வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்

இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 24

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

1962 -இல் ஜி.ராமநாதனின் இசையில் வெளிவந்த படங்கள் இரண்டு. ஒன்று.. அவரது சொந்தத் தயாரிப்பான "பட்டினத்தார்". ஆம். ஏற்கனவே ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவங்களுக்குப் பிறகும் சொந்தப் படத் தயாரிப்பில் ஜி. ராமநாதன் இறங்கினார்.

கப்பலோட்டிய தமிழன் படத்தின் தோல்வியும், தனது "ப" வரிசைப் படங்களின் மகத்தான வெற்றியும் நடிகர் திலகத்தை விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் பக்கமே திருப்பியது. அதே போலவே தேவர் பிலிம்ஸ் படங்களின் வெற்றி மக்கள் திலகத்தை கே.வி. மகாதேவன் வசம் ஈர்த்தது. அறுபதுகளில் திரையிசையை இவர்கள் இருவருமே ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். ஆகவே தன்னை தக்கவைத்துக்கொள்ள ஒரே வழி சொந்தத் தயாரிப்பு தான் என்ற முடிவுக்கு ஜி. ராமநாதன் வந்திருக்கலாம்.

அந்தக் காலகட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு நேர்காணலில் திரை இசை பற்றிய கருத்தாக "காலம் மாறிவிட்டது. இப்போது போய் "பக்தி கொண்டாடுவோம்" என்றெல்லாம்
பாட்டுக்கள் போட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று சொல்லி இருந்ததாகவும்,
அதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டே ஜி. ராமநாதன் தனது சொந்தத் தயாரிப்பில் "பக்தி கொண்டாடுவோம்" என்ற அதே மெட்டில் பாட்டை போட்டதாகவும் திரு. வாமனன் அவர்கள் மூலம் தெரிய வருகிறது.

ஜி. ராமனாதனின் பலமே அவரது அபரிமிதமான தனன்ம்பிக்கை தான். அதுவே அவருக்கு பலவீனமாகவும் அமைந்தது.

போட்டிகள் நிறைந்த திரை உலகில் தனது வாய்ப்புகள் குறுகியபோது சொந்தப் படம் எடுத்து அது வெற்றி பெற்றால் தனக்கு வாய்ப்புகள் மறுபடியும் கூடுமே என்ற எண்ணத்தினாலும் கூட அவர் சொந்தத் தயாரிப்பில் இறங்கி இருக்கலாம்.

எது எப்படியோ .. பட்டினத்தார் படம் ஆரம்பமானது. படத்தின் பலமே பாடல்கள் தானே. ஆகவே டி.எம். சௌந்தரராஜனையே பட்டினத்தாராக நடிக்க வைத்தார். தன்னை ஒரு பாடகனாக அங்கீகரித்து தனது வெற்றிக்குக் காரணமாக இருந்தவர் என்பதால் ஜி. ராமநாதனிடம் சௌந்தரராஜனுக்கு ஒரு தேவதா விசுவாசமே இருந்தது. ஆகவே அவர் வாய்ப்புக் கொடுத்ததும் மிகுந்த மகிழ்ச்சியோடு மிகக் குறைவான ஊதியமே பெற்றுக்கொண்டு நடித்துக் கொடுத்தார் அவர். பின்னாளில் பிரபலமான நடிகர் மேஜர் சுந்தரராஜனுக்கு இதுதான் முதல் படம்.

ஆனால்.. படத்தை முடித்து வெளியிடுவதற்க்குள் உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் திணறித்தான் போனார் ராமநாதன். படத்தை முடித்து விற்பனை செய்வதற்குள் உன்பாடு என்பாடு என்றாகிப் போனது. வேறுவழி இல்லாமல் குறைந்த தொகைக்கே விநியோக உரிமையைக் கொடுத்தார் அவர். அவருக்கு பலத்த நஷ்டம். ஆனால் வாங்கியவர்களுக்கோ பெருத்த லாபத்தை படம் சம்பாதித்துக்கொடுத்தது. அதே சமயம் அவரது இசை அமைப்பில் "தெய்வத்தின் தெய்வம்" படம் வெளிவந்தது.

