வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

டி. சலபதிராவ் - 6

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

6. எப்போதும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வெற்றி பெறவேண்டும் என்ற நமது தீர்மானம் மட்டுமே மற்ற எல்லாவற்றையும் விட உறுதியானது. - ஆபிரகாம் லிங்கன்"கல்யாண பரிசு" -படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்த ஸ்ரீதர் அதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவரது கனவு ப்ராஜெக்டான முழுக்க முழுக்க நடனக் கலையை மையாமாக வைத்து ஒரு திரைப்படம் தயாரித்து இயக்க தீர்மானித்தார்.

கதாநாயகியாக நாட்டியப் பேரொளி பத்மினி, கதாநாயகனாக ஜெமினி கணேசன் - தனது வழக்கமான முக்கோணக் காதல் கதையை நடனக் கலையோடு இணைத்து அற்புதமாக உருவாக்கினார் ஸ்ரீதர்.
பாடல்கள் - கவியரசு கண்ணதாசன். இசை அமைப்பு? சலபதிராவின் மகத்தான இசையால் ஏற்கெனவே கவரப் பட்டிருந்த ஸ்ரீதர் அவரையே இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார். அமர காவியப் படமாக "மீண்ட சொர்க்கம்" ஆரம்பமாகி விட்டது.

பணக்கார வாலிபன் சந்தர் தனது எஸ்டேட்டை பார்வையிட்டு திரும்பும்போது "துள்ளி துள்ளி" ஓடி ஆடும் நாடோடிப் பெண் நிர்மலாவைச் சந்திக்கிறான். அவளால் ஈர்க்கப்பட்ட அவன் அவளுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஆர்வத்தை உணர்ந்து கொண்டதும் அவளை நாட்டியத்தில் சிறந்தவளாக்கி பெயரும் புகழும் பெற வைப்பது என்று முடிவு செய்து தன்னுடன் அழைத்து வந்து தனக்கு மிகவும் பரிச்சயமான பிரபலமான நடன ஆசிரியரிடம் ஒப்படைக்கிறான். அவரோ நிர்மலாவுக்கு நடனம் கற்றுத் தரவேண்டுமானால் அவள் நாட்டியக்கலைக்கே தனது வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவளை நடனத்தில் வித்தகி ஆக்குகிறார்.

சந்திரன், நிர்மலா ஆகியோரின் இதயங்கள் நிபந்தனையை மீறி காதலில் இணைகின்றன.
நிர்மலாவின் கலை வாழ்வு ஒளிரவேண்டும் என்பதற்காக காதலைத் தியாகம் செய்து வேறொரு பெண்ணை மணக்கிறான் சந்திரன்.

ஆனால் மணவாழ்வில் இன்பம் இல்லை. நவ நாகரீகத்தில் மூழ்கித் தன கடமையை மறக்கிறாள் மனைவி. அவளால் நிம்மதி இழக்கிறான் சந்திரன். இருவரும் பிரிகின்றனர். பிரிந்தாலும் அவனை நிம்மதியாக வாழவிடமாட்டேன் என்று செயல்படும் மனைவியால் தனது சொத்துக்களை எல்லாம் இழந்து வீதிக்கு வரும் நிலைமைக்கு தள்ளப் படுகிறான் சந்திரன். விஷயத்தை கேள்விப்பட்ட நிர்மலா - நடனக் கலையையே துறப்பது என்ற முடிவில் இருந்தவள் தனது முடிவை மாற்றிக்கொண்டு - அந்த கலையையே பயன்படுத்தி சந்திரனைப் பழைய நிலைமைக்கு கொண்டுவர மேடை ஏற ஆரம்பிக்கிறாள்.
இப்படிச் செல்கிறது கதை. பாடல்களிலும் பின்னணி இசையிலும் சாம்ராஜ்யமே நடத்தினார் சலபதிராவ்.
முதல் பாடலான "துள்ளி துள்ளி ஓடுது" பாடலிலேயே நம்மை வசீகரித்துவிடுகிறார் அவர். பாடலுக்கு குரல் கொடுத்தவர் ஜிக்கி. நாடோடிப் பாடலுக்கான இசையில் நாட்டுப்புற மெட்டை நயமாகக் கலந்து ஒரு அருமையான மெலடி நிறைந்த துள்ளல் பாட்டு இது. சாதாரணமாக இப்படி கிராமிய நடனம் ஆடும் பெண்ணாக கதாநாயகியை அறிமுகப் படுத்தினால் அதை குத்துப்பாடலாக்கி வார்த்தைகளே புரியாமல் அடித்துவிடும் இக்காலத்திய இசை அமைப்பாளர்கள் சற்று சலபதிராவின் இந்தப் பாடலைக் கேட்கவேண்டும். துள்ளலுக்கு குறைவிலாத மெட்டு. அதே சமயம் அருமையான ஒரு மெலடியாகவும் அமைந்த பாடல். இணைப்பிசை கால்களைத் தாளம் போடவைக்கிறது என்றால் பாடலோ நம் மனதை மயக்குகிறது. அடுத்து... பத்மினியின் நடன அரங்கேற்றப் பாடல்..

:ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்று
பாடும் பாவை என் மேல் - பாராமுகமேன்" -

என்ற பல்லவியோடு தொடங்கும் இந்த நடனப் பாடலை "கல்யாணி" ராகத்தில் அற்புதமாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் சலபதி ராவ். தனது ;அற்புதமாக குரலாலும் அழுத்தமான பாணியாலும் இந்தப் பாடலைத் தனது பாடலாகவே மாற்றிக்கொண்டிருக்கிறார்
பாடகி திருமதி. எம்.எல். வசந்தகுமாரி.

'மானும் மழுவும் ஏந்தி மலர்ப்பதம் தூக்கி
ஆதியும் அந்தமும் தானுமாய் ததிங்கினத்தோம் என்று - ஆடும் அருள் ஜோதி "
என்று அனுபல்லவி - தொடர்ந்து சரணம் என்று வெகு அழகாக ஒரு சம்பிரதாயமான அமைப்பில் பாடலை அமைத்துள்ளார் சலபதிராவ்.

சரணத்தின் துவக்கத்தில் " பாவம் .. ராகம். தாளம்" என்று மூன்றே வார்த்தைகளில் தனது இருப்பை அழுத்தமாக சீர்காழி கோவிந்தராஜன் பதிவு செய்துவிட்டிருப்பார்.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அடுத்து இணைப்பிசையாக வீணை, எம்.எல்.வி.யின் ஒற்றை ஆலாபனை, தாளக்கட்டு என்று இணைந்தபிறகு சரணம் எம்.எல்.வியின் குரலிலேயே தொடருகிறது.. சரணத்தின் இறுதியில் சொற்கட்டும், ஸ்வரங்களுமாக அமைத்து பாடலைப் பிரமாதப் படுத்தி இருக்கிறார் சலபதிராவ்.

"கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்" -
பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த இன்னொரு அற்புதமான பாடல். ஏ.எம்.ராஜாவின் குரலில் பல்லவியின்

முதலடி முடிந்ததும், சிதாரின் விறுவிறுப்பான மீட்டலும், தபேலாவின் தாளக்கட்டும்... ஐயோ! சான்ஸே இல்லை.. இப்படி ஒரு பாடலை வேறு யாராலும் கொடுக்கவே முடியாது. சலபதிராவின் கற்பனைத்திறன் நம்மை பிரமிக்க வைக்கிறது.

பாடல் நெடுகிலும் ஏ.எம். ராஜாவுடன் ஹம்மிங்கில் இணையும் பி. சுசீலாவின் குரலில் வெளிப்படும் இனிமையும், பாவமும், கேட்பவரைக் கண்டிப்பாகக் கட்டிப்போடத் தவறாது.

சிதார், வயலின், புல்லாங்குழல், தபேலா ஆகிய நான்கே வாத்தியங்களை பாடல் முழுக்கக் கையாண்டு அற்புதமாக இசை அமைத்துப் பாடலை அழியாப் புகழ் பெற்ற பாடலாக்கி விட்டிருக்கிறார் சலபதி ராவ்.
அடுத்ததாக ..

ஆண் குரலில் "துயிலாத பெண் ஒன்று கண்டேன்.." என்று ஏ.எம். ராஜா கூற
"எங்கே?" என்று ஒற்றைச் சொல்லாக பி. சுசீலா கேட்க.

"இங்கே..எந்நாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்" என்று ராஜா பதில் கூறுவதாக அமைந்த பாடல்.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஒரு பாடல் இது.

பாடலின் இறுதிச் சரணத்தில் "மணமேடை தனில் மாலை சூடி உந்தன் மனமேடை தனில் ஆடவேண்டும். " என்று நாயகி தன விருப்பத்தை கூறுகிறாள்.

ஆனால் அவனோ அவள் நடனத்தில் பெரிய அளவின் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறான். அதை இப்படி வெளிப்படுத்துகிறான்.

"நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை.. அதில் நடமாடிப் பயனேதும் இல்லை. அதில் நடமாடிப் பயனேதும் இல்லை." - கண்ணதாசனின் கதைப்போக்கை ஒட்டிய வரிகள் - சலபதிராவின் அருமையான இசைத்தொகுப்பு - ஏ. எம். ராஜா - பி. சுசீலாவின் இனிமையான குரல்களில் ஒலிக்கும்போது மனதை தொடத் தவறவில்லை.

