வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்

சிகரம் தொட்டவர்கள் - இரண்டாம் பாகம்

'சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு


பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

1. "வெற்றியை விரும்பினால் அதை குறிவைக்காதீர்கள் . நீங்கள் செய்ய விரும்புவதை நம்பிக்கையோடு செய்யுங்கள். வெற்றி இயற்கையாகவே உங்களை வந்து சேரும்" -டேவிட் ப்ரோஸ்ட்.

பொதுவாக எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் சாதனையாளராக விளங்கவேண்டும் என்றால் அதில் ஒருவருக்கு இருக்கவேண்டிய ஈடுபாடு ரத்தத்தோடு கலந்துவிட்டிருக்கவேண்டும். தான் ஈடுபட்டிருக்கும் துறை பற்றிய அறிவு முழுமையாக இருக்கவேண்டும். இதைத்தான் பூரண ஞானம் என்பார்கள். இது இரண்டு வகையானது.

ஒன்று பிறவியிலேயே வருவது. "மழலை மேதைகள்' - என்று சொல்கிறோமே அவர்கள் இந்தவகையில் சேர்ந்தவர்கள்.

இரண்டாவது "சூழ்நிலையோடு" இயைந்து வருவது. மருத்துவத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெற்றோரின் மக்கள் அவர்களும் மருத்துவத்துறையிலே ஈடுபட தங்கள் வீட்டில் நிலவி வரும் சூழலே முதல் காரணமாக இருக்கும். அதோடு பெற்றோர், சுற்றத்தினரின் ஊக்கமும், ஆலோசனைகளும், உற்சாகமும் சேரும் பொழுது அவர்களுக்கு சாதிப்பது என்பது எளிதாகி விடும்.

ஆனால் கலைத்துறையில் சாதிப்பது என்றால் அது அவ்வளவு எளிதல்ல. அதில் ஈடுபட நினைப்பவர்கள் பலத்த எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். முதல் எதிர்ப்பு வீட்டிலிருந்தே ஆரம்பமாகும். "ஒழுங்கா படிச்சு ஒரு உத்தியோகத்துக்கு போய் உருப்படுற வழியைப் பாரு" என்று வீட்டிலிருந்தே ஆரம்பமாகும்.

இதற்கு காரணம் - ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் மற்ற அனைத்தையும் விட ஆர்வம் அதிகமாக இருந்தது என்றால் அது அறிவியலாகவோ, கணிதமாகவோ, ஆங்கிலமாகவோ இருந்துவிட்டால் பாராட்டி ஊக்குவிக்க முனைபவர்கள் அதுவே கலை சார்ந்ததாக இருந்துவிட்டால் ஏற்றுக்கொள்ள மறுப்பது தான். இதனை இன்றும் கூட நாம் கண்கூடாக பார்க்கிறோமே.

பாட்டு வகுப்பிலோ, வாத்திய கருவி வாசிப்பதிலோ தனது வாரிசுகளை ஈடுபடுத்துகிறவர்கள் " என் பையன் மிருதங்கம் ரொம்ப நல்லா வாசிப்பான்" , "என் பொண்ணு என்ன ஜோரா பாடுவா தெரியுமா?" என்றெல்லாம் பெருமிதப் பட்டுக்கொள்பவர்கள் தேர்வு நேரம் ஆரம்பித்துவிட்டால் முதலில் மட்டம் போடுவது அந்த வகுப்புகளுக்கு தான். காரணம் இங்கு வெற்றி என்பது பொருளாதாரம் சார்ந்ததாகவே பார்க்கப் படுவதுதான். கலைத்துறை என்பது "ரிலாக்ஸாக" இருக்கவே என்றாகிப்போன சிந்தனைதான்.

இப்படி ஓரளவு கலைத் துறையை நேசிப்பவர்களே தங்கள் வாரிசுகளை அதில் ஈடுபடுத்த தயங்குவார்கள்.

அப்படி இருக்க இந்த அளவுக்கு வசதிகள் கூட இல்லாத ஒருவர் -

ஏன் இன்னும் சரியாகச் சொல்லப்போனால் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தால் தான் வெற்றிக் கோட்டைத் தொடலாம் என்று கூட தெரிந்திருக்காத ஒருவர் -

கலைத் துறை என்ற ஒன்றைப் பற்றி எந்த சிந்தனையுமே இல்லாத ஒருவர் -

பதினான்கு பதினைந்து வயது வரை எந்தக் குறிக்கோளுமே இல்லாமல் இருந்த ஒருவர் –

ஒரு முன்னணி இசை அமைப்பாளராக சாதனைச் சிகரம் தொடுவது என்பது........கலைத் தாயின் பூரண அருள் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையன் கவி காளிதாசனாக மாறுவதும், மடைப்பள்ளியில் சமையல்காரனாக இருந்த ஒருவன் காளமேகப் புலவராக உருமாறுவதும் - அந்த கலாதேவியின் அருள் திறம் ஒன்றினால் மட்டுமே சாத்தியம்.

