வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


மூப்பிலக்கணம்

பூபதி  

தேடிச் சோறு நிதந்தின்று
பலசின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம்வாடி துன்பமிக உழன்று
பிறர்வாட பலசெயல்கள் செய்து
நரைகூடி கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பலவேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தயோ !!- மகாகவி பாரதி

மகாகவி தான் ஒரு சராசரி மனிதர்கள் போல் இல்லாமல் உயர்வான நிலையை அடைய விரும்பினார். அதனால் நரைகூடி கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும் மனிதர்களை வேடிக்கை மனிதர் என அழைத்தார். நம்மால் பாரதியார் விரும்பியதைப்போல உயர்வான நிலையை அடைய முடியுமா என யோசிப்பதற்கு முன்பாக, அவர் விரும்பாத வேடிக்கை மனிதர் என்ற நிலையையாவது நாம் அடைகிறோமா! என யோசிப்பது நல்லது ஏனெனில் இப்போது உள்ள காலகட்டத்தில் எங்கு தேடினாலும் அந்த கிழப்பருவம் எய்திய வேடிக்கை மனிதர்களை நம்மால் காணமுடிவதில்லை. அழிந்துவரும் அரிய விலங்கினங்கள் போல அங்கொண்றும் இங்கொண்றுமாக ஒரு சிலர் மட்டும் இன்னும் இருக்கிறார்கள்.

முழுமையான முதுமை:

முதுமையடைந்தவர்களை நீங்கள் பார்திருக்கிறீர்களா என்று யாராவது உங்களிடம் கேட்டால், அதற்கென்ன பார்த்திருக்கிறோமே என்று பதில் சொல்வீர்கள். அப்படி சொல்வதற்கு முன்பாக முதுமை என்றால் என்ன என்பதை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். முதியோர்களை ஆடிய பம்பரங்கள் என வர்ணிக்கும் பாரதிதாசன் தனது குடும்ப விளக்கு புத்தகத்தில் முதியோர் காதல் என்ற தலைப்பில் முதுமையின் பண்புகள் எப்படியிருக்கும் என்பதை தன் கவிதையின் மூலம் அழகாக விளக்கியிருக்கிறார்.

வன்மையோ தோளில் இல்லை
துணைவிழி ஒளியும் குன்றக்
கண்ணாடித் துணையை வேண்டும்
பணையுடல், சருகு! வாயிற்
பல்லில்லை! மயிர்வெண் பட்டே!
உணவெல்லாம் பாலின் கஞ்சி!
உலவுதல் சிறிதே ஆகும்.

கையினிலே வலிவில்லை காலில்வலி வில்லை
கண்ணில் ஒளி இல்லைநாச் சுஐயறிவ தில்லை
மெய்யூறும் இல்லைஒலி காதறிய வில்லை
விலா எழும்பின் மேற்போர்த்த தோழுமில்லை நீவீர்
செய்வதொரு செயலில்லை.

பாரதிதாசன் வர்ணித்தது போல முழுமையான முதுமையை அடைய, நீங்கள் நெஞ்சு நிமிர்த்தி கர்வமாக வாழ உதவிய உடல் தன் வலிமையை இழந்து, நரம்பு தளர்ந்து, தோல் சுருங்கி கூன் விழுந்து, நடக்க கோலின் துணை தேட வேண்டும். உங்கள் உடலிலுள்ள முடிகளெல்லாம் முழுமையாக நரைத்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் பற்களையும், சொற்களையும் இழக்க வேண்டும். பார்வையின் தன்மையை இழந்து நன்கு அறிந்தவர்களையே பார்க்க இயலாமல் பதற வேண்டும். உங்களால் இயல்பாக சுவைக்கவும், சுவாசிக்கவும் இயலாமலிருக்க வேண்டும். முதுமையின் முதிர்சியை வெளிப்படுத்திய அறிவின் ஞாபகங்கள் தடம் புரண்டிருக்க வேண்டும். உங்களின் செவி செயலற்று இருக்க வேண்டும். தான் செயல்பட்டுக் கொண்டிருந்த காலங்களில் தனக்கு மதிப்பளித்து வந்தோரின் உண்மை முகமறிந்து மனமுடைந்து போக வேண்டும். ஒவ்வொரு அசைவிற்கும் மற்றவரின் உதவியை எதிர்பார்த்து எதிர்பார்த்து முற்றிலுமாக முடங்கிப்போக வேண்டும். இது போன்ற நிலையை அடைந்தால் தான் நீங்கள் முழுமையான முதுமையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பலரும் வெறுக்கும் இந்த முதுமை நிலை உண்மையில் மிகவும் அழகானது.

