.....’’ என்ற பாட்டை சுருதி சுத்தமாகப் பாடினான். நாகர்கோயில் மஹாதேவன் என்கிற பிரபல பாடகர் ஒரு நடுவராக வந்திருந்தார். டி.ஆர் மகாலிங்கம் நடித்த ஸ்ரீ வள்ளி படத்தில் நாரதராக நடித்தவர். இரண்டாம் பரிசு கொடுத்தார்கள். ஆனால் மாணவர்களின் கைதட்டல் அவனுக்குத் தான் அதிகமிருந்தது.

பள்ளிச் சீருடை டிராயர், எஸ்.எஸ்.எல்.சி லீவில் மூன்றரை முழம் வேட்டியாகி அது பின்னர் நாலு முழம் என்றாகி, பி.யு.சி சேர்ந்ததும் இரண்டு பேண்ட், என்றாகி வயது கூடக்கூட அரும்பு மீசை, முகப்பரு என்று காலம் பலவிதமாகக் கடந்து விட்டது. சில பள்ளிக்கூட நண்பர்களை அதிகம் சந்திக்க முடிந்தது. கால வெள்ளத்தின் சுழற்சியில் விஜயரெங்கன் கண்ணிலேயே படவில்லை.

தென்காசி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்திருந்தேன். அழுக்கான வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையுடன் யாரோ கன்னங்கறுப்பாய் ஒரு அரைக் குயர் நோட்டைக் கையில் வைத்துக் கொண்டு, ஒவொருவரிடமும் காட்டி, கொடுப்பதை வாங்கிக் கொண்டு என் இருக்கை நோக்கி வந்தான்.``சார், தெப்பொளத்தெரு ஈசானிய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம், உங்களால ஏண்டதை (இயன்றதை) தாருங்கோ, நூறு ரூபான்னா ரசீது தர்ரேன், என்று சட்டைப் பையில் சுருட்டி வைத்திருந்த ரசீது புத்தகத்தை எடுத்தான். ரசீது புத்தகம் கசங்கிப் போய் இருந்தது. வாயிலிருந்து அரிஷ்ட வாசனை வந்தது. சுவர் முட்டி அடித்திருப்பான் போல. ரசீது புத்தகத்தை எடுக்கும் போது கீழே விழுந்த பாதி அணைத்த சிகரெட்டை எடுக்க குனிந்தான். கண்டக்டர் எனக்குத் தெரிந்தவர், கொடுக்காதீங்க என்று சைகை செய்தார்.

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று கையைக் கட்டிக் கொண்டு பாடுகிறவனா, கபடியில் பெரிய பெரிய திடுமங்காளைகளையெல்லாம் அவுட் ஆக்கியவனா....ஆச்சரியமாய் இருந்தது. அஸ்வினி, பரணி.. என்று இருபத்தியேழு நட்சத்திரங்களையும் சீர்காழி குரல் போலவே பாடியவனா...தண்டபாணி தேசிகரின் தாமரை பூத்த தடாகமடி... பாட்டைப் பாடி, பல அரசியலுக்கு இடையிலும் கருத்த பிராமணன் என்று யாரோ சொல்லி, இரண்டாம் பரிசை வாங்கியவனா...என்று அடுக்கடுக்காய்த் தோன்றியது. சார் ஷேமமா இருப்பேள், குடுங்கோ என்று அசட்டுச் சிரிப்பை உதிர்த்தான். கடை வாய் ஓரமெல்லாம் வெள்ளைப் புண், இன்னும் கறுப்பாக காட்டியது. நான் இல்லையென்று தலையாட்டினேன். ஜன்னலோரமாய் நகர்ந்து, முகத்தைத் திருப்பி அரை இருட்டுக்குள் பஸ் ஸ்டாண்டை வேடிக்கை பார்ப்பது போலிருந்தேன். சார், சார் எனக்கு கேக்கலை சார், நல்ல காரியத்துக்காச்சும் கேக்கறேன் சார், என்று நின்று கொண்டேயிருந்தான்.

கண்டக்டர், வேய் மாமா கீழே இறங்கும், வண்டி போகப் போகுது...என்றார். அவரை ஏசிக் கொண்டே இறங்கினான். கண்டக்டர்,`அண்ணேன், நீங்க நோட்டை வாங்கிப் பாக்கலியே, உள்ளெ நாலைஞ்சு ஃபிகர் படம் வச்சுருப்பான், ஆளு ஏமாந்தா அந்த வேலையும் பாப்பான், மூனு ரூவா கெடச்சாப்போதும் கூவை அடிக்க பாலத்துக்கு கீழ போயிருவான்’. என்றார். அய்யோ பாவம், ஒரு ரூபாயாவது கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. கீழே யாரோ, எவ்வளவு தேறுச்சு, போவமா, ஆசான் கடையை எடுத்து வச்சுருவாரு என்று கேட்டுக் கேலி பண்ணினார்கள். அவன் பையைப் பிடித்து, இழுத்து காட்டுவே பாப்போம் என்றார்கள். இங்க என்ன இருக்கு, என்று கையைத் தட்டி விட்டுவிட்டு, பைக்குளிருந்து அனைந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்...என்னைப் பார்த்தான், அரைக்கிலோ கறிக்கும் அஞ்சாறு மயிருக்கும்ன்னா, ஒழுக விட்டுட்டு பின்னாலேயெ வருவானுக, என்று சொல்லிக் கொண்டே முறைத்த படி நின்றான். கண்டக்டர் கீழே இறங்கி வண்டியை ரிவர்ஸ் எடுக்க விசிலடித்து, ரைட் கொடுத்துக் கொனண்டிருந்தார். ஜன்னலை ஒட்டி வந்து ஏல ஏங்கூடப் படிச்சவந்தான நீ, பசிக்குதுறா காசு குடுடா என்றான். நான் ஒரு ரூபாயயைக் கொடுத்தேன். அது கீழே விழுந்தது. கிட்டத்தட்ட டயரில் அடி படுகிற மாதிரிப் பாய்ந்து அதை எடுத்தான். காசை திருப்பித் திருப்பிப் பார்த்தான், தாயோளி ஒரு ரூவா தாரான்...என்று ஏசுவது கேட்டது. பஸ் வேகமெடுத்திருந்தது. வெகு தூரம் வந்த பின்னும் அவன் காசை எடுக்க பஸ்ஸுக்கடியில் பாய்ந்த வேகம், மனதை நெருடிக் கொண்டே இருந்தது. அடப் பாவி இவனை சந்திக்காமலே இன்றைய பொழுது கழிந்திருக்கலாமே.,. இது எப்போது, எதற்காக, ஏன் ஏற்கெனவே எழுதப் பட்டிருந்தது என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.