வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


டி. ஜி. லிங்கப்பா - 5

பி.ஜி.எஸ். மணியன்  

"நீங்காத இடம் நினைவுகளில்"

கன்னடத் திரை இசைக்கு டி.ஜி. லிங்கப்பாவின் பங்கு மகத்தானது.

ஸ்கூல் மாஸ்டர், ஸ்ரீ கிருஷ்ணதேவராயா, பப்ருவாகனா ஆகிய படங்கள் அவரை உச்சத்துக்கே கொண்டு சென்றன.

ஸ்ரீகிருஷ்ணதேவராயா - படத்தில் இடம் பெற்ற ஸ்ரீ சாமுண்டேஸ்வரி என்ற பாடலை லிங்கப்பாவின் இசையில் பி. லீலாவுடன் சேர்ந்து பாடியவர் நமது சீர்காழி கோவிந்தராஜன்.

"பப்ருவாஹணா" படத்தில் "ஆராதிசுவே மதனாரி" என்ற பாடலை Dr . ராஜ்குமார் சொந்தக்குரலில் பாடி இருந்தார். இந்தப்பாடல் இன்றும் கர்நாடக ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பிடித்த பாடல். இன்றும் மெல்லிசை மேடைகளில் தவறாமல் இடம் பிடிக்கும் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே படத்தில் பி. பீ. ஸ்ரீநிவாசும் Dr . ராஜ்குமார் அவர்களும் சேர்ந்து பாடிய "யாரு திர்லியாரு நின்னே புஜ பலத பராக்ரமா" என்ற பாடலும் தலைமுறைகளை வென்ற பாடலாக திகழ்கிறது.

இப்படி கன்னடத் திரை உலகில் லிங்கப்பாவின் வெற்றி தொடர்ந்ததால் தமிழ் திரை உலகுக்கும் அவருக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி விழுந்தது.

அந்தச் சமயத்தில் தமிழ் திரை உலகம் இரட்டையர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் கே. வீ. மகாதேவன் ஆகியவர்கள் வசமானது.

1960௦ஆம் ஆண்டு அவர் இசை அமைத்து வெளிவந்த தமிழ் படங்கள் மொத்தமே இரண்டு தான் என்றாலும் வெளிவந்த "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" திரைப்படத்தில் தனது முத்திரையை பதிக்கத் தவறவில்லை அவர்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் எழுதி டி. எம். எஸ். அவர்கள் பாடிய "என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே" - இரவுகளில் நம்மை மெய்மறக்கச் செய்யும் அற்புதப் பாடல் இது.

இதே படத்தில் வெளிவந்த "மனமென்னும் வானிலே" என்ற ஏ.எம். ராஜா - பி. சுசீலா பாடிய டூயட் பாடலும் இன்று கேட்டாலும் புதிதாக பூத்த மலர் போல தோன்றும்.

கன்னடப் படங்களில் மட்டும் என்று அல்ல. Dr . ராஜ்குமார் அவர்கள் பாடி வெளிவந்த நூற்றுக்கணக்கான பக்தி இசைத்தட்டுக்களுக்கும் இசை அமைத்தவர் லிங்கப்பா தான்.

மீண்டும் அவரை தமிழ் திரை உலகுக்கு பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த "முரடன் முத்து" படத்தின் மூலமாக பி. ஆர். பந்துலு லிங்கப்பாவை தமிழ்த் திரை உலகுக்கு மீண்டும் கொண்டு வந்தார்.

படம் தயாரிப்பில் இருந்தபோது பந்துலுவுக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையில் அதுவரை நிலவி வந்த நட்பில் விழுந்த விரிசலின் காரணமாக படம் வெளிவருவதில் ஏற்பட்ட காலதாமதம் படத்தின் வெற்றியை பெருமளவு பாதித்தது.

ஆனாலும் "முரடன் முத்து"வுக்காக டி.ஜி. லிங்கப்பா இசை அமைத்த பாடல்கள் அனைத்துமே தேனில் தோய்த்தெடுக்கப்பட்ட பலாச் சுளைகளாக இன்றளவும் பேசப்படுகின்றன.

