வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

ஆசிரியர் பற்றி
------------------------

சமயவேல்

எட்டையபுரம் அருகில் உள்ள வெம்பூர் என்ற கிராமத்துக்காரன் .

முதல் கவிதைத் தொகுப்பு காற்றின் பாடல்

அடுத்து கொஞ்சம் இடைவெளிக்குப்பிறகு : அகாலம்

பிறகு நண்பர் எஸ். இராமகிருஷ்ணனின் அட்சரம் இதழில் வந்த கவிதைகள் என மொத்த கவிதைகளும் அரைக்கணத்தின் புத்தகம் உயிர்மை பதிப்பகம் கொண்டு வந்தது.

தெற்கிலிருந்து சில கவிதைகள் என்ற தொகை நூலும் வந்திருக்கிறது.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
கருப்பு பாலைவனம்
தொடர் பற்றி
-------------------------
 
  இன்று நகரங்களில் வாழ்கிற நம்மில் பலரும் கிராமத்திலிருந்து வந்தவர்கள் தான். பல கிராமங்கள் நகர்ந்து நகரின் புறநகர்ப் பகுதிகளாகவும் சேரிகளாகவும் மாறிவிட்டன. தாய் வீட்டில் குழந்தையைப் பெற்றெடுத்து கணவர் ஊருக்குக் கொண்டு செல்லும் பொழுது ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து தொட்டிற் சேலையில் முடிந்து அனுப்புவார்கள். இல்லை என்றால் புது இடத்தில் அந்தக் குழந்தைக்கு தூக்கம் வராதாம். ஆனால் இன்று ஊரிலிருந்து சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளி வாழ்ந்து கொண்டிருக்கும் நகரத்து மனிதர்கள் எப்படித் தூங்குகிறார்கள்? தாங்கள் பிறந்த கிராமத்து மண்ணை தங்கள் மனதில் ஒரு மூலையில் சிறந்த ஞாபகங்களாக முடிந்து வைத்திருக்கிறார்கள்.

இப்படி தன் மனதில் முடிந்து வைத்திருக்கும் தங்களூர் மண்ணின் சில நினைவுகளை இந்தக் கட்டுரைத் தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார் சமயவேல். இந்த நினைவுகள் மூலம் வறண்ட கரிசல் காட்டின் கறுப்புப் பாலைவனத்தின் நிலவியல் குறிப்புகள், தங்களூர் மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், தங்கள் கடவுள்கள், சாமிகள், பேய்கள், தொன்மங்கள், சடங்குகள், விழாக்கள் என எல்லாவற்றையும் எழுதிவிடும் முனைப்பில் இத் தொடரைத் எழுதவிருக்கிறார்.
 
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சமயவேல் தொடர்கள் வாயில்


துள்ளு மாவும் துயர நெருப்பும்

சமயவேல்  

கரிசல் காட்டின் வறண்ட கிராமம் ஒன்றில் எனது இளமைக்காலம் முழுதும் வறுமையில் கழிந்த போதிலும் அதற்கு ஒரு அர்த்தம் கொடுத்து வண்ணம் பூசி ஒளியேற்றியவை எங்களூர் பண்டிகைகள் தான். இந்த பண்டிகைகளில் சில எங்களூரில் மட்டுமே கொண்டாடப்படுகிற தனித்துவமான, எளிமையான, ஊர் முழுதிலும் ஆனந்தம் பரப்புகிற பண்டிகைகள். ஊரின் எல்லாப் பெண்களையும் ஆண்களையும் அழகாக்கிவிடும் இப் பண்டிகைகள் சாதிய எல்லைகளைத் தாண்டி ஒரு அன்னியோன்யத்தையும் குடும்பங்களுக்கிடையே நெகிழ்ச்சி மிக்க நெருக்கத்தையும் உண்டாக்குபவை. சிறுவர்களான எங்களுக்கு எல்லையில்லாக் கொண்டாட்டத்தைத் தரும் இந்தப் பண்டிகைகள் என் வாழ் நாள் முழுதும் மறக்க முடியாதவை.

