வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

டி. சலபதிராவ் - 7

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

7. பிரச்சினைகளை உருவாக்கும் போது நாம் கொண்டிருந்த அதே எண்ணங்களைக் கொண்டே அவற்றை நம்மால் தீர்க்க முடியாது. " ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தெலுங்கில் சலபதிராவ் இசை அமைப்பில் வெளிவந்த படங்களில் பாடல்கள் வெற்றிப் பாடல்களாக அமைந்து அவரது கலைவாழ்வில் சரிவை காணாத வண்ணம் நிலை நிறுத்தின.

உதாரணத்துக்கு சில படங்களின் பாடல்களைக் குறிப்பிடவேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன்.

1968-இல் வெளிவந்த ஒரு தெலுங்குத் திரைப்படம் 'பங்காரு காஜலு" (தங்கக் கொலுசு).
அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டிருந்த இந்தப் படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், பாரதி, காந்தாராவ், விஜயநிர்மலா ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்தனர் அந்த வருடத்திய சிறந்த படத்திற்காக ஆந்திரப் பிரதேச அரசின் "நந்தி" விருதை பெற்ற படம் இது. இந்தப் படத்தில் சலபதிராவின் இசை அமைப்பில் சி. நாராயண ரெட்டி அவர்கள் எழுதிய "அண்ணையா சன்னதி ஆதே நாகு பென்னிதி" என்ற ஒரு பாடல் .. பி. சுசீலா தேனைக் குரலில் குழைத்து எடுத்தது போல பாடியிருக்கிறார் பாருங்கள். பாடலும் அதற்காக சலபதிராவ் அமைத்த இசையும் கேட்ட மாத்திரத்திலேயே நம் நெஞ்சில் ஒட்டிக்கொள்கின்றன.

இதே படத்தில் கண்டசாலாவுடன் பி. சுசீலா இணைந்து பாடிய "வின்னவிஞ்சுகோண சின்ன கோரிக" - என்ற பாடலும் இதே ரகத்தை சேர்ந்தது.

அதன் பிறகு 1967-இல் வெளிவந்த "மாடி வீட்டு மாப்பிளை" என்ற படமே சலபதிராவ் தமிழில் இசை அமைத்த கடைசி படமாக அமைந்தது. ரவிச்சந்திரன், ஜெயலலிதா. நாகேஷ், வி.கே. ராமசாமி, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கான பாடல்கள் சலபதிராவின் திறமைக்கு சான்றாக அமைந்தன.

கல்லூரியில் மாறுவேடப் போட்டி நடக்கிறது. கதாநாயகியை மீறி கதாநாயகன் வெற்றி பெற்றுவிடுகிறான். ஆனால் தனது செல்வாக்கால் அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள நாயகி மறுக்கிறாள். ஆகவே ஒரு பாடல் போட்டி இருவருக்கும் நடக்கிறது. அதில் பாடல் வாயிலாக கேட்கப் படும் கேள்விகளுக்கு சரியான விடையையும் பாடலின் மூலமே அளிக்கவேண்டும். சரியான விடை அளிக்கத் தவறுபவர் தோற்றவராக அறிவிக்கப் படுவர்.

இந்தக் காட்சிக்கான பாடலாக:

"கேட்டுப்பார் கேட்டுப்பார் - கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
ஆட்டம் ஆடு காளை என்னோடு - கேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்றால்
கூட்டம் பார்த்து கும்பிடு போடு" -
என்று துவங்கும் பாடலை டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா குழுவினருடன் இணைந்து பாட மோகன ராகத்தின் அடிப்படையில் சலபதிராவ் அருமையாக அமைத்திருந்தார்.