“"கோட்டையிலே ஒரு ஆலமரம்" (சீர்காழி கோவிந்தராஜன்)
"செவ்வந்திப்பூ தோட்டத்திலே கோழிக்குஞ்சு" (சூலமங்கலம் ராஜலக்ஷ்மி)
"தாமரைப்பூ கொளத்துலே" (டி. எம். எஸ். - பி. சுசீலா)
"சிரிக்கின்ற முகத்தை சிலை வடிப்பேன்" (எஸ். ஜானகி)
"கல்யாண ஊர்வலம் பாரு" (பி. சுசீலா)
""பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை" - (டி.எம்.எஸ்.)

போன்ற இனிய பாடல்களை கொடுத்தார் லிங்கப்பா.

ஒருவேளை முரடன் முத்து படம் வெற்றிபெற்று இருந்தால் டி.ஜி. லிங்கப்பா தமிழ் திரை உலகில் கே.வி. மகாதேவன் - விஸ்வநாதன்-ராமமூர்த்திக்கு இணையான இசை அமைப்பாளாராக இருந்திருப்பார்.

அதன் பிறகு ஒன்றிரண்டாக சில படங்கள். அவற்றில் குறிப்பிடத்தக்க படம் "தங்க மலர்". இந்தப் படத்தில் இடம் பெற்ற பி.பீ. ஸ்ரீநிவாஸ்-பி. சுசீலா பாடிய "தங்க மலரே உள்ளமே. பொங்கிப் பெருகும் வெள்ளமே" பாடலும், பி. பீ. ஸ்ரீநிவாஸ் தனித்துப்பாடிய "ஆசை வைத்தால் அது மோசம். அன்பு வைத்தால் அது வேஷம்." பாடலும் பேசப்படக்கூடிய பாடல்களாக அமைந்து விட்டன.

லிங்கப்பா கடைசியாக இசை அமைத்த தமிழ்த் திரைப்படம் "கடவுள் மாமா" என்ற படமாகும்.

என்னதான் ஒரு இசை அமைப்பாளர் அற்புதமாக இசை அமைத்தாலும் படம் வெற்றி பெற்றால்தான் பாடல்களும் பேசப்படும். அந்த வகையில் பின்னாளில் வந்த படங்களின் தோல்வி லிங்கப்பாவின் கலையுலக வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டன.

அதே சமயம் அவர் மனதைப் பாதிக்கும் சில சம்பவங்களும் படவுலகில் நடைபெற்றன.

அவர் மெட்டமைத்த இரண்டு பாடல்கள் மற்ற இசை அமைப்பார்கள் இசை அமைத்ததாக படங்களில் வெளிவந்த சம்பவங்களும் நடந்தது.
சந்திரபாபுவுக்காக அவர் "டியூன்" செய்து கொடுத்த "குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே" என்ற பாடல் மரகதம் படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை அமைத்த பாடலாக வெளியானது.

"புத்தம் புது மேனி" என்ற பாடல் - கே. வி. மகாதேவன் இசை அமைத்த பாடலாக Dr . எம். பாலமுரளி கிருஷ்ணா - பி. சுசீலா இணைந்து பாட "சுபதினம்" படத்தில் இடம் பெற்று வெளியானது.

இவற்றை அவர் சுட்டிக்காட்டியபோது சம்பந்தப்பட்டவர்களால் அதை மறுக்க முடியவில்லை.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல லிங்கப்பாவுக்கு கிடைக்கவிருந்த தேசிய விருது வேறு ஒருவருக்கு கிடைத்த சம்பவமும் நடந்தது.

புகழ் பெற்ற ஜி.வீ. அய்யர் தயாரித்து இயக்கிய கன்னடப் படமான "ஹம்ச கீதே" என்ற இசைக்காவியத்துக்கு அருமையான முறையில் கர்நாடக இசை கீர்த்தனைகளை வடிவமைத்துக் கொடுத்திருந்தார் டி.ஜி. லிங்கப்பா.

