வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

"சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு - 9

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

தனது லட்சியத்தை சாதிப்பதில் சரியான சிந்தனை உடைய மனிதனை எந்த சக்தியும் தடுத்து நிறுத்திவிட முடியாது. தவறான சிந்தனை உடைய மனிதனுக்கோ பூமியில் எந்த சக்தியாலும் உதவ முடியாது. - தாமஸ் ஜெபர்சன்.

மாபெரும் வெற்றி கண்ட நாடோடி மன்னன் படைத்திருக்கு பிறகு எஸ்.எம். சுப்பையா நாயுடு முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராகி விட்டார்.

ஏற்கெனவே குறிப்பிட்டது போல ஐம்பதுகளின் இறுதி முதல் அறுபதுகளின் துவக்கம் வரை திரை உலகில் ஏற்பட்ட புதிய மாற்றங்களினால் அதுவரை தயாரிப்பாளர்களின் ஆளுகையின் கீழ் இருந்துவந்த திரை உலகில் கதாநாயகர்களின் ஆதிக்கம் வேரூன்ற ஆரம்பித்தது.

எம். ஜி.ஆர். - சிவாஜி கணேசன் ஆகிய இரு திலகங்களும் உச்ச நடிகர்களாக உயர்ந்தனர். தயாரிப்பாளர்கள் இருவரில் ஒருவரைச் சார்ந்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர்.

அதே போல இசையிலும் இளையதலைமுறையினரின் ஆதிக்கம் பரவ ஆரம்பித்தது. கர்நாடக சங்கீதத்தை மட்டுமே அதுவரை சார்ந்திருந்த திரை இசையில் மண்வாசனை குன்றாமல் எளிமையான இசையால் மக்களை கே.வி. மகாதேவனும், ராகங்களின் அடிப்படையில் மேற்கத்திய இசை கலந்த மெல்லிசைப் பாணியால் விஸ்வநாதன் - ராமமூர்த்தியும் மக்களை தங்கள் வசம் ஈர்க்க ஆரம்பித்தனர்.

இந்தப் புதிய போக்கிற்கு ஏற்றபடி "இசைச் சக்ரவர்த்தி" ஜி. ராமநாதனே தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார் என்றால் மற்றவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்?

காலமாறுதல்களை கருத்தில் கொண்டு சுப்பையா நாயுடுவும் இயங்க ஆரம்பித்தார்.

அடுத்து அவரது இசை அமைப்பில் வெளிவந்த படங்களில் இருந்து பாடல்களைக் கேட்கும்போது இதனை நம்மால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

"அன்னையின் ஆணை" - பாரகன் பிக்சர்ஸ் பானரில் ஏ.எம்.எம். இஸ்மாயில் அவர்கள் தயாரித்த இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் - சாவித்ரி இணைந்து நடித்தனர். சி. எச். நாராயண மூர்த்தி படத்தை இயக்கினார். ஒளிப்பதிவிற்கு ஜே.ஜி. விஜயம் - என்ற பெயர் ஒன்றே போதும் படத்தின் தரத்தை விளக்க. இந்தப் படத்திற்கு இசை அமைத்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

இந்தப் படத்தின் பாடல்களில் தொல்லிசையையும் மெல்லிசையையும் அழகாகக் கொடுத்திருக்கிறார் சுப்பையா நாயுடு.

'நீயே கதி ஈஸ்வரி" - மருதகாசி எழுதி சாருகேசி ராகத்தில் சுப்பையா நாயுடு மெட்டமைத்து பி. லீலாவின் வெண்கல மணிக்குரலில் "கணீர் " என ஒலிக்கும் ஒரு அருமையான பாடல்.

பாவம் மிளிரப் பாடும் பாடகியரில் பி. லீலாவிற்கென்று ஒரு தனி இடம் உண்டு. அதற்கு ஒரு அருமையான உதாரணம் இந்தப் பாடல்.

பொதுவாக திரைப்படப் பாடல்கள் பல்லவியை அடுத்து முதல் சரணம், இரண்டாம் சரணம் என்று சரணங்களைக் கொண்டுதான் இருக்கும். ஆனால் கர்நாடக சங்கீதப் பாடல்களில் பெரும்பாலும் பல்லவிக்கும், சரணத்திற்கும் இடையில் அனுபல்லவி என்று ஒரு அமசமும் இணைந்திருக்கும்.

