வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 19

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

மதுரை வீரனின் மகத்தான வெற்றிக்குப் பிறகு ஜி. ராமநாதனுக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க ஆரம்பித்தன.

1957 - ஜி. ராமநாதனுக்கு ஒரு சிறப்பான ஆண்டு என்றே சொல்லவேண்டும். இந்த ஆண்டு அவரது இசை அமைப்பில் ஒன்பது படங்கள் வெளிவந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஒரு சில படங்களே பெற்றன. அவற்றில் ஒன்று "சக்ரவர்த்தி திருமகள்". எம்.ஜி. ஆர் - அஞ்சலிதேவி, எஸ். வரலக்ஷ்மி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பிலும் ப. நீலகண்டனின் இயக்கத்திலும் வெளிவந்த படம்.

மதுரை வீரனுக்கு பிறகு எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். அவர்கள் பின்னணி பாட ஆரம்பித்தாலும், சீர்காழி கோவிந்தராஜன்தான் ஐம்பதுகளின் இறுதி வரை எம்.ஜி. ஆருக்கு பாடி வந்தார்.

அந்த வகையில் "சக்ரவர்த்தி திருமகள்" படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் குரல் எம்.ஜி.ஆருக்கு அற்புதமாகப் பொருந்தி வந்தது.கலைவாணர் அவர்களுடன் சீர்காழி கோவிந்தராஜனை இணைத்து ஒரு போட்டிப் பாடல் ஒன்றை பாட வைத்தார் ஜி. ராமநாதன். "சீர்மேவும் குருபாதம்" என்று தொடங்கும் அந்தப் பாடலின் இடையில் சீர்காழி அவர்கள் கொடுக்கும் ஒரு பிருகாவை கலைவாணர் அவர்கள் பாட முயற்சி செய்து "ஹூஹும்.. வேண்டாம்.. நீயே பாடிக்க" என்று எம்.ஜி.ஆரிடம் சொல்வது ஒரு இயல்பான நகைச்சுவை.

படத்தில் வில்லியாக வரும் எஸ். வரலக்ஷ்மி சொந்தக் குரலில் பாடிய பாடல் "ஏமாற்றம் தானா எந்தன் வாழ்விலே" - ஜி. ராமனாதனின் இசையில் - சஹானா ராகத்தில் அமைந்த இந்த சோகப் பாடலை அற்புதமாகப் பாடியிருந்தார் வரலக்ஷ்மி.

கலைவாணர் அவர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பாடல் இது. ஆனால் படத்தின் நீளம் கருதியோ என்னவோ பாடல் காட்சியை முதலில் படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள்.

படம் வெளியான முதல் நாளில் தகவல் அறிந்ததும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கோபத்துடன் எம்.ஜி.ஆர் அவர்களிடமும் படத்தின் இயக்குனரிடமும் சண்டை போட்டு நீக்கப்பட்ட பாடல் காட்சியை அடுத்த நாளே மீண்டும் படத்தில் இணைக்க வைத்தார்.

http://www.youtube.com/watch?v=UJlSRw3T1W8&feature=related

பொதுவாக கர்நாடக இசைப் பாடகியாவே அறியப்பட்ட பி. லீலாவை "ஆட வாங்க அண்ணாத்தே" என்ற நாட்டுப்புற நடனப் பாடலை பாடவைத்தார் ஜி. ராமநாதன். வெகு ஜன வரவேற்பை பெரிதும் பெற்ற பாடலாக இந்தப் பாடல் அமைந்தது.

ஜிககி பாடும் "எண்ணம் எல்லாம் இன்பக் கதை பேசுதே" - காதல் உணர்வை அருமையாக உற்சாகத் துடிப்புடன் வெளிப்படுத்தும் பாடல்.

http://www.youtube.com/watch?v=ho6kKQv6gjI&feature=channel

எம். ஜி.ஆருக்காக சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது" - என்ற தத்துவப் பாடல் நினைவலைகளில் நீங்காத இடம் பெற்று நிலைத்துவிட்டிருக்கும் பாடல். இந்தப் பாடலுக்கான இணைப்பு. http://www.youtube.com/watch?v=v-tn4VycSPM

1957 -இல் ஒரு "ரீ-மேக்" அலை பரவ ஆரம்பித்தது.முப்பதுகளின் இறுதி தொடங்கி நாற்பதுகள் வரை வெளிவந்த படங்கள் மறுபடியும் படமாக்கப் பட்டன. (சிவாஜி, எம்.ஜி.ஆர். என்ற இரு திலகங்கள் திரை உலகுக்கு கிடைத்த வரப்ரசாதம் அல்லவா!.) அப்படி வெளிவந்த ரீ-மேக் படங்களுக்கு இசை அமைத்தவர் ஜி. ராமநாதன்தான். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் முதலில் வெளிவந்த "ஒரிஜினல்" பாடல்களில் சிலவற்றுக்கும் அவரே இசை அமைத்திருந்தார் என்பது தான்.