இதே போல "கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்”- பாடல் மீண்டும் ஒரு முறை படத்தில் இடம் பெறுகிறது.. இம்முறை பி. சுசீலாவின் குரலில் மட்டும். சோகச் சூழலில் ஒலிக்கும் பாடல் நயம் மெல்லடி எடுத்துவைத்த மாதிரி மனதை வருடிச் செல்கிறது.

இப்படி முத்தான பாடல்கள் இருந்தாலும்.. பி.சுசீலாவிற்கு மிகப் பெரிய அளவில் ஒரு அங்கீகாரம் கொடுத்தபாடல் - "மீண்ட சொர்க்கம்" - "பி. சுசீலா" என்று சொன்ன அளவிலேயே "சட்" என்று நினைவுக்கு வரும் பாடல் ஒன்று உண்டென்றால் அது "மன நாட்டிய மேடையில் ஆடினேன் - கலை காட்டிய பாதையில் வாடுகிறேன்" பாடல் தான்.

"உயிர் காதலிலே - உடல் மேடையிலே - இந்த வாழ்க்கையின் முடிவெங்கே?" - என்று சுசீலா முடிக்கும்போது வரும் புல்லாங்குழலின் ஒற்றை பீட்.. அதை வார்த்தைகளால் வருணிக்க முடியாது.. கேட்டுத்தான் உணரவேண்டும்.

பல்லவி முடிந்ததும் வரும் இணைப்பிசையில் வயலின்களும், சிதாரும் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கின்றன.

கதைக்கான காட்சி அமைப்பை இயக்குனர் ஸ்ரீதர் சொன்னதும், கண்ணதாசன் மளமளவென எழுதிக்கொடுத்த பாடல் இது.

"புவி வாழ்வினில் காதல் இன்பம் - அது ஏழையின் வாழ்க்கையில் துன்பம்
திருநாளும் இல்லை, மணநாளும் இல்லை.. இந்த வாழ்க்கையின் முடிவெங்கே"
"வெறும் காவியக்காதல் போலே எந்தன் காதலும் ஆனதினாலே
உயிர் வாழவில்லை.. உடல் சாகவில்லை.. இந்த வாழ்க்கையின் முடிவெங்கே."

- இப்படி பாடல்களுக்காகவே ஒரு படம் என்றால் அது மீண்ட சொர்க்கம் தான் என்று சொல்லும் வண்ணம் அமைந்த படம்.

படம் என்னவோ எதிர் பார்த்த வெற்றிப் பெறவில்லை என்றாலும் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே பெருவெற்றி பெற்ற பாடல்களாகி இன்றும் காற்றலையில் தவழ்ந்து வந்து தலைமுறை கடந்தும் கேட்பவர் மனதை நிறைத்துக் கொண்டிருக்கின்றன என்றால்...அது தாதநேனி சலபதிராவ் என்ற அற்புதமான இசை அமைப்பாளரால் மட்டுமே சாத்தியமானது.

மீண்ட சொர்க்கம் பாடல்களுக்காகவே சலபதிராவிற்கு அடுக்கடுக்காக படங்கள் வந்து குவிந்திருக்கவேண்டும். ஆனால்.. அப்படி நடக்காதது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான்.
அதன் பிறகு வந்த "உத்தமி பெற்ற ரத்தினம்" படத்தில் 'தேடிடுதே வானம் எங்கே" என்றொரு பாடல் சலபதிராவின் பெயர் சொன்னது. அந்தப் பாடலும் தற்போது வழக்கொழிந்து போய்விட்டது என்பது வேதனை தரும் விஷயம்.

அதே சமயம் - தெலுங்குப் படவுலகில் ஒரு தவிர்க்க முடியாத இசை அமைப்பாளராக இருந்தார். சலபதிராவின் இசை அமைப்பில் வந்த தெலுங்குப் படங்களில் அவரது பாடல்கள் கண்டசாலா - பி. சுசீலா - எஸ். ஜானகி ஆகிய மூவருக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.

தமிழில் வருடத்திற்கு ஒன்று என்ற அளவிலேயே சலபதிராவின் பங்களிப்பு இருந்து வந்தது.

நல்வரவு, அன்புவழி என்று ஒன்றிரண்டு படங்கள் - வந்த வேகத்திலேயே சுருண்ட படங்கள் என்பதால் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறிவிட்டன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

முன்பே சொன்னதுபோல மெல்லிசை மன்னர்களின் விஸ்வரூப எழுச்சியில் புறக்கணிக்கப்பட்ட திறமைசாலிகளில் சலபதிராவும் ஒருவர்.

(சிகரம் தொடுவோம்)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</