வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 13

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

13.  வல்லமை என்பது உடல்பலத்திலிருந்து வருவதில்லை.  அது அசைக்கமுடியாத மன உறுதியிலிருந்தே பிறக்கிறது -  மகாத்மா காந்தி.

வாசக நண்பர் திரு. ரவி அவர்கள் "தாயின் மடியில்"  படத்தில் சுப்பையா நாயுடு அவர்கள் இசையில் 
அமைந்த மறக்க முடியாத பாடல்களைப் பற்றி நான் குறிப்பிட மறந்துவிட்டதாக கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.  அந்தப் படத்தை நான் மறந்துவிடவில்லை. ஆனாலும் வேகமாக எழுதிக்கொண்டு வந்தபோது விடுபட்டுப் போய்விட்டது.  என்றாலும்  தவறைச் சுட்டிக்காட்டிய நண்பர் திரு. ரவி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்த இடுகையை தாயின் மடியில் பாடல்களில் இருந்தே தொடங்குகிறேன்.
******

1964ஆம்   ஆண்டு வெளிவந்த "தாயின் மடியில்" படத்தில் எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி இணையுடன் பண்டரிபாய், எம்.ஆர். ராதா, டி.எஸ். முத்தையா, எம்.என். நம்பியார், ஜி. சகுந்தலா, நாகேஷ்  ஆகியோர் நடித்திருந்தனர்.  வெற்றி அடையத் துடிக்கும் ஒரு பந்தயக் குதிரையை ஓட்டும் "ஜாக்கி"யாக எம்.ஜி. ஆர்.  நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலா இணைந்து பாடிய "என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்" என்ற டூயட் பாடல் எம்.ஜி. ஆர் அவர்களின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இடம்பிடித்து இன்றும் செவிகளை நிறைக்கும் பாடல்.

"ராஜாத்தி காத்திருந்தா ரோஜாப்போலே பூத்திருந்தா"  - டி.எம்.எஸ். - சுசீலா பாடிய இந்தப் பாடல் ஒரு பொய்க்கால் குதிரை ஆட்டப் பாடல்.  எஸ்.எம். சுப்பையா நாயுடு தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு அமைத்திருந்த இந்தப் பாடலும் செவிகளுக்கு இனிமையையும், கிராமிய மணத்தையும் கொண்டு வந்து சேர்க்கத் தவறவில்லை.  

அடுத்து  பி. சுசீலாவின் தேன்குரலில் "பார்வையிலே பந்தல் கட்டி"  என்று ஒரு சோக கீதம்.  சோகப் பாடல் என்றாலும் கேட்பதற்கு சுகமான பாடல்.




இவற்றை எல்லாம் விட  இன்று வரை நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் பாடல் டி.எம்.எஸ். தனித்துப் பாடியிருக்கும் "தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை" என்ற பாடல் தான்.   பாடலின் இணைப்பிசையில்  தனது முத்திரையைப் பதித்து காட்சியின் விறுவிறுப்பையும் சோகத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள்.

அடுத்து பாலன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான "சக்கரம்" என்ற படம் எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசை அமைப்பில் 1967 -இல் வெளிவந்தது.ஜெமினி கணேசன், ஏ. வி.எம். ராஜன், "வெண்ணிற ஆடை" நிர்மலா, சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசை அமைப்பில் வெளிவந்த "காசேதான் கடவுளப்பா அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமப்பா " என்ற பாடலை இன்று வரை யாராலும் மறக்கவே முடியாதே!

இந்தப் படத்தில் இடம் பெற்ற டூயட் பாடலான "நீயே ஒரு நேரம் சொல்லு"  பாடலின் இணைப்பிசை இசை அமைத்தவர் சுப்பையா நாயுடு என்று துல்லியமாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது.  இந்தப் பாடலை டி.எம். சௌந்தரராஜனும் பி. சுசீலாவும் பாடி இருக்கின்றனர்.

அடுத்து சுப்பையா நாயுடுவின் இசை அமைப்பில் வெளிவந்த படத்தில் பாடல்கள் அனைத்துமே தேனாக இனித்து இன்று வரை காற்றலைகளில் தவழ்ந்து வந்து கொண்டிருக்கின்றன.  ஜெய்சங்கர், ஏ.வி.எம். ராஜன், லட்சுமி, நிர்மலா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் "மன்னிப்பு".  படம் என்னமோ படு தோல்வி அடைந்த படம்தான்.  ஆனால் பாடல்கள் அனைத்துமே வெற்றிப் பாடல்களாக அமைந்து இன்றுவரை சுப்பையா நாயுடு அவர்களின் பெயர் சொல்லிக்கொண்டு இருக்கின்றன.