அந்தவகையில் குறிப்பிடப்படவேண்டிய ஒரு படம் “அம்பிகாபதி”. கவிச் சக்ரவர்த்தி கம்பரின் மகனான அம்பிகாபதிக்கும், குலோத்துங்கச் சோழனின் மகளான அமராவதிக்கும் இடையில் அரும்பிய காதல் அமரத்துவம் பெற்ற விதத்தை சித்தரிக்கும் கர்ண பரம்பரைக் கதை.

எம்.கே. தியாகராஜ பாகவதர் - எம். ஆர். சந்தானலக்ஷ்மி இணைந்து நடித்து எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் 1937 -இல் வெளிவந்து மகத்தான வெற்றியை ஏற்கெனவே பெற்றிருந்தது.

இதனை கவியரசு கண்ணதாசனின் சகோதரரும் படத் தயாரிப்பாளருமான ஏ. எல். சீனிவாசன் தனது ஏ.எல்.எஸ். நிறுவனத்தின் பெயரில் மறுபடியும் தயாரிக்க முன்வந்தார்.

அம்பிகாபதி அமராவதியாக சிவாஜி கணேசனும் பி. பானுமதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மூலப் படத்தில் கதாநாயகனாக நடித்த தியாகராஜ பாகவதருக்கு மறுவாழ்வு கொடுக்க விரும்பிய ஏ.எல்.எஸ். அவர்கள் அவரை அம்பிகாபதியின் தந்தையான கவிச்சக்கரவர்த்தி கம்பராக நடிக்க ஒப்பந்தம் செய்ய விரும்பினார். ஆனால் பாகவதரோ தான் ஏற்கெனவே கதாநாயகனாக நடித்த ஒரு கதையில் துணைப் பாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

அதன் பிறகு கம்பராக எம்.கே. ராதா அவர்கள் நடித்தார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நடித்த கடைசிப் படம் இது. இந்தப் படத்தில் நடிக்கும் போது கலைவாணர் காலமாகிவிட படத்தில் அவருக்கு அஞ்சலி செய்யும் விதமாக அவரது சிலையை வடிவமைத்து சிவாஜி கணேசன் மலர் தூவி புகழாரம் சூட்டி வணங்குவது போல ஒரு காட்சியை சாமர்த்தியமாக அமைத்திருந்தார்கள்.

நடிப்பை பொருத்தவரைக்கும் நடிகர் திலகமும் பானுமதியும் கதாபாத்திரங்களாகவே மாறிவிட்டிருந்த போதும் படம் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை.

படத்தின் சிறப்பே பாடல்கள் தான் என்றாகி விட்டிருந்தது. அந்த அளவுக்கு ஜி. ராமநாதன் இசையால் படத்தையே ஆக்கிரமித்துவிட்டிருந்தார்.

முன்பு ஜகதலப் ப்ரதாபனில் வீரத்துக்கு என்றிருந்த கம்பீரமான அடாணாவை சோகத்துக்கு பயன்படுத்தி வெற்றிகண்டவர் - அம்பிகாபதியில் சோகத்துக்கு என்றே முத்திரை குத்தப் பட்டிருந்த "முகாரி" ராகத்தில் ஒரு உற்சாகமான, மகிழ்ச்சி கரமான காதல் டூயட் ஒன்றை உருவாக்கி அதனையும் வெற்றிப்
பாடலாக்கி அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தார்.அந்தப் பாடல்தான் "வாடாமலரே தமிழ்த் தேனே" என்ற பாடல். பாடியவர்கள் டி.எம்.சௌந்தரராஜனும், பி. பானுமதியும்.

முந்தைய அம்பிகாபதியில் "சந்திர சூரியர் போம் கதி மாறினும்" என்ற பாகவதரின் பாடல் மாண்ட் ராகத்தில் அமைந்த பிரபலமான பாடல். அந்தப் பாடலை அப்படியே தழுவி அதே மாண்ட் ராகத்தில் "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே" என்று டி.எம்.எஸ்.-பானுமதியைப் பாடவைத்தார் ஜி. ராமநாதன். இன்று "சந்திர சூரியர் போம் கதி மாறினும்" பாடல் வழக்கத்தில் இல்லை. ஆனால் ஜி. ராமநாதன் தந்த "மாசிலா நிலவே" பாடல் படம் வெளிவந்து ஐம்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்த பிறகும் மங்காத முழுநிலவாக இசை வானில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறதே. இது ஒன்றே போதும் ஜி. ராமனாதனின் தன்னிகரில்லாத் திறமையைப் பறைசாற்ற.