முதுமையின் அழகு

முதுமையை நாம் ஆழ்ந்து நோக்கினோமானால் ஒரு விசயம் நம்மை ஆச்சரியப்படுத்தும். பச்சிளம் குழந்தைக்கும், பல் இழந்த கிழவனுக்கும் பெரியளவில் வித்தியாசம் இருக்காது. உணவருந்த வைப்பதில், உடை மாற்றிவிடுவதில், குளிப்பாட்டி விடுவதில், எப்போதும் மற்றவரின் உதவியை சார்ந்திர்ப்பதில் என குழந்தையின் வாழ்க்கை முறை அப்படியே கிழவனின் வாழ்க்கையிலும் பிரதிபழிக்கிறது. குழந்தைக்கு விருப்பத்துடன் செய்கிறோம் கிழவனுக்கு வெறுப்புடன் செய்கிறோம் அவ்வளவுதான் வித்தியாசம். வெற்றிலையை மெல்ல முடியாமல் அதை சிறு குழவியில் இடித்து வாயில் போட்டுக்கொண்டு, வெள்ளைத் தலைமுடியுடன் வெண்மையான உடையணிந்து கையில் கோல் அல்லது குடையுடன் அந்த காலத்தில் நாங்களெல்லாம் என்ற தோரனையில் அனத்திக்கொண்டு மெல்ல மெல்ல நடந்துவரும் அந்த கிழவனின் அழகு தனிச்சிறப்பு வாய்ந்தது. குழந்தையைப்போன்று கிழவனுக்கும் தனித்தன்மையான அழகு உண்டு ஆனால் குழந்தையின் அழகு அறியாமையால் ஏற்படுவது, கிழவனின் அழகு எல்லாம் அறிந்தமையால் ஏற்படுவது. அறியாமையால் உண்டாகும் அழகு நிரந்தரமானது அல்ல. வாழ்க்கையில் உள்ள எல்லாவிதமான விசயங்களையும் வாழ்ந்து பார்த்த பின்பு ஏற்படும் அனுபவம் மற்றும் அறிவினால் உண்டாகும் அழகுதான் நிலையானது.

குழந்தைகள் வாழ்க்கையில் உள்ள விசயஞானத்தில் ஈடுபடாததால் அவர்கள் கபடமில்லாத அழகை பெற்றிறுப்பதில் ஆச்சரியமில்லை. குழந்தைகள் வளர்ந்து வாழ்க்கையில் பயணிக்க ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய கபடமற்ற அழகை இழந்துவிடுகிறார்கள். ஆனால் முதியோர்கள் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது அறியாமையால் பெற்றிருந்த அழகை இழந்து, வாழ்க்கை தங்களை அழைத்துச்சென்ற அனைத்து பாதையிலும் பயணித்து, வாழ்க்கையில் உள்ள அனைத்து அம்சங்களையும் அறிந்து தெளிந்தவர்கள். உதாரணமாக நிர்வாணத்தை பற்றி சொல்லலாம். குழந்தைகளுக்கு நிர்வாணத்தின் தன்மை தெரியாது அதனால் அவர்களுக்கு நிர்வாணம் என்பது உறுத்தலாக இல்லாததில் ஆச்சரியமில்லை, ஆனால் முதியவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிர்வாணத்தின் அனைத்து நிலைகளையும் உணர்ந்து கடந்து வந்துவிட்டதால் தள்ளாத வயதில் ஆடையிழந்து நிற்கும்போது நிர்வாணம் அவர்களுக்கு உறுத்தலாக இருக்காது, இப்படிப்பட்ட தெளிவுதான் உயர்வானது. முதியோர்களை எல்லா விசயங்களையும் அறிந்து தெளிந்த குழந்தை என்று சொல்லலாம். பல்லில்லாத குழந்தையின் சிரிப்பைவீட பல் இழந்த கிழவனின் பொக்கைவாய் சிரிப்பு அழகானது என்பதில் சந்தேகமில்லை.