"குயிலோசையை வெல்லும் கண்ணன் குழலோசையில் சொல்லும் ஒவ்வொரு சொல்லும்"  -  கதைப்படி பாட்டு டீச்சரிடம் மாணவி பாடம் கற்றுக்கொள்ளும் பாடல்.   பி. சுசீலா ஆசிரியைக்கு குரல் கொடுக்க மாணவிக்கு பாடியிருந்தார் ஏ.பி. கோமளா.  நீண்ட இடைவெளிக்கு பிறகு சுத்தமான கர்நாடக பாணியில் வெகு அற்புதமாக பாடலை அமைத்திருந்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.  காட்சிக்கேற்ற இசை.

அடுத்து டி.எம். எஸ். -  பி. சுசீலாவின் இணைவில் "வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்"  - இன்றுவரை வெண்ணிலா பவனி வரும் வெள்ளி இரவில் காற்றில் கலந்து வந்து செவிகளை நிறைக்கும் பாடல்.

இதே படத்தில் இருமுறை ஒலிக்கும் பாடலும் ஒன்று இருக்கிறது.  அந்தப் பாடலைப் பற்றி அவசியம் சொல்லித்தான் ஆகவேண்டும். பொதுவாக ஒரே பாடல் இருமுறை படத்தில் இருவேறு சூழலுக்கு இடம் பெறுவதுண்டு.  ஒருமுறை சந்தோஷமாகவும், மறுமுறை சோகமாகவும் பாடல் ஒலிக்கும். ஆனால் ஒரே சூழலுக்கு இருமுறை ஒலிக்கும் ஒரு பாடல் இடம் பெற்ற படம் "மன்னிப்பு" ஒன்றுதான்.  

பெண்குரலில் முதல் முறையும், ஆண்குரலில் அடுத்த முறையும் ஒரே சிச்சுவேஷனுக்கு பாடல்.  அந்தப் பாடல் தான் "நீ எங்கே என் நினைவுகள் அங்கே" - என்ற பாடல். காதல் வயப்பட்ட நாயகி ஒரு முறையும், நாயகன் இன்னொரு முறையும் பாடுவதாக அமைந்த பாடல். இரு முறையும் பல்லவியின் அமைப்பிலேயே வித்தியாசத்தை காட்டி தனித்திறமையோடு பாடலை அமைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

முதல் முறை "நீ எங்கே.."  பாடலைஒரு டீன் ஏஜ் மாணவியின் உற்சாகத் துள்ளலோடு பி. சுசீலா பாடியிருக்கிறார். பாடலில் பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையில் வரும் இணைப்பிசையில் வயலின்கள், ட்ரம்பெட். கிட்டார் ஆகியவற்றை பயன்படுத்தி மேற்கத்திய இசையில் காதல் வயப்பட்ட நாயகியின் உற்சாகம் கேட்பவரையும் தொற்றிக்கொள்ளும் வண்ணம் பாடல் அமைந்திருக்கிறது.

ஆனால் இரண்டாம் முறை இதே "நீ எங்கே ....  என் நினைவுகள் அங்கே"  பாடல் பக்குவப்பட்ட ஆண்மகனின் காதல் நினைவைச் சுமந்து வரும்போது நிதானமாக நயம் மெல்லடி எடுத்துவைத்து வருவது போல பாடல் மென்மையாக மயிலிறகால் வருடுவது போல டி.எம். எஸ். அவர்களின் குரலில் வரும்போது....  கதா பாத்திரங்களின் தன்மைக்கேற்ப இசை அமைப்பில் எவ்வளவு கவனம் எடுத்து செயல்பட்டிருக்கிறார் இசை அமைப்பாளர் என்று கேட்பவரை வியக்க வைக்கிறது.  

அடுத்து எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களின் இசையில் 1969 -இல் வெளிவந்த இன்னொரு படம் "ஐந்து லட்சம்".  முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்தப் படம் ஒரு முழுநீள நகைச் சுவைப் படம்.  ஜெமினி கணேசன், சரோஜாதேவி, மேஜர் சுந்தரராஜன், எஸ்.ஏ. அசோகன், சோ, மனோரமா ஆகியோர் நடித்திருந்தனர்.  

"நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ் கேட்டு"  -  டி.எம். சௌந்தரராஜன் பாடிய பாடல் இது.
"படைத்தான் பூமியை இறைவன்" -  டி.எம். எஸ். -  பி. சுசீலா
"ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது" -  டி.எம்.எஸ். - பி. சுசீலா  
ஆகிய பாடல்கள் மனதில் நின்ற பாடல்கள்.  