இந்தப் பாடலும் அதுபோலவே அமைந்திருப்பது இதன் சிறப்பு. இப்படி மூன்று அம்சங்களைக் கொண்ட திரைப்பாடல்கள் பொதுவாக பாபநாசம் சிவன் அவர்களால்தான் புனையப் பட்டிருக்கும்.

மருதகாசி அவர்கள் இந்தப் பாடலில் தனது தனித் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

பாடலும் அதற்கு சுப்பையா நாயுடு அவர்கள் போட்டிருக்கும் மெட்டும் ஒன்றோடு ஒன்று அருமையாக இணைந்து மெட்டிற்கான பாட்டா இல்லை பாட்டுக்கான மெட்டா என்று வியக்க வைக்கும் வண்ணம் அருமையாக அமைந்திருக்கின்றன.

"நீயே கதி ஈஸ்வரி - சிவகாமி தயாசாகரி" என்ற பல்லவியை அடுத்து அனுபல்லவியாக

"மாயா உலகிலே ஓயாத துயராலே வாடாமலே ஒரு வழி காட்டவே - எனக்கு" - என்ற வரிகள் நீயே கதி ஈஸ்வரி என்ற பல்லவியை மறுபடி தொட்டுக்கொண்டு முடிகின்றன.

அடுத்து சரணமாக -

"ஆதியே அருளே ஆகமப் பொருளே - அன்புடன் தாராயோ உன் திருவருளே
ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே - அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே"
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும் செய்வதேனோ இது தருமம் தானோ
செய்வதேனோ இது தருமம் தானோ - எனக்கு நீயே கதி ஈஸ்வரி...."


சாருகேசி ராகத்தின் ஜீவன் குன்றாமல் படிப்படியாக அதனை வெகு நேர்த்தியாகக் கையாண்டு முகப்பிசை இணைப்பிசை எல்லாம் அமைத்து கேட்பவர் மனத்தில் பாதிக்கப்பட்ட ஒரு அபலைப்பெண்ணின் மனக்குமுறல் கடைசி இரண்டு வரிகளில் வெளிப்படக் கேட்பவர் நெஞ்சை நெகிழச் செய்யும் விதத்தில் பி. லீலா அவர்களைப் பாடவைத்து ஒரு அருமையான பாடலைத் தந்திருக்கிறார் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

அடுத்து அன்னையின் பெருமையைச் சொல்லும் ஒரு அற்புதமான பாடல்:

"அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை. அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை. மண்ணில் மனிதரில்லை"

எளிமையான வரிகளில் கேட்பவர் யாராக இருந்தாலும் அவர் மனதில் பதியும் கருத்துக்களை புனையும் கவிஞர்களில் கா.மு. ஷெரீப் அவர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. அவரது இந்தப் பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல.

கருவில் சுமந்தது முதல் வெளிவரும் வரை மட்டும் அல்லாமல் அதற்கு பிறகும் அந்த மகவுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிப்பவள் தாய் அல்லவா?

இதனை அடுத்த வரிகளில் வெகு அற்புதமான - ரத்தினச் சுருக்கம் என்பார்களே - அப்படி ஒரே வரியில் அருமையாக அமைத்திருக்கிறார் கவிஞர் கா.மு.ஷெரீப்.

"துன்பமும் துயரமும் ஏற்றுக்கொண்டே நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை உள்ளம்" - தாய்மையின் பெருஞ்சிறப்பை இதை விட எளிமையாக விளக்க முடியுமா?

டி.எம்.எஸ். அவர்களின் குரலில் தாய்மையின் பெருமை அற்புதமாக வெளிப்படுகிறது.

இந்தப் பாடலின் சரணத்தை விருத்தமாக அமைத்து - இறுதியில் "அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை" என்று டி.எம்.எஸ். அவர்களின் குரலை உச்சத்தில் கொண்டு போய் பாடலை முடித்து தாய்மையின் சிறப்பை சிகரத்தில் தீபமாக ஒளிர வைத்திருக்கிறார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.

அடுத்து "கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே" கவிஞர் கு. மா. பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதியம் கவித்துவமான வரிகள் கொண்ட ஒரு காதல் ஜோடிப்பாடல். பாடல் வரிகளுக்கேற்ப இசையும் நடைமாருகிறது. பிறகு பல்லவியுடன் வெகு அருமையாக இணைகிறது.