"தெய்வத்தின் தெய்வம்" - இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில்
எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி இணைந்து நடித்து 1962 -இல் வெளிவந்த திரைப்படம்.

"இப்போவெல்லாம் என்ன பாட்டு போடறாங்க? ஹூம்.. அந்தக் காலத்துலே...." என்று பழங்கதை பேசி அங்கலாய்த்துக்கொண்டிருக்காமல், "இந்தத் தலைமுறை ரசிகர்கள் இதை விரும்புகிறார்களா? சரி.. அதையே கொடுத்துவிடுவோம்.."என்று அப்போது பரவி வந்த மெல்லிசை அலைக்கு ஈடுகொடுத்து களத்தில் இறங்கினார் ஜி. ராமநாதன்.

அதுவரை பார்த்துவந்த ராமனாதனில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ராமனாதனாக அவர் வெற்றிகரமாக இயங்கியது அனைவரையும் வியக்க வைத்தது.

அப்போது தமிழ்த் திரை உலகில் முன்னணிப் பாடகியாக உயர்ந்துவிட்டிருந்தார் பி. சுசீலா. அறுபதுகளில் அவர் உச்சத்தைத் தொட்டபோது மெல்ல மெல்ல கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார் எஸ். ஜானகி. அவர் ஜி. ராமனாதனின் இசையில் பாடிய முதல் படம் என்று கூட இதைச் சொல்லலாம்.
முன்னணிப் பாடகியான பி. சுசீலாவுடன் எஸ். ஜானகியை இணைத்து "அன்னமே சொர்ணமே" என்ற ஜோடிப்பாடலைப் பாடவைத்தார் ஜி. ராமநாதன். அது மட்டுமல்ல. ஜானகியின் திறமை முழுவதையும் வெளிப்படுத்தும் விதமாக "கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம். கண்டு வர வேண்டுமடி தங்கமே தங்கம்" என்ற பாரதியின் பாடலை பாடவைத்தார் அவர். "பீம்ப்ளாஸ்' ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் எஸ். ஜானகியின் குரல் இனிமையும், இசைத் திறமையும் வெளிப்படும் விதமாக அமைந்த ஒரு முத்திரைப் பாடல்.

அது மட்டுமா?. பி. பி. ஸ்ரீனிவாசுடன் எஸ். ஜானகியை இணைய வைத்து "என் ஆருயிரே" என்று தொடங்கும் ஒரு டூயட்.

அதே சமயம் கால மாறுதலுக்கேற்ப தன்னைத் தயார் செய்துகொண்டுவிட்டார் ஜி. ராமநாதன் என்பதை அனைவருக்கும் உணர்த்திய பாடல் பி. சுசீலா பாடிய 'நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை" என்ற பாடல் தான். இன்றுவரை யாராலும் மறக்கமுடியாத பாடல் இது. ஆனால் பாடலைப் புதிதாகக் கேட்பவர்கள் சத்தியமாக இது ஜி. ராமநாதன் அமைத்த பாடல் என்று நம்புவது கடினம்.

இந்தப் பாடலுக்கான முகப்பிசையிலும் சரி, இணைப்பிசையிலும் சரி, வெகு நேர்த்தியாக அமைத்து முத்திரை பதித்திருந்தார் ஜி. ராமநாதன். கதைக்குப் பொருத்தமான கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள் - ஜி. ராமனாதனின் இசையில் பி. சுசீலாவின் தேன் குரலில் செவிகளில் வந்து பாயும்பொழுது பாடலின் இனிமை கேட்பவர் மனதை வருடாமல் போகுமா என்ன? வருடியது. படம் வெளிவந்து சுமாரான வெற்றியை அடைந்தது.

அதன் மூலம் புதிய அலைக்கு தானும் தயார் என்று ஜி. ராமநாதன் வெளிப்படுத்திக்கொண்ட போது - அவரது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது.