வடக்கத்தி அம்மனுக்கு கஞ்சி ஊற்றும் பண்டிகை முழுக்க முழுக்க எங்கள் கிராமத்துக்கு மட்டுமே உரிய பண்டிகை. வடக்கத்தி அம்மனுக்கு பெரிய கோவிலெல்லாம் கிடையாது. கண்மாயின் தென் கிழக்கில் நீர் ஏறாத ஒரு மேட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய பீடம் தான் வடக்கத்தி அம்மன். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வடக்கிலிருந்து வந்து இந்த ஊரில் குடியேறிய அம்மை ஒருவர் கிராம மக்களுக்கு ஏற்படும் நோய் நொடிகளை மாலைப் பொழுதுகளில் விளக்கேற்றிய பிறகு வேப்பங் குழை கொண்டு மந்திரிப்பது மூலம் குணப்படுத்தி வந்திருக்கிறார். குறிப்பாக பிறந்த குழ்ந்தைகள் உடலெல்லாம் சிவந்து ஜன்னி கண்டு முட்டு வீட்டிலேயே இறந்து விடுவதை அந்த அம்மை முற்றிலுமாக நிறுத்தி விட்டார். அவர் இறந்த பிறகு அவர் சமாதியான இடத்தில் பீடம் கட்டப்பட்டு கோவிலாகிவிட்டது. அம்மை இறக்கும் பொழுது, "கொஞ்சம் வேப்பிலையை வீட்டில் செருகி என்னை நினைத்துக் கும்பிட்டாலே போதும். குழந்தை தப்பித்துவிடும்." என்று வாக்கு கொடுத்து விட்டார். அவரது வாக்கு இன்றளவும் நிலைத்து நிற்கிறது. அந்த நோய்க்குக் கூட வடக்குத்தி நோய் என்றே பெயர். இப்பொழுது எங்கள் ஊரில் அந்த வடக்குத்தி நோய் வந்து குழ்ந்தைகள் இறப்பதில்லை. இதற்குக் காரணமாகக் கூறப்படுவது இந்தக் கஞ்சி ஊற்றும் பண்டிகை என்று நாங்கள் நம்புகிறோம். அந்த அம்மை இறக்கும் பொழுது, "மூன்று வருடங்களுக்கு ஒரு முறை எனக்கு கஞ்சி ஊற்ற வேண்டும். எனக்கு என்பது என் பிள்ளைகளாகிய உங்களுக்குத்தான். நீங்கள் ஒவ்வொருவரும் இன்னொருவருக்குக் கஞ்சி ஊற்ற வேண்டும். திணையில் இடித்த துள்ளுமாவும் பானக்காரமும் பரிமாறி என் வயிற்றைக் குளிர வைக்க வேண்டும்." என்று ஊராரிடம் வேண்டிக் கொண்டதைக் கடந்த இரு நூற்றாண்டுகளாக நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.

வைகாசி மாதம் ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையைத் தேர்ந்தெடுத்து வடக்கத்தி அம்மனுக்குக் கஞ்சி ஊற்றுகிறோம் என்று ஊர் சாட்டி விடுவார்கள். ஊர் சாட்டுதல் என்பது ஒருவர் தன் கழுத்தில் தொங்கவிடப்பட்ட சிறிய தமுக்கை அடித்து முழக்கியபடி உரத்த குரலில் ஒரு உரைநடைக் கவிதை போல "வருகிற வைகாசி கடைசி செவ்வாய்க் கிழமை வடக்கத்தி அம்மனுக்குக் கஞ்சி ஊற்றுகிறோம்" என்று அறிவிப்புக் கொடுப்பார். நாங்கள் எங்கள் கிழிந்த தொளதொளத்த ட்ரவுசர்களை இறுக்கக் கட்டிக் கொண்டு தமுக்கடிப்பவர் செல்கிற எல்லா இடத்துக்கும் அவரோடு சென்று அந்த ஒரே செய்தியைத் திரும்பத் திரும்பக் கேட்போம். எங்கள் சிறுவர் பட்டாளம் இல்லாவிட்டால் அவருக்கு இப்படி ஊர் முழுதும் அறிவிப்புக் கொடுப்பது எவ்வளவு வெறுப்பாக இருந்திருக்கும்? நாங்கள் அவரைச் சுற்றிக் கொண்டு அலைவதை சிரிப்போடு ஏற்றுக் கொள்வார். யாராவது ஒருவனைச் செல்லமாகக் காதை முறுக்குவார். ஒருவனைக் கிச்சுக்கிச்சு மூட்டுவார். நிறைய இடங்களில் தண்ணீர் வாங்கி தொண்டையை நனத்துக் கொள்வார்.

