வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


வலியுணர்தல்

பூபதி  

வழக்கத்திற்கு மாறாக அன்று என் நண்பர் தாமதமாக அலுவலகம் வந்தார். கலைந்த தலை முடி, எவ்வளவு அலைச்சல் தெரியுமா! என்பதை உணர்த்தும் தாடி, தூங்கவிடுடா என கோபப்படும் கண்கள், நிதானமாக இல்லை என்பதை வெளிப்படுத்தும் பொருத்தமற்ற உடை என பார்ப்பதற்கு மிக வித்தியாசமாக் காட்சியளித்தார். எந்த சலனமும் இல்லாமல் கீழே குனிந்தபடி தன் இருக்கையில் அமர்ந்திருந்தார். தொலைபேசியில் வழியாக வந்த வாடிக்கையாளர்களிடம், முடியாது – கிடையாது – இப்ப என்ன அதுக்கு – என்பது போன்ற முட்டுக்கட்டை போடும் முதிர்ச்சியற்ற வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டிருந்தார். அதை புரிந்துகொண்டு நான் பேசாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் பேசிவிட்டேன். நேற்று நல்லா ஊர் சுற்றிவிட்டீர்கள் போலிருக்கிறதே என்று கேட்டு முடிக்கவில்லை, உங்கிட்ட நான் அப்படி சொன்னேனா? இப்படித்தான் எல்லார்கிட்டயும் சொல்லீட்டிருக்கியா? என்று எரிந்து விழுந்தார். முகத்தில் அடித்தது போன்ற வார்த்தைகள். ஆரம்பித்த பேச்சை எப்படி முடிப்பது! அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் ஹி ஹி என்று கஷ்டப்பட்டு சிரித்து சூழ்நிலையை சமாளித்துவிட்டு, இதெல்லாம் உனக்கு தேவையா! என்று என்னை நானே கேட்டுக்கொண்டு, பேசாமல் என் வேலையை பார்க்க ஆரம்பித்தேன். காலையில் வந்து அமர்ந்ததும் திட்டு வாங்கிவிட்டதால் தூக்க இயலாத பாரத்தை என்மேல் சுமத்தியது போன்ற இறுக்கமான ஒரு உணர்வு மனதினுள் ஏற்பட்டுவிட்டது.

என்னதான் நான் வேலையில் கவணம் செலுத்தினாலும், மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒருவரிடம் திட்டு வாங்கிய பிறகும் இயல்பாக வேலையில் ஈடுபட மிகவும் திடமான அல்லது அலட்சியம் நிறைந்த மனம் பெற்றிருக்க வேண்டும். இருவிதமான சிந்தனைகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒன்று “பெரிய இவனா இவன்” என்று அவரை வசைபாடும் சிந்தனை. மற்றொன்று ”என்ன பிரச்சனையாக இருக்கும்!” வழக்கமாக இப்படி நடந்துகொள்ள மாட்டாரே என்பது போன்ற வருத்தப்படும் சிந்தனை. இதில் வருத்தப்படும் சிந்தனையின் ஆதிக்கம் அதிகமிருந்ததால் என்ன பிரச்சனை என்று கேட்கலாமா என்று யோசித்தேன். கேட்டு மீண்டும் அவர் ஆத்திரமடைந்துவிட்டால் என்ன செய்வது, வேண்டாம் அப்படியே விட்டு விடுவோம்... இப்படி ஒரு குழப்பமான மனதுடன் வழக்கமான வேலைகளை அரைகுறையாக செய்துகொண்டிருந்தேன். நான் குழப்பமில்லாமல் இருந்தாலும் கூட என் வேலைகளை அப்படித்தான் செய்வது வழக்கம்.