முழுப் படத்துக்கும் தானே இசை அமைக்கவேண்டும் என்பது அவரது எண்ணம். ஆனால் ஜி.வீ. அய்யரோ படத்தின் பின்னணி இசைக்கு பி.வீ. கரந்த் வர்களை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். லிங்கப்பா அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் ஜி.வீ. அய்யரோ பிடிவாதமாக இருந்த காரணத்தால் பாடல்களுக்கு இசை அமைத்ததோடு அந்தப் படத்தில் இருந்தே விலகி விட்டார் லிங்கப்பா. படம் முடிந்த பிறகு "டைட்டில்" சேர்க்கையின் போது இசை அமைப்பாளர் என்று யாரைக் குறிப்பிடுவது என்ற பிரச்சினை எழுந்தது. பாடல்களுக்கு இசை அமைத்த லிங்கப்பாவின் பெயரை விடுத்து தன் பெயரை இசை அமைப்பாளர் என்று போட்டுக்கொள்ள பி.வீ. கரந்த் சம்மதிக்கவில்லை.

டி.ஜி. லிங்கப்பாவோ "நான் அந்தப்படத்தில் இருந்தே விலகி விட்டேன். ஆகவே என் பெயரைப் போடக்கூடாது. வேறு யார் பெயரைப்போட்டாலும் எனக்கு ஒன்றும் இல்லை." என்று அழுத்தமாக கூறிவிட்டார்.

இந்த சமயத்தில்தான், "அவர்கள் இசை அமைத்திருக்கலாம். ஆனால் பாடல்களை நான் தானே சிறப்பாக பாடி இருக்கிறேன். ஆகவே இசை அமைப்பாளர் என்று என் பெயரைப் போட்டுவிடுங்கள்" - என்றார் Dr .எம். பாலமுரளி கிருஷ்ணா.

ஆகவே வேறுவழி இன்றி பாலமுரளி கிருஷ்ணா இசை அமைத்ததாக "ஹம்ச கீதே" படம் வெளிவந்தது. விருதுகளை வாரிக் குவித்தது.
அந்த ஆண்டின் சிறந்த இசை அமைப்பாளராக Dr .எம். பாலமுரளி கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப் பட்டு தேசிய விருது பெற்றார்.

(இந்தத் தகவலை ஜி.வீ. அய்யரே "ஹிந்து" நாளிதழுக்கு தான் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.)

இசை அமைப்பை விட்டு ஒதுங்கி விட்டாலும் இசை உலகை விட்டு ஒதுங்கவில்லை அவர்.

வாத்தியக் குழுவில் ஒருவராக வாழ்வை துவங்கி ஒரு சிறந்த இசை அமைப்பாளராக உயர்ந்த டி. ஜி. லிங்கப்பா வாழ் நாளின் இறுதியில் மீண்டும் வாத்தியக் குழுவில் ஒருவராக பணியாற்றி வந்தார்.

இசை ஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த "மன்னன்" படத்தில் இடம் பெற்ற "அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே" பாடலுக்கு பின்னணி இசையில் சரோட் வாசித்தார் லிங்கப்பா.

கன்னடத்திரை உலகில் கொடிகட்டிப்பறந்த இந்தத் தமிழ் நாட்டை சேர்ந்த இசை அமைப்பாளர் 2005 - பிப்ரவரி 6 அன்று மாரடைப்பால் காலமானார்.

அவரது மகனான கிஷோர் குமார் அவரைப்போலவே தன்னுடைய சுய முயற்சியால் தன்னை வடிவமைத்துக்கொண்டு தற்போது திரை உலகில் மிகச் சிறந்த சிதார் இசைக்கலைஞராக பரிமளித்து வருகிறார்.

காலங்கள் மாறலாம். ஆனாலும் இசை என்னும் அமுதைப் பொழியும் கானம் என்ற நிலவு இருக்கும் வரை டி. ஜி. லிங்கப்பாவின் புகழ் வெண்ணிலாவும் வானும் போலே திரை இசையை விட்டு பிரிக்கமுடியாதபடி காலங்களை வென்று நிலைத்திருக்கும்.

(அடுத்து சிகரம் தொட வரும் இசை அமைப்பாளர் திரு. சி. ஆர். சுப்பராமன் அவர்கள்.)

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</