கஞ்சி ஊற்றுகிற செவ்வாய்க்கு முதல் செவ்வாய் அன்று ஊரில் கொடி ஏறி விடும். கொடி என்றால் இப்பொழுது கம்பங்களில் நாம் விதம்விதமாக ஏற்றுகிற கொடி இல்லை. வைக்கோலைப் பிரிபிரியாகத் திரித்து இடையில் வேப்பங்குழையைச் செறுகி தோரணமாக தெருவை மறித்துக் கட்டுவார்கள். தெரு தொடங்குகிற இடத்தில் ஆரம்பித்து சரி சமமான இடைவெளிகளில் தெரு முடிவது வரை குறுக்கு மறுக்குமாகக் கட்டிவிடுவார்கள். வேப்பிலைத் தோரணம் எல்லாத் தெருக்களிலும் ஊர் முழுதும் கட்டிய பிறகு ஊரே வேம்பு வாசத்தில் கிறங்கத் தொடங்கிவிடும். அனல் வீசுகிற வைகாசி வெயிலிலிருந்து ஏதேனும் விஷக்கிருமிகள் ஊருக்குள் புகுந்துவிட முடியாதபடி இந்த வேப்பிலைத் தோரணங்கள் காப்பாற்றி விடுவதால் இதைக் "காப்பு" என்றும் நாங்கள் அழைப்பதுண்டு. காப்புக் கட்டிய பிறகு யாரும் வெளியூருக்குப் போகக் கூடாது. ஊரே சுத்தமாகத் தொடங்கிவிடும்.

நிறைய பேர்கள் விரதம் இருப்பார்கள். நாங்கள் அடுத்த செவ்வாய் எப்பொழுது வரும் என்று விரல் விட்டு எண்ணிக் கொண்டிருப்போம். வெளியூர்களில் இருந்து சொந்த பந்தங்கள் வந்து பல வீடுகளில் நிரம்பிக் கொண்டிருக்கும். எங்களுக்கு புதுபுது சேக்காளிகள் கிடைத்து உற்சாகத்துடன் பல வகை விளையாட்டுகளில் மூழ்கி விடுவோம்.

அந்த செவ்வாய்க் கிழமையும் வந்துவிடும். விடிய எல்லாரும் குளித்து விடுவார்கள்.அனேகமாக ஊரில் எல்லாரும் குளித்துவிடுகிற ஒரு அபூர்வ தினமாக அது இருக்கும்! காலையிலிருந்தே நாதஸ்வர மேளம் இரண்டு செட்டும் தாரை தப்பட்டை இரண்டு செட்டும் தெருத் தெருவாக சுற்ற ஆரம்பித்துவிடும். தெருவுக்குள் ஒரே சீராகவரும் மேளம் தெருச் சந்திப்புகளில் உச்சமடைந்து உயர்ந்து அடங்கும். எங்கள் தெருவுக்கு ஒரு தடவை கூட மேளம் வரவில்லை என்ற புகார்களும் கிளம்பும்.அங்கங்கே நீரோ, மோரோ, கடுங்காப்பியோ மேளகாரர்களுக்குக் கிடைக்கும்.