அடுத்த வருடமான 1970 -இல்  ஜெமினி கணேசன், சரோஜாதேவி, பாரதி நடித்த படமான "சினேகிதி" படம் சுப்பையா நாயுடுவின் இசையில் வந்தது.  டி.எம். சௌந்தரராஜனுடன் நடிகை பாரதி சொந்தக் குரலில் பாடியிருந்த "தங்க நிலவே நீயும் வானும் தரையில் வாழ முடியுமா"  என்ற பாடல் சுப்பையா நாயுடுவின் மெல்லிசைப் பாணிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

இதே படத்தில் இன்னொரு அற்புதமான பாடல் "அழகின் காலடியில் தமிழை பாடவந்தேன்"  -  டி.எம். சௌந்தரராஜனும், பி. சுசீலாவும் பாடியிருக்கும் இந்தப் பாடல் இன்றளவும் நினைவில் நிற்கும் பாடல்.  

அடுத்து எழுபதுகளில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள் இசையில் பாடிய முதல் பாடல் இடம் பெற்ற படம் என்ற பெருமையைத் தாங்கி வந்த படம் தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த "தலைவன்" என்ற படம்.  மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -  வாணிஸ்ரீ இணைந்து நடித்த இந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு அருமையான டூயட் பாடல் தான் வாலி அவர்கள் எழுதிய -
"நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள்.  
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்"  என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல்.  இந்தப் பாடலைத்தான் இசை அரசி பி. சுசீலா அவர்களுடன் இணைந்து எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.  ஆரம்ப எஸ்.பி.பி. யின் குரலில் தென்படும் இனிமை இந்தப் பாடலுக்கு மெருகேற்றுகிறது.  கண்டிப்பாக அனைவரும் கேட்கவேண்டிய ஒரு அருமையான பாடல் இது.  இந்தப் பாடலின் இணைப்பிசையில் வரும் வயலின்களின் துரிதகாலப் பிரயோகம் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களை அடையாளம் காட்டிவிடுகிறது.

இதே படத்தில் இடம் பெற்ற இன்னொரு டூயட் பாடலை டி.எம். சௌந்தரராஜனும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடியிருந்தனர்.

"ஓடையிலே ஒரு தாமரைப்பூ. நீராடையிலே அதைப் பார்த்தீங்களா.  விழி ஜாடையிலே அது சிரிக்கையிலே 
அந்த விவரத்தை என்னான்னு கேட்டீங்களா?" என்ற பாடல் டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரியின் வெற்றிப்பாடல்களில் ஒன்றாக அமைந்து விட்டிருக்கிறது. 

"தலைவன்" படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு தத்துவப் பாடல் (எம்.ஜி.ஆர். படமல்லவா!) "அறிவுக்கு வேலை கொடு.  பகுத்தறிவுக்கு வேலை கொடு" - டி.எம்.எஸ். பாடியிருக்கும் ஒரு அருமையான பாடல். 

அடுத்து "தேரோட்டம்"  - இந்தப் படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடுவின் இசையில் டி.எம். எஸ். - சுசீலா பாடியிருக்கும் "நன்றி சொல்லவேண்டும் இறைவனுக்கு.  நல்ல வழி தந்தான் இருவருக்கு." என்ற பாடலில் புதுமை என்று எதுவும் இல்லாவிட்டாலும் கேட்பதற்கு இனிமை நிறையவே இருக்கிறது.

தேரோட்டத்துக்கு பிறகு இடைவெளி அதிகமாகவே விழுதுவிட்டது.  வருடம் 1975 -  சுப்பையா நாயுவுக்கு அறுபது வயது முடிந்து வயது அறுபதொன்றாகி விட்டது.  மணிவிழா கொண்டாடவேண்டுமே.  ஆனால்..  சுப்பையா நாயுடு தம்பதியினருக்கோ பெயர் சொல்ல சந்ததி இல்லை. " அதனால் என்ன.?  பெற்றால் தான் பிள்ளையா என்ன? நான் இருக்கிறேன் உங்களுக்கு மகனாக"   என்று முன்வந்தார் இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.  ஜூபிடர் நிறுவனத்தில் சுப்பையா நாயுடு அளித்த ஊக்கத்தால் தானே அவர் இந்த அளவுக்கு மெல்லிசை மன்னராக முடிந்தது!.  தனது முதல் கற்பனையை பாடலாக்கி தனது முதல் பாடலை "அபிமன்யு" படத்தில் "தீம்" சாங் ஆக சுப்பையா நாயுடு இடம் பெறச் செய்ததை விஸ்வநாதன் மறக்கவே இல்லை.  அது மட்டுமா -  கோவை ஜூபிடர் நிறுவனம் மூடுவிழா கண்டபோது தன்னைப் பற்றிக்கூடக் கவலைப் படாமல் தனக்கு சென்னை நிறுவனத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்து சி. ஆர். சுப்பராமனிடம் சேர வைத்தவர் அவர் தானே?  அந்த நன்றி உணர்ச்சி அவருக்கு நிறையவே இருந்தது.  அவருக்கு மட்டும் அல்ல.   "கன்னியின் காதலி" படத்தில் தனது முதல் திரைப்படப் பாடலான "கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் தினமே"  என்ற பாடலை புதிய பாடலாசிரியர் தானே என்று அலட்சியப் படுத்தாமல் ஆதரித்து பாராட்டி அருமையான முறையில் இசை அமைத்துக் கொடுத்த காரணத்தால் தனது முதல் பாடல் அரங்கேறக் காரணமாக இருந்தவர் என்ற முறையில் கவியரசு கண்ணதாசனுக்கும் அந்த நன்றி உணர்ச்சி நிறையவே இருந்தது.  இவர்கள் இருவரும் சேர்ந்து சுப்பையா நாயுடு என்ற அந்த உன்னத இசைக் கலைஞனுக்கு "மணிவிழா" சிறப்பாக எடுத்து சிறப்பிக்க நினைத்தார்கள்.  திரை உலகமே திரண்டு வந்த அந்த மாபெரும் விழாவுக்கு எம்.ஜி.ஆர். - சிவாஜி கணேசன் இருவரும் தலைமை தாங்கி பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கவுரவித்தனர். 