அவரது பிரியத்துக்குரிய பீம்ப்ளாஸ் ராகம் - "கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே" - பாடலாக அனைவரையும் வசீகரித்தது. இந்தப் பாடலில் தாள வாத்தியக் கருவியான தபேலா அற்புதமாக கையாளப் பட்டிருந்தது.

கதைப்படி சிற்றின்பம் கலக்காமல் பேரின்பம் குறித்து நூறுபாடல்கள் அம்பிகாபதி பாடவேண்டும். அப்படி பாடிவிட்டால் அமராவதி அவனுக்கு சொந்தம். இல்லாவிட்டால் அவன் மரணதேவதைக்கு சொந்தம். இந்தக் கட்டத்துக்கான பாடலை எழுதியவர் கவிஞரும், நடிகருமான திரு. கே.டி. சந்தானம் அவர்கள். ஜி.ராமனாதனின் திறமை ஒளிவீசும் பாடல் கட்டம் இது.

"சிந்தனை செய் மனமே" - முருகக் கடவுளை போற்றும் இந்தப் பாடலை கல்யாணி ராகத்தில் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களை அழுத்தமான, எடுப்பான கம்பீரக் குரலில் பக்திரசம் மிளிரப் பாடவைத்தார் ஜி. ராமநாதன்.

http://videos.desishock.net/index.php?module=item&action=
show_item_full&itemid=217208&itemurl=
aHR0cDovL3lvdXR1YmUuY29tLz92PWtlMjdYWlhLaC1v

சரணத்துக்கு பிறகு அப்படியே "வடிவேலும் மயிலும் துணை" என்று காம்போதியில் பாடல் தொடருகிறது. கவிநயம், ஒலிநயம், ஓசை நயம், சந்தநயம், லய நயம் என்று அனைத்திலும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் அற்புதமாக ராமநாதன் அமைத்திருக்கும் அழகைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அவசரத்தில் இறைவணக்க வாழ்த்துப்பாவையும் கணக்கில் சேர்த்துகொண்ட காரணத்தால் தொண்ணூற்று ஒன்பது பாடல்கள் முடிந்ததுமே நூறு பாடல் முடிந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் திரை மறைவில் இருந்து அமராவதி முகம் காட்டிவிட அவளைக் கண்ட மாத்திரத்தில் போட்டியில் வெற்றிபெற்றுவிட்டோம் இனி காதலுக்கு தடை இல்லை என்ற மகிழ்ச்சி கொந்தளிக்க உணர்ச்சிப் பெருக்குடன் "சற்றே சரிந்த குழலே"என்று அவளை வருணித்து நூறாவது பாடலைப் பாடிவிடுகிறான் அம்பிகாபதி. . இந்தக் கட்டத்தை விருத்தமாக அமைத்து "கேதாரகெளளை" ராகத்தைப் பயன்படுத்தி காட்சியின் வீரியத்தைக் கூட்டியிருக்கிறார் ஜி. ராமநாதன்.

பாடல் வரிகளை அவர் பார்த்தவுடனே அந்தப் பாடலுக்கும், காட்சி அமைப்புக்கும் தகுந்த ராகங்கள் தாமாகவே அவரிடம் வந்து "என்னைப் பயன்படுத்திக்கொள்" என்று கேட்டது போல அமைந்திருக்கிறது.

“சிந்தனை செய் மனமே - முதல் - சற்றே சரிந்த குழலே” வரை இந்தப் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. பொதுவாக டி.எம். எஸ். அவர்களின் குரல் திரையில் நடிக்கும் கதாநாயகர்களே பாடுவது போல அமைந்திருக்கும். இந்தப் பாடல் காட்சிக்கு வாயசைத்து நடித்திருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். படத்தைப் பார்க்காமல் வெறும் பாடலை மட்டும் கேட்போமானால் அது டி.எம்.எஸ். அவர்களின் "ஒரிஜினல்" குரலில் அமைந்த பாடலாக இருக்கும். திரையில் பார்க்கும்போதோ அங்கே டி.எம்.எஸ். நினைவுக்கே வரமாட்டார். நடிகர் திலகம் அவர்களே சொந்தக் குரலில் பாடுவது போன்று இருக்கும். ஆகக் கூடி "மரத்தில் மறைந்தது மாமத யானை" கதைதான்.