அப்படி கலைத் தாயின் பரிபூரண அருளுக்கு பாத்திரமான ஒரு மகன் தான் இசை அமைப்பாளர் திரு.. எஸ்.எம். சுப்பையா நாயுடு.

இசைக்கும் அவர் வளர்ந்த சூழலுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. அவரது வாழ்க்கை சூழலில் இசையைப் பற்றி எல்லாம் அவர் சிந்தித்திருக்கவே முடியாது.

அப்படிப் பட்ட ஒரு பின்னணியில் வளர்ந்தவர் "சங்கீத அய்யா" என்று திரை இசைத் துறையில் அனைவராலும் மதித்துப் போற்றப்பட்டிருக்கிறார் என்றால் அது அந்த கலாதேவியின் அருளால் அன்றி வேறு எதனால் நிகழ்ந்திருக்க முடியும்.?

"மக்கள் திலகம்" எம்.ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த "முதல்" படத்துக்கு இசை அமைத்தவர்.
"கவியரசு" கண்ணதாசனின் முதல் திரைப் பாடலுக்கு இசை அமைத்த பெருமைக்குரியவர்.

எம்.எஸ். விஸ்வநாதன் என்ற மெல்லிசை மன்னரை நமக்கெல்லாம் அடையாளம் காட்டி அவருக்குள் இருந்த இசை அமைக்கும் திறமையை வெளிப்படுத்தி அவரது வெற்றிக்கு ஆதார சுருதியாக இருந்தவர். (இவருக்கு பின்னால் தான் விஸ்வநாதன் சி. ஆர். சுப்பராமனிடம் சேர்ந்தார்.)

மிகுந்த மேதாவிலாசமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு படைப்பாளி.

அந்தப் படைப்பாளி கடந்து வந்த கரடு முரடான வாழ்க்கைப் பாதையை பார்க்கும் பொழுது... ஏற்படும் பிரமிப்பு,, சாதிக்கத் துடிப்பவர்களுக்கு நிச்சயம் ஒரு உற்சாக டானிக்காக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

********************************************************
போலீஸ்காரர் முத்துசாமி நாயுடு மஹாக் கோபத்தில் இருந்தார். அது அவமானத்தால் ஏற்பட்ட கோபம்.

இருக்காதா பின்னே? "ஏட்டு" முத்துசாமி வருகிறார் என்றால் திருநெல்வேலி ஜில்லா கடையநல்லூர் வட்டாரத்தில் அழுது அடம் பிடித்துக்கொண்டிருக்கும் குழந்தை கூட அடங்கி விடுமே!.

சாதரானமாகவே அந்தக் காலத்தில் போலீஸ் உடுப்பைப் பார்த்தாலே மக்களிடம் ஒரு பயமும், மரியாதையும் இயல்பாகவே இருக்கும். அதிலும் முத்துசாமி நாயுடுவிடமோ கொஞ்சம் அதிகப் படியான மரியாதையே இருக்கும். காரணம் அவர் மிகவும் கண்டிப்பானவர். நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் வைத்தவர். தனது உத்தியோகத்தில் யாருமே ஒரு அப்பழுக்கு கூட சொல்லமுடியாத படி வாழ்ந்து வருபவர். போலீஸ் உடுப்பை மாட்டிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி அவர் நடந்துவரும்போது எதிரில் வருபவர் யாராக இருந்தாலும் கை எடுத்துக் கும்பிட்டு வணக்கம் போடத் தவற மாட்டார்கள்.

அப்படிப் பட்டவர் இன்று மேலதிகாரியின் முன்பாக தலை குனிய நேரிட்டுவிட்டதே?

அதுவும் யாரால்.. தான் பெற்றெடுத்த அருமை மகனால்.

நினைக்க நினைக்க அவரது நெஞ்சம் கொந்தளித்தது..

அவரது மனைவி நல்லம்மாள் காலமானது 1916 -இல். அவருக்கும் நல்லம்மாளுக்கும் மகனாக சுப்பையா பிறந்தது 1914 -இல் ஆம். நினைவு தெரிந்த நாள் முதலாக தாய் முகம் பார்த்தறியாத மகன் தான் சுப்பையா. முத்துசாமியின் மாமியாரும், அவரது இளைய தாரமும் தான் சுப்பையாவை வளர்த்து வந்தனர்.

"பாவம் தாயில்லாத பிள்ளை" என்று மிகுந்த செல்லம் கொடுத்து வளர்க்கப் பட்டு வந்ததாலோ என்னவோ சிறுவன் சுப்பையாவிடம் பிடிவாதமும், நினைத்ததைச் சாதித்துக்கொள்ளும் மூர்க்கமும் மேலோங்கி நின்றது.