எல்லா வீடுகளிலும் பெண்மணிகள் பல வகையான கஞ்சிகள் காய்ச்சத் தொடங்கி விடுவார்கள். கஞ்சிப்பானைகளைப் புதுப் பானைகள் போல விளக்கி இருப்பார்கள். சிலர் புதுப்பானைகள் கூட வாங்கியிருப்பார்கள். வெங்கலம், பித்தளை, ஈயம் என்று பல வகையிலும் பானைகள் இருக்கும். கஞ்சிகளும் அது போல பல வகைக் கஞ்சிகள் காய்ச்சப்படும். முக்கியமாக கம்பங்க்கஞ்சி, கேப்பைக் கூழ், சோளக்கஞ்சி, வரகுக் கூழ், குதிரைவாலிச் சோறு என்று அவரவர் நிலைமைகளுக்குத் தக்கவாறு அமையும். கஞ்சிப் பானைகளின் அளவுகளும் வீட்டுக்கு வீடு மாறுபடும். துள்ளு மாவு இடிக்கும் சப்தம் ஊர் முழுதும் கேட்கும். துள்ளுமாவு என்பது திணை அல்லது பச்சரிசியை நீரில் ஊற வைத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு வடிகட்டி இடிக்கப்படும். மாவை சல்லடை கொண்டு சலித்து கப்பியை மீண்டும் இடித்து மீண்டும் சலித்து என மிருதுவான மாவாகிவிடும். அப்படியே பனங்கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்துவிட்டால் துள்ளுமாவு தயாராகி விடும். இதையே கொஞ்சம் தண்ணீரும் நல்லெண்ணெயும் கலந்து பிசைந்துவிட்டால் மாவிளக்கு ஆகிவிடும். சிறு சிறு விளக்குகளைச் செய்து ஒரு தாம்பாளம் நிறைய வைத்துக் கொள்வார்கள். உரலில் மாவு இடிக்கும் பொழுது துள்ளித் துள்ளி வெளி வந்துவிடுவதாலோ அல்லது இதை சாப்பிட்டதும் ருசியால் மனம் துள்ளுவதாலோ இதைத் துள்ளுமாவு என அழைத்தார்கள் போலும்.பிறகு பானக்காரம் தயார் செய்வார்கள். பானக்காரம் என்பது புளிக் கரைசலில் கருப்பட்டி கலந்து செய்வது.

எப்பேர்ப்பட்ட வெப்பத்தையும் தனிக்க வல்லது. சூடுபிடிக்கு கை கண்ட மருந்து பானக்காரம். பானக்காரத்தை நன்கு பளபளவென்று விளக்கிய செம்புகளில் வைத்துக் கொள்வார்கள். இது போக உப்புப் போடாத கொழுக்கட்டைகள் வேறு தயார் செய்வார்கள். அம்மனுக்கு ஊற்றுவதற்காக மஞ்சள் பால் ஒரு செம்பில் வைத்துக் கொள்வர்கள்.

எல்லாம் தயார் செய்த பிறகு முதலில் கஞ்சிப் பானைகளை அலங்கரிப்பார்கள். பானைகளை மீண்டும் ஒரு முறை ஈரத்துணி கொண்டு துடைத்து திருநீற்றுப் பட்டை இடுவார்கள். கழுத்தில் வெற்றிலை மாலை அல்லது கதம்ப மாலை சுற்றுவார்கள். பானக்காரச் செம்பில் ஒரு கொத்து வேப்பிலைக் கீற்றுகளை இட்டு அலங்கரிப்பார்கள், எல்லாம் முடிந்த பிறகு பெண்கள் தங்களை அலங்கரிக்கத் தொடங்குவார்கள். கிராமத்தில் தினமும் பூ விற்பவர்கள் வருவதில்லை. வெள்ளிக்கிழமைகள் மற்றும் பண்டிகை நாட்களில் மட்டும் பந்தல்குடியிலிருந்து பெரிய பண்டாரத்தார் மகன் சுந்தரம் சைக்கிளில் ஒரு பெரிய கூடை நிறைய பூக்களைக் கொண்டு வந்து ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு அக்காவையும் பெயர் சொல்ல அழைத்து பூக்கொடுத்துப் போவார். எங்களூரில் பூக்கிற செண்டுப் பூவை மட்ட்மே சூடிய எங்கள் பெண்களின் கூந்தல்கள் இன்று மல்லிகை, பிச்சி, கனகாம்பரம் விதம் விதமாய் மணம் பரப்பும். ஆண்கள் எல்லாம் வெள்ளையும் சொள்ளையுமாக ஆகி விடுவார்கள். பல எண்ணையும் சீப்பும் பார்க்காத தலைகள் இன்று படியப் படிய வாரிவிடப்பட்டிருக்கும். சிலர் பொன்னு ஏகாலி இஸ்திரி போட்டுக் கொடுத்த சட்டைகளைப் போட்டுக் கொண்டு ராஜாக்கள் மாதிரி அலைவார்கள்.