வயிற்றுவலி - ஆரம்பத்தில் சாதரணமாக அவ்வப்போது வரும். போகும். முதல் முதலாக இது எப்போது ஆரம்பித்தது? இப்போதுதான் என்று சரியாகப் புள்ளி குத்தி கணித்துச் சொல்லமுடியவில்லை.

ஆரம்பத்தில் இந்த வயிற்றுவலி வந்தபோது "நேரத்துக்கு சாப்பிடாததால் வாயுத் தொல்லையாக இருக்கும்" என்று அலட்டிக்கொள்ளாமல் இருந்துவிட்டார் ஜி. ராமநாதன். ஆனால் அடிக்கடி அழியாத விருந்தாளியாக அவ்வப்போது வந்து போய்க்கொண்டிருந்தது அது.

"இதுக்கெல்லாம் கவலைப்பட்டுண்டு இருந்தா பொழைப்பை கவனிக்க முடியாது" என்று அதை பொருட்படுத்தாமல் இசை அமைப்பில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தார் ஜி. ராமநாதன்.

"நடராஜ தரிசனம்" - எப்படி டி.எம். சௌந்தரராஜனின் இசைத் திறமைக்காக "பட்டினத்தார்" படத்தைத் தயாரித்தாரோ அதே போல "இசை மணி" சீர்காழி கோவிந்தராஜனின் முழுத் திறமையும் வெளிப்படும் விதமாக நந்தனார் சரித்திரத்தை படமாக்க முடிவெடுத்தார் ஜி. ராமநாதன். செயலிலும் இறங்கினார். பாடல் பதிவுகள் ஆரம்பமாகின. கோபாலக்ருஷ்ண பாரதியின் "நந்தன் சரிதக்" கீர்த்தனைகள் ஜி. ராமநாதனின் இசையில் சீர்காழி அவர்களின் வெண்கலக் குரலில் புதுவடிவம் பெற ஆரம்பித்தன. பன்னிரண்டு பாடல்களை இசை அமைத்து சீர்காழி கோவிந்தராஜனைப் பாடவைத்து பதிவு செய்தார் ஜி. ராமநாதன். (ஆறு பாடல்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.)

அதே சமயம் பிரபல இயக்குனர் டி.ஆர். ராமண்ணா டி.எம். சௌந்தரரஜனைக் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து "அருணகிரிநாதர்" படத்தை ஆரம்பித்தார். இசை அமைக்கும் வாய்ப்பு ஜி. ராமநாதனுக்கு கிடைத்தது. சந்தத் தமிழில் திருப்புகழ் தந்தவரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கிடைத்ததை தனக்கு கிடைத்த பெரும் பேறாகக் கருதி தனது வயிற்றுவலியைக் கூட மறந்து செயல்பட ஆரம்பித்தார் ஜி. ராமநாதன்.

"அம்மா தெய்வம் ஆனதுமே" - எல்.ஆர். ஈஸ்வரியின் தனிப்பாடல்.

"நிலவோ அதன் இருளோ" என்ற டி.எம்.எஸ். -பி. சுசீலாவின் டூயட் பாடல் - ஆகியவற்றைத் தொடர்ந்து..

அமரத்துவம் பெற்ற பாடலான "ஆடவேண்டும் மயிலே" - பாடலை "லதாங்கி" ராகத்தில் டி.எம். சௌந்தரராஜனுடன் - எஸ். ஜானகியை இணைத்து பாடவைத்து பதிவாக்கினார் ஜி. ராமநாதன்.

சந்தம் கொஞ்சும் "முத்தைத் தருபத்தித் திருவென" திருப்புகழை ஷண்முகப்ரியா ராகத்தில் அமைக்க ஆரம்பகட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த பொழுதுதான் உடல் நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

வயிற்றுவலி அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டபோதுதான் அவரது கல்லீரல் முற்றிலுமாகப் பாதிக்கப் பட்டிருந்தது தெரியவந்தது. நிலைமை மிகவும் மோசமாகிப் போனது. விஷயம் கேள்விப்பட்டு பதைபதைத்துப் போன சீர்காழி கோவிந்தராஜன் மருத்துவமனைக்கே வந்து அவரை சந்தித்தபோது அவர் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போனார்.