"போலீஸ்காரன் பிள்ளை பொறுக்கி என்று பெயர் எடுத்துவிடக் கூடாதே" என்று நினைத்த முத்துசாமி நாயுடுவோ மகனிடம் கண்டிப்பும் கராருமாகத்தான் இருந்து வந்தார்.

அப்பாவோ அதீதக் கண்டிப்பு. வீட்டுப் பெண்களோ அதீதச் செல்லம். இரண்டுக்கும் இடையில் வளர்ந்த சுப்பையாவிடம் யாருக்கும் அடங்காத தன்மையும்,எதற்கும் அஞ்சாத தைரியமும் வளர்ந்து வந்தது.

நாலெழுத்துப் படிக்கட்டும்: என்று பள்ளிக்கு அனுப்பி வைத்தால் அங்கு படிப்பைத் தவிர மற்ற எல்லாமே வந்தது. நாளொரு வம்பும்,பொழுதொரு வல்லடியுமாக வளர்ந்து வந்தான் அவன்.

விளைவு? பள்ளிக்கூடத்தில் இருந்து விலக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். வீட்டிலும் கூட முரட்டுத்தனமாகவே இருந்து வந்தான் அவன்.

அதைக்கூட வயசுக்கோளாறு என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால் போலீஸ்காரன் மகனே திருட ஆரம்பித்தால்.. அதுவும் சொந்த வீட்டிலேயே.. அப்பாவின் சட்டைப் பாக்கெட்டில் இருந்து பாட்டியின் அஞ்சறைப் பெட்டி சேமிப்புவரை அவன் கைவைக்கத் தொடங்கியபோதுதான்,"நிலைமை விபரீதமாகிக் கொண்டிருக்கிறது" என்பதை உணர்ந்து கொண்டார் முத்துசாமி நாயுடு.

"இவனை இப்படியே விட்டு வைப்பது சரி இல்லை.. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்து விடவேண்டியதுதான் . அப்போதுதான் கொஞ்சமாச்சும் உருப்படுவான்" என்ற முடிவுக்கு வந்தார் அவர்.

"சின்னப் பிள்ளைய ஜெயிலிலே போடுறதாவது?" என்று மாமியாரும் மற்றவர்களும் தடுத்தபோது, "அதை ஏன் ஜெயிலுன்னு நெனைக்குறீங்க? ஒரு ஹாஸ்டல் மாதிரி. பசங்களுக்கு படிப்போட ஒழுக்கத்தையும், கூடவே ஒரு கைத்தொழிலையும் கத்துக் கொடுப்பாங்க. அங்கே விட்டால் தான் இவன் சரிப்பட்டு வருவான்" என்று அடித்துப்பேசி தன்மீது அக்கறை கொண்டிருந்த மேலதிகாரியிடம் சிபாரிசு கடிதம் வாங்க மகனையும் கூடவே கூட்டிச் சென்றார் முத்துசாமி நாயுடு.

சிறுவன் சுப்பையாவை பார்த்த அவருக்கு என்ன தோன்றியதோ? "என்ன நாயுடு. அவசரப்படாதீங்க. சீர்திருத்தப் பள்ளிக்கெல்லாம் ஒண்ணும் அனுப்பவேண்டாம். இவனை என் வீட்டுலேயே என் பார்வையிலேயே இருக்கட்டும். நான் பார்த்துக்கறேன். நீங்க கவலைப் படாம போய் வேலையைப் பாருங்க" என்று சொல்லி சுப்பையாவை தன்னோடு வைத்துக்கொண்டார் அவர்.

"இன்ஸ்பெக்டர் அய்யாவோட பொறுப்புலே இருக்குற பையன் திருந்தி நல்லா முன்னுக்கு வந்துடுவான்" என்று நினைத்து நிம்மதி அடைந்தார் முத்துசாமி நாயுடு.

ஆனால்.. அந்த நிம்மதி கொஞ்ச நாள் கூட நீடிக்கவில்லை. "இன்ஸ்பெக்டர் அய்யா கூப்பிட்டு அனுப்பியதாக" தகவல் வந்தபோது மகனைப்பற்றி நல்லவிதமாக நாலு வார்த்தைகள் சொல்லுவார் என்று எண்ணிக்கொண்டு போனவருக்கு அந்த ஆசையில் மண் விழுந்தது.

"உன் மகனை வச்சுக்க நம்மாலே முடியாதையா. இவன் திருந்தவே மாட்டான்" என்று சொல்லி சுப்பையாவை அவரோடு திருப்பி அந்த மேலதிகாரி அனுப்பிவிட..

அவமானத்தாலும் ஆத்திரத்தாலும் முகம் சிவந்து போனது முத்துசாமிக்கு.