பி. சுசீலாவும் - டி.எம். சௌந்தரராஜனும் வெகு அருமையாக அனுபவித்து பாடி இருக்கும் ஒரு அற்புதமான பாடல் இது.

வளமான கற்பனையால் பாடலாசிரியர் வரிகளை அமைக்க, அந்த வரிகளுக்கு இசை அமைப்பாளர் சுப்பையா நாயுடு அவர்கள் வடிவம் கொடுக்க அந்த வடிவத்திற்கு சுசீலாவும் - டி.எம்.எஸ். அவர்களும் உயிர் கொடுக்க - இந்தப் பாடல் கேட்பவரை கனவின் மாய உலகத்துக்கே அழைத்துச் செல்கிறது. காட்சிக்கு அற்புதமான ஒளிப்பதிவை கொடுத்து நம் கண் முன்னே இன்றும் உலவ விட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே.ஜி. விஜயம்.

வெற்றிப்படமான அன்னையின் ஆணை படத்தை அடுத்து சுப்பையா நாயுடுவின் இசை அமைப்பில் வெளி வந்த திருமணம், நல்ல தீர்ப்பு ஆகிய படங்களின் பிரதிகளோ, பாடல்களோ எங்கெங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அடுத்து மீண்டும் “மரகதம்" படத்திற்காக பக்ஷிராஜா நிறுவனத்துடன் இணைந்தார் சுப்பையா நாயுடு.

சிவாஜி கணேசன், பத்மினி, எஸ். பாலச்சந்தர், சந்தியா, டி.எஸ். பாலையா, டி.எஸ். துரைராஜ், சந்திரபாபு ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் சுப்பையா நாயுடுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் வெகு அற்புதமாக அமைந்திருந்தன.

"காவிரி பாயும் கன்னித்தமிழ் நாடு - கலைகளுக்கெல்லாம் தாய் வீடு" - டி.எம். எஸ். அவர்களின் கம்பீரக்குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலுடன் தான் படமே துவங்குகிறது. இன்றளவும் தமிழ்நாட்டின் சிறப்பை உலகறிய வைக்கும் ஒரு அற்புதமான பாடல். கதாநாயகி பத்மினிக்கான அனைத்து பாடல்களையும் "ராதா ஜெயலக்ஷ்மி"யை பாட வைத்திருந்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு. http://www.dishant.com/jukebox.php?songid=58919

"மாலை மயங்கும் அந்தி நேரம் - பச்சை மலை வளர் அருவியோரம்" - கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல். பத்மினி பாடும் நடனப் பாடலான இதை புன்னாகவராளி ராகத்தில் அற்புதமாக அமைத்திருக்கிறார் சுப்பையா நாயுடு. ராதா ஜெயலட்சுமியின் குரலில் பாடல் கேட்பவர் மனங்களை கொள்ளை கொள்கிறது. http://www.dishant.com/jukebox.php?songid=58921

"கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு - அது காவியம் ஆயிரம் கூறும் - என்றான் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு" - டி.எம்.எஸ். - ராதா ஜெயலக்ஷ்மி இணைந்து பாடும் ஒரு அபூர்வமான நெஞ்சை அள்ளும் ஒரு டூயட் இது. http://www.dishant.com/jukebox.php?songid=58918

மறைந்த இந்து சமய ஆன்மீக வழிகாட்டிகளுள் ஒருவரான ஸ்ரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தனது ஆன்மீக மேடைகளில் இந்தப் பாடலை பயன்படுத்திக்கொண்டிருந்தார் என்ற சுவாரசியமான தகவலை எழுத்தாளர் திரு. வாமனன் அவர்கள் பதிவு செய்திருக்கிறார். அவ்வளவு அருமையான மெட்டை சுப்பையா நாயுடு அவர்கள் அமைத்திருக்கிறார்.