ஆனால் ஜி. ராமநாதனோ நம்பிக்கை இழக்கவில்லை. உடல் நலம் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக யதேச்சையாக அவர் எம்.ஜி.ஆரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்து போன எம்.ஜி.ஆரிடம், "நீங்க எனக்காக ஒரு படம் பண்ணித் தரனும்" என்று ராமநாதன் வேண்டுகோள் விடுத்தார். "கட்டாயமா பண்ணித் தருகிறேன். முதல்லே உங்க உடம்பை நல்லா கவனிச்சுக்குங்க. உடம்பு தேறி வந்ததும் என் அடுத்த படம் உங்களுக்குத் தான் " என்று வாக்குறுதி தந்து அனுப்பி இருந்தாராம் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் அவருக்குள் புது தெம்பை ஏற்படுத்தி இருந்தன.

"உடம்பு குணமாகி வந்ததும் முதல் வேலையா "நடராஜ தரிசனம்" படத்தை முடிச்சுடனும். "அருணகிரிநாதர்" பாதியிலே நிக்கறது. அதையும் முடிச்சுட்டோமானால் அப்புறம் எம்.ஜி.ஆர் படம் தரதா சொல்லி இருக்காரே. அது மட்டும் கிடைச்சுடுத்துன்னா நாம கண்டிப்பா இன்னொரு ரவுண்டு வரலாம்" - பலதரப்பட்ட சிந்தனைகள்.

அதே நேரம் அவரை சந்தித்த "கல்கண்டு": வார இதழின் ஆசிரியர் தமிழ்வாணன் அவரது ஜாதகத்தை அலசி, "தைரியமா இருங்க. நவம்பர் கடந்துவிட்டால் நீங்க தான் ராஜா" என்று ஜோதிடம் சொல்லி தெம்பூட்டியிருந்தார்.

ஆனால்..

நவம்பர் இரண்டாவது வாரத்திலேயே நோய் முற்றிய நிலையில் தன நினைவை இழந்து "கோமா" நிலைக்குச் சென்றுவிட்டார் அந்த இசைச் சக்ரவர்த்தி. மருத்துவத் துறை கொஞ்சம் கொஞ்சமாகத்தானே வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்த நேரம். சிகிச்சையைத் தாங்கிக்கொள்ளும் வல்லமை அவருக்கு இல்லை என்று மருத்துவர்கள் கைவிரித்துவிட முற்றிலுமாக நினைவிழந்த நிலையில் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார் ஜி. ராமநாதன்.

அப்போதுகூட கண்டிப்பாக அவரது ஆழமானது சாருகேசியையும், பீம்ப்ளாஸையும் , கல்யாணியையும், காபியையும் இசைத்துக்கொண்டேதான் இருந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

நவம்பர் தாண்டும் முன்பே முந்திக்கொண்டால்தான் தனக்கு வெற்றி நிச்சயம் என்று நினைத்தோ என்னவோ 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருபதாம் தேதி அந்த இசைச் சக்ரவர்த்தியின் உயிரை வலுக்கட்டாயமாக கவர்ந்து கொண்டுபோனான் காலதேவன்.

ஆம். ஜி. ராமநாதன் அமரராகிவிட்டார். சாருகேசிக்கு புது விலாசம் தந்தவர், முகாரியை வசீகரப்படுத்தியவர், பீம்ப்ளாஸை உச்சத்தில் வைத்தவர் காற்றோடு கலந்து எங்கும் நிறைந்த நாதப் பிரம்மத்தோடு ஐக்கியமாகிவிட்டார்.