அவர் வெளியூர்காரர், தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வருவார். இப்போதுகூட மூன்று நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றுவிட்டுத்தான் வந்திருக்கிறார். எப்போதும் கலகலப்பாகத்தான் இருப்பார். அலுவலத்திற்குள்ளே நுழைந்ததும், ”என்ன சார் ஒன்னும் பிரச்சனையில்லையே!” என்ற கேள்வியோடுதான் இருக்கையில் அமர்வார். நல்ல தோற்றம், சவரம் செய்து பராமரிக்கப்பட்ட முகம், நேர்த்தியான உடை என்று பளிச்சென்று தோன்றுவார். இன்று என்ன நடந்ததோ தெரியவில்லை. தொடர்ந்து நானும் அவரிடம் பேசாமல் என்னுடைய வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன். யாரிடமும் பேசாமல் கணினியை முறைத்தபடி அமர்ந்திருந்த அவர் மதிய உணவிற்கு பிறகு மெல்ல என்னிடம் திரும்பி தான் சாதாரணமான மன நிலையில் இருப்பது போல வெளிக்காட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தார். ஒருவேலை என்மீது கோபப்பட்டது அவரை உறுத்தியது காரணமா என்று தெரியவில்லை. நேரம் செல்ல செல்ல சகஜமான மன நிலையை அடைந்தவுடன் தான் ஏன் சாதாரணமாக மனநிலையில் இல்லை என்பதை அவரே விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார். அது ஒன்னுமில்லை சார், ஊரில் இருந்து வரும்போது என்னுடைய அம்மாவை கண்டபடி திட்டிவிட்டேன். மனசே சரியில்லை, நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்... எங்கம்மா என்ன செய்தாங்க தெரியுமா... அப்போ அவசரப்பட்டு அந்த வார்த்தையை சொல்லிவிட்டேன். தன்னுடைய போக்கில் அவர் பாட்டுக்கு சோகமாக புலம்பிக்கொண்டே போக. நான் மனதினுள் மெல்ல சிரித்துக்கொண்டேன். சிரித்தாயா! அடப்பாவி நீ எல்லாம் ஒரு மனுசனா என்று நினைக்காதீர்கள். சிரித்தற்கு காரணம் இருக்கிறது. நானும் இதே விசயத்திற்காக பல முறை இப்படி சோகத்தில் இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் உலகத்தில் நான் மட்டும்தான் குற்றவாளியாகவும் மற்றவர்களெல்லாம் மேன்மையானவர்களாகவும் எண்ணி வேதனைப்பட்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையல்ல என்னைப்போல பல குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்று தெரியவரும்போது மனதினுள் ஒருவகையான குரூர சந்தோசம்.

காலையில் விடிந்த பிறகும், சூரியனின் பணியில் சந்தேகம் கொண்டு இன்னும் விடிந்திருக்க வாய்ப்பில்லை என்ற நினைப்பில் தூங்கிக் கொண்டே இருப்பேன். என் அம்மாவின் அர்ச்சனைகள் ஆரம்பமாகும் வேலை அது. டேய் விடிஞ்சு எவ்வளவு நேரம் ஆச்சு தெரியுமா – அவன் எந்திருச்சானா இல்லையா – வேலைக்கு போறமாதிரி யோசனை இருக்கா இல்லையா – எந்திரிச்சி இந்த டீயை குடிடா – டீ ஆரியே போச்சு! பால் விற்கிற விலையில்... - ஊரில் இருக்க பசங்க எல்லாம் இப்படியா இருக்கிறார்கள்! எவ்வளவு வசை மொழிகள் கேட்டாலும் வளைந்து கொடுக்காத நான் கடைசியாக சொன்ன ”ஊரில் உள்ள பசங்க” என்ற வார்த்தையை கேட்டதும் பொங்கி எழுந்துவிடுவேன். ஒப்பீடுகள் சுலபமாக என் கோபத்தை தூண்டிவிடும். இப்ப எதுக்கு கத்தற, நேரம் ஆச்சுன்னு இப்ப உங்கிட்ட நான் சொன்னேனா?, டீ குடுனு கேட்டேனா? என்று கத்திக்கொண்டே நேரத்தை கவனித்தேன். எப்படிப்பட்ட கொம்பனுக்கும் நான் வளைந்துக்கொடுக்காமல் என் பணியை செய்துகொண்டே இருப்பேன் என்று காட்டியது கடிகாரம். நேரம் 7.45, அடடா இந்நேரம் பணிக்கு செல்வதற்காக தயாராகியிருக்க வேண்டுமே! பரபரப்பாக இயங்கி என்னுடைய வேலைகளை முடித்துவிட்டு சாப்பிட தயாராகி உணவருந்த அமர்ந்தால், இன்னும் உணவு தயாராகவில்லை என்ற பதில் வரும். இன்னும் தயார் ஆகவில்லையா! என்று ஆரம்பிக்கும் வீணான விவாதம் இறுதியில் சில விளைவுகளை ஏற்படுத்தும் வார்த்தைகளில் முடியும். கோபத்தில் சாப்பிடாமல் பணிக்கு வந்துவிட்டது, கோபத்தில் திட்டிவிட்டது, தாமதமாக பணிக்கு வந்ததால் அங்கு நிலவும் பரபரப்பு என அனைத்தும் ஒன்றாக சேர்ந்து என் மனநிலையை துவைத்து காயப்போட்டுவிடும். சினிமாவில் பிரச்சனையின் இறுதியில் வரும் காவலர்களைப்போல, கோபத்தில் முறுக்கேறிய நரம்புகள் மெல்ல மெல்ல தளர்ந்த பின்தான் எனக்கு புத்தி வரும். ச்சே நான் அப்படி பேசியிருக்க கூடாது. தவறு நம்முடையதுதான் நான் நேரத்தில் எழுந்திருந்திருக்க வேண்டும். அந்த வார்த்தையை நான் பயன்படுத்தி இருக்க கூடாது. என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள். குற்ற உணர்வு அருகில் உட்கார்ந்து அன்று முழுவதும் உள்ளத்தை குத்திக்கொண்டே இருக்கும். அந்த நேரம் பார்த்துதான் அருகில் உள்ளவர்கள் எல்லோரும் தன் அம்மா புராணம் பாட ஆரம்பிப்பார்கள். சார் நேற்று எங்கம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுத்தேன். சார் எங்கம்மாவுக்கு வளையல் வாங்கிக்கொடுத்தேன் என்று வரிசையாக வந்து மற்றவர்கள் சொல்ல சொல்ல மற்றவர்கள் எல்லோரும் எப்படி நல்லவிதமாக நடந்துகொள்கிறார்கள் நான் மட்டும் ஏன் இப்படி! குற்ற உணர்வின் பாரம் அதிகரித்துக்கொண்டே போகும். இப்படிப்பட்ட என் முன்னால் ஒருவர் வந்து எங்கம்மாவை திட்டிவிட்டேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்! ஆகா இதோ என்னைப்போல் ஒருவன், இதோ என்னைப்போன்ற ஒரு குற்றவாளி, உனக்கும் அந்த பிரச்சனை இருக்கா என்று சிந்திக்கும்போதே அவர் எனக்கு மிகவும் வேண்டியவர்போல் ஆகிவிட்டது போன்ற ஒரு உணர்வு உண்டாகிறது.