இந்த மாபெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த விஸ்வநாதனும், கண்ணதாசனும் "எங்கள் இருவரின் முதற்பாடல் அரங்கேறி நாங்கள் இன்று நாலாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியும், இசை அமைத்தும் இந்த அளவுக்கு பெயரும் புகழும் பெறக் காரணமாக அமைந்தவர்" என்று அறிவித்து புளகாங்கிதம் அடைந்தனர்.

அதோடு நிற்கவில்லை எம்.எஸ். விஸ்வநாதன்.  வாரிசு இல்லாத சுப்பையா நாயுடு தம்பதிகளை தனது பெற்றோராகவே பாவித்து வயதான அவர்களை தனது இல்லத்திலேயே வைத்துக்கொண்டு மகன் தந்தைக்காற்றும் உதவியை செய்தார்.

இதற்கு பிறகு 1976 - ஆம் வருடம் சுப்பையா நாயுடுவின் இசையில் "குலகௌரவம்" படம் வெளிவந்தது முத்துராமன், ஜெயந்தி இணைந்து நடித்த இந்தப் படம் கன்னடத்தில் பெருவெற்றி பெற்ற படம்.  ஆனால் தமிழில்....?  வந்த வேகத்திலேயே சுருண்ட படம்.  "அழைக்காமலே வருவான்" என்ற பி. சுசீலாவின் பாடலை இரண்டொரு முறை வானொலியில் கேட்ட நினைவு.   எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை அமைத்த படம் கடைசிப் படம் இது.

வருடம் 1979 -  மே மாதம்.  துணிச்சல் ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்வில் முன்னேறி சிகரம் தொட்ட இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு காலமானார்.  அவர் மரணம் அடைந்ததும் அவருக்கு வாரிசு இல்லாததால் மணிவிழாவை நடத்திய அவரது பெறாத மகனான எம்.எஸ். விஸ்வநாதன் ஒரு மகன் தந்தைக்காற்றும் கடைசி உதவியையும் செய்தார்.  ஆம்.  அவரது இறுதிச் சடங்குகளை அவரது மகனின் ஸ்தானத்தில் இருந்து எம்.எஸ்.வி. அவர்களே நிறைவேற்றினார் என்ற தகவலை அறியும் போது அவர்கள் இருவருக்கும் இடையில் எப்படிப்பட்ட பந்தமும் பாசமும் நிலவி இருந்திருக்க வேண்டும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

சாதிப்பதற்கு கல்வி அவசியம் தேவைதான்.  ஆனால் அது மட்டுமே தேவை என்று இல்லை.  அது இல்லாவிட்டாலும் நெஞ்சில் துணிவும் எதையும் எதிர்கொள்ளும் தீரமும் இருந்தால் போதும் -  சிகரம் தொடுவது சுலபம் என்ற பாடத்தை வாழ்ந்து காட்டியவர் சுப்பையா நாயுடு.

இன்று சுப்பையா நாயுடு நம்மிடையே இல்லை.   ஆனால் -  அவரது பாடல்கள் -  இன்றும் காற்றலையில் பவனி வந்து அந்த இசை மேதையின் பெருமையை பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன.  இசைக்கு அழிவென்பதேது?

("சங்கீத அய்யா"  சுப்பையா நாயுடு அவர்களின் சாதனைச் சரித்திரம் நிறைவடைகிறது.  அடுத்து சிகரம் தொட வருபவர் -  குறைந்த படங்களுக்கு இசை அமைத்தாலும் நினைவில் நிலைத்திருக்கும் நிறைவான இசையை அளித்த  பெருமைக்குரிய இசை அமைப்பாளர் திரு. டி. சலபதிராவ் அவர்கள்.)

 

 

(சிகரம் தொடுவோம்)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.