இந்தப் பாடலின் சரணத்தில் டி.எம். எஸ். அவர்களின் கேள்விக்கு -
"கண்ணால் கேட்பது தன்னால் தெரிவது
சொன்னால் புரிவது சொல்லாதிருப்பது" என்று துரித நடையில் (மத்யம காலத்தில்) தொடர்ந்த பி. சுசீலா - ஒரு கணம் நிறுத்திவிட்டு -
" மௌனம் அது மௌனம்" என்று பதிலை அளித்துவிட்டு தொடர்ந்து ஒரு ஸ்வரக்கோர்வை ஒன்றை கொடுக்கும் வண்ணம் சலபதிராவ் அருமையாக அமைத்திருப்பார்.

காட்சி நாயகன் வெற்றிபெறுவதாக அமையவேண்டும். ஆகவே
"ஓம் ஓம் என்று உரைப்பது என்ன. என்ன அது என்ன.
கந்தன் உரைத்த கருப்பொருள் என்ன.. என்ன அது என்ன.?" - என்ற நாயகனின் கேள்விக்கு விடை தெரியாமல் நாயகி திணற. இணைப்பிசை ஒன்று சரணத்துக்கு ஊடாகத் தொடரும்.

அதன் முடிவில்
"ஓம் ஓம் என்று உரைப்பது வேதம்.
ஓம்காரம் தான் வேதத்தின் நாதம். அறிவோம், தெளிவோம். ஓம். ஓம். " என்று ஓம்கார முழக்கத்துடன் பாடல் முடியும்.. சலபதி ராவின் இசையின் பன்முக ஆளுமை நம்மை திகைக்க வைக்கிறது. திணற வைக்கிறது. பிரமிக்க வைக்கிறது.

இந்தப் படத்தில் இடம் பெரும் ஒரு டூயட் பாடல்
"நெஞ்சுக்கு முகமே கண்ணாடி ..
நீ நினைத்ததைக் காட்டும் முன்னாடி." - இந்தப் பாடலுக்கு சலபதிராவ் அமைத்த இசையும், டி.எம். எஸ். - பி. சுசீலாவின் குரல்களும் பாடலை வெற்றிப்பாடலாக்கி விட்டன.

படத்தைப் பார்க்காதவர்கள் கூட இந்தப் பாடலில் டி.எம். சௌந்தரராஜன் பாடியிருக்கும் விதத்திலேயே இந்தப் பாடல் நடிகர் ரவிச்சந்திரனுக்காக அவர் பாடியது என்று கணித்து விடலாம். அவ்வளவு அற்புதமாக பாடியிருப்பார் டி.எம். சௌந்தரராஜன். இந்தப் பாடலின் இணைப்பிசை சலபதிராவின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு.

இந்தப் படத்தில் பாடகர் தாராபுரம் சுந்தரராஜன் நடிகர் நாகேஷுக்காக பாடியிருக்கும் பாடல் "மாடி வீட்டு மாப்பிளை நான் மறக்கல்லே " என்ற பாடல். இதுவும் பிரபலமான பாடல் தான். அதன் பிறகு பாடகர் தாராபுரம் சுந்தரராஜன் திரையில் பாடியிருந்தாலும் அவரது பெயர் சொன்னாலே நினைவுக்கு வரும் பாடல் இந்தப் பாடல் தான். அந்த அளவுக்கு அவருக்கு பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்த பாடல் இது.

இந்த இடத்தில் ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். மாடிவீட்டு மாப்பிள்ளை படத்தின் இசை அமைப்பாளர் யார் என்று தெரியாதவர்கள் இந்தப் பாடல்களைக் கேட்டால் அதை வேறு எந்த பிரபல இசை அமைப்பாளருடனும் தொடர்பு படுத்தி பார்க்கவே முடியாது. அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த மெல்லிசை மன்னர் அமைத்தது என்றோ இல்லை கே.வி. மகாதேவன் அமைத்தது என்றோ சொல்லமாட்டார்கள்.

இசை அமைப்பாளர் யார் என்றால் "தெரியாது" என்று வேண்டுமானாலும் பதில் வருமே தவிர அந்தப் பெருமையை வேறு எந்த இசை அமைப்பாளருக்கும் கொடுத்துவிட முடியாது.

அந்த அளவுக்கு தனித்துவமான இசை சலபதிராவுடையது.