வீடு வந்துசேரும் வரை தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டிருந்தவர் அதற்கு மேலும் தாங்கமுடியாமல் இடுப்பு பெல்டைக் கழட்டி கண் மண் தெரியாமல் அருமை மகனை விளாசித் தள்ளிவிட்டார். யார் தடுத்தும் நிறுத்த முடியவில்லை.

அந்த பதினான்கு வயது சிறுவனுக்கும் அது பெருத்த அவமானமாக இருந்தது. ரோஷம் மேலிட அன்று இரவே தந்தையின் சட்டைப் பாக்கெட்டில் இருந்து கொஞ்சம் பணத்தை "லவட்டிக்" கொண்டு வீட்டை விட்டே வெளியேறி போட் மெயில் வண்டியில் ஏறி நாகப்பட்டினம் வந்து சேர்ந்துவிட்டான் அவன்.

"இருங்க. என்னாலேயும் முன்னுக்கு வரமுடியும் என்று நிரூபித்துக் காட்டுறேன்" என்று கருவிக் கொண்டு கிளம்பியவன் யார் சொல்லித்தந்தார்களோ என்னவோ கப்பல் ஏறி மலேயா, சிங்கப்பூருக்கு போய்விடலாம் என்று முடிவு செய்து துறைமுகத்தை அடைந்தவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

"மலேயா என்ன உங்க வீட்டு கொல்லைப்புறம் என்று நினைச்சிட்டியா தம்பி. சும்மா இல்லே. வெள்ளைக்கார கவர்ன்மெண்டு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிச்சு இருக்கு. உன்னாலே போக முடியாது" என்று நிராகரித்துவிட..அங்கிருந்து கிளம்பி நேராக தஞ்சாவூருக்கு வந்தான் சுப்பையா.

கையில் இருந்த காசோ கரைந்து கொண்டிருந்தது. மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தபடி ரயிலடியில் இருந்து நடந்து கொண்டிருந்தவனின் தோளை ஒரு கரம் அழுத்தமாகப் பிடித்து நிறுத்தியது.

எரிச்சலுடன் திரும்பினான் அவன்.

அவனையே ஏற இறங்கப் பார்த்துக்கொண்டிருந்தார் அவனை நிறுத்திய அந்த மனிதர்.

பின்புறமாக படியவாரப்பட்டிருந்த அவனது சிகை அமைப்பு நாடக நடிகர்களின் சிகை அமைப்பை அவருக்கு உணர்த்தி இருக்கவேண்டும். "டேய்.. நீ. நாடகக் கம்பெனியில் இருந்து ஓடி வந்தவன் தானே.? எங்கேடா உன்னோட இன்னொரு கூட்டாளி?" - என்று கேட்டபடி அவன் கையைப் பற்றி இழுத்தார் அவர்.

நாடகக் கம்பெனியில் இருந்து ஓடி வந்தவனா? நானா? விஷயம் புரிய அவனுக்கு வெகு நேரமாகவில்லை.

அப்போது தஞ்சாவூரின் மதுரை ஜெகன்னாத அய்யரின் பாய்ஸ் நாடக் கம்பெனி முகாமிட்டிருந்தது. கம்பெனியின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அங்கிருந்து இரண்டு சிறுவர்கள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தப்பித்து வெளியேறி விட்டிருக்கிறார்கள்.

சுப்பையாவின் "சிகை அமைப்பு" நாடக நடிகர்களின் சாயலை ஒத்திருக்க அப்படி ஓடி வந்தவர்களில் ஒருவனாக அவனை நினைத்துவிட்டார் அந்த மனிதர்.

"வாடா உன்னை கம்பெனியிலே கொண்டு விட்டுடுறேன்" என்று கையைப் பற்றி இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார் அவர்.

"மலேயா போகத்தான் வழி இல்லே.. நாடகக் கம்பெனியிலே சேர்ந்து பார்த்தால் என்ன? ஒத்துவந்தால் ஒட்டிக்குவோம். எப்படியும் ஒரு பிழைப்பு வேண்டுமில்லையா?" என்று நினைத்தவன் கையைப் பிடித்து இழுத்தவரின் பிடியில் இருந்து ஒரே உதறலாக தன்னை விடுவித்துக்கொண்டான்.

"நீர் என்னய்யா என்னை அழைச்சுக்கிட்டு போகிறது? இடத்தைச் சொல்லும். நானே விசாரிச்சுக்கிட்டு போய்க்கிடுறேன்" - என்றான் அவனது இயல்பான துணிச்சலுடன்.

அவர் இடத்தைச் சொல்லி வழிகாட்ட - ஒரு முடிவுடன் ஜெகன்னாதையர் பாய்ஸ் நாடகக் கம்பெனியை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சுப்பையா.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</