முதுமையின் மதிப்பு:

உங்களுக்கு நாற்பது வயதாகிவிட்டதா! பார்த்தால் அப்படி தெரியவில்லையே என்று நம்மைப்பார்த்து யாராவது சொல்லிவிட்டால் நமக்கு ஏற்படும் சந்தோஷத்திற்கும், பெருமைக்கும் அளவிருக்காது. வயது அதிகரித்தாலும் தளராத உடலையும், கருமையான முடியையும் பெற்றிருக்கவே விரும்புகிறோம். உண்மையில் இப்படி இளமையாக இருப்பதில் எந்த பயனும் இல்லை. எப்போதும் இளமையான தோற்றத்திலேயே இருப்பது சினிமா துறை மற்றும் விளம்பரத் துறையில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் உபயோகமாக இருக்கும். ஆனால் சராசரியான வாழ்க்கையில் இருப்பவர்கள் அந்தந்த வயதிற்குரிய தோற்றத்தில் இருந்தால் தான் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்கள் இது போன்ற பிரச்சனையை அடிக்கடி எதிர்கொள்வார்கள். ஒரு உயர் பதிவிக்கு நாற்பது வயதிலுள்ள அனுபவமிக்க ஒருவரின் தேவையிருக்கும்போது, நாற்பது வயதான ஆனால் பார்ப்பதற்கு வாலிபன் போன்ற தோற்றமுள்ள ஒருவர் நேர்முக தேர்விற்கு சென்றால் நிச்சமாக அவருக்கு வேலை கிடைக்காது ஏனெனில் பார்ப்பதற்கு இளைஞர் போல் இருக்கும் இவர் சொல்லி மற்றவர்கள் கேட்டு நடக்க மாட்டார்கள். நாற்பது வயது என்றால் அதற்குரிய தோற்றத்தில் இருந்தால்தான் அவரை பார்த்ததும் அவர் ஒரு உயர் அதிகாரி என்ற நினைப்பு மற்றவர்களுக்கு வரும், அவரின் கட்டளைக்கு கீழ்படிந்து மற்றவர்கள் நடப்பார்கள்.