நல்ல நேரம் பார்த்து கஞ்சிப் பானைகள் கிளம்பத் தொடங்கும். முதலில் பிரசிடென்ட் வீட்டுக் கஞ்சி கிளம்பும். துள்ளு மாவு, பானக்காரம் போன்றவற்றை அந்த வீட்டுப் பெண்கள் எடுத்துக் கொள்ள வேலைக்காரர்கள் பெரிய பெரிய அண்டாக்களில் நிரப்பிய கஞ்சிகளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். எல்லாத் தெரு கஞ்சிப்பானைகளும் ஊர்க் கிணற்றுக்கருகில் கூடி ஒரு பெரிய ஊர்வலமாக மேளதாளத்துடன், வெடிகள் வெடிக்க கண்மாய்க்குள் இறங்கும். வடக்கத்தி அம்மன் பீடத்துக்கருகில் இரண்டு பெரிய ஆல மரங்கள் பெரும் பெரும் விழுதுகளோடு அருமையாக நிழல் பரப்பி நிற்கின்றன.ஒவ்வொரு குடும்பமும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து சுத்தப் படுத்தி ஜமுக்காளம் விரித்து உட்கார்ந்து கொள்ளும்.

பலூன் விற்பவர்கள், பஞ்சு மிட்டாய்க்காரர்கள், ஜவ்வு மிட்டாய்க்காரர்கள், சிறு குடை ராட்டினம் என ஒரு சிறு திருவிழா வடக்கத்தி அம்மனைச் சுற்றிக் கூடி விடும். வாயில் துணி கட்டிய பூசாரி மணி அடித்து பூசை செய்து எல்லாக் கஞ்சிப் பானைகளுக்கும் சாம்பிரானி காட்டி சுற்றி வருவார். பூசை நடந்து கொண்டிருக்கும் போதே பலருக்குச் சாமி வந்து விடும். வடக்கத்தி அம்மனின் வாக்குப் பெற்ற வெயிலுகந்தம்மாள் மேல் வடக்கத்தி அம்மன் இறங்கி விடுவார். எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு அமமன் காலில் விழுவார்கள். ஆவேசமாக இற்ங்கிய அம்மன் சிலருக்கு மட்டும் ஏதாவது அருள் வாக்கு கொடுப்பார். பலருக்கும் பல வகையான சாமிகள் வந்து இறங்கி ஆடி ஒரு வகையாக பூசாரியிடம் இழுத்து வரப்பட்டு மலை ஏறிவிடும்.

பூசாரி பூசை முடித்து வாய்க்கட்டை அவிழ்த்த பிறகு, பெண்கள் குலவையிட மேல்துண்டை எடுத்து வீசுவார். எல்லாரும் கஞ்சி குடிங்க; எல்லாரும், எல்லாரும் குடிங்க என்பார். ஆத்தா வயிறு குளிரட்டும் என்பார். ஒவ்வொரு குடும்பமும் குலவையிட்டு கஞ்சியை ஊற்றிக் கொடுப்பார்கள். யார் வேண்டுமானாலும்

யாரிடமும் கஞ்சி குடித்துக் கொள்ளலாம். மாப்பிள்ளை வாங்க, தம்பி வாங்க, மருமகப் புள்ளே வாங்க, மதினி வாங்க, அண்ணே வாங்க என்று கூப்பிட்டுக் கூப்பிட்டு ஊற்றுவார்கள். மொத்த கிராமமே ஒரு குடும்பமாக வடக்கத்தி அம்மனைச் சுற்றி உட்கார்ந்து பல வகையான கஞ்சிகளைக் குடித்துக் கொண்டிருப்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.இப்படி ஒரு காட்சியை உருவாக்கிய அந்த வட்க்கத்தி அம்மா எவ்வளவு பெரிய தீர்க்க தரிசியாக, பேரிதயம் கொண்டவராக இருந்திருக்க வேண்டும்? அவர் தேவ சக்தியாக மாறி நிலைத்து விட்டார்.