சின்ன வயதில் சினிமா பார்க்கும் போது, ஆ அம்மா! என்று எம்.ஜி.யார் பொங்கி எழுவாரே அப்போது ஆரம்பித்த அம்மா பற்றிய பாடம் இன்று வரை ஏதாவது ஒருவகையில் நம்மை நோக்கி வந்துகொண்டுதான் இருக்கிறது. எனக்குத் தெரிந்து அம்மா பற்றிய புகழ் மாலையை மட்டுமே அனைவரும் பாடியிருக்கிறார்களே தவிர, எதார்த்தத்தில் அம்மாவும் தவறு செய்வாள், அப்படி தவறு செய்தாலும் அதை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டு சூழ்நிலையை எப்படி சமாளிக்கலாம் என்று யாரும் கற்றுத்தரவில்லை. அதேபோல, அம்மா தவறு செய்யாவிட்டாலும், எல்லா சூழ்நிலைகளிலும் அம்மாவுக்கு மரியாதை கொடுத்துக்கொண்டு நிதானமாகவே நம்மால் செயல்பட்டுக்கொண்டிருக்க முடியாது. நாம் மிக சாதாரணமான மனிதர்கள் சூழ்நிலைக்கேற்ப நமக்கு தோண்றும் கோப உணர்வுகளை கட்டுப்பாடில்லாமல் வெளிப்படுத்தி தவறு செய்துவிடுகிறோம் அப்படி நாம் செய்யும் தவறுகளை தடுப்பது எப்படி என்ற வழிமுறைகளும் நமக்கு தெரிவதில்லை. அந்த வழிமுறைகளை யாராவது தெரிவித்திருந்தாலும் அவை நடைமுறை வாழ்வில் சாத்தியப்படுவதில்லை. எனவே தவறு செய்தது அம்மாவாக இருக்கலாம் அல்லது நாமாக இருக்கலாம் ஆனால் பிரச்சனை என்று வந்துவிட்டால் அங்கு வார்த்தைகளை வடிகட்ட முடிவதில்லை. என் அறிவிற்கு எட்டியவரை நீதி நூலில் மட்டுமே இந்த எதார்த்தம் தென்படுகிறது.