படத்தின் உச்ச கட்ட காட்சி பார்ப்பவர் மனத்தில் ஏற்படுத்தவேண்டிய உணர்ச்சிப் பெருக்குக்கு கொஞ்சம் கூட பங்கம் வராதபடி சொல்லப்போனால் காட்சி இன்னும் சிறப்பாக வெளிப்பட ஒரு இசை அமைப்பாளராக தனது பங்களிப்பை அருமையாக கொடுத்திருக்கிறார் ஜி. ராமநாதன்.

இறுதியில் தலை வெட்டப்பட்டு அம்பிகாபதியும், அதிர்ச்சி தாளாமல் அமராவதியும்மரணத்தில் ஒன்று சேர்ந்த பிறகு "வானமிங்கே பூமியிங்கே" என்று பாடல் அசரீரியாக இருவர் குரலில் ஒலிக்கும் கட்டத்தில் மனதை மயக்கும் "புன்னாகவராளி" ராகத்தை ராமநாதன் கையாண்டிருக்கும் விதம் சிலிர்க்க வைக்கும் ஒரு சுகானுபவம்.

இப்படி அம்பிகாபதிக்காக ராமநாதன் அமைத்திருந்த பாடல்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று விஞ்சும் வண்ணம் அமரத்துவம் பெற்ற பாடல்கள்.

ஆனால் - படம் பலத்த அடி வாங்கியது. இசை அமைத்த ராமநாதனோ மகத்தான
வெற்றி பெற்றுவிட்டார்.

ஜி. ராமனாதனின் இசைத் திறமையைக் கண்டு பிரமித்துப் போனார் நடிகை பி. பானுமதி. விளைவு.. அவரது பரணி பிக்சர்சின் சொந்தப் படமான "மணமகன் தேவை" படத்துக்கு அவரையே இசை அமைக்கவைத்துவிட்டார் அவர்.

இதற்கிடையில் மாடர்ன் தியேட்டர்சின் "ஆரவல்லி"க்கு இசை அமைத்தார் ஜி. ராமநாதன். தன பங்கை குறைவின்றி ராமநாதன் செய்த போதிலும் படம் படுதோல்வி அடையவே - மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடனான ராமநாதனின் பந்தம் ஒரு முடிவுக்கு வந்தது. ஆரவல்லியின் தோல்விக்கு பிறகு கே.வி. மகாதேவன் - அவருக்கு பிறகு வேதா என்று புதிய இசை அமைப்பாளர்கள் அந்நிறுவனத்துக்குள் நுழைந்தனர்.

அடுத்து "கற்புக்கரசி" - இந்தப் படத்தில் பி. பி. ஸ்ரீனிவாஸ் - எம்.எல். வசந்தகுமாரி இருவரையும் இணைத்து "கனியோ பாகோ கற்கண்டோ" என்ற அருமையான பாடலைக் கொடுத்தார் ஜி.ராமநாதன். ஆனால் பாடல் படத்தில் இடம் பெறவில்லை. படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றியைப் பெறவும் இல்லை.

சமய சஞ்சீவி, புதுவாழ்வு - வந்த வேகத்திலேயே படங்கள் மறைந்து போனதால் பாடல்களின் தரம் பற்றி ஒன்றும் அறியமுடியவில்லை.

புதுமைப் பித்தன் - எம்.ஜி.ஆர். - ஈ.வி. சரோஜா நடித்த இந்தப் படத்தில் ராமநாதன் அமைத்த பாடல்கள் அழுத்தமாக நிலைக்கவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன.

இப்படி ஏறிய வேகத்திலே இறக்கம் கண்டுகொண்டிருந்த ராமநாதனின் பெயரை மறுபடி நிலைபெறச் செய்ய வந்த படம்தான் "வணங்காமுடி"

ஜி.ராமநாதனுக்கு மட்டும் என்று இல்லை - அப்போதுதான் அறிமுகமாகி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தாலும் - சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இருந்த ஒரு பின்னணிப் பாடகியை - அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தமிழ்த் திரை உலகின் ஈடு இணை இல்லாத முடிசூடா ராணியாக மாற்றிய "ராஜயோகத்தை" அளித்தது இந்தப் படம்.

அந்தப் பாடகி "இசைக் குயில்" திருமதி பி. சுசீலா அவர்களே தான்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.