"ஆடினாள் நடனம் ஆடினாள்" - பத்மினியின் நடனப்பாடல். இந்தப் பாடலை ராதா ஜெயலக்ஷ்மி பாடியிருக்கும் அழகும், குரல் வளமும் கேட்பவரை மெய்மறக்கவைக்கும் வண்ணம் அமைந்த பாடல் இது. பாடலுக்கு சுப்பையா நாயுடு அமைத்திருக்கும் இசை அவரதுகற்பனை வளத்தையும், சைப்புலமையையும்
ஒருசேர எடுத்துக்காட்டுகிறது. http://www.dishant.com/jukebox.php?songid=58917

அதே சமயம் மல்லிகைப் பூப்போல நல்ல சீராகச் சம்பா பச்சரி சாதத்தை வடித்து அதைச் சாப்பிடும் போது கல் இடறினால் எப்படி இருக்கும்? மரகதத்தில் அப்படி அமைந்த பாடல் தான் சந்திரபாபு - ஜமுனா ராணி இணைந்து பாடிய "குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே" பாடல். http://www.dishant.com/jukebox.php?songid=58920

என்ன இது? வெகு அருமையான பாடலாயிற்றே? கேட்பவரை இன்றளவும் தாளம் போட வைக்கும் பாடலாயிற்றே? இதற்கென்ன குறை சார்? சுப்பையாநாயுடு பாமர மக்களை வசியம் பண்ணும் வகையில் எத்தனை அருமையாகப் போட்டிருக்கிறார்? என்பவர்களுக்கு ..

இது அருமையான பாடல் தான். கேட்பவரை துள்ளவைக்கும் பாடல் தான். ஆனால் இந்தப் பாடலுக்கான மெட்டு எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்களுடையதல்ல.

இந்தப் பாடலுக்கான மெட்டு டி.ஜி. லிங்கப்பாவுடையது. சபாஷ் மீனா படத்திற்காக அவர் அமைத்தது.

“சபாஷ் மீனா எடுக்கும் போது பலசிக்கல்களை பந்துலுவுக்கு என்ன காரணத்தினாலோ சந்திரபாபு உண்டாக்கினார். குங்குமப்பூவே- பாடலை ஒலிப்பதிவு செய்யவேண்டிய நாளில் - பாடலை - மெட்டை எல்லாம் நன்றாகக் கற்றுக்கொண்ட சந்திரபாபு "ஆர்கெஸ்ட்ரா ரொம்ப கம்மியா இருக்கு.. " என்று பலவித காரணங்களைக் கூறி பாடலை பாட மறுத்தவர் அதே சமயம் தயாரிப்பில் இருந்த மரகதம் படத்திற்காக இந்தப் பாடலை எஸ்.எம். சுப்பையாவிடம் கொடுத்து பதிவு பண்ணவைத்து பாடலை பாடிவிட்டார். “ (ஆதாரம் - திரு. வாமனன் அவர்களின் திரை இசை அலைகள் - இந்தத் தகவலை உறுதி செய்வது போலவே சுப்பையா நாயுடுவைப் பற்றிய தனது கட்டுரையிலும் "மரகதம்" படப் பாடல்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்தப் பாடலை திரு. வாமனன் அவர்கள்கவனமாகத் தவிர்த்திருக்கிறார் .} இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிடும் போது டி.ஜி. லிங்கப்பா அவர்கள் “கடைசியிலே என் பாட்டு சுப்பையா அண்ணன் பெயரிலே வந்தது" என்று ஆதங்கத்தோடு குறிப்பிட்டிருக்கிறார்.

சுப்பையா நாயுடு அவர்களைப் பொறுத்தவரை சந்திரபாபு அவரிடம் இந்த மெட்டையும், பாடலையும் பாடிக்காட்டி அது எப்படி வந்தது என்று குறிப்பிடாமல் இருந்திருக்கலாம். அது பிடித்துப்போன காரணத்தால் அவர் அதை தூண்டித் துருவி விசாரிக்காமல் ஏற்றுக்கொண்டும் இருந்திருக்கலாம். அல்லது தயாரிப்பாளரின் நிர்ப்பந்தம் காரணமாக இதை ஏற்றுக்கொண்டும் இருந்திருக்கலாம். எதுவோ ஒன்று.

ஆனால் பின்னால் இது டி.ஜி. லிங்கப்பாவுடைய மெட்டு என்று தெரிய வந்த போதாவது ஒரு தன்னிலை விளக்கமோ, குறைந்த பட்சம் லிங்கப்பா அவர்களிடம் ஒரு வருத்தமோ தெரிவித்ததாக எந்தத் தகவலும் இல்லை.

நிச்சயமாக இந்த ஒரு சம்பவம் - சுப்பையா நாயுடு அவர்களின் நீடித்த புகழுக்கு ஒரு சறுக்கல்தான்.

(சிகரம் தொடுவோம்)

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</