"கர்நாடக சங்கீதம் ஆழ்கடல். ஆழ்ந்து அமிழ்ந்து பார்க்க நல்ல முத்துக்கள் அகப்பட்ட வண்ணமிருக்கும். சிறிதளவு ஹிந்துஸ்தானி அறிந்தால் அம்முத்துக்களை சந்திரஹாரமாகக் கட்டலாம். ஆங்கில சங்கீதம் ஓரளவு அறிந்திருந்தால் அந்த ஹாரத்தை விலைமதிப்பற்ற பெட்டியில் வியக்குமாறு வைத்து விற்பனையாக்கலாம். இந்தக் கலையில் கை தேர்ந்தவர்களுள் முதன்மையானவர் ஜி. ராமநாதன்"- - ஜி. ராமநாதனைப் பற்றி திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனின் மதிப்பீடு இது.
தமிழசையை தன மூச்சாகக் கொண்ட இசை மேதை மறைந்துவிட்டார்.

"எல்லா இசையையும் தெரிஞ்சுக்கோ. ஆனால் பாதை மாறாதே. கேட்டா எங்க அப்பா அம்மா தமிழா தான் வெள்ளைக்காரா இல்லேன்னு சொல்லு" - தன உதவியாளர்களிடம் அவர் வலியுறுத்தி வந்த சொற்கள் இவை.

தமிழ் படத்தைத் தவிர வேற்று மொழிப் படத்துக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்ததாக தகவல் ஏதும் இல்லை. எனது சிற்றறிவிற்கு எட்டியவரை ராமனாதனின் பங்களிப்பு தமிழ்த் திரை உலகத்துக்கு மட்டுமே இருந்து வந்திருக்கிறது.

முதல் முதலாக தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் உலகம் தழுவிய அங்கீகாரத்தை வாங்கித்த்தந்த அவர் மட்டும் இன்னும் சில காலம் இருந்திருந்தால் "நடராஜ தரிசனம்" படத்தின் மூலம் கோபால கிருஷ்ணா பாரதியின் பாடல்களுக்கு கட்டாயமாக ஒரு புதுவடிவம் கிடைத்திருக்கும். அவரது மறைவால் அந்தப் படம் கைவிடப்பட, அவர் இசை அமைத்த பாடல்கள் நமக்கு கிடைக்காமல் போனது நமது துரதிருஷ்டமே.

என்றாலும் - நாற்பது முதல் அறுபது வரை இருந்த காலகட்டத்தில் எத்தனை எத்தனை பாடல்கள் அந்த இசைச் சக்ரவர்த்தியின் கருவூலத்திலிருந்து என்றுமே அழியாத இசைச் செல்வங்களாக நமக்குக் கிடைத்திருக்கின்றன.!

"ஏற்ற இறக்கங்கள் வாழ்வில் சர்வசாதரணமாக வருவது தான். அவற்றோடு கால மாறுதல்களுக்கேற்ப அனுசரித்து வாழ்ந்து தன் காலத்துக்கு பின்னாலும் தன் பெயர் நிலைத்திருக்கும் வண்ணம் வாழ்வதே வாழ்க்கை." என்பதை சாதிக்கத் துடிக்கும் இளையதலைமுறை கற்கவேண்டிய பாடமாக வாழ்ந்து காட்டி மறைந்தவர் அவர்.

"FOR THINGS TO CHANGE WE HAVE TO CHANGE”
- என்பது இன்றைய வர்த்தகக் கல்வி
கற்றுக்கொடுக்கும் வெற்றிக்கான சூத்திரம். இதற்கு ஒரு நடைமுறை உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் ஜி. ராமநாதன்.

அந்த இசைச் சக்ரவர்த்தியின் பாடல்கள் காற்றோடு கலந்து வரும்போது அவர் கடந்துவந்த வாழ்க்கைப் பாதையின் சுவடுகள் நம் மனத்தில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்றல்... அதுதான் ஜி. ராமநாதன்.

(சிகரம் தொட்டவர்கள் - திரை இசை மூவரைப் பற்றிய முதல் பாகம் நிறைவடைகிறது.. இத்தொடர் பற்றிய உங்கள் சந்தேகங்களையும், கருத்துகளையும், கருத்துப் பதிவில் தெரிவியுங்கள். உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி. இரண்டாம் பாகத்தில் சந்திப்போம்).

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.