கொஞ்ச காலத்திற்கு முன் இருந்த முதியவர்கள் தங்களின் உடலில் ஏற்பட்டுள்ள முதுமையின் அடையாளங்களை மறைக்க முயலவில்லை, தங்களுடைய வெண்மையான தாடியை சற்று கர்வத்துடன் தடவிக்கொடுத்தவர்கள் உண்டு. அதை அவர்களின் அனுபவத்தின் பிரதிபளிப்பாகவே கருதினார்கள். வாழ்வியலில் மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக வாழ்ந்தவர்கள் என்ற அடையாளம் எப்போதும் முதியோர்களுக்கு உண்டு, அனுபவ அறிவுமிக்க அவர்களது வாழ்க்கை அவர்களுக்கு அப்படிப்பட்ட பெருமையை பெற்றுத்தந்தது. மணக்கணக்கு போடுவதில், மருத்துவ குறிப்பு சொல்வதில், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என அனைத்து துறைகளிலும் ஒரு முதிர்ச்சியான அறிவு அவர்களிடமிருந்தது. முதியோர்கள் தங்களது நீண்ட வாழ்க்கையில் பலவிதமான செயல்களையும் அதன் விளைவுகளையும் உணர்ந்தவர்கள் என்பதால் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண வீட்டில் உள்ள முதியோர்களிடம் விவாதித்து அவர்களுடைய அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் பழக்கம் கொஞ்ச காலத்திற்கு முன்புவரை இருந்தது. போரின் தன்மையையும், அதன் விளைவுகளையும் உணர்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டிய பீஷ்மர் போல வாழ்க்கையையும் அதன் விபரீதங்களையும் அனுபவித்த முதியோர்கள் தங்களுடைய சந்ததியினருக்கு தங்களுடைய அனுபவங்களை பாடமாக மாற்றி வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது வீட்டில் முதியோர்களே இல்லாத அளவுக்கு சூழ்நிலை மாறிவிட்டது. மதிப்பு மரியாதையை பெறுவதில் உச்ச நிலையை அடைந்து பின்னர் முதுமையின் இயளாமை காரணமாக மற்றவர்களுக்கு இடையூராக வாழ்ந்து பெற்று இருந்த மரியாதை இழந்து இருப்பதற்கு இறப்பதே மேல் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவது தான் முதுமையின் சிறப்பு.

பெருமையை வெறுக்கும் இளமை

என்னதான் பெருமை பெற்று விளங்கினாலும் முதுமை என்பது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயமாகத்தான் இருக்கிறது. முதுமையின் அடையாளங்கள் உடலில் தோண்றும் போது மக்கள் அச்சம் கொள்கிறார்கள். இன்றைய வாழ்வியல் சிந்தனையில் பெரும்பாலான சிந்தனைகள் முதுமையை தடுக்கும் முயற்சி சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. உடலில் தோண்றும் முதுமையின் அடையாளங்கள் இயற்கையானவை என்ற எண்ணம் மாறி அதை ஒரு நோயாக கருதும் காலம் வந்து விட்டது.

நாங்கள் முதுமையை ஏற்றுக்கொள்கிறோம், எங்களுக்கு இளமையான தோற்றம் அவசியமில்லை வயதிற்கு ஏற்ற தோற்றத்தில் எங்களுக்கு உடன்பாடுதான என மக்கள் முடிவெடுத்துவிட்டால். மிகப்பெரிய அளவில் தொழில்துறை பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் தொழில் துறையில் இளமையை பாதுகாக்கும் சாதணங்கள் தயாரிக்கும் தொழில்கள் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் முதுமையை இன்னும் அடையவில்லை என நிருபிக்க நாம் அதிகப்படியாக செலவு செய்துகொண்டிருக்கிறோம். இது போன்ற விசயங்களை நம்பித்தான் பெரும்பாலான விளம்பர நிறுவணங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

முதுமை என்பது மக்களிடையே பயத்தையும், தாழ்வுமனப்பாண்மையையும் ஏற்படுத்திவிடுகிறது. முதுமையை நோக்கிச் செல்கிறோம் என தெரிந்தாலே வாழ்வின் முடிவை நோக்கிச் செல்கிறோம் என்ற அச்சம் ஏற்பட்டு விடுகிறது. இளவயதிலேயே தலையில் முடியில்லாமல் போன ஒருவர் தன் தோற்றத்தில் முதுமையின் அடையாளங்கள் தெரிவது கண்டு அல்லது தனக்கு இளமையான தோற்றம் இல்லையே என வருந்தி தாழ்வு மனப்பாண்மைக்கு உள்ளாகிறார். இவர்கள் மற்றவர்களிடம் பேசும்போது அவர்களின் தலையையே பார்த்துக்கொண்டு பேசுவார். மற்றவர்களிடம் பேசும் போது அவர்களின் தலையில் சில வெள்ளை முடிகளை நாம் பார்த்துவிட்டால் உங்களுக்கு வயதாகிவிட்டது என கேளி பேச ஆரம்பித்துவிடுகிறோம். இளவயதில் உள்ளவர்கள்தான் முதுமையின் அடையாளங்களை கண்டு அஞ்சி இளமையோடு இருக்க முயற்சி செய்கிறார்கள் என்றால் சில வயதானவர்கள் கூட இந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களை பார்த்தாலே வயதாகிவிட்டது என வெளிப்படையாக தெரியும் ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாமல் தலைக்கு சாயம் பூசி இன்னும் இளமையோடு இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள். சாதாரண மக்களில் இருந்து சினிமா நடிகர்கள்வரை அனைவருமே தங்களுடைய முதுமையை மறைத்து இளமையாக இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ளவே விரும்புகிறார்கள்.