“ஈன்றவர் நம்மால் உற்ற எண்ணரும் இடர்கட் கான்ற
மூன்றுல கமுமொப் பாமோ மூப்பினால் இளைப்பால் அன்னார்
கான்றவன் சொற்கள் கன்னல் கான்றவன் பாகெ னக்கொண்டு
ஊன்றுகோ லென்னத் தாங்கி ஊழியஞ் செய்யாய் நெஞ்சே.”

பெற்றவர்கள் பிள்ளைகள் பொருட்டு அளவிலாத் துன்பம் அடைந்தனர். அத்துன்பத்திற்கு ஈடாக மூன்று உலகமும் கொடுப்பினும் போதா. அவர்கள் தங்கள் மூப்பினாலும் சோர்வினாலும் கடுஞ் சொற்கள் சொல்ல நேர்ந்தால், அச்சொற்களை வெல்லப்பாகென்று கொண்டு அவர்களைப் போற்றிவரல் மக்கட்குக் கடன்.

சில சூழ்நிலை காரணமாக பெற்றவர்களிடமிருந்து கடுஞ்சொற்கள் வரும். ஆனால் அதை பொருத்துக்கொண்டு அவர்களை போற்றிவாருங்கள் என சொல்கிறது நீதி நூல். நீதி நூல் கூறிய பெற்றவர்களின் பெருமையை நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் அவர்களின் கடுஞ்சொற்களை பொருத்துக்கொள்ளுங்கள் என்கிறதே அங்குதான் பிரச்சனை. அவர்கள்மீது நமக்கு அன்பிருக்கிறது ஆனால் கடுஞ்சொற்களை தாங்கிக்கொள்ளுமளவிற்கு நம் மனதை கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால்தான் ச்சே அவர்களை போய் திட்டிவிட்டோமே என்று சிந்திக்க ஆரம்பிக்கிறோம். இந்த சூழ்நிலையில்தான் மனதில் வலியை உணர ஆம்பிக்கிறோம். லேசாக தலைவலிப்பதுபோல் இருக்கும். கண்களை வெருமனே திறந்திருப்போம் எதையும் பார்க்காமல் அமர்ந்திருப்போம். மனவுளைச்சலில் உடலின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யாததால் தொண்டை வறண்டு, நெஞ்சு எரிவது போல் இருக்கும். மனதினுள் விளக்க முடியாத ஒரு பாரம் அழுத்திக்கொண்டே இருக்கும். எதிலும் ஆர்வம் செல்லாது. அநாவசியமான கோபம் அடிக்கடி தலைதூக்கும். நம்மை நாமே நொந்துகொள்வோம், நீ எல்லாம் ஒரு மனிதனா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.

இந்த வலியை எல்லோரும் உணர்ந்துவிட முடியாது. அதற்கென்று ஒரு தகுதி இருக்கிறது. மனதினுள் அம்மாமீது ஆழமான அன்பிருக்க வேண்டும் ஆனால் அதை வெளிக்காட்டத் தெரியாத அல்லது வெளிக்காட்ட வெக்கப்படும் சமூகம் சார்ந்த மிருகமாக நீங்கள் இருக்க வேண்டும் அப்போது மட்டுமே அந்த வலியை நீங்கள் உணர முடியும். அப்படி அன்பில்லாமல் வெருமனே திட்டுபவர்களுக்கு இந்த வலி உண்டாகாது. அன்பிருப்பவர்கள் மட்டுமே அந்த வலியை மீண்டும் மீண்டும் உணர்வார்கள்.

இதோ என் நண்பர் இன்றைக்கு ஏனோ சற்று முன்பாகவே அலுவலகம் வந்துவிட்டார். பார்ப்பதற்கு பளிச்சென்று கலகலப்பான புன்னகையோடு வருகிறார். இந்த மாதிரி தோற்றத்தில் அவர் வரும்போது தயக்கமில்லாமல் பேசலாம். என்ன சார் ஒன்னும் பிரச்சனையில்லையே? பிரச்சனை எதுவுமில்லை. என்ன இன்னைக்கு நேரத்திலேயே வந்திட்டீங்க போலிருக்கு? ஆமா இணையத்தளத்தின் மூலமாக பயணச்சீட்டை முன்பதிவு செய்யனும் அடுத்தவாரம் விடுமுறை வருதில்ல ஊருக்கு போகனும்…

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.