நாங்கள் ஒரு இடத்தில் நில்லாமல் சுற்றிக் கொண்டு வருவோம். எங்களுக்கு துள்ளு மாவு மேல் தான் ரொம்ப இஷ்டம். அதிலும் திணை மாவு யாரிடம் இருக்கிறது என்று கண்டு பிடித்துவிடுவோம். திணை மாவும் தேனும் கலந்த தமிழர் உணவுக்கு இணையான இனிப்பு என்று எதையுமே சொல்ல முடியாது. அன்று அந்த ஆலமரத்தடியில் குடித்த கஞ்சிகளின் சுவை ஒரு போதும் ஊருக்குள் கிட்டவே கிட்டாது. அரிசிக் குருணை கலந்த கேப்பைக் கூழ், அளவான புளிப்போடும், அளவான உப்போடும் அதி அற்புதமான ருசியோடு எத்தனை தம்ளர்கள் வேண்டுமானாலும் குடித்துக் கொண்டே இருக்கலாம். கஞ்சிகள், கூழ்களைவிட அதற்கு விதம் விதமாக அம்மாக்களும் அத்தைகளும் மதினிகளும் அரைத்துக் கொண்டு வந்திருக்கும் விதம்விதமான துவையல்களை நினைத்தால் இப்பொழுது கூட எச்சி ஊறுகிறது. எள்ளுத் துவையல், கானத் துவையல், மல்லித் துவையல், தேங்காய்-பொரிகடலைத் துவையல், சுத்த தேங்காய் துவையல், சுள்ளென்று காரம் உச்சிக்கு ஏறுகிற வெறும் வத்தலில் அரைத்த ஏரோப்ளான் துவையல். இது போக விதம் எண்ணையில் வறுத்த விதம் விதமான வத்தல்கள். நீங்கள் பாட்டுக்கு கஞ்சிகளைக் குறாடித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். உங்களுக்கு பத்து வயிறுகள் தேவைப்படும்.

இதே மாதிரியான இன்னொரு கஞ்சி ஊற்றும் விழாவும் எங்கள் ஊரில் உண்டு. சோலையம்மாளுக்குக் கஞ்சி ஊற்றும் விழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கடைசித் திங்கட் கிழமைகளில் நடத்தப்படும். ஊருக்குத் தெற்கே சுடுகாட்டைத் தாண்டி கருசூரணி ஓடையும் புதூர் ரோடும் சந்திக்கிற இடத்தில் ஒரு பயமூட்டுகிற நிலக் கட்சியாகவே சோலையம்மாளின் கோவில் இருந்து வருகிறது. கோவிலுக்குள் சாதாரண நாட்களில் எவருமே செல்வதில்லை. ரயில் கள்ளைகளும், சோற்றுக் கத்தாழைகளும் வேலி முட் செடிகளுமே சூழ்ந்த இந்தக் கோவில் இருக்கிற பகுதி முழுவதும் பெரும் நாகப் பாம்புகள் அலைவதாக பலரும் பார்த்திருக்கிறார்கள். நாகப் பாம்புகள் என்றால் சாதாரண பாம்பகள் இல்லை. இறக்கை முளைத்த இரு நூறு வருட வயதுள்ள பாம்புகள் இறக்கைகளுடன் பறந்து வந்து கொத்தும் என்பார்கள். முள் படல் கதவைத் திறந்தால் கம்பந் தட்டையால் கூரை வேய்ந்த ஒரு சிறு மண் குடிசை தான் கோவில். உள்ளே தெற்கோரத்தில் ஒரு பெரிய கற் சிற்பத்தில் சோலையம்மாளின் 21 பிள்ளை முகங்களும் செதுக்கப் பட்டிருக்கும். சோலையம்மாளின் வரலாறு நம் நெஞ்சை உலுக்கிவிடும். சோலையம்மாளுக்கு 21 பிள்ளைகள் பிறந்து, பிறந்த வீட்டிலேயே இறந்துவிட்டன. 21 கர்ப்பம் தரித்து 21 பத்து மாதங்கள் சுமந்து பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் இறந்து விடுகிறது என்றால் அதை எந்தப் பெண் தான் தாங்க முடியும்? 21வது குழந்தை இறந்தவுடன் சோலையம்மாள் ஒரு முடிவெடுக்கிறார். 