அழிந்துபோன முதுமை:

இளமையை மட்டுமே எல்லோரும் விரும்புவதாலோ என்னவோ அந்த முழுமையான முதுமையை இப்போது எங்கேயும் காணமுடிவதில்லை. அறுபது வயதை தாண்டி லேசாக முடி நரைக்க ஆரம்பித்தால் முதுமை நிலையை அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தமாகிவிட்டது. அப்படிப்பட்ட அறைகுறையாக முதுமை நிலையை அடைந்தவர்களும் இப்போது தலை முடிக்கு சாயம்பூசிக்கொண்டும், போலியான தலைமுடியை பயண்படுத்திக் கொண்டும் திரிவதால் கிழவர்களை எங்கேயும் காணமுடிவதில்லை. இளமைப் பருவத்தின் இறுதிவரை வாழ்கிறார்கள் முதுமைப் பருவம் ஆரம்பித்ததும் இறந்துபோகிறார்கள். பேரன் பிறப்பது போன்ற உறவு ரீதியில் தான் கிழவனாகிறார்களே தவிர உடல்ரீதியாக இப்போது யாரும் கிழவனாவதில்லை

முழுமையான முதுமையில் வரும் இறப்பு எந்தவித பதட்டத்தையும் ஏற்படுத்தாமல், அழகாக, அமைதியாக நிகழக்கூடியது. ஏனெனில் முழுமையான முதுமை என்பதே கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கிச் செல்வது என்றுதானே அர்த்தம். முதுமையின் உச்சத்தில் இருப்பதால் அவர் இறந்து போவார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரிந்துவிடுகிறது. இதனால் யாரும் பதட்டமடைவதில்லை. இப்போது யாரும் முழுமையான முதுமையை அடையாததால் இறப்பிற்கான எந்தவித அடையாளமும் இல்லாமல் போய்விட்டது. எனவே இறப்பு என்பது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று நிகழ்ந்து எல்லோருக்கும் பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்திவிடுகிறது, இதனால்தான் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் “நல்லாத்தானே இருந்தார் திடீர்னு எப்படி?” என்று எல்லோரு மனதிலும் கேள்வி எழுகிறது.

இளமை அழிவதை நாம் தடுத்து நிறுத்த முடியாது எனவே இளமையாகவே இருப்பது எப்படி என்று ஆராய்ந்து கொண்டிருப்பதைவீட இயல்பாக நிகழக்கூடிய முதுமையை முழுவதுமாக வாழ்வதெப்படி என்று நாம் சிந்திக்க வேண்டும். அறிய வகை விலங்கினங்கள் அழிந்து வருகிறது, அறிய வகை பறவை இனம் அழிந்து வருகிறது என வருத்தப்படும் போது அழிந்து வருவது நம் மனித இனமும்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

முன்னோர்கள் முழுமையான வாழ்க்கையை வாழ அவர்களின் உணவு முறை காரணமா, இயந்திரமயமில்லாத அமைதியான கடின உழைப்பை அடிப்படையாகக் கொண்ட அவர்களது வாழ்வியல் முறை காரணமா என தெரியவில்லை. ஆனால் காரல் மார்க்ஸ் சொன்னது போல நாம் ”எதை இழந்து எதை பெருகிறோம் பெருகிறோம்” என்று சிந்திக்க வேண்டும்.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</