இப்படி எல்லாம் சிறப்பான பாடல்களை செவிகளுக்கு விருந்தாக்கிய சலபதிராவ் ஒரு இசை அமைப்பாளர் என்ற எல்லையைக் கடந்து அவரது மனிதாபிமான மனத்தினாலும் அனைவர் மனங்களிலும் இடம் பிடித்தவர்.

திரை இசையைப் பொறுத்தவரையில் வாய்ப்புகள் குறைந்துவிட்டால் ஒரு இசை அமைப்பாளர் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவரை நம்பி இயங்கும் வாத்திய கோஷ்டியினர், பாடகர்கள் என்று பலரும் பாதிக்கப் படுவார்கள்.

காலப்போக்கில் நலிவுற்று வாடும் நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டு விடவும் செய்யலாம். அவ்வாறெல்லாம் நிகழாமல் அவர்களுக்கு - ஒரு நிலையான வருமானத்துக்கு வழி வகை செய்யும் வகையிலும், அவர்களது எதிர் கால வாழ்வுக்கு குறைந்த பட்ச உத்திரவாதம் தரும் வகையிலும் "சினி மியூசியன்ஸ் அசோசியேஷன்ஸ்" என்ற அமைப்பை நிறுவியதில் சலபதிராவுக்கு முக்கியப் பங்கு உண்டு ஆரம்ப காலத்தில் அதன் "ஜெனரல் செகரட்டரி"யாகவும் பொறுப்பேற்றுக்கொண்டு அந்தப் பொறுப்பையும் மிகவும் திறமையாக நிர்வகிக்கவும் செய்தார் அவர்.

அது மட்டும் அல்ல. அவரது மனைவி அன்னபூர்ணத்தம்மா தனக்கு குழந்தைப் பேரு இல்லாத காரணத்தால் அவரை வற்புறுத்தி அவருக்கு தனது உறவிலேயே "ஜமுனா குமாரி" என்பவரை இரண்டாம் திருமணம் செய்துவைத்தார் என்பதை இந்தப் பகுதியின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு இருக்கிறேன். தனது இரண்டாம் மனைவிக்கு படிப்பில் இருந்த நாட்டத்தைப் புரிந்துகொண்ட சலபதிராவ் அவரை மேற்கொண்டு படிக்கவைத்து ஒரு மகப்பேறு மருத்துவராக உருவாக்கினார்.

சென்னை தியாகராய நகரில் அவரது வீடு அமைந்திருக்கும் சௌத் வெஸ்ட் போக் சாலையில் உள்ள "கவிதா நர்ஸிங் ஹோம்" - நடுத்தர வர்கத்தினருக்கும், சாமானிய மனிதருக்கும் ஒரு மிகப் பெரிய வரப்ரசாதம் என்றால் அது மிகை அல்ல. "ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்யவேண்டும்" என்ற சலபதிராவின் உன்னத நோக்கத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. (இந்த இடுகைக்காக டாக்டர் ஜமுனா குமாரியிடம் பேச விரும்பி "கவிதா நர்ஸிங் ஹோமை " தொடர்பு கொண்ட எனக்கு "நான்கு வருடத்துக்கு முன்பே டாக்டர் ஜமுனா குமாரி அங்கிருந்து விலகி விட்டதாகவும் தற்போது அவர் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் ஒரு செய்தி கிடைத்தது.)

ஒரு சிறந்த இசை அமைப்பாளாராக மட்டும் அல்லாமல் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் சலபதிராவ் என்ற சிறப்பான ஒரு மனிதரை அடையாளம் கண்டுகொண்ட நிறைவு இந்த இடுகையை எழுதி முடிக்கும் போது எனக்கு ஏற்பட்டிருக்கிறது..

படிக்கும் உங்களுக்கும் அதே எண்ணம் தோன்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

(சிகரம் தொடுவோம்)

அடுத்து சிகரம் தொட வரும் இசை அமைப்பாளர் திரு ஜி. கே. வெங்கடேஷ்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</