வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சி. ஆர். சுப்பராமன் -3

பி.ஜி.எஸ். மணியன்  

1949 - சி.ஆர். சுப்பராமனைப் பொறுத்த அளவில் ஒரு பொன்னான ஆண்டு.

இந்த ஆண்டுதான் ஒரு உலகப் புகழ் பெற்ற காதல் காவியம் சுப்பராமனின் இசை அமைப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளி வந்தது. அது தான் "லைலா மஜ்னு". தெலுங்குப் படத்துக்கான பாடல்களை சமுத்ராலா ராகவாசார்யா எழுத தமிழ்ப் பதிப்பின் பாடல்களை கம்பதாசன் எழுதினார்.

நடிகை பானுமதி ராமகிருஷ்ணாவின் சொந்தத் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் பானுமதியுடன் ஏ. நாகேஸ்வர ராவ் இணைந்து நடித்தார். படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட். படத்தில் மொத்தம் பதினெட்டு பாடல்கள். பாடல் இசையிலும் பின்னணி இசையிலும் தனி முத்திரை பதித்தார் சுப்பராமன்.

"வான்மதி வான்மதி வான்மதி எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதி" என்று தொடங்கும் சோகமான டூயட் பாடலை பி. பானுமதியும் கண்டசாலா அவர்களும் பாட பாடல் மெட்டிலும் அதற்கான இணைப்பு இசையிலும் இனிமையை அப்படியே அழகுறச் சொட்டவிட்டிருந்தார் சுப்பராமன்.

"லைலா மஜ்னு" - என்று சொன்னாலே உடனே நினைவுக்கு வரும் பாடல் "ப்ரேமைதான் பொல்லாதா" - பானுமதி தனித்துப்பாடும் இந்தப் பாடலுக்கான மெட்டை பல்லவியில் முதலில் பானுமதி எடுத்துக் கொடுக்க அருமையாக அதன் அடியொற்றி முழுப் பாடலுக்கும் இசை அமைத்திருந்தார் சுப்பராமன். "இது பானுமதி அம்மாவோட பாட்டு. என்னோட பாட்டு இல்லே." என்று அடிக்கடி சொல்வார் அவர்."லைலா மஜ்னு" படப் பாடல்களை - oldtamilmp3.blogspot.com/2008_10_01_archive.html - இந்த இணைப்பில் கேட்கும் போது மேலே குறிப்பிட்ட இரு பாடல்களும் நம் நெஞ்சில் அலைகளை எழுப்புவதை உணரமுடியும்.
அந்தக்காலத்தில் படத்தின் வெற்றிக்கு பாடல்களையும் உறுதுணையாக கருதி வந்தனர். ஆகவேதான் தான் தயாரித்து நடித்த படங்களில் இசை அமைப்பாளருடன் கலந்து பேசி பாடல்கள் சிறப்பாக அமைய தானும் ஒரு காரணமாக இருந்தார் பானுமதி.

அதே சமயம் சுப்பராமனின் இசையில் வெளிவந்து வெள்ளிவிழாக் கண்ட இன்னொரு தெலுங்குப் படமான "பால ராஜு"வை கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆந்திர தேசத்தில் இந்தப் படத்தின் இடைவேளையின் போது திரை அரங்குகளில் மக்கள் முன்பாக தோன்றி அவர்களை மகிழ்விக்கும் பெருமையை சுப்பராமனுக்கு பெற்றுத்தந்த படம் இது. ஒரு இசையமைப்பாளனின் திறமைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் இது.

அடுத்த ஆண்டான 1949 சி.ஆர். சுப்பராமனை சிகரத்தின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது. தமிழ்ப் பட உலகிலும் சரி, தெலுங்குப் பட உலகிலும் சரி அனைவராலும் தவிர்க்க முடியாத ஒரு இசை அமைப்பாளராக அவர் திகழ்ந்தார். வசதி வாய்ப்புகளும் வந்து குவிய ஆரம்பித்தன.

இந்த ஆண்டு தான் ஜுபிடர் பிக்சர்சின் "வேலைக்காரி" படமும், "கன்னியின் காதலி" படமும் மற்றும் என்.எஸ். கிருஷ்ணனின் "நல்ல தம்பி" படமும் வெளிவந்தன.

வேலைக்காரி மற்றும் நல்லதம்பி ஆகிய படங்களுக்கு தனித்தும், கன்னியின் காதலி படத்துக்கு எஸ்.எம். சுப்பையா நாயுடுவுடன் இணைந்தும் இசை அமைத்திருந்தார் சுப்பராமன்.

அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் உருவான "வேலைக்காரி" திரைப்பட உலகில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்திய திரைப்படம். கே. ஆர். ராமசாமி, வி.என். ஜானகி, எம். வி. ராஜம்மா, டி. எஸ். பாலையா ஆகியோரின் நடிப்பில் சாதனை படைத்த படம் இது.

ஹிந்துஸ்தானி ராகங்களில் சுப்பராமனுக்கு இருந்த அபரிமிதமான ஈடுபாடு "வேலைக்காரி" படப் பாடல்களில் வெளிப்படுகிறது. மாண்ட், அமீர்கல்யாணி, தேஷ், ஜோன்புரி, பீம்ப்ளாஸ், யமன்கல்யாண் போன்ற ராகங்களை அழகாக கையாண்டிருக்கிறார் சி. ஆர். சுப்பராமன்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற "ஓரிடம் தனிலே நிலை இல்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே" - என்ற லலிதா-பத்மினியின் நடனப்பாடலை அருமையான முறையில் கீரவாணி, ஹமீர் கல்யாணி ஆகிய ராகங்களின் அடிப்படையில் வெகு ஜனரஞ்சகமாக இசை அமைத்திருந்தார் சி.ஆர். சுப்பராமன். கே.வி. ஜானகி - பி. லீலா இருவரும் இணைந்து பாடி இருந்தார்கள். அமோக வரவேற்பைப் பெற்ற பாடலாக இந்தப் பாடல் அமைந்தது.

அதே போல கதாநாயகன் கே.ஆர். ராமசாமி சொந்தக் குரலில் பாடிய "இன்னமும் பாராமுகம் ஏனம்மா?" - ஜோன்புரி ராகத்தில்நாத்திகப் பிரச்சாரப் படத்தில் இடம் பெற்ற ஒரு ஆத்திகப் பாடல். இன்றும் பண்பலை ஒலிபரப்புகளில் இடம் பெற்ற ஒரு அருமையான பாடல் இது.

என்.எஸ். கிருஷ்ணனின் "நல்ல தம்பி" படப் பாடல்களும் சி.ஆர். சுப்பராமனின் திறமைக்கு சான்றாக அமைந்தன.

என்.எஸ். கிருஷ்ணனின் "கிந்தனார்" கதா காலட்சேபத்தில் இடம் பெற்ற

"குடிச்சுப் பழகணும். குடிச்சுப் பழகணும். படிச்சு படிச்சு சொல்லுவாங்க பழங் கள்ளை நீக்கி பாலைக் குடிச்சுப் பழகணும்." -

என்ற மதுவின் தீமையை விளக்கும் பாடலும்,

என்.எஸ்.கே-யும் டி. ஏ. மதுரமும் குழுவினருடன் பாடிய "நாட்டுக்கு சேவை செய்ய நாகரீக கோமாளி வந்தானய்யா" பாடலும் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமாகின.

"எனதுயிர் ஈஜிப்ட்டு" என்று பி. பானுமதி பாடும் பாடலை மிகவும் அதிசயிக்கத் தக்க வகையில் அமைத்திருக்கிறார் சி.ஆர். சுப்பராமன். "க்ளியோபாட்ரா" மேடை நாடகத்தில் சீசரை மயக்கும் கிளியோபாட்ராவாக பி. பானுமதியும் அவருடன் சீசராக என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்த இந்தப் பாடல் காட்சியில் என்.எஸ். கிருஷ்ணனுக்கு கண்டசாலாவைப் பின்னணி பாடவைத்தார் சுப்பராமன்.

மலர் தனில் ஒரு அழகு மயில்" என்ற பானுமதியும் கண்டசாலாவும் பாடும் டூயட் பாடல் துவங்கும் முன்பாக வரும் இசையில் கேட்பவர் மனதில் நதியில் படகில் மிதப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் சுப்பராமன். இது போன்ற பாடல்களை இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாக அனுபவித்துக் கேட்கவேண்டும். அப்போதுதான் சுப்பராமன் போன்ற இசை அமைப்பாளர்கள் காலங்களை வென்றும் இன்றும் புகழோடு இருப்பதன் காரணம் புரியும்.

நல்ல தம்பி படத்தில் சி.ஆர். சுப்பராமனின் இசையில் மிகப் பிரபலமான பாடல் ஒன்று. படத்தின் பெயரைச் சொன்னாலே இந்தப்பாடல் தான் நம் நினைவுக்கு வரும்.
கலைவாணர், டி.ஏ. மதுரம், சுப்பராமன், உடுமலை நாராயண கவி ஆகிய நால்வர் அணியின் மகத்தான வெற்றிப்பாடல் தான் "விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி"
எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு பாடல் இது. கலைவாணருக்கு காலாகாலத்துக்கும் நிலைத்த புகழை பெற்றுத்தந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

(பாடலை பலமுறை கேட்டிருக்கும் நாம் இந்தப் பாடலுக்கு இசை அமைத்த சி.ஆர். சுப்பராமனை ஒரு முறை கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டோம். )

நல்ல தம்பி படம் மாபெரும் வெற்றி பெற்று சுப்பராமனின் வெற்றி வாசலை இன்னும் அகலமாக திறந்து வைத்தது.