தம்பதிகள் இருவரும் உயிரோடு கட்டை ஏறுவது என்ற கொடுமையான அவரது முடிவைக் கேட்டு ஊரே ஆடிப் போகிறது. யார் சொல்வதையும் கேட்காமல் கணவனும் மனைவியும் கட்டைகளை அடுக்கி வரட்டிகளைப் பரப்பி உயிர்ச்சிதையை தயார் செய்கிறார்கள். சோலையம்மாள் கூரைச் சேலை உடுத்தி எல்லா நகைகளையும் வளையல்களையும் அணிந்து கொண்டு மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டு சிதையேறத் தயாராகிறாள். ஊர் மக்கள் ஒரு முடிவெடுத்து சிதைக்கு வைக்க இருந்த தீயைப் பிடுங்கிக் கொண்டு வந்து விடுகிறார்கள். யாரும் அவர்களுக்கு நெருப்பு தரமுடியாதவாறு ஊரே கண்கானித்துக் கொண்டு வருகிறது. ஆனால் 21ஆம் நாள் நள்ளிரவில் சோலையம்மாளின் கணவர் மாறுவேடத்தில் பக்கத்திலிருக்கும் பட்டித்தேவன்பட்டிக்குப் போய் ஆட்டுக் கிடை போட்டிருக்கிறோம். குளிர் தாங்க முடியவில்லை. கனப்பு மூட்ட வேண்டும் என்று பொய் சொல்லி நெருப்பு வாங்கி வந்து சிதைக்கு நெருப்பு வைத்துக் கொண்டு எரிந்து போனார்கள். விடிகாலையில் ஓடி வந்து பார்த்த மக்கள் சாமபலையும், எரிந்து உருகிய சோலையம்மாளின் நகைகளையும் எரியாத ஒரு சிறு துண்டு கூரைச் சேலையும் மட்டுமே கண்டார்கள். அவைகளை ஒரு சிறிய நார்ப்பெட்டியில் கும்பிட ஆரம்பித்தார்கள். சோலையம்மாளின் நெருங்கிய தோழி ஒருவர் கனவில் வந்து கூறியபடி ஒவ்வொரு வருடமும் கஞ்சி ஊற்ற ஆரம்பித்தார்களாம்.

இந்த இரண்டு நிகழ்வுகளுமே ஒரே கால கட்டத்தில் நடந்து விட்டிருக்கும் என்று எண்ணுகிறேன். அதனால் தான் இந்த இரு கஞ்சி ஊற்று பண்டிகைகளும் ஒன்று போல் அமைந்து விட்டன. சோலையம்மாள் கோவில் அருகில் தான் சோலையம்மாளின் இனத்தைச் சேர்ந்த மக்களின் இற்ந்தவர்களின் நினைவுக் கற்கள் ஊன்றப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இனமும் அதன் சகோதர இனத்தவர்களைத் தவிர பிற இனத்தவர்கள் இந்த சோலையம்மாள் கஞ்சியில் கலந்து கொள்வதில்லை. எனினும் சோலையம்மாளின் நெஞ்சை அறுக்கும் சோக வழ்வும் மரணமும் ஊர் மக்களின் ஞாபகங்களில் ஒரு புண்ணாகவே இருந்து வருகிறது. 21 குழ்ந்தைகளும் சோலையம்மாளும் அழும் சப்தம் இன்றும் நள்ளிரவுகளில் கேட்பதாக ஊர் மக்கள் குறிப்பாக, ஆட்டுக் கிடை அமர்த்துபவர்கள் கூறுகிறார்கள்.




 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</