பாடல்களில் ஒவ்வொரு வாத்தியத்தையும் அதற்கான சுருதியில் துல்லியமாக இசைக்கவைத்து, சுருதி சுத்தமாக இசை அமைப்பது சுப்பராமனின் தனித்துவமாக அமைந்ததே அவருடைய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

கவிஞர் கண்ணதாசன் முதல் முதலாக பாடல்கள் எழுதிய படம் ஜுபிடரின் "கன்னியின் காதலி". இந்தப்படத்திலும் சுப்பராமனின் இசை சிறப்பாக பேசப்பட்டது.

ஷேக்ஸ்பியரின் "பன்னிரண்டாவது இரவு" - என்ற ஆங்கில நகைச்சுவை நாடகத்தை மூலக்கதையாக கொண்டு தயாரிக்கப் பட்ட இந்தப் படத்தில் இரண்டு பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார் சி.ஆர்.. சுப்பராமன். இன்னொரு இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

"புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே " என்ற திருச்சி லோகநாதன் - எம்.எல்.வி இணைந்து பாடிய டூயட் பாடல் இன்றும் பண்பலைகளில் இரவு நேரங்களில் ஒலிபரப்பாகிறது.

http://www.in.com/music/track-puvi-raja-484677.html (ஆனால் எச்.எம்.வியின் திருச்சி லோகநாதனின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு இந்தப் பாடலை எழுதியவர் உடுமலை நாராயண கவி என்று குறிப்பிடுகிறது.)

"காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதே" என்ற எம்.எல்.வி. பாடும் தனிப்பாடல் ஒரு அருமையான மெலடி. கண்ணதாசனின் வரிகளில் எம்.எல்.வியின் டிஜிட்டல் குரலில் சி.ஆர். சுப்பராமனின் இசையில் மாண்ட் ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் காதல் வசப்பட்ட ஒரு பெண்ணின் உள்ளத்துடிப்பை அற்புதமாக வெளிப்படுத்துகிறது.

பல்லவியை சதுஸ்ர நடையில் ஆரம்பித்து சரணத்துக்கு வரும்போது கண்ணதாசன், சுப்பராமன், எம்.எல்.வி. மூவரும் ஒரு ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்கள்.

"காண்பன யாவும் காவியம் போலே இன்றே ஆனந்தம்
கானத்தில் குயில் போலே ஆனந்தம்
வானத்தில் ஒளி போலே ஆனந்தம் - இந்த மூன்றாவது வரியில் எம்.எல்.வியின் குரலில் வெளிப்படும் சங்கதிகள் கேட்பவரை பரவசப்படுத்துகின்ற வகையில் அமைத்திருக்கிறார் சி.ஆர். சுப்பராமன். பாடல் முடிவுக்கு வரும் வரிகளில் அதுவரை இருந்து வந்த சதுஸ்ர நடையை மாற்றி திஸ்ர நடையில் சுப்பராமன் வைத்திருக்கும் முத்தாய்ப்பு.. கேட்டு கேட்டு ரசிக்கவேண்டிய ஒன்று.
http://www.in.com/music/track-karanam-teriyamal-474259.html

இதே சமயத்தில் தான் டி.ஆர். மகாலிங்கத்தின் முதல் சொந்தப் படமான "மச்சரேகை"க்கும் சி.ஆர். சுப்பராமன் இசை அமைத்தார். அதன் பிறகு சுப்பராமன் பிஸியாக இயங்க ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில் "சுப்ரபா" என்ற மலையாள நாடகத்தால் கவரப்பட்ட கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அந்த நாடகத்தை திரைப்படமாக தயாரிக்க முடிவு செய்தார்.

என்.எஸ்.கே. பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தை கலைவாணரே டைரக்ட் செய்வதென்று முடிவு செய்தார். திரைக்கதை வசனத்தை கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் எழுத - அதுவரை திரைப்படங்களில் நடனம் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த பத்மினி முதல் முதலாக கதாநாயகியாக நடிக்க - இந்தப் படத்துக்கு சி.ஆர். சுப்பராமன் இசை அமைப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

இன்னொரு வெற்றி மாலையை சுப்பராமனுக்கு சூடுவதற்கென்று "மணமகள்" தயாராக ஆரம்